Sunday, August 16, 2009

+46762509249 சுவீடனில் ஒரு தொலைபேசி அழைப்பு - சிறுகதை

வெள்ளிக்கிழமை இரவு ஆதலால் என்னுடைய அறை நண்பர்கள் கார்ல்ஸ்க்ரோனா நகர இரவுக் கொண்டாட்டங்களுக்குச் சென்றுவிட்டார்கள். தனிமைதான் மனிதனின் முதல் எதிரி. பழைய சோகம் , புதிய மகிழ்ச்சி என எதைப்பற்றியும் யோசிக்காமல் தூங்க முயற்சித்தாலும் வரவில்லை. கண்ணாடி சன்னல் வழியே வெளியே எட்டிப்பார்த்தேன். எங்களது குடியிருப்பு வளாகத்தில் இருக்கும் பழைய யூகோஸ்லாவியா அகதிகள் சத்தம் போட்டுக்கொண்டு, வார இறுதி ஆட்டம் பாட்டங்களுக்குச் சென்று கொண்டிருந்தனர். எப்படியும் குளிர் -5 இருக்கும்.

”விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம், குலம் விளங்க விளக்கு வைப்போம்” இளையராஜாவின் இசையில் வெளிவந்த ஆத்மாப் படப்பாடலுடன் கைபேசி அழைக்க ஆரம்பித்தது. வந்த எண்ணைப் பார்த்தேன், +46762509249,சுவீடன் எண்தான்.தெரியாத எண் வந்தால் பெரும்பாலும் எடுக்க யோசிப்பேன். ஒரு வேளை கிருஷ்ணமூர்த்தியோ வாசுதேவனோ வேறுயாரவது கைபேசியில் இருந்து கூப்பிடுகிறார்களோ என யோசித்தபடியே

”கார்த்தி ராமச்சந்திரன் ” என்றேன். சுவீடனுக்கு வந்த இந்த இரண்டு மாதங்களில் மக்களுடன் தொலைபேசியில் பேசும்பொழுது கவனித்த விசயம் சுவிடீஷ் மக்கள் ஹலோ சொல்லாமல் தங்கள் பெயரைச் சொல்வார்கள். மாறுபட்ட ஒரு விசயமாக இருந்ததனால் அப்படியே வரித்துக்கொண்டேன். மறுபுறம் அழைப்பவர்கள் கேட்கும் முன் சரியான நபருடன் தான் பேசுகிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ள ஒரு வாய்ப்பு.

மறுபக்கம் அழகான பெண்குரல், “யாக் ஹீதர் ஆன் நீல்சன் கேன் டு யெல்ப்பரா மெய்க்”

ஹீத்தர், யெல்ப்பரா என்ற இரு வார்த்தைகளை வைத்து தனது பெயரையும் உதவி தேவை என்றும் கூறுகிறாள் என என்னால் யூகிக்க முடிந்தது.

”யாக் தாலர் இண்டே சுவென்ஷ்கா, கேன் டு தாலா இங்கல்ஸ்கா” , எனக்கு சுவிடீஷ் தெரியாது, ஆங்கிலத்தில் பேசமுடியுமா என்ற அர்த்தத்தில் அமைந்த , இந்தியாவிலேயே மனப்பாடம் செய்து வைத்திருந்த அருமையான சுவிடீஷ் உச்சரிப்புடன் சொல்லிய பின் அந்தப் பெண் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தாள்.

அவளுக்கு யாருடன் ஆவது பேசவேண்டும் எனத் தோன்றியதால் ஏதோ ஒரு எண்ணை அழைத்துக் கூப்பிட்டதாகக் கூறினாள். நான் என்னைப் பற்றி அறிமுகப் படுத்திக் கொண்டேன். எனக்கு மனதுக்குள் ஏகப்பட்ட மகிழ்ச்சி. ஆங்கிலத்தில் கடலைப் போடுகிறேன் எனும்பொழுது சுவாரசியம் மேலும் அதிகமானது. அவள் எனது ஊரில் இருந்து 30 நிமிட பயண நேரத்தில் 50 கிமீ தொலைவில் இருக்கும் கார்ல்ஷாம்ன் என்ற நகரத்தில் வசிப்பதாகக் கூறினாள்.மால்மோ பல்கலைகழகத்தில் சமூக விஞ்ஞானம் படிப்பதாகக் கூறினாள். தனது பழையக் காதலனைப் பற்றிக் கூறினாள்.அழுதாள். சிரித்தாள். பெண்களிடம் எனக்கு என்னப்பிடிக்குமெனக் கேட்டாள். பதில் கூறாமல் நான் சிரித்ததை ரசித்தாள்.

“கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பேசிவிட்டோமே!! உனக்கு தொலைபேசிக் கட்டணம் அதிகமாகாதா? உனக்கு இணைய இணைப்பு இருந்தால் கணினி வழிப் பேசலாமே “ என ஆங்கிலத்தில் கேட்டேன்.

“டெலிடு காம்விக் இதில் 30 நிமிடங்கள் பேசினால் 0.69 க்ரோனர்தான், ஆகையால் பிரச்சினை இல்லை” என்றாள்.

அதிகாலை 5 மணிக்கு நான் தூங்கிவழிந்துப் பேசுவதைக் கண்ட அவள் ,

“நீ போய்த்தூங்கு, நான் நாளை உன்னை அழைக்கின்றேன்” எனச் சொல்லி அழைப்பைத் துண்டித்தாள்.

மனதின் குதுகலத்துடன் அன்றையப் பகல் முழுவதும் தூங்கிப்போனேன். மறுநாள் இரவும் கூப்பிட்டாள். பேசினோம்.. பேசினோம்... மறுநாள் இரவும் சங்கீத ஸ்வரங்களாக கரைந்தது. தமிழின் பெருமைகளைப் பற்றி சொன்னேன். சுவிடீஷ் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தாள்.அடிப்படை வாக்கியங்கள் அனைத்தையும் இலக்கணத்தோடு சொல்லிக் கொடுத்தாள். பகலில் வகுப்புகள் இருந்தாலும் ஓரிருமுறை அழைத்தபோது ஏதோ சுவிடீஷில் சொல்லி அழைப்பு போகவில்லை. ஒரு மாதத்திற்குப்பின் அவளைச் சந்திக்க விருப்பம் தெரிவித்தேன். கார்ல்ஷாம்ன் முகவரியைக் கொடுத்தாள். அருமையாக உடையணிந்து அவள் சொன்ன முகவரிக்குச் சென்றுபார்த்தேன்.கதவைத் திறந்த வயதான பெண்மணியிடம்

“ஆன் நீல்சனைப் பார்க்க விரும்புகின்றேன்” சுவிடீஷில் ,

அந்த வயதானப் பெண்மணி புருவத்தை உயர்த்தி ,பயங்கலந்த வியப்புடன் பார்த்தாள்.

