Wednesday, September 29, 2010

குறுக்கே வரும் பூனைகள் - சிறுகதை

பெண்களுக்கு அடுத்தபடியா அழகும் சாதுரியமும் ஒரு சேர இருப்பது பூனைகளிடமே ! இங்கு சுவிடீஷ் பெண்கள் அழகு என்றால், அவர்கள் பூனைகளைக் கொஞ்சும் விதம் தனியழகு. இருந்தாலும் பெண்களைப் பிடிக்கும் அளவிற்கு பூனைகளைப் பிடிப்பதில்லை.பூனைகள் என்றாலே தரித்திரம் என்று மனதில் படிந்துவிட்டது.

இதற்கு காரணம் லால்குடியில் நாங்கள் இருந்த பொழுது, பக்கத்து வீட்டு ராகவன் சார் தான். அவர் அலுவலகம் செல்லுவதற்கு வெளியே கிளம்பும்பொழுதுதான் எதிர்த்த கிறிஸ்டோபர் வீட்டில் வளர்க்கும் பூனைகளில் ஏதாவது ஒன்று
வெளியே அவரின் குறுக்க ஓடிவரும். இடமிருந்து வலம் ஓடினாலும் சரி, வலமிருந்து இடம் ஓடினாலும் சரி, கருப்பு, வெளுப்பு, சாம்பல் எந்த நிற பூனையானாலும் சரி, வீட்டிற்குள் திரும்பி போய் தண்ணி குடித்துவிட்டுத்தான் மீண்டும் வெளியே போவார். போகும்பொழுது,

' ஏண்டா, பீடை , தரித்திரம் எத்தனை தடவை சொன்னாலும் உனக்கு அறிவே இருக்காதா!! புள்ளய வளர்க்கத் தெரியல பூனைய வளர்க்குறானுங்களாம்' கிறிஸ்டோபருக்கு குடும்பத்தோட திட்டு கிடைப்பதைப் பார்க்கையில் எனக்கு ஒரு ஆனந்தம்

ராகவன் சாருக்கு ஒரு மகள், நாங்க எல்லோருமே +2 , நானும் கிறிஸ்டோபரும் அரசினர் மேனிலைப்பள்ளி,ராகவன் சாரோட மகள், பெண்கள் மேனிலைப்பள்ளி. ராகவன் சார் வீட்டுல ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வரும் என்பதால் நான் ராகவன் சார் வீட்டுக்கும், கிறிஸ்டோபர் வீட்டுல பூனைகள் இருப்பதனால் ராகவன் சார் பொண்ணு கிறிஸ்டோபர் வீட்டுக்கும், கரிம வேதியியலுக்காக ராகவன் சார் பொண்ணும் கிறிஸ்டோபரும் என் வீட்டுக்கு வருவார்கள்.

'நாளைக்கு கார்த்தி வீட்டுக்கு படிக்க வர்றச்ச, பூனையையும் கொண்டு வா' இது ராகவன் சாரோட பொண்ணு கிறிஸ்டோபரிடம்.

பூனைகளைப் போய் கொஞ்ச வேண்டும் என்பதற்காகவே ராகவன் சாரோட பொண்ணு கிறிஸ்டோபரிடம் நெருக்கமாக இருப்பது எனக்குப் பிடிக்கவில்லை.

+2 கணக்கு பரிட்சை அன்றைக்குத்தான் பூனை குறுக்கேப் போகும் ராசியை உணர்ந்தேன். ஸ்டைலா கருப்பு பூனை கிறிஸ்டோபர் வீட்டை விட்டு எனக்கு முன்னால் கடந்து போன பின்னர், தேர்வு முடிவுகளில் கணக்கில் மதிப்பெண்கள் 184 என பார்த்த பொழுதுதான் பூனையின் ராசி புரிந்தது.

