என்னுடைய சிறந்த 150 சிறுகதைகள் - சிறுகதைத் தொகுப்பு - நூல் வெளியீடு - விளம்பரங்கள் தேவை
எழுதப்படுபவை எல்லாம் இங்கிருந்தே எடுக்கப்படுபவை என நான் நம்புவதால் , என்னுடைய எல்லா ஆக்கங்களும் வாசிப்பவர்களுக்கே சொந்தம் என்ற வகையில் தான் உரிமத்தை வலைப்பூவில் வைத்திருக்கின்றேன். இதில் என்னுடைய பேஸ்புக் பத்திகளும், டிவிட்டர் குறிப்புகளும் கூட அடங்கும்.
நான்கு பேர் தொடர்ந்து கைத்தட்டிக் கொண்டே இருந்தாலும், நம் எழுத்து நல்ல எழுத்துதானா என ஐயம் நீங்க குறைந்தது நான்கு ஆண்டுகளாவது எழுத்துப் பயிற்சி தேவை. அப்படியான நம்பிக்கை ஏற்பட்ட ஒரு நாளில் சிலப்பதிப்பகங்களுக்கு மின்னஞ்சல் செய்தேன். அவரவர் வேலைகளில் மும்முரமாக இருந்ததனால் பதில் ஏதும் வரவில்லை.
அப்பொழுது (2010 ஆம் ஆண்டு இறுதியில்) அமேசானின் சுயப்பதிப்பு திட்டம் பற்றிய விபரம் தெரிய வந்தது. அமேசானில் Print on Demand என்ற வகையில் தமிழிலும் , சிலக்கதைகளின் ஆங்கில மொழிப்பெயர்ப்பு தொகுப்பையும் வெளியிட்டேன். ஆங்கில மொழிப்பெயர்ப்பு அமேசான் கிண்டில் வடிவிலும் வெளியிடப்பட்டது.
இதற்கு முன்னர் அமெரிக்க வாழ் தமிழ் எழுத்தாளர்கள் செய்து இருக்கின்றனரா எனத் தெரியவில்லை, ஆனால் எனது சமகால எழுத்தாளர் சாரு நிவேதிதாவிற்கு முன்பாகவே நான் தமிழ்ச்சிறுகதைகளின் ஆங்கில மொழிப்பெயர்ப்பை, அமேசான் கின்டில் வடிவில் வெளியிட்டேன் எனும் பொழுது பெருமையாகத்தான் இருக்கின்றது. ( ஜெர்மன் , ஸ்விடீஷ் , இத்தாலிய , போலிஷ் மொழிப்பெயர்ப்புகளையும் தயார் செய்து வைத்து இருக்கின்றேன். சரியான நேரத்தில் வெளியிடலாம் என காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளது)
சிறுகதைத் தொகுப்பு - தமிழ் - புத்தகம் http://www.amazon.com/Baltic-Days-Stories-Collection-Edition/dp/1456538888
சிறுகதைத் தொகுப்பு - ஆங்கிலம் - கிண்டில் http://www.amazon.com/Omega-Stories-Catalyst-Selva-ebook/dp/B004IWQZJ6/
சிறுகதைத் தொகுப்பு - ஆங்கிலம் - புத்தகம் http://www.amazon.com/Omega-Stories-perspective-Catalyst-Selva/dp/145653274X/
புத்தகம் பெரிய அளவில் விற்பனை ஆகி, நான் ஒன்றும் பணக்காரன் ஆகிவிடவில்லை. ஆனாலும் ஆங்கிலம் தமிழ் இரண்டிலும் புத்தகங்கள் இருந்தது ஒரு முகவரியாக இருந்தது. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என வலைப்பதிவும் எழுதினேன். நீரின் இயல்பு ஊறுவது.. இறைத்தார்களா இல்லையா என்பது தெரியவில்லை.
உணர்ச்சி வசப்பட்டு மேல் இருக்கும் சுட்டிகளில் இருந்து புத்தகங்களை வாங்கிவிடாதீர்கள். அவை எல்லாம் என் தளத்தில் இலவசமாகவே கிடைக்கின்றன.
அதன் பின்னர் நண்பர்கள் ரவிசங்கர் ( https://www.facebook.com/ravidreams) மற்றும் சீனிவாசன் (https://www.facebook.com/tshrinivasan) இருவரும் அவர்களது இலவச மின் நூல் திட்டத்தில் ( freetamilebooks.com ) சேர , This work is licensed under a Creative Commons Attribution-NoDerivs 3.0 Unported License. உரிமத்தில் கதைகளைத் தர முடியுமா எனக் கேட்டார்கள். வெட்டியாய் வெயிலில் காயும் நீரை , வாய்க்கால் வரப்பு வெட்டி எடுத்து செல்ல விரும்புவருக்கு இல்லை என்றா சொல்வேன். அனுமதிக்க, உடனே மின்னூல் ஆக கொண்டு வந்தார்கள். கிட்டத்தட்ட 600 முறைக்கு மேல் மின்னூல் சிறுகதைத் தொகுப்பு தரவிறக்கப்பட்டுள்ளது.
