”அது நான் இல்லை, ஜெனி என்னோட ஐடெண்டிகல் டிவின்ஸிஸ்டர், , நாங்க எல்லாம் சுவீடன்ல ஒன்னாத்தான் இருந்தோம், நாங்க 2004 ல இண்டியா வந்தப்ப சுனாமி என்னையும் அவளையும் பிரிச்சிடுச்சு”
மெரினா கடற்கரையில் ஜெனி என நினைத்து துரத்திப் போய் பேசிய பெண் இப்படி சொன்னவுடன் கார்த்திக்கு தலை சுற்றி மயக்கமே வந்தது. ஜெனி இறந்து போய் மூன்று வருடம் ஆகிறதா!! பிறகு தன்னுடன் சுவீடனில் இருந்து யாஹு அரட்டைத்தோழியாக கடந்த சில மாதங்களாக பேசிக்கொண்டிருப்பது ?????!!! அந்த அரைமயக்கத்தில் நடைமேடையில் உட்கார்ந்த கார்த்தியின் நினைவு ஜெனியுடன் ஆன முதல் யாஹு அரட்டைக்கு சென்றது .
கார்த்தி , யாஹூ தமிழ்நாடு பொது அரட்டை அறையில் எல்லோருக்கும் தமிழில் வணக்கம் என தனியாக தட்டச்சு செய்து வெட்டி ஒட்டிக்கொண்டிருக்கும்பொழுது
"எப்படி நீங்க தமிழ்ல டைப் பண்றீங்க” என்பதை அப்படியே ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து ஒரு யாஹு விண்டோ ஜெனியிடம் இருந்து வந்து விழுந்தது.
தமிழ்தட்டச்சுக்கான எல்லா வழிமுறைகளையும் கார்த்தியிடம் அறிந்துகொண்டபின் ஜெனி தான் சுவீடன் நாட்டில் முதுகலைப் பட்டம் படிப்பதாகத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டாள். அதன்பின் அடுத்தடுத்த அரட்டைகள் கார்த்தியின் சுவாரசியமான உரையாடல்கள், ஜெனியை அதிக நேரம் அவனுடன் ஆன்லைனில் இருக்க வைத்தது. கார்த்திக்கும் தனது பழைய தோல்விகளை எல்லாம் சொல்லிப் புலம்ப, தற்கால வெற்றிகளை எல்லாம் பறைசாற்றிக் கொள்ள ஒரு நட்பு அதுவும் ஒரு பெண் நட்புக் கிடைத்ததில் ஏக மகிழ்ச்சி.
எழுத்துஉரையாடல் ஒலி வடிவம் பெற்று பின் ஒலியுடன் ஒளியும் சேர்ந்து கார்த்தி ஜெனி நட்பு அடுத்தக் கட்டத்தை எட்டியது. ஜெனி நல்லா பேசிக்கொண்டிருக்கும்பொழுது “டோண்ட் எக்ஸ்பெக்ட் மச் பிரம் மி , நான் திடீர்னு ஓரு நாள் காணாப் போயிடுவேன்” என்று சொல்வது கார்த்திக்கு எரிச்சல் மூட்டினாலும் கோபத்தை வெளிக்காட்டாமல் சின்ன ”ஸ்மைலி” போட்டு வேற ஏதாவது பற்றி உரையாடலைத் திசைத் திருப்பி விடுவான்.
கார்த்தி ஜெனி இணையநட்பு ஆரம்பித்து சிலமாதங்கள் கழித்து , தொடர்ச்சியாக இரண்டு நாட்களுக்கு வழக்கமான நேரத்திற்கு ஜெனி யாஹு,ஜிடாக் , ஸ்கைப் எதிலும் வராததால் ”நலம் வளம் அறிய ஆவல்” என ஆஃப்லைன் மெசேஜஸ் அனுப்பிய அடுத்த ஐந்து நிமிடத்தில் ஜெனி ஜிடாக்கில் அழைத்து “நான் தான் ஏற்கனவே உன்னிடம் சொல்லி இருக்கேன்ல, எதுக்கு ஆப்லைன் மெசேஜ் அனுப்புறேன்னு” ஏகத்துக்கும் அர்ச்சனை செய்து தொடர்பைத் துண்டித்தாள். ஜெனி ஏற்கனவே ஒரு முறை ஆஃப்லைன் மெசேஜச் பற்றி சொல்லி இருந்தாலும் இதற்கெல்லாமா கோபப்படுவாள் என கார்த்திக்கு ஆச்சரியமாக இருந்தது.
அடுத்த வாரத்தில் ஜெனி ஆன்லைனில் தென்பட்டாலும் கார்த்தி அவளை கண்டுகொள்ளவில்லை. ஒரு நாள் தானாகவே வந்தாள்.
“கார்த்தி, கோபமா இருக்கியா.. என்கிட்ட பேசுவியா!!!”