"ஆன் நீல்சன், மால்மோ பல்கலை கழகத்தில் படிக்கும் பெண்” எனக்கு பயம் வந்துவிட்டது, தவறான முகவரியைக் கொடுத்துவிட்டாளோ என,

இந்த முறை அந்த பெண்மணி கண்கலங்கி, என்னை வீட்டிற்குள் அழைத்தாள்.

மேசையின் மேல் இருந்த ஒரு பெண்ணின் புகைப்படத்தை எடுத்துக் கொண்டு என்னருகில் வந்து என்னிடம் பேச ஆரம்பித்தாள். புகைப்படத்தைப் பார்த்தேன். ஆன் நீல்சனாகத்தான் இருக்க வேண்டும். நான் கற்பனை செய்து இருந்ததை விட அழகாக இருந்தாள். பழைய டென்னிஸ் வீராங்கனை அன்னா கோர்னிகாவைப் போல இருந்தாள்.

”நீ அவளுடன் பல்கலைகழகத்தில் படித்தவனா” என்ற அந்தப் பெண்மணிக்கு என்ன சொல்வது எனத் தெரியாமல் ஆமாம் என தலையாட்டினேன்.

ஆன் நீல்சன் அந்தப் பெண்மணியின் கடைசி மகள் என்றும் அவள்மேல் கொள்ளைப் பிரியம் வைத்திருந்ததாகவும் சொன்னாள். மால்மோவிற்கு படிக்கப்போகின்றேன் எனப்போனவளை அதன் பின்னர் பார்க்கவில்லை எனச் சொன்னாள்.

“உங்களுக்குள் ஏதேனும் பிரச்சினையா “ என்றேன்.

“இல்லை, ஒரு விபத்தில் இறந்துவிட்டாள்” எனக்கு தூக்கிவாரிப்போட்டது. முகத்தில் வியர்த்திவலைகளுடன் ”எத்தனை நாட்களுக்கு முன்னர்?”

“நாட்கள் இல்லை, இரண்டு வருடமாகிவிட்டன”. எனக்கு தலை கிறுகிறுவென சுற்றுவது போல இருந்தது.

“சிலசமயங்களில் அவளுடன் தொலைபேசியில் பேசுவது போல ஒரு உணர்வு, பிரம்மையா உண்மையா எனத் தெரியவில்லை” என அந்தப் பெண்மணி சொன்ன அடுத்த நொடி, அந்த வீட்டில் இருந்து எடுத்த ஓட்டத்தை கார்ல்ஷாம்ன் ரயில் நிலையத்தில் தான் நிறுத்தினேன். கைபேசியைப் பிரித்து உள்ளிருந்த சிம் அட்டையைத் தூக்கி எறிந்தேன். ரயிலின் வேகத்தை விட இதயத்துடிப்பின் வேகம் அதிகமாக இருந்தது. வீட்டிற்கு வந்தவுடன் குளித்து, சாமி கும்பிட்டு, எந்தப் பிரச்சினையும் வரக்கூடாது என வேண்டிக்கொண்டு திருநீற்றை நெற்றியில் இட்டுக்கொண்டேன். இரண்டு நாட்களுக்குப் பின்னர் மனம் ஆசுவசப்பட்ட பின்னர் சுவீடனில் பிரபலமில்லாத நிறுவனத்திடம் கைபேசி இணைப்பு வேண்டி இணையத்தில் பதிவு செய்தேன். ஒரு வாரம் கழித்து சிம் அட்டையுடன் இணைப்புக்கான கடிதம் வந்தது. எனக்கு அளிக்கப்பட்டிருந்த எண்ணைப் பார்த்தேன் +46762509249

Saturday, August 15, 2009

அவருக்கும் உன் முகச்சாயல் தாண்டா - சிறுகதை

"கார்த்தி, முன்பே வா பாட்டு பார்த்திருக்கியா?!!”

“இல்லைடா அம்மு, அந்த பாட்டு ரொம்ப ஸ்லோ, முழுசா கேட்டதும் இல்லை, பார்த்ததும் இல்லை “

“நீ இப்போ பார்க்கனும், யூடியூப் ல தேடிப் பாரு , சண்டே வீட்டில இருக்கிறப்ப எங்க லோக்கல் சேனல்ல அடிக்கடிப் போட்டான்”

சுவீடன் இணைய இணைப்பின் வேகம் அதிகமானதால் ஒரு சில வினாடிகளில் முழுக்க தரவிறக்கம் ஆனது.

“கார்த்தி, கொஞ்சம் ஃபார்வர்ட் பண்ணிட்டு, சூர்யா ப்ளூ கலர் டீஷர்ட் ல வர்ற இடத்தில் இருந்து பாரு!”

”பாட்டுக் கேட்குதா அம்மு” சொல்லிக் கொண்டே மடிக்கணிணியில் சத்தத்தை அதிகரித்தேன்.

நீரும் செம்புல சேறும் கலந்தது போலே கலந்தவர் நாம் என்ற வரிகள் வந்ததும் “ஸ்டாப் ஸ்டாப்” என கீர்த்தனா உற்சாகத்தில் கத்தியதும் பாட்டை அப்படியே நிறுத்தினேன்.

“இப்போ, அந்த லைனை மட்டும் திரும்ப ப்ளே பண்ணு”

திரும்ப அதே வரிகள் பாட ஒலிக்க ஆரம்பிக்க அந்த வரிகளுடன் கீர்த்தனாவும் முணுமுணுக்க ஆரம்பித்தாள்.