பொறியியற் கல்லூரி அனுமதி கிடைத்தவுடன் ராகவன் சாரின் பொண்ணிடம் காதலைச் சொல்லலாம் என நினைத்து, ராகவன் சார் பொண்ணு மட்டும் தனியா இருக்கிற நேரம் பார்த்து அவர் வீட்டுக்குப் போனால், ஒரு பூனைக்கு நான்கு பூனைகள் வீட்டில் இருந்து ஓடிவந்தன. கிறிஸ்டோபர் வீட்டு பூனைகள் இங்கே எப்படி என யோசித்துக்கொண்டே என வீட்டுக்குள் நுழைந்தால், உள்ளே ராகவன் சார் பொண்ணும் கிறிஸ்டோபரும் கட்டிப்பிடித்துக் கொண்டிருந்தார்கள்.
அதன் பின்னர் தான் பூனைகள் என்றாலே அலர்ஜி என ஆனது. சிலருக்கு நாயைக் கண்டால் கல்லெடுத்து அடிக்கத் தோன்றும், எனக்கு பூனைகளைப்பார்த்தால் அடி பின்னி எடுக்கனும் போல இருக்கும்.

தியாகராஜர்ல படிக்கிறப்ப, இருபதடிக்கு முன்னால் சாலையைக் கடந்துப் போய் கொண்டிருந்த பூனையைப் பார்த்து, பில்லியனில் உட்கார்ந்திருந்த நான், 'பூனை குறுக்கே போகுதுடா, இன்னக்கிப் போற காரியம் உருப்படாதே' கத்தியதால் வண்டியை ஓட்டிக்கொண்டிருந்த நண்பன் கவனம் சிதறி பள்ளத்தில் கவனிக்காமல் ஓட்ட, விழுந்து வாரிக் கொண்டோம்.

சின்ன சின்ன விச்யங்கள் தடைபடும்பொழுதெல்லாம் ஏதாவது ஒரு பூனை காரணமாக இருக்கும். பூனை இல்லாமல் எல்லாம் நல்ல சகுனமாகப் பார்த்து ஒரு நேர்முகத் தேர்வுக்குப் போன பொழுது, நன்றாகப் பதில் சொல்லி இருந்தபொழுதும், நான் தேர்ச்சி பெறவில்லை. திரும்பும்பொழுதுதான் கவனித்தேன், நிறுவனத்தின் வரவேற்பறையில் ஒரு பூனைப்படம் என்னைப்பார்த்து பல்லிளித்துக் கொண்டிருந்தது.

காலஓட்டத்தில் சகுனம் பார்ப்பது, மேலும் சில தேவை இல்லாத நம்பிக்கைகளில் இருந்து வெளிவந்துவிட்டாலும், இன்னும் பூனை பயம் மட்டும் போகவில்லை. சுவீடன் வந்து ஆறுமாதம் ஆகின்றது. ரயிலிலும் பேருந்துகளிலும் பூனைகளை சிறிய ஜன்னல் வைத்த பெட்டிகளில் மக்கள் யாராவது எடுத்து வரும்பொழுதெல்லாம் பயம் தொற்றிக்கொள்ளும். இதுவரை எதுவும் பெரிதாக நடக்கவில்லை, சிலப் பலமுறை பெண்களுக்காக , அவர்கள் பூனையைக் கொஞ்சும் அழகிற்காக பூனைகளையும் சேர்த்துப் பார்த்துத் தொலைக்க வேண்டியிருந்தது.

