Tuesday, May 06, 2014

கைப்பட ஒரு கடிதம் - சிறுகதை

"ஏன்டா கார்த்தி, லெட்டரே போட மாட்டேங்கிற"

"எதுவா இருந்தாலும் இமெயில் அனுப்புப்பா, பக்கத்திலதானே பிரவுசிங் சென்டர் நான் இப்போ பிசி"

என்று அப்பாவின் அலைப்பேசி அழைப்பை வெடுக்கென துண்டித்த பின்னர்தான் அந்த பாட்டியைக் கவனித்தேன். கையில் தடிமனான அஞ்சல் உறையுடன் என் வீட்டின் வாசல் அருகே நின்று கொண்டிருந்தார்.  இந்த மலையோர ஆஸ்திரியக் கிராமத்தில், என் வீட்டில் இருந்து கொஞ்சம் தொலைவில் உள்ள வீட்டில் வசிக்கின்றார்.   பாட்டியின் பெயர் எல்ஃபி, வயது எண்பதுக்குமேல் இருக்கும்.

பல்கலைகழகத்தின் அருகில் குடியிருக்க வீடுகளின் மாத வாடகை அதிகமாக இருந்ததனால், 50 கிலோமீட்டர்கள் தள்ளியிருக்கும் இந்த கிராமத்தில் குடியிருக்கின்றேன். 1000 பேருக்கும் குறைவாக வசிக்கும் இக்கிராமத்தில் , அனேகமாக நான் ஒருவன்தான் வெளிநாட்டுக்காரன். ஆரம்பத்தில் மாநிறத்தில் ஒருவன் சுத்திக் கொண்டிருப்பதை குறுகுறுவெனப் பார்த்தாலும் கடைசி ஆறுமாதங்களில் சிலர் நல்ல நட்பாகிவிட்டனர்.

அதில் இந்த பாட்டியும் ஒருவர். அவருக்கு ஆங்கிலம் தெரியாது. எனக்கு ஜெர்மன் தெரியாது.  குத்து மதிப்பாக ஏதாவது புரிந்து கொண்டு அவருடன் ஒரு சில நிமிடங்கள் மாலையில் கல்லூரி முடித்துவிட்டு வரும்பொழுது பேசிவிட்டு வருவேன். இணையம், கம்ப்யூட்டர் இல்லாத மகிழ்ச்சியான வாழ்க்கை அவருடையது. ஸ்கைப்பில் ஒரு நாள் அம்முவுடன் பேசிக்கொண்டே வந்தபொழுது, அம்முவை, என் வாழ்க்கையின் ஆண்டாள் என்று  பாட்டிக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கின்றேன். அவருக்கு ஸ்கைப் தொழில்நுட்பத்தைக் கண்டு வியப்போ வியப்பு. சாதாரண விசயம் அவருக்கு வியப்பைத் தருகின்றதே என்று எனக்கும் வியப்பு.

சென்ற வாரம் முழுவதும் , பாட்டியின் மகனும் குடும்பத்தாரும் பல ஆண்டுகளுக்குப்பின்னர் அமெரிக்காவில் இருந்து வந்திருந்ததால் பாட்டியின் வீடு திருவிழாக்கோலம் பூண்டிருந்தது. மகன், மருமகள், பத்து பதினோரு வயதில் இரண்டு பேரப்பிள்ளைகள் , அமைதியாய் இருந்த தெரு கலகலவென இருந்தது. ஒரு நாள் என்னைக்கூட மகனின் குடும்பத்தாருக்கு அறிமுகம் செய்து வைத்தார். அமெரிக்கா திரும்பிய சில நாட்களில் நியுயார்க்கில் இருந்து பாஸ்டனுக்கு மாற்றலாகப்போவதாகவும் , புதிய அலுவலகத்தில் உடன் வேலை செய்பவர்கள் நிறைய பேர் தமிழர்கள் என்றும் சொல்லிக்கொண்டிருந்தார். ஐரோப்பாவைப் போல அல்லாமல் அமெரிக்காவும் அமெரிக்க ஆங்கிலமும் எப்பொழுதும் எனக்கு அந்நியமாகவே தெரியும்.  நட்பின் முதற்படியாக மின்னஞ்சல்கள் பரிமாறிக்கொண்டோம்.

வீட்டிற்குள் பாட்டியை அழைத்தபடி, "மாலை, வணக்கம், என்ன செய்ய வேண்டும் எல்ஃபி?"  உடைந்த ஜெர்மனில் கேட்டேன்.

கையில் இருந்த தடிமனான அஞ்சலைக் கொடுத்தார்.

"நீ, லின்ட்ஸ் போகும்பொழுது, அமெரிக்காவிற்குத் தேவையான தபால்தலை ஒட்டி, தபால்பெட்டியில் போட்டுவிடுகின்றாயா?"

"ஓ நிச்சயமாக"  அஞ்சலை முன்னும் பின்னும் பார்த்தேன். வெறும் மின்னஞ்சல் முகவரி மட்டுமே இருந்தது.

"எல்ஃபி, வெறும் மின்னஞ்சல் மட்டும் இருக்கின்றது, முழுமுகவரி எங்கே"

"இதைத்தான் தனது முகவரி என்று எனது பேரன் கொடுத்தான்"  என்று சிலப்பத்து ஈரோத்தாள்களை தபால் செலவிற்காக நீட்டினார்.

"அனுப்பிவிட்டு வந்து வாங்கிக்கொள்கின்றேன்" என தபால் கவரைப் பெற்றுக்கொண்டேன்.

மறுநாள் கல்லூரியில் இருந்து பாட்டியின் தாள் கடிதத்தின் 10 பக்கங்களை மின்னச்சு எடுத்து, பாட்டியின் பேரனுக்கு மின்னஞ்சல் செய்துவிட்டேன். அடுத்த அரைமணி நேரத்தில் பாட்டிக்குக் கொண்டு சேர்க்க பதில் பேரனிடம் இருந்து வந்து சேர்ந்தது. தாளில் பதிப்பித்து எடுத்துப் போகலாம் எனநினைத்தேன். வேண்டாம் என்று முடிவை மாற்றிக்கொண்டு ,

எல்ஃபி பாட்டியின் வீட்டு முகவரிக்கு தபாலில்  கைப்பட எழுதியனுப்பவும் என்று பாட்டியின் பேரனுக்குப்பதில் அனுப்பிய கையோடு, ஒர் ஏ4 தாளை எடுத்து மேசையின் மேல் வைத்து, அன்புள்ள அப்பா நலம் நலமறிய ஆவல் என்று கைப்பட ஒரு கடிதத்தை எழுத ஆரம்பித்தேன்.

                                                                      -------------