Wednesday, December 22, 2010

அந்தக் காலத்துப் பதிவர்கள் - அரியப் புகைப்படம்அம்முவிற்கு முந்தைய காலப் புகைப்படங்களைத் தேடிக் கொண்டிருந்த பொழுது இந்தப் படம் சிக்கியது. படத்தில் பால பாரதி இருக்காக
யோசிப்பவர் இருக்காக , அந்தக் காலத்து சூறாவளி முத்து தமிழினி இருக்காக .. நந்தா இருக்காக மா. சிவக்குமார் இருக்காக
சிறில் அலெக்ஸ் இருக்காக ... அட நம்ம உண்மைத் தமிழன் அண்ணாச்சி எவ்வளவு இளமையா இருக்காக .. லக்கி லுக் யுவ கிருஷ்ணா கூட இருக்காக .. என்றும் இளமை தருமி சார் கூட இருக்காக .. தெய்வ மாமா நாமக்கல் சிபி இருக்காக
விக்கி , மரபூர் சந்திர சேகர் , சுந்தர் , வரவனையான் , பிரியன் இவங்க எல்லாம் கூட இருக்காக .. விட்டுபோனவங்க மன்னிக்கவும் வயசாயிடுச்சு மறதியும் வந்துடுச்சு..

எடுக்கப்பட்ட சமயம் மார்ச் 2007

Tuesday, November 23, 2010

கிரிக்கெட் வினாடி - வினா - ஆறுக்கு ஆறு

1. ஹான்ஸி குரோனியே, உஜேஷ் ராஞ்சோட், ருவான் கல்பகே, மார்க் எல்ஹாம், நீல் ஜான்ஸன், ஜேக்கப் ஓரம், மோண்டி பனேசர், கேமரூன் வைட், பீட்டர் சிடில், பீட்டர் ஜார்ஜ் சமீபத்தில் ஆண்டி மெக்கே இவர்கள் அனைவரும் டெஸ்ட் ஆட்டங்களில் ஆடி பந்து வீசவும் செய்தவர்கள். இவர்கள் அனைவரும் இந்தியாவுக்கு எதிராக குறைந்த பட்சம் ஒரு விக்கெட்டாவது எடுத்தவர்கள். இவற்றைத் தவிர இவர்களுக்குள்ளாக வேறொரு ஒற்றுமை உள்ளது , அது என்ன?

2.1998 ஆம் ஆண்டு ஷார்ஜா போட்டிகளில் ஒன்றில், வெற்றி இலக்கு 50 ஓவர்களில் 285, ஆனால் இறுதிப்போட்டிக்குத் தகுதிப் பெற 46 ஓவர்களில் 237, மணற்புயலுக்கு நடுவே சுழன்று சுழன்று சச்சின் டெண்டுல்கர் காஸ்ப்ரோவிக்ஸையும் ஷான் வார்னேயையும் அடித்து நொறுக்கியதை யாரும் மறந்திருக்க முடியாது. இந்திய அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறுவதற்கான இலக்கை அடைந்த பின்னர், வெற்றியை நோக்கி நகரும் முயற்சியில் சச்சின் டெண்டுல்கர் ஆட்டமிழந்தார். கேள்வி டெண்டுல்கரைப் பற்றியது அல்ல, இந்த ஆட்டத்தில் டெண்டுல்கருக்கு உறுதுணையாக இணையாட்டமாக நூறு ஓட்டங்களுக்கு மேல் எடுக்க துணையாக ஆடியவர் யார்?

3. வி.வி.எஸ் லக்‌ஷ்மணன் ஒரு நாள் ஆட்டங்களில் ஆறு சதங்கள் அடித்துள்ளார். அவற்றில் நான்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரானவை. டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக ஒரு நாள் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக சதங்கள் அடித்தவரும் இவர் தான். இதுவரை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவின் சார்பில் 25 சதங்கள் 12 பேரின் சார்பில் அடிக்கப்பட்டுள்ளன. இந்த 12 நபர்களில் ஒருவர் இன்று உயிருடன் இல்லை. இந்த நபர் யார்?


4. முன்னாள் இந்திய அதிரடி ஆட்டக்காரர் ராமன் லம்பா, 86 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டித்தொடரில் அறிமுக வீரராக களமிறங்கினார். இரண்டு அரை சதங்கள் மற்றும் ஒரு சதம் ஆகியவற்றுடன் இந்தியா தொடரை வெல்ல காரணமாக இருந்ததுடன் , ஆட்டத்தொடர் நாயகன் விருதையும் பெற்றார். இவரும் ஸ்ரீகாந்தும் இணையாட்டமாக ஆடிய ஆட்டங்கள் இன்றைய சேவக் - டெண்டுல்கர் இணைக்கு முன்னோடியாக அமைந்தவை. இன்றைய தோனி அடிக்கும் அடியைப்போல அன்றே ஆடிய ராமன் லம்பா அதன் பின் வந்த தொடர்களில் சோபிக்காததால் கழட்டிவிடப்பட்டார். ராமன் லம்பாவைப்போல, 99 ஆம் ஆண்டு கென்யாவில் நடைபெற்ற பன்னாட்டுத் தொடர் ஒன்றில் ஆட்டத்தொடர் நாயகன் விருதைப்பெற்றவர் பின்னாளில் காணாமல் போன கீழ்கண்ட புகைப்படத்தில் இருக்கு ஆட்டக்காரர் யார்?

5. பாகிஸ்தான் அணிக்கு எப்படி புற்றீசல் போல வேகப்பந்துவீச்சாளார்கள் வருகின்றனரோ அதுபோல இந்திய அணியைப்பொருத்தவரை, சுழற்பந்துவீச்சாளர்கள், மழைக்காளான்கள் போல அடிக்கடி மின்னி மறைவார்கள். 90 களின் இறுதியில் ஏனோதானோவென ஆடிக்கொண்டிருந்த இந்திய அணி அவ்வப்பொழுது வியத்தகு வெற்றிகளை ஈட்டும். (பின்னோக்கிப் பார்க்கும்பொழுது அவற்றின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாக்கப்பட்டாலும்) டெண்டுல்கர், அசாரூதின் இல்லாத சமயங்களில் சுறுசுறுப்பாக வழி நடத்திய அஜய் ஜடேஜாவின் தலைமையில் ”சுள்ளான்” இந்திய அணி, பலமான தென்னாப்பிரிக்கா அணியை 117 ஓட்டங்களுக்கு, கென்யா தலைநகர் நைரோபியின் ஜிம்கானா மைதானத்தில் சுருட்டியது. அறிமுகவீரர் விஜய் பரத்வாஜ் 10 ஓவர்கள் வீசி 16 ரன்கள் கொடுத்து தென்னாப்பிரிக்க அணியில் அதிக ஓட்டங்களை எடுத்த காலிஸை வீழ்த்தினார். இன்னொரு சுழற்பந்துவீச்சாளார் நிகில் சோப்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அணியின் அனுபவமின்மையைக் கருத்தில் கொண்டால் இதுவே பெரிய விசயமாக இருக்கும்பொழுது, மற்றொரு இடதுகை சுழற்பந்துவீச்சாளர் 10 ஓவர்கள் வீசி 6 மெயிடன்களுடன் வெறும் ஆறு ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் யார்?

6. இடதுகை சுழற்பந்து வீச்சாளர்களை தான் ஆடும் ஆட்டங்களில் எல்லாம் சுளுக்கு எடுப்பதால், இந்திய அணியில் பல சமயங்களில் இடதுகை சுழற்பந்துவீச்சாளர்கள் இடம்பெறுவதை சவுரவ் கங்குலி விரும்பியதில்லை. கங்குலி இந்திய அணித்தலைவராக இருந்தபொழுது , ஓரங்கட்டப்பட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் முரளி கார்த்திக் மற்றும் சுனில் ஜோஷி. இருவருமே ஓரளவிற்கு நல்ல மட்டையாளர்களும் கூட. முரண் நகை என்னவெனில் அணித்தலைவராக கங்குலி தான் முதன்முதலில் களமிறங்கிய டெஸ்ட் ஆட்டத்தை ஆல்ரவுண்ட் ஆட்டத்தின் மூலம் தோல்வியில் இருந்து காப்பாற்றியவர் சுனில் ஜோஷி. நைட் வாட்ச்மேனாக களமிறங்கி முரளி கார்த்திக்கும் தன் பங்கிற்கு 43 ரன்கள் எடுத்தார். ராமன் லம்பா, விவிஎஸ் லக்‌ஷ்மண் போல ஆஸ்திரேலியா அணிக்கெதிராக என்றால் முரளி கார்த்திக்கும் சிறப்பாக விளையாடுவார். ஆஸ்திரேலியா அணிக்கெதிராக ஆட்டத்திறனில் கலக்கி, மும்பை வான்கடே மைதானத்தில் தலா ஒரு டெஸ்ட் , ஒரு, ஒருநாள் ஆட்டம் ஆகியனவற்றை வெல்ல உதவிய முரளி கார்த்திக்கிற்கு வேறொரு சிறப்பம்சம் இருக்கின்றது.(விடைக்கான உதவி : தனது ஒரே ஒரு டி20 பன்னாட்டுப்போட்டியை மும்பை வான்கடேயில் ஆடினார்)

விடைகள்

1. அனைவருக்கும் சச்சின் டெண்டுல்கர்தான், தங்களின் முதல் டெஸ்ட் விக்கெட்.

2.வி.வி.எஸ் லக்‌ஷ்மண் , ஒரு பக்கம் டெண்டுல்கர் அடித்தாடிக்கொண்டிருந்தாலும், தனக்கு வாய்ப்பு கிடைக்கும்பொழுதெல்லாம் ஒரு ஓட்டம் எடுத்து மறுமுனைக்கு வந்து , டெண்டுல்கருக்கு தொடர்ந்து வாய்ப்புக் கொடுத்துக்கொண்டே வந்தார். அந்த ஆட்டம் அவருக்கும் வெறும் மூன்றாவது ஒரு நாள் ஆட்டம்.

3. ராமன் லம்பா. பங்களாதேஷில் உள்ளூர் அணிக்காக ஆடிக்கொண்டிருந்தபொழுது , கிரிக்கெட் பந்து தலையில் பட்டு , அதன் தொடர்ச்சியாக மரணம் அடைந்தார்.

4. விஜய் பரத்வாஜ்.

5. சுனில் ஜோஷி

6. ஐபில் , ஸ்டான்ஃபோர்ட் டி20 இரண்டிலும் முதல் போட்டித்தொடரிலேயே பங்கேற்ற ஒரே வீரர் உலகளாவிய பெருமை முரளி கார்த்திக்கிற்கு உண்டு.


முதல் ஐந்து கேள்விகளின் விடைகள் அதற்கடுத்த கேள்விகளில் வரும்படியான Pattern இல் கேள்விகள் அமையப்பெற்று இருக்கின்றது.

Saturday, November 20, 2010

கல்கத்தா விஸ்வநாதன் - மும்மொழிகள் , பலப்பரிமாணங்கள்
தமிழ் திரைப்படங்களில் நாடகத்தனமாக மேல்தட்டு மக்களின் உடல் மொழிகளை திரையில் நடித்துக் கொண்டிருந்தவர்கள் மத்தியில், ஆங்கில உச்சரிப்புகளாகட்டும் , மேனாட்டு பாவனைகளை வெளிப்படுத்துவதாகட்டும் இருவர் தனித்து நினைவுக்கு வருவார்கள் ஒருவர் வீணை எஸ்.பாலசந்தர். மற்றொருவர் கல்கத்தா விஸ்வநாதன் என தமிழ்ப்பட உலகில் அறியப்படும் பேராசிரியர் என்.விஸ்வநாதன். திரையுலகில் இருந்தாலும் திரையுலகிற்கு அப்பாற்பட்டு வேறு துறைகளில் பிரகாசித்தவர்கள், அதுவும் தமிழ்த்திரை வரலாற்றில் மிகவும் குறைவு. சமீபத்தில் 90 களில் கனவு நாயகனாக இருந்த அரவிந்த்சுவாமி பின்னாளில் தகவல் தொழில்நுட்ப துறையில் பிரகாசித்தார். பணக்காரத் தோரணை நடிப்பில் கல்கத்தா விஸ்வநாதனுக்கு முன்னோடியான எஸ்.பாலசந்தர் வீணை மீட்டுவதில் சக்கரவர்த்தியாய் ஆகி, வீணை எஸ்.பாலசந்தர் என்ற அடையாளத்துடனேயே இன்று நினைவு கூறப்படுகிறார். கல்கத்தா விஸ்வநாதன் பிரகாசித்ததோ கல்வித்துறையில், ஆம் கல்கத்தாவின் நூற்றாண்டு பழமைவாய்ந்த புனித சேவியர் கல்லூரியின் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றியவர் என்.விஸ்வநாதன். லக்‌ஷ்மி மித்தல் புனித சேவியர் கல்லூரியில் படித்தபொழுது அவரின் ஆங்கில ஆசிரியர் என்.விஸ்வநாதன் தானாம்.திராவிடமொழி திரைப்படங்களில் ஒன்றிற்கு மேற்பட்ட மொழிகளில் பிரபலமாய் இருப்பதில் பெரிய வியப்பில்லை. உதாரணமாக எஸ்.வி.ரங்காராவ் தெலுங்கிலும் மதிக்கப்படும் அளவிற்கு தமிழிலும் அறியப்படுகிறார். மலையாளத்தைபொருத்தவரை பிரேம் நசீர், பின்னர் மம்மூட்டி, இன்று பிரித்விராஜ். கன்னட மொழி திரைப்படங்களை எடுத்துக் கொண்டோமானால் ரமேஷ் அரவிந்த் , மோகன் (கன்னடத்தில் கோகிலா மோகன் என அறியப்படுகிறார்) ஆகிய ஒரு சிலர்தான். ஆனால் கிட்டத்தட்ட இரு வேறு துருவங்களாக இருக்கும் வங்காள மொழி திரைத்துறை, தமிழ் திரையுலகம் ஆகியன இரண்டிலும் பிரபலமாக இருந்தவர் என்.விஸ்வநாதன்.

”அந்தநாளில்” இவர் நடித்து இருந்தால் கல்கத்தா விஸ்வநாதனாக இல்லாமல் வேலூர் விஸ்வநாதனாகவே தமிழில் நிரந்தர இடம் பிடித்து இருப்பார். முதலில் தவறிய திரை அறிமுகம் மும்மொழிப்படமான “ரத்ன தீபம்” படத்தில் தேவகி குமார் போஸ் என்பவரால் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டார்.வேலூரில் பிறந்த இவர், கல்கத்தாவிற்கு இடம்பெயர்ந்ததனால் புனித சேவியர் கல்லூரியில் ஆங்கிலம் பயின்று கல்வியாளராய் ஆகி கல்கத்தா விஸ்வநாதனாய் தமிழ் உலகிற்கு வந்தார். இவரின் பெயர் தெரியாதவர்கள் கூட மூன்று முடிச்சில் கிட்டத்தட்ட மூன்றாவது கதாநாயகனாக , ரஜினிகாந்தின் அப்பாவாக ஸ்ரீதேவியின் கணவனாக நடித்திருப்பது நினைவிருக்கும். மூன்று முடிச்சு படத்தில் நடித்திருப்பவர்களின் பெயர்கள் போடப்படும்பொழுது பேராசிரியர்.N.விஸ்வநாத் எனக்குறிப்பிடப்படுகிறது.
ரஜினிகாந்தின் சிகரெட் பிடிக்கும் முறை எத்தனை ஸ்டைலாக இருக்கிறதோ , அத்தனை ஸ்டைலாக இவரது பைப் சிகரெட் பிடிக்கும் விதமும் இருக்கும். தமிழில் இவர் கடைசியாக பாபா திரைப்படத்திலும் ரஜினிகாந்தின் தந்தையாக நடித்தார்.நடிகர் திலகத்தின் நெருங்கிய நண்பரான விஸ்வநாதன், சிவாஜி கணேசனுடன் வெள்ளைரோஜா, கவரிமான் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.பாலுமகேந்திராவின் மூடுபனியிலும் விஸ்வநாதன் நடித்துள்ளார். அரபிந்த் கோஷு வங்காளத்திற்கும் தமிழகத்திற்கும் இணைப்புப் பாலம் ஆனதைப்போல, தமிழ் கலையுலகிற்கும் வங்காள கலையுலகிற்குமான சந்திப்புப் புள்ளி ஆனார். வங்காள நாடக, திரையுலகில் பெரிதும் மதிக்கப்படும் நடிகராக மட்டும் அல்லாமல் , நாடக , திரைப்பட கதாசிரியராகவும் விளங்கிய விஸ்வநாதனின் மகன் அசோக் விஸ்வநாதன் வங்காள மொழியில் குறிப்பிடத்தகுந்த முன்னணி இயக்குனர்களில் ஒருவர்.

