Friday, September 19, 2008

கீர்த்தனா - சிறுகதை

பிடித்தமான விசயங்கள் கிடைத்தவுடன் அதன்மேல் இருக்கும் சுவாரசியத்தைக் குறைத்துக்கொள்ளும் மனோபாவத்துடனேயே இருந்து வந்த என்னை நேசிப்பின் சுவாரசியத்தை , விருப்பப்பட்ட விசயம் கிடைத்தபின்னரும் உணரச்செய்தவள் கீர்த்தனா. பொதுவாக நான் நேசிக்க விரும்பும் பெண்கள் என்னை நேசிக்க ஆரம்பித்தவுடன், அவர்களுக்கான நேசம் முந்தையநாளைவிட மறுநாள் குறைவாகவே இருக்கும்படியே அமைந்துவிடும். அது முன்பு ஜெனியாக இருக்கட்டும், ஜெனியை விட என் மேல் அதிக மரியாதை வைத்திருந்த ரம்யாவாகட்டும். ஆனால் கீர்த்தனா எல்லாவற்றிற்கும் விதிவிலக்காக என் வாழ்வில் வந்திருக்கிறாள். எனக்காக கடவுள் இந்த உலகிற்கு அனுப்பிவைத்த தேவதை. தேவதையின் அருகாமை கடவுளின் இருப்பை உறுதிப்படுத்துகிறது. என் தேவதை கீர்த்தனா என் வாழ்க்கையில் வந்து ஆறு மாதங்களாகிறது.

ஒரு காதல் தோல்வி என்றாலே , திருமணம் வேண்டாம் என மனம் முடிவு செய்யும். எனக்கோ ஒன்றுக்கு இரண்டாக தோல்வி.இந்த தோல்வி இரண்டுக்கும் என் ”I loose interest quickly on things that I love very much ” என்பதே காரணமாக இருந்தாலும் வாழ்க்கையில் இன்னொரு முறை எந்தப்பொண்ணுக்கும் இடம் கொடுக்கக்க்கூடாது என தீர்க்கமான முடிவில் இருந்தபொழுது , என் அம்மாவின் வற்புறுத்தலால் ,கீர்த்தனாவை பெண்பார்க்கப்போனேன். அவளைப்பார்த்த கணம், என்னுடைய முன்முடிவுகள் அனைத்தையும் தூக்கி ஓரவைத்துவிட்டு அம்மாவிடம் சம்மதத்தை சின்ன புன்னகையால் சொல்லிவிட்டேன்.

அடுத்த மாதமே,ஜெனி,ரம்யா உட்பட எல்லோருக்கும் பத்திரிக்கை கொடுத்து, கல்யாணம் சிறப்பாகவே முடிந்தது. வாழ்க்கையின் பூரணத்துவத்தை உணரத்தொடங்கும் காலக்கட்டத்தில் தான் விதி விளையாடும். விதி வெள்ளை எழுத்தால் வெள்ளைத்தாளில் எழுதப்படுவது என கீர்த்தனா அடிக்கடி சொல்லுவாள்.

திருமணம் முடிந்த மூன்றாம் நாள் , கீர்த்தனா எனக்களித்த முதற்பரிசான தலைக்கவசத்தை வீட்டில் மறந்து வைத்து விட்டுபோன என்னால் விதியின் வெள்ளெழுத்துக்களை படிக்க முடிந்தபோது நடுரோட்டில் போட்டிருந்த பூசணிசிதறலில் வண்டி தடுமாறி தலை எங்கோ போய் முட்டியது.

“என்னடா, சேனல் மாத்தனுமா? “ கீர்த்தனா கேட்டுக்கொண்டே வந்து என் படுக்கையின் அருகில் இருக்கும் நாற்காலியில் அமர்ந்தாள். கடந்த 4 மாதங்களாக படுத்தப்படுக்கையாக , கைகால்கள் செயலற்று, வாய் பேசும் திறனையும் இழந்து, உயிர் இருந்தும் இல்லாமல் இருந்து என்னருகில் இருந்து கவனித்துக்கொண்ட இந்தப் பெண்ணை கடவுள் அனுப்பி வைத்த தேவதை என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்லுவது சொல்லுங்கள்.

கீர்த்தனாவின் அப்பா வாசுதேவன் வந்திருப்பதை ,அவர் என் பெற்றோருடன் பேசிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்டு உணர்ந்தேன். ”நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு “ பாட்டு ராஜ் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்க

“கீர்த்தனா, உன் அப்பா வந்திருக்கிறார், வாம்மா” என என் அம்மா வந்து கூப்பிட்டபிறகே போனாள்.

வாசுதேவன் இந்த வாரத்தில் வருவது மூன்றாவது தடவை. அவருக்கு கீர்த்தனாவை தன் வீட்டுக்குகூட்டிப் போய் விடுவதாக அம்மா அப்பாவிடம் கேட்டிருந்தார். என் அம்மா அப்பாவும் இதற்கு சம்மதம் தெரிவித்து விட்டார்கள்.

“நீ வாழ வேண்டிய பொண்ணும்மா, நாங்க கார்த்தியைப் பார்த்துக்குறோம்”

”இல்லை அத்தை, நான் போக மாட்டேன்”

“கீர்த்தனா, வீம்பு பன்ணாதே, இது வாழ்க்கை, உன்னைத் தியாகி ஆக்க நாங்க இவ்ளோ கஷ்டப்பட்டு வளர்க்கல?”

