Saturday, December 13, 2014

திரைவிமர்சகன் - சிறுகதை

மூக்கில் விழுந்த முப்பதாவது குத்தில் மூர்க்கம் அதிகமாக இருந்தது.  அந்த பஞ்ச் அந்த நடிகரிடமிருந்துதான்.

"என்னடா உன் மனசிலே நெனச்சிட்டிருக்கே , லேப்டாப் , கேமரா இருந்தா நீ என்ன பெரிய இவனா"  என்று ஒரு கெட்ட வார்த்தை சொல்லி அறைந்தார்.

"ஆசானே, இவனுங்க இப்படித்தான், படம் ரிலீசுக்கு முன்னாடி பேஸ்புக் டிவிட்டறு , யுடுப் ல எதாவது கட்டுரை கருமாந்திரம்னு எழுதி நம்ம கலெக்ஷனை காலி பன்றது , இவனுங்களை எல்லாம் வெளிய விடக்கூடாது ஆசானே "

தல, தளபதி, தலைவா எல்லாம் கேட்டிருக்கின்றேன்.  அந்த பிரபல நடிகர் என்னைத் திட்டிய கெட்ட வார்த்தை மறந்து 'ஆசானே' என்ற  புதுவிதமான வழிபாட்டு வார்த்தை காதில் ரீங்காரமிட்டது.

எனது பெயர் கார்த்தி. தமிழ், தெலுங்கு, ஒரியா, போஜ்பூரி என்று உலகத்தின் அனைத்து மொழிகளில் வந்திருக்கும் படங்களைப் பார்த்து படித்து விமர்சனம் செய்யும் ஒரு சினிமா ஆராய்ச்சியாளன். என்னை அடித்துக்கொண்டிருக்கும் நடிகர், வேண்டாம் வேண்டாம் பெயர் வேண்டாம் , உங்களுக்குப் பிடித்தவரை நினைத்துக் கொள்ளுங்கள்.  'ஆசானே'  என்ற இந்த நடிகரைப்பற்றி சென்ற வாரம் ஒரு கட்டுரை எழுதிவிட்டேன். இந்தவாரம் அவரின் படம் வரப்போகின்றது.  வரப்போகும் படம் அவரின் திரைவாழ்வை தீர்மானிக்கப்போகின்றது என்று மக்கள் பேசிக்கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் எனது கட்டுரை அந்தத் திரைப்படத்தின் வசூலை பாதிக்கும் என்று என்னை நீக்கச்சொல்லி தாக்குகின்றனர்.

கட்டையால் அடிப்பவனை திரும்பக் கட்டையால் அடிக்கக் கூடாது புத்தியால் அடிக்கவேண்டும். முடிவுக்கு வந்தேன்.

"மன்னிச்சுடுங்க சார், அந்த ஆர்டிக்கிள், ரிலேடட் போஸ்ட்ஸ் கமெண்ட்ஸ் எல்லாம் டெலிட் பண்ணிடுறேன், இனிமேல் இந்தத் தப்பு நடக்காது "

இயல்புநிலைக்கு வந்த நடிகர்  "தம்பி நீங்க எழுதக் கூடாதுன்னு சொல்லல, என்னைப்பத்தி எழுதாதீங்கன்னுதானே சொல்றேன், போயிட்டு வாங்க "

உடம்பெல்லாம் ஒரே வலி. சிவாஜி படத்துல சூப்பர் ஸ்டாரிடம் ஆபிஸ் ரூமில் அடிவாங்கிய ஆட்களுக்கும் என்னைப்போலத்தானே வலித்திருக்கும்.  வீட்டிற்கு வந்த முதல்வேலையாய் என்னுடைய யுடியுப், விமியோ, டிவிட்டர், பேஸ்புக், டம்ளர், கூகுள் பிளஸ் அனைத்து சமூக ஊடகக் கணக்குகளையும் அழித்தேன். அழிப்பதற்கு முன்பே ரஷியாவில் இருக்கும் ஒரு சர்வரில்அனைத்து கட்டுரைகள், வீடியோக்கள் எல்லவற்றையும் சேமித்துவிட்டேன்.

என் பெயரில் பேஸ்புக் / டிவிட்டர் என்று அனைத்திலும் புதுக்கணக்குகளைத் தொடங்கினேன்.

"ஆசான் நடிகரின் ஆசனவாயில் ரசிகர்கள் எனது பழைய கணக்குகளை எல்லாம்  புகார் செய்து நீக்கிவிட்டார்கள் #where​_is_the​_freedom_of_expression " என்று எழுதிவைத்துவிட்டு உறங்கிப்போனேன். மறுநாள் கருத்துரிமை பற்றி எரிந்தது.  ஆசான் நடிகரின் படம் பத்தே காட்சிகளில் பெட்டிக்குள் முடங்கியது.  விழுந்த அடிகளின் வீக்கம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கியது. மனதும் இலகுவானது. 

Thursday, September 25, 2014

அரசியல் - ஒரு நிமிடக்கதை

"மச்சி, நீ கேளேன், இன்னக்கி அந்த க-கா-கீ கட்சி மாவட்டத்தலைவரை கிழிகிழின்னு கிழிச்சி எழுதின என் பேஸ்புக் போஸ்ட்டை , நம்ம அ-ஆ-இ கட்சி மாவட்டம் லைக் போட்டிருந்தாரு ? "
"பார்த்தேன் மச்சி, நேத்து க-கா-கீ பெரியத்தலைவரை பத்தி நீ எழுதினதுக்கும் நம்ம மாவட்டம் கமெண்ட் போட்டிருந்தாரு "
"நான் செம ஹேப்பி, நாளைக்கு கட்சி மீட்டிங் ல பார்க்கலாம்னு நம்ம மாவட்டம் சொல்லிருக்காரு "
மறுநாள், நம் கதையின் நாயகன் உற்சாகமாக கட்சி கூட்டத்தில் க-கா-கீ பெரியத்தலைவரை மானே தேனே பொன் மானே எல்லாம் போட்டு கிழித்து தோரணம் கட்டி தொங்கவிட நாயகனின் மாவட்டம் விழுந்து விழுந்து சிரித்தார். உற்சாகமான நம் கதையின் நாயகன் , அடுத்து க-கா-கீ கட்சி மாவட்டத்தலைவரை ஏக வசனத்தில் பேசப்போக, உடனே எழுந்த நம் நாயகனின் மாவட்டம், மைக்கை வாங்கி, அடுத்ததாக வேறொரு தொண்டர் பேசுவார் என அறிவித்தார். நம் நாயகன் சோகமானான். கூட்டம் முடிந்தவுடன் மாவட்டம் , நம் நாயகனிடம் வந்து
"தம்பி, இன்டர்நெட் வேற, நிஜம் வேற. க - கா - கீ மாவட்டத்தலைவர் என் மச்சான். என்னோட பிசினஸ் பார்ட்னர் வேற ,, நீ அந்த பெரியதலைவரை என்ன வேணுமினாலும் பேசிக்கோ, லோக்கல் மீட்டிங்ல லோக்கல் ஆட்களை திட்டக்கூடாது, அதுவும் சொந்தக்காரன்னா கூடவே கூடாது , என்ன புரிஞ்சுதா ? "
"புரிஞ்சுது சார் "
அரசியலை புரிந்து கொண்ட நம் கதையின் நாயகன், மறுநாள் கட்சியை எல்லாம் மறந்து 'நான் டியூன் ஆயிட்டேன்னு " சினிமாக்காரங்களை கலாய்த்து ஸ்டேடஸ் போட ஆரம்பித்தான்.

Sunday, August 24, 2014

தற்கொலை - சிறுகதை

சென்ற ஒளி ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஒளி ஆண்டு தற்கொலைகளின் எண்ணிக்கை குறைந்திருக்கின்றன. அதற்கு நான் தான் முக்கிய காரணம். வீம்புக்கு தற்கொலை செய்ய நினைப்பவர்களை பேயாகவும் உணர்ச்சி வசப்பட்டு தற்கொலை செய்து கொள்ள நினைப்பவர்களை மனசாட்சியாகவும் பயமுறுத்தி வாழவைக்கும் தெய்வம் நான்.

தற்கொலைகளைத் தடுப்பது பெரும்பாலும் எளிது. தற்கொலை செய்துகொள்ள நினைப்பவரின் பிரிவை யாரால் தாங்கிக் கொள்ள முடியாதோ அவர்களின் நினைவைத் தூண்டிவிட்டால் போதும். ஆனால்இவனின் மனதை மாற்ற கடைசி ஒரு மணி நேரமாக முயற்சிக்கின்றேன்.இவனோ சாவதற்கு துடியாய் துடித்துக் கொண்டிருக்கின்றான்.

"காதலின் தீபம் ஒன்று "  பாடல் தொலைக்காட்சியில்

"எளவெடுத்த இந்த பாட்டால என் லைஃபே போச்சு" தொலைக்காட்சிப்பெட்டியை உடைத்தான்.

"சாவதை விட வாழ்வது எளிது" இவன் முன்னர் தோன்றினேன்.

"நோ இட்ஸ் எ  ப்ரீடம்"

"மிகப்பெரிய பிரச்சினைகள் விடுதலை என்று நாம் எதை நினைக்கின்றோமோ அந்த விடுதலை கிடைத்த பின்னர்தான் வரும்"

"ஹூ ஆர் யூ , எப்படி என் வீட்டிற்குள் வந்தாய் "

"பேரண்டங்களின்  தற்கொலை தடுப்பு காவலன்"

"செம ஜோக் மச்சி, சாவப்போறதுக்கு முன்ன ஒரு காமெடி பீஸை பார்க்கனும்னு என் தலைவிதி..."  சில நொடிகள் அமைதிக்குப் பின்னர்

"திருடனா நீ ,  இந்தா நான் செத்த பிறகு இந்த வீட்டில இருக்கிற அத்தனையும் உனக்குத்தான் எடுத்துட்டுப் போய் நீயாவது நல்லா இரு"  இரண்டாவது தூக்க மாத்திரையை எடுத்து போட்டான்.

"விளையாட்டுக்கு சொல்லவில்லை. உண்மையாகவே நான் மனிதர்களின் தற்கொலை எண்ணங்களை மாற்றுபவன், இப்பேரண்டங்களின்   காவலர்களின் ஒருவன் "

"ஓகே ஒகே , ஏன் தற்கொலையை தடுக்கவேண்டும், நான் செத்துப் போவதால் இந்த யுனிவர்சுக்கு என்ன நஷ்டம்  " நக்கலாய் ஓரச்சிரிப்பு சிரித்தபடி மூன்றாவது மாத்திரையை எடுத்தான்.

"அதை சொல்ல முடியாது. ஆனால் நீ எந்த எந்த பிரச்சினைகளுக்காக தற்கொலை செய்து கொள்ள நினைக்கின்றாயோ அவை ஒருபோதும் மாறாது , இன்னும் அதிகமாகத்தான் ஆகும் "

"ஒ , மை டியர் திருடன், அந்த பிராபளம்ஸை நான் பார்க்க வேண்டியதில்லையே "

"நீங்கள் பார்ப்பீர்கள்  அனுபவிப்பீர்கள் "

"என்ன, ஆத்மா சாந்தியடையாமல் ஆவியாய் அலைவேன்னு சொல்றியா"

"இல்லை இல்லை. உங்கள் பிரச்சினைகளை நீங்கள் அனுபவிக்காமல் தப்பிக்க முடியாது , அதுதான் இப்பேரண்டத்தின் விதி "  நான் சொல்லி முடிப்பதற்குள் ஆறேழு மாத்திரைகளை எடுத்துஇவன் சாப்பிட்டிருந்தான்.

தற்கொலை தடுப்பு முயற்சி தோல்வி அடைந்த கவலையை விட,  தற்கொலையில் இறந்துப் போகப் போகின்ற இவனுக்காக நான் ஒரு பிரதி பேரண்டத்தை உருவாக்கவேண்டுமே என்ற கவலை எனக்கு . தற்கொலையில் இறக்கும் ஒவ்வொருவருக்காகவும் ஒரு பேராண்டத்தை உருவாக்க அதிக ஆற்றல் தேவைப்படுவதால் , ஆற்றல் சேமிப்பிற்காகத்தான்   நான் தற்கொலைகளைத் தடுக்க முயற்சிக்கின்றேன் .  இவன் உயிருக்குப் போராடும் அந்த சொற்ப நேரத்திற்குள் பிரதிகளை உருவாக்கி , இதே நேர பரிமாணத்தில்  இவனை அங்கு வாழவைக்க வேண்டும்.

ஆம் தற்கொலையில் இறப்பவர்கள் ,  நீங்கள் நினைப்பதைப் போல இறந்து விடுவதில்லை. மிச்சம் இருக்கும் வாழ்க்கையை அதே மனிதர்கள் , அதே உணர்வுகள் , இன்னும் கடுமையான சூழலுடன் இணைப் பேரண்டத்தில் வாழ்ந்து முடிக்க வேண்டும்.  இங்கு இறந்த இவன் இணை பேரண்டத்தில் தூங்கி எழுவதைப் போல சாதரணமாக இன்று எழுவான், ஆனால் புதிய உலகில் இங்கிருப்பதை விட ஆயிரம் மடங்கு பிரச்சினைகள் இவனுக்காக காத்திருக்கின்றன. இங்கு ஓடிப்போன காதலி அங்கு இவனுக்கு கிடைப்பாள். ஆனால் மனைவியான பின்னர் ஓடிப்போவாள். மறுபடியும் தற்கொலை செய்துகொண்டால், இன்னும் அதிகப் பிரச்சினைகளுடன் அதே வாழ்க்கையை மற்றுமோர் உலகில் வாழ்ந்தாகவேண்டும்.

உங்களுக்கு தற்கொலை எண்ணங்கள் இருக்கின்றனவா? இருந்தால் தொலைத்துவிடுங்கள்.  எனக்கும் வேலை மிச்சம், ஆற்றலும் மிச்சம். எல்லாவற்றையும் விட உங்களுக்கான பிரச்சினைகளை இங்கேயே அனுபவித்து  இயற்கையாக  விடுதலையானால் என்னைப் போல ஆகலாம். இப்பேரணடங்களின் காவலர்களில் ஒருவனாக .. இபேரண்டத்தின் ஆற்றலாக. ஆவீர்களா!!!  .


Thursday, July 17, 2014

பிரதிகள் - சிறுகதை

தொலைபுலன் தொடர்பு மூலம்  என்னை நெருங்கமுடிந்தவர்களின் எண்ணிக்கை மிகச் சொற்பம்.  எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் நட்பு தேவையில்லை என்பது என் கருத்து. அப்படி இருக்கையில் இந்த நட்பு அழைப்பை எப்பொழுது ஏற்றுக் கொண்டேன் எனத் தெரியவில்லை. தானாகவே இணைத்துக் கொள்ளும் இயந்திர முகப்புப் பக்கமாக இருக்கக் கூடும் அல்லது அரசாங்கம் என்னை வேவு பார்க்க அனுப்பப் பட்ட பக்கமாக இருக்கும் என்று நீக்கிவிடலாம் என்று நினைக்கையில்  தொலைபுலன் தொடர்பில்  பேச அழைப்பு வந்தது.

"சமீபத்தில் தாங்கள் எடுத்த  முடிவைப் பற்றி , நாளை எங்கள்  பத்திரிக்கைக்கு ஒரு சிறிய பேட்டி ஒன்றைக் கொடுக்க இயலுமா ? "

அன்று காகிதம், கணினி ; இப்பொழுது தொலைபுலன் தொடர்பு பத்திரிக்கைகள். நினைத்த மாத்திரத்தில் காற்றில் தொடுதிரை உருவாக்கி வாசித்துக் கொள்ளலாம்.

எழுத்தாளர்களிடம் சொற்களை வலியப் பிடுங்கி அரசாங்கப் பிரச்சினைகளுக்குள் சிக்கவைப்பதே இப்பத்திரிக்கைகளின் இயல்பு என்றாலும், கடைசி 10 ஆண்டுகளாக அறிவியல் புனைவுகள், பேய்க் கதைகள், துப்பறியும் கதைகள் என்று இருந்ததால் பேட்டிகளில் எனக்கு பெரிய சிக்கல் இதுவரை இருந்ததில்லை.  சர்ச்சைகளுக்குள் சிக்காத சமகால எழுத்தாளன் நான் ஒருவன்தான். சர்ச்சை இல்லை என்றாலும் என் மேல் இருந்த ஒரே விமர்சனம்  குருதியும் குரூரமும் கதைகளில் மிகுதியாக இருக்கின்றன என்பது . கதைகளைப் படித்த பின்னர் அதைப் பரிட்சித்துப் பார்க்கவேண்டும் என்று தோன்ற வைக்கின்றது என்று சிலர் நினைப்பதாக அரசாங்கம் எனக்கு தகவல் அனுப்பி இருந்தது  . இப்படி எனக்கு  பெரும் புகழைக் கொடுத்த குரூரக்கதைகளை இனி எழுதப் போவதில்லை என முடிவெடுத்து இருக்கின்றேன்.  அந்த முடிவைப் பற்றிதான் பேட்டிக்கு கேட்டிருக்கின்றனர்.