சத்யஜித்ரே, மிருனாள் சென், பஹாரி சன்யால், உத்பல் தத், சோபி பிஸ்வாஸ் ஆகியோரின் விருப்பத் தேர்வு நடிகராக விளங்கிய விஸ்வநாதன் , சத்யஜித் ரேயின் முதல் வண்ணப்படமும் ,சத்யஜித் ரேயின் முதல் சொந்த கதை, திரைக்கதை முயற்சியுமான “கஞ்சன்ஜங்கா” திரைப்படத்தில் மேனாட்டில் கல்வி கற்ற கனவானாக நடித்த பானர்ஜி கதாபத்திரம் இன்றளவும் பேசப்படுகிறது. அவரின் அளவான நடிப்பைக் கீழ்காணும் காணொளியில் காணலாம்.பல்கலை கழக வளாகத்தில், பிரிட்டிஷ் உச்சரிப்பு, நடை உடை பாவனைகளுக்காகவே வெகுவாக மாணவர்களால் விரும்பப்பட்டதுடன் மட்டுமல்லாமல், கல்வித்துறை, நாடகம், இரு வேறு திரையுலகங்கள் என தனது தடத்தை திடமாகப் பதித்த பேராசிரியர் என்.விஸ்வநாதன் 17, நவம்பர் 2010 அன்று மாரடைப்பால் காலமானர். அன்னாருக்கு வயது 81. கல்கத்தா விஸ்வநாதன் கடைசியாக நடித்தப்படம் கும்ஸுதா , மகன் அசோக் விஸ்வநாதனின் இயக்கத்தில் இந்தி மொழியில் வெளிவந்த இப்படத்திற்கு கதை, திரைக்கதை திரு.விஸ்வநாதன். கும்ஸுதா என்பதன் தமிழாக்கம் இழப்பு. பேராசிரியர் விஸ்வநாதனின் மறைவு நிச்சயம் வங்காள நாடக, திரையுலகிற்கு மட்டும் அல்ல, தமிழ் திரைப்பட உலகிற்கும் ஒரு இழப்புதான். அவரின் ஆன்மா நிம்மதி அடையட்டும்.

Friday, November 12, 2010

புகலிடம் - சிறுகதை

என்னுடைய பாகிஸ்தானிய கல்லூரித் தோழன் ஷாகித் அலி எதிரே வருவதைப் பார்த்த பின்னர், அதுவரை, டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் செல்லும் கடைசி ரயிலுக்காகக் காத்திருக்கும் அடுத்த சில நிமிடங்களைத் தொலைக்க, நோக்கிக்கொண்டிருந்த சுவிடீஷ் மங்கையின் மேல் இருந்த பார்வையை எடுத்துவிட்டு,ஷாகித்திற்குப் புன்னகையைத் தந்தேன்.

மதம் அபின் மட்டும் அல்ல, அது ஒரு வைரஸ், மனித குலத்தைப் பீடித்திருக்கும் ஒரு நோய், நோயின் பக்கவிளைவுகள் கடவுள்கள் என்று எழுதி இருந்த பேஸ்புக் முகப்பு செய்திக்கு, கோப வார்த்தைகளில் ஆனாலும் ஓரளவிற்கு ஏற்றுக்கொள்ளும்படியான எதிர் வாதங்களைப்புரிந்தவன் என்பதனால் ஷாகித்தின் மேல் எனக்கு மரியாதை உண்டு.

அவனைச் சந்திக்கும்பொழுதெல்லாம் ஏதாவது சீண்டும் விதமாக கேள்வி கேட்டு என் குசும்புத்தனங்களை வெளிப்படுத்தினாலும், நான் எப்படி வெள்ளைக்கார ஐரோப்பியர்களின், இந்தியாவைப் பற்றிய சில்லறைத் தனமான கேள்விகளுக்கு தெளிவாகப் பதிலளிக்க முயற்சிப்பேனோ, அதேபோல் அவனும் தன்னாட்டு பெருமையை நிலைநிறுத்தும் விதத்தில் சில புள்ளிவிபரங்களுடன் பதில் தருவான். அவன் இந்தியாவைப் பற்றி கோபமாக பதிலளித்தது ஒரே ஒரு முறைதான்.

”ஷாகித், பாகிஸ்தானே தண்ணீரில் மிதக்கிறது போல, அறுபது வருடங்களில் உள்கட்டமைப்பை சரியா கொண்டு வந்திருக்கலாமே” என்றேன் ஆங்கிலத்தில்.

”நீங்கள் நதி நீர் பயங்கரவாதத்தை நிறுத்தினாலே நாங்கள் பிழைத்துக்கொள்வோம், நீங்கள் பஹ்லிஹர் அணையைத் திறந்து விட்டு விட்டீர்கள், நாங்கள் மிதக்கிறோம், கேட்கும்பொழுது கொடுக்காதீர்கள். எங்கள் வெள்ளத்திற்கு காரணம் நீங்கள் தான் ”

அதன் பின்னர் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளான அரசியலையும் கடவுளையும் பற்றி பேசுவதில்லை. கிரிக்கெட் மதம் ஆனால் நானும் ஆன்மீகவாதியாக மாறுவதில் பிரச்சினை இல்லை என்பதால் கிரிக்கெட்டைப் பற்றி மட்டும் அவ்வப்பொழுது பேசுவேன்.”பாவம், ஜூல்கர்னைன் ஹைதர், நல்ல கிரிக்கெட் ஆட்டக்காரன், பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது என நினைத்தேன். அவன் இப்படி ஓய்வுபெற்றது துரதிர்ஷ்டம்”

“அவன் ஒரு துரோகி, தேசத்துரோகி. பிரச்சினை என்றால் சொந்த நாட்டிற்கு வரவேண்டியதுதானே” சில உருது கெட்ட வார்த்தைகளை இடையில் சேர்த்து ஆங்கிலத்தில் பதில் சொன்னான்.

“சிறிய வயது, கொல்லப்படுவோம் எனப் பயப்படுமொழுது பாதுகாப்பான நாட்டிற்குப் போவதுதானே சரி. பிரிட்டிஷ் அரசாங்கம் எப்பொழுதுமே மனித உரிமைகளின் பாதுகாவலர்கள், குடியுரிமை கிடைத்துவிடும். எதிர்காலத்தில் ஹைதர் இங்கிலாந்து அணிக்காக விளையாடும் வாய்ப்பு இருக்கிறது ”

“உங்களின் ஜம்மு காஷ்மீரை விட, இந்தியாவின் கிழக்கு, வட கிழக்கு மாநிலங்களை விட எங்கள் நாட்டு மக்களுக்குப் பாகிஸ்தானில் பாதுகாப்பு அதிகம்” உணர்ச்சிவசப்பட்டு பேசினான்.

ஜனகண மன என ரட்சகன் நாகார்ஜுன் போல நரம்புகள் புடைத்தாலும், ரயில் சரியான நேரத்தில் வந்துவிட்டபடியால் ஷாகித் சென்ற நேர் எதிர் திசை பெட்டியில் ஏறி அமர்ந்து கொண்டேன். ஷாகித்தையும் ஜனகன மன வையும் மறந்துவிட்டு நாளை சமர்ப்பிக்கவிருக்கும், டென்மார்க் நாட்டிற்கான வேலை வாய்ப்புக்கான அனுமதி விண்ணப்பத்தையும் அதற்கான சான்றிதழ் நகல்களையும் சரிப்பார்க்கத் தொடங்கினேன். கிட்டத்தட்ட அமெரிக்காவில் வழங்கப்படும் கிரீன்கார்டு மாதிரியானது.தொடர்ந்து வேலை கிடைத்து நிரந்தரக் குடியுரிமைக் கிடைக்க அதிக வாய்ப்பு இருக்கின்றது. உலகத்திலேயே அதிகத் தரத்தில் சம்பளம், பாதுகாப்பான வாழ்வு என எனது அடுத்தத் தலைமுறையை நிம்மதியாக வாழ வைக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் தூங்கிப்போனேன்.

மறுநாள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் பொழுது, பரிச்சயமான குரல் கேட்பதை உணர்ந்து திரும்பிப்பார்த்தேன், தூரத்தில் ஷாகித் அலி கிரீன்கார்டு விண்ணப்பப் படிவத்தின் சில சந்தேகங்களை அங்கு இருக்கும் அலுவலர் ஒருவரிடம் கேட்டுக்கொண்டிருந்தான். அந்த வெள்ளைக்கார அலுவலர், விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்வதில் அவனுக்கு உதவிக்கொண்டிருந்தார்.

Thursday, November 04, 2010

காப்பி டம்ளர்கள் - சிறுகதை

மூன்று வருடங்கள் என்பது குறுகிய காலமாக இருந்தாலும், காதலில் தோற்றுப்போனவனுக்கு முப்பது வருடங்கள் போலத் தெரியும். இதேத் தெரு, இதே மார்கழி மாத குளிர்கால நாட்கள், இதே போல ஐந்து மணிக்கே இருட்டிய மாலைப்பொழுதுகளில் அம்முவுடன் எத்தனை சண்டைகள், சமாதானங்கள், ஒவ்வொரு சமாதானமும் காப்பி குடிப்பதில் தான் முடியும்.

என் அம்முவிற்கு சமாதானம் என கன்னத்தைக் காட்டுவதற்கு முன்னர் ஒரு காப்பி வாங்கித் தரவேண்டும், அதுவும் எதிர்த்த சந்தில் இருக்கும் நாதன் மெஸ்ஸில் தான் வாங்கித் தரவேண்டும். ஆவடியில் இருந்தாலும் சரி, கோவளத்தில் இருந்தாலும் சரி, மந்தைவெளிக்கு வந்து இதேக் கடையில் தான் குடிக்க வேண்டும், எல்லா விசயங்களையும் விட்டுத்தரும் அம்மு, இதில் மட்டும் பிடிவாதக்காரி. இரண்டு காரணங்கள், மெஸ்ஸின் அடுத்த தெருவில் அவளின் லேடிஸ் ஹாஸ்டல், இரண்டாவது இந்த மெஸ்ஸை நடத்திவரும் பாட்டி, அம்முவின் பாட்டியைப்போலவே இருக்கிறாராம். சுவீடன் போவதற்கு முந்தைய நாளில் காப்பி சுவையுடன் முதல் முத்தம் கிடைத்ததும் இந்த மெஸ்ஸில்தான்.

காப்பித் தூளின் விலை , டீத்தூளின் விலையை விட, அதிகம் என நடுத்தரக்குடும்பச் சூழலில் சிறுவயது முதல் டீ குடித்துப் பழக்கப்பட்டவனாதலால் காப்பியின் மேல் அவ்வளவு விருப்பம் இருந்தது இல்லை.

“உலகத்துல எனக்கு கார்த்திப்பிடிக்கும் , அதுக்கப்புறம் காப்பி பிடிக்கும்” என்றபடி

எவர்சில்வர் டம்ளரின் விளிம்பிற்கு இணையாக கட்டை விரலையும் ஆட்காட்டி விரலையும் வைத்துக்கொண்டு, ஒவ்வொரு மடக்கிற்கும் இடையில் ஒரக்கண்ணை சிமிட்டியபடி அம்மு காப்பிக் குடிக்கும் அழகே தனி. மெஸ்ஸில் ஏலக்காய் தட்டி தொண்டைக்குழியில் எப்பொழுதும் நிற்கும் சுவையுடன் கூடிய டீ கிடைத்தாலும், நான் காப்பி மட்டுமே குடிக்க வேண்டும் என்பது அம்முவின் கட்டளைகளில் ஒன்று.

முதல் தடவை காப்பிக் குடித்து முடித்தவுடன் அம்மு எவர்சில்வர் டம்ளர்களை ஒன்றினுள் ஒன்றாக இறுக்கமாக பிரித்து எடுக்க முடியாமல் வைத்து விட்டு, “நாம ரெண்டு பேரும் கடைசி வரை இப்படி பிரியாமல் இருக்கனும்” ஒவ்வொரு தடவையும் இப்படி டம்ளர்களுக்குள் கல்யாணம் நடக்கும்.

ஒரு தடவை அம்மு இரண்டு டம்ளர்களை ஒன்றினுள் ஒன்றாக வைக்க முயற்சிக்கும்பொழுது கடை பாட்டி வந்து சத்தம் போட்டுவிட்டார்.

அதற்கடுத்தாற்போல வரும் பொழுதெல்லாம், பாட்டியை வெறுப்பேற்ற அம்மு வேண்டும் என்றே டம்ளர்களை ஒன்று சேர்ப்பது போல பாவனை செய்து காட்டுவாள்.

“இனிமேல் உங்களுக்கு இதில் தான் காப்பி, உன்னால நாலு டம்ளர் இரண்டு ஆயிடுச்சு ” அம்மு சேர்த்து வைத்த இரு இரண்டடுக்கு டம்ளர்களில் காப்பி கொண்டு வந்து வைத்தார்.

மூன்று வருடங்களில் நாதன் மெஸ், நாதன் ஸ்வீட் ஸ்டால் ஆக சுருங்கி இருந்தது. கடையில் பாட்டி புகைப்படத்தில் மாலையுடன் வரவேற்றாள்.

“பாட்டி போன பிறகு சமைக்க ஆள் கிடைக்கல சார், அதுதான் வெறும் காப்பி, டீ ஸ்வீட் ஸ்னாக்ஸ் மட்டும் வச்சு, முதலுக்கு மோசமில்லாம ஓட்டிட்டு இருக்கேன்” இவர் பாட்டியின் தூரத்து சொந்தமாம், பாட்டிக்குப் பின் கடையை எடுத்து நடத்திக் கொண்டிருக்கிறாராம்.

காப்பியின் கசப்புகளின் எச்சம்போல, அம்முவும் கசப்புணர்வுகளை விட்டுவிட்டு போன பின்னர், காப்பியையும் வெறுக்க ஆரம்பித்து விட்டதால் ஏலக்காய் டீ சொல்லிவிட்டு, அம்மு இல்லாத வெறுமையை உணர்ந்து கொண்டிருக்கையில் இரண்டு மேஜைகள் தள்ளி இரண்டடுக்கு டம்ளர் ஒன்றிருப்பது கண்ணுக்குப் பட்டது. மெல்ல நகர்ந்து எச்சில் டம்ளராக இருந்த போதிலும் எடுத்துப் பார்த்துக் கொண்டிருக்கையில்

“சார், இது மாதிரி ஒன்னுக்குள்ள ஒன்னா இருக்கிற இன்னொரு டம்ளரும் இருந்துச்சு, போன வாரம் தான் ஒரு பொண்ணு அமெரிக்கா போறேன், இது காலேஜ் மெமரீஸுக்காக வேனும்னு வாங்கிட்டுப்போயிடுச்சு”

”அண்ணே, ஏலக்காய் டீ வேண்டாம், ஸ்ட்ராங்கா காப்பி போட்டுடுங்க” சிறிது நேரம் இடைவெளிவிட்டு “இந்த டம்ளரை நான் எடுத்துக்கவா”

Tuesday, October 26, 2010

கரையைக் கடக்கும் காதல்கள் - சிறுகதை

கரை கடந்த காமமும் காதலும் கள்ளதனமானதுதான் என்றாலும் கரையைக் கடக்க விரும்பும் அலைகளை நான் தடுப்பது இல்லை. அதற்காக அலைகளை வலுக்கட்டாயமாக என் திசை திருப்புவதும் இல்லை. என் பக்கம் திரும்பும் அலைகள், கடல் தான் நிதர்சனம் என உணர்ந்து திரும்ப நினைக்கும்பொழுது தடுக்கவும் நினைப்பதில்லை. அவள் இருந்தவரை அவளை மட்டும் காதலித்தேன், அவளின் உடலையும் உள்ளத்தையும் சம அளவில். உள்ளம் தொலைந்து ஐந்து வருடங்கள் ஓடிவிட்ட நிலையில், ஒவ்வொரு வார இறுதிகளிலும் அவளின் உடலை வெவ்வேறு பெண்களில் தேடிக்கொண்டிருக்கின்றேன்.

இந்த வாரக் காதலி இன்னும் வரவில்லை. போன வாரம் தற்காலிக துணை தேடும் இணையதளத்தில் அறிமுகமானாபின்னர், வாரம் முழுமைக்கும் பேசிய இணையப் பேச்சில் இந்த வாரக் காதலிக்கும் என்னிடம் ஈர்ப்பு வந்ததும் சந்திக்க முடிவு செய்தோம். இந்தப் பெண்ணின் கணவன் வியாபரநிமித்தமாக லிஸ்பன் போவதால் இரண்டு இரவுக்களை என்னுடன் கழிக்க மனப்பூர்வமாக சம்மதித்தாள். புதிய தேடல்கள் தாமதமாகும் சமயங்களில்தான் இப்படித் திரும்பிப் பார்க்கும் சூழல் அமைகின்றது.

நான் காத்திருக்கும் ஸ்பானிய தேசத்துப்பிரபுக்களின் குடும்பத்தைச் சேர்ந்தவள்,இந்த மாதத்திய நான்காவது அறிமுகம். தென்மேற்கு சுவீடன் நகரில் இருக்கும் கனரக வாகனங்கள் தயாரிப்பு ஆலையின் நிர்வாக இயக்குனரின் மனைவி. பணக்கார அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த பெண்களுக்கு இருக்கும் அலட்சியம் நடுத்தர வர்க்கப் பெண்களைக் காட்டிலும் அதிகம் என நினைத்துக் கொண்டிருக்கையில், தாழிடாமல் இருந்த ஹோட்டல் அறையின் கதவைத் திறந்து கொண்டு ஸ்பானியப் பெண் உள்ளே நுழைந்தாள்.

”மன்னிக்கவும், வரும் வழியில் என் கணவர் தொலைபேசியில் அழைத்திருந்தார், அதனால் தான் தாமதம்” ஆங்கிலத்தில் சொன்னாள்.

என் அரண்மனைக்கு வந்தப்பின்னர் எனக்கான இன்றைய மலர் தனது தோட்டக்காரர்களைப் பற்றி பேசுவது எனக்குப்பிடிக்காது என்றாலும், தவிர்க்க முடியாதே. இருந்த போதிலும் படுக்கையில் தனது முதல் காதலனின் பெயரைச் சொல்லி அரற்றிய பெண்களைப் பார்த்தபின்னர் இது சாதாரணமாகவேப்பட்டது.

