Thursday, December 26, 2013

சுமார் எழுத்து குமாரு - அனுபவம்


காதல் தோல்வியை மறக்க ஏதாவது ஒரு போதை தேவை ... 2005 ஆம் ஆண்டு மறுபாதியில், அம்மு வெர்ஷன் 1 என்னை ரன் அவுட் ( http://www.youtube.com/watch?v=MIaMmtAsZsg) ஆக்குகையில்,  அப்படியான ஒரு போதையை எழுத்தில் தேடிக்கொள்ளலாம் என எழுத ஆரம்பித்து.... எழுதிக்கொண்டே இருக்கின்றேன். சில கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் இருப்பார்கள். பெரிதாக மட்டையடித்தலிலோ பந்து வீச்சிலோ சாதித்து இருந்திருக்கமாட்டார்கள். ஆனாலும் அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம் என ஆடி , பத்து ஆண்டுகள் கூடத் தொடர்ந்து அணியில் இடம்பிடித்து ஆடிக்கொண்டு இருப்பார்கள்.,,,, ஆக என் எழுத்து வாழ்க்கைப் பயணமும் எட்டு ஆண்டுகளை கடந்து சிலப்பல மாதங்கள் ஆகிவிட்டன.  ஆகாஷ் சோப்ரா ஓட்டங்கள் எடுப்பதைப்போல , ஹிட் ஏறிக்கொண்டிருந்த சூழலில், எங்கிருந்தோ வந்த ஆபத்பாந்தவன் அனாதரட்சகன் 'கலைஞர்' ஒரே நாளில் சும்மா ஹிட்ஸை டிஜிவி ரயில் வேகக்கணக்கில் எகிற வைத்தார். எல்லாப்புகழும் கலைஞருக்கே....

தொட்டனைத்து ஊறும் மணற்கேணி என நினைத்தால் எழுத்தில் மட்டும் இழப்பதற்கு ஒன்றுமே இல்லை எல்லாமே ஈட்டல்தான்.  தமிழ்மணம் ஆகட்டும் ... சமூகஊடகங்கள் ஆகட்டும்... எழுத்தினால் எல்லாமே பெற்றவைதான். பெற்றவைகள் நூறு இருந்தாலும் சார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் கங்குலி இறங்கி வந்து கூரைக்கு மேல சிக்ஸர் அடித்தது ( http://www.youtube.com/watch?v=hle1TAoR9sc) கண்ணுக்குள்ளேயே நிற்பதைப்போல சில எழுத்தாக்கங்களின்  அனுபவங்கள் செம 'கெத்து' கொடுக்கும். 

சில ஆண்டுகள் முன்பு, சுவீடனில் , விசா நீட்டிப்பிற்காக , குடியுரிமை அலுவலகம் ஒன்றில் காத்துக் கொண்டு இருந்தேன்.  சில இருக்கைகள் தள்ளி, தமிழ்க்குரல்... தமிழ்மாணவர்கள் சிலர், நகைச்சுவைகளை அள்ளித் தெறித்துப் பேசிக்கொண்டு இருந்தனர்.  அந்தக் காலக்கட்டம் கொஞ்சம் சிரமமான காலம்.. அம்மு வெர்ஷன் 2 என்னை பவுன்சர் போட்டு ஹிட் விக்கெட் (http://www.youtube.com/watch?v=yZjGdWt82k0) ஆக்கிவிட்டு சென்று இருந்தார். தீஸிஸ் வேறு நீட்டிக்கொண்டே போனது.  கையில் காசும் தீர்ந்துவிட்டது. டிராவிற்கு ஆடலாமா... வென்றுவிடலாமா... வென்றுவிட நினைத்தால் தோற்றுவிடுவோமா கிட்டத்தட்ட தென்னாப்பிரிக்க சொதப்பல் ஆட்டம் போல நாட்கள் போய்க்கொண்டிருந்தன.  முகத்தை இறுக்கிக் கொண்டு அமர்ந்து இருந்தாலும் , என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. சிரித்து விட்டேன். அங்கிருந்த மாணவர்கள், தூரத்தில் அமர்ந்தபடியே 