“எப்போ மாட்டேன்னு சொல்லி இருக்கேன்,”
“இப்பொவெல்லாம் உன்கிட்ட பேச எனக்கு பயமாயிருக்கு, உன் அக்கறை பயமாயிருக்கு, உன் பிரியம் பயமாயிருக்கு.. எனக்கு அதெல்லாம் வேண்டாம்”
”ஏன் ? நான் தான் ஏற்கனவே சொல்லி இருக்கேன்ல.. என் மனசுல இன்னமும் என் பழையக் காதலி ரம்யா தான் இருக்காள்...டோண்ட் திங் மச்... புரோபஸ் எல்லாம் செய்ய மாட்டேன் ”
“யா, ஐ க்னோ... ஸ்டில் உன் அக்கறை வேண்டாமே.... ”
“அக்கறை இல்லாமல் எல்லாம் பேச முடியாது.. அப்படி என் அக்கறை வேண்டாம் என்றால் என்னையும் வேண்டாம்னு ஒதுக்கிடு.. மெசெஞ்சர், மெயில் எல்லாத்துலேயும் என்னை பிலாக் பண்ணிடு.. “
”நான் அவ்வளவு கொடுமைக்காரி கிடையாது.. உன்னோட அக்கறை எல்லாம் ஏத்துக்க முடியாத சூழலில் இருக்கேன், சரி அடுத்த ஒரு மாதம் ஆன்லைன் வரமாட்டேன் தேடாதே!!! அதற்கப்புறம் கூட வருவனா மாட்டேனே என்பதும் தெரியாது ”
“எக்ஸாம்ஸா?”
“ஆமாம்”
இந்த உரையாடலுக்குப்பின்னர் ஜெனி ஆன்லைன் வரவே இல்லை. அனுப்பிய மின்னஞ்சலுக்கும் பதில் இல்லை. கார்த்திக்கு இதுபோல பல இணைய நட்புகள் முறையாக முற்று பெறாமல் விடைபெற்றது உண்டு. கிட்டத்தட்ட ஜெனியை மறந்து போன நிலையில் தான் இப்பொழுது ஜெனியை போல இருக்கும் அந்த பெண்ணை சந்தித்தது. யோசனையில் இருந்து விடுபட்டு ஜெனி போல இருந்த பெண்ணைத் தேடினான். ரொம்ப தூரத்தில் போய் கொண்டிருந்தாள்.
கார்த்தி கொஞ்சம் தெளிவடைந்து, அவனுக்கு பேய் இருக்கு அப்படிங்கிற நம்பிக்கை இருந்தாலும், வெப்கேம் , வாய்ஸ் சாட்ல எல்லாம் வரவேண்டிய கட்டாயம் இல்லை என்பது புரிந்தது. ஒரு மாதம் தான் ஆன்லைன் வரமாட்டேன் என்று சொன்ன ஜெனி இந்தியாவுக்குத் தான் வந்திருக்கிறாள். எதிர்பாராதவிதமாக கார்த்தி ஜெனியைப் பார்க்க , அவனிடம் இருந்து தப்பிக்க , தனக்கு ஒரு இரட்டைசகோதரி இருக்கிறாள் என்று பொய் சொல்லி இருக்கிறாள் . பெரும்பலான இணைய நட்புகள் இப்படித்தான் இருக்கும், மணிக்கணக்கில் ஆன்லைனில் அரட்டை அடிப்பார்கள்.. ஆனால் நேரில் சந்திக்க துளிக்கூட விருப்பம் காட்ட மாட்டார்கள். எது எப்படியோ இணையத் தோழியை ஒரு நிமிடமாவது நேரில் சந்திக்க வாய்ப்புக்கிடைத்ததே.. என்ற திருப்தியுடன் வீட்டிற்கு வந்ததும் மடிக்கணினியில் மின்னஞ்சல் பெட்டியைத் திறந்த போது முதல் அஞ்சலாக ஜெனியிடம் இருந்து, ”தேர்வு நல்ல படியாக எழுதி இருப்பதாகவும், நல்ல மதிப்பெண்கள் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாகவும் . அரட்டைக்கு வரவும்” என்றக் குறிப்போடு அஞ்சல் நிறைவுப் பெற்றிருந்தது. பெண்கள் எப்படி எல்லாம் இருக்கிறார்கள் என்ற மனதில் சிரிப்போடு கார்த்தி யாஹூ மெசெஞ்சரை திறந்தான்.
“உன் அக்கறை வேண்டும்” , ”உன் அன்பு வேண்டும் “ “உன் பிரியம் வேண்டும்” என ஏகப்பட்ட பாசமான ஆஃப்லைன் மெசேஜஸ் .. எல்லாம் கடைசி சில நிமிடங்களில் அடித்திருப்பதை நேரம் காட்டிக்கொடுத்தது. ஜெனி ஆன்லைனில் இருந்தாள். வெப்கேமும் வாய்ஸ் சாட்டும் ஆரம்பித்தான்.
கார்த்தி மனதில் நக்கலுடன், “ஜெனி உனக்கு ஒரு ட்வின்ஸிஸ்டர் இருப்பதை ஏன் சொல்லவில்லை?,”
“ஆமாம் கார்த்தி எனக்கு ஒரு டிவின் ஸிஸ்டர் இருந்தாள், இப்போ இல்லை, 2004 கிறிஸ்துமஸுக்கு இண்டியா வந்து இருந்தோம், அப்போ டிசம்பர் 26 சுனாமி அலை அவளை அடிச்சுட்டுப் போயிடுச்சு,...அவ செத்துப் போனதாகவே நாங்க நினைக்கல, என் கூடவே இருக்கிறது போல ஒரு ஃபீல் எப்போதும் இருந்துக்கிட்டே இருக்கு....”
”.............?!!!!!!!!!!!”
-------------------முற்றும்-------------------------------------