Tuesday, August 03, 2010

நாய்கள் - சிறுகதை

எனக்கு நாய்களைப் பிடிப்பதில்லை, நாய்களின் உரிமையாளர்களை அதைவிட அறவே பிடிப்பதில்லை. நாய்களின் எண்ணிக்கையையும் வகையையும் வைத்து ஒரு சுவிடீஷ் குடும்பத்தின் பொருளாதார வளமையை எடைப்போட்டுவிடலாம்.


இங்கு நாய் வைத்திருப்பவர்கள் காட்டும் அலட்டல் இருக்கே !! ஊரில் குழந்தையை உற்று நோக்கினால் கண் வைக்கிறான் என திருப்பிக் கொள்வார்கள். அதேபோல சற்று நேரம் நாயைக் கவனித்தால் போதும், முகத்தையும் நாயையும் வேறுப்பக்கம் திருப்பிக் கொள்வார்கள். ஒரு முறை ஒரு பஞ்சு மிட்டாய் தலை சுவிடீஷ் ஆள்

“டோண்ட் லுக் அட் மை டாக்” என நேரிடையாகவே சொல்லிவிட்டான். கருப்பாக இருப்பவர்களை இவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் நாய்கள் மட்டும் கருப்பாக இருந்தால் பிடிக்கிறது.

பக்கத்துவீட்டு தங்கநிறக் கூந்தல் அழகி கிறிஸ்டினா இப்படிச் சொன்னாள்,

”சுவீடனில் இருவகையான மனிதர்கள், முதலாமவர் பூனையை விரும்புபவர்கள், ஏனையவர் நாய்களை விரும்புபவர்கள், பூனைகளை நேசிக்கும் மனிதர்கள் விசுவாசமானவர்களாகவும் நாய்களை நேசிக்கும் மனிதர்கள் சாதுரியமானவர்களாகவும் இருப்பார்கள்

எனக்குப் பூனைகளைப் பிடிக்கும். புலிகளின் மினியேச்சர் வடிவங்களாக இருப்பதனாலோ என்னவோ !! பூனைகளின் சுத்தம், கம்பீரப்பார்வை, சாதுரியம், வீணாக யாரையும் சீண்டாமல் இருப்பது சொல்லிக்கொண்டே போகலாம். மார்கழிக்குளிரில் நாய்கள் சிக்கிக் கொண்டு சிரமப்படுவது போல இல்லாமல் பூனைகளின் காதலும் காமமும் படுரகசியமாக இருப்பதனால் நிறையவே பூனைகளைப்பிடிக்கும்.

நாய்களை எப்பொழுதில் இருந்து பிடிக்காமல் போனது என நினைவில்லை. ஸைனோபோபியா(Cynophobia) கிடையாது, நாய்களிடம் சின்ன அருவெறுப்பு அவ்வளவே !!திருச்சியில் தபால் தந்தி குடியிருப்பில் இருந்த போது, பக்கத்து வீட்டு சீசர் நாய் என்னைப் பார்க்கும்பொழுது எல்லாம் குலைப்பதினால் இருந்திருக்கலாம். நாய் கடித்தால் தொப்புளைச் சுற்றி ஊசிப்போடுவார்கள் என்ற பயம் கூட நாய்களைவிட்டு எட்டடி தூரமாக இருக்க ஒரு காரணம் .

கல்லூரி இரண்டாம் வருடமோ மூன்றாம் வருடமோ, சரியாக நினைவில்லை, திருப்பரங்குன்றம் மஹாராஜா தியேட்டரில் பாதி மலையாளம் பாதி தமிழ் டப்பிங் என இரண்டாம் ஆட்டம் பார்த்துவிட்டு கல்லூரி விடுதிக்குத் திரும்பும் பொழுது
துரத்திய நாய்களின் கோரப்பற்கள் அதன் பின்னர் எப்பொழுது ஷகிலா படம் பார்த்தாலும் கண் முன் வந்து மூட் அவுட் ஆக்கிவிட்டுவிடும்.

ஒரு காலத்தில் சுவிடீஷ் மக்களின் வாழ்வாதாரம் வேட்டைத் தொழில் என்பதன் எச்சம் தான் நாய்களின் மேல் காட்டும் அன்னியோன்யம் என நானேப் புரிந்து கொண்டேன். கிறிஸ்டினா ஓநாய்களைப்போலத் தோற்றமளிக்கும் நாய்கள் நான்கினை வளர்க்கிறாள்.

