Saturday, August 08, 2009

சுவீடன் மேற்படிப்பும் சில கல்வி ஆலோசனை நிறுவனங்களும்( Consultancies)

அறியாமை என்பது தவறல்ல, அறிந்தும் தானே போய் வலிய மாட்டிக்கொள்வதுதான் தவறு. சுவீடனில் படிப்பு இலவசம் என்பது பலரும் அறிந்ததே!!! மனிதனின் அவலங்களைக் கூட வியாபரம் ஆக்கும் இந்த உலகத்தில், இலவசமாகக் கிடைக்கும் படிப்பை வைத்து எப்படி எல்லாம் பணம் செய்கிறார்கள் என்பதைக் கேள்விப்படும்பொழுது வருத்தமாக இருக்கும். சில ஆலோசனை மையங்கள் ஐக்கிய ராச்சியத்திலும் (United Kingdom) ஆஸ்திரேலியாவிலும் இருக்கும் சில பல்கலைகழகங்களோடு நேரிடையாகத் தொடர்பு வைத்து மேற்படிப்பு படிக்க அனுமதி வாங்கித் தருகிறார்கள் என்பது உண்மை. அதற்காக அதே விசயத்தை அனைத்து நாடுகளிலும் செய்ய முடியும் என நம்ப வேண்டியது இல்லை.


ஸ்காட்லேண்ட் தேசத்தில் இருக்கும் அபர்டீன் பல்கலை கழகத்திற்கு மாணவர்கள் நேரிடையாகவும் விண்ணப்பிக்கலாம் , அவர்கள் அனுமதித்து இருக்கும் சில ஆலோசனை மையங்கள் வழியாகவும் விண்ணப்பிக்கலாம். சுவீடன் கிடைக்கும் முன்னர், அபர்டீன் பல்கலை கழகத்திற்கு நான் நேரிடையாக விண்ணப்பித்து அனுமதிக்கடிதம் பெற்றேன். முன்னர் சொன்ன படி ஆஸ்திரேலியா , ஐக்கிய ராச்சியத்தில் இருக்கும் பல்கலை கழகங்கள், கல்லூரிகளில் இவர்களுக்கு நேரிடையான தொடர்பு இருக்க்கின்றது.

ஆனால் சுவீடன் உயர்கல்வியை பொருத்த மட்டில் எந்த ஒரு ஆலோசனை மையத்திற்கும் சுவீடன் கல்வி நிறுவனங்களுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. சுவீடனில் மேற்படிப்பு படிக்க இடம் வாங்கித் தருகிறோம் எனச் சொல்லுபவர்கள் செய்யும் வேலை எல்லாம் உங்கள் சான்றிதழ்களின் நகல்களை வாங்கி தபால் உறையில் இட்டு அனுப்புவது தான். உங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதோ இடம் கிடைக்கப் பெறுவதோ எந்த வகையிலும் ஆலோசனை மையங்களால் (Consultancies) சிபாரிசோ/நிராகரிப்போ செய்ய இயலாது.

இங்கு ஆலோசனை மையங்களை நொந்து எந்த பிரயோசனமும் இல்லை. ஏமாறுபவன் இருக்கும் வரை தலையில் நன்றாக மிளகாய் அரைப்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். சான்றிதழ்களின் நகல்களை “நோட்டரி பப்ளிக்” கையொப்பம் பெற்று தபாலில் அனுப்பக் கூட தெரியாத மாணவர்கள் கண்டிப்பாக மேற்படிப்பு படித்து ஒன்று சாதித்து விடப்போவதில்லை. ஒரு பள்ளிக்கூட இறுதி மாணவனுக்கு இது தெரியவில்லை என்றால் பரவாயில்லை. பொறியியற் படிப்பு முடித்த பின்னர் தெளிவாகக் கொடுத்து இருக்கும் வழிமுறைகளைப் பின்பற்றி எளிமையாக அதிக பட்சம் இரண்டாயிரம் ரூபாய் செலவில் (தபால் செலவு + நோட்டரி பப்ளிக்) விண்ணப்பிப்பதை விட்டு விட்டு 50 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்யும் மாணவர்களை நினைத்து வருந்தத்தான் முடிகிறது.

ஆலோசனை மையங்கள் , மேற்படிப்பு அனுமதியில் ஏதாவது பிரச்சினை என்றால் நாங்கள் தொலைபேசியில் சுவீடன் கல்வி நிறுவனத்துடன் பேசி பெற்றுத்தருவோம் என சொல்லுவார்கள். நாம் எந்தக் கல்லூரிக்கு விண்ணப்பித்திருக்கின்றோமோ அல்லது மொத்தமாக விண்ணப்பிக்கும் ஸ்டூடராவுக்கோ நாமே தொலைபேசி விடலாம். நாம் எத்தனை மோசமாக ஆங்கிலம் பேசினாலும் அவர்கள் பொறுமையாகக் கேட்டு பதில் தருவார்கள். ஒரு வேளை உங்களுக்கு பேசத் தயக்கம் என்றாலும் மின்னஞ்சல் மூலம் கேட்டாலும் தக்கதொரு பதில் கிடைக்கும்.