அவளின் குளிருக்கான மேலங்கியை கழட்ட உதவி செய்தபடியே “நீங்கள் என்னுடம் ஸ்பானிய மொழியிலேயேப் பேசலாம்” என்றேன்

“எனது தாய்மொழி பாஸ்க், அது உனக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, ஸ்பானிய மொழியில் உரையாட எனக்கு விருப்பமில்லை, இருவருக்கும் பொதுவான ஆங்கிலத்தில் பேசலாம்”

படுக்கைறையில் கூட தனது அடையாளங்களை விட்டுக்கொடுக்காத இந்தப் பெண்ணைப்பிடித்து இருந்தது, என்னுடைய அவளை நினைவுப்படுத்தியதால்.

பெண்கள் ஆடைகளுடன் தான் அதி அழகு என்பதை உடலை இறுக்கி அணிந்து இருந்த சிவப்பு மேலாடையும், அதே வகையில் அணிந்திருந்த கருநீல ஜீன்ஸும் உறுதிப்படுத்தின.நிர்வாணம் குறைவான கவர்ச்சியே என எண்ணிக்கொண்டிருந்தபொழுது, ஆடைகளற்று என்னை ஆரத்தழுவிக் கொண்டாள். இவளின் தேவை கலவி மட்டுமே என உணர்ந்தபின்னர் வஞ்சகமில்லாமல் அலுப்புத் தீர அன்றிரவும் மறுநாள் இரவும் கொடுத்து முடித்தபின்னர்,

“இனி ஒரு மாதத்திற்கு ஒற்றைத் தலைவலி கிடையாது” என சொல்லியபடியே சில நூறு ஸ்விடீஷ் குரோனர்களை என் கையில் திணித்தாள்.

“நான் கிகாலோ இல்லை,கிகாபைட்டுகளுடன் சண்டையிடும் கணிப்பொறி வல்லுனன்,நீ இந்தப் பணத்தைத் திரும்ப எடுத்துக்கொள்ளாவிடின் என்னை அவமானப்படுத்தியதாக எடுத்துக்கொள்வேன்” குரலை உயர்த்தி சொன்னேன்.

“சரி, வழமைப்போல செய்துவிட்டேன், மன்னிக்கவும், உன்னுடைய அணுகுமுறைப்பிடித்து இருந்தது, நான் யாரிடமும் எனது உண்மையான தொடர்பு முகவரி அட்டையைக் கொடுப்பதில்லை, உன்னிடம் கொடுக்கத் தோன்றுகிறது” என தனது முகவரி அட்டையைக் கொடுத்தாள்.

தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களைத் தவிர, என்னுடையத் தற்காலிக காதலிகளை திரும்ப சந்திக்க விரும்புவதில்லை. அவர்களுடையத் தகவல்களை தெரிந்து கொள்ள விரும்புவதுமில்லை. இணைய தளங்களில் எனது படத்தில் உடல் மட்டுமே காட்டப்பட்டிருக்கும்.சில காரியங்கள் புனைப்பெயர்களிலேயே நடத்தபடுவது மட்டுமே சம்பந்தப்பட்டவர்களுக்கு நலம் என பணத்துடன் முகவரி அட்டையையும் திரும்பக்கொடுத்தேன்.

“சரி, உனது நிஜமான பெயர் முகவரியாவது கொடு, பின்னொரு சமயத்தில் வேறு யாருக்கேனும் தேவைப்பட்டால் கொடுக்க உதவியாக இருக்கும்”

“அவசியமில்லை, எனது புனைப்பெயரில் இருக்கும் மின்னஞ்சலைத் தொடர்பு கொள்ளுங்கள், எனது இரண்டு வெவ்வேறு உலகங்களை இணைக்க விரும்பவில்லை”

ஒரு பக்கம் சுகம், மகிழ்ச்சி,என இருந்தாலும் நான் செய்ய எத்தனிப்பது ஒருவகையான தேடல், ஒவ்வொருப் பெண்ணையும் அவளாகவே நினைத்து அணுகுவது என் தோல்வியின் வடிகாலாக நினைத்துக் கொள்கின்றேன்.

உடல் சுகத்திற்காக பெண்கள் என்னிடம் வருகிறார்கள் என்ற எண்ணத்தை மாற்றியவள் ஒரு டேனிஷ் பெண், வரும்பொழுதே கீட்ஸின் கவிதைத் தொகுப்பைக் கொண்டு வந்திருந்தாள்.

“உன் குரலில் இதை வாசித்துக் கேட்டால் நன்றாக இருக்கும் என நினைத்தேன்”

வார்ஸாவா பல்கலை கழகத்தில் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்தின் கவிதைகளை அவளுக்கு வாசித்துக்காட்டியதை நினைவுப்படுத்தினாள் இந்த டேனிஷ் பெண்.

டேனிஷ் பெண்ணின் உள்ளங்கவர்ந்த வரிகளை வாசிக்கும்பொழுதெல்லாம், மெல்லிய முத்தம் கொடுத்து என்னை தொடரச்செய்தாள். டேனிஷ் பெண்ணிற்கு கவிதைகள் தேவைப்பட்டதைப்போல, எனக்கு உடற்கவிதைத் தேவைப்பட்டது. முழுத் தொகுப்பையும் படித்து முடிக்கும் வரையில் முத்தத்தைத் தவிர வேறு எதையும் அனுமதிக்கவில்லை. ஒரு வழியாக உடலையும் வாசித்து முடித்தப்பின்னர், அவள் சொன்னது

“என் கணவர் உன்னைவிட கலவியில் மிகச்சிறந்தவர், நான் உன்னிடம் வந்தது உன் குரலில் கவிதை வாசிப்பிற்காகத்தான்”

அதன்பின்னர் டேனிஷ் பெண்ணைச் சந்திக்கவில்லை என்றாலும் நான் புனைப்பெயரில் மின்னரட்டையில் இருக்கும்பொழுது தொடர்பு கொண்டு ஏதேனும் படித்துக் காட்டச்சொல்லுவாள். மற்றொருத்தி நான் கிட்டார் வாசிப்பேன் எனத் தெரிந்ததும் ஒவ்வொரு முறையும் சில நிமிடங்கள், என்னை கிட்டார் வாசிக்க சொல்லி தன்னை தயார்ப்படுத்திக்கொண்டாள்.

பிரிதொரு சமயத்தில் ஒரு பிரெஞ்சுக்காரி என்னுடைய காலாரசனைகளைப் பார்த்து விட்டு

“நீ ஏன் கணினிப்பக்கம் போனாய், உன் ரசனைக்கு நீ கலைத்துறையைத் தான் எடுத்திருக்க வேண்டும்”

“கட்டிடக்கலையை எடுத்துப்படித்தால் கையில் காசு பார்க்க முடியாது என இதை எடுத்தேன், இது சலிப்பூட்டினால் ரோமன்போலன்ஸ்கியிடமோ ஹியுகோ சாவேஸிடமோ போய் விடுவேன்”

“நீ நிஜமாகவே போலாந்துக்காரன் தானா?"

”பாதி போலாந்து, பாதி பிரெஞ்சு” என்றேன் பிரெஞ்சில். பிரெஞ்சுக்காரியின் ஆங்கில முத்தங்களுக்கு இடையில் அரசியல் விமர்சனங்களுடன் அன்றைய பொழுது கழிந்தது.

உடல் சுகத்தைக் காட்டிலும் பெண்களுக்கு தன் துணையிடம் கிடைக்காத வெவ்வேறு விசயங்கள், வேறு ஒரு ஆணிடம் இருந்து எதிர்ப்பார்க்கப்படுகிறது என்பதை சிலர் புரிய வைத்தனர். யாராவது அவர்களின் ஆர்வங்களைக் கேட்கவேண்டும். மற்றொருத்திக்கு விசயங்களை விவாதிக்கும் ஒரு நண்பனாக ஒரு ஆண் வேண்டும். சிலருக்கு இசை வேண்டும். வேறு சிலருக்கு இன்பம் மட்டும் வேண்டும். ஒரு பெண்ணிடம் இழந்த வாழ்க்கையை கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு பெண்ணிடம் இருந்து மீட்டெடுப்பதாகத் தோன்றியது.

பெண்மையிடம் இருந்து மென்மையை மட்டும் எதிர்பார்க்கும் நான், கட்டி வைத்து, அடித்து, சித்ரவதை செய்து குரூரமாக இன்பத்தை எதிர்பார்க்கும் பெண்களிடம் இணைய அரட்டையில் கூட தொடர்பு கொள்வது கிடையாது. என்னைவிட அதிகபட்சம் ஐந்து வயது அதிகம் அல்லது குறைந்த பட்சம் ஐந்துவயது குறைவு என்ற அளவுகோலில்தான் பெண்களைத் தேர்ந்தெடுத்துப்பதில் ஒரு சம்பவத்தைத் தவிர சமரசம் செய்து கொள்வது கிடையாது. வயதுக்கட்டுப்பாடு மனரீதியாகவும் ஏறத்தாழ ஒரே அலைவரிசையில் இருக்கவேண்டும் என்பதற்காக.

“உன்னைப்போலவே நானும் போலிஷ் அம்மாவிற்கும் பிரெஞ்சு அப்பாவிற்கும் பிறந்தவள், என் காதலன் என்னை ஏமாற்றிவிட்டான், அதில் இருந்து மீள ஒரு ஆணின் ஸ்பரிசம் தேவை, உன்னைவிட 8 வயது சிறியவளாய் இருந்தாலும் என்னை ஏற்றுக்கொள்” எனக் கெஞ்சி அரற்றிய ஒருத்தியத்தவிர வேறு எந்த சிறு பெண்களையும் அணைத்ததில்லை. இந்தப் பெண்ணிற்கு தோள்பட்டையின் மேல் ஒரு குரோனர் நாணயத்தைப்போல ஒரு மச்சம், இது வயது வித்தியாசம், சொந்த நாட்டுப் பெண்களைத் தொடுவதில்லை என்ற கொள்கை முடிவு என்பதை எல்லாம் தூர தூக்கிப்போட வைத்தது.என்னுடன் இருந்த இரவுக்குப்பின்னர், ஒருவாரம் கழித்து தனது காதலனுடன் இணைந்துவிட்டதாக தகவல் அனுப்பி இருந்தாள்.

இந்த வாழ்க்கை எனக்குப்பிடித்திருக்கிறது, ஐந்து நாட்கள் நிஜமான உலகில், கண்ணியவானாக, நெருங்கியவர்களுக்கு உற்றத் தோழனாகவும், நெருங்கிப்பழகும் தோழிகளிடம் காமமற்ற நட்பும் காட்டி ஒரு கணவானாக வாழ்ந்துவிட்டு , வார இறுதிகளில் அறிமுகமற்ற நகரங்களில், அறிமுகமற்ற சுவர்களின் மத்தியில் அறிமுகமற்ற பெண்களிடம் பழைய அறிமுகத்தைத் தேடித் திரிவது. இவையனைத்தும் அடுத்த சில வருடங்களுக்கு நன்றாகவே தொடர்ந்தது, பழைய ஸ்பானியப் பெண்ணிடம் இருந்து ஒரு தகவல் வரும் வரை. ஸ்பானியப்பெண்ணிற்கு ஒரு போலிஷ் தோழியாம், அவள் விரக்தியின் விளிம்பில் இருக்கின்றாளாம். மாறுதலுக்காக ஸ்வீடன் வருகிறாளாம். உடலுக்கும் உள்ளத்திற்கும் ஒரு சில இரவுகள் வேறு துணை தேவையாம், அவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அனுப்பி இருந்தாள். ஸ்பானியப் பெண்ணுடன் நிற்பது அவளேதான் !! பத்து வருடங்களில் முகம் சற்று தொய்வடைந்திருந்தாலும் அந்த தோள்பட்டை மச்சம் அவளே என உறுதிப்படுத்தியது.

Tuesday, October 19, 2010

உபரி ஓட்டங்கள் (Extras 19-October-2010)

கிழக்கிற்கு மேற்கின் வளமையை நோக்கி நகர ஆசை, மேற்கிற்கோ கிழக்கத்திய தத்துவங்களின் மேல் ஆர்வம். அன்றைக்கு வழமைப்போல அம்முவின் பிரிவிற்கு முன்னான பழம் நினைவுகளை அசைபோட்டுக்கொண்டே, கார்ல்ஸ்க்ரோனாவில் இருந்து 45 நிமிடங்கள் தொலைவில் இருக்கும் கார்ல்ஸ்ஹாம்ன் நகரத்திற்கு ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும்பொழுது, திடீரென ஒருவர் தோளைத் தொட்டு, நீ இந்தியாவில் இருந்து வருபவனா எனக் கேட்டார். கூப்பிட்டவரின் தலை முடி நிறம் கருப்பு, உடல் நிறம் ஐரோப்பிய வெளுப்பு, கடினமான முகம் ஆகியனவை வைத்து அகதியாகத்தான் இருக்கும் என முடிவு செய்து கொண்டே அவரின் பக்கமாக திரும்பி என்ன சொல்கிறார் எனக் கேட்க ஆரம்பித்தேன். பொதுவாக வெள்ளைக்காரர்கள் தானாகவே இப்படிக் கேட்டால் கண்டிப்பாக ஏதாவது இந்து மத தத்துவங்களைப் பற்றி பேச ஆரம்பிப்பார்கள். இதற்கு முன்னர் ஒரு ரயில் நடத்துனர், பேச்சை ஆரம்பித்து ரஜினியின் பாபா படத்தில் பாபா படத்தை தனது கைப்பையில் இருந்து எடுத்துக்காட்டி என்னைக் கலவரப்படுத்தினார்.

இந்த அகதியின் பக்கம் திரும்பியவுடன் ஓம், க்ரீம் எனப் பாடத் தொடங்கினார், அய்யோ இதுவும் வழக்கம்போல ஏதாவது சமஸ்கிருதம் ஸ்லோகம் சொல்லி, இது தெரியுமா அது தெரியுமா எனக் கேட்கப்போகிறார் எனத் திகிலுடன் உற்று நோக்கினால், சில வார்த்தைகள் நிரம்ப பரிச்சயமானவை. அட, முருகா, வேலவா என அல்லவா பாடிக்கொண்டிருக்கிறார். தொடர்ந்து அவர் பாடிய மற்றொரு பாடல் வள்ளலாரின் பாடல். மழலைத் தமிழில் அவர் தொடர்ந்து பாடியது கடவுள் அவநம்பிக்கையையும் மீறி, ”எல்லாப்புகழும் இறைவனுக்கே ” என ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கார் மேடையில் சொல்லியபொழுது ஏற்பட்ட அதே சிலிர்ப்பைக் கொடுத்தது. அவர் ஒரு அல்பேனிய முஸ்லிமாம். 10 வருடங்களுக்கு முன்னால் திடீரென என எழுந்த ஒரு உள் உணர்வில் ஏதோ தேடப்போக, வள்ளலார் , முருகன் இப்படி தமிழ் சார்ந்த ஆன்மீகத்தின் மேல் ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டதாம். கைபேசியில் வைத்திருந்த வள்ளலார், முருகன் படங்களைக் காட்டினார். இம்முறை உளப்பூர்வமாக அவர் காட்டிய படங்களைப் பார்த்தேன். அடுத்த 30 நிமிடங்கள் மாணிக்கவாசகர், ஆழ்வார்கள் , நாயன்மார்கள் என எனக்குத் தெரிந்த விசயங்கள் என்றாலும் யாரோ, என் மொழிக்கும் அடையாளங்களுக்கும் சம்பந்தமில்லாத ஒருவரின் வழியாகக் கேட்டது ஆனந்தமாக இருந்தது.
---

சில வருடங்கள் முன்வரை திரைப்பட ரசிக சிகாமணிகள் செய்யும் போஸ்டர் ஒட்டும் வேலை, இணையத்தில் தனக்குப்பிடித்த பிரபல நடிகர்கள் படங்களை சிலாகித்து மேலும் பிரபலப்படுத்துபவர்களை கேலி கிண்டல் பேசிய நான், ரஜினிகாந்தின் திரைப்பட போஸ்டர்களைத் தெருத்தெருவாக ஒட்டுவேன் என கனவிலும் நினைக்கவில்லை. 90 கிலோமீட்டர்கள் சுற்றுவட்டத்தில் இருக்கும் நான்கு ஊர்கள் , 100க்கும் மேற்பட்ட எந்திரன் பட போஸ்டர்களை கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் இரண்டு நாட்களுக்கு ஒட்டியபொழுது, ரசிகர்களின் நுட்பமான ஆர்வத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது. சில இடங்களில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கிழிக்கப்பட்டிருந்தாலும் மீண்டும் அதே இடத்தில் மறுநாள் ஒட்டப்பட்டது. பேருந்து நிலையம், ரயில்நிலையம், கடைகள், கல்லூரி வளாகங்கள், அலுவலக வரவேற்பறை தகவல் பலகைகள் எங்கும் எதிலும் எந்திரன் மயம் தான். படத்தை விட , இந்த சுவரொட்டிகளைக் காணும்பொழுது பெரும் நிறைவு. நான் இருக்கும் பிலெக்கிங்கே மாநிலத்தில் ”எந்திரன்” இரண்டுக் காட்சிகள் இரண்டு நகரங்களில் நண்பர்கள் குழாமின் முயற்சியால் Fusion Edge Media LLC யினரால் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டது. பிலெக்கிங்கே மாநிலத்தில் முதன் முறையாக தமிழ் மொழியில் எடுக்கப்பட்டப்படம் திரையிடப்படுவது இதுவே முதன்முறையாகும். தனிப்பட்ட அளவில் விசாரித்தவரை வேறு எந்த இந்திய மொழிப்படங்களும் வெளியானதில்லை எனத் தெரிவித்தனர். அன்றைய தினம் இருந்த இதமான வெப்பநிலை, கால்பந்து ஆட்டங்கள் காரணமாக எதிர்பார்த்த அளவு உள்ளூர் மக்கள் வரவில்லை எனினும் , மனதுக்கு நிறைவு தரும் அளவிற்கு அரங்கம் இருந்தது. ரோன்னிபெ, கார்ல்ஸ்க்ரோனா நகரங்களில் ஒரு தமிழ்ப்படம் வெளியாவது என்பது தேனி உசிலம்பட்டி வகையிலான ஊர்களில் ஒரு சுவிடீய மொழித் திரைப்படம் வெளியாவதற்கு சமமாகும். ஒரு கலாநிதி மாறனால் ரஜினியின் பொலிவில், ஷங்கரின் கற்பனையில் எங்கோ ஒரு தேசத்தில், தமிழறியாத சிறுநகரங்களில் தமிழை ஒலிக்க வைக்க முடிகிறதென்றால் கண்டிப்பாக எந்திரன் வெற்றியே !!