பேட்டிக்கு ஒப்புக்கொண்டுவிட்டு  மீண்டும்என் தொலைபுலன் தொடர்பு பக்கத்திற்கு வந்தேன். 'குரூரமான கதைகளை இனிமேல் எழுதப்போவதில்லை என்ற தங்களின் முடிவிற்கு மிக்க நன்றி ' என்று பல வாசகர்களிடம் இருந்துபாராட்டும் தொனியில் வாசகர் மன்றத்திற்கு தகவல்கள்  வந்து இருந்தன.

எதிர் மறையான பேய்க் கதைகள் எழுதுவதினால், எனக்கே ஒரு திகில் சூழ்ந்த உலகில் நான் மட்டும் தனியாக இருக்கின்றேன் என்ற பயம் இருந்து கொண்டே இருந்தது. தனிமை அதிகமானால் குரூர கற்பனைகள் இயல்பாகிவிடும்.  அக்கற்பனைகளை அப்படியே எழுத்தாக்கிவிடுவதால் பணமும் செல்வாக்கும்  சிறப்புத் தொழில் நுட்ப வசதிகள்  கிடைத்தாலும் ஒரு வித விட்டேத்தியான விரக்தி மனப்பான்மை இருந்து கொண்டே இருந்தது. கழிவறைக்கு இரவில் செல்ல பயம். கத்தியை எடுத்து தக்காளியை வெட்டக் கூட பயம். நெருப்பைக் கண்டால் பயம். யாராவது தொட்டால்கூட கழுத்தை நெறிக்க வருகின்றார்களோ என்ற பயம். நான் வர்ணிக்கும் குரூரங்கள் எனக்கு நடந்துவிடுமோ என்ற பயம்.

ஒரு நாள் அறிவியல் புனைவு ஒன்றை எழுதிக் கொண்டிருக்கையில் ஒரு வாக்கியம் என்னை அறியாமல் மனதில் தோன்றியது.

 'நீ எழுதுவது எல்லாம் வேறு ஓர் இணை உலகில் யாருக்கோ  நடக்கின்றது, உனக்கு நடப்பது எல்லாம் வேறோர் உலகில் யாராலோ  எழுதப்படுகின்றது, எழுதப்படுபவை எல்லாம் யாருக்காவது நடக்கும்,  நடப்பவை எல்லாம்  நிச்சயமாக எழுதப்பட்டிருக்கும், அதுதான் இயற்கையின் நியதி'

கடவுளே, என் குரூர விவரணைகள் நிஜத்தில் நடந்தால்? . அந்த நொடியில்தான்  முடிவு செய்தேன். இனிமேல் நேர்மறைக் கதைகள் மட்டுமே எழுதவேண்டும் என.  உங்களிடம் சொன்ன இந்த உண்மையை  அப்படியே நாளை,  பேட்டியில் சொன்னால் சிரிப்பார்கள்.

' எழுத்தாளன் என்பவன் பலவகைகளில் எழுதி நிருபிக்கவேண்டும். நேர்மறை சமுதாயக் கதைகள் இப்பொழுது எல்லாம் அரிதாகி வருவதால் , நானே களத்தில் குதிக்க முடிவு செய்தேன் '  என்று பொய்யை சொல்லி அரசாங்கத்திடம் பாராட்டுகளைப் பெற்றேன்.

அடுத்து வந்த நாட்கள் முழுவதும் எனது யோசனை,

என் வாழ்க்கைக் கதையை யார் எழுதிக் கொண்டிருப்பர் . ஒவ்வொரு அத்தியாயத்தையும் தனித்தனி ஆள் எழுதுவாரா? இல்லை ஒரே ஆளா ? அப்படி எழுதுபவர்தான் கடவுளா ?  அப்படி என்றால் வேறோர் உலகத்தில் இருக்கும் சிலருக்கு நான் தான் விதியை நிர்ணயிக்கின்றேனா ? நான் படைத்த மனிதர்களை நிஜத்தில் பார்த்தால் எப்படி இருக்கும்? அந்த இணை உலகத்திற்கு போக முடியுமா ? போக முடிந்தால் எப்படி போவது ? . பைத்தியக்காரத்தனமாக யோசித்துக் கொண்டிருந்தேன். இந்த யோசித்தலைக் கூட எவனோ ஒருவன் எழுதுகின்றானோ ?

parallel universe என்று தேடி 300 ஆண்டுகள் கோப்புகளில் இருந்து கண்டதையும் படித்தேன். இறந்த ஆத்மா எங்கு வேண்டுமானால் செல்லும் சக்தியைப் பெறும் என்று ஒருவன் எழுதியிருந்தான். இறந்த பின் அறிந்து என்ன பயன், இருக்கும்பொழுதே எனக்கான கடவுளை , கடவுள்களை அறிய வேண்டும்.

 'இப்பேரண்டம் முழுமையும் , இப்பேரண்டத்தில் இருக்கும்ஒவ்வொரு சிறிய துகளிலும்   அடங்கி இருக்கின்றது. '

அச்சிறியத் துகள் அளவுக்கு மாறினால் இணை உலகங்களை அடைய முடியுமோ?

'ஒரு மனிதனால் தன்னை கண்ணுக்குப் புலப்படாத துகள் அளவுக்கு சுருக்கிக் கொள்ள முடியுமா? " என்று தனிஅரட்டையில் நண்பனிடம் கேட்டேன்.  படித்துவிட்டான் என்று காட்டியது , ஆனால் பதில் சொல்லவில்லை. பைத்தியக்காரன் என்று நினைத்திருப்பான்.

அந்த சமயத்தில் ஒரு குழந்தை  பொம்மை விமானத்தை உருட்டி விளையாடுவதைப் போல ஒரு புகைப்படம் எனக்கான திரையில்  மேல் எழும்பியது.  நான் இயந்திர முகப்புப் பக்கம் என்று நீக்க நினைத்திருந்த பக்கம் தான் அது.  ஒரு பொதுவான நண்பர்கள் கூட இல்லை. குழந்தை - பொம்மை விமானப் படத்தைத் தவிர இருந்த ஏனைய படங்கள் எல்லாம்  வரைகலை வடிவப்படங்களாக இருந்தன. எத்தனை முயற்சி செய்தும் நீக்க முடியவில்லை. யோசித்து யோசித்து களைத்து அப்படியே தூங்கிவிட்டேன். மறுநாள் அனைத்து வகையான தியானம் சம்பந்தப்பட்டவைகளை அரசாங்கத்தின் சிறப்பு அனுமதி பெற்று  தொலை புலன் தொடர்பில்  ஏற்றி வாசித்து தியானங்களின் வழியாக இணை உலகத்திற்குப் போக முயற்சி செய்தால் பசி மயக்கம்தான் வந்தது.

இணை உலகத்திற்கு செல்ல  நான் எடுத்த ஒரு முயற்சியும் வெற்றி அடையாததால்  வெறுத்துப் போய் இருந்த சூழலில்  ,  அந்த இயந்திர முகப்பு என்று கருதிய பக்கத்தில் இருந்து ஒரு செய்தி வந்திருந்தது .

"என்னைப் பார், எல்லாம் புரியும்"

குழந்தை - பொம்மை விமானம் அதே முகப்புப் படம், பெரிதாக்கி பார்த்தேன், விமானத்தின் எண் MH370. இது சில நூறாண்டுகளுக்கு  முன்னர் காணாமல் போன விமானம் அல்லவா ?  கடைசி வரை அதைக் கண்டுபிடிக்கவே முடியவில்லையே அதைப் பற்றி ஒரு வரிக்கதைக் கூட எழுதி இருக்கின்றேனே.. ஒவ்வொருப் புகைப்படமாகப் பார்த்தேன். நூற்றாண்டு பழமை வாய்ந்த படங்களில் வரும் வேற்றுக் கிரக காட்சிகளைப் போல இருந்ததன. கடைசியாக ஒரு வீடியோ. அதை ஓடவிட்டேன். அதில் என்னைப் போல் ஒருவன்... அச்சு அசலாக..  இல்லை அது நானேதான்.

"என்ன கார்த்தி , நலமா ... என்னைத் தானே தேடிக்கொண்டிருக்கின்றாய். உனக்கான அத்தியாயங்களை எழுதுபவன் நான்தான். அதேப் போல் எனக்கான அத்தியாயங்களை எழுதுபவன் நீ .
நீ என்னைத் தேட தொடங்கிய அன்றே உன்னிடம் நான் வந்துவிட்டேன்...  "

பதிவ செய்யப்பட்டது என்று பார்த்தால், அது நேரலை வீடியோ.

"நீங்கள், நீ எந்த உலகத்தில் இருந்து பேசுகின்றாய் , யார் அந்த குழந்தை? எப்படி நான் உன் உலகிற்கு வருவது ? "

"யாரும் யார் உலகத்திற்குள்ளும்  நுழைய முடியாது, வேண்டுமானால் தன்னைத் தேட விரும்பும் எவரும்  தன் பிரதியைப்  பார்க்கலாம், எப்படி நான் உன்னைத் தேடி இப்படி வந்தேனோ அதைப் போல ஒவ்வொருவருக்கு ஒரு தளம் கிடைக்கும் "

"நீ ஏன் என்னைப் போல் இருக்கின்றாய் , உனக்கு பின்னால் வரும் அந்த பெண் யார் ? "

"கார்த்தி, நான் உன்னுடைய மூத்த பிரதி அதாவது , இவ்வுலகத்தில் நீ நானாக முன் கூட்டியே வாழ்கின்றாய்.  இவளை அடுத்த ஆண்டு நீ அறிந்து கொள்வாய், கடைசியாக சொல்கின்றேன்,  நாம் தான் நம் வாழ்க்கை அத்தியாயங்களை எழுதுகின்றோம். வேறு யாரும் எழுதுவதில்லை, எதைப்பற்றியும் குழப்பிக் கொள்ளாமல் நன்றாக தூங்கு, நாளை எல்லாம் சரியாகும்."  வீடியோ நின்றது, அந்த முகப்பும் காற்றுவெளியில் இருந்து சுவடின்றி மறைந்தது.

தன்னையறிந்த இந்த அனுபவத்தையே  பேட்டி கொடுத்தபத்திரிக்கைக்கு என் முதல் நேர்மறைக் கதையாய் அனுப்பி வைத்தேன்.  அதைப் படித்த வாசகிகளில் ஒருத்தியான  அம்மு  தொலை மனத்தொடர்பில் பாராட்டினாள்  .  நட்பு ஆனது. நட்பு காதல் ஆனது. காதல் வந்தால் தனிமை கிடையாது. தனிமையின் வெறுமை மறைந்தால்  இனிமை,  நேர்மறை எண்ணங்கள். முன்பை விட அதிக புகழ் பெற்றேன். ஆண்டுகள் ஓடின. ஒரு   நாள்  எங்கள் அஞ்சலிப் பாப்பாவிற்கு சிறிய விமான பொம்மையை வாங்கிக் கொடுத்தாள் அம்மு. சில நூற்றாண்டுகளுக்கு  முன்னர் காணாமல் போன ஒரு  விமானத்தின் சிறிய வடிவம் அது. குழந்தை குட்டி விமானத்துடன் விளையாட அம்மு அதைப் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்க ,

ஆவணப் பெட்டகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் பல நூற்றாண்டுபழமை வாய்ந்த சமூகவலைத்தளம் ஒன்று என் தொலைபுலன் தொடர்புத் திரையில் காரணமில்லாமல் வந்தது. அந்தகாலத்து வடிவமைப்பு, புரியாத வரிவடிவ எழுத்துக்களுடன் இருந்தது. எனது மென்பொருளினால் எனக்குப் புரியும் வரிவடிவத்திற்கு மாற்றினேன். பேஸ்புக், கார்த்தி அட, என் பெயரில் எவனோ ஒருவன் அந்த காலத்தில் இருந்திருக்கின்றான். ஏதோ ஒரு தகவல் பதிந்து இருக்கின்றான்.

"என் வாழ்க்கைக் கதையை யார் எழுதிக் கொண்டிருப்பர் . ஒவ்வொரு அத்தியாயத்தையும் தனித்தனி ஆள் எழுதுவாரா? இல்லை ஒரே ஆளா ? அப்படி எழுதுபவர்தான் கடவுளா ?  அப்படி என்றால் வேறோர் உலகத்தில் இருக்கும் சிலருக்கு நான் தான் விதியை நிர்ணயிக்கின்றேனா ? நான் படைத்த மனிதர்களை நிஜத்தில் பார்த்தால் எப்படி இருக்கும்? அந்த இணை உலகத்திற்கு போக முடியுமா ? போக முடிந்தால் எப்படி போவது ? . பைத்தியக்காரத்தனமாக யோசித்துக் கொண்டிருந்தேன். இந்த யோசித்தலைக் கூட எவனோ ஒருவன் எழுதுகின்றானோ ? "

------------- 

Monday, June 23, 2014

பஜகோவிந்தம் என்கின்ற முனியாண்டி - நீதிக்கதை (எழுதியவர் கிளிமூக்கு அரக்கன் )


பல ஆண்டுகளுக்கு முன்னால் பஜகோவிந்தம் என்கின்ற முனியாண்டி தமிழ்நாட்டில் பிறந்தார். அவர் பியுசி முடித்த கொஞ்ச காலத்திலேயே அவர் தந்தை காலமாகிவிட , குடும்பப் பொறுப்பை சுமக்க வேண்டிய கட்டாயம். அவரின் தூரத்து உறவினர்கள் மத்தியப்பிரதேச போபாலில் இருப்பதை அறிந்து அங்கு செல்கின்றார். உறவினர்களும் அருகில் இருக்கும் ஒரு பெரிய நிறுவனத்திற்கு பஜகோவிந்தம் என்கின்ற முனியாண்டியை நேர்முகத் தேர்விற்கு அனுப்புகின்றனர். குமாஸ்தா வேலைக்கான அத்தனை கேள்விகளுக்கும் பதில் சொன்னாலும் , இந்தி தெரியாது என்பதால் நிராகரிக்கப்படுகின்றார்.
விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு என்று பஜகோவிந்தம் என்கின்ற முனியாண்டி ஊருக்குத் திருப்பி அனுப்பப்படுகின்றார். ஊர் வந்தவுடன் பால்ய நண்பர்கள் ராமசாமி, தட்சினாமூர்த்தி, ராமச்சந்திரன், லலிதா ஆகியோர் பஜகோவிந்தம் என்கின்ற முனியாண்டியை உற்சாகப்படுத்தி, கோயம்புத்தூரில் இருக்கும் சிறு தொழிற்சாலைக்கு வேலைக்கு அனுப்புகின்றனர்.
அங்கு ஒரு வேளை சாப்பாட்டுடன் குமாஸ்தா வேலையில் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாய் கற்றுக்கொண்டு பொறியியல் சம்பந்தமான வேலைகளையும் செய்ய விரும்புகின்றார். முதலாளி காமராஜரும் அனுமதிக்கின்றார். பஜகோவிந்தம் என்கின்ற முனியாண்டியின் உழைப்பைப் பார்த்த காமராஜர் மனமுவந்து , தனது நண்பர் அழகப்பனிடம் பேசி , அழகப்பன் அவர் நண்பர் அண்ணாமலையிடம் பேசி அண்ணாமலை அவர் நண்பர் தியாகராஜனிடம் பேசி ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்த்துவிடுகின்றனர்.
மீனுக்காகக் காத்திருந்த கொக்காய் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு வென்று 20 ஆண்டுகளில் மிகப்பெரிய தொழிலதிபர் ஆகின்றார். போபால் வடஇந்திய நிறுவனத்தையும் விலைக்கு வாங்குகின்றார். ஆங்கிலத்தில் உரையாற்றி , நீண்ட காலம் தடை செய்யப்பட்டிருந்த இடதுசாரி தொழிலாளர் யூனியன்கள் அனுமதிக்கப்படும் என்று தொழிலாளர்களை உற்சாகமூட்டுகின்றார். எல்லாம் நல்லபடியாக முடிந்ததும் பஜகோவிந்தம் என்கின்ற முனியாண்டி
இடம் , பத்திரிக்கையாளர்கள் வந்து,
"உங்களுக்கு இந்தித் தெரிந்து, இந்தியில் உரையாற்றி இருந்தால், இன்னும் சிறப்பாக இருந்திருக்குமே" என்ற கேள்வியைக் கேட்டனர்.
அதற்கு பஜகோவிந்தம் என்கின்ற முனியாண்டி சொன்னார்
" இந்தி தெரிந்து இருந்தால், அதோ அந்த கடைநிலை ஊழியர்களில் ஒருவனாக அமர்ந்து கொண்டு வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருப்பேன்"