“அப்பா, தியாகம் பண்றேன்னு நினைப்பிலேயோ , கடமைக்காகவோ நான் இங்கே இல்லை.. கார்த்தியோட இருக்கிற ஒவ்வொரு நிமிஷமும் என்னோட பாக்கியம்..என்னோட லைஃபோட பர்ப்பஸ் இது தான்... கார்த்தியை எனக்கு ஆறு மாசமாத்தான் தெரியும், ஆனால் இந்த ரிலேஷன்சிப்போட இண்டன்ஸிட்டி ஜாஸ்திப்பா.. இன்னொரு முறை இப்படி கேட்டுட்டு இந்த வீட்டுப்பக்கம் வராதீங்க” என சொல்லிவிட்டு அறையினுள் நுழையும் முன் கண்களைத்துடைத்துக்கொண்டு , ” எப்போதும் உன்னைவிட்டு போகமாட்டேண்டா ” எனச் சொல்லி என் உயிரற்ற உடலின் நெற்றியில் வாஞ்சையாக முத்தமிட்டபோது சற்று தூரத்தில் அரூபமாக இருந்த என்னுள் சிலிர்ப்பை உணர்ந்தேன்.

அடுத்த ஜென்மத்தில் கீர்த்தனாவிற்கு குழந்தையாகப்பிறக்க வேண்டும், இல்லை இல்லை அது இந்த ஜென்மத்திலேயே நடக்கும். அடுத்த சில நிமிடங்களில் என் வீட்டில் அழுகைக்குரல்கள் அதிகமாக , மன நிம்மதியுடன் காற்றில் கரைந்தேன்.

---

மற்றொரு முடிவைப்படிக்க இங்கேச்சொடுக்கவும்

11 பின்னூட்டங்கள்/Comments:

said...

//என் தேவதை கீர்த்தனா என் வாழ்க்கையில் வந்து ஆறு மாதங்களாகிறது.//
ஸ்வீடனுக்குப் போய் ஆறு மாசம் தான் ஆச்சா செல்வா? ;-)

எப்படியோ உங்க ஆவி கதை படிச்சி நாளாச்சேன்னு நினைச்சேன்.. வந்துடுச்சு

said...

ரம்யாவும் போய் கீர்த்தனாவா! இருக்கட்டும். :))

said...

ம்.....அன்பு என்பது இதுதான்...நீண்ட கொடும் காலத்தைவிட குறுகிய அற்புதமான காலங்கள் சிலிர்ப்பூட்டுபவை

said...

//எப்படியோ உங்க ஆவி கதை படிச்சி நாளாச்சேன்னு நினைச்சேன்.. வந்துடுச்சு//
ரிப்பீட்ட்டேய்

said...

அருமையான கதை!

//எப்படியோ உங்க ஆவி கதை படிச்சி நாளாச்சேன்னு நினைச்சேன்.. வந்துடுச்சு//

ரிப்பீட்டேய்!

கலக்குங்க!

ஜெனி தெரியும்!

ரம்யா மேட்டரெல்லாம் நான் படிக்காம மிஸ் பண்ணிட்டேனே!

said...

நேரம் கிடைத்தால் அல்ல... நேரம் ஒதுக்கி படிப்பேன்... உங்கள் எழுத்தை...
கதையை பற்றி பலரும் சொல்வார்கள்... அது போதும் உங்களுக்கு...
நான் இங்கு கவனித்தது... யாவரும் உங்கள் எழுத்துக்களை உங்கள் கற்பனை என்றே நம்ப முன் வராதது.
உங்கள் நிகழ்வு என்பதாய் மயக்கும் உங்கள் எழுத்துக்களும் மாயையின் பிரதிநிதியோ?

said...

கதை கற்பனையிலாவது இதெல்லாம் சாத்தியமாகிறதே என சந்தோஷமாயிருக்கிறது.

நானும் ஒரு காலத்தில் இதே போல ஒரு தேவதை என்னருகே இருந்து என்னைக் கண்மணி போல் கவனித்துக் கொள்வதாக கற்பனை செய்திருக்கிறேன்.

நிஜத்தின் கொடூர பற்களால் மென்று துப்பப்பட்ட, என் பல கனவுகளில் இதுவும் ஒன்று நண்பா.

இந்த நினைவுகளுக்கெல்லாம் என் வாழ்வில் எப்போதுமே இடமில்லை என்பது புரிந்து வெகு நாளாயிற்று.

நல்ல கதை.

மனதைத் தொட்ட கதை!

வாழ்த்துக்கள்.

said...

//பிடித்தமான விசயங்கள் கிடைத்தவுடன் அதன்மேல் இருக்கும் சுவாரசியத்தைக் குறைத்துக்கொள்ளும் மனோபாவத்துடனேயே இருந்து வந்த என்னை //

இது பொதுவாக எல்லோரிடமும் இருக்கும் ஒரு மனித இயல்பு.... சில நேரங்களில் இது மாறு படலாம்......எப்போதும் போல மனதைத் தொட்ட கதை.
அன்புடன் அருணா

said...

எப்டீய்யா இப்படியெல்லாம் சிந்திப்பீங்க?
ரூம் போட்டு யோசிப்பீங்களா?
நல்லா இருக்கு தோழர்!

said...

Nalla iruku selva :)

said...

தங்கம்..

கன்னத்தில் ஒரு 'உம்மா' கொடுக்கிறேன்.. பெற்றுக் கொள்..