பூனைகளைப் பார்த்து இருந்தாலும் பூனை எதுவும் எனக்கு முன் குறுக்கேப் போனதில்லை என சந்தோசப்பட்டிக்கொண்டிருக்கையில், சாம்பல் நிறப்பூனை சரியாக அந்த சாலையின் திருப்பத்தில் இருந்த வீட்டின் உள்ளே இருந்து எனக்கு குறுக்காகக் கடந்துப்போனது. தரித்திரம் பீடை என ராகவன் சார் வார்த்தைகள் நினைவுக்கு வரும் முன்னர், பூனையின் பின்னாலேயே சுவிடீஷ் மங்கை ஒருத்தி அதைத் துரத்திக்கொண்டே போய் பிடித்து, என்னைப் பார்த்து சிறிய புன்னகை செய்துவிட்டு திரும்ப வீட்டிற்குள் சென்றுவிட்டாள். வெற்றுப்புன்னகையாக மட்டும் அல்லாமல் அதில் ஒரு உயிர்ப்பு இருந்தது. அன்று அலுவலகத்தில் அவளின் புன்னகையை மட்டும் யோசித்துக்கொண்டிருந்தேன். வேலைகள் எதுவும் ஓடவில்லை. இன்னும் நான்கு நாட்களில் ஒரு வேலைய செய்து முடிக்க கெடு வேறு இருந்தது.

மறுநாள் அதே நேரம், அதே பூனை, அதே வீட்டில் இருந்து, பின்னாலேயே அதே சுவிடீஷ் பெண்,புன்னகையுடன் ,கண்களில் கவிதையும்.

அடுத்த நாள் வேறு நிற பூனையைப் பின் தொடர்ந்து வந்தாள், பூனை அவளுக்குப் போக்குக் காட்டிவிட்டு வேறு எங்கோ சென்றுவிட்டது, பூனையைப் பிடிக்க முடியவில்லை என்ற சோகத்தைக் கண்களில் சொன்னாள். எனக்கும் வருத்தமாக இருந்தது.

பூனை வெளியே வருவதும் இவள் பின் தொடர்ந்து வருவதும் தற்செயலானதா , இல்லை எனக்காகவா என்பதை தெரிந்துகொள்ள, 15 நிமிடங்கள் தாமதமாகவே போனேன். வழக்கமாக இல்லாமல் அவளின் வீட்டிற்கு நேர் எதிரே இருக்கும் குறுக்குப்பாதையின் வழியாக வரும்பொழுது அவளின் வீட்டு மாடியைக் கவனித்தேன், குளிர்காற்று அடித்தாலும் கையில் பூனையுடன், நான் வழக்கமாக வரும் பாதையைப் பார்த்தபடி பால்கனியில் நின்று கொண்டிருந்தாள். அவள் என் பக்கம் திரும்புவதற்கும் நான் சாலையைப் பார்த்து செல்வதற்கும் சரியாக இருந்தது. பூனை குறுக்கே ஓடியது, அவள் பிடிக்கப்போகவில்லை. வாசலிலேயே நின்றபடி சிரித்தாள்.

ஒரு நாளில் முடிக்கப்பட வேண்டிய வேலை மூன்று நாட்களாக இழுத்துக் கொண்டிருக்கிறேன். சுவிடீஷ் மேலாளர்கள் கெடு நாள் வரை எதுவுமே கேட்க மாட்டார்கள்,சரியாக முடிக்கப்பட வேண்டிய நாளன்று தோண்டித் துருவுவார்கள்.மேலாளரை காலையிலேயே சந்திக்க வேண்டும் என்ற யோசனையுடன் வேகவேகமாக ரயிலைப்பிடிக்க வழக்கமான நேரத்தில் சென்றுக்கொண்டிருக்கையில், பூனைவீட்டு சுவிடீஷ் பெண், வாசலிலேயே நின்று கொண்டிருந்தாள், கிட்டத்தட்ட அவளின் வீட்டை கடக்கப்போகும்பொழுது, கையில் இருந்த பூனை கீழே குதித்து எனக்கு குறுக்காக ஓடிப்போனது. சின்னப்புன்னகையை நான் கொடுத்துவிட்டு நகர நினைக்கும்பொழுது,

'உர்ஷக்தா, யாக் வில் பிராத்தா மெட் தெய்க்' உன்னிடம் பேச விரும்புகின்றேன் என்பதை சுவிடீஷில் சொன்னாள். காலக்கெடு, சுவிடீஷ் மேலாளர் எதுவுமே தோன்றவில்லை, பூனைகள் குறுக்கே நெடுக்கே வந்து போவதை அலட்சியப்படுத்தி அவளிடம் பேச ஆரம்பித்தேன்.

