Friday, September 03, 2010

அம்மு வெர்ஷன் 2 - சிறுகதை

வாசுகிரெட்டிக்கு இன்னும் செல்லப்பெயர் வைக்கவில்லை, வைக்கவும் தோன்றவில்லை. அம்மு, பொம்மு , குட்டிம்மா என வகையான வகையான பெயர்கள் முந்தைய காதலிகளுக்கே வைத்தே தீர்ந்துவிட்டது. புஜ்ஜிம்மா என கூப்பிடலாம் என்றால் “புஜ்ஜி பஜ்ஜின்னிட்டு “ என அம்மு திட்டினது நினைவுக்கு வந்தது.

”தீஸ்கோ” என ஒரு சின்ன டிபன் பாக்ஸை என்னிடம் கொடுத்தபடி, வாசுகி அருகில் வந்து அமர்ந்தாள். வாசுகியை எனக்கு ஏன் பிடிக்கும் என்றால் அச்சில் வார்த்தது போல அம்முவின் முகமும் குரலும். அம்முவைத் தொலைத்து ஒரு வருடம் ஆகிய நிலையில் அவளின் நகலிடம் மனம் மீண்டும் ஒரு முறை தொலைந்துப்போனது.

”வாசுகி, நீ ஒரு சின்னப் பொட்டு நெற்றியில் வைத்துக்கொண்டால் இன்னும் அழகாக இருப்பாய்” என்றேன் ஆங்கிலத்தில்.

சுவீடன் வருவதற்கு முன்னர் அம்மு என்னிடம் கேட்டது சின்ன ஸ்டிக்கர் பொட்டுகள் தான். அம்முவின் சின்ன ஸ்டிக்கர் பொட்டு, முழுக்கை சுடிதார், சிம்ரானைப்போல முன்பக்கமா துப்பட்டா என வாசுகிக்கும் கற்பனை செய்துபார்த்தேன்.

“கார்த்தி, தட் வோண்ட் கோ வெல் வித் ஜீன்ஸ் அண்ட் டீஷர்ட்” வாசுகியின் பதில் நான் நினைத்ததற்கு நேர்மாறாக இருந்தது. ஒரு மாதம் தானே ஆகின்றது, போகப்போக கொஞ்சம் கொஞ்சமாக இவளை முழு அம்முவாகவே மாற்றிவிடலாம்.

வாசுகிக்கு அடுத்தவாரம் பிறந்தநாள், வாசுகிக்கு கைக்கடிகாரம் கட்டும் பழக்கம் இல்லாததால், இந்தியாவில் இருந்து ஒரு கைக்கடிகாரமும் முழுக்கை சுடிதாரும் வரவழைத்து இருந்தேன்.
அம்முவிற்கும் என்னுடம் பழகுவதற்கு முன்னர் கைக்கடிகாரம் கட்டும் பழக்கம் இல்லை, ஆனால் நான் வாங்கிக் கொடுத்த கைக்கடிகாரத்தை, என்னைப்போல வலது கையில் கட்டிக்கொண்டாள். அம்மு செய்ததையே வாசுகியும் செய்வாள் என உள்மனது சொல்லியது.

பிறந்த நாளன்று, கார்ல்ஸ்க்ரோனா ரயில்நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தேன். முதல் வருத்தம், கடிகாரத்தை இடது கையில் கட்டி இருந்தாள், அடுத்தது முழுக்கை சுடிதாரை அரைக்கையாக மாறி இருந்தது. அடுத்த நான்கு மணி நேரத்திற்கு வாசுகி முழுப்பாசத்துடன் என்னுடன் நடந்து கொண்டாலும், என் மனம் முழுக்க வெட்டப்பட்ட சுடிதார் கையிலும், கடிகாரத்திலுமே இருந்தது. அம்மு எப்படியெல்லாம் போட்டோவிற்கு போஸ் கொடுப்பாளோ அதைப்போல வாசுகியை நிற்க வைத்து நடக்க வைத்து வித விதமாக படம் பிடித்துக் கொண்டேன்.

“ஷோ மி யுவர் எக்ஸ் கேர்ல் அம்மு`ஸ் போட்டோ” மற்றொரு நாள் கல்லூரியில் வாசுகியுடன் அமர்ந்து மின்னஞ்சல்களைப் படித்துக் கொண்டிருந்தபொழுது கேட்டாள்.

உடனே அவளை கல்லூரியின் பிரதிபலிக்கும் கண்ணாடி சுவர்களின் முன் கொண்டு போய் நிறுத்தி, நீ தான் அவள், அவள் தான் நீ என சொல்லிவிடலமா என நினைத்தேன். தன்னை நேசிக்கவில்லை, யாரொ ஒருத்தியின் பிம்பமாக தன்னை நேசிக்கின்றான் என அவள் நினைத்து விட்டால் முதலுக்கே மோசமாகிவிடுமே என, எனது பிஈ கல்லூரித் தோழி ஒருத்தியின் புகைப்படத்தை மானசீகமாக, தோழியிடம் மன்னிப்புக் கேட்டபடியே இது தான் அம்மு எனக் காட்டினேன்.