“இப்போ சூர்யா ஒரு பக்கமா திரும்பி ஸ்மைல் பண்றதைப் பாரேன்.. ஸோ கியூட்” எனச்சொல்லிவிட்டு ஒரு குழந்தை சிரிப்பு சிரித்தாள் .

எனக்குக் கோபம் வரவில்லை.நான் அவள் வாழ்க்கையில் வந்த பிறகுதான் அவளுக்கு சூர்யாவைப் பிடிக்க ஆரம்பித்து இருந்தது. சென்னையில் வேலைபார்க்கும் கீர்த்தனா வார இறுதிகளில் சொந்த ஊருக்குப் போய் விட்டு வந்தால், அவள் செய்யும் முதல் காரியம் தொலைக்காட்சியில் பார்த்த நிகழ்ச்சிகளைப் பற்றிக்குறிப்பிட்டு அதை என்னை இணையத்தில் பார்க்கச் சொல்லக் கேட்பதுதான்.“காப்பி வித் அனு பார்த்தியா, டைரக்டர் கௌதம் வந்து இருந்தாரு”

மென்பொருள் வர்த்தகம் பற்றி ஒருக் கட்டுரையை மதியத்திற்குள் அனுப்ப வேண்டிய அவசரத்தில்

“இனிமேல் நீ ஊருக்குப் போயிட்டு வரதுக்குள்ள நீயா நானா காப்பி வித் அனு, நடந்தது என்ன, சூப்பர் சிங்கர் , லொட்டு லொசுக்கு எல்லாம் பார்த்து வச்சிடுறேன் போதுமா” சொல்லிய உடனேயே கீர்த்தனாவின் முகம் வாடிப்போனதை குரலில் அறிந்து கொள்ள முடிந்தது.

“ நீ டீவில ப்ரொகிராம் எல்லாம் பார்க்கனும்கிறதுக்காக சொல்லல, கௌதமோட க்ளோஸ் ஷாப் ஷாட்ல கண்ணை மட்டும் மறைச்சிட்டு , இப்போதான் ஸ்மார்ட்டுன்னு எங்க அக்காக்கிட்ட சொல்லிட்டு இருந்தேன் தெரியுமா!!”


ஆண்கள் பக்கம் பக்கமாக அன்பைப்பொழியும் வசனங்கள் பேசுவது, பெண்களின் ஒருவரி வாக்கியத்திற்கு முன் அடிப்பட்டு போய்விடும். கட்டுரையாவது மண்ணாங்கட்டியாவது என எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு அவள் 48 மணி நேரம் வீட்டில் இருந்த கதையை 6 மணி நேரத்தில் கேட்டு முடித்தேன். அதன் பின்னர் எந்த பாடாவதியான நிகழ்ச்சியானாலும் சரி, பாடல் ஆனாலும் சரி அவள் சொன்ன அடுத்த நொடியே தேடிக்கண்டுபிடித்து பார்த்துவிடுவேன். யாராவது ஒரு ஆள் என் முகச்சாயலில் இருப்பார்கள், அதை என்னைப் பார்க்கச்சொல்லி அவள் ரசித்துக்கொள்வாள். ரசிப்புடன் இலவச இணைப்பாக அவளின் குழந்தை சிரிப்பும் கிடைக்கும்.

நிஜம் அருகில் இல்லாதபொழுது நிழல்களில் என்னைத் தேடி மகிழ்ச்சி அடைந்து கொள்ளும் கீர்த்தனா கடைசி வரை நிஜத்தை அவளின் பெற்றோர்களிடம் கொண்டுப் போய் சேர்க்கவேண்டும் நினைக்கவில்லை.

“கார்த்தி,உன்னப் பத்தி சொல்லி எங்க அம்மா கிட்ட இருந்து ரெண்டு சொட்டு கண்ணீர் வரதைப் பார்க்கிற கஷ்டம் உன்னைப் பிரிஞ்சு வாழுற கஷ்டத்தைவிட ஜாஸ்தி”

நான் எப்பொழுதும் கீர்த்தனாவின் பேச்சிற்கு மறுபேச்சு பேசியதில்லை. என்னால் அவள் பெற்றோருடன் பேசி சம்மதிக்க வைக்க முடியும் என்ற போதிலும், இவள் ஒருத்தியையாவது நான் காயப்படுத்தாமல் அனுப்பி வைக்கலாமே என்று முயற்சி எடுக்கவில்லை.

இதோ நாளை கீர்த்தனாவிற்குத் திருமணம். தானே தொலைபேசியில் அழைத்து என் வாழ்த்துக்களைப் பெற்றுக்கொள்வதாக மின்னஞ்சலில் தெரிவித்து இருந்தாள். அவளின் தொலைபேசி அழைப்பிற்காகத்தான் காத்துக்கொண்டிருக்கின்றேன்.

வழக்கம்போல அவளின் தொலைபேசி அழைப்பை எடுக்க முழு மணியும் அடிக்க விட்டு , நானே திரும்ப அழைத்தேன்.

“சொல்லுடா அம்மு, விஷஸ், உன் நல்ல மனசுக்கு நீ ஜம்முன்னு இருப்பே”

“தாங்க்ஸ்டா!! நீயும் சீக்கிரம் செட்டில் ஆகனும்டா!!!”

அதன் பின் என்ன பேசுவது என்று தெரியவில்லை. சில வினாடிகள் மௌனத்திற்குப்பின்

“கார்த்தி, அவருக்கும் உன் முகச்சாயல்தாண்டா” , இந்த முறை கீர்த்தனா பழைய குழந்தைப் புன்னகையைத் தரவில்லை.