-----
சிறிய வாசகர் வட்டத்தை மட்டுமே கொண்டுள்ள எனது வலைபதிவையும் சிறுகதைகளையும் மேலும் பிரபலப்படுத்தும்
கட்டமாக நண்பர்களின் உதவியுடன், சில சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. நேரம் இருக்கையில் வாசித்து அபிப்ராயங்களைத் தரவும்
http://translatedtamilstories.blogspot.com/ ஆங்கிலத்தில் நட்புக்காக மொழிப்பெயர்க்க விரும்புவர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.

எழுத்தின் வெற்றியும் உரிமையும் வாசிப்பவர்களின் புரிதலில்தான் என்பதால் படைப்புகள் அனைத்தும் படிப்பவர்களுக்கே சொந்தம். உள்ளடக்கத்தை சிதைக்காமல் படைப்புகளை எங்கு வேண்டுமானாலும் மறுபதிப்பு செய்து கொள்ளலாம். முன் அனுமதி பெறத் தேவையில்லை. தொடுப்போ பெயரோக் கொடுத்தால் மகிழ்ச்சி, கொடுக்கப்படவில்லை என்றாலும் வருத்தம் இல்லை.

------

தமிழின் கண்ணீருக்காக மனம் வருந்திய ஐரோப்பியர்களில் குறிப்பிடத்தக்கவர் கீழ்க்காணும் படத்தில் இருப்பவர். 10 வருடங்கள் தமிழர்களின் கனவுக்காக கடும் பிரயத்தனம் எடுத்தவர். எள்ளல்கள், குற்றச்சாட்டுகள் எதையும் பொருட்படுத்தாமல் திடமாக தமிழர்களின் பக்கம் கடைசிவரை நின்ற ஒரே ஐரோப்பியத் தலைவர்.யார் இவர்? என்பதை அறிய முடிகிறதா?


----


பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்

திரு மு.வரதராசனார் உரை - மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்

திருக்குறளை மறு வாசிப்பு செய்ய http://kurals.com/

Wednesday, September 29, 2010

குறுக்கே வரும் பூனைகள் - சிறுகதை

பெண்களுக்கு அடுத்தபடியா அழகும் சாதுரியமும் ஒரு சேர இருப்பது பூனைகளிடமே ! இங்கு சுவிடீஷ் பெண்கள் அழகு என்றால், அவர்கள் பூனைகளைக் கொஞ்சும் விதம் தனியழகு. இருந்தாலும் பெண்களைப் பிடிக்கும் அளவிற்கு பூனைகளைப் பிடிப்பதில்லை.பூனைகள் என்றாலே தரித்திரம் என்று மனதில் படிந்துவிட்டது.

இதற்கு காரணம் லால்குடியில் நாங்கள் இருந்த பொழுது, பக்கத்து வீட்டு ராகவன் சார் தான். அவர் அலுவலகம் செல்லுவதற்கு வெளியே கிளம்பும்பொழுதுதான் எதிர்த்த கிறிஸ்டோபர் வீட்டில் வளர்க்கும் பூனைகளில் ஏதாவது ஒன்று
வெளியே அவரின் குறுக்க ஓடிவரும். இடமிருந்து வலம் ஓடினாலும் சரி, வலமிருந்து இடம் ஓடினாலும் சரி, கருப்பு, வெளுப்பு, சாம்பல் எந்த நிற பூனையானாலும் சரி, வீட்டிற்குள் திரும்பி போய் தண்ணி குடித்துவிட்டுத்தான் மீண்டும் வெளியே போவார். போகும்பொழுது,

' ஏண்டா, பீடை , தரித்திரம் எத்தனை தடவை சொன்னாலும் உனக்கு அறிவே இருக்காதா!! புள்ளய வளர்க்கத் தெரியல பூனைய வளர்க்குறானுங்களாம்' கிறிஸ்டோபருக்கு குடும்பத்தோட திட்டு கிடைப்பதைப் பார்க்கையில் எனக்கு ஒரு ஆனந்தம்

ராகவன் சாருக்கு ஒரு மகள், நாங்க எல்லோருமே +2 , நானும் கிறிஸ்டோபரும் அரசினர் மேனிலைப்பள்ளி,ராகவன் சாரோட மகள், பெண்கள் மேனிலைப்பள்ளி. ராகவன் சார் வீட்டுல ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வரும் என்பதால் நான் ராகவன் சார் வீட்டுக்கும், கிறிஸ்டோபர் வீட்டுல பூனைகள் இருப்பதனால் ராகவன் சார் பொண்ணு கிறிஸ்டோபர் வீட்டுக்கும், கரிம வேதியியலுக்காக ராகவன் சார் பொண்ணும் கிறிஸ்டோபரும் என் வீட்டுக்கு வருவார்கள்.

'நாளைக்கு கார்த்தி வீட்டுக்கு படிக்க வர்றச்ச, பூனையையும் கொண்டு வா' இது ராகவன் சாரோட பொண்ணு கிறிஸ்டோபரிடம்.

பூனைகளைப் போய் கொஞ்ச வேண்டும் என்பதற்காகவே ராகவன் சாரோட பொண்ணு கிறிஸ்டோபரிடம் நெருக்கமாக இருப்பது எனக்குப் பிடிக்கவில்லை.

+2 கணக்கு பரிட்சை அன்றைக்குத்தான் பூனை குறுக்கேப் போகும் ராசியை உணர்ந்தேன். ஸ்டைலா கருப்பு பூனை கிறிஸ்டோபர் வீட்டை விட்டு எனக்கு முன்னால் கடந்து போன பின்னர், தேர்வு முடிவுகளில் கணக்கில் மதிப்பெண்கள் 184 என பார்த்த பொழுதுதான் பூனையின் ராசி புரிந்தது.

பொறியியற் கல்லூரி அனுமதி கிடைத்தவுடன் ராகவன் சாரின் பொண்ணிடம் காதலைச் சொல்லலாம் என நினைத்து, ராகவன் சார் பொண்ணு மட்டும் தனியா இருக்கிற நேரம் பார்த்து அவர் வீட்டுக்குப் போனால், ஒரு பூனைக்கு நான்கு பூனைகள் வீட்டில் இருந்து ஓடிவந்தன. கிறிஸ்டோபர் வீட்டு பூனைகள் இங்கே எப்படி என யோசித்துக்கொண்டே என வீட்டுக்குள் நுழைந்தால், உள்ளே ராகவன் சார் பொண்ணும் கிறிஸ்டோபரும் கட்டிப்பிடித்துக் கொண்டிருந்தார்கள்.
அதன் பின்னர் தான் பூனைகள் என்றாலே அலர்ஜி என ஆனது. சிலருக்கு நாயைக் கண்டால் கல்லெடுத்து அடிக்கத் தோன்றும், எனக்கு பூனைகளைப்பார்த்தால் அடி பின்னி எடுக்கனும் போல இருக்கும்.

தியாகராஜர்ல படிக்கிறப்ப, இருபதடிக்கு முன்னால் சாலையைக் கடந்துப் போய் கொண்டிருந்த பூனையைப் பார்த்து, பில்லியனில் உட்கார்ந்திருந்த நான், 'பூனை குறுக்கே போகுதுடா, இன்னக்கிப் போற காரியம் உருப்படாதே' கத்தியதால் வண்டியை ஓட்டிக்கொண்டிருந்த நண்பன் கவனம் சிதறி பள்ளத்தில் கவனிக்காமல் ஓட்ட, விழுந்து வாரிக் கொண்டோம்.

சின்ன சின்ன விச்யங்கள் தடைபடும்பொழுதெல்லாம் ஏதாவது ஒரு பூனை காரணமாக இருக்கும். பூனை இல்லாமல் எல்லாம் நல்ல சகுனமாகப் பார்த்து ஒரு நேர்முகத் தேர்வுக்குப் போன பொழுது, நன்றாகப் பதில் சொல்லி இருந்தபொழுதும், நான் தேர்ச்சி பெறவில்லை. திரும்பும்பொழுதுதான் கவனித்தேன், நிறுவனத்தின் வரவேற்பறையில் ஒரு பூனைப்படம் என்னைப்பார்த்து பல்லிளித்துக் கொண்டிருந்தது.

காலஓட்டத்தில் சகுனம் பார்ப்பது, மேலும் சில தேவை இல்லாத நம்பிக்கைகளில் இருந்து வெளிவந்துவிட்டாலும், இன்னும் பூனை பயம் மட்டும் போகவில்லை. சுவீடன் வந்து ஆறுமாதம் ஆகின்றது. ரயிலிலும் பேருந்துகளிலும் பூனைகளை சிறிய ஜன்னல் வைத்த பெட்டிகளில் மக்கள் யாராவது எடுத்து வரும்பொழுதெல்லாம் பயம் தொற்றிக்கொள்ளும். இதுவரை எதுவும் பெரிதாக நடக்கவில்லை, சிலப் பலமுறை பெண்களுக்காக , அவர்கள் பூனையைக் கொஞ்சும் அழகிற்காக பூனைகளையும் சேர்த்துப் பார்த்துத் தொலைக்க வேண்டியிருந்தது.

பூனைகளைப் பார்த்து இருந்தாலும் பூனை எதுவும் எனக்கு முன் குறுக்கேப் போனதில்லை என சந்தோசப்பட்டிக்கொண்டிருக்கையில், சாம்பல் நிறப்பூனை சரியாக அந்த சாலையின் திருப்பத்தில் இருந்த வீட்டின் உள்ளே இருந்து எனக்கு குறுக்காகக் கடந்துப்போனது. தரித்திரம் பீடை என ராகவன் சார் வார்த்தைகள் நினைவுக்கு வரும் முன்னர், பூனையின் பின்னாலேயே சுவிடீஷ் மங்கை ஒருத்தி அதைத் துரத்திக்கொண்டே போய் பிடித்து, என்னைப் பார்த்து சிறிய புன்னகை செய்துவிட்டு திரும்ப வீட்டிற்குள் சென்றுவிட்டாள். வெற்றுப்புன்னகையாக மட்டும் அல்லாமல் அதில் ஒரு உயிர்ப்பு இருந்தது. அன்று அலுவலகத்தில் அவளின் புன்னகையை மட்டும் யோசித்துக்கொண்டிருந்தேன். வேலைகள் எதுவும் ஓடவில்லை. இன்னும் நான்கு நாட்களில் ஒரு வேலைய செய்து முடிக்க கெடு வேறு இருந்தது.

மறுநாள் அதே நேரம், அதே பூனை, அதே வீட்டில் இருந்து, பின்னாலேயே அதே சுவிடீஷ் பெண்,புன்னகையுடன் ,கண்களில் கவிதையும்.

அடுத்த நாள் வேறு நிற பூனையைப் பின் தொடர்ந்து வந்தாள், பூனை அவளுக்குப் போக்குக் காட்டிவிட்டு வேறு எங்கோ சென்றுவிட்டது, பூனையைப் பிடிக்க முடியவில்லை என்ற சோகத்தைக் கண்களில் சொன்னாள். எனக்கும் வருத்தமாக இருந்தது.

பூனை வெளியே வருவதும் இவள் பின் தொடர்ந்து வருவதும் தற்செயலானதா , இல்லை எனக்காகவா என்பதை தெரிந்துகொள்ள, 15 நிமிடங்கள் தாமதமாகவே போனேன். வழக்கமாக இல்லாமல் அவளின் வீட்டிற்கு நேர் எதிரே இருக்கும் குறுக்குப்பாதையின் வழியாக வரும்பொழுது அவளின் வீட்டு மாடியைக் கவனித்தேன், குளிர்காற்று அடித்தாலும் கையில் பூனையுடன், நான் வழக்கமாக வரும் பாதையைப் பார்த்தபடி பால்கனியில் நின்று கொண்டிருந்தாள். அவள் என் பக்கம் திரும்புவதற்கும் நான் சாலையைப் பார்த்து செல்வதற்கும் சரியாக இருந்தது. பூனை குறுக்கே ஓடியது, அவள் பிடிக்கப்போகவில்லை. வாசலிலேயே நின்றபடி சிரித்தாள்.

ஒரு நாளில் முடிக்கப்பட வேண்டிய வேலை மூன்று நாட்களாக இழுத்துக் கொண்டிருக்கிறேன். சுவிடீஷ் மேலாளர்கள் கெடு நாள் வரை எதுவுமே கேட்க மாட்டார்கள்,சரியாக முடிக்கப்பட வேண்டிய நாளன்று தோண்டித் துருவுவார்கள்.மேலாளரை காலையிலேயே சந்திக்க வேண்டும் என்ற யோசனையுடன் வேகவேகமாக ரயிலைப்பிடிக்க வழக்கமான நேரத்தில் சென்றுக்கொண்டிருக்கையில், பூனைவீட்டு சுவிடீஷ் பெண், வாசலிலேயே நின்று கொண்டிருந்தாள், கிட்டத்தட்ட அவளின் வீட்டை கடக்கப்போகும்பொழுது, கையில் இருந்த பூனை கீழே குதித்து எனக்கு குறுக்காக ஓடிப்போனது. சின்னப்புன்னகையை நான் கொடுத்துவிட்டு நகர நினைக்கும்பொழுது,

'உர்ஷக்தா, யாக் வில் பிராத்தா மெட் தெய்க்' உன்னிடம் பேச விரும்புகின்றேன் என்பதை சுவிடீஷில் சொன்னாள். காலக்கெடு, சுவிடீஷ் மேலாளர் எதுவுமே தோன்றவில்லை, பூனைகள் குறுக்கே நெடுக்கே வந்து போவதை அலட்சியப்படுத்தி அவளிடம் பேச ஆரம்பித்தேன்.

Monday, September 27, 2010

சத்யா - குறும்படம் - ஒரு பார்வை

மனக்கண்ணில் விரிவதை குறுந்திரையில் விவரித்து, அதை விசிடிங் கார்டாக வைத்து எப்படியாவது கனவுத் தொழிற்சாலையில் காலடி எடுத்து வைத்து சாதித்து விடமாட்டோமா என ஏங்கும் நூற்றுக்கணக்கான இளைஞர்களில் நண்பர் திரு பிரபுவும் ஒருவர். என்னுடன் கல்லூரியில் படிக்கும் தமிழ் நண்பரான பிரபு , சத்யா எனற குறும்படத்தை எடுத்துள்ளார். மெல்லிய புன்னகையை வரவழைக்கும் முடிவு என்றாலும் , முடிவு முன்பாதியின் வலியை நீர்த்துப் போக செய்துவிடுகிறது. வாழ்க்கையில் சீரியஸாக இல்லாத , அல்லது சீரியஸாக இருப்பதைக் காட்டிக்கொள்ள விரும்பாத ஒருவனின் காதல் எப்படி கைகூடும் என குறும்படத்தைப் பார்த்தவுடன் யோசிக்க வைக்கிறது. இதுதான் இந்த குறும்படத்தின் பின்னடைவோ !!


நடுவில் வரும் நாயகனின் நண்பருக்கு தேவையில்லாத பின்னணி இசை , சட்டென உணர்வுப்பூர்வமான சூழலில் இருந்து அனாவசிய இயல்பற்ற மனநிலைக்கு மாற்ற முயற்சிக்கிறது. அந்தக் கதாபாத்திரத்தின் தேவையும் குறும்படத்தில் இல்லை.
காதலி சத்யாவின் மனதை ஊடுருவும் குரல் பிரமாதம். பிரிவுக்கு காரணம் நாயகனின் பெண் பித்து என நானாகவே ஊகித்துக் கொண்டேன்.

முடிவில் வரும் வசனங்கள் நாளைய இயக்குனர் புகழ் நளன் எடுத்த ஒரு குறும்படத்தை நினைவுப்படுத்துகிறது.