---
Inspired from THE VERGER by W. Somerset Maugham http://www.sinden.org/verger.html

Monday, June 02, 2014

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் - பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

முதலமைச்சர் கருணாநிதி, திமுக தலைவர் கருணாநிதி, எழுத்தாளர் கருணாநிதி இவர்களில் எனக்கு மிகவும் பிடித்தது முதலமைச்சர் கருணாநிதி, அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டின் பொற்காலமான 1996-2001 ஐந்தாண்டுகள் தமிழகத்தை ஆண்ட முதலமைச்சர் கலைஞரை மிகவும் பிடிக்கும். வடிகட்டிய சுயநலவாதியான எனக்கு ஒருவரைப் பிடிக்கவேண்டுமெனில் நான் ஓர் ஆதாயமாவது அவரிடம் இருந்து அடைந்திருக்க வேண்டும். நான் அடைந்திருக்கின்றேன்.
1996 வரை ஒவ்வொரு பொறியியற் கல்லூரிகளுக்கும் தனித்தனி விண்ணப்பம் அனுப்பி இருந்த நிலையை மாற்றி, ஒற்றைச் சாளர முறையை அறிமுகப் படுத்தியப் பின்னர் நேரடியாகப் பயன் அடைந்தவன் நான்.
அதற்கு முன்னர், ஒவ்வொரு கல்லூரிகளுக்கும் 100 ரூபாய் விண்ணப்பப் படிவத்திற்கான செலவு என்று வைத்துக் கொண்டால் கூட, பத்துக் கல்லூரிகளுக்கு விண்ணப்பம் அனுப்ப ரூபாய் 1000 ஆகும். ஏழ்மைக்கும் நடுத்தரத்திற்கும் அல்லாடிக்கொண்டிருக்கும் குடும்பங்களுக்கு அன்று ஆயிரம் ரூபாய்கள் என்பது மிகப்பெருந்தொகை.
ஆனால் கலைஞர் ஆட்சியில், ஒரே விண்ணப்பம், ஒற்றைச் சாளர முறையில் அனைத்துக் கல்லூரிகளுக்கும் பொதுவாக என்ற முறை வந்த பின்னர் நேரடியாக மிகவும் பயனடைந்தது நடுத்தர ஏழை மாணவர்கள். . அதுவரை சமூக நீதி இடஒதுக்கீடுகளில் 'உட்டாலக்கடி' செய்து கொண்டிருந்த கல்லூரிகளும் வழிக்குக் கொண்டு வரப்பட்டு கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டிக் கொண்டிருக்கின்றது.
ஒருவேளை, ஒற்றைச் சாளரமுறை இல்லாமல் இருந்திருந்தால் நான் பொறியியல் படிப்பு படிக்காமலேயே இருந்திருக்கலாம். இப்பொழுது இருக்கும் நிலையை அடைந்திருப்பேனா எனச் சொல்ல முடியாது. ஒருவேளை அடைந்திருக்கலாம், ஆனால் அந்தப் பாதை இன்னும் கடுமையானதாக இருந்திருக்கும். அரசாங்கத்தின் ஒரு சிறியத்திட்டம், ஒரு தலைமுறை இளைஞர்களின் எதிர்காலத்தை மிகப்பெரிய அளவில் வளமையாக்கி இருக்கின்றது.
என்னைப்போல, இலட்சக்கணக்கான மாணவர்களுக்கு பயணப்படும் வாழ்க்கைப் பாதையை வசதியாக்கிக் கொடுத்தமைக்காகவே முன்னாள் முதலமைச்சர் கலைஞரை போகுமிடமெல்லாம் நினைவு கூர்ந்து கொண்டே இருப்பேன்.
இன்னும் ஓராண்டில் சமர்ப்பிக்கப்போகும் தகவல் பாதுகாப்பு ஆராய்ச்சிப் படிப்பிற்கான எனது ஆராய்ச்சி நூலை கலைஞருக்கு சமர்ப்பிப்பதே அவருக்கு நான் செய்யப்போகும் என்னால் முடிந்த மிகப்பெரும் நன்றி காணிக்கை.
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

Tuesday, May 13, 2014

பக்கத்து வீட்டுப்பெண் - சிறுகதை

ஒட்டுக்கேட்பது எனக்கு மிகவும் பிடிக்கும். சுவற்றில் காதை வைத்து, அடுத்தவர் வீட்டில் என்னப் பேசிக்கொள்கின்றார்கள் என்பதில் ஏனோ ஓர் ஆர்வமுண்டு. பக்கத்துவீட்டில் பேசிக்கொள்ளப்படும் மொழி எனக்குப் புரியவில்லை எனினும்,வாக்கியங்களின் ஏற்ற இறக்கங்களை வைத்து, சண்டையா, கொஞ்சிக் கொள்கின்றனரா என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இந்த புதுக்குடியிருப்புக்கு வந்தபின்னர், ஓட்டுக்கேட்க வேண்டிய அவசியமே இல்லாமல் போய்விட்டது.

காதில் ஒலிவாங்கியை மாட்டி, பாடல்கள் கேட்டுக்கொண்டிருந்தாலும், உள்நுழைந்து என் கவனத்தைத் திசைத் திருப்பும் அளவிற்கு பக்கத்து வீட்டில் இருந்து எப்பொழுதும் சத்தம்தான். கணவன் மனைவியா , காதலன் காதலியா என்று தெரியவில்லை.

பக்கத்துவீட்டுப் பெண் அலறிக்கொண்டே இருப்பாள். ஆண் கத்திக் கொண்டே இருப்பான். சமயங்களில் சண்டை நள்ளிரவு வரை நீடிக்கும். ஒருநாள் கதவைத் தட்டி, அமைதிக் காக்கும்படி சொல்லிவிடலாம் என நினைத்தேன். ஆனால் அவர்களின் ஆக்ரோசச் சண்டையில் வெளிநாட்டுக்காரனான என்னை அடித்துவிட்டால் என்ன செய்வது என்று காதில் பஞ்சடைத்துக் கொண்டு தூங்கிவிடுவேன்.

ஒருநாள், பக்கத்துவீட்டு, ஆண் கதவைப் பூட்டிவிட்டுப் போவதைப் பார்த்தேன். உள்ளிருந்து பெண்ணின் குரல். எனது அடிப்படை இத்தாலிய அறிவை வைத்து, நான் புரிந்து கொண்டது,

"பூட்டிவிட்டு போகதே, நான் எங்கும் வெளியே போகமாட்டேன்".

கொடுமைக்கார காதலன்/ கணவனாக இருப்பான் போலிருக்கின்றதே. தொடர்ந்து ஒரு வாரம் கவனித்தேன், பெண்ணின் கதறலை மீறி, இவன் பூட்டிவிட்டு செல்வதைப் பார்த்ததும் என்னுள் இருந்த துப்பறியும் சாம்பு விழித்துக்கொண்டான்.

ஒருநாள் எனது வேலைகளை விட்டுவிட்டு, அவனைப் பின் தொடர்ந்தேன். அவனது அலுவலகம் சென்றான். மதியம் உணவு இடைவேளையில், அருகில் இருந்த பூங்காவிற்கு வருகின்றான், மடிக்கணினியைத் திறந்து ஏதோ  பார்க்கின்றான். நடைபழகுவதைப் போல அவன் பின் பக்கம் சென்று என்னப் பார்க்கின்றான் எனப்பார்த்தேன். அவனது வீட்டில் இருந்து நேரலை ஒளிப்படம் ஓடிக்கொண்டிருந்தது. சிசிடிவி கேமரா வைத்து, பெண்ணைக் கண்காணிக்கின்றானே. தேர்ந்த கொடுமைக்காரன் போல.

பக்கத்துவீட்டு வாக்குவாதங்களைப் புரிந்துகொள்வதற்காகவே இத்தாலிய மொழியை வேகமாகக் கற்றுக்கொண்டேன். வழக்கமாக ஓங்கி ஒலிக்கும் பெண்குரல் இன்று கெஞ்சிக் கொண்டிருந்தது.

"செத்துப்போய்டவா, ஒழுங்கா சொன்ன பேச்சைக் கேட்கலான்னா, உன் கண் முன்னாடியே கையை அறுத்துக்கிட்டு செத்துடுவேன், நான் வாழனும்னு நீ நினைச்சின்னா ஒழுங்க இரு, யாரையும் எதையும் செய்யவேண்டாம்" என்றான் ஆண்.

பெண் கெஞ்சி கெஞ்சி அழும் குரல் கேட்டு பின் நிசப்தமானது.

மறுநாள், முதன்முறையாக பக்கத்துவீட்டு ஆண், அந்தப் பெண்ணைக் கூட்டிக்கொண்டு வெளியே சென்று கொண்டிருந்தான். அந்தப் பெண்ணைப் பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தில்,  அவர்களை முந்திச்சென்று, அவளை ஓரக்கண்னால் பார்த்தபடி, அவனுக்கு வணக்கம் சொன்னேன்.

நான் ஓரக்கண்ணால் பார்ப்பதைக் கவனித்துவிட்டு, சுட்டெரிப்பதைப் போலப் பார்த்தாள். பார்வையில் பயந்துப்போய் , அவர்களுடன் லிஃப்டில் செல்லாமல், படியில் இறங்கிவிட்டேன். . அன்றிரவு சத்தம் குறையும் என்று பார்த்தால் மறுபடியும் அதிகரித்தது.  ஆண் தான் செத்துப்போகப்போவதாக மிரட்டிக்கொண்டிருந்தான். பெண்ணின் அழுகுரல். யாராவது இவனைக் காப்பாற்றுங்களேன் என்ற குரல்.

உடனடியாக போலிஸிற்கு அழைத்து வரவழைத்தேன். அவர்கள் வீட்டின் கதவை உடைத்து, உள் நுழைய மணிக்கட்டை அறுத்துக்கொண்டு இரத்தவெள்ளத்தில் கிடந்தான். ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டான்.

அப்பெண்ணை அவ்வீட்டினில் தேடினேன். அவள் இல்லை. சன்னல் எல்லாம் அடைக்கப்பட்டுத்தான் இருந்தது. மெல்ல குடியிருப்பின் சொந்தக்காரரை நெருங்கி,

"இவ்வீட்டில் இந்தப் படத்தில் இருக்கும் பெண்ணும் இருக்கின்றாள் சார், அவளின் குரலைக் கேட்டிருக்கின்றேன், அடிக்கடி சண்டைப்போட்டுக்கொள்வார்கள், இவன் மிரட்டுவான் , அவள் அழுவாள், அவளை வீட்டினுள் வைத்து பூட்டிவிட்டுப் போய்விடுவான்,"

அவர் என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு,

"அவள் அவனின் காதலி, சிலரால் கொடூரமாக கொல்லப்பட்டு ஆறு மாதங்கள் ஆகின்றன, அவள் இறந்தபின்பு இவன் கிறுக்குப்பிடித்தவன் மாதிரி அவளின் குரலிலும் தன் குரலிலும் மாறிமாறிப்பேசிக்கொள்வான், அதைத்தான் நீ கேட்டிருப்பாய்"

அப்படியானால், அவர்கள் இருவரையும் ஒருசேர அன்று பார்த்தேனே!!, பார்த்ததை அவரிடம் சொல்லவில்லை. மருத்துவமனைக்கு விரைந்தேன். கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவர் சொன்னார். அவனின் நெருங்கிய நண்பன் என்று சொல்லி மன்றாடி அனுமதிப் பெற்றுவிட்டு அந்த சிகிச்சை அறைக்குள் நுழைந்தேன். அந்தப்'பேய்'ப்பெண்ணும் அங்கிருந்தாள். இந்தமுறை உக்கிரமான பார்வையில்லை.

மெல்ல கண் திறந்த பக்கத்துவீட்டுக்காரன், உடைந்த ஆங்கிலத்தில்,

"இதோ இவள் என் காதலி, இறந்துவிட்டாள், . இவளுக்கு அவளைக் கொன்றவர்களைப் பழிவாங்க வேண்டும்,  பழிக்குப் பழிக்கூடாது என்பது என் நோக்கம். அந்த வாக்குவாதங்களைத்தான் நீ கேட்டிருப்பாயே, என்னை மீறி அவள் வெளியேப்போகக் கூடாது என்பதன் உணர்வுப்பூர்வமான தடைதான் அவளை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு செல்வது"

பேய்கள் மனிதர்களைக் கட்டுக்குள் வைத்திருப்பதைப் பற்றி படித்திருக்கின்றேன். ஆனால், ஒரு பெண் இறந்து பழிவாங்கத் துடிக்கும் பேய் ஆன பின்னரும் காதலின் அன்பின்  கட்டுக்குள் இவன் வைத்திருக்கின்றானே....

"நான் என்ன செய்யவேண்டும், சொல் " என்றேன்.

"இதோ, இந்த மருத்துவக் கவசங்களை நீக்கி என்னைக் கொன்றுவிடு, இவளுடன் நான் வேறுலகத்திலாவது இணைந்து வாழ்கின்றேன்"

அந்தப்பேய்ப்பெண், உக்கிரமான பார்வையில் ,

"இவன் வாழவேண்டும், இவனுக்கு ஏதாவது நேர்ந்தால் உன்னைக் கொன்றுவிடுவேன்"

 "சீக்கிரம் என்னைக் கொன்றுவிடு" என்ற அவன் என்னைக் கெஞ்ச

"அவனை ஒன்றும் செய்யாதே" என்று பேய் அலற, மருத்துவர் கதவைத்திறக்க,

அவனைக் கொன்று விடுதலை செய்யவா, கொல்லாமல் வாழவிடவா
நான் இப்பொழுது என்ன செய்ய வேண்டும் நீங்களே சொல்லுங்கள்.

Sunday, May 11, 2014

யாமிருக்க பயமே - திரைப்பார்வை

பேயால் கொல்லப்பட்டவர்கள் எல்லாம் என்ன ஆவார்கள்? என்ற கேள்வி பேய்ப்படங்களை, முகத்தை மறைத்துக் கொண்டு விரலிடுக்கில் பார்க்கும்பொழுது எல்லாம் தோன்றும். கொல்லப்பட்டவர்கள் பேயாக வந்து , கெட்டப் பேயை அழித்தால் என்ன என்று கூட நினைப்பேன்? ராம்கோபால் வர்மாவின் ஒரு பேய்ப்படத்தில், தன் பிணத்தைப் பார்த்து அழுதுக்கொண்டிருக்கும் ஒரு பேயை , கொன்ற பேய் ஆறுதல் சொல்லி அழைத்துச் செல்லும்.
மங்காத்தா படத்தில் 'திருஷ்டிக்கு" வரும் திரிஷாவைத் தவிர எல்லோரும் ஒன்று கெட்டவர்கள் அல்லது ரொம்பக் கெட்டவர்கள். வில்ல நாயகனாக வரும் அஜீத்திற்கு எந்தவிதமான சென்டிமென்ட் பிளாஷ்பேக்கும் வைக்காமல், கெட்டவன்னா கெட்டவன்தான் என்றிருக்கும்.
"யாமிருக்க பயமே"  திரைப்படத்திலும் பேய் என்றால் பேய். கொடூரமான பேய்.  முனி, காஞ்சனா போன்ற நகைச்சுவைப் பேய்ப்படங்களில் வரும் பேய்களைப் போல இதில் வரும் பேய்க்கு சென்டிமென்ட் பின்கதை எல்லாம் கிடையாது. நல்ல நோக்கத்திற்கான பழிவாங்கல் எல்லாம் கிடையாது. பயங்கரமான பேயினால் கொல்லப்பட்டவர்கள் பேயானாலும், இந்த பவர்புல் பேயை ஒன்றும் செய்யமுடியாது என்பதை எவ்வளவு நகைச்சுவையுடன் சொல்லமுடியுமோ அவ்வளவு சொல்லியிருக்கின்றார்கள். 