10 பின்னூட்டங்கள்/Comments:

said...

"சிலருக்கு நாயைக் கண்டால் கல்லெடுத்து அடிக்கத் தோன்றும், எனக்கு பூனைகளைப்பார்த்தால் அடி பின்னி எடுக்கனும் போல இருக்கும்." சிரிக்க வைத்தது

இப்பவும் பூனை உங்களை ............................

said...

//"சிலருக்கு நாயைக் கண்டால் கல்லெடுத்து அடிக்கத் தோன்றும், எனக்கு பூனைகளைப்பார்த்தால் அடி பின்னி எடுக்கனும் போல இருக்கும்."//
mmm superb selva , i like this feel

Anonymous said...

உங்களுக்கு பூனை மீது கோவம் மாதிரி தெரியல இராகவன் சார் பொண்ணு.. கிறிஸ்டோபரிடம் பேசுறது தானே. கோவம்...

said...

:)

ரொம்ப சுமார் கதை... வேணும்னா இந்த மாதிரிக் கதைகள்ல சுவீடிஷ் நாட்டைப் பத்தியும் அந்த மொழியைப் பத்தியும் மாத்திரம்தான் தெரிஞ்சுக்க முடியுது. இதை கதைன்னு கூட சொல்லிக்க முடியல.

said...

Hey, super story. I can sense the feel.

said...

என் பதிவுகளைத் தொடர்ந்து படிக்கும் அன்பர் ஒருவர் உங்கள் வலைப்பூவை எனக்குப் பரிந்துரை செய்தார். அவருக்கு என் நன்றிகள்.

இந்த வாட்டியாவது சூதானமா நடந்துக்கோங்க. இல்லன்னா கிறிஸ்டோபர் மாதிரி யாராவது மறுபடி வந்துடப் போறாங்க.

said...

:) :) :)

ரசிச்சி படிச்சேன் செல்வா...
கிறிஸ்டோபரும் ராகவன் சார் பொண்ணும் சேர்ந்திருக்கும்போது நீங்க பாப்பீங்கனு முதல்லையே யூகிக்க முடிஞ்சது...
அப்புறம் அந்த சுவீடிஸ் மங்கை...........
அவளுக்காக மேலாளர் பூனை என எல்லாம் மறந்து............
சந்தோஷமா இருந்தது.........
ஏதோ ஒரு வகைல என்னை உங்ககிட்ட பாத்த மாதிரி .........
:)

said...

Story was really interesting na,,,,
Bcos i too dont like cat ..... :)
but story is very short , suddenly got end...

said...

நகைச்சுவையாக இருந்தது. நீங்கள் சுவிடனிற்கு வந்து 2 வருடம் இருக்கும் என நினைக்கிறேன்.
உங்கள் வாழ்க்கையில் மட்டும் பூனை குறுக்கிடவில்லை , என் வாழ்விலும் தான்.
நான் முதன் முதலில் அண்ணா பல்கலைத்தேர்வில் தேர்ச்சிபெறாமல் போனது ஒரு பாடத்தில்.அன்று வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றேன் தேர்வு எழுத, ஆனால் வீட்டின் முன்னே ஒரு பூனை குறுக்கிட்டது, எனக்கு சிலவற்றில் மூட நம்பிக்கைகள் இல்லை என்றாலும் அன்று எனக்கு பயமாகவே இருந்தது, பின் பரிட்சையில் தோல்வி. அன்று முதல் எனக்கு பூனை பார்த்தாலே உங்களை போல் கல் எறிய வேண்டும் போல் இருந்தது. பின் revaluationல் தேர்ச்சி பெற்றேன்.
அதே பூனை sweden visaவிற்கும் love சொல்லும்போதும் குறுக்கிட்டது.
மறுபடியும் உணர்ந்தேன், உணர்ந்துக்கொண்டிருக்கிறேன்....

said...

நல்லா இருக்கு
thanks
mrknaughty