குறும்படத்தின் நீளம் அதிகமாக இருந்தாலும், கோர்வையாக இணைத்துள்ள இசைத்துணுக்குகள், இதமான ஒளிப்பதிவுடன் தொடர்ந்து பார்க்க வைக்கிறது. பங்கேற்றிருக்கும் அனைவருக்கும் இது முதல் முயற்சி என்பதால் என் சார்பில் பாராட்டுக்களைப் பதிவு செய்கின்றேன். நீங்களும் ஒரு எட்டு எட்டிப்பார்த்துவிட்டு அபிப்ராயங்களைச் சொல்லிவிட்டு போய்விடுங்கள்.


SATHYA--Tamil Short Film--2010
Uploaded by prabhuhearts. - Classic TV and last night's shows, online.

Friday, September 17, 2010

பிறன்மனை நோக்கா - சிறுகதை (தமிழோவியத்திற்காக எழுதியது)

எண்ட காதலி உங்களுக்கு மனைவி ஆகலாம், ஆனால் உங்க மனைவி எனக்கி திரும்ப காதலியாகாது சாரே , அந்த ஏழு நாட்கள் பாக்யராஜ் மாதிரி வாழ்ந்து கொண்டிருந்த நான் இப்பொழுதெல்லாம் மற்றவர்களுக்கு உரிமையான பெண்களிடம் அடிக்கடி சஞ்சலப்படுகின்றேன். சாதரண அழகுடையப் பெண்கள் கூட அடுத்தவனின் காதலி என அறியப்படும் பொழுது அவர்களின் மேல் இருக்கும் கவர்ச்சி மேலும் அதிகமாகுகிறது. வயது கடை இருபதுகளில் இருப்பது கூட ஒரு காரணமாக இருக்கலாம். அம்மு நீங்கலாக முன்னாள் காதலிகள் அனைவருமே அவர்களின் திருமண நிச்சயதார்த்ததிற்குப்பின்னர் “கார்த்தி, நீ ஒரு ஜெண்டில்மேன்” ஒரு முறையாவது சொல்லியதுண்டு. அம்முவின் திருமணத்திற்குப்பின்னர் அவளைச் சந்திக்கும் வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை. கிடைத்திருந்தால் அவளும் சொல்லி இருப்பாள்.

சபலங்களாலும் சஞ்சலங்களாலும் நிறைந்து இருந்து மனது, கிருஷ்ணமூர்த்தியின் காதலியைப் பார்த்தபின்னர் , அவளைக் கவர்ந்து ஒட்டு மொத்தமாக தனதாக்கிக் கொள்ளும் எண்ணங்களையும் விதைத்தது. பார்த்த மாத்திரத்தில் அடுத்தவனின் காதலியிடம் காதல் வயப்பட்டது கேவலமானதுதான், இருந்தாலும் என்ன செய்வது, ஆதிமனிதனின் ஜீன்கள் எங்கோ ஒளிந்து இருக்கின்றனவே!!

அம்முவைப்போல இருக்கும் பெண்களிடம் மட்டுமே அதீத ஈர்ப்பு வந்து கொண்டிருந்ததற்கு மாற்றாக , துளிகூட அம்முவின் தோற்றத்திற்கோ குரலுக்கோ நடை உடை பாவனைக்கோ சம்பந்தமில்லாத கிருஷ்ணமூர்த்தியின் சோமாலியா நாட்டுக் காதலி முதல் பார்வையிலேயே என்னை தடுமாற வைத்துவிட்டாள்.

வற்றிய வயிறு , ஒட்டியக் கண்ணங்கள் என பஞ்ச தேசம் அறியப்படும் சோமாலியாவில் இருந்து இப்படி ஒரு அழகியா ! மாநிறத்திற்கும் சற்றும் அதிகமான நிறத்தில் இருக்கும் பெண்களால் மட்டுமே ஈர்க்கப்பட்ட நான், முதன் முறையாக கருப்பும் அழகுதான் என அவளை டென்மார்க் தலைநகரான கோபன்ஹேகன் விமானநிலையத்தில் ரசித்துக் கொண்டிருதேன். கிளியோபட்ரா கருப்பு என்ற கூற்று நிஜமெனில், கிளியோபட்ரா இவளைப்போலத்தான் இருந்திருப்பாள்.

“கார்த்தி, பிரயாணம் எல்லாம் சௌகரியமாக இருந்ததா !! இது என் காதலி ஆமினோ” என என்னுடைய மனதுக்கினியவளை கிருஷ்ணமூர்த்தி அறிமுகப்படுத்தினான்.

கைக்குலுக்குவதா, கைகூப்பி வணக்கம் சொல்லுவதா என்ற ஒரு வித தயக்கத்திற்குப்பின்னர், தொட்டுப்பார்த்துவிடவேண்டும் என அழுத்தமாக ஆமினோவின் கைகளைக்குலுக்கினேன்.

நானும் கிருஷ்ணமூர்த்தியும் ஆத்மார்த்தமான நண்பர்கள் எல்லாம் கிடையாது , ஒரே கல்லூரியில் படித்தவர்கள், தேவைப்படும்பொழுது ஒருவரை ஒருவர் தங்களுக்கு சாதகமான விசயங்களுக்குப் பயன்படுத்துக் கொள்வதில் நாங்கள் இருவரும் சளைத்தவர்கள் இல்லை. நெதர்லாந்தில் நான் இருந்தபொழுது டி வால்லன் பகுதியைச் சுற்றிப்பார்க்க கிருஷ்ணமூர்த்தி வந்திருந்தான். தேவையான உபசரிப்புகள் அளித்ததன் பயன், நான் இப்பொழுது சுவீடன் செல்லும் முன்னர், கோபன்ஹேகனின் செலவில்லாமல் இரண்டு நாட்கள் தங்க இடம் கிடைத்திருக்கின்றது. இரண்டாமாண்டில் சுபத்ரா ரங்கனாதனையும் கடைசிவருடத்தில் ராகினி வாசுதேவனையும் காதலித்த கிருஷ்ணமூர்த்தி, கருப்பாய் இருக்கும் பெண்களின் மீதும் மோகம் கொள்வான் என்பது உறுத்தலாகவே இருந்தது. ஆமினோ அருகில் இல்லாதபொழுது அவனிடம் /என்னடா, உனக்கு கருப்பே ஆகாதே ‘ என நேரிடையாகவே கேட்டுவிட்டேன்.

“கருப்பா இருந்தா என்ன? வெளுப்பாய் இருந்தா என்ன? சிவப்பு பாஸ்போர்ட் கிடைக்கனும்னுதான் இந்தக் கருவாச்சியை ரூட் போட்டேன்”

ஆமினோ வின் பெற்றோர்கள் சோமாலியா நாட்டில் பணக்காரக் குடும்பங்களில் ஒன்று, பஞ்சமும், உள்நாட்டு பிரச்சினைகளும் தலைவிரிக்க ஆரம்பித்தபொழுது அகதிகளாக இங்கு வந்து ஒரு பதினைந்து வருடங்கள் ஆகின்றதாம். ஆப்பிரிக்கா பூர்வீக வளமும், டென்மார்க்கில் தட்டுக் கழுவி சேர்த்த பணமும் கோபன்ஹேகன் அகதிகளில் முதல் பணக்காரக் குடும்பம் என்ற நிலைக்கு கொண்டு வந்திருக்கின்றது என கிருஷ்ணமூர்த்தி விவரித்துக் கொண்டிருந்தான்.

அன்றிரவு மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் சாப்பிடும் உணவகத்தில் சாப்பிட்டோம். சுமாரான பெண்களே ஜொலிக்கும் மெழுகுவர்த்தியின் ஒளியில் ஆமினோ தேவதையைப்போல தெரிந்தாள். சிறிய அளவில் வைனுக்குப்பின்னர் ஆமினோவின் வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்து கதை பேச ஆரம்பித்தோம்.

ஆமினோ மனித உரிமைகள் படிப்பதாக சொன்னாள். ஈழம் பற்றி பேசினாள். ஈழத்தை எரித்ரியாவுடனும் கொசாவோ உடனும் ஒப்பிட்டு பேசினாள். சில தமிழ் படங்கள் பார்த்திருப்பதாக சொன்னாள் .பிடித்த படம் அன்பே சிவம் என்றாள். டென்மார்க் தமிழர்கள் நம்பகமானவர்கள் என்றாள். தத்துவங்களில் பொதுவுடமைப் பிடிக்கும் என்றாள். கிரிக்கெட் பார்க்கக் கற்றுக்கொண்டிருப்பதாக சொன்னாள். இந்திரா காந்தியை மானசீகமாக தலைவியாக ஏற்றுக்கொண்டதாவும் சொன்னாள். வெறும்பார்வையைக் காட்டிலும் பேசும் பாவங்களுடன் மேலும் அழகாகத் தெரிந்தாள். ஆமினோ என்றால் நம்பிக்கையானவள் எனப்பொருள் என்றாள். கிருஷ்ணமூர்த்தி தூங்கியபின்னரும் நாங்களிருவரும் பேசிக்கொண்டிருந்தோம். இரவோடு இரவாக, இவளை சுவீடனுக்குக் கடத்திக் கொண்டு போய்விடலாமா என ஒருக் கணம் யோசித்தேன். தெளிவான பேச்சு, வார்த்தைகளில் கண்ணியம் , கருத்துகளில் நேர்மை. தூங்குவதற்கு முன் கட்டியணைத்து “குட் நைட்” சொன்னாள்.

கிருஷ்ணமூர்த்தி அடுத்த நாள் நானும் ஆமினோவும் பேசுவதைத் தடுக்கும் வகையிலேயே ஏதாவது செய்துகொண்டிருந்தான். சுவீடனுக்கு கிளம்பும் அன்று ஆமினோவைப் பார்க்க முடியவில்லை. சுவீடன் வந்த முதல் வேளையாக அவளை பேஸ்புக்கில் இணைத்துக் கொண்டேன். தொடர்ந்து அவளின் புகைப்படங்களுக்கு அபிப்ராயங்களைத் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்த ஒரு நாள், கிருஷ்ணமூர்த்தி மின்னரட்டையில் வந்தான்.

எடுத்தவுடனேயே சோறுபோட்டு சாப்பிடுபவன் அடுத்தவனின் பொண்டாட்டியைப் பார்க்க மாட்டான் என்றான். ஏதோ குடித்துவிட்டு பேசுகிறான் என, “உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா” எனக்கேட்டபொழுது கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்ட ஆரம்பித்துவிட்டான்.
நான் எதிர்த்து பேசவில்லை, தவறு என் மேல்தானே !! பாம்பின் காலை பாம்பறிந்துவிட்டது. எனக்கும் ஏதோ அசிங்கத்தை மிதித்தது போல இருந்தது. தன் துணையை அடுத்தவன் பார்க்கிறேன் எனும்பொழுது வரும் ஆத்திரத்தின் வெளிப்பாடாகவே நான் உணர்ந்து கொண்டேன் . அதன் பின்னர் ஆமினோவையும் கிருஷ்ணமூர்த்தியுடன் பேஸ்புக்கில் உரையாடுவதை நிறுத்தியதோடு மட்டுமல்லாமல் பிறன் மனை நோக்குவதையும் அடியோடு நிறுத்தினேன்.

ஆறுமாதங்கள் ஓடி இருக்கும், திடீரென ஆமினோவிடம் இருந்து நலம் விசாரித்து ஒரு மின்னஞ்சல் வந்து இருந்தது. ஆமினோவின் பேஸ்புக்கில் ”ஸ்டேடஸ்” சிங்கிள் என மாறி இருந்தது. கிருஷ்ணமூர்த்தியை பொதுவான நண்பனாகவும் காட்டவில்லை.
முதல் வேளையாக கிருஷ்ணமூர்த்தியை ஒட்டுமொத்தமாக தடைசெய்து ஆமினோவிடன் பேச ஆரம்பித்தேன்.

--------------------
Sunday, September 05, 2010

கிரிக்கெட் நிகழ்வுகளின் நிகழ்கால ஊழல் - ஸ்பாட் பிக்ஸிங்

பாகிஸ்தானைப் பொருத்தமட்டில் மீண்டும் அதே பல்லவி, வெறும் குற்றச்சாட்டுகள், நிருபிக்கப்படவில்லை, நிருபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை. கிரிக்கெட் குற்றச்சாட்டுகளை விசாரித்த நீதிபதி கய்யாம் பின்னொரு நாளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் பலரைத் தனக்குப் பிடிக்கும் என்பதால் கடினமான தண்டனைகளைத் தர மனம் ஓப்பவில்லை என்றதில் இருந்து பாகிஸ்தானின் விசாரணை எந்த லட்சணத்தில் நடந்தது எனத் தெரியும்

தொடர்ந்து தமிழோவியத்தில் வெளிவந்துள்ள கட்டுரையைப்படிக்க இங்கே சொடுக்கவும்

Friday, September 03, 2010

அம்மு வெர்ஷன் 2 - சிறுகதை

வாசுகிரெட்டிக்கு இன்னும் செல்லப்பெயர் வைக்கவில்லை, வைக்கவும் தோன்றவில்லை. அம்மு, பொம்மு , குட்டிம்மா என வகையான வகையான பெயர்கள் முந்தைய காதலிகளுக்கே வைத்தே தீர்ந்துவிட்டது. புஜ்ஜிம்மா என கூப்பிடலாம் என்றால் “புஜ்ஜி பஜ்ஜின்னிட்டு “ என அம்மு திட்டினது நினைவுக்கு வந்தது.

”தீஸ்கோ” என ஒரு சின்ன டிபன் பாக்ஸை என்னிடம் கொடுத்தபடி, வாசுகி அருகில் வந்து அமர்ந்தாள். வாசுகியை எனக்கு ஏன் பிடிக்கும் என்றால் அச்சில் வார்த்தது போல அம்முவின் முகமும் குரலும். அம்முவைத் தொலைத்து ஒரு வருடம் ஆகிய நிலையில் அவளின் நகலிடம் மனம் மீண்டும் ஒரு முறை தொலைந்துப்போனது.

”வாசுகி, நீ ஒரு சின்னப் பொட்டு நெற்றியில் வைத்துக்கொண்டால் இன்னும் அழகாக இருப்பாய்” என்றேன் ஆங்கிலத்தில்.

சுவீடன் வருவதற்கு முன்னர் அம்மு என்னிடம் கேட்டது சின்ன ஸ்டிக்கர் பொட்டுகள் தான். அம்முவின் சின்ன ஸ்டிக்கர் பொட்டு, முழுக்கை சுடிதார், சிம்ரானைப்போல முன்பக்கமா துப்பட்டா என வாசுகிக்கும் கற்பனை செய்துபார்த்தேன்.

“கார்த்தி, தட் வோண்ட் கோ வெல் வித் ஜீன்ஸ் அண்ட் டீஷர்ட்” வாசுகியின் பதில் நான் நினைத்ததற்கு நேர்மாறாக இருந்தது. ஒரு மாதம் தானே ஆகின்றது, போகப்போக கொஞ்சம் கொஞ்சமாக இவளை முழு அம்முவாகவே மாற்றிவிடலாம்.

வாசுகிக்கு அடுத்தவாரம் பிறந்தநாள், வாசுகிக்கு கைக்கடிகாரம் கட்டும் பழக்கம் இல்லாததால், இந்தியாவில் இருந்து ஒரு கைக்கடிகாரமும் முழுக்கை சுடிதாரும் வரவழைத்து இருந்தேன்.
அம்முவிற்கும் என்னுடம் பழகுவதற்கு முன்னர் கைக்கடிகாரம் கட்டும் பழக்கம் இல்லை, ஆனால் நான் வாங்கிக் கொடுத்த கைக்கடிகாரத்தை, என்னைப்போல வலது கையில் கட்டிக்கொண்டாள். அம்மு செய்ததையே வாசுகியும் செய்வாள் என உள்மனது சொல்லியது.

பிறந்த நாளன்று, கார்ல்ஸ்க்ரோனா ரயில்நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தேன். முதல் வருத்தம், கடிகாரத்தை இடது கையில் கட்டி இருந்தாள், அடுத்தது முழுக்கை சுடிதாரை அரைக்கையாக மாறி இருந்தது. அடுத்த நான்கு மணி நேரத்திற்கு வாசுகி முழுப்பாசத்துடன் என்னுடன் நடந்து கொண்டாலும், என் மனம் முழுக்க வெட்டப்பட்ட சுடிதார் கையிலும், கடிகாரத்திலுமே இருந்தது. அம்மு எப்படியெல்லாம் போட்டோவிற்கு போஸ் கொடுப்பாளோ அதைப்போல வாசுகியை நிற்க வைத்து நடக்க வைத்து வித விதமாக படம் பிடித்துக் கொண்டேன்.

“ஷோ மி யுவர் எக்ஸ் கேர்ல் அம்மு`ஸ் போட்டோ” மற்றொரு நாள் கல்லூரியில் வாசுகியுடன் அமர்ந்து மின்னஞ்சல்களைப் படித்துக் கொண்டிருந்தபொழுது கேட்டாள்.

உடனே அவளை கல்லூரியின் பிரதிபலிக்கும் கண்ணாடி சுவர்களின் முன் கொண்டு போய் நிறுத்தி, நீ தான் அவள், அவள் தான் நீ என சொல்லிவிடலமா என நினைத்தேன். தன்னை நேசிக்கவில்லை, யாரொ ஒருத்தியின் பிம்பமாக தன்னை நேசிக்கின்றான் என அவள் நினைத்து விட்டால் முதலுக்கே மோசமாகிவிடுமே என, எனது பிஈ கல்லூரித் தோழி ஒருத்தியின் புகைப்படத்தை மானசீகமாக, தோழியிடம் மன்னிப்புக் கேட்டபடியே இது தான் அம்மு எனக் காட்டினேன்.