"என்ன தமிழா, எந்த யுனிவர்சிட்டி , எந்த பேட்ச் " எனக் கேள்விகள் கேட்டனர்.  சிலப்பல பொது நண்பர்கள் பேரைச் சொல்லித் தெரியுமா எனக் கேட்டனர். தெரியும் என்றேன்.  பேஸ்புக் ஐடி கேட்டார்கள்.  செல்வகுமார் வினையூக்கி என சொன்னவுடன், அமர்ந்து இருந்தவர்கள் உடனே எழுந்து நின்றார்கள். 

"அண்ணே ,நீங்களா அது, உங்க பிலாக்கில சுவீடன் மேற்படிப்பு கட்டுரை படிச்சுத்தான் நாங்க சுவீடனுக்கே வந்தோம்" 

கிட்டத்தட்ட மாணிக் பாட்ஷா மொமென்ட் அது.  

மேற்சொன்ன அனுபவம் ஒருவகை என்றால் சமீபத்தில் ஒன்று நடந்தது. இத்தாலியில், ஆராய்ச்சிப்படிப்பிற்கு புதிதாக ஒரு மாணவர் வந்து சேர்ந்து இருந்தார்.  சென்ற மாதம் , முன்னாள் கோபாலன் டிராபி இலங்கை அணியின் பிரபல'எறிபந்து' வீச்சாளர் முரளிதரன் சிலப்பல முதுகுசொறிதல் கருத்துக்களை சொல்லி இருந்தது உங்களுக்கு எல்லாம் நினைவுக்கு இருக்கலாம்.  அதைப்பற்றிய பேச்சு வருகையில், புதிய மாணவரிடம் , முரளிதரனையும் முகமது அலியையும் ஒப்பிட்டு சிலக்கருத்துக்களை சொன்னேன்.  உடனே அந்த புதிய மாணவர்,

"சார், இது எல்லாம் மூனு வருஷத்துக்கு முன்னமே எழுதிட்டாங்க,,,, நீங்க அதைப்படிச்சிட்டு வந்து இங்க சொல்லுறீங்களாக்கும்" என்றார். 

"அந்தக் கட்டுரையை எழுதினதே நான் தான் சார்" என்றேன் பதிலுக்கு... 

தட் வாஸ் எ , அந்தக்குழந்தையே நீங்கதான் மொமென்ட். 

சில ஆண்டுகளுக்கு முன்னர் அந்த  முரளிதரன் - முகமது அலி கட்டுரை வெளிவந்த பொழுது,  கொழும்பு வெள்ளவத்த டமில் பாய்ஸ் கூட்டம் போட்டு  அந்தக் கட்டுரை வெளியான தமிழோவியம் இணைய இதழில் பின்னூட்டங்களாக  என்னைத் திட்டித் தீர்த்தார்கள்.  சென்ற மாதம் அதேக்கட்டுரை வெட்டி ஒட்டி நீட்டி முழக்கி சிலப்பல தமிழ்த்தேசிய இணைய தளங்களிலும் காணக்கிடைத்தது.. 

சச்சின் அடித்த சிக்ஸர்கள் கூட மக்களுக்கு மறந்துப் போய் இருக்கலாம்.... ஆனால் வெங்கடேஷ் பிரசாத், நைரோபியில் அடித்த கவர் டிரைவ் சிக்ஸரை ( http://www.youtube.com/watch?v=hl4ajI2oUcE) யாராலும் மறக்க முடியாது... சொல்லிக்கொள்ள ஒன்றிரண்டு சிக்சர்கள் தான் இருந்தாலும்  இரண்டுமே  கெத்து சிக்சர் இந்த சுமார் எழுத்து குமாருக்கு....