Saturday, August 08, 2009

சுவீடன் மேற்படிப்பும் சில கல்வி ஆலோசனை நிறுவனங்களும்( Consultancies)

அறியாமை என்பது தவறல்ல, அறிந்தும் தானே போய் வலிய மாட்டிக்கொள்வதுதான் தவறு. சுவீடனில் படிப்பு இலவசம் என்பது பலரும் அறிந்ததே!!! மனிதனின் அவலங்களைக் கூட வியாபரம் ஆக்கும் இந்த உலகத்தில், இலவசமாகக் கிடைக்கும் படிப்பை வைத்து எப்படி எல்லாம் பணம் செய்கிறார்கள் என்பதைக் கேள்விப்படும்பொழுது வருத்தமாக இருக்கும். சில ஆலோசனை மையங்கள் ஐக்கிய ராச்சியத்திலும் (United Kingdom) ஆஸ்திரேலியாவிலும் இருக்கும் சில பல்கலைகழகங்களோடு நேரிடையாகத் தொடர்பு வைத்து மேற்படிப்பு படிக்க அனுமதி வாங்கித் தருகிறார்கள் என்பது உண்மை. அதற்காக அதே விசயத்தை அனைத்து நாடுகளிலும் செய்ய முடியும் என நம்ப வேண்டியது இல்லை.


ஸ்காட்லேண்ட் தேசத்தில் இருக்கும் அபர்டீன் பல்கலை கழகத்திற்கு மாணவர்கள் நேரிடையாகவும் விண்ணப்பிக்கலாம் , அவர்கள் அனுமதித்து இருக்கும் சில ஆலோசனை மையங்கள் வழியாகவும் விண்ணப்பிக்கலாம். சுவீடன் கிடைக்கும் முன்னர், அபர்டீன் பல்கலை கழகத்திற்கு நான் நேரிடையாக விண்ணப்பித்து அனுமதிக்கடிதம் பெற்றேன். முன்னர் சொன்ன படி ஆஸ்திரேலியா , ஐக்கிய ராச்சியத்தில் இருக்கும் பல்கலை கழகங்கள், கல்லூரிகளில் இவர்களுக்கு நேரிடையான தொடர்பு இருக்க்கின்றது.

ஆனால் சுவீடன் உயர்கல்வியை பொருத்த மட்டில் எந்த ஒரு ஆலோசனை மையத்திற்கும் சுவீடன் கல்வி நிறுவனங்களுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. சுவீடனில் மேற்படிப்பு படிக்க இடம் வாங்கித் தருகிறோம் எனச் சொல்லுபவர்கள் செய்யும் வேலை எல்லாம் உங்கள் சான்றிதழ்களின் நகல்களை வாங்கி தபால் உறையில் இட்டு அனுப்புவது தான். உங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதோ இடம் கிடைக்கப் பெறுவதோ எந்த வகையிலும் ஆலோசனை மையங்களால் (Consultancies) சிபாரிசோ/நிராகரிப்போ செய்ய இயலாது.

இங்கு ஆலோசனை மையங்களை நொந்து எந்த பிரயோசனமும் இல்லை. ஏமாறுபவன் இருக்கும் வரை தலையில் நன்றாக மிளகாய் அரைப்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். சான்றிதழ்களின் நகல்களை “நோட்டரி பப்ளிக்” கையொப்பம் பெற்று தபாலில் அனுப்பக் கூட தெரியாத மாணவர்கள் கண்டிப்பாக மேற்படிப்பு படித்து ஒன்று சாதித்து விடப்போவதில்லை. ஒரு பள்ளிக்கூட இறுதி மாணவனுக்கு இது தெரியவில்லை என்றால் பரவாயில்லை. பொறியியற் படிப்பு முடித்த பின்னர் தெளிவாகக் கொடுத்து இருக்கும் வழிமுறைகளைப் பின்பற்றி எளிமையாக அதிக பட்சம் இரண்டாயிரம் ரூபாய் செலவில் (தபால் செலவு + நோட்டரி பப்ளிக்) விண்ணப்பிப்பதை விட்டு விட்டு 50 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்யும் மாணவர்களை நினைத்து வருந்தத்தான் முடிகிறது.

ஆலோசனை மையங்கள் , மேற்படிப்பு அனுமதியில் ஏதாவது பிரச்சினை என்றால் நாங்கள் தொலைபேசியில் சுவீடன் கல்வி நிறுவனத்துடன் பேசி பெற்றுத்தருவோம் என சொல்லுவார்கள். நாம் எந்தக் கல்லூரிக்கு விண்ணப்பித்திருக்கின்றோமோ அல்லது மொத்தமாக விண்ணப்பிக்கும் ஸ்டூடராவுக்கோ நாமே தொலைபேசி விடலாம். நாம் எத்தனை மோசமாக ஆங்கிலம் பேசினாலும் அவர்கள் பொறுமையாகக் கேட்டு பதில் தருவார்கள். ஒரு வேளை உங்களுக்கு பேசத் தயக்கம் என்றாலும் மின்னஞ்சல் மூலம் கேட்டாலும் தக்கதொரு பதில் கிடைக்கும்.

சுவீடன் அனுமதியைப் பொருத்த மட்டில் விதிமுறைப்படி உங்களுக்கு அனுமதி என்றால் அனுமதி, இல்லை எனில் யாராக இருந்தாலும் கிடையாது.

செப்டம்பரில் எனது சகோதரனுக்கு நான் படிக்கும் கல்லூரியில் விண்ணப்பித்து இருந்தேன். பரிசீலிக்கும் மையத்தில் இருக்கும் அனைவரையும் எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரியும். எனது சகோதரனது சான்றிதழ்களைச் சரிப்பார்க்க சென்னைப் பல்கலை கழகத்துக்கு அனுப்பப்பட்டு ஒரு நாள் தாமதமாக வந்து சேர்ந்தது. எத்தனையோக் கேட்டுப்பார்த்த பின்னரும் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இப்படி இருக்க விசயம் , ஆலோசனை நிறுவனங்கள் நாங்கள் முயற்சி எடுத்து வாங்கித் தந்தோம் என்று சொன்னால் அது வடி கட்டியப் பொய்.

இந்தியாவிலோ சுவீடனிலோ அல்லது உலகத்தில் எந்த மூலையில் இருந்தும் சுவீடனில் தம்மால் மேற்படிப்பு அனுமதி பெற்றுத்தர முடியும், பிரச்சினைகள் இருந்தாலும் சிபாரிசு செய்து வாங்கித் தரமுடியும் என்று யாராவது சொன்னால் அப்படியே ஏற்றுக்கொண்டு பணத்தைக் கட்டாதீர்கள்.

