Monday, January 07, 2008

"Mankad'ed" ரன் அவுட்டும் கபில்தேவின் ஆவேசமும்

கிரிக்கெட்டில் ஒரு ஆட்டக்காரரை ஆட்டமிழக்க செய்யும் முறைகளில் ஒன்று “Mankad'ed run out". அதாவது பந்து வீசப்படும் முனையில் இருக்கும் ஆட்டக்காரர் பந்துவீச்சாளர் பந்தை வீசும் வரை மட்டை கோட்டை விட்டு வெளியே வரக்கூடாது. அப்படி வெளியேறினால் நடுவர் நிற்கும் பக்கத்தில் இருக்கும் விக்கெட்டுகளை தட்டிவிட்டு அந்த மறுமுனை ஆட்டக்காரரை ஆட்டமிழக்கச் செய்யலாம். இந்தியாவின் வினு மன்காட் 1947- 48 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தில் ஆஸ்திரேலிய துவக்க ஆட்டக்காரர் ஆல்பிரட் வில்லியம் பிரவுனை இந்த முறையில் ஆட்டமிழக்கச் செய்தார். அதில் இருந்து இந்தவகையான ஆட்டமிழக்க செய்யும் முறைக்கு "Mankad'ed " ரன் அவுட் என்ற பெயர் தரப்படுகிறது.

பெரும்பாலும் இந்த முறையில் ஆட்டமிழக்கச் செய்ய பந்துவீச்சாளர்கள் தயங்குவார்கள். எச்சரிக்கை மட்டும் செய்துவிட்டு விட்டுவிடுவார்கள்.

87 உலகக் கோப்பையின்போது லாகூரில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் பாகிஸ்தான் அணி, கைவசம் ஒரு விக்கெட் இருக்க , கடைசி பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் சலீம் ஜபார் கோட்டை விட்டு வெகுதூரம் ஓடிவிட , அவரை வால்ஷ் ஆட்டமிழக்க செய்யாமல் எச்சரித்துவிட்டு கடைசி பந்தை வீசினார். அந்த பந்தில் அப்துல் காதிர் இரண்டு ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணியை வெற்றிபெறச் செய்தார். வால்ஷின் பெருந்தன்மை இன்றும் நினைவுக் கூறப்படுகிறது.

ஆனால் பலமுறை எச்சரித்தும் கேட்காத மட்டையாளர்களை இவ்வகையில் ஆட்டமிழக்கச் செய்த சம்பவங்களும் கிரிக்கெட் வரலாற்றில் உண்டு. நியுசிலாந்து அணியின் தீபக் பட்டேல் ஒரு முறை ஜிம்பாப்வே அணியின் கிராண்ட் பிளவரை இந்த வகையில் ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.

இந்தியாவின் முதல் தென்னாப்பிரிக்க சுற்றுப் பயணத்தின் போது போர்ட் எலிசபெத்தில் நடைபெற்ற ஒருநாள் ஆட்டத்தில் பீட்டர் கிறிஸ்டன் கபில்தேவின் எச்சரிக்கைக்களைத்
தொடர்ந்து அலட்சியப்படுத்திக் கொண்டே இருந்ததால் கடுப்பாகிப் போன கபில்தேவ் மன்காடட் முறையில் ஆட்டமிழக்கச் செய்தார். பொதுவாக சாந்தமாக இருக்கும் கபில்தேவ்
ஆவேசப்படும் வீடியோ தான் கிழே இருப்பது.



கிரிகின்போ தளத்தில் மன்காடட் ரன் அவுட் முறைப் பற்றியக் கட்டுரை இங்கே

நன்றி : யூடியூப்.கோம்

2 பின்னூட்டங்கள்/Comments:

வவ்வால் said...

//பொதுவாக சாந்தமாக இருக்கும் கபில்தேவ்
ஆவேசப்படும் வீடியோ தான் கிழே இருப்பது.//

என்னது சாந்தமாகவா? கபில் தேவ் தான் அபோதைய இந்திய கிரிக்கெட்டர்களிலேயே கோபக்காரார். இப்போது விளையாடுபவர்களை வைத்துப்பார்த்தால் அதெல்லாம் ஒன்றுமே இல்லை என்று வேண்டுமானால் சொல்லலாம்.

பல முறை பேட்டை ஓங்கி காட்டி இருக்கிறார்(அடித்து விடுவேன் என்ற அர்த்தத்தில்)... அப்படிக்காட்டுவதே விதிப்படி தவறு.ரஞ்சி மேட்சில் அம்பயரயை ஸ்டம்பால் அடிக்கக்கூட போய் இருக்கிறார்.பல வர்ணனையாளர்களும் கபில் தேவின் கோபத்தை பற்றி சொல்லிக்கேட்டதில்லையா, பல கட்டுரைகளும் உண்டே!

ஆனாலும் அவரது கோபத்தை ஆக்கப்பூர்வமாக பெரும்பாலும் காட்டுவார், எரிச்சலூட்டும் பந்து வீச்சாளாரின் பந்தை சிக்சர், ஃபோர் என்று தாளித்து எடுத்து விடுவார்.

dondu(#11168674346665545885) said...

Bodyline புகழ் ஜார்டின் பற்றிய ஒரு டிவி சீரியலில் நான் பார்த்தது. ஜார்டின் செய்தது முப்பதுகளில். ஆனால் அது டெஸ்ட் மேட்ச் அல்ல. அதுவும் அவர் அழுகினி ஆட்டம் ஆடுவார் என்பதை குறிக்கவே அந்த காட்சி சேர்க்கப்பட்டது. சட்டப்படி சரியென்றாலும் இம்மாதிரி அவுட் ஆக்குவது பல கண்டனங்களுக்கு உள்ளாகும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்