Tuesday, June 10, 2008

மீதமான உணவு - சிறுகதை

ரம்யாவிற்கு வருத்தமோ கோபமோ இருப்பது தெரிந்தால் நான் செய்யும் முதற்காரியம், அவளை வீட்டின் அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு அழைத்துச் செல்வது தான். அதிகாலையிலேயே எழுந்து எங்களது அலுவலக நண்பர்களின் வருகைக்காக பலவகையான கூட்டுக்களுடன் மதிய உணவைத் தயாரித்து வைத்திருந்து , உறுதியளித்திருந்த படி சிலர்
வராததுதான் ரம்யாவின் வருத்ததிற்குக் காரணம்.

ரம்யாவிற்கு உணவு மீதமானாலோ, யாராவது அதிகமாக தட்டில் போட்டுக்கொண்டு அதை சாப்பிடாமல் போனாலோ அத்தனை கோபம் வரும். சின்ன வயசில அரைவயிறு கால்வயிறு சாப்பிட்டிருந்தால் சாப்பாட்டோட அருமை தெரியும் என அடிக்கடி என்னிடம் சொல்லுவாள்.

“கிருஷ்ணமூர்த்தி , வாசுதேவன் கிட்ட எத்தனை தடவை சொன்னோம் கண்டிப்பாக பேமிலியோட வரச்சொல்லி, அட்லீஸ்ட் காலையிலவாது வர முடியாதுன்னு சொல்லி இருக்கலாம், குறைச்சு சமைச்சிருப்பேன்... “

“பராவாயில்லை ரம்யா,வராதவங்களா பத்தி ஏன் பேசனும்...அஜீஸ் , சேவியர் பேமிலிஸுக்கு இன்னக்கி மறக்க முடியாத லஞ்சுன்னு சொல்லிட்டுப்போனாங்கள்ல, அதை நினைச்சு சந்தோசப்படு , மீதமான சாப்பாட்டை நைட் டின்னர் ல காலி பண்ணிடுவோம்..டோண்ட் வொரி”

“ம்ஹூம், அப்படியும் நாலு பேரு சாப்பிடுற அளவுக்கு சாப்பாடு மீதி இருக்கும் ”

தொடர்ந்து கோவிலை நோக்கி நடந்து கொண்டிருக்கையில் எங்களது வீட்டில் இருந்து நான்கு வீடு தள்ளி புதிதாக கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு எளிமையான வீட்டின் அருகே
ஒரு கணம் நின்று என்னைப் பார்த்தாள். கட்டிடம் கட்டுபவர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த குடிசையின் வாசலில் கணவன் மனைவி தங்களது மூன்று குழந்தைகளுடன் உட்கார்ந்து ஏதோ பேசிக்கொண்டிருந்தனர்.

அந்தக் கணவன், மனைவி மேலும் சிலபேருடன் அந்த வீட்டைக் கட்டும்
பணியில் ஈடுபட்டிருப்பதை நான் வாரநாட்களில் பார்த்திருக்கின்றேன். அந்த வீடு கடைசி மூன்று மாதங்களாக மெதுவாக வளர்ந்து வருகிறது. ஒரு மாத இடைவெளியில் மாளிகை மாதிரி வீடுகளே எழும்பும் இந்த காலத்தில், இப்படி மெதுவாக வேலை நடப்பது ஆச்சரியமாக இருக்கும். வீடு கட்டுபவருக்கு என்ன பிரச்சினையோ. என யோசித்துக் கொண்டிருந்தபொழுது ரம்யா என் தோளைத் தொட , அதன் காரணத்தைப் புரிந்து கொண்ட நான்

மெல்லியத்தயக்கத்துடன் , நான் அந்தக் கட்டிடத்தொழிலாளியை அணுகி

“வீட்டில விருந்து செஞ்சோம் கொஞ்சம் சாப்பாடு இருக்கு, தந்தால் சாப்பிடுவிங்களா?” ஏதாவது கடினமாக சொல்லி மறுத்துவிடுவாரோ என்ற பயத்துடனேயே கேட்டேன்.

ஒரு கணம் யோசித்த அவர், தனது காலைக்கட்டிக்கொண்டிருந்த குழந்தைகளை தலையில் தடவிக்கொடுத்துவிட்டு “இருங்க சார், பாத்திரம் எடுத்துட்டு வரேன்”

கட்டிடத்தொழிலாளியை அழைத்துக்கொண்டு நானும் ரம்யாவும் வீடுத் திரும்பியபின், அவர் கொண்டு வந்திருந்த பாத்திரம் சாப்பாடு மற்றும் உடன் உணவு வகையறாக்களை வைக்க போதுமானதாக இல்லாததால் எங்கள் வீட்டில் இருந்த சில கிண்ணங்களில் அனைத்து சாப்பாட்டையும், கூட்டு வகையறாக்களையும்,குழம்பு வகைகளையும், வாழை இலைகளையும் கொடுத்தனுப்பினாள்.

இப்பொழுது ரம்யாவின் வருத்தம் கொஞ்சம் தணிந்திருந்தது அவளின் முகத்தில் தெரிந்தது. எல்லா உணவையும் கொடுத்துவிட்டதால் வெளியே உணவகம் போய் சாப்பிடலாம் என முடிவு செய்து, நானும் ரம்யாவும் அந்த கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் வீட்டைக் கடக்கையில் கட்டிடத்தொழிலாளி அவரின் மனைவி குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக சாப்பிட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்த ரம்யா என்னிடம்

“கிருஷ்ணமூர்த்தி பேமிலியும், வாசுதேவன் பேமிலியும் லஞ்சுக்கு வராதது நல்லது தான், ” சொன்ன பொழுது அவளின் முகத்தில் கோவிலுக்கு சென்று வந்த மகிழ்ச்சிக்களைத் தெரிந்தது.
*****

10 பின்னூட்டங்கள்/Comments:

SweetJuliet said...

cool story...with the moral..

மங்களூர் சிவா said...

ஜெனி இல்லாம ட்விஸ்ட் இல்லாம பயமுறுத்தாம எதார்த்தமா அருமையா ஒரு கதை!

செல்வா கலக்கீட்டீங்க!

மங்களூர் சிவா said...

ரம்யாதான் ஜெனியோ!?!?!?

சின்னப் பையன் said...

பேய் இல்லைன்னாலும் சூப்பர் கதை!!!

Nimal said...

கதை சூப்பர்...!

இப்போதெல்லாம் உங்கள் கதைகள் இன்னமும் சிறப்பாக இருக்கின்றன.

வாழ்த்துக்கள்!!!

Divya said...

மிக மிக நன்றாக இருக்கிறது கதையும், கருத்தும்!!

வாழ்த்துக்கள்!!

தொடரட்டும் உங்கள் நல்நெறி கதைகளம்!!

Thamiz Priyan said...

///மங்களூர் சிவா said...

ஜெனி இல்லாம ட்விஸ்ட் இல்லாம பயமுறுத்தாம எதார்த்தமா அருமையா ஒரு கதை!

செல்வா கலக்கீட்டீங்க!////
அதே.......

Ekanth said...

nalla kadhai da selva..keep them coming..

gils said...

balu mahendra padam mari irukunga :) simple n sweet

வீ. எம் said...

நல்ல கருத்துள்ள அருமையான கதை வினையூக்கி