சுவீடன் மேற்படிப்புக்கான விண்ணப்பிக்கும் முறைகள் எளிமையானது, தெளிவானது. சுமாரான ஆங்கிலப்புலமை உடையவர்கள் கூட எளிமையாக விண்ணப்பிக்கலாம். சில ஆர்குட், கூகுள் யாஹூ குழுமங்களில் நடக்கும் விவாதங்களில் மக்கள் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரைத் தர தயாராக இருக்கின்றனர் என்பதை பார்க்கும்பொழுதுதான் , மாணவர்களுக்கு அறிவுறுத்தும் விதமாக இந்தப் பதிவை எழுதத் தோன்றியது. சாதாரண விசயத்தை செய்யத் தெரியாத மாணவர்கள் மேற்படிப்பு படிக்க வந்து பெரிதாக ஒன்றும் சாதிக்கப்போவதில்லை (கடுமையாக இருந்தால் மன்னிக்கவும், ஆதங்கத்தில் சொல்கின்றேன்). 50 ஆயிரம் ரூபாயை நீங்கள் யாராவது சுயதொழில் செய்ய விருப்பம் உள்ளவர்களுக்கு திரும்பப்பெறும் முதலீடாகத் தரலாம், அதை விட்டு நுனிநாக்கு ஆங்கிலத்தில் கோடிகளில் புரளும் கல்வி ஆலோசனை மையங்களிடம் பணத்தை அழ வேண்டாம்.

சுவீடன் இளங்கலை/முதுகலைப் படிப்புக்காக விண்ணப்பிக்க studera.nu என்ற இணைய தளம் இயங்கு கிறது. இவர்கள்தாம் சேர்க்கையை நடத்துபவர்கள்.


இளங்கலை - First Cycle (Under Graduate)

முதுகலை - Second Cycle (Masters )

தொலை தூரப்படிப்புக்கும் இந்த தளத்தில் விபரங்கள் கொடுத்து இருக்கின்றார்கள்.

அடுத்த வருடம் செப்டம்பருக்கான சேர்க்கை டிசம்பர் முதல் வாரத்தில் துவங்கும். அதிக விபரங்களுடன் முன்னர் எழுதப்பட்ட பதிவு இங்கே http://vinaiooki.blogspot.com/2008/10/blog-post_10.html

வருங்கால மாணவர்களுக்கு வாழ்த்துகள்
Tuesday, August 04, 2009

சென்னை பதிவர் பட்டறை(ஆகஸ்ட் 5, 2007) , இரண்டு வருடங்கள் நிறைவு

இரண்டு வருடங்களுக்கு முன்னர் சென்னை பல்கலை கழக வளாகத்தில் இதே ஆகஸ்ட் 5 ஆம் தேதி அன்று வெற்றிகரமாக நடந்து முடிந்தது. பதிவர்கள் திண்ணைப்பேச்சு அரட்டையாளர்கள் அல்ல என்பதை நிருபிக்கும் வகையில் கருத்து மாறுபடுகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டு பதிவர்கள் ஒன்றிணைந்து நடத்தி இன்றுடன் இரண்டு வருடங்கள் நிறைவடைகின்றது.


வலைப்பூக்களின் வீச்சு அதிகரித்து வரும் இந்த காலக்கட்டத்தில் மற்றும் ஒரு பதிவர் பட்டறை சென்னையில் நடத்தப்பட்டால் நன்றாக இருக்குமோ!!!


பட்டறை நடந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இங்கே காணலாம்.

பதிவர் பட்டறைகள் புதியவர்களை உள்ளிழுப்பதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பவர்கள் மத்தியிலும் ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது நிதர்சனம். ஊர் கூடி தேர் இழுத்தல் அழகுதானே!!!

சென்னையில் மீண்டும் ஒரு பட்டறை முன்பை விட சிறப்பாகவும் அதிக நபர்களை உள்ளிழுக்கும் வகையிலும் நடத்தப்பட வேண்டும். சென்னையில் இருக்கும் பதிவர்கள் கவனிப்பார்களா!!!
---

சென்னைப் பதிவர் பட்டறை முடிந்த கையோடு புதுவை பதிவர்கள் இணைந்து நடத்திய புதுவை வலைப்பதிவர் பட்டறையும் மிகுந்த வெற்றி பெற்றது.


---

சிறு நகரங்கள் பெரு நகரங்களுக்கெல்லாம் எந்தவிதத்திலும் குறைந்தது அல்ல என விழுப்புரம் பயிலரங்கம் அமைந்திருந்தது.


---


விடைகள் : வினாடி - வினா (திரட்டி.காம் நட்சத்திர ஸ்பெஷல் )

1. வன்முறையின்றி ஒரு நல்ல த்ரில்லர் படத்தைக் கொடுக்க முடியும் என இயக்குனர் பாசிலின் கைவண்ணத்தில் வெளிவந்த பூவிழி வாசலிலே திரைப்படத்தில் பாடகர் மனோ “அண்ணே அண்ணே நீ என்ன சொன்னே” எனத் தொடங்கும் பாடலைப் பாடி இருப்பார். இந்தப் பாடல் தான் மனோவின் முதல் தமிழ் திரைப்பாடல். படத்திற்கு இசை இளையராஜா.2. ஷார்ஜா கோப்பை இறுதி ஆட்டத்தில் ஜாவேத் மியாண்டட் கடைசிப் பந்தில் ஒரு சிக்ஸர் அடித்து வெற்றியை பாகிஸ்தானுக்குத் தேடித்தருவார். அந்தக் கடைசி ஓவரை வீசியவர் தான் சேதன் சர்மா. ஸ்ரீகாந்த் இந்திய அணித்தலைவராக இருந்த போது, கான்பூரில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கெதிராக ஒருநாள் போட்டியில் வெற்றிக்கான ரன்விகிதம் கிடுகிடுவென எகிற , “காட்டடி” அடிக்க சேதன் சர்மா களம் இறக்கப்பட்டார். கண்ணை மூடிக்கொண்டு சுத்தாமல் நேர்த்தியாக ஆடி சதம் அடித்ததோடு மட்டும் அல்லாமல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து வெற்றியை உறுதிச் செய்தார். இவரைக் களமிறக்கும் முடிவை ஸ்ரீகாந்த் தான் எடுத்தார் சொல்லப்படும். 87 ரிலையன்ஸ் உலகக்கோப்பை போட்டி ஆட்டம் ஒன்றில் , நியுசிலாந்து அணிக்கெதிராக அனைத்தும் Bowled என்ற முறையில் ஹேட்ரிக் எடுத்தார். இந்த ஆட்டத்தின் மற்றும் ஒரு சிறப்பம்சம், ஆமை வேகத்தில் ஆடும் கவாஸ்கர் அதிரடியாக ஆடி சதம் அடித்ததுதான். கவாஸ்கரின் ஒரே ஒரு நாள் போட்டி சதமும் இதுதான்.