ஒரு திகில் முடிச்சை அவிழ்க்கையில் ஒன்று அதிர்ச்சி இருக்கும் அல்லது உப்புசப்பில்லாத ஆன்டி -கிளைமேக்ஸாக இருக்கும். ஆனால், இதில் இணை-கதாநாயகன் கருணாகரனின் மறுப்பக்கம் தெரியவரும்பொழுது பயத்தை மறந்து வெடித்துச் சிரிப்பீர்கள்.
எவ்வளவு சுமாராக காட்சியமைக்கப்பட்டிருந்தாலும் , கொலைக்காட்சிகள் அனுதாபத்தைத் தரும். ஆனால் இதில் வரும் கொலைக்காட்சிகள் குரூரத்தை மீறி உங்களை சிரிக்க வைக்கும்.
படத்தில் , "பேய் இருக்கு ஆனால் இல்லை" என்று ஏமாற்றவெல்லாம் இல்லை. பேய் பங்களாதான். ஒன்றிற்குப் பல பேய்கள் இருக்கின்றன. மங்காத்தா படத்தில் வலியவன் வெல்வான் என்பதைப்போல், இதிலும் பேய்தான் ஜெயிக்கின்றது. 'தர்மம் தானே' வெல்லவேண்டும் என்றெல்லாம் உங்களை யோசிக்க வைக்காமல் சிரித்துக் கொண்டே , வெளியே அனுப்பியதில்தான் இயக்குநரின் வெற்றி இருக்கின்றது.
அளவான கவர்ச்சி, அடபோடவைக்கும் அடல்ட் காமெடி, உண்மையிலேயேத் திகிலூட்டும் இரண்டாம் பாதி, கடைசிவரை விடாது கருப்பாய் இருக்கும் நகைச்சுவை ஆகியன உங்கள் நேரத்திற்கும் காசிற்கும் பொழுதுபோக்காய் ஈடு செய்யும்.
யாமிருக்க பயமே - பயந்து பயந்து சிரிக்க !!
திரைப்பட முன்னோட்டம் - https://www.youtube.com/watch?v=7utXPKENd-s

Tuesday, May 06, 2014

கைப்பட ஒரு கடிதம் - சிறுகதை

"ஏன்டா கார்த்தி, லெட்டரே போட மாட்டேங்கிற"

"எதுவா இருந்தாலும் இமெயில் அனுப்புப்பா, பக்கத்திலதானே பிரவுசிங் சென்டர் நான் இப்போ பிசி"

என்று அப்பாவின் அலைப்பேசி அழைப்பை வெடுக்கென துண்டித்த பின்னர்தான் அந்த பாட்டியைக் கவனித்தேன். கையில் தடிமனான அஞ்சல் உறையுடன் என் வீட்டின் வாசல் அருகே நின்று கொண்டிருந்தார்.  இந்த மலையோர ஆஸ்திரியக் கிராமத்தில், என் வீட்டில் இருந்து கொஞ்சம் தொலைவில் உள்ள வீட்டில் வசிக்கின்றார்.   பாட்டியின் பெயர் எல்ஃபி, வயது எண்பதுக்குமேல் இருக்கும்.

பல்கலைகழகத்தின் அருகில் குடியிருக்க வீடுகளின் மாத வாடகை அதிகமாக இருந்ததனால், 50 கிலோமீட்டர்கள் தள்ளியிருக்கும் இந்த கிராமத்தில் குடியிருக்கின்றேன். 1000 பேருக்கும் குறைவாக வசிக்கும் இக்கிராமத்தில் , அனேகமாக நான் ஒருவன்தான் வெளிநாட்டுக்காரன். ஆரம்பத்தில் மாநிறத்தில் ஒருவன் சுத்திக் கொண்டிருப்பதை குறுகுறுவெனப் பார்த்தாலும் கடைசி ஆறுமாதங்களில் சிலர் நல்ல நட்பாகிவிட்டனர்.

அதில் இந்த பாட்டியும் ஒருவர். அவருக்கு ஆங்கிலம் தெரியாது. எனக்கு ஜெர்மன் தெரியாது.  குத்து மதிப்பாக ஏதாவது புரிந்து கொண்டு அவருடன் ஒரு சில நிமிடங்கள் மாலையில் கல்லூரி முடித்துவிட்டு வரும்பொழுது பேசிவிட்டு வருவேன். இணையம், கம்ப்யூட்டர் இல்லாத மகிழ்ச்சியான வாழ்க்கை அவருடையது. ஸ்கைப்பில் ஒரு நாள் அம்முவுடன் பேசிக்கொண்டே வந்தபொழுது, அம்முவை, என் வாழ்க்கையின் ஆண்டாள் என்று  பாட்டிக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கின்றேன். அவருக்கு ஸ்கைப் தொழில்நுட்பத்தைக் கண்டு வியப்போ வியப்பு. சாதாரண விசயம் அவருக்கு வியப்பைத் தருகின்றதே என்று எனக்கும் வியப்பு.

சென்ற வாரம் முழுவதும் , பாட்டியின் மகனும் குடும்பத்தாரும் பல ஆண்டுகளுக்குப்பின்னர் அமெரிக்காவில் இருந்து வந்திருந்ததால் பாட்டியின் வீடு திருவிழாக்கோலம் பூண்டிருந்தது. மகன், மருமகள், பத்து பதினோரு வயதில் இரண்டு பேரப்பிள்ளைகள் , அமைதியாய் இருந்த தெரு கலகலவென இருந்தது. ஒரு நாள் என்னைக்கூட மகனின் குடும்பத்தாருக்கு அறிமுகம் செய்து வைத்தார். அமெரிக்கா திரும்பிய சில நாட்களில் நியுயார்க்கில் இருந்து பாஸ்டனுக்கு மாற்றலாகப்போவதாகவும் , புதிய அலுவலகத்தில் உடன் வேலை செய்பவர்கள் நிறைய பேர் தமிழர்கள் என்றும் சொல்லிக்கொண்டிருந்தார். ஐரோப்பாவைப் போல அல்லாமல் அமெரிக்காவும் அமெரிக்க ஆங்கிலமும் எப்பொழுதும் எனக்கு அந்நியமாகவே தெரியும்.  நட்பின் முதற்படியாக மின்னஞ்சல்கள் பரிமாறிக்கொண்டோம்.

வீட்டிற்குள் பாட்டியை அழைத்தபடி, "மாலை, வணக்கம், என்ன செய்ய வேண்டும் எல்ஃபி?"  உடைந்த ஜெர்மனில் கேட்டேன்.

கையில் இருந்த தடிமனான அஞ்சலைக் கொடுத்தார்.

"நீ, லின்ட்ஸ் போகும்பொழுது, அமெரிக்காவிற்குத் தேவையான தபால்தலை ஒட்டி, தபால்பெட்டியில் போட்டுவிடுகின்றாயா?"

"ஓ நிச்சயமாக"  அஞ்சலை முன்னும் பின்னும் பார்த்தேன். வெறும் மின்னஞ்சல் முகவரி மட்டுமே இருந்தது.

"எல்ஃபி, வெறும் மின்னஞ்சல் மட்டும் இருக்கின்றது, முழுமுகவரி எங்கே"

"இதைத்தான் தனது முகவரி என்று எனது பேரன் கொடுத்தான்"  என்று சிலப்பத்து ஈரோத்தாள்களை தபால் செலவிற்காக நீட்டினார்.

"அனுப்பிவிட்டு வந்து வாங்கிக்கொள்கின்றேன்" என தபால் கவரைப் பெற்றுக்கொண்டேன்.

மறுநாள் கல்லூரியில் இருந்து பாட்டியின் தாள் கடிதத்தின் 10 பக்கங்களை மின்னச்சு எடுத்து, பாட்டியின் பேரனுக்கு மின்னஞ்சல் செய்துவிட்டேன். அடுத்த அரைமணி நேரத்தில் பாட்டிக்குக் கொண்டு சேர்க்க பதில் பேரனிடம் இருந்து வந்து சேர்ந்தது. தாளில் பதிப்பித்து எடுத்துப் போகலாம் எனநினைத்தேன். வேண்டாம் என்று முடிவை மாற்றிக்கொண்டு ,

எல்ஃபி பாட்டியின் வீட்டு முகவரிக்கு தபாலில்  கைப்பட எழுதியனுப்பவும் என்று பாட்டியின் பேரனுக்குப்பதில் அனுப்பிய கையோடு, ஒர் ஏ4 தாளை எடுத்து மேசையின் மேல் வைத்து, அன்புள்ள அப்பா நலம் நலமறிய ஆவல் என்று கைப்பட ஒரு கடிதத்தை எழுத ஆரம்பித்தேன்.

                                                                      -------------

Sunday, May 04, 2014

தமிழ்நாஜியின் மின்னஞ்சல் - அங்கதம் எழுதியவர் கிளிமூக்கு அரக்கன்


இவ்வங்கதப்பதிவை பேஸ்புக்கில் எழுதியவர் கிளிமூக்கு அரக்கன் (https://www.facebook.com/kilimookku/posts/1496626777223839) சிரிப்பும் சிந்தனையும் அரக்கனுகே சொந்தம்.
-----
அன்புள்ள தொப்புள்கொடி தமிழனுக்கு,
நாம் தமிழர்கள். ஏனெனில் இதை நான் தமிழில் எழுதுகிறேன். நீயும் தமிழில் படிக்கிறாய். தமிழ் எழுத்துக்கள் தமிழில் இருக்கின்றன, திராவிடத்தில் இல்லை. அதனால்தான் சொல்கிறேன் நாம் தமிழர்கள், திராவிடர்கள் அல்ல!
உனக்கு ஒன்று தெரியுமா? நீ சின்னப்பிள்ளையாக இருந்தபோது ஒருமுறை பள்ளி மைதானத்தில் விழுந்து அடிபட்டபோது கதறினாய் அல்லவா. அதற்கு காரணம் தமிழா?!!, இல்லை தோழா, அதற்கு காரணம் திராவிடம். ஆம்! திராவிடம் இல்லையென்றால் , உன் தமிழ் அப்பா, தமிழ்த்தாத்தா எல்லாம் தலைவைத்துக் கூடப் போகாத பள்ளிக்கூடத்திற்கு நீ போயிருக்கவே மாட்டாய். உனக்கு அடியும் பட்டிருக்காது ... உன்னை அடிபட வைத்த திராவிடத்தை நாம் விட்டு வைக்க வேண்டுமா?
பள்ளியில் உன்னை அடிபட வைத்தது கூட பரவாயில்லை, தமிழா. உன் பெயர் ஒற்றை வார்த்தையில் இருக்கிறது பார்த்தாயா? நம் தாத்தாக்களின் பெயரெல்லாம் முத்துராமலிங்கத்தேவர், இராமசாமி படையாச்சி, சிவசண்முக நாடார், அழகப்ப செட்டியார், சிவஞானம்பிள்ளை என எவ்வளவு அழகாக நீ......ளமாக இருக்கும் தெரியுமா?
மற்ற இந்தியர்களுக்கெல்லாம் மூகேஷ் பேனர்ஜீ, விஜயலட்சுமி மேனன், சுப்பிரமணியம் குப்தா எனப் பெயர்கள் இருக்கும்போது, உன் பெயரில் மட்டும் ஜாதி இல்லை என்பதால்தான் உன் பேரைக் கேட்டவுடன், "நீ இந்த ஆள்" எனச் சொல்லமுடியவில்லை.
அதனால் உனக்கேற்ற குலத்தொழில் வேலைகளை அரசு எந்திரத்தால் கொடுக்க முடியவில்லை. நம் ஆச்சாரியார் ராஜாஜி (அரசாசி) கொடையளித்த குலக்கல்வியையும் நாசம் செய்துவிட்டது இந்த வஞ்சகத் திராவிடம் இப்படி இருந்தால் குலமும் தொழிலும் எப்படி வளர்ச்சி அடையும்? தமிழரான நாம் எப்படி முன்னேறுவது?
நாம் முன்னேற , நான் தான் நீ. நீதான் நான். நாம் தான் அவர்கள். நீ நடுரோட்டில் அடிபட்டால் ஓடோடி வந்து...... நீ செத்ததை உன் மூக்கின் மேல் விரல் வைத்து 'உறுதி' செய்துகொண்டு பின்னர் மெழுவர்த்தி ஏத்துவேன். "நடுரோட்ல நடக்காதீங்கப்பா," என உனக்கு அட்வைஸ் செய்யும் இனத்துரோகிகளை அடையாளங்கண்டு நீ செத்தபின் உனக்கு காட்டிக்கொடுப்பதுதான் என் தலையாயப்பணி.
எங்கள் அண்ணன் 'ஆக்ஸ் டியோடரண்ட்' விளம்பரம் போல கைகளை கபாலம் வரை உயர்த்திக் கர்ஜிக்கும் போஸ்டர்களில் எல்லாம் உனக்கும் ஓரமாக இடம் இருக்கும். எங்கள் தமிழ்நாஜிக்கட்சியில் வீரவணக்க அணி என்று ஒரு அணியே உண்டு.
வீரவணக்கம் என்றதும் பயப்படாதே, நாம் தான் மற்றவர்களுக்கு வைப்போம். நமக்கு யாரும் வைக்க மாட்டார்கள். நம்முடைய வேலை .காலை எழுந்து முகநூலில் துழாவுவது. நாம் நாஜி ஆட்களில் சிலர் நமக்கு முன்னே எழுந்து ஏதாவது செய்தி போட்டிருப்பார்கள்.
நம்முடைய முதல் எதிரி கருணாநிதி. எந்த சிக்கல் என்றாலும், மாலையில் சாப்பிட்ட பருப்பு, காற்றாக மாறி அடைத்துக்கொண்டாலும் கருணாநிதிதான் எனச் சொல்லு. தமிழர் உரிமைகளை மீட்க அதுதான் ஒரே போராட்ட வழி! உருப்படியாய் ஏதும் செய்யமாட்டீர்களா எனக் கேட்காதே! கேள்வி கேட்பது திராவிடர்களின் ஈனப்பழக்கம்! நாம் தமிழ் நாஜிக்கள்! நமக்கு கேள்வி என்றாலே 'உவ்வ்வ்வே' , கேள்விகளே இல்லாத பாசிச தமிழ்நாட்டை உருவாக்க கேள்விக் கேட்பவர்களை ஒழிக்கவேண்டும் என்றால் அறிவாலயம் ஒழிய வேண்டும். புரிந்துகொள்.
கேள்வி கேட்பவர்களை ஒழிக்க எல்லாம் செலவு ஆகுமே , கவலைப்படாதே , இதெல்லாம் சப்பை மேட்டர். உலகின் பல மூலைகளில் இருக்கும் நாம் நாஜிக்கள் போராளிகளுக்கு உதவுவதில் கைதேர்ந்தவர்கள். புலம்பெயர் ஈழ/இந்திய இளிச்சவாயத் தமிழர்களிடம் ஆயிரக்கணக்கான டாலர்கள் நிதி வசூலித்து சென்னையில் இருக்கும் 'காயம்பட்ட போராளிக்கு செலவு செய்வதில்'... நன்றாக கேட்டுக்கொள், 'சென்னையில் இருக்கும் காயம்பட்ட போராளிகளுக்கு செலவு செய்வதில்' நான் மகா திறமைசாலி. இதற்கு தனி அணியே இயங்குகிறது. நம்மை வழிநடத்தும் அண்ணனுக்கு கல்யாணம் காட்சி என்றால் கூட நம் வசூல் படை டாலர்களைக் குவித்து விடும். அதனால் செலவுகளைப் பற்றி அஞ்சாதே!
பகுத்தறிவு, பெரியார் என்றெல்லாம் பேசிக்கொண்டு திராவிடனாய் திரியாமல், இப்படிப் புகழ்வாய்ந்த எங்கள் நாஜிப்படையுடன் நீ உன்னை இணைத்துக் கொண்டாயானால் சோ.ராமசாமி, சுப்பிரமணிய ஸ்வாமி போன்ற தமிழர்களுடன் இணைந்து தமிழர்களுக்காக வெறித்தனமாக களமாடலாம். ஸ்ட்ராடஜி என்ற பெயரில் நமக்கு பிஸ்கட் போடும் யாரையும் ஆதரிக்கலாம். முக்கியமான விசயம், பங்குனி 16, தமிழர் பழையசோறு நடுவம் போன்ற போலிகளை கண்டு ஏமாந்துவிடாதே. தமிழர்களின் ஒட்டு மொத்த ஏஜென்ட் நாம் மட்டுமே, நாம் தமிழ்நாஜிக்கள். ஹெயில் ஹிட்லர்!! வீரவணக்கம் சவார்க்கர்.
நன்கொடைக்கு :- tamilnazi@paypal.com (Minimum 100$)
Account Number :- LTTE17052009 ,
Branch Name :- முள்ளிவாய்க்கால் முற்றம்
Swift Code :- RAW
-----