சுவீடன் அனுமதியைப் பொருத்த மட்டில் விதிமுறைப்படி உங்களுக்கு அனுமதி என்றால் அனுமதி, இல்லை எனில் யாராக இருந்தாலும் கிடையாது.

செப்டம்பரில் எனது சகோதரனுக்கு நான் படிக்கும் கல்லூரியில் விண்ணப்பித்து இருந்தேன். பரிசீலிக்கும் மையத்தில் இருக்கும் அனைவரையும் எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரியும். எனது சகோதரனது சான்றிதழ்களைச் சரிப்பார்க்க சென்னைப் பல்கலை கழகத்துக்கு அனுப்பப்பட்டு ஒரு நாள் தாமதமாக வந்து சேர்ந்தது. எத்தனையோக் கேட்டுப்பார்த்த பின்னரும் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இப்படி இருக்க விசயம் , ஆலோசனை நிறுவனங்கள் நாங்கள் முயற்சி எடுத்து வாங்கித் தந்தோம் என்று சொன்னால் அது வடி கட்டியப் பொய்.

இந்தியாவிலோ சுவீடனிலோ அல்லது உலகத்தில் எந்த மூலையில் இருந்தும் சுவீடனில் தம்மால் மேற்படிப்பு அனுமதி பெற்றுத்தர முடியும், பிரச்சினைகள் இருந்தாலும் சிபாரிசு செய்து வாங்கித் தரமுடியும் என்று யாராவது சொன்னால் அப்படியே ஏற்றுக்கொண்டு பணத்தைக் கட்டாதீர்கள்.

சுவீடன் மேற்படிப்புக்கான விண்ணப்பிக்கும் முறைகள் எளிமையானது, தெளிவானது. சுமாரான ஆங்கிலப்புலமை உடையவர்கள் கூட எளிமையாக விண்ணப்பிக்கலாம். சில ஆர்குட், கூகுள் யாஹூ குழுமங்களில் நடக்கும் விவாதங்களில் மக்கள் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரைத் தர தயாராக இருக்கின்றனர் என்பதை பார்க்கும்பொழுதுதான் , மாணவர்களுக்கு அறிவுறுத்தும் விதமாக இந்தப் பதிவை எழுதத் தோன்றியது. சாதாரண விசயத்தை செய்யத் தெரியாத மாணவர்கள் மேற்படிப்பு படிக்க வந்து பெரிதாக ஒன்றும் சாதிக்கப்போவதில்லை (கடுமையாக இருந்தால் மன்னிக்கவும், ஆதங்கத்தில் சொல்கின்றேன்). 50 ஆயிரம் ரூபாயை நீங்கள் யாராவது சுயதொழில் செய்ய விருப்பம் உள்ளவர்களுக்கு திரும்பப்பெறும் முதலீடாகத் தரலாம், அதை விட்டு நுனிநாக்கு ஆங்கிலத்தில் கோடிகளில் புரளும் கல்வி ஆலோசனை மையங்களிடம் பணத்தை அழ வேண்டாம்.

சுவீடன் இளங்கலை/முதுகலைப் படிப்புக்காக விண்ணப்பிக்க studera.nu என்ற இணைய தளம் இயங்கு கிறது. இவர்கள்தாம் சேர்க்கையை நடத்துபவர்கள்.


இளங்கலை - First Cycle (Under Graduate)

முதுகலை - Second Cycle (Masters )

தொலை தூரப்படிப்புக்கும் இந்த தளத்தில் விபரங்கள் கொடுத்து இருக்கின்றார்கள்.

அடுத்த வருடம் செப்டம்பருக்கான சேர்க்கை டிசம்பர் முதல் வாரத்தில் துவங்கும். அதிக விபரங்களுடன் முன்னர் எழுதப்பட்ட பதிவு இங்கே http://vinaiooki.blogspot.com/2008/10/blog-post_10.html

வருங்கால மாணவர்களுக்கு வாழ்த்துகள்
5 பின்னூட்டங்கள்/Comments:

said...

very much useful

said...

உண்மையான ஆதங்கம்.

இந்த மாதிரி நிறுவனங்கள் மூலம் இங்கு வந்துவிட்டு (அலுவலக நடைமுறைகள்) எதுவும் தெரியாமல் அவதிப் படும் மேற்படிப்பு மாணவர்கள் பலரைச் சந்தித்துள்ளேன்...

said...

திங்கள் வெளியாக இருக்கும் கல்வி பற்றிய பதிவிலும் இதை பற்றி குறிப்புட்டு எழுதி வைத்துள்ளேன்.

ஜெர்மனி மேற்படிப்பிலும் இதையே செய்கிறார்கள் :( அவர்கள் இங்கு வந்து மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.. :(

said...

Well, It is a very good article. Have a look at my Blog on Singapore Education Opportunity.

The link is

http://technosolutionss.blogspot.com/2009/08/singapore-education-opportunity.html

said...

thanks