வாசுகியின் என் மீதான அக்கறை சில சமயங்களில் அம்முவை விட அதிகமாக இருந்தாலும்,பல பழக்க வழக்கங்கள் அம்முவிற்கு நேரெதிரிடையாக இருந்தது. சுத்த சைவ அம்முவின் முகம் ஹம்பர்கர், போர்க் என கலந்து கட்டி அடிப்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

சிலநாள் கெஞ்சி, கொஞ்சி பின்னர் ஒரு வாரம் பேசாமல் இருந்து, வாசுகியை பொட்டு வைக்க வைத்துவிட்டேன். கைக்கடிகாரத்தை வலது கையில் கட்ட வைத்துவிட்டேன். சத்தம் போட்டு சிரிக்கக்கூடாது , மென்மையாக சிரிக்கவேண்டும், ஆண்களைத் தொட்டுப் பேசக்கூடாது, மாட்டிறைச்சி, பன்றிக்கறிக்கு தடை என கொஞ்சம் கொஞ்சமாக வாசுகியை அம்முவாக மாற்றிக்கொண்டிருந்த பொழுது என் ஆளுமையை நினைத்து எனக்கே பெருமையாக இருந்தது.

கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கழித்து வாசுகியையும் அம்மு எனக்கூப்பிட ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் காரணத்தை ஊகித்து முகம் சுழித்தாலும் அதையும் தமிழுடன் பழகிக்கொண்டாள்.

“அம்மு, எனக்கொரு செல்லப்பேரு வையேன்”

சில நிமிடங்கள் யோசித்துவிட்டு “பிரஸி” என்றாள். அடுத்த சில நொடிகளுக்கு என் மனது பிரஸி என்பதற்கு காரணம் என்னவாக இருக்கும் என , சூப்பர் கம்ப்யூட்டர் வேகத்தில் சிந்திக்க ஆரம்பித்தது, பிரசாத் , பிரசன்னா என இவளுக்கு ஏற்கனவே காதலர்கள் யாரவாது இருந்திருப்பார்களா, அதைத் தான் சுருக்கி பிரஸி எனக்கூப்பிடுகிறாளோ !! அவள் எதிர்ப்பக்கம் அமர்ந்திருந்ததால் , இந்தப் பெயர்களில் யாராவது அவளுக்கு நண்பர்கள் இருக்கின்றனரா என அவளின் பேஸ்புக்கில் மேய்ந்தேன். அவள் சென்ற பின்னர், சந்தேகத்தின் உச்சத்தில், அவளின் மின்னஞ்சலிலும் நுழைந்து ஒவ்வொன்றாக துழாவ ஆரம்பித்தேன். வாசுகியின் அப்பா அவளுக்கு அனுப்பி இருந்திருந்த மின்னஞ்சலின் மூலமாக, வாசுகியின் முழுப்பெயர் வாசுகி பிரசாத் ரெட்டி என்பது நினைவுக்கு வர ஆறு மணி நேரம் ஆகியது. படபடப்பு அடங்கிய பின்னர் மறுநாளில் இருந்து அம்முவை வாசுகியிடம் தேடுவதில்லை. அசலை சுத்தமாக மறந்து விட்டு நகலைக் காதலிக்க ஆரம்பித்தேன்.

Monday, August 30, 2010

வினையூக்கி செல்வா - கிரிக்கெட் விமர்சகர் - நன்றி புதிய தலைமுறை

எப்பொழுதாவது என்னையும் 'ரவுடி' என மதித்து ஜீப்பில் ஏற்றிக் கொள்கிறார்கள். சேவாக் - ரன்தீவ் நோ-பால் பிரச்சினையைப் பற்றி புதிய தலைமுறை இதழில், நான் சொன்ன கருத்து, குட்டி கட்டுரை அளவில் கிரிக்கெட் விமர்சகர் வினையூக்கி என்ற அடைமொழியுடன் வந்து இருக்கிறது .

புதிய தலைமுறைக்கும் , கருத்து கேட்ட அதிஷாவிற்கும் நன்றி

Saturday, August 14, 2010

நாக்ருதனா திரன்னனா நா


இளையராஜா, தனது கர்நாடக சங்கீத குருவான டி.வி.கோபாலகிருஷ்ணனை டிக் டிக் டிக் திரைப்படத்தில் கதையின் மூன்று நாயகிகளையும் ஒரே காட்சியில் நீச்சலுடைகளில் மிதக்கவிட்ட இது ஒரு நிலாக்காலம் பாடலின் இடையில் வரும் மாதவியின் நாட்டியத்திற்கு நாக்ருதனா திரன்னன வரிகளைப் பாடச் சொல்லி இருக்கும்பொழுது , அது பிற்காலத்தில் ஜொள்ளுக்கான இசையாக மாறி விடும் என நினைத்தே பார்த்து இருக்க மாட்டார். டி.வி.கோபாலகிருஷ்ணனின் குரலை பிற்பாடு அந்தி மழை பொழிகிறது இடையினில் பயன்படுத்தி இருப்பார்

அமெரிக்க ஜனாதிபதியின் நெஞ்சினில் பாய்ந்த குண்டை எடுக்க கண்டுபிடிக்கப்பட்ட மெட்டல் டிடெக்டர் பிற்பாடு பாதுகாப்பு கருவிகளில் முக்கியமான ஒன்றாக மாறியதைப்போல நாக்ருதனா மெட்டும் எதிர்பாராத விதத்தில் பிரபல்யம் அடைந்தது.
80 களின் மத்தியில் பக்யராஜின் (டிக்டிக்டிக் படத்திற்கு திரைக்கதை பாக்யராஜ் என்பதும் குறிப்பிடத்தக்கது) இயக்கத்தில் வெளிவந்த சின்னவீடு திரைப்படத்தில் , நாயகன் வேறு பெண்களைப் பார்த்து சலனப்படும் பொழுதெல்லாம், இளையராஜா இந்த மெட்டை பின்னணி இசையாகப் பயன்படுத்தி இருந்ததோடு மட்டுமல்லாமல் மச்சமுள்ள ஆளுட பாடலின் இடையிலும் சேர்த்து இருப்பார்.

கிட்டத்தட்ட 25 வருடங்களுக்குப்பிறகு சமீபத்தில் வெளிவந்த கோவா திரைப்படத்தில் கதையின் நாயகர்களில் ஒருவரான வைபவ் பெண்களைப் பார்த்து சலனப்படும் பொழுதெல்லாம் வரும் இசைக்கோர்வையாக மீள்பதிவு செய்யப்பட்டு இன்றைய இளைய சமுதாயத்தினரின் கைபேசி அழைப்பு மணியாக ஆகிவிட்டது.
கடைசியாக ஆன்மீகக் கதவுகளைத் திறந்து கடலைக் காற்றாய் இந்த 30 வினாடிகள் ஓடும் நாக்ருதனா திரன்னனா நா வரிகள் நான்காவது முறை நக்கீரனின் பார்வையால் ஜென்ம சாபலயம் அடைந்தது.

Sunday, August 08, 2010

அல்லேலூயா - சிறுகதை

“கார்த்தி, டுமர்ரோ நதொ கார்ல்ஸ்க்ரோனா சர்ச்சுக்கு வஸ்தாவா?” இப்படி கேட்டது வாசுகிரெட்டி.

பழைய காதல்களில் ஒன்று இந்நாளைய காதலியின் மூலம் நினைவுப்படுத்தப்படும் பொழுது , அதுவும் எந்த விசயத்திற்காக விலகினோமோ அதே விசயத்தின் வாயிலாக ஞாபகப்படுத்தப்பட்டால் கொஞ்சம் அசூயையாகவே இருக்கும்.

ஆந்திரா பழைய முதலமைச்சர் ராஜசேகரரெட்டி வகையில் வாசுகிரெட்டியும் கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்தவள்.

“நீங்க எல்லாம் ஏன் சர்நேம் வச்சுக்க மாட்டுறீங்க” ஒருநாள் வாசுகி என்னிடம் கேட்டாள்.

“ராமச்சந்திரன் அப்படின்னு எங்க அப்பாபேரை பின்ன வச்சிருக்கேனே, அதுதான் சர்நேம்”

“அதி லேது, ராவ், ரெட்டி, நாயுடு, சவுத்ரி, துடுக்கலா, ராஜூ, டோண்ட் யு ஹெவ் சர்நேம் லைக் திஸ்? ”

இவை எல்லாம் குடும்பப்பெயர்கள் அல்ல, சாதிப்பெயர்கள் என சொல்ல நினைத்ததை அவளிடம் சொல்லவில்லை. முன்பு ஜெனியிடம் ஒட்டுமொத்தமாக அல்லேலூயா என கேலியாக பேசியபோது ஆரம்பித்த சின்ன சண்டை 18 மாதங்களுக்குப் பிறகு என் வாழ்க்கையில் அதிகமாக வெறுப்பவன் நீ தான் எனச் சொல்லி பிரிவில் முடிந்தது.

அதனால் வாசுகிரெட்டியிடம் முற்போக்கு குரலை எல்லாம் காட்டாமல் சிரித்து விட்டு லக்‌ஷ்மணனின் சதத்தைப் பற்றி சொல்லி அன்று பேச்சை மாற்றிவிட்டேன்.
வாசுகிரெட்டி திடீரென தேவாலயத்திற்கு கூப்பிட்டதனால், ஜெனி அவள் சம்பந்தப்பட்ட விசயங்கள் எல்லாம் ஆறு வருடங்களுக்குப்பிறகு ஒன்றன்பின் ஒன்றாக வந்து போயின. ஜெனி கிறிஸ்தவப் பெண் எனத் தெரிந்தும் தான் பழக ஆரம்பித்து இருந்தேன். நேசிக்க ஆரம்பித்த இரண்டாவது மாதத்தில் அவளுடன் ஞாயிறு அன்று விருகம்பாக்கத்தில் இருக்கும் சர்ச்சிற்கு வர முடியுமா எனக் கேட்டாள். 10 வருடங்கள் கத்தோலிக்கப் பள்ளியில் படித்து இருந்ததால் அது ஒரு பிரச்சினையாக தெரியவில்லை.

வெள்ளை வண்ணம் அடிக்கப்பட்ட உயர்ந்த கோபுரம், மாலையில் விழும் அதன் நிழல், அழகான மரபெஞ்சுகள், குழந்தை ஏசுவுடன் மேரி மாதா, சிலுவையில் அறையப்பட்ட ஏசு சொரூபாங்கள் நிறைந்த கத்தோலிக்க தேவாலயங்கள் மன அமைதிக்கான ஒரு தேடலாகவே பள்ளிக்காலங்களில் அமைந்திருந்தது. எட்டாம் வகுப்பில் தொடர்ந்து முதல் இடம் பிடிக்க மேரிமாதாவிடம் பிரார்த்தனை செய்ததால் தான் எனத் தோன்றியதால் ஸ்தன்ஸ்லாஸ் கார்த்திகேயனாக மாறிவிடலாம் எனக்கூட நினைத்திருக்கின்றேன்.

பூர்வீகம் கொரடாச்சேரியானதால் வீட்டில் எப்பொழுதும் ஒரு மாதா சிலை இருக்கும். ஸ்தனிஸ்லாஸ் கார்த்திகேயன் என நோட்டுப்புத்தகத்தில் எழுதி இருந்த மறுநாளில் இருந்து அந்த சிலை எங்கள் வீட்டு சாமி மாடத்தில் இருந்து காணாமல் போனது

பள்ளி நினைவுகளை மீட்டெடுக்கலாம் என விருகம்பாக்கம் சர்ச்சிற்கு சென்று ஜெனியின் கைபேசிக்கு அழைத்தால் ,

”உன்னை யாரு அந்த சர்ச்சுக்குப்போக சொன்னா, அப்படியே அதே ரோட்ல வா, லெஃப்ட்சைட் ஒரு பெந்தகொஸ்தே சபைன்னு போட்டிருக்கும், அதுதான் எங்க சர்ச்”

ஜெனி சொன்ன இடத்திற்குபோனேன், கீழே ஒரு மளிகைக்கடை, சின்ன டெய்லர்கடை, மாடியில் சின்ன கூரை வேயப்பட்டு பெந்தகோஸ்தே சபை எனபோட்டிருந்தது. படியேறி மேலேப்போனபொழுது கிராமத்துத் தோற்றத்துடன் ஆனால் நாகரிகமாக வண்ண உடை உடுத்தி போதனை செய்து கொண்டிருந்தார். பெண்கள் தலையில் முக்காடிட்டு அவர் சொல்வதை வேதவாக்காக கேட்டுக்கொண்டிருந்தனர். முகப்பொலிவில் இருந்து எல்லோரும் அடித்தட்டு மக்கள் எனத் தெளிவாக தெரிந்தது. மெல்ல ஜெனியின் அருகில் போய் அமர்ந்து கொண்டு , அந்த சிறிய அறையில் இருந்த தலைகளை எண்ணினேன். நாற்பதுக்கும் மேலே வந்தவுடன் எண்ணுவதை நிறுத்திவிட்டு,

ஜெனியிடம் “இதுதான் உங்க சர்ச்சா” வார்த்தைகளில் இருந்த ஏளனத்தைக் கண்டு கொண்ட ஜெனி முறைத்தாள். ஒழுங்காகப்போய் கொண்டிருந்த பிரார்த்தனையில் சடாரேன எல்லோரும் திடீரென அப்பா எங்களைக் காப்பாற்று என ஆரம்பித்து, சாத்தானின் பிடியில் இருந்து எல்லோரும் விடுபட்டும், சாத்தானின் கட்டிடங்கள் இடியட்டும், சொரூப வழிபாடுகள் நாசமாய் போகட்டும் எனத் தொடர்ந்து ஓலமிட ஆரம்பித்தனர். எல்லோரும் கத்தி வழிபாடு முடிந்தபின்னர் சீக்கிரம் ஜெனியை அழைத்துக்கொண்டு வெளியே கிளம்பலாம் என நினைத்தால், காணிக்கை என ஒரு சுருக்குப்பை வலம் வந்தது. ஜெனி நூறு ரூபாய் போட்டதால் நானும் நூறு ரூபாயைப் போட வேண்டியதாகிற்று.

மாயாஜால் போகும் வழியில் “அது என்ன ஜெனி, பிரே பண்ணிக்கிட்டு இருக்கிறப்ப “ கலகல புல அபகம ஜலகில என எல்லோரும் ஏன் உளர்றீங்க”

”அது அந்நிய பாஷை, ஆண்டவர் மனசில இறங்குற நேரம் அது”

“இது அல்லேலூயா சர்ச்னு தெரிஞ்சிருந்தா நான் வந்தே இருக்க மாட்டேன், ஜெண்டிலா பிரே பண்ணிட்டு போறதைவிட்டுட்டு எதுக்கு இதை எல்லாம் சர்ச்சுன்னு சொல்லிக்கிட்டு... டிஸ்கஸ்டிங்” எனச் சொல்லி முடிப்பதற்குள் வண்டிய நிறுத்த சொன்னாள். நிறுத்தியவுடன் என்னுடன் ஏதும் பேசிக்கொள்ளாமல் ஒரு ஆட்டோவைப்பிடித்து போய்விட்டாள்.

”நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கின்றேன்” என ஜெனிக்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பியபின்னர் அவள் சமாதானம் ஆனாலும் எனக்கு என்னவோ ஜெனியின் அதீத ஆண்டவர் ஈடுபடு பிடிக்காமாலே இருந்தது. தற்பொழுதும் நாத்திகன் என்றாலும் இப்பொழுது இருக்கும் பரந்த பார்வை அப்பொழுது கிடையாது. அவள் எனக்காக நெற்றி பொட்டு வைத்துக்கொள்வாள், நான் அவளுக்காக ஞாயிறு தோறும் அந்த அல்லேலூயா குடிசைக்குப்போவேன் என உடன்பாடு ஏற்பட்டது.

அந்த ஜெபக்கூட்டத்திற்கு வருபவர்களின் பெயர்கள் எதுவுமே கிறிஸ்தவப்பெயர்கள் கிடையாது. மனதளவில் ஏசு சாமியை கும்பிடுபவர்களாகவும் பெயரளவிலும் ஏட்டளவிலும் இந்துக்களாக இருப்பவர்கள். படிப்பு வேலைவாய்ப்பு இவற்றில் இடப்பங்கீடு என்பதற்காக இந்துக்களாக இருக்கவேண்டிய கட்டாயம். கருப்புசாமியைக் கும்பிடுபவன் வெள்ளைக்கார ஏசுவை வழிபட ஆரம்பித்தால் ஒரேநாளில் வாழ்வாதாரம் மாறிவிடுமா என்ன?
அப்பாவி மக்களின் மேல் கோபம் இல்லை, மக்களை மந்தைகளாக்குபவர்கள் மேல்தான் கோபம்.

“கார்த்தி, உனக்குத் தெரியுமா, பைபிள்ல இல்லாத விசயங்களே கிடையாது”

“ அப்படியா , தெர்மோ டயனமிக் லாஸ் எல்லாம் சொல்லி இருக்கா” வழக்கம்போல ஜெனி முறைத்தாள்.