Tuesday, April 15, 2014

மோடிக்கு ஆதரவு - தேர்தல் பரப்புரை சிறுகதை (கிளிமூக்கு அரக்கன்)

மோடியை மட்டுமில்லாமல், வேறு யாரோ ஒருத்தரையும் வம்புக்கு இழுத்து  கிளிமூக்கு அரக்கன் எழுதியிருக்கும் தேர்தல் பரப்புரை சிறுகதை. தூற்றலும் போற்றலும் கிளிமூக்கு அரக்கனுக்கே.
--
வெங்கட்ராகவ பஜகோவிந்தம், தனது விலை உயர்ந்த காரை தனது அலுவலகத்திலேயே நிறுத்திவிட்டு , தான் பேசப்போகும் கல்லூரிக்கு ஆட்டோவில் செல்லலாம் என முடிவெடுத்தார். பஜகோவிந்தம், வளர்ந்து வரும் ஓர் அரசியல் விமர்சகர் மற்றும் வியாபாரகாந்தம். அறிவாளியும் கூட. மென்மையான அணுகுமுறையால் நிறைய நண்பர்களையும் சம்பாதித்து வைத்திருப்பவர். அவரிடம் ஒரு பிரச்சினை என்னவெனில் மோடி பிரதமர் ஆகவேண்டும் என அவர் விரும்புவது.
பஜகோவிந்தங்களுக்கு மோடிக்களைப்பிடிப்பது தவறில்லையே என நீங்கள் கேட்பது புரிகின்றது. ஆர் எஸ் எஸ் அறிவு மையத்தின் அங்கம் எனச் சொல்லிக் கேட்பதில் தவறில்லை. நடுநிலைப் போர்வையுடன் கேட்கும்பொழுதுதான் பிரச்சினை. பஜகோவிந்தம் ஓர் ஆட்டோவை நெருங்கினார்.
"சார், யஜூர் வேதாந்த காலேஜுக்குப் போகனும்"
"போயிடலாம் சார்" முகக்களையைப் பார்த்து, அரசாங்க அதிகாரியாக இருக்கக் கூடும் என ஆட்டோடிரைவர் முன்னெச்செரிக்கையாக ஆட்டோ மீட்டரைப்போட்டுவிட்டார்.
பஜகோவிந்தம் எளிய மனிதர்களுடன் இயல்பாகப் பழகுபவர் என்பதாலும் தேர்தல் சீசன் என்பதாலும்
"சார், அப்புறம் இந்த எலக்‌ஷன்ல வோட்டுப்போடுவிங்களா? " இக்கேள்வியைக் கேட்டார்.
"கண்டிப்பா சார்"
"யாருக்கு வோட்டுப்போடப்போறதா ஐடியா"
"மோடின்னு ஒருத்தரு, குஜராத்தை இன்டியாலேயே ஃபர்ஸ்ட் ஸ்டேட்டா மாத்தியிருக்காராம் சார், அவர் பிரதமரா வந்தா வல்லரசு ஆயிடும்னு தினமலர்ல வேற சொல்லியிருக்காங்க, அவருக்குத்தான் என்னோட வோட்டு, என் குடும்பத்தோட வோட்டு"
பஜகோவிந்தம் தனது கையடக்கக் கணினியில் எளியமனிதர்கள் - ஆட்டோ டிரைவர் - மோதி ஆதரவு எனக் குறித்துக் கொண்டார்.
ஏப்ரல் வெயில் வாட்டியதால், கல்லூரிக்கு முன்னமே ஆட்டோவை ஒர் இளநீர் கடைக்கு முன்னர் நிறுத்தச்சொன்னார். ஆட்டோ மீட்டருக்கான காசைக் கொடுத்துவிட்டு, மிச்சத்தை ஆட்டோ டிரைவரை வைத்துக் கொள்ளச் சொன்னார்.
"அம்மா, இரண்டு இளநீ வெட்டுங்க"
"சார், எனக்கு வேண்டாம், இது என் பெரிம்மா கடைதான், சவாரி முடிச்சிட்டு நானே வந்து குடிச்சிக்கிறேன், நீங்க சாப்பிடுங்க சார்" எனச் சொல்லிவிட்டு, ஆட்டோவை பின்பக்கமாகத் தள்ளிக்கொண்டு போனார் ஆட்டோடிரைவர்.
"அம்மா, யாருக்கு வோட்டுப்போடப் போறீங்க"
"மோடின்னு ஒருத்தரு வந்திருக்காரம்ல, பாகிஸ்தானை எல்லாம் ஜெயிப்பாருன்னு , போன தடவை, இந்த காலேஜுக்கு வந்த ஒரு பெரிய அய்யா சொன்னாரு, அதனால இந்தத் தடவை என் வோட்டு மோடிக்குத்தான்"
டிப்ஸாக காசைக் கொடுத்துவிட்டு, இளநீர் கடையம்மா - மோடி ஆதரவு எனக்குறித்துக் கொண்டார்.
நடந்தே வந்த, பஜகோவிந்தத்தின் எளிமையை, சங்கராச்சாரியர்கள் பெரியவர், இளையவர், சிறியவர் படங்கள் நிறைந்த மேடையில் கல்லூரி முதல்வர் வெகுவாகப் புகழ்ந்தார். தனது பேச்சில், பஜகோவிந்தம் " மாணவர்களுக்கு அரசியல் அறிவு முக்கியம் எனச்சொல்லிவிட்டு, அடுத்தப் பிரதமர் யார் எனக்கேட்டார்"
ஒட்டுமொத்த அரங்கமே மோடி என்று அதிர்ந்தது. கல்லூரி நிர்வாகிகள் புளகாங்கிதமடைந்தார்கள். பஜகோவிந்தம் அலுவலகம் திரும்பியவுடன், மோடியை ஆதரிப்பவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள், ஆட்டோ டிரைவர், இளநீர் கடை அம்மா போன்ற எளிய மனிதர்கள் என்ற நடுநிலை கட்டுரையை எழுத ஆரம்பித்தார்.
அதே நேரத்தில், ஆட்டோவின் பின்பக்கம் உதயசூரியன் சின்னம் பொறித்த ஆட்டோடிரைவர் ,
"பெரிம்மா, காலைல, அந்த அய்யரு எலக்‌ஷன்ல யாருக்கு வோட்டுன்னு கேட்டாரு, மோடின்னு சொன்னேன். குஷியாய் இருபது ரூபா எக்ஸ்ட்ரா குடுத்துட்டாரு"
"ஆமான்டா, ராமசாமி, என்னையும் கேட்டுச்சு, அய்யரு காலேஜுக்கு வரவங்களுக்கு என்ன பதில் சொன்னா புடிக்கும்னு எனக்குத் தெரியாதா, நானும் மோடின்னு சொல்லிட்டேன்... எனக்கும் 20 ரூவா எக்ஸ்ட்ரா கொடுத்துச்சு... ஆனால் என் வோட்டு எப்பொவுமே எம்ஜிஆருக்குத்தான்"
யஜூர் வேதாந்த பொறியியல் கல்லூரி மாணவர்கள், தங்களது மடிக்கணினியில் காவி பயங்கரவாதியின் வாக்குமூலம் என்றப்புத்தகத்தை http://nomo4pm.com/book/
தரவிறக்கி ரகசியமாக வாசித்துக் கொண்டிருந்தனர்.

Monday, March 31, 2014

காணாமல் போகின்ற விமானங்கள் - சிறுகதை

சில நாட்கள் முன்பு வரை இந்த செயற்கைக்கோள் தகவல் தொடர்பு சேவைகள் தரும் நிறுவனத்தில்  கடைநிலை பொறியாளன் நான். ஆயிரம் பேர் வேலைப்பார்க்கும் நிறுவனத்தில் நேற்று நான் தான் நாயகன். எனது மேசை முழுவதும் பூங்கொத்துகள். நிறுவனத்தின் தலைமை அதிகாரியுடன் மதிய உணவு. ஊடகவெளிச்சம் என நாள் அமர்க்களப்பட்டது.

காணாமல் போன விமானத்தின் இருப்பிடத்தை, 19 ஆம் நூற்றாண்டு இயற்பியல் விதிக்கணக்கீடுகளின் படி கண்டுபிடித்தவர் என என் பெயருடன் ஒருப்பக்கக் கட்டுரை எல்லா நாளிதழ்களிலும் வந்திருந்தன. டாப்ளர் விளைவைப்பற்றி நீட்டி முழக்கி எழுதியிருந்தனர். நானிருக்கும் சமூகஊடகத்தளத்தில், என்னை அவர்கள் வட்டாரத்தில் சேர்த்துக்கொள்ள ஏகப்பட்ட கோரிக்கைகள். ஆண்களை ஒதுக்கிவிட்டு பெண்களை மட்டும் தேர்ந்தெடுத்தேன்.

டாப்ளர் விளைவு கணக்குகளின் வழியே , விமானத்தின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்ததற்காக மட்டும், தலைமையதிகாரியிடம் இருந்து பாராட்டல்ல.

தலைமை ஆட்களின் மிகப்பெரிய பலம், சாமனியனுடன் சரிக்குசமமாக அமர்ந்து பேசுவது. ஒருநாள் எனது கணினியில் பலூன் சுடும் விளையாட்டை ஆடிக்கொண்டிருக்கையில் எதிரே வந்தமர்ந்தார்.  திடிரென , யாரிடமாவது வந்தமர்ந்து கதை பேசுவது தலைமை அதிகாரியின் வழக்கம். ஊழியர்களிடம் ஆலோசனைக் கேட்பார். சாத்தியமிருந்தால் தொழில்நுட்பரீதியாக நடைமுறைக்குக் கொண்டுவருவார். அப்படியான ஓர் ஆலோசனைதான் விமானங்களில் இணைய வசதி செய்துக்கொடுத்தல்.

"நிறைய விமான சேவைகள் நமது செயற்கைக்கோள் வழி இணையப் பயன்பாட்டு சேவையைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டன, நமக்கு நல்ல வருவாயும் கூட, அடுத்த நிலைக்குக் கொண்டுவர உன்னிடம் ஏதேனும் குறிப்பு உள்ளதா?"

"விமானத்தை, நேரலையாக செயற்கைக்கோளின் மூலம் கண்காணிக்க, நாம் ஒரு சேவையை வழங்கலாம்"  ஒரு கையால் கணினியில் பலூன்களை சுட்டுக்கொண்டே இருந்தேன்.

"நம்மிடம் தயாராக இருக்கின்றது, ஆனால் பொருட்செலவுக்காகவும் அரசியல் காரணங்களுக்காகவும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்"

"சரி, அப்போ நான்கைந்து விமானங்களை சுட்டு வீழ்த்தி காணடித்துவிடலாம்"  எல்லா பலூன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டன.

அதிர்ச்சியில் தலைமை அதிகாரி இருக்கையை விட்டு எழுந்தார். என்னை அவரது கண்ணாடி அறைக்கு அழைத்துச் சென்ற பின்னர்.

" கடைசியாக என்ன சொன்னாய்"

" நான்கைந்து விமானங்களை காணாமல் போகச்செய்துவிட்டு , தேடிக்கொடுப்போம் , நமது செயற்கைக்கோள் நேரலை விமான கண்காணிப்பு சேவையைப் பற்றி பேச வைப்போம். துயரங்களின் வலியின் மூலம் தேவையை உணர்த்துவோம், வியாபாரத்தைப் பெருக்குவோம்"

"அருமை, ஆனால் எப்படி செய்வது. நமது அரசாங்கம் ஒப்புக்கொள்ளதே?, விசயம் தெரிந்தால் ஒட்டு மொத்த நிறுவனமும் நொடியில் காணாமல் போய்விடும்"

"விமானத்தை திருப்ப ஓருவர், அதை இறக்க ஓரிடம் இவ்வளவுதான் தேவை"

"சரி, விமானிகளில் ஒருவரை சரி செய்துவிடலாம். விமானத்தை எப்படி காணடிப்பது"

"சுனாமிக்குப் பிறகு இந்தியப்பெருங்கடலின் தெற்கில் ஏகப்பட்ட தீவுகள் புதிதாய் உருவாகி இருக்கின்றன. உங்களுக்கேத் தெரியும் அவற்றை எல்லாம் நமது செயற்கைக்கோள் படங்களில் மறைத்துவிடுகின்றோம்  சிலவற்றில் இலங்கையில் போரில் தோற்ற தமிழ்ப்போராளிகள் கூட இருக்கின்றனர் எனச்சொல்லுகின்றனர். ஏதேனும் ஒரு தீவில் அரைகுறையாய் விமான ஓடுதளம் அமைக்க வைப்போம். அதில் ஏதேனும் ஒன்றில் கொண்டுபோய் சொருகவைத்துவிடலாம். பழியை அவர்கள் மேல் போட்டுவிடலாம்"

"உலகம் நம்புமா"

"நம்ப வைக்க செலவு ஆகும் அவ்வளவுதான்"

உலகத்தை நம்பவைக்க கொஞ்சம் செலவு செய்யப்பட்டது. சரிகட்டப்பட்ட விமானி , விமானத்தை இந்தியப்பெருங்கடல் நாங்கள் சொல்லியிருந்த அட்சரேகை தீர்க்கரேகை தீவின் பாதி கட்டமைக்கப்பட்ட ஓடுதளம் ஒன்றில் சொருகினார். தப்பித்தவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  டாப்ளர் விளைவு கணக்கில் கண்டுபிடித்தோம் என சப்பைக்கட்டு கட்டினோம்.

மூன்றாவது நாளே அரசாங்கம் எங்களது சதியைக் கண்டுபிடித்துவிட்டது, அமெரிக்காவே ஒரு நிறுவனம்தானே,,,, லாபங்களை சொல்லுகையில் சமாதானம் ஆனது.  எங்களது விமானங்களை செயற்கைக்கோள் வழியாக நேரலையில் கண்காணிப்பு செய்யும் சேவைப்பற்றி ஊடகங்களில் அரசாங்கமே பேசவைத்தது.  விமான நிறுவனங்கள் எங்களது சேவையைப் பெருமளவில் பெற்றுக்கொள்ளும் என உறுதியாகிவிட்ட மகிழ்ச்சியில்தான் நான் நேற்று நான் நாயகன் ஆக்கப்பட்டேன்.

அதன் கொண்டாட்டத் தொடர்ச்சியாக என்னை மகிழ்விக்கும் விதமாக இன்று இதோ நான் சுவீடனுக்கு அலுவலக செலவில் அனுப்பப்படுகின்றேன். தங்கநிறக்கூந்தல் அழகிகள்... ஸ்டாக்ஹோல்ம் தீவுக்கூட்டங்கள் , ஸ்கேன்டிநேவியா என்ற கனவில் மிதந்து கொண்டிருந்தேன்.

ஒவ்வோர் அமெரிக்கனுக்கும் ஸ்கேன்டிநேவியா போகவேண்டும் என்பது கனவு. ஒவ்வொரு ஸ்கேன்டிநேவியனுக்கும் அமெரிக்க வரவேண்டும் என்பது கனவு. விமானம் பறந்தது. அமெரிக்கனாக இன்னும் ஏழெட்டு மணி நேரங்களில் எனது ஸ்கேன்டிநேவிய கொண்டாட்டக் கனவு நிறைவேறிவிடும் என நினைக்கையில், மூச்சு முட்டியது, செங்குத்தாக பூமிக்குள் சொருகுவதைப்போன்ற உணர்வு. நாளை செய்திகளில் மற்றுமோர் விமானம் அட்லாண்டிக் கடலில் காணாமல் போனது என நீங்கள் படிக்கலாம். 