அதற்கான சுட்டி - http://freetamilebooks.com/ebooks/vinaiooki-short-stories/
இப்படி புத்தகமாகவும் , மின்னூலாகவும் கிடைக்கும் அதே வேளையில் என் சிறுகதைகள் எனது வலைத்தளத்திலும் பண்புடன் குழுமத்திலும், இன்ன பிற இணையத்தளங்களிலும் வாசிக்கக் கிடைக்கின்றன. எனது சிறுகதைகளில் இருக்கும் இலக்கணப்பிழை, ஒற்றுப்பிழை, வார்த்தைப்பிழைகள் எல்லாவற்றையும் தளைத்தட்டி திருத்தி , சிறந்த 150 சிறுகதைகளை மின்னூலாகவும் அச்சுவடிவிலும்( சுயப்பதிப்பு - கேளுங்கள் அச்சடிக்கப்படும் வகையில்) வெளியிடலாம் என இருக்கின்றேன்.
இதில் இந்தத் தடவை எடுக்கப்போகும் சிறப்பு முயற்சி, சிறுகதைத் தொகுப்பின் இரண்டு வடிவிலும் , விளம்பரங்களை உள்ளடக்குவது. பள்ளி/ கல்லூரி , நிறுவன ஆண்டு விழா மலர்கள் எல்லாவற்றிலும் இப்படியான விளம்பரங்களைப் பார்த்து இருப்பீர்கள்.
150 சிறுகதைகள் என்றால் 400 பக்கங்கள் குறைந்தது வரும். 10 பக்கங்களுக்கு ஒர் அரைப்பக்க விளம்பரம் , 40 விளம்பரங்கள் பெறலாம் என இருக்கின்றேன். நான் சுமார் எழுத்து குமாரு என்பதால் 40 விளம்பரங்களுக்கு அப்படியே ஆயிரக்கணக்கில் கொண்டு வந்து மக்கள் கொடுப்பார்கள் என்பது எல்லாம் பேராசை. அதற்காக 'விளம்பரங்களை' இலவசமாகவும் கொடுக்கலாம் என்றால், இதை நடைமுறைப்படுத்தப்போகும் மக்களுக்கு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடலாம்.
ஆக அரைப்பக்கத்திற்கு ரூபாய் 500 என்றும் முழுப்பக்கத்திற்கு ரூபாய் 1000 என்றும், அட்டைப்பின் பக்கத்திற்கு ரூபாய் 5000 என்றும் வைக்கலாம் என இருக்கின்றேன்.
வெளியீட்டு வகைகள்
1. மின்னூல் - எதிர்பார்ப்பு - குறைந்தது 2000 தரவிறக்கங்கள் (விளம்பரங்கள் , நிலைத்து நிற்கும், அளவிலா மறு சுற்றுக்குப் போகும்)
2. கிண்டில் - குறைந்தது 100
3. அச்சுப்புத்தகம் - அமேசான் மற்றும் பொதி குறைந்தது 500 ( கை செலவில் நூலகங்களுக்கும் கொடுக்கலாம் என இருக்கின்றேன் , ஆக சிறுகதைகளுடன் விளம்பரங்கள் இன்னும் அதிகமான நபர்களைச் சென்றடையும்)
மேலும் உரிமத்தின் படி உள்ளடக்கத்தை சிதைக்காமல் மறுபிரசுரம் செய்து கொள்ளலாம் எனும்பொழுது , உள்ளடக்கத்தில் விளம்பரங்களும் அடங்கும்.
யார் யாரிடம் விளம்பரங்கள் கேட்கலாம்.
1. பதிப்பகங்கள்
2. புத்தக விற்பனை நிலையங்கள்
3. அரசியல் வாதிகள் - தேர்தல் நெருங்குவதால் அரசியல்வாதிகள் தங்களது கட்சி சார்பாக விளம்பரங்கள் கொடுக்கலாம்
4. கல்லூரிகள்
5. பெரிய நிறுவனங்கள்
6. புலம்பெயர்ந்து இருக்கும் இந்தியத் / ஈழத் தமிழர் நிறுவனங்கள்
7. சிறுதொழில் நிறுவனங்கள்
ஒரு வேளை யாருமே விளம்பரம் கொடுக்க முன்வரவில்லை என்றாலும், ஒரு ரூபாய் மட்டும் பெற்றுக்கொண்டு 40 விளம்பரங்களை வெளியிடலாம் என இருக்கின்றேன். செய்து காட்டினால் பின்வருபவர்களுக்கு ஒரு பாதை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதால் ஒரு ருபாயிலும் சிறப்பு முயற்சியை செய்யலாம். அனேகமாக இந்த முயற்சி வெற்றியடையும். அப்படி அடையும் பட்சத்தில் மின்னூல் / சுயப்பதிப்பு வழியே வெளியிடுபவர்கள் தங்களது படைப்புகளை பதிப்பிக்கும் முன்னரே கொஞ்சம் காசு பார்க்கலாம். அனேகமாக எனது முதல் விளம்பர விண்ணப்பத்தை கிழக்குப் பதிப்பக பத்ரியிடம் இருந்து ஆரம்பிக்கலாம் என இருக்கின்றேன். 500 ரூபாயோ ஒரு ரூபாயோ விளம்பரம் கொடுப்பார் என நம்புகின்றேன்.