3 வது மட்டும் 8 வது கேள்விகளுக்கானப் பதில்கள்

ஆஸ்திரேலியா கண்டம் ஆகிப்போனதால் க்ரீன்லாந்து உலகின் மிகப்பெரும் தீவு என்கிற அந்தஸ்தை பெற்றது. நார்வே நாட்டில் பிறந்து குழந்தையாக இருக்கும்பொழுது பெற்றோர்களுடன் ஐஸ்லாந்திற்கு நாடு கடத்தப்பட்ட எரிக் த ரெட், வளர்ந்த பின் வேறு ஒரு கொலைக் குற்றத்திற்காக நாட்டை விட்டுத் துரத்தப்பட்டார். அப்படி துரத்தப்படும்பொழுது ஐஸ்லேந்தில் இருந்து
500 மைல்கள் மேற்கு நோக்கி செல்லும்பொழுது க்ரீன்லாந்தைக் கண்டுபிடித்ததாக வரலாற்று ஆசிரியர்கள் சொல்லுகின்றனர். மாற்றுக் கூற்றுகளாக அதற்கு முன்னரே மக்கள் பாரிய நிலப்பரப்பை பார்த்ததாகவும் குறிப்புகள் இருக்கின்றன. இப்பொழுது மனித உரிமைகள் / சமாதானம் பேசும் நாடாக தன்னைக் காட்டிக்கொண்டாலும் டென்மார்க் கும் ஒரு காலத்தில் “நாடு பிடிக்கும்” அரசாங்கத்தைத் தான் கொண்டிருந்தது. நார்வேக்காரர்கள் க்ரீன்லேந்தை விட்டுப்போனது 17 ஆம் நூற்றாண்டில் டென்மார்க் க்ரீன்லேந்தை தனதானதாக சொந்தம் கொண்டாடியது. உலகப்போருக்குப்பின் 1953 ஆம் ஆண்டு முதல் டென்மார்க் முடியாட்சியின் கீழ் க்ரீன்லாந்து ஒரு அங்கமாக வந்தது.

சுயாட்சி அதிகாரம் கொடுத்துவிட்டு பாதுகாப்பு,வெளியுறவுக்கொள்கைப் போன்றவன வற்றை தன் வசம் வைத்துக் கொண்டு பலம் வாய்ந்த நாடு சிறிய நாட்டை ஆட்சி செய்யும் முறைக்கு Suzerainty என்று பெயர். தற்பொழுது இந்தியாவின் மாநிலமாக இருக்கும் சிக்கிம் 1975 ஆம் ஆண்டு வரை இந்த வகையிலேயே இந்தியாவில் நிர்வாகிக்கப்பட்டு வந்தது. நேபாளத்தில் இருந்து குடிபெயர்ந்தவர்களினால் ஏற்பட்ட கலவரங்களினாலும் அரசாங்கத்தின் மேல் நம்பிக்கை குறைந்ததாலும் இந்தியா தனது ராணுவ ந்டவடிக்கைகளினால் மீட்டெடுத்து சிக்கிமை இந்தியாவுடன் இணைக்க ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. பெருவாரியான வரவேற்குப்பின் இந்தியாவின் 22 வது மாநிலமாக சிக்கிம் மாறியது.

4. எல்லை காந்தி என இந்திய வரலாற்றுப் புத்தகங்களில் குறிப்பிடப்படும் கான் அப்துல் கபார்கான் பாரத ரத்னா விருதைப் பெற்ற முதலாவது இந்தியக் குடிமகன் அல்லாதவர். அதற்கு முன் அன்னை தெரசா பெற்றிருந்தாலும் அவர் இந்தியக் குடிமகளாக மாறி இருந்தார். கபார்கானுக்குப்பின்னர் நெல்சன் மண்டேலா வெளிநாட்டுக்காரராக இவ்விருதைப் பெற்றிருக்கின்றார்.
கபார்கான் இறுதிச்சடங்கின் போது ஆப்கானில் நடைபெற்ற போர் இருதரப்பிலும் நிறுத்தி வைக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டதாம்.

5. போபஃர்ஸ் ( இந்தப் பெயருக்கு விளக்கமே தேவை இல்லை)

6. மேற்கிந்தியத் தீவுகள் என்ற பெயரில் பன்னாட்டு கிரிக்கெட் ஆட்டங்களில் ஆடிவரும் அணி கரிபீயன் தீவுகளில் இருக்கும் நாடுகளின் கூட்டணி ஆகும். கயனா மட்டும் தென்னமெரிக்கா கண்டத்தில் வடகிழக்கு முனையில் இருக்கின்றது. ஸ்பானிஷ்/போர்ச்சுகீசிய காலனியாதிக்கத்தில் மொத்த தென்னமெரிக்காவும் அடிமைப்பட கயானா பிரிட்டன் ஆதிக்கத்தில் வந்தது. மேற்கிந்தியத் தீவுகள் இரண்டு முறை உலகக் கோப்பைகளைக் கைப்பற்றிய போது அணித்தலைவராக இருந்த கிளைவ் லாயிட் கயானாவைச் சேர்ந்தவர்தான். ஜார்ஜ்டவுன் கயானா நாட்டின் தலைநகர்.

அயர்லாந்து குடியரசும் , ஐக்கிய ராஜ்ஜியம்(கிரேட் பிரிட்டன் மற்றும் வடக்கு அயர்லாந்து) அரசியல் ரீதியாக இரு வேறு நாடுகளாக இருந்தாலும் , யூகே வில் இருக்கும் வடக்கு அயர்லாந்தும் அயர்லாந்து குடியரசும் இணைந்து அயர்லாந்து கிரிக்கெட் அணியாக பன்னாட்டு போட்டிகளில் பங்குபெறுகின்றது.