“ஆமாம் ஜெனி, ஒரு டவுட், கிறிஸ்மஸ் டே அன்னக்கி, உங்க பாஸ்டர் ஒரு வெள்ளைக்காரனைக் கூட்டிட்டு வந்து எல்லோரைடையும் போட்டோ எடுத்துட்டாரே, அன்னக்கி செம கலெக்‌ஷன் போல, எப்படியும் தலைக்கு நூறு டாலர்னு இரண்டு லட்சமாவது உஷார் பண்ணியிருப்பாரு”


”எவ்ளோ சீப்பா யோசிக்கிற, அவரை மாதிரி ஒரு ஜெண்டில்மேன் கிடையாது தெரியுமா”

“அந்த ஜெண்டில்மேன் முகப்பேர்ல இரண்டு கிரவுண்ட்ல டியுப்லெக்ஸ் வீடு கட்டிட்டு இருக்காரு”

“புல்ஷிட், அது அவரு ஏஜிஎஸ் ஆபிஸ்ல வேலை செஞ்சு கட்டுறது”

ஏஜிஎஸ் அலுவலக குமாஸ்தாவிற்கு அத்தனை பணம் ஏது எனக்கேட்டால் அன்றைய முத்தம் கிடைக்காது என்பதால் விவாதத்தை விட்டுவிட்டேன்.
ஏற்கனவே இருக்கிற தெய்வத்தை நெருங்கவே முடியாது. சரி வெள்ளைக்காரன் கொண்டு வந்த தெய்வத்துடன் பேசலாம் என்றால், முன்னர் இவர்களை ஆண்டவர்கள் அந்த ஆண்டவனின் ஆலயத்திலும் முன் வரிசைக்கு வந்துவிட்டார்கள். எதையாவது கும்பிட்டு விடிவு வந்து விடாதா என வரும் அடித்தட்டு மக்களை அந்த அல்லேலூயா பாஸ்டர் தசமபாகம் என்ற பெயரில் சிறுகசிறுக கொள்ளை அடித்துக்கொண்டிருந்தார். இந்த மரியாதை விகுதி அவரின் வயதிற்காக. அவருக்கு என் வயதில் ஒரு தம்பி, ஜெனி வரும்பொழுதெல்லாம் அவன் வாய் முழுக்கப் பல்லாக இருக்கும். சிலமுறை ஜெனியை அவன் அலுவலகத்தில் இறக்கிவிடுவதைப் பார்த்து கண்டித்திருக்கின்றேன்.

“உனக்கு எதுக்கெடுத்தாலும் சந்தேகம், நாளைக்கே என் அண்ணனோட போனாக்கூட சந்தேகப்படுவ போல”

“கண்ட பரதேசிப்பயலோடு வந்து இறங்கிற, கேள்வி கேட்காம கொஞ்சுவாங்களா”

பரதேசி என நான் சொன்னது பற எனத்தொடங்கும் சாதிப்பெயராக அவள் காதில் விழுந்துவிட்டது போல.

“ஆமா நானும் அந்த சாதிதானே , தெரிஞ்சுதானே , லவ் பண்றே”

நான் சொல்ல நினைக்காததை சொல்லுவதாக, அத்தனை பேர் முன்னிலையில் அலுவலகத்தில் அவள் கத்தியபின்னர் எனக்கும் ரத்தம் கொதித்தது.

“ஆமாண்டி, பேச்சுக்கு பேச்சு யேசப்பா யேசப்பான்னு சொல்லு, சர்டிபிகேட்ல மட்டும் இன்னும் ஹிண்டு போட்டு எல்லா பெனிபிட்ஸ் வாங்கிக்கோ” அதுதான் அவளிடம் நான் கடைசியாகப் பேசியது. கடலூர் பக்கத்தில் ஒரு குக்கிராமத்தில் இருந்து முதல் தலைமுறையாய் படித்து சாராய வாடையில் இருந்து வெளியே வந்து இருப்பவளை எப்படிக் காயப்படுத்தி இருக்கும் என அன்று நான் உணரவில்லை. இரண்டாவது நாள் அவள் ராஜினாமா செய்தாள். அதற்கடுத்த வாரம் நானும் வேலையை உதறிவிட்டு பெங்களூர் வந்தேன்.

போன வருடம் பெங்களூர் வாழ்க்கையும் போரடிக்க எல்லாவற்றையும் விட்டுவிட்டு சுவீடனுக்குப் படிக்க வந்துவிட்டேன். வந்த இடத்தில் தான் சுந்தரத் தெலுங்குப்பெண்ணிடம் ஒரு ஈர்ப்பு. கிட்டத்தட்ட 6 வருடங்களுக்குப்பிறகு ஒரு பெண்ணிடம் பாலியல் ஈர்ப்புக்கு அப்பாற்பட்ட நேசம். இடைப்பட்ட பெங்களூர் காலத்தில் வரலாற்றில் கடவுள்கள் எப்படி வர்த்தக மேம்பாட்டிற்கும் வியாபர அபிவிருத்திக்கும் ஆட்சிகளைக் காப்பாற்றிக்கொள்ள எப்படி எல்லாம் உதவி செய்து இருக்கிறார்கள் என்பதை ஒரு ஆராய்ச்சி நூல் எழுதும் அளவிற்கு படித்து வைத்திருந்தேன்.

ஆண்டவர்களால் சொர்க்கத்தில் இருந்து முதல் அச்சில் வெளியிடப்பட்டு வானத்தில் வீசப்பட்ட பின்னர் , டெண்டுல்கரைப்போல அதைப்பிடித்துக் கொண்டு எப்படி இன்று வரை தங்களது வியாபரத்தை நங்கூரமிட்டு வைத்திருக்கும் இறைத்தூதர்கள் , அவர்களின் இன்றைய தரகர்கள் ஆகியோரிடம் இருந்து எத்தனையோ கற்றுக்கொள்ள வேண்டியிருக்கின்றது என்பது மட்டும் விளங்கியது. ஜெனியைப் பற்றி விபரம் இல்லை. பாஸ்டர் சகோதரர்கள் சிறிய அளவிலான யேசு அழைக்கிறார் கூட்டங்கள் நடத்தி பெரிய அளவில் பெங்களூர் கோரமங்களாவில் ல் வீடு கட்டுகின்றனராம்.

சில ஆடுகள் தங்களை ஆடுகள் என உணரும்பொழுது மந்தையைவிட்டு வெளியேறும். சில ஆடுகள் தாங்கள் கசாப்பு கடைக்குத்தான் போகிறோம் என்று தெரிந்தாலும் மந்தையினுள் இருப்பதை பாதுகாப்பாக உணரும். சில ஆடுகள் தாங்களே ஒநாய்களாக மாறி மந்தையை ருசிபார்க்க காத்துக்கொண்டிருக்கும். ஜெனி என்ற ஆட்டை மீட்டெடுக்காமல் வந்து விட்டேனே என்ற வருத்தம் இன்னமும் உண்டு.

ஜெனியின் நினைவுகளில் இருந்து மீண்டு வருவதற்கு முன்னரே வாசுகிரெட்டி மீண்டும் அழைத்தாள்.

“வில் யு கம் டுமாரோ டு நைஜிரியன் ரிடிம்ட் சர்ச்”

“ஸ்யூர் வாசுகி”

மறுநாள், இருபது அடிக்கு இருபது அடி சிறிய அறை அது. நிறைய நைஜிரீயர்கள், சில இந்திய மாணவர்கள், ஒரு சில சுவிடீஷ் ஆட்கள். அறையினில் சொரூபங்கள் ஏதுமில்லை.

சொர்க்கத்தின் சுவர்கள் மரகதம், தங்கம் , வெள்ளி போன்றவற்றால் கட்டப்பட்டது என ஒரு நைஜிரியன் சொல்லிக்கொண்டிருந்தார். கடவுளுக்கு பிளாட்டினம் அவதார் யுபொடோனியம் போன்றவைகள் தெரியவில்லை போலும். விருகம்பாக்கம் அல்லேலூயா சர்ச்சில் அடித்தட்டு மக்கள், இங்கு நைஜிரியர்கள் .
கடைசியில் அதே அந்நிய பாஷை ஓலம். வாசுகிரெட்டியைக் கவனித்தேன், நெற்றியில் பொட்டு இல்லை. மண்ணின் அடையாளங்களை மதங்களுக்காக விடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. முடிவில் காணிக்கை , இங்கும் அதே வகையிலான சுருக்குப்பை.

மெக்டொனால்ஸில் ஹம்பர்கர் சாப்பிட போய்கொண்டிருக்கையில் வாசுகிரெட்டி கேட்டாள்

“டிட் யு லைக் இட், வில் யு கம் நெக்ஸ்ட் வீக் ஆல்ஸோ”

எனக்கான ஆட்டைக் காப்பாற்ற நானும் இந்த ஆட்டு மந்தையில் ஒருவனாக இருக்கவேண்டியக் கட்டாயத்தை உணர்ந்து

”யெஸ் அஃப்கோர்ஸ்” என தலையாட்டினேன்.


Wednesday, August 04, 2010

திருட்டுப்பசங்க - சிறுகதை

”கார்த்தி, ஸ்வீடன் வந்து இரண்டு வாரம் ஆவுது எங்கேயாவது கூட்டிட்டுபோடா!! செம போரடிக்குது” என வாசுகிரெட்டி நான் அலுவலகம் கிளம்பும் பொழுதெல்லாம் நச்சரிப்பது வழக்கமாகிக் கொண்டிருக்கிறது.


வாசுகிரெட்டி என் மனைவி, போராடி காதல் கல்யாணம் செய்து கொண்டு இரண்டு மாதங்கள் தான் ஆகின்றன. இருவீட்டார் தொல்லையில் இருந்து விடுபட, நீண்ட நாட்களாக தட்டிக்கழித்துக் கொண்டிருந்த சுவீடன் ஆன்சைட் வாய்ப்பை விருப்போடு வாங்கிக்கொண்டு தேனிலவை பால்டிக் கடலில் கொண்டாடலாம் என நினைத்து வந்தால், ஒட்டு மொத்த வேலையையும் என் தலையில் கட்டிக்கொண்டிருக்கிறான் என் மனேஜர் ஹான்ஸன். காலையில் எட்டு மணிக்கு கிளம்பினால் மாலை வர ஆறு மணி ஆகிவிடுகிறது. ஆறு மணிக்கு வீட்டுக்கு வந்தால் இந்திய , அமெரிக்க நேரங்களுடன் டிவிட்டர், பேஸ்புக் அரட்டை பின்னர் தமிழில் என் பெற்றோருடனும் அரைகுறைத் தெலுங்கில் அவள் பெற்றோருடனும் உரையாடவே நேரம் சரியாக இருக்கின்றது.

நம்ம ஊரிலாவது பக்கத்து வீட்டுக்காரன் கொஞ்சம் ஆவது புன்னகையைக் கொடுப்பான். இங்கு சுவிடீஷ் மக்கள் அவ்வளவு சீக்கிரத்தில் நட்பாக மாட்டார்கள். அதுவும் இந்த ஊரில் அரபு, சோமாலியா அகதிகள் அதிகம் இருப்பதனால் ஐரோப்பிய வெள்ளை நிறத்திற்கு சற்று குறைவாக இருந்தாலும், மற்றவர்கள் விசயத்தில் சுவிடீஷ் மக்கள் தலையிட மாட்டார்கள் என்ற போர்வையில் தள்ளியே இருப்பார்கள். நான் தலைமுடியைத் தவிர நிறம் முகத்தில் சோமாலியாக் காரனைப்போல் இருப்பேன். வாசுகியோ அரபுப் பெண் போல இருப்பாள்.

வந்ததில் இருந்து ஒரே ஒருமுறை மட்டுமே கார்ல்ஸ்க்ரோனா திரையரங்கிற்கு வாசுகியை கூட்டி சென்றிருக்கின்றேன், அதுவும் சுவிடீஷ் மொழித் திரைப்படம், சிலப்பல முத்தங்களைத் தவிர வேறு ஒன்றும் புரியவில்லை.

”இதி இலாகி ஜரிகிதே நேனு பிச்சிவாதினி ஆவுத” வாசுகி தெலுங்கில் பேச ஆரம்பித்தால் கோபமாக இருக்கின்றாள் என அர்த்தம்.

“நான் தான் ஆபிஸ்ல எப்போதும் ஆன்லைன்ல இருக்கேனே !! டோண்ட் வொர்ரிடா”

“ஆன்லைன்ல இருக்கனும்னா, நான் வைசாக் லேயே இருந்திருப்பேன்”

“ஆவுன்னா, அப்போ இன்னக்கி நைட்டு ஆன்லைன்ல மட்டும் பேசிக்குவோம், என்ன சரியா”

“போடா டேய், சிக்கிரம் வந்து தொலைடா “ என முத்தமிட்டு வழியனுப்பி வைத்தாள்.

அலுவலகம் எனக்குக் கொடுத்திருந்த பழைய சிவப்புநிற வோல்ஸ்வேகனை ஓட்டிக்கொண்டு போகையில் அனவாசியமாக பிரிவோம் சந்திப்போம் சினேகா நினைவுக்கு வந்துபோனார். அலுவலகத்திற்கு சென்றவுடன் என்னுடன் சினேகமாக இருக்கும் டோல் யூனாஸிடம் வார இறுதிகளில் ஊர் சுற்றிப்பார்க்க ஏற்ற இடங்கள் பற்றி கேட்டேன். யூனாஸ் ஆஸ்ப்போ தீவைப்பற்றி சொன்னார். கார்ல்ஸ்க்ரோனா படகுத்துறையில் இருந்து சிறிய கப்பல் இலவசமாக மக்கள், வாகனங்களை ஏற்றிக்கொண்டு ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒரு முறை ஆஸ்ப்போ தீவிற்கு செல்லும் எனவும் அங்கு இருக்கும் பழமையான கோட்டையை கட்டாயம் பார்க்கவேண்டிய ஒன்று என்றும் குறிப்பிட்டார்.

அந்த வார இறுதியில் 23 நிமிட பயணத்திற்குப்பின்னர் ஆஸ்ப்போ தீவைச் சென்றடைந்தோம். ஒவ்வொரு வாகனங்களாக கப்பலை விட்டு வெளியேற கடைசியாக நாங்களும் வெளியேறி ராம்கோபால் படங்களில் வருவதைப்போல் இருந்த காட்டுப்பாதையில் மெதுவாக செல்ல, வலதுபக்கம் அமர்ந்து இருந்த வாசுகி , என் காதருகே வந்து

“தக் சோ மிக்கெத்” என சொல்லி கன்னத்தில் முத்தமிட்டாள்.

“என்னது தெலுகு அம்மாயி , ஸ்விடீஷ் பிகர் மாதிரி பேசுது”கண்ணுக்கு எட்டின தூரம் வரை அடர்ந்த மரங்கள் , அதைத் தாண்டி அலைகள் அற்ற அமைதியான பால்டிக் கடல் திகிலை மீறி ஒரு ரம்மியமான சூழல்.

காரைவிட்டு இறங்கி இருவரும் மரத்திற்கொரு முத்தம் வீதமாக ஒவ்வொரு மரத்தடியிலும் சில வினாடிகள் முத்தமிட்டுக்கொண்டே கடல் தொடும் பாறைகளை நோக்கி நடந்தோம்.

“டோட்டலி 160 ட்ரீஸ் டா கார்த்தி” வாசுகியை அரவணைத்தபடியே நடையைத் தொடர்ந்தேன்.

முன்பு ஒரு முறை சென்னை கிழக்குகடற்கரை சாலையில் அருகில் இருக்கும் சவுக்குக் காட்டிற்கு இதே வாசுகியை பயந்தபடி அழைத்துச் சென்றது நினைவுக்கு வந்தது. அந்த பயம் இப்பொழுது எட்டிப்பார்த்தாலும் , அட இது சுவீடன் என்றதால் வந்த பயம் ஓடோடிப்போனது.

இப்படி பார், அப்படி பார், இப்படி எம்பிக்குதி என வாசுகியின் ஆணையில் ஏகப்பட்ட கோணங்களில் அவள் வீட்டு வரதட்சினைகளில் ஒன்றான எஸ்.எல்.ஆர் கேமரா என்னைப் படம் பிடித்துக் கொண்டிருந்தது.

மரங்களைக் கடந்து சென்றதும் கடலை ஒட்டியபடியே மஞ்சள் நிறத்தில் வண்ணமடித்து, வீட்டின் முன்னால் பெரும் புல்பரப்புடன் ஒரே மாதிரியாக சில வீடுகளைப்பார்த்ததும்

“கார்த்தி கார்த்தி, என்னை அந்த வீட்டு முன்ன வச்சி போட்டோஸ் எடுடா”

சாகரசங்கமம் ஜெயப்பிரதா மாதிரி பரதநாட்டியம் எல்லாம் ஆட வைத்து விதம் விதமாக படம் எடுத்தேன். சட்டென அந்த வீட்டின் கதவு திறந்தது. வயதான தம்பதியினர் எங்களைப்பார்த்து கைக்காட்டி சிரித்தனர். பாட்டியின் கையில் உயர்தர கேமரா.பாட்டி எங்களைப் படம் எடுக்க தாத்தா வீட்டிற்குள் சென்றுவிட்டார். வாசுகிக்கு ஒரே கொண்டாட்டம். என் தோளில் சாய்ந்தபடி அவர்களுக்கு போஸ் கொடுத்தாள். படங்களை எடுத்த பின்னர் அந்த பாட்டி திரும்ப வீட்டிற்கு சென்று தாழிட்டுக்கொண்டார். எனக்கும் வியப்பாக இருந்தது, சிரிப்பதற்கே யோசிப்பவர்கள் சட்டென வந்து படம் எல்லாம் எடுத்து வைத்துக் கொள்கிறார்கள் என நினைத்துக் கொண்டேன்.மாலை வரை ஆஸ்ப்போ கோட்டை, தேவாலயம், காடுகள் எனச் சுற்றிவிட்டு மீண்டும் படகுதுறையை நோக்கி , அனவேஷனா தெலுங்கு படத்தில் வரும் ஏகாந்த வேளா பாடலை ஒலிக்கவிட்டு, ஒரு கையால் வாசுகியை அணைத்துக்கொண்டபடி காரை செலுத்திக்கொண்டிருந்தேன். பாரதியார் ரசனைக்காரனப்பா, சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து என அப்போவே பாடி இருக்கான்.