“ஆண் நண்பர்களை விட எனது நாய்களுடன் இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது” என ஒருநாள் கிறிஸ்டினா தனியாக நடந்து வரும்பொழுது சொன்ன வாக்கியம் என்னுடன் வந்த அறைத்தோழன் வாசுதேவனுக்கு இரட்டை அர்த்த வசனமாகப்பட்டதாம்.

வாசுதேவன் நாய்களுடன் நட்புப் பாராட்டுவதன் மூலம் கிறிஸ்டினாவை மடக்க எத்தனையோ முயற்சி செய்கின்றான். நாய்களுக்குப் பிடிக்காததினால் கிறிஸ்டினாவுக்கும் வாசுவைப்பிடிப்பதில்லை. நான் மட்டும் ஒரு விதிவிலக்கு. நாய்கள் இருப்பதினால் கிறிஸ்டினா பலமுறை வலியுறுத்தி அவளின் இல்லத்திற்கு அழைத்தபோதும் நான் போவதில்லை. நாய் பயத்தை மீறிப்போனால் அம்மு என்னைக் கண்ட துண்டமாக சீவி பால்டிக் கடலில் இருக்கும் சீல்களுக்குத் தீனியாகப்போட்டுவிடுவாள்.

அம்முவைக் காதலிக்கத் தொடங்கிய இந்த சில மாதங்களில் என்னைப்பற்றித்தான் மணிக்கணக்கில் சொல்லி இருக்கேன். சிலவகையான சாக்லேட்டுகள், ஐஸ்க்ரீம், நீலநிறப் புடவை , கொஞ்சம் வைன் இவைகளைத் தவிர அவளுக்குப் பிடித்த விசயங்கள் ஏதும் எனக்குத் தெரியாது. நேற்று எதிர்காலத்தைப் பற்றி அவள் ஐஸ்க்ரீம் சாப்பிடும் அழகை ரசித்தபடி பேசிக்கொண்டிருந்தபொழுது அவள் சொன்னது

“கார்த்தி, நாம வீடு கட்டினபின்ன அஞ்சு நாயாவது வளர்க்கனும், வோடொபோன் நாய், வெள்ளைபொமரேனியன் ஒன்னு, அல்சேஷன் ஒன்னு, அப்புறம் உல்ஃப் மாதிரி இருக்கிற ஒன்னு,,, எல்லாம் வாங்கித்தருவீயா”

“உனக்கு இல்லாததா அம்மு, யு க்னோ ஒன் திங் , நாய்களைப்பிடிக்கிறவங்க ரொம்ப லாயல் ஆ இருப்பாங்களாம், ஐ லவ் டாக்ஸ்”

10 பின்னூட்டங்கள்/Comments:

said...

நண்பா பதிவு அருமை . இந்த பதிவு படித்த பின்பு நாய்களை மையமாக வைத்த 101 Dalmatians பார்க்கலாம் என்று தோன்றுகிறது

said...

நாய் வேசம் போட்டா குலைச்சுத்தானே ஆகணும் நண்பா! :))

said...

//“உனக்கு இல்லாததா அம்மு, யு க்னோ ஒன் திங் , நாய்களைப்பிடிக்கிறவங்க ரொம்ப லாயல் ஆ இருப்பாங்களாம், ஐ லவ் டாக்ஸ்”///

செல்வா, நீரு பொளைச்சிபீரு...

said...

vasuthevan enbadhu "hejsan" ah anna???

said...

I think every one they change the character for his girl friend.

said...

//“உனக்கு இல்லாததா அம்மு, யு க்னோ ஒன் திங் , நாய்களைப்பிடிக்கிறவங்க ரொம்ப லாயல் ஆ இருப்பாங்களாம், ஐ லவ் டாக்ஸ்”//-enna ooru balti -fraud selva

said...

தம்பி..

எனக்கு நாயையும் பிடிக்காது. பூனையையும் பிடிக்காது..!

நாய், பூனைகளைவிட மனுஷங்களை எடுத்து வளர்க்கலாம்..!

said...

Samalification: The way to live... :)

said...

//“உனக்கு இல்லாததா அம்மு, யு க்னோ ஒன் திங் , நாய்களைப்பிடிக்கிறவங்க ரொம்ப லாயல் ஆ இருப்பாங்களாம், ஐ லவ் டாக்ஸ்”///

காதலிக்காக..... அப்படீன்னும் சொல்லலாம் இல்லையா?

நல்லாருந்துது:))

said...

அதுசரி!எப்பிடில்லாம் பொய் சொல்ல வேண்டியதிருக்கிறது!