7. தென்னாப்பிரிக்கா

பிரிட்டோரியா (Executive)
ப்ளோம்பைண்டைன் (நீதித் துறை)
கேப்டவுன் (சட்டம் இயற்றல்/ பாராளுமன்றம்)

இருந்த போதிலும் ஜோகன்னஸ்பர்க் தான் தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய நகரம்.

9. அசுவத்தாமன்.

10. மார்க் புட்சர்

Monday, August 03, 2009

வினாடி- வினா (திரட்டி.காம் நட்சத்திர ஸ்பெஷல்)

1. தெலுங்கு கீதாஞ்சலியின் தமிழ்வடிவமான இதயத்தைத் திருடாதே யில் அனைத்துப்பாடல்களையும் தெலுங்கின் மூலவடிவத்திற்கு சற்றும் குறைவில்லாமல் உணர்வுப்பூர்வமாகப் பாடிய பாடகர் மனோ, பின்னாளில் முக்காலா முக்காபுலா, அழகிய லைலா என ஹைபிட்ச் பாடல்களில் ஒரு கலக்கு கலக்கியவர். இவர் தமிழில் பாடிய முதல் பாடல்/படம் எது? அந்தப் படத்தின் இசையமைப்பாளர் யார்?


2. இவர் ஒரு முன்னாள் இந்திய மித வேகப்பந்து வீச்சாளர். உலகக்கோப்பை ஒரு நாள் போட்டிகளில் ஹேட்ரிக் சாதனை செய்தவர். அதிரடியாக முன்வரிசை ஆட்டக்காரராக இங்கிலாந்து அணிக்கெதிரான ஒரு நாள் போட்டி ஒன்றில் களம் இறங்கி ஆட்டமிழக்காமல் சதமடித்து அணிக்கு வெற்றி வாய்ப்பைப் பெற்றுத்தந்தவர்.இவர் பெயரைக் கேட்டவுடன் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள்ஆனந்த பரவசமடைந்து மலரும் நினைவுகளில் மூழ்குவார்கள்.யாரிந்த கிரிக்கெட் வீரர்?

3. இது உலகின் மிகப்பெரியத் தீவுகளில் ஒன்று. சுயாட்சி அதிகாரம் படைத்த தீவாக இருந்த போதிலும் அரசியலமைப்புச் சட்டம், வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் ஆகியன ஸ்கேண்டிநேவிய நாடு ஒன்றின் வசம் உள்ளது(Suzerainty). கொலைக்குற்றவாளி என நார்வே நாட்டைவிட்டுத் துரத்தப்பட்டவரால் கிபி 10 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தத் தீவின் பெயர் என்ன?

4. இவர் பாரத ரத்னா விருது பெற்றவர். மகாத்மா காந்திக்கு நெருக்கமாக இருந்த இவர் பாகிஸ்தான் - இந்தியப் பிரிவினையை எதிர்த்தவர். இருந்த போதிலும் பிரிவினைக்குப்பின்னர் பாகிஸ்தானி ஆன பின்னர் “இந்தியாவின் நண்பனாகவே “ அடையாளம் காணப்பட்டவர்.

வாழ்நாளில் பெரும்பான்மையான நாட்களை(கிட்டத்தட்ட 52 வருடங்கள்) சிறையிலோ நாடு கடத்தப்பட்டோ கழித்த இவர் இறந்த போது இந்திய அரசாங்கம் இவருக்காக 5 நாட்கள் துக்கம் அனுசரித்தது. இந்திய வரலாற்றுப் புத்தகங்களில் நல்லதொரு இடத்தைப் பிடித்திருக்கும் இந்த நபர் யார்?

5. ஆல்பிரட் நோபலுக்கும் இந்திய அரசியலுக்கும் நேரிடையான சம்பந்தம் கிடையாது. இரும்பு மற்றும் எஃகு தொழிற்சாலையாக இருந்த உலகின் மிகவும் பழமையான நிறுவனங்களில் ஒன்றை ஆயுதத் தயாரிப்பு தொழிற்சாலையாக மாற்றிய போது , இந்த நிறுவனத்தின் பெயர்தான் இந்திய அரசியலில் ஒரு கலக்கு கலக்கப் போகின்றது என அவருக்கு கண்டிப்பாக தெரிந்திருக்காது, மழைவிட்டாலும் தூவானம் விடாது என கால் நூற்றாண்டிற்குப்பின்னரும் இந்திய அரசியல் அரங்கில் வலம் வரும் இந்த சுவிடீஷ் நிறுவனத்தின் பெயர் என்ன?

6. பன்னாட்டு கிரிக்கெட் ஆட்டங்களில் பங்கு பெறும், தென்னமெரிக்கா கண்டத்தைச் சேர்ந்த நாடு எது? இந்த நாடு நேரிடையாகப் பங்கேற்காமல் கூட்டாக அணியை போட்டிகளுக்கு அனுப்பும் நாடுகளுள் ஒன்று. இந்த தென்னமெரிக்கா நாட்டின் பெயர் என்ன? இதே போல் ஒரு தனிக்குடியரசு நாடு, மற்றொரு நாட்டின் ஒரு பகுதியோடு இணைந்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கின்றது. அந்த அணியின் பெயர் என்ன?

7. உலகின் பெரும்பாலான நாடுகள் ஒரே தலைநகரத்தைக் கொண்டிருக்கையில் விதிவிலக்குகளாக , சில நாடுகள் நிர்வாக வசதிக்காக இரண்டு தலை நகரங்களைக் ஏற்படுத்தி வைத்திருக்கும். இதைத் தூக்கி சாப்பிடும் விதமாக ஒரு நாடு மூன்று தலைநகரங்களைக் கொண்டிருக்கின்றது. நிர்வாகத்திற்கு ஒன்று, நீதித்துறைக்கு ஒன்று, சட்டம் இயற்றலுக்கு(பாராளுமன்றம்) ஒன்று என மூன்றுத் தலைநகரங்களை வைத்திருக்கும் நாடு எது?