Monday, March 24, 2014

ஒரு குட்டிக்கதை - கொஞ்சூண்டு திகில் இருக்கலாம்

'டாக்டர், என் பேர் கீர்த்தனா, ஐடி ல வொர்க் பண்றேன்'
'சொல்லுங்க கீர்த்தனா , என்ன பிராப்ளம்'
'இப்பொவெல்லாம் நடுராத்திரில காதுக்குள்ள டைப்படிக்கிற சத்தம் கேட்டு தூக்கம் கலையுது டாக்டர்'
'காலையிலேந்து , கம்ப்யூட்டர், லேப்டாப் என டைப்பிங் என்விரான்மென்ட்ல இருப்பதுனால அந்த பிரமையிருக்கலாம்'
'பர்ஸ்ட் நானும் அப்படித்தான் நினைச்சேன் டாக்டர், பட் இது நிறைய கம்ப்யூட்டர்ஸ் ல அடிக்கிற டைப்பிங் சவுன்ட் கிடையாது, ஒரு கம்ப்யூட்டர்ல பொறுமையா பத்து கீஸ்ட்ரோக்ஸ் அடிச்சா இருக்குமே அப்படி கேட்குது, அப்புறமா நின்னுடுது'
'பகல்ல இதுமாதிரி கேட்டிருக்கா'
'வீக்டேஸ்ல தெரியல டாக்டர், வீக் என்ட்ஸ்ல , காதுக்குள்ள டைப்படிக்கிறமாதிரி கேட்டிருக்கு, இதோ இப்பக்கூட கேட்குது டாக்டர்'
பல மைல்கள் தொலைவில், அமெரிக்காவின் ஒரு மூலையில் , விடிந்ததும் விடியாததுமாய் கார்த்தி, தனது மின்னஞ்சலுக்கான பாஸ்வேர்டை அடிக்க ஆரம்பித்தான்.  Keerthanaa

Sunday, March 16, 2014

First Spaceship on Venus - அணு உலை எதிர்ப்பாளர்கள் நிச்சயம் பார்க்கவேண்டிய திரைப்படம்


First Spaceship on Venus, அணுசக்தி பேரழிவான ஒன்று என்ற கருத்தைத் தாங்கி வந்திருந்த படம் இது. 1960 ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம், முன்னாள் சோவியத் யூனியன் நண்பர்களான பழைய கிழக்கு ஜெர்மனி - போலாந்து கூட்டுத் தயாரிப்பாக வெளிவந்தது. சோவியத் சம்பந்தபட்ட / அமெரிக்க எதிர்ப்பு சமாச்சாரங்கள் நீக்கப்பட்டு ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு அமெரிக்காவிலும் வெளியானது.

கோபி பாலைவனத்தில் கண்டெடுக்கப்படும் ஓர் அன்னியமான பொருள், 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சைபீரியாவின் மேல் வெடித்த விண்கலத்தின் துண்டு என அறியப்படுகின்றது. அதில் சூசகமாகப்பொதிந்து இருக்கும் ஆனால் பாதி மட்டுமே கண்டுபிடிக்க முடிந்த எலக்ட்ரானிக் தகவலின் வழியாக வெள்ளி கோளில் உயிரினங்கள் இருப்பதாக அறிகின்றனர்.

சோவியத் யூனியன் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப தயார் செய்து வைத்திருந்த விண்கலம், வெள்ளிக்கு அனுப்ப முடிவு செய்யப்படுகின்றது. வெள்ளி கிரகத்தை அடையும் முன்னர், விண்கலத்தில் இருக்கும் இந்திய கணிதப்பேராசிரியர் , அன்னியமான அந்த காஸ்மிக் பொருளில் பொதிந்து இருக்கும் மிஞ்சிய தகவலையும் கண்டறிகின்றார். வெள்ளிகிரக வாசிகள் , பூமியை அணுஆயுதங்கள் தாங்கிய விண்கலம் கொண்டு தாக்க முடிவு செய்துள்ளனர் என்பதுதான் அது.
வெள்ளி கிரகத்தை அடையும் விண்கலம், அங்கு உயிரினங்கள் யாருமில்லாதது கண்டு வியப்படைகின்றனர். பூமியைத் தாக்க அனுப்பப்படவேண்டிய அணு ஆயுதங்கள் அடங்கிய விண்கலத்தையும் கண்டுபிடிக்கின்றனர். முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழ்கின்றது. வெள்ளி வாழ் மக்கள் , அக்கிரகத்தில் ஏற்பட்ட அணு ஆயுதப்போர்கள், அணு உலை விபத்துகள் ஆகியவற்றினால் ஒட்டுமொத்தமாக ஏற்கனவே அழிந்துப்போய் விட்டனர். ஆனால் அவர்கள் பூமியைத் தாக்க உருவாக்கிய அணு ஆயுத கலம் , சில பூச்சி வடிவ எந்திரங்கள் , மின்சார கட்ட்மானங்கள் மட்டும் இன்னும் உயிர்ப்புடன் இருக்கின்றன. கதிரியக்க வீச்சு, எதிர்மறை ஈர்ப்பு விசை இவற்றில் இருந்து விஞ்ஞானிகள் எப்படி தப்பித்து வெள்ளிக்கிரகத்தில் இருந்து மீண்டும் பூமிக்கு திரும்புகின்றனர் என்பதுதான் கிளைமேக்ஸ்.

சோவியத் காலத்தில் இந்தியா நண்பன் என்பதால் கதையில் இந்திய விஞ்ஞானி பாத்திரம் முக்கியமானதாக இருக்கின்றது.

படத்தில் வரும் இந்திய ஆண் கதாபாத்திரங்கள் நேரு குல்லா அதாவது தற்கால ஆம் ஆத்மி குல்லா அணிந்திருக்கின்றனர். தமிழ்நாட்டில், முக்கிய அணு உலை எதிர்ப்பாளர்கள் கூட ஆம் ஆத்மி குல்லாகாரர்கள்தான் 

ஹிரோசிமா, நாகாசகி அழிவுப்பற்றிய குறிப்புகள் மொழியாக்கம் செய்யப்பட்ட ஆங்கிலப்பதிப்பில் நீக்கப்பட்டிருக்கின்றன.

அணுசக்தி/உலைகள் எதிர்ப்புக்குழுவினர் , இப்படத்தின் உரிமம் வாங்கி தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டு தங்களது பரப்புரைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

படத்தின் சுவாரசியத்திற்காக , நீங்கள் அணுசக்தி ஆதரவாளராக இருந்தால் கூட இப்படத்தை நிச்சயம் பார்க்கலாம். நான் அப்படித்தான் பார்த்தேன்.

படத்திற்கான சுட்டி https://www.youtube.com/watch?v=n7V9QbF8QxI#aid=P-0hfh2pGwU

Wednesday, February 26, 2014

ஆபாசமில்லா ஒருப்பக்க செக்ஸ் கதை - எழுதியவர் கிளிமூக்கு அரக்கன்

'என்னங்க , இன்னக்கும் மானேஜர் அசிங்கமாப் பேசுறான், நடந்துக்கிறான்' பொறிந்து கொண்டே கீர்த்தனா வீட்டிற்குள் நுழைந்தாள். 

அவளுடைய மானேஜர் திருவேங்கடத்திற்கு கீர்த்தனா மேல் நீண்ட நாட்களாகவே ஒரு கண். கீர்த்தனா அந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து மூன்று மாதங்களில் , மனேஜரின் இடுப்பைக் கிள்ளுதல், பின்னால் தட்டுதல் போன்ற சில்மிஷங்களைப் பற்றி நான்காவது தடவையாக என்னிடம் சொல்லுகின்றாள். இந்த மாதிரியான பிரச்சினைகளை வீட்டிற்குக் கொண்டு வரும்பொழுது, குடும்பப் பெண்களை வசைபாடுவதை விட, நேரிடையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மறுநாள் கீர்த்தனாவுடன் அவளின் அலுவலகத்திற்கு சென்றேன். 

"வாங்கோ வாங்கோ' என வரவேற்ற அடுத்த நொடி திருவேங்கடத்தின் மூக்கில் குத்தினேன். மனிதர்களுக்கு உச்சக்கட்ட கோபத்தை ஊட்ட வேண்டும் என்றால் மூக்கில் குத்தவேண்டும். அதிகபட்ச வலியைத் தரவேண்டும் எனில் அடிவயிற்றில் ஓர் உதை விட வேண்டும். உதையும் விட்டேன். கீர்த்தனா தடுக்கவில்லை என்பதால் தொடர்ந்து அடித்துக் கொண்டே இருந்தேன். மற்ற ஊழியர்கள் ஓடி வர, நான் விலக்கப்பட்டு திருவேங்கடத்திற்கு முதலுதவி செய்யப்பட்டது. இதற்கிடையில் திருவேங்கடத்தின் அடிப்பொடிகள் யாரோ போலிஸிற்கு தகவல் அனுப்ப அந்தப்பகுதி இன்ஸ்பெக்டர் வந்து சேர்ந்தார். இந்த இன்ஸ்பெக்டரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றேன். அதனால்தான் அலுவலகத்திற்கு வந்து அடிக்கவேண்டும் என்ற திட்டத்தையேப்போட்டேன். 

இன்ஸ்பெக்டர் வந்தார். நான் இன்னாருடைய கணவன் , இந்த அலுவலகம் இல்லை என திருவேங்கடத்தின் அடிப்பொடிகள் சொல்ல, இன்ஸ்பெக்டர் என்னிடம் திரும்பி

' என்ன சார் பிரச்சினை, ஏன் இப்படி மிருகத்தனமா பிஹேவ் பண்றீங்க'

'படுக்கக் கூப்பிடுறான் சார்' 

'சார், பொண்ணுங்களை வேலைக்கு அனுப்பிச்சா , இப்படித்தான் பிரச்சினை எல்லாம் வரும். உங்க வைஃப் கிட்ட பிரச்சினை செஞ்சாருன்னா, வேலைக்கு அனுப்பாமல் பீரோல பூட்டி வச்சுக்கனும் சார்' 

மூக்கில் ரத்தம் வடிந்தாலும், திருவேங்கடத்தின் முகத்தில் சிரிப்பு. திருவேங்கடத்தை முறைத்துவிட்டு 

'இல்லை இன்ஸ்பெக்டர், இவன் என் மனைவியைப் படுக்கக் கூப்பிடவில்லை, அவளைக் கூப்பிட்டு இருந்தால், அவளே இவனை நறுக்கி இருப்பாள், பிரச்சினை இவன் என்னைப் படுக்கக் கூப்பிடுகின்றான், என்னை இவன் கெஸ்ட் ஹவுஸிற்கு வரச்சொல்லி, தினமும் என் மனைவியிடம் தகவல் சொல்லி அனுப்புகின்றான்' 

மிடுக்கான இன்ஸ்பெக்டரின் உடல் நளினம் சட்டென மாறியது. திருவேங்கடத்தை கிறக்கத்துடன் பார்த்தார். 

'மிஸ்டர், நீங்க போலிஸ் ஸ்டேஷன் வரை வந்துட்டுப்போங்க ' என அவர் திருவேங்கடத்தை போலிஸ் ஜீப்பில் ஏற்றிக்கொண்டார். வண்டியில் அமர்ந்த படி 
"ஓரினச்சேர்க்கை எல்லாம் உணர்வு ரீதியான விசயம், அவர்களைப்புரிந்து கொள்ள நம் சமுதாயம் தயாராகவில்லை" என்ற அறிவுரைக்குப்பின்னர் என்னை வன்முறையில் இறங்கவேண்டாம் என எச்சரித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார். திருவேங்கடத்தின் கண்களில் தெரிந்த பயம் கீர்த்தனாவின் கண்களில் மகிழ்ச்சியாய் பிரதிபலித்தது.
-----
கிளிமூக்கு அரக்கன் பக்கத்தை வாசிக்க - https://www.facebook.com/kilimookku 

Saturday, February 15, 2014

பாலுமகேந்திரா என்ற நாயகனும் அவரின் நாயகிகளும் - சிறுகுறிப்பு

ஒவ்வொரு இயக்குநரும் தங்களுக்கென்று ஒரு மைதானத்தை  வைத்திருப்பார்கள். அங்கு அவர்கள் களமிறங்கினால் அடிப்பொளிதான். பாலுமகேந்திராவிற்கு 'ஓர் ஆண் - இரண்டு பெண்கள் - காதல்' இதுதான் அந்தக்களம். சமூகம் அங்கீகரிக்கும் ஒரு காதல், அதைத் தாண்டி சமூகம் முகம் சுளிக்கும் இன்னொரு காதல் , இந்தப் பிரச்சினையை எப்படி நாயகன் சமாளிக்கின்றான் என்பதை  வெவ்வேறு காலக்கட்டங்களில் தான் விரும்பிய முடிவுகளுடன் கோகிலா, ஓலங்கள், இரட்டைவால் குருவி, மறுபடியும், சதிலீலாவதி, ஜூலி கணபதி என வரிசையாக படம் எடுத்தவர் இயக்குநர் பாலுமகேந்திரா.

கோகிலா :-  காதலன் - காதலி, காதலனுக்கு வேறொரு பெண்ணுடன் விபத்தாக தொடர்பு , புதியவள் கர்ப்பமடைகின்றாள் காதலன் புதிய பெண்ணுடன் வாழ்க்கையைத் தொடங்குகின்றான்.

ஓலங்கள்:- கணவன் - மனைவி , கணவனின் முந்தையக் காதல் குழந்தையின் ரூபத்தில் வாழ்க்கையில் வருகின்றது, எப்படி நாயகன் சமாளிக்கின்றான்.

இரட்டைவால் குருவி :- கணவன் - இரண்டு மனைவிகள். இறுதியில் இரண்டு மனைவிகளும் சமாதானமாக ஒரே குடும்பமாக கணவனுடன் தத்தமது குழந்தைகளுடனும் வாழ்வதாக படம் முடியும்.

மறுபடியும் :-  பத்தாண்டுகள் பழைய ,   மகேஷ் பட் தன் வாழ்வின் ஒரு பகுதியை கதையாக எடுத்திருந்தஅர்த் எனும் இந்திப்படத்தைத் தூசித்தட்டி மறு உருவாக்கம் செய்த படம். பாலுமகேந்திராவின் வாழ்க்கைக்கு நெருக்கமான படம் என்றும் சொல்வார்கள். இயக்குநர் - மனைவி - புதிதாய் வந்த நடிகை. என்ன ஆகின்றது என்பதுதான் கதை.  பாலுமகேந்திராவை அறிந்தவர்களுக்கு 'மறுபடியும்' என்ற பெயரே கதையைச் சொல்லிவிடும்.

சதிலீலாவதி :-  கணவன் - மனைவி - குழந்தைகள், புதிதாய் வரும் பெண்.  புதிதாய் வரும் பெண் தனது பழையக் காதலனுடன் போய்விட,  கணவன் மனைவி மீண்டும் ஒன்று சேர்ந்துவிடுவார்கள்.

ஜூலிகணபதி :- மணமான எழுத்தாளன் மேல் எழுத்தின் மேல் மையல் கொண்டு அவனை சிறைப்பிடித்து வைத்திருக்கும் பெண். அவளிடம் இருந்து நாயக எழுத்தாளன் எப்படி தப்பிக்கின்றான்.

மேற்சொன்ன படங்களில் முடிவுகள் வெவ்வேறாக இருந்தாலும் மைய இழை,  ஒரே சமயத்தில் இரண்டு பெண்களிடம் சிக்கிக் கொண்டு தவிக்கும் ஓர் ஆணின் மனப்போராட்டம்தான்.  தனது படைப்புகளுக்கும் தன் வாழ்க்கைக்கும் பெரிய இடைவெளிகளை வைக்காதவன் கலைஞன். அவ்வகையில் தன்னுடைய போராட்டங்களையே கதைகளாக்கி திரையில் ஓவியமாக்கி , தனது இயல்வாழ்க்கை  எதிர்பார்ப்புகளை திரை முடிவுகளாக பரிசோதித்து இருக்கின்றாரோ என அடிக்கடித்தோன்றும்.

பாலு மகேந்திரா என்ற மனிதனைத் தெரிந்து கொள்ள இந்தப்படங்களைப் பார்த்தாலே போதுமானதோ !!

பிகாசோ சொன்னபடி, தனது படைப்புகளில் தன் வாழ்க்கையை ஒளித்துவைத்திருப்பவன் தான் மிகச்சிறந்த கலைஞன். பாலுமகேந்திரா பிகாசோ வகைக் கலைஞன்.

Friday, February 14, 2014

அம்முவின் அப்பா - காதலர் தின சிறப்பு சிறுகதை

சென்ற ஆண்டு இதைப் பற்றி நான் யோசித்ததுக் கூட இல்லை. போன வருடம் வரை, என் மகள்அம்மு இங்கு வீட்டில் இருந்து கல்லூரி போய் படித்துக் கொண்டிருந்தாள். படிப்பு முடிந்து போன செப்டம்பரில் இருந்து வேலை நிமித்தமாக  சென்னைவாசியாகிவிட்டாள். சமீபத்தில் வேறு அடிக்கடி கார்த்தி என்ற பையனைப் பற்றி  அடிக்கடி பேசுகின்றாள்.  பழக்கம் பத்து நாட்கள், நட்பு நாற்பது நாட்கள் என ஐம்பதே நாட்களில் காதல் பூத்துவிடலாம். இன்னும் சில தினங்களில் காதலர் தினம் வேறு வருகின்றது.