அடுத்த வாரம் திங்களன்று யூனாஸிடம் ஆஸ்ப்போ தீவில் அந்த பெரியவர்கள் படம் எடுத்ததைப் பற்றி பெருமையாக சொல்லிக்கொண்டிருந்தேன்.

அதற்கு யூனாஸ்

“சொல்லுகின்றேன் என வருத்தப்படாதீர்கள், ஆஸ்ப்போவில் தனிவீடுகள் அதிகமாக இருப்பதால், யாரேனும் சுவிடீஷ் மக்கள் இல்லாத அந்நியர்கள் ,குறிப்பாக அரபு அகதிகளோ, கருப்பர்களோ வந்தால் புகைப்படம் எடுத்து வைத்துக்கொள்வார்கள், ஏதேனும் தகாத சம்பவங்கள் பின்னர் நடந்தால் அந்தப் புகைப்படங்கள் உதவும் என சொல்லப்படாத விதியாக இதை செயல்படுத்துகின்றனர், ஆஸ்ப்போ மட்டுமல்ல , தனிவீடுகள் அதிகமாக இருக்கும் வீதிகளில் இரண்டு மூன்று முறை அதிகமாக நடந்தாலும் யாராவது ஒருவர் படம் எடுத்து வைத்துக்கொள்வர்”

மாலை வீட்டிற்கு செல்லும்போது, வாசுகிரெட்டி அவளின் அம்மாவிடம், ஆஸ்ப்போ பயணத்தையும் அந்த வயதானவர்கள் எங்களைப் புகைப்படங்கள் எடுத்ததைப் பற்றி பேசிக்கொண்டிருந்தாள். யூனாஸ் சொல்லியதை அவளிடம் கடைசிவரை சொல்லவே இல்லை.


Tuesday, August 03, 2010

நாய்கள் - சிறுகதை

எனக்கு நாய்களைப் பிடிப்பதில்லை, நாய்களின் உரிமையாளர்களை அதைவிட அறவே பிடிப்பதில்லை. நாய்களின் எண்ணிக்கையையும் வகையையும் வைத்து ஒரு சுவிடீஷ் குடும்பத்தின் பொருளாதார வளமையை எடைப்போட்டுவிடலாம்.


இங்கு நாய் வைத்திருப்பவர்கள் காட்டும் அலட்டல் இருக்கே !! ஊரில் குழந்தையை உற்று நோக்கினால் கண் வைக்கிறான் என திருப்பிக் கொள்வார்கள். அதேபோல சற்று நேரம் நாயைக் கவனித்தால் போதும், முகத்தையும் நாயையும் வேறுப்பக்கம் திருப்பிக் கொள்வார்கள். ஒரு முறை ஒரு பஞ்சு மிட்டாய் தலை சுவிடீஷ் ஆள்

“டோண்ட் லுக் அட் மை டாக்” என நேரிடையாகவே சொல்லிவிட்டான். கருப்பாக இருப்பவர்களை இவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் நாய்கள் மட்டும் கருப்பாக இருந்தால் பிடிக்கிறது.

பக்கத்துவீட்டு தங்கநிறக் கூந்தல் அழகி கிறிஸ்டினா இப்படிச் சொன்னாள்,

”சுவீடனில் இருவகையான மனிதர்கள், முதலாமவர் பூனையை விரும்புபவர்கள், ஏனையவர் நாய்களை விரும்புபவர்கள், பூனைகளை நேசிக்கும் மனிதர்கள் விசுவாசமானவர்களாகவும் நாய்களை நேசிக்கும் மனிதர்கள் சாதுரியமானவர்களாகவும் இருப்பார்கள்

எனக்குப் பூனைகளைப் பிடிக்கும். புலிகளின் மினியேச்சர் வடிவங்களாக இருப்பதனாலோ என்னவோ !! பூனைகளின் சுத்தம், கம்பீரப்பார்வை, சாதுரியம், வீணாக யாரையும் சீண்டாமல் இருப்பது சொல்லிக்கொண்டே போகலாம். மார்கழிக்குளிரில் நாய்கள் சிக்கிக் கொண்டு சிரமப்படுவது போல இல்லாமல் பூனைகளின் காதலும் காமமும் படுரகசியமாக இருப்பதனால் நிறையவே பூனைகளைப்பிடிக்கும்.

நாய்களை எப்பொழுதில் இருந்து பிடிக்காமல் போனது என நினைவில்லை. ஸைனோபோபியா(Cynophobia) கிடையாது, நாய்களிடம் சின்ன அருவெறுப்பு அவ்வளவே !!திருச்சியில் தபால் தந்தி குடியிருப்பில் இருந்த போது, பக்கத்து வீட்டு சீசர் நாய் என்னைப் பார்க்கும்பொழுது எல்லாம் குலைப்பதினால் இருந்திருக்கலாம். நாய் கடித்தால் தொப்புளைச் சுற்றி ஊசிப்போடுவார்கள் என்ற பயம் கூட நாய்களைவிட்டு எட்டடி தூரமாக இருக்க ஒரு காரணம் .

கல்லூரி இரண்டாம் வருடமோ மூன்றாம் வருடமோ, சரியாக நினைவில்லை, திருப்பரங்குன்றம் மஹாராஜா தியேட்டரில் பாதி மலையாளம் பாதி தமிழ் டப்பிங் என இரண்டாம் ஆட்டம் பார்த்துவிட்டு கல்லூரி விடுதிக்குத் திரும்பும் பொழுது
துரத்திய நாய்களின் கோரப்பற்கள் அதன் பின்னர் எப்பொழுது ஷகிலா படம் பார்த்தாலும் கண் முன் வந்து மூட் அவுட் ஆக்கிவிட்டுவிடும்.

ஒரு காலத்தில் சுவிடீஷ் மக்களின் வாழ்வாதாரம் வேட்டைத் தொழில் என்பதன் எச்சம் தான் நாய்களின் மேல் காட்டும் அன்னியோன்யம் என நானேப் புரிந்து கொண்டேன். கிறிஸ்டினா ஓநாய்களைப்போலத் தோற்றமளிக்கும் நாய்கள் நான்கினை வளர்க்கிறாள்.

“ஆண் நண்பர்களை விட எனது நாய்களுடன் இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது” என ஒருநாள் கிறிஸ்டினா தனியாக நடந்து வரும்பொழுது சொன்ன வாக்கியம் என்னுடன் வந்த அறைத்தோழன் வாசுதேவனுக்கு இரட்டை அர்த்த வசனமாகப்பட்டதாம்.

வாசுதேவன் நாய்களுடன் நட்புப் பாராட்டுவதன் மூலம் கிறிஸ்டினாவை மடக்க எத்தனையோ முயற்சி செய்கின்றான். நாய்களுக்குப் பிடிக்காததினால் கிறிஸ்டினாவுக்கும் வாசுவைப்பிடிப்பதில்லை. நான் மட்டும் ஒரு விதிவிலக்கு. நாய்கள் இருப்பதினால் கிறிஸ்டினா பலமுறை வலியுறுத்தி அவளின் இல்லத்திற்கு அழைத்தபோதும் நான் போவதில்லை. நாய் பயத்தை மீறிப்போனால் அம்மு என்னைக் கண்ட துண்டமாக சீவி பால்டிக் கடலில் இருக்கும் சீல்களுக்குத் தீனியாகப்போட்டுவிடுவாள்.

அம்முவைக் காதலிக்கத் தொடங்கிய இந்த சில மாதங்களில் என்னைப்பற்றித்தான் மணிக்கணக்கில் சொல்லி இருக்கேன். சிலவகையான சாக்லேட்டுகள், ஐஸ்க்ரீம், நீலநிறப் புடவை , கொஞ்சம் வைன் இவைகளைத் தவிர அவளுக்குப் பிடித்த விசயங்கள் ஏதும் எனக்குத் தெரியாது. நேற்று எதிர்காலத்தைப் பற்றி அவள் ஐஸ்க்ரீம் சாப்பிடும் அழகை ரசித்தபடி பேசிக்கொண்டிருந்தபொழுது அவள் சொன்னது

“கார்த்தி, நாம வீடு கட்டினபின்ன அஞ்சு நாயாவது வளர்க்கனும், வோடொபோன் நாய், வெள்ளைபொமரேனியன் ஒன்னு, அல்சேஷன் ஒன்னு, அப்புறம் உல்ஃப் மாதிரி இருக்கிற ஒன்னு,,, எல்லாம் வாங்கித்தருவீயா”

“உனக்கு இல்லாததா அம்மு, யு க்னோ ஒன் திங் , நாய்களைப்பிடிக்கிறவங்க ரொம்ப லாயல் ஆ இருப்பாங்களாம், ஐ லவ் டாக்ஸ்”

Thursday, July 29, 2010

கிரிக்கெட் வினாடி வினா - விடைகள்

கடந்த பதிவின் கிரிக்கெட் புதிர்களுக்கான விடைகள் இங்கே


1. வேண்டா வெறுப்பாய் இந்தியா அணி தனது முதலாவது இருபதுக்கு இருபது பன்னாட்டு போட்டியை தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக 2006, டிசம்பர் 1 அன்று ஜோகன்னஸ்பர்க்கில் ஆடியது. டெஸ்ட் ஆடும் அணிகளில் இந்தியா அணிதான் கடைசியாக டி20 ஆட்டங்களை ஆடத்தொடங்கியது. மகேந்திர சிங் தோனி தலைவராகத் தலை எடுத்த டி20 2007 உலகக்கோப்பை ஆட்டங்கள் தொடங்க 10 மாதங்கள் முந்திய இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் தலைவர் வீரேந்திர சேவக். சமீபகாலமாக முழு நேர மட்டையாளராக மாறிவிட்ட தினேஷ்கார்த்திக் தன் எதிர்கால சந்ததியினருக்கு சொல்லிக் கொள்ளும்படியான வகையில் இந்த ஆட்டத்தின் நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


இந்தியாவின் முதல் டெஸ்ட் ஆட்டத்தின் ஆட்ட விபரம் இங்கே (இது மூன்று நாட்கள் கொண்ட டெஸ்ட் ஆட்டமாக ஆடப்பட்டது)


2. நோ-பால் வீசப்படும்பொழுது ரன் அவுட்டைத்தவிர வேறுவகையில் ஆட்டமிழக்கக்கூடிய வாய்ப்புகள்
அ. பந்தை மட்டையால் இரு முறை அடித்தல் - hit the ball twice
ஆ. களத்தடுப்பில் குறுக்கீடு செய்தல் - obstructing the field
இ. பந்தை கையால் தொடுதல் - handled the ball

When No ball has been called, neither batsman shall be out under any of the Laws except 33 (Handled the ball), 34 (Hit the ball twice), 37 (Obstructing the field) or 38 (Run out)

3. முத்தையா முரளிதரன் ஐசிசி அணிக்காக ஒரு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஆடி இருக்கின்றார். சூப்பர் டெஸ்ட் என 6 நாட்கள் 2005 ஆம் ஆண்டு சிட்னியில் ஆடப்பட்ட இந்த ஆட்டத்தில் இவர் 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஆக எதிர்காலத்தில்(ஒரு வேளை) இலங்கை போர்க்குற்ற மனித உரிமைக் குற்றங்களுக்காக ஒதுக்கப்பட்டு இலங்கை அணியின் முந்தைய ஆட்டங்களின் பன்னாட்டு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டால் இந்த ஐந்து விக்கெட்டுகள் மட்டும் கணக்கில் இருக்கும்.


கொசுறு : தென்னாப்பிரிக்கா தடை பெற்றிருந்த காலத்தில், அங்கு ஆடப்பட்ட ஆட்டங்கள்(including rebel tours) அனைத்தும் முதல் தரப்போட்டிகளாக (First class matches) முதலில் அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும் 93 ஆம் ஆண்டு அந்த அங்கீகாரமும் நீக்கப்பட்டது. அவை அனைத்தும் கண்காட்சிப்போட்டிகள் என்ற அளவிலேயே சாதனைகள் கணக்கில் கொள்ளப்படுகின்றன.

4. இந்தியாவின் முதல் டெஸ்ட் போட்டி 3 நாள் ஆட்டமாக இங்கிலாந்துடன் ஆடியது. பின் இங்கிலாந்து அணி இந்தியா சுற்றுப்பயணம் வந்த பொழுது இந்தியா 4 நாட்கள் கொண்ட டெஸ்ட் ஆட்டங்களாக ஆடியது. மீண்டும் இந்தியா இங்கிலாந்து சென்ற பொழுது மூன்று நாள் ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர். 1947-48 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 6 நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆடியது. முதன் முதலாக ஐந்து நாள் ஆட்டமாக மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக தில்லியில் 1948 ஆம் ஆண்டு ஆடியது.


5. ”ஈ” அணியின் தலைவர் சொல்லுவதுதான் சரி. முதல் நாள் ஆட்டம் கைவிடப்படும்பொழுது எஞ்சிய நாட்களை வைத்து பாலோ ஆனுக்கான வித்தியாசம் 150 ஆக குறைக்கப்படும். ஐந்து நாட்கள் அதற்கு மேற்பட்ட நாட்கள் ஆடப்படும் டெஸ்ட் போட்டிகளில் , பாலோ - ஆன் தரப்படுவதற்கான விதி

Law 13

1. Lead on first Innings

(a) In a two innings match of 5 days or more, the side which bats first and leads by at least 200 runs shall have the option of requiring the other side to follow their innings.
(b) The same option shall be available in two innings matches of shorter duration with the minimum required leads as follows:
(i) 150 runs in a match of 3 or 4 days;
(ii) 100 runs in a 2-day match;
(iii) 75 runs in a 1-day match.

3. First day's play lost
If no play takes place on the first day of a match of more than one day's duration, 1 above shall apply in accordance with the number of days remaining from the actual start of the match.

மேற்கிந்திய தீவுகள் சூற்றுப்பயணம் செய்த அஜீத் வடேகர் தலைமையிலான இந்திய அணி , சொந்த மண்ணிலேயே அந்த அணியை 1971 ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் தொடரில் வீழ்த்தியது. இந்தத் தொடரின் முதல் ஆட்டம் ஜமைக்கா கிங்ஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது.திலீப் சர்தேசாய் (ஐபிஎன் தொலைக்காட்சி நிறுவனர் ராஜ்தீப்பின் தந்தை) இரட்டை சதத்தினால் இந்திய அணி 387 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் ஆடத்தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் 217 க்கு ஆட்டமிழந்தது. அஜீத்வடேகர் மேற்கந்திய தீவுகள் அணியை தொடர்ந்து ஆட சொன்ன பொழுது கேரி சோபர்ஸ் கோபம் கலந்த ஆச்சரியத்துடன் பார்த்தாராம். (பன்னாட்டு டெஸ்ட் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணியை பாலோ ஆன் செய்யும்படி எதிரணி கேட்பது அதுவே முதல் தடவை). அவர் நினைத்திருந்தது ஓட்ட வித்தியாசம் 170 தானே என்று. பின்னர் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது நினைவுக்கூறப்பட்டு, விதிமுறைகள் சோபர்ஸுக்காக சரிப்பார்க்கப்பட்டு பாலோ ஆன் செய்யப்பட்டது. சோபர்ஸ் மற்றும் ரோகன் கன்ஹாய் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் டிராவில் முடிந்தாலும், உளவியல் ரீதியாக தொடரை வெல்ல இந்த ஆட்டம் அடித்தளமாக அமைந்தது. இந்திய சுழல் பந்துவீச்சாளர் சீனிவாச வெங்கட்ராகவன் இந்த பாலோ ஆன் பற்றிய நுட்பமான விதியை நினைவூட்டினாராம். பின்னாளில் சீனிவாச வெங்கட்ராகவன் சிறந்த நடுவர்களில் ஒருவராக வந்தது குறிப்பிடத்தக்கது.


இந்த தசாப்தத்தில் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து பாகிஸ்தானை , முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட , 188 ரன்கள் குறைவாக முதல் இன்னிங்ஸில் எடுத்திருந்தமையால் பாகிஸ்தான் பாலோ ஆன் செய்யக் கேட்டுக்கொள்ளப்பட்டது.


6. தீபக் சோதான் (ஆர்.எஸ்.சோதான்), ஹனுமந்த் சிங், ஏ.ஜி.கிருபால் சிங், சுரீந்தர் அமர்நாத், முகமது அசாருதீன், பிரவீன் ஆம்ரே, சௌரப் கங்குலி , வீரேந்திர சேவக் இவர்கள் அனைவரும் தாங்கள் ஆடிய முதல் டெஸ்ட் போட்டியில் , மட்டையடித்த முதல் இன்னிங்ஸிலேயே சதமடித்தவர்கள். சமீபத்திய வரவு சுரேஷ் ரைனா.


லாலா அமர்நாத், அப்பாஸ் அலி பெய்க், குண்டப்பா விஸ்வநாத் - தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் சதமடித்தவர்கள். சுரீந்தர் அமர்நாத் லாலா அமர்நாத்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.