8. கேள்வி எண் மூன்றில் இருக்கும் நாடு போல இந்தியாவின் மேற்பார்வையில் தனிச் சுதந்திர நாடாக இருந்த ஒன்று பின்பு இந்தியாவின் மாநிலமாக மாறியது. அந்த மாநிலத்தின் பெயர் என்ன?

9. மகாபாரதக் கதைகளில் கௌரவப் படையினரில் உயிருடன் எஞ்சிய மூவர்களில் இருவர் கிருபாச்சாரியா, கிரீடவர்மா. மூன்றாமவர் யார்?

10. கடைசியாகக் கிரிக்கெட் பற்றிய மற்றும் ஒரு கேள்வி. ஒரு நாள் போட்டிகளின் வீச்சு மிக அதிகமாக கோலேச்சிய 90 கள் மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில் 71 டெஸ்ட் ஆட்டங்கள் ஆடி 4000 ஓட்டங்களுக்கும் மேல் எடுத்த ஒரு ஆட்டக்காரர் தன் வாழ்நாளில் பன்னாட்டு ஒரு நாள் போட்டி ஒன்று கூட ஆடவில்லை.

இது போல சுவாரசியமான சாதனைகளை எல்லாம் இங்கிலாந்து ஆட்டக்காரர்கள் தான் வைத்திருப்பார்கள்? யாரிந்த இங்கிலாந்து ஆட்டக்காரர்?

Sunday, August 02, 2009

திரட்டி.காம் - நட்சத்திரம் - நன்றி - தமிழ்மணம் நட்சத்திரம் - பழைய நினைவுகள்

நட்சத்திரங்களுக்கு மத்தியில் இருக்கும் சிறிய கல்லானது எப்படி சிறிய பிரகாசத்தைக் கொடுக்குமோ , அது போல ஜாம்பவான்கள் இருக்கும் பதிவுலகில் நானும் நட்சத்திரத்தைப் போல(ஆகஸ்ட் 3, 2009 தொடங்கும் வாரம்) பிரதிபலிக்க ஒரு வாய்ப்புக் கொடுத்த திரட்டி.காம் நிர்வாகத்திற்கு நன்றி. வலைப்பதிவர் பட்டறைகளின் மூலம் எனக்கு கிடைத்த மகிழ்ச்சியான விடயங்களில் சிறப்பானவைகளில் திரட்டி.காம் இணையத்தளமும் அதன் நிர்வாகக் குழுவினருடன் ஏற்பட்ட நட்பும் குறிப்பிடத்தகுந்தனவை.


இந்த நட்சத்திர வாய்ப்பில் கடந்த வருடம் தமிழ்மணம் இணையத் தளத்தில் நட்சத்திரமாக இருந்த போது எழுதிய சிலப் பதிவுகளை மறுவாசிப்பிற்காக தருவதன் மூலம் மேலும் சிலப் பல அபிப்ராயங்களை/விமர்சனங்களைத் திரட்டி வாசகர்கள்/பதிவர்கள் மூலம் பெறலாம் என்பது விருப்பம்.

நாடோடிகள் திரைப்படத்தில் மாற்றுத்திறனுடன் நடித்த “அபிநயா” வைப் பற்றிப் படித்தவுடன், ”சைகைமொழி, கைகளினால் ஒரு மொழி ” என எழுதிய பதிவை இந்தத் தருணத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனத் தோன்றியது. நான் முன்பு வேலைப் பார்த்த நிறுவனத்தில் உடன் அபிநயாவைப் போன்ற தோழர்கள்/தோழிகள் கைகளால் பேசிக்கொள்வைதைப் பார்க்க கொள்ளை அழகாக இருக்கும்.

மேற்சொன்னப் பதிவைப் படிக்க இங்கேச் சொடுக்கவும்

----

என்னுடைய நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதை முயற்சிகளில், நான் சிரத்தையோடு எழுதியதாக நினைக்கும் சிறுகதை அஜீஸ் அகமதுவும் Patriotism ம், காதல்/பேய் கதைகள் எழுதுவதை விட, சமூகத் தளங்களில் இருக்கும் விடயங்களை யாரையும் காயப்படுத்தாமல் எழுதுவது எவ்வளவு சிரமம் என்பதை இந்தக் கதையை எழுதும்போது தான் நான் உணர்ந்தேன். தமிழ்மணம் நட்சத்திரமாக இருந்து எழுதியதால் அதற்கு வரவேற்பும் விமர்சனங்களும் நன்றாக இருந்தது. திரட்டி நட்சத்திரமாக மற்றும் ஒரு மறுவாசிப்புக்கு தங்கள் முன் வைக்க விருப்பப் படுகின்றேன்.


-----
தமிழ் வலைப்பதிவு வரலாற்றில் அனைத்துப் பிரச்சினைகளும் பின்னூட்டங்களின் வழியாகத் தான் ஆரம்பிக்கின்றன. பின்னூட்டங்களைப் பற்றி குறிப்பாக அநாமதேயப் பின்னூட்டங்களைப் பற்றி எத்தகைய எதிர்மறை விமர்சனங்கள் இருந்தாலும், சில எதிர்மறைப் பின்னூட்டங்கள் கூட எப்படி என்னைப் பக்குவப்படுத்தியது என்பதைப் பற்றி எழுதியப் பதிவு பண்படுத்திய (பின்) ஊட்டச்சத்துக்கள்


---------

வினாடி-வினா வகையிலான பொது அறிவு சம்பந்தப் பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க எப்பொழுதும் சுவாரசியமாக இருக்கும். தமிழ்மணம் நட்சத்திரமாக இருந்த பொழுது நடத்தப்பட்ட ஒரு Quiz பதிவையும் உங்கள் முன் வைக்கின்றேன்.

----

என்னிடம் இருக்கும் சிறிய அளவிலான எழுத்துத் திறமையை மிக சரியான முறையில் வெளிக்கொண்டுவந்த ஒரு வாரமாக (வரமாக) தமிழ்மணம் நட்சத்திர வாரம் அமைந்திருந்தது. தமிழ்மணம் நட்சத்திரமாக எழுதப்பட்ட அனைத்துப் பதிவுகளையும் வாசிக்க இங்கேச் சொடுக்கவும்.