காதலுக்கும் பயமில்லை, காதலர் தினத்தன்று ஊர்ச்சுற்றுவாளோ என்ற கெட்ட எண்ணமும் இல்லை. நானே காதல் திருமணம் செய்து கொண்டவன் தான்.  என்னுடைய ஒரே பயம், காதலர் தினத்தன்று ஊர்ச்சுற்றிக்கொண்டிருக்கும் ரவுடிகள் தான். முன்பெல்லாம் ரவுடிகள் என்றால் கைலிகள் கட்டி இருப்பார்க்கள், மீசை வைத்திருப்பார்கள், மரு இருக்கும். கண்களில் சிவப்பு நிறம் கொப்பளிக்கும். இப்பொழுது ரவுடிகள், காவித்துண்டு அணிந்து இருக்கின்றார்கள் அல்லது குல்லா வைத்திருக்கின்றார்கள். முன்பெல்லாம் ரவுடிகள் சென்னைத்தமிழ் அல்லது சேரித்தமிழ் பேசுவார்கள். இப்பொழுதெல்லாம் ரவுடிகள் சமஸ்கிருதம், அரபி எல்லாம் பேசுகின்றார்கள், சமயங்களில் ஆங்கிலமும்....

பிப்ரவரி 14, வெள்ளியன்று வருகின்றது, நானும் அம்முவின் அம்மாவும், அப்படியே வார இறுதிக்கு சென்னை வருவதைப்போல போய், பாதுகாப்பாக அவளுடன் இருந்துவிடலாமா...

ச்சே... கருமாந்திரம் பிடித்தவர்களுக்காக, ஏன் என் மனம் இப்படி எல்லாம் யோசிக்கின்றது.   என் பிள்ளைக்கு அத்தனை சுதந்திர எண்ணங்களையும் விதைத்து வளர்த்து இருக்கின்றேன். அவளுக்குத் தெரியாததா... ஒருவேளை கார்த்தியைக் காதலித்தால் அம்முவின் முதல் நண்பனான என்னிடம் சொல்லாமலா இருப்பாள் , ஒருவேளை பிறகு சொல்லிக் கொள்ளலாம் என இருந்தாலும்  வாலன்டைன்ஸ் தினத்தன்று கொண்டாடிவிட்டுத்தான் போகட்டுமே...

விடியற்காலையில் கெட்ட கனவு,  நாங்கள் வெறும் நண்பர்கள் என்று சொல்ல சொல்ல, கார்த்தியையும் அம்முவையும் இரண்டு வகையான ரவுடிகளும் அடிக்கின்றனர். கனவு கலைந்து  எழுந்து செய்தித்தாளைப் படித்தால், கடற்கரை வரும் காதலர்களை விரட்டுவோம் என கூட்டாக ரவுடிகள் பேட்டிக்கொடுத்து இருந்தனர்.

பிப்ரவரி 14 ஆம் தேதியன்று அம்முவிற்கு உடம்புக்கு சரியில்லாமல் போய் அவள் விடுதியிலே இருந்துவிடவேண்டும் என அபத்தமாய் மனம் யோசித்தது.  அம்முவோட அம்மாவிற்கு உடம்புக்கு சரியில்லை, உடனே கிளம்பி வா, என சொல்லி வரவழைக்கலாம் , ஆனால் என் மகளிடம் இதுவரை பொய் சொன்னது இல்லையே ....

கவலைகள், குழப்பங்கள், சஞ்சலங்கள், சங்கடங்கள் அனைத்தின் எரிச்சலையும் அம்முவின் அம்மாவிடமே காட்டினேன். காரணங்களைக் கேட்கவில்லை. வழக்கம்போல சகித்துக் கொண்டிருப்பாளாய் இருக்கும்.  காதலின் மற்றொருவடிவம் சகிப்புத்தன்மை.

பிப்ரவரி 14 , காலையில் வெகுசீக்கிரம் அலுவலகம்  வந்துவிட்டேன். அம்முவின் கைப்பேசிக்கு அழைக்கலாமா... ச்சே வேண்டாம் ..அநாகரிகம்... எந்தக்காலத்திலும் அம்முவிற்கும் எனக்குமான அந்த நட்பை , அப்பா என்ற அதிகாரத்தால் பிடுங்கி எறியக்கூடாது என நினைத்துக் கொண்டிருக்கையில். அம்முவிடம் இருந்தே அழைப்பு....

"மிஸ்டர், சுப்ரமணி, கொஞ்சம் வீட்டிற்கு வரமுடியுமா?" அம்மு உற்சாகமாய் இருந்தால் என்பெயரைச் சொல்லித்தான் அழைப்பாள்.  என் நிறுவனம் என் உரிமை என யாருடனும் சொல்லிக்கொள்ளாமல், வீட்டிற்கு விரைந்தேன்.

"மிஸ்டர் சுப்ரமணி, வேலன்டைன்ஸ் டே அன்னக்கி , நான் காதலிப்பதை, என் அப்பா அம்மாகிட்ட தான் சொல்லனும்னுதான் திடீர்னு கிளம்பி வந்தேன்"

"சொல்லுடாமா ..."

" கார்த்தின்னு சொன்னேன்ல, அந்த பையன் தான், பிடிச்சிருந்துச்சு,  பேசிக்கிட்டோம், அவங்கவீட்டுல அவன் இன்னைக்கி தகவல் சொல்லிடுவான், நான் இங்க வந்து சொல்லிட்டு இருக்கேன்"

அனுமதி என்றில்லாமல், தகவல் என்ற பொருளில் அவள் சொல்லுவது எனக்குப்பிடித்து இருந்தது. ஒரு பெண் குழந்தைக்கான பரிபூரண சுதந்திரத்தை என் மகள் முழுமையாக்கிக் கொண்டு இருக்கிறாள்.

இடையில் கார்த்தியின் பெற்றோரிடம் இருந்து எங்களுக்கு தொலைப்பேசி அழைப்பு வந்தது. பேசினோம். நல்ல நாளில் எல்லாம் நல்லபடியாக அமைந்தது.

இரவு மொட்டை மாடியில், விளையாட்டாய் அம்முவிடம்

"அம்முக்குட்டி, வாலன்டைன்ஸ்டே அன்னக்கி பொதுவா லவ்வர்ஸ் ஊர்தானே சுத்துவாங்க,,,, நீங்க இரண்டு பேரும் எப்படி இப்படி டிசைட் பண்ணீங்க"

".. பிப்ரவரி 14 அன்னைக்கு ரவுடிங்க தொல்லை தாங்க முடியாது, அதனால நாங்க இரண்டு நாளைக்கு முன்னமே வேலன்டைன்ஸ் டே கொண்டாடிட்டோம்."

Sunday, February 09, 2014

ஓர் அனுபவமும் யுவன் சங்கர் ராஜாவும்

பிடிப்பு ஏதேனும் சிக்காதா , தத்தளித்துக் கொண்டிருக்கும் நடுக்கடலில் இருந்து தப்பிக்கமாட்டோமா , என ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு காலக்கட்டம் வரும். அப்படியான ஒரு காலக்கட்டம் எனக்கும் வந்தது. எதைத் தின்னால் பித்தம் தெளியும், சீக்கிரம் தெளியும் என்று மந்திரிச்சுவிட்டபடி இருந்த காலக்கட்டம். அந்த சமயத்தில்தான் என் கல்லூரி சீனியர் அரவிந்த்ராஜேஷ் தமிழ்மணி அவர்களை நீண்டகாலம் கழித்து சந்தித்தேன். பண்ணையாரும் பத்மினி படத்தில் வரும் சிறுவர்களைப்போல நானும் கார் பிரியன். அதுவும் முன் சீட்டில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்தபடி போகவேண்டும் என ஆசைப்படுபவன். காரில் வந்தார், முன் சீட்டில் அமரவைத்தார், சோறு வாங்கிக் கொடுத்தார். வயிற்றுக்கு ஈயப்பட்டப்பின், பவுலோ கோயல்ஹோ எழுதிய The Alchemist என்ற புத்தகத்தை வாங்கித்தந்தார். ஒரே இரவில் ஒரே மூச்சில் படித்து முடித்தேன். பித்தம் தெளிந்தது. கரை சேர்ந்ததாக உணர்ந்தேன். அல்கெமிஸ்ட் புத்தகத்தைவிட சிறப்பான புத்தகங்களை எல்லாம் அதன் பின்னர் மற்ற நண்பர்கள் பரிந்துரைக்க படித்திருக்கின்றேன். ஆனால் எப்பொழுது எல்லாம் தத்தளிக்கும் தருணங்கள் வருகின்றனவோ அப்பொழுதெல்லாம் அல்கெமிஸ்ட் புத்தக்கத்தை மனம் தேடும். ஒருவேளை அல்கெமிஸ்ட் படித்தவர்களைக் கொண்டு ஒரு மதம் உருவாக்கப்பட்டு, பவுலோ கோயல்ஹோ தூதராக அறிவிக்கப்பட்டு இருந்தால் ரசவாத மதத்தில் வினையூக்கியாக சேர்ந்து இருப்பேன். இன்றும் நண்பர்கள், வாசகர்கள், தோழிகள் தடுமாற்றத்தில் இருக்கும் சமயங்களில் நான் பரிந்துரைக்கும் முதல் புத்தகம் அல்கெமிஸ்ட்.

மனம் பிடிப்பற்ற சூழலில் இருக்கையில் பிடிப்பாய் ஒரு கருவி கிடைக்கையில் கருவியின் தாசனாய் மாறிப்போவது சமயங்களில் தவிர்க்கமுடியாது. ஒருவேளை கருவி இல்லாவிடின் கிடைக்காவிடின் அழிந்துபோய் விடக்கூட வாய்ப்பு அதிகம். யுவன் சங்கர் ராஜாவிற்கும் அத்தகைய சூழல் ஏற்பட்டு இருக்கக்கூடும். திருக்குரான் புத்தகம் வாழ்க்கையில் அவருக்கு மிகுதியான பிடிப்பையும், இழந்த நம்பிக்கையை மீட்டு எடுத்துக் கொடுத்து இருக்கலாம். தன்னை இழக்க விரும்பாத யுவ-ராஜா தாசன் ஆகலாம். தவறில்லை.

யுவன் சங்கர் ராஜா வாக இருந்தாலும் சரி, அவர் யூனுஸ் அப்துல்லாவாக மாறினாலும் அவரின் இசை ஒன்றுதான். மீட்டப்படும் வீணைக்கு விரல்கள்தான் முக்கியம். விரல்களுக்கான உடல், என்ன ஆடை போட்டுஇருக்கின்றது பார்ப்பதில்லை. இசை என்னும் இயற்கை அவதாரத்தின் தூதுவன் யுவன் சங்கர் ராஜாவிற்கும் அவரின் புதுத்தத்துவ வாழ்க்கைக்கும் வாழ்த்துகள்.

Saturday, February 08, 2014

520 ஈரோ - சிறுகதை

"இந்த மாசம் கொஞ்சம் எக்ஸ்ட்ரா பணம் அனுப்ப முடியுமா" என்ற அப்பாவின் மென்மையான வேண்டுகோளும்
"எவ்வளவு நாள்தான்டா கார்த்தி படிச்சிக்கிட்டே இருப்ப, சீக்கிரம் வேலைக்குபோடா" என்ற அம்மாவின் புலம்பலும்  காதில் இருந்து அகன்றுவிட்டாலும் இன்னும்   மனதில் எதிரொலித்துக் கொண்டே இருந்தன.

நான் ஆராய்ச்சிப்படிப்பு மாணவன்.  ஆராய்ச்சிப்படிப்பிற்கு என் நிறுவனம் தரும் 1000 ஈரோ , வீட்டிற்கு அனுப்ப 500 எனக்கு ஐநூறு என சரியாகப் போய்விடுகின்றது.  நான் ஊர்ச்சுற்ற, வெளிநிறுவனத்திற்கு , மாதத்தில்  நான்கு ஐந்து நாட்கள் மென்பொருள் நிரலி அடித்து கொடுத்தால் இருநூறு முன்னூறு தேறும். பத்து நாட்கள் செய்ய வேண்டிய வேலையை, மாட்டினான்டா மங்குனிசாமி என, இரண்டே நாட்களில் செய்யச் சொல்வார்கள்.  எல்லா மாதங்களிலும் இந்த வேலை கிடைக்காது. வேலை இல்லாத மாதங்களில்  Running Royal Life Only On Photos என முன்பு எடுத்த சுற்றுப்பயண போட்டோக்களை பேஸ்புக்கில் போடுவதோ அல்லது இப்படி இந்த பிரஸ்காட்டி மலை மேல் உட்கார்ந்து தூரத்தில் ரோம் நகரைப் பார்ப்பதிலோ நேரம் போகும்.

 வெப்பமண்டல தமிழ் நாட்டுக்காரன் ஆன எனக்கு ஐரோப்பாவில்  மழைப்பிடிக்கும். குளிர்காலத்தில் மழை பெய்தால் தட்பவெப்பம் சுழியத்திற்கு மேல் இருக்கின்றது எனப்பொருள். மேலும் மேகமூட்டம் வெப்பத்தை வெளியிடாமல் காத்து வைத்திருக்க , குளிர் வாட்டாது. ஆதலால் மனம் மழைக்கு ஏங்கும். இரண்டு நாட்கள் மழை அடித்து ஓய்ந்து இன்றுதான் கதிரவனின் வெளிச்சம் வந்து இருப்பதால் இந்தக் குட்டி மலை நகரத்தின் தெருக்களில் நல்ல சன நெருக்கடி.  காப்பிக்கடைகள் இன்று களை கட்டின. மதியம் வந்ததில் இருந்து மூன்று காப்பிசினோ வகை காப்பிகள் குடித்தாகிற்று.  வெளிச்சம் மறைய வெப்பம்  குறைய  குளிர் என்னை வாட்டியது.  பசி இருந்தால் குளிர் அதிகமாக தெரியும்.  பசியுடன் வருத்தமும் சேர்ந்து கொண்டதால் மென்குளிர் நடுக்கக் குளிராக எனக்குத் தெரிந்தது.

மேலதிகமாக பணம் அனுப்பவில்லை என்றாலும் அப்பா சமாளித்துக்கொள்வார். ஆனால் அனுப்பினால் உதவியாக இருக்கும், யாரிடம் கேட்பது என்ற யோசனையை ஒரே இடத்தில் இருந்தபடி அசைபோடுவது அயற்சியாய் இருந்தது. இரண்டு கொண்டை ஊசி வளைவுகளை கடந்து  கீழேப்போய் ரயில் நிலையத்தில் அமர்ந்து ரயிலை வேடிக்கைப் பார்த்தபடி யோசிக்கலாம். ரயிலும் ரயில் நிலையங்களும் பல சமயங்களில் எனக்கு போதிமரம்.

சாலையின் ஓரமாக வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த கார்களை ஒன்று இரண்டு என எண்ணிக்கொண்டே, பத்தாவது கார் இருந்த பெஞ்சில் ஒரு தாத்தா உட்கார்ந்திருந்ததால் அவரைக் கடந்து  இருபதாவது கார் அருகே இருந்த மரப்பெஞ்சில் அமர்ந்தேன். ரயில் நிலையத்திற்கு இன்னும் சில கார்களை எண்ணவேண்டும்.

 அந்த தாத்தாவுடன் உட்கார்ந்து இருக்கலாம் . மூன்று காரணங்களினால் அவருடன் உட்காரவில்லை. அவர் பேச ஆரம்பித்தால் என்னால் சரளமாக இத்தாலியத்தில் பேச முடியாது. இரண்டாவது , எனக்கு புன்னகையைக் கொடுத்தாலும் அவரின் தோற்றம் படு ஏழ்மையாக இருந்தது. மூன்றாவது  மணி பத்து ஆகப்போகின்றது, சரியான மேலங்கி கூட இல்லாமல் குளிரில் உட்கார்ந்து இருக்கின்றார். ஏதாவது ஒன்று கிடக்க ஒன்று ஆகி நமக்கு ஏன் பிரச்சினை என்பதால் தான் இந்த  இருபதாவது கார் அருகே இருந்த பெஞ்ச் தேர்ந்தெடுக்கப்பட்டது.