வாசுகியின் என் மீதான அக்கறை சில சமயங்களில் அம்முவை விட அதிகமாக இருந்தாலும்,பல பழக்க வழக்கங்கள் அம்முவிற்கு நேரெதிரிடையாக இருந்தது. சுத்த சைவ அம்முவின் முகம் ஹம்பர்கர், போர்க் என கலந்து கட்டி அடிப்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

சிலநாள் கெஞ்சி, கொஞ்சி பின்னர் ஒரு வாரம் பேசாமல் இருந்து, வாசுகியை பொட்டு வைக்க வைத்துவிட்டேன். கைக்கடிகாரத்தை வலது கையில் கட்ட வைத்துவிட்டேன். சத்தம் போட்டு சிரிக்கக்கூடாது , மென்மையாக சிரிக்கவேண்டும், ஆண்களைத் தொட்டுப் பேசக்கூடாது, மாட்டிறைச்சி, பன்றிக்கறிக்கு தடை என கொஞ்சம் கொஞ்சமாக வாசுகியை அம்முவாக மாற்றிக்கொண்டிருந்த பொழுது என் ஆளுமையை நினைத்து எனக்கே பெருமையாக இருந்தது.

கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கழித்து வாசுகியையும் அம்மு எனக்கூப்பிட ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் காரணத்தை ஊகித்து முகம் சுழித்தாலும் அதையும் தமிழுடன் பழகிக்கொண்டாள்.

“அம்மு, எனக்கொரு செல்லப்பேரு வையேன்”

சில நிமிடங்கள் யோசித்துவிட்டு “பிரஸி” என்றாள். அடுத்த சில நொடிகளுக்கு என் மனது பிரஸி என்பதற்கு காரணம் என்னவாக இருக்கும் என , சூப்பர் கம்ப்யூட்டர் வேகத்தில் சிந்திக்க ஆரம்பித்தது, பிரசாத் , பிரசன்னா என இவளுக்கு ஏற்கனவே காதலர்கள் யாரவாது இருந்திருப்பார்களா, அதைத் தான் சுருக்கி பிரஸி எனக்கூப்பிடுகிறாளோ !! அவள் எதிர்ப்பக்கம் அமர்ந்திருந்ததால் , இந்தப் பெயர்களில் யாராவது அவளுக்கு நண்பர்கள் இருக்கின்றனரா என அவளின் பேஸ்புக்கில் மேய்ந்தேன். அவள் சென்ற பின்னர், சந்தேகத்தின் உச்சத்தில், அவளின் மின்னஞ்சலிலும் நுழைந்து ஒவ்வொன்றாக துழாவ ஆரம்பித்தேன். வாசுகியின் அப்பா அவளுக்கு அனுப்பி இருந்திருந்த மின்னஞ்சலின் மூலமாக, வாசுகியின் முழுப்பெயர் வாசுகி பிரசாத் ரெட்டி என்பது நினைவுக்கு வர ஆறு மணி நேரம் ஆகியது. படபடப்பு அடங்கிய பின்னர் மறுநாளில் இருந்து அம்முவை வாசுகியிடம் தேடுவதில்லை. அசலை சுத்தமாக மறந்து விட்டு நகலைக் காதலிக்க ஆரம்பித்தேன்.

6 பின்னூட்டங்கள்/Comments:

said...
This comment has been removed by the author.
said...

உங்களோட எழுத்து நடை படிக்கணும் ங்க்ற ஆர்வத்த அதிகமாக்குது! கதை முடியற விதம் எப்பவுமே அருமை! ஆனா, "சத்தம் போட்டு சிரிக்கக்கூடாது , மென்மையாக சிரிக்கவேண்டும், ஆண்களைத் தொட்டுப் பேசக்கூடாது, மாட்டிறைச்சி, பன்றிக்கறிக்கு தடை" இது மட்டும் ஏன்னு புரியல? சின்ன வயசுலிருந்த நம்ம வளர்த்த விதமா இருக்குமோ?

said...

பழையன கழிதலும் புதியன புகுதலும்தான் வாழ்க்கையோ????

said...

mmm ,nalla iruku ,
males ,females rendu per mentalitiyum nalla analysis panirkeenga !!!
esp the names and the reason behind excellent

Anonymous said...

நல்லா வந்திருக்கு. எப்பவும் பழசுக்கும் புதுசுக்கும் ஒப்பீடூ பண்ணாம இருக்க முடியாதோ

said...

தல,

சில விஷயங்கள், எழுத்து நடை வித்தியாசமா இருக்குது. ஆனா கருவும் முடிவும் முன்னே வாசிச்ச ஒரு கதையாத்தான் எனக்குப் படுது...


(இது உங்க ஏரியான்னு இங்கயே உக்காராதீங்க. அடுத்து கிளம்பி வாங்க. எங்க அறிவியல் புனைவு?)