பெஞ்சில் உட்கார்ந்தவுடன் தாத்தா நினைவுப்போய், பணத்தின் நினைவு வந்தது.  என்ன செய்யலாம் என்ற யோசனையின் அசை தொடர்ந்தது. கண்களுக்கு மட்டும் குளிர்வதில்லை.  மனதிற்கு எது தேவையோ அதைக் காட்டும்.   தூரத்தில் ஈரோ பணத்தாள் இருப்பதாக மூளைக்கு சொன்னது. கவலையில் கானல் நீர் தென்படலாம் என பார்வையைத் திருப்பிக் கொண்டேன். உந்தப்பட்ட இரண்டாம் பார்வையில் அது பணத்தாள் என உறுதியானது. பணம் கிடந்த இடத்திற்கு அருகில் இருபத்திரண்டாவது கார் நின்றிருக்கவேண்டும்.  நான் ஓடிய வேகத்தில் 100 மீட்டர் பந்தயங்களில் ஓடியிருந்தால் உசைன் போல்ட்டைத் தோற்கடித்து இருப்பேன். ஓடிய வேகத்திற்குப் பரிசாய் அது 500 ஈரோத்தாள்.   கடைசியாக நான் இப்படி சாலையில் பணம் எடுத்தது , வியன்னா சென்றிருந்த பொழுதுதான். அன்று  ஒரு பத்து ஈரோத்தாள் கிடைத்தது. ஆஸ்திரியாவில் பத்து ஈரோ அல்லது அதற்கு குறைவான மதிப்புள்ள பொருட்கள் கீழே கிடந்தால் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு மீண்டும் பெஞ்சில் வந்து அமர்ந்து, பணக்கவலைத் தீர்ந்தது என கடவுளுக்கு நன்றி சொல்லும் தருணத்தில் புதுக்கவலைகள் முளைத்தன.
ஒருவேளை, என்னைப்போன்ற சிரமமான சூழலில் இருப்பவர்கள் பணத்தைத் தொலைத்துவிட்டு போய் இருந்தால் ;
கள்ளநோட்டாக இருந்தால் , இத்தாலியில் இது சர்வசாதாரணம், புழக்கத்திலே இல்லாத ஆயிரம் ஈரோத்தாள் கூட இத்தாலியில் கிடைக்கும்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வருவதைப்போல பணத்தை தரையில் போட்டுவிட்டு தூரத்தில் இருந்து படம்பிடித்து பகடி செய்யப்போகின்றார்களோ என்ற பயமும் வந்தது.

உன்னுடைய பணம் இல்லை.. வேண்டாம்...
உழைக்காத பணம் ஒட்டாது.
ஆனால் நான் திருடவில்லை. ஏமாற்றவில்லை. தானாகவே பணம் , இயற்கையாய் வந்து விழுந்து இருக்கின்றது.
 முதன் முதலாய் ரோம் வந்து இறங்கியபொழுது, எனது கைப்பை கிட்டத்தட்ட 600 ஈரோ பணத்துடன் காணாமல் போனதற்கான இழப்பீட்டு பணமாக எடுத்துக் கொள்ளலாமே ...
எத்தனை நாட்கள் சம்பளம் இல்லாமல் வேலைப்பார்த்து இருக்கின்றாய் அதற்கான சன்மானமாய் இருக்கட்டும்.
 மனம் இரண்டு பக்கத்திற்கும் பேசியது.  கடைசிப்பேருந்திற்கு இன்னும் நாற்பது நிமிடங்கள் இருந்தன. இங்கிருந்து பேருந்து நிலையம் நடக்க 10 நிமிடங்கள். இன்னும் முப்பது நிமிடங்கள் காத்து இருப்போம்.  யாராவது வந்து தேடினால் கொடுத்துவிடுவோம். இல்லாவிடில் இன்று நான் அதிர்ஷ்டமானவன்.

ஒவ்வொரு நிமிடமும்  மெல்ல நகர்ந்தது.  யாரும் வந்துவிடக்கூடாதே என்று ஒரு புறமும் , முப்பது நிமிடங்கள் எப்படி கரையும் என மறுபுறமும் என்னிடம் நான் அருமையாக நடித்துக் கொண்டிருந்தேன்.  அந்த பத்தாவது பெஞ்ச் தாத்தா மெல்ல ஒவ்வொரு காராக தொட்டபடி என்னை நோக்கி வந்தார்.

கண்டிப்பாக இந்த தாத்தாவின் பணமாக இருக்காது.   அருகில் வந்த தாத்தா,

"இந்த இருபது ஈரோத்தாள் நீ சென்றவழியில் கிடந்தது , இப்பொழுதான் பார்த்தேன் , உன் பணமா " என இத்தாலியத்தில் கேட்டார்.

ஐநூறுடன் மேலும் இருபதா... இதுவரை இரண்டு பக்கமும் வாசித்துக் கொண்டிருந்த மனம், விடாதே வாங்கிக் கொள் என்றது.  முப்பது நிமிட கெடு ஒருமுகம் ஆன ஆசை மனத்தினால் வெறும் 5 நிமிடங்களில் மறந்து போனது.

"ஆம் என்னுடையதுதான் நன்றி " என பொய்யுடன் வாங்கிப் பையில் வைத்துக் கொள்ளும்பொழுது கொஞ்ச தூரத்தில் ஒரு கார் மெல்ல  வருவதையும் கவனித்தேன். ஒருவேளை தொலைத்த பணத்தைத் தேட வரும் காரா !! .

தூரத்தில் ரயிலின் சத்தம் கேட்டது.

"சரி தாத்தா, ரயிலுக்கு நேரம் ஆகிவிட்டது, நல்லிரவு" என மற்றொருப் பொய்யை  சொல்லிவிட்டு நடக்கையில் ,  ஒருகணம் கூடத்திரும்பிப் பார்க்கவில்லை , ஒரு வேளை அந்தக் கார் பணத்தைத் தேடும் காராக இருந்து, தேடுபவர்களைப் பார்த்தால் ஆசைமனம் தோற்றுவிடுமோ என்ற பயம்... நிமிடங்களில் மாறியதற்கு மனம் வெட்கப்படவில்லை. சமாதானத்தை தேடிக்கொண்டிருந்தது.
  ரயில்  எனக்கு போதி மரம் தானே ... ஊர் சுற்றிப்போகப் போகும்  ரயில் பயணத்தில் இந்த 520 ஈரோக்களுக்கு ஏதாவது ஒரு சமாதானம் கண்டுபிடித்துகொள்ளலாம்.  மழைப்புழுக்கமா மனப்புழுக்கமா எனத் தெரியவில்லை...வெக்கையாக இருந்தது.  மென்குளிரை வென்ற வெக்கையுடன்   ரயில் நிலையம் நோக்கி நடந்தேன்.
--------------------


Thursday, February 06, 2014

மேரி - சிறுகதை

சந்தர்லேந்தில் இருந்து 20 மைல்கள் தொலைவில் இருக்கும் இந்த பள்ளிக்கு, அம்மு, நிரந்தர தலைமை சமையல்காரராக வந்ததும் வராததுமாய்   தனது உதவியாளர்கள் லின், ஜாக்குலின் , ஜின், கரோலின் ஆகியோர்களிடம் கேட்ட கேள்வி " மேரி எப்படி இருக்கின்றாள் " என்பதுதான்.

ஏற்கனவே நடுங்கிக் கொண்டிருந்த  அவர்களை அம்மு அப்படி கேட்க ஒரு பெரிய கதை இருக்கின்றது. அந்தக் கதையை நான் உங்களுக்கு சொல்கின்றேன்.  ஆறு மாதங்களுக்கு முன்னர் , இதே பள்ளிக்கு தற்காலிக தலைமை சமையல் ஆளாக அம்மு வந்திருந்த பொழுது நடந்த கதை.   
---
அம்மு, இந்தியத் தமிழ்ப்பெண்,  வடக்கு இங்கிலாந்தில் , அதுவும் வயதில் 50 களைக் கடந்த  உதவி சமையல் ஆட்களுக்கு  வெள்ளையரல்லாத ஒருத்தி அதிகாரம் செலுத்தும் இடத்திற்கு வருவது அறவே பிடிக்கவில்லை.  ஆங்கிலேயர்களுக்கு அன்றும் இன்றும் மற்றவர்கள் ஏவலாட்களாக இருந்தால் பிடிக்கும்.  மேலாளர்களாக , மற்றவர்களை ஏற்றுக் கொள்ள முடியாது.   இருந்தாலும் , இரண்டு வாரங்கள் தானே என வெறுப்பைக் காட்டிக்கொள்ளாமல் அம்முவுடன் நட்பு பாராட்டினர். 

" இனிமேல் நாங்கள் நான்கு பேரும் உன் தோழிகள், இன்னொரு தோழியும்  கூட இருக்கின்றாள் "  

" யார் அந்த தோழி , வேலைக்கு விடுப்பா ?"  என்ற அம்முவின் கேள்விக்கு   நான்கு ஆங்கிலேய உதவியாளர்களும் சிரித்தனர். 

" மேரி ,  இந்தப்பள்ளியில் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வேலை பார்த்தவள் , ஒரு நாள் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுதே மாரடைப்பினால் இறந்து போனாள்"  

"பயப்படாதே , புதிதாய் வந்து இருப்பவர்களை மட்டும் மிரட்டும், பழைய ஆட்களை ஒன்றும் செய்யாது " என லின் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்க 

அம்முவின் கண்களில் கலவரம் தெரிந்தது . இருந்தாலும் காட்டிக்கொள்ளாமல்  

"இந்தியாவில் இருந்த பொழுது , உங்களின் ஆங்கிலேயப் பேய்களை விட பயங்கரமான பேய்களைப் பார்த்து இருக்கின்றேன் , சரி வேலையை ஆரம்பிப்போம் "   என பயத்தையும் வேலையாட்களையும் விரட்டினாள். 

ஒரு நாள் கழிப்பறை உட்பக்கமாக தாழிடப்பட்டு இருக்கிறது. மற்றொரு நாள் யாரோ ஓடுவதைப்போல இருக்கின்றது என லின் , ஜாக்குலின் அம்முவிடம் வந்து சொன்னார்கள். 
  
அடுத்த வாரம் ,

 "லின் ... மேசையில் இருந்த இனிப்புகளைக் காணவில்லை  இனிப்பின் காகிதங்கள், குப்பைத் தொட்டியில் கிடக்கின்றன , வெள்ளியன்று நான் தான் சமையல் அறையைப் பூட்டினேன் , இன்று திங்கள் , நான் தான் முதல் ஆளாய் திறந்தேன் .. வார இறுதியில் வேறு யாரவது இங்கு வருவார்களா  "  

"அனேகமாக , மேரி எடுத்து சாப்பிட்டு இருக்கலாம் "  

" நகைச்சுவைக்கான நேரம் இதுவல்ல, லின்,  பொருட்கள் ஏதேனும் காணமல் போய் இருக்கின்றதா எனப்பாருங்கள் " 

கெகெபிக்கெவென நான்கு உதவியாளர்களும் சிரித்ததைப் பார்த்த அம்மு அவர்களைப் பார்த்து முறைத்தபடி 

" தங்களை வைத்து கிண்டல் செய்யப்பட்டால், இந்தியப் பேய்களுக்கு கோவம் வரும், தொடர்ந்து வந்து துரத்தும்...  ஆங்கிலப் பேய்களுக்கு எப்படி எனத் தெரியவில்லை "  

வெட்டியாய் இருத்தல்தான் கிலியைத்தரும். சமையல் கால் பங்கு என்றால், அது சார்ந்த சுகாதாரம்,  சரிவிகித உணவு கண்காணிப்பு , பரிமாறுதல்  வேலைகள்  ஆகியன முக்கால் பங்கு. ஆரம்ப பள்ளி குழந்தைகளுக்கான உணவு என்பதால் இந்தக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை சரியாக கடைப்பிடிக்க வேண்டும். இந்தக்கவனக்குவிப்பான வேலை மும்முரத்தில் பேயாவது பிசாசாவது என அடிக்கடி சொல்லிக்கொண்டு அம்மு பணிகளில் மூழ்கி போய்விட்டாள். தற்காலிகப் பொறுப்பின் கடைசி நாளன்று ஒரு புகார் ஒன்று வந்தது.  தலைமை ஆசிரியர் , அம்முவை அழைத்து , ஒரு குழந்தை , உணவு சூடாகப் பரிமாறப்படுவதில்லை என , தனது பெற்றோரை இன்று கூட்டி வருகின்றது என சொன்னார். 

உதவியாளர்கள் இந்த பிரச்சினையைப்பற்றி கவலையேப்படாமல்  அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். அம்மு, தான் இந்தப்பள்ளிக்கு வந்த நாள் முதல் , உணவு விகிதங்கள் , வெப்ப அளவீடுகள் என அனைத்தையும் அலுவலக  குறிப்பு ஏடுகளில் ஆவணப்படுத்தி வைத்து இருந்தமையால் உதவியாளர்களின் அக்கறை இன்மையை பற்றிக் கவலைப்பட்டதாக தெரியவில்லை.  குழந்தைகளுக்கு உணவுப் பரிமாறப்படும் முன் , சூட்டை அளவு எடுத்துவிடலாம் என்றால் , வெப்ப மணியைக் காணவில்லை.  அதைத் தேடி எடுத்து சூட்டை சோதித்தால் கருவி வேலை செய்யவில்லை. நேரம் ஓடிக்கொண்டே இருந்தது. அம்மு படபடப்பானாள்.  புதிதாக வாங்கிய கருவி. பழுதாக வாய்ப்பில்லை என ஆராய்ந்ததில்  பேட்டரியைக் காணவில்லை.  பேட்டரி கழண்டு கீழே விழும் அளவிற்கு இலகுவான மூடி அல்ல.  

" இறுக்கமாக மூடி இருக்கின்ற வெப்ப மானியில் எப்படி பேட்டரி காணாமல் போகும்  "  

'ஒரு வேளை மேரி எடுத்து இருப்பாளோ "  என்று சொன்ன லின்னைப் பார்த்து ஒரு பேயைப்போல முறைத்தாள் அம்மு. 

அனைவரும் தேடினர். பாத்திரங்கள் வைக்கும் மரப்பலகைக்கு அடியில் சுவற்றை ஒட்டியபடி கிடந்த அந்த சிறிய  பேட்டரியை அம்மு எடுத்தாள், வெப்பமானியை சரி செய்தாள், சூட்டை குறித்துக் கொண்டாள். புகார் செய்த குழந்தையின் பெற்றோர் உணவை சரிப்பார்த்தனர். அவர்களுக்கு திருப்தி.  தலைமை ஆசிரியருக்கும் திருப்தி.  கடைசி நாள் அதுவுமாக பிரச்சினை ஏற்பட்டு நல்லவிதத்தில் சரியானது அம்முவிற்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.  எல்லோரிடமும் இருந்து விடைபெற்றுக் கொள்கையில் , அவளின் உதவியாளர்கள் பேயறைந்ததைப் போல இருந்தனர். 

நான்கு உதவியாளர்களும் , கறி பெண்   என அம்முவை திட்டிக்கொண்டே கூடினர் . கறி என்பது  இந்தியர்களுக்கான பட்டப்பெயர்.  

" ஜாக்குலின்  தானே பேட்டரியைக் கழட்டினாள்" 

" ஆமாம் லின் , இதோ பார், என்னிடம் தான் இருக்கின்றது, அப்புறம் எப்படி அந்த கறி பெண்ணிற்கு பேட்டரி கிடைத்தது " 

'ஒரு வேளை மேரி "  என்றாள் லின் . 

---

இதுதான் ஆறு மாதங்களுக்கு முன்னர் நடந்த கதை. இருங்கள் ... இருங்கள் , கதை முடியவில்லை.  உண்மையில் வெப்பமானியை வாங்கும் பொழுது ஒன்றிற்கு இரண்டாய் பேட்டரிகளை அம்மு வாங்கி வைத்து இருந்தாள்.  பேட்டரியைக் காணவில்லை என்றவுடன்,  இவர்கள் தான் எடுத்து இருப்பார்கள் என அவளுக்குப் புரிந்தது.  படபடப்பானதைப் போல காட்டிக்கொண்டு , பேட்டரியை அடியில் உருட்டி விட்டு பயம் காட்டியவர்களுக்கே பயம் காட்டிப் போனவள் தான் திரும்ப நிரந்தர தலைமையாக வந்து இருக்கின்றாள்.   சரி இந்தக் கதை எனக்கு எப்படித் தெரியும்  ....தெரியும்   தெரியும்   ....இதை எல்லாம் பார்த்தவள் நான்...நான் தான் மேரி.