Friday, April 11, 2008

இட ஒதுக்கீடு - இவ்வார தமிழோவியத்தில் வந்த சிறுகதை

SC upholds OBC quota, TWENTY-SEVEN PER CENT QUOTA FOR OBCs என தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்த செய்தியைப் பார்த்ததும் மகிழ்ச்சி வெள்ளத்தில் முதல் வேளையாக என்னுடைய தூரத்து மாமா பையன் சேகரை தொலைபேசியில் கூப்பிட்டேன்.

"சேகரா, ஒழுங்கா GATE எக்ஸாம் எழுது !!!

இந்த வருஷம் கோட்டா கொண்டு வந்துட்டாங்க, உனக்கு நல்ல சான்ஸ் இருக்கு" என உற்சாகப்படுத்திவிட்டு வேறு யாரு சொந்தத்தில இருக்காங்கன்னு யோசித்துக் கொண்டிருக்கும்பொழுதே என் மனைவி ரம்யாவின் தம்பி கிருஷ்ணமூர்த்தி உள்ளே வந்தான்.

"என்ன குமரன், தீர்ப்பு உங்க மக்களுக்கு சாதகமா வந்துடுச்சு போல"

"கிச்சா, அத்திம்பேருன்னு சொல்லு, பேர் சொல்லிக் கூப்பிடாதேன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்"

வழக்கம்போலவே கிருஷ்ணமூர்த்தியை ரம்யா கடிந்து கொண்டாள். சபைகளில் காயத்ரியோட கணவர் வாசுதேவனை மட்டும் அத்திம்பேர் எனக்கூப்பிட்டு என்னைப் பெயர் சொல்லிக் கூப்பிடுவது ரம்யாவுக்கு சுத்தமாகவே பிடிக்காது. கிருஷ்ணமூர்த்தி மட்டுமல்ல, ரம்யாவோட அம்மா, அப்பா எல்லோரும் என்னை வாசுதேவனை விட ஒரு படி கீழே வைத்திருப்பதாகவே ரம்யாவுக்கு தோன்றும்.

"என்னதான் இருந்தாலும் வாசு, இந்த வீட்டுக்கு மூத்த மருமகன், அதனால ஒரு ஸ்பெஷல் டிரீட்மெண்ட் இருக்கிறது இயல்புதானே!!.. உன் தம்பி சின்ன வயசிலேந்து என்னை பார்க்கிறான்..பேரு சொல்லியே கூப்பிட்டு பழகின பின்ன சடார்னு உறவுமுறைலக் கூப்பிடுறது வராது ரம்யா " என சொன்னாலும் ரம்யா ஒத்துக்க மாட்டாள்.

இந்த மண்டல் கமிஷன், இடஒதுக்கீடு பற்றி தபால் துறையில் சம அளவில் உயரதிகரிகளாக இருக்கும் ரம்யாவின் அப்பாவுக்கும் என் அப்பாவுக்கும் நான் சின்ன வயசில இருக்கிறப்ப கடும் வாக்குவாதம் நடக்கும். நானும் கிருஷ்ணமூர்த்தியும் அவங்க கூட உட்கார்ந்து அதைக் கவனிப்போம்.

எங்க குடியிருப்பில் வி.பி.சிங் ஆட்சி கவிழ்ந்தப்ப அதிகமாக கவலைப்பட்டது என் அப்பாதான். "என்னய்யா, நிஜக்காரணம் சொல்லிக் கவிழ்த்து இருந்தா பரவாயில்லை. ராமர் எதுக்கெல்லாம் பயன்படுறாரு பாருய்யா?"

அதற்கப்புறம் அந்த மாதிரி விவாதங்களில் அவர்களுடன் உட்கார எங்களுக்கு நேரம் இருந்ததில்லை. அதன்பின்பு இட ஒதுக்கீடு என்ற ஒரு விசயம் எங்க குடும்பங்களுக்கிடையில் வந்தது எனக்கும் ரம்யாவுக்கும் ஒரே கல்லூரியில் ஒரே பொறியியற் பிரிவில் இடம் கிடைத்தபோது தான்.

"என்னதான் ஒரே காலேஜ், ஒரே டிபார்ட்மெண்ட் ல சீட்டுனாலும் என் அக்கா , குமரனை விட 7 மார்க் எண்ட்ரன்ஸ்ல அதிகம்.. இருந்தாலும் அவனுக்கு கோட்டால சீட் கிடைச்சிடுச்சு " அப்படின்னு என் சகநண்பர்கள் மத்தியில தன் அக்காவின் அறிவுத்திறமையைப் பெருமையாக சொல்லிக் கொள்வான்.

கல்லூரியில் ஆரம்பம் முதல் இறுதி தேர்வு வரை முதல் மாணவனாகவே வலம் வந்த எனக்கும் ரம்யாவுக்கும் அதுவரை இருந்த பால்ய கால நட்பு காதலாகி கல்யாணம் வரைக்கும் ரம்யாவின் பெற்றோரிடம் எடுத்துச்செல்லப்பட, பெரிய எதிர்ப்பு ஏதும் இல்லாமல் சுமுகமாகவே எங்களுக்கு திருமணமும் நடந்து அதன் சாட்சியாக அஞ்சலிபாப்பா வந்த பிறகு அஞ்சலிப்பாப்பாவின் தாத்தாக்கள் விவாதிக்க ஆரம்பித்திருந்த விசயம்கிருஷ்ணமூர்த்திக்கும் எனக்கும் இடையில் இன்றும் தொடர்கிறது.
"சாதகமான தீர்ப்பு என்றெல்லாம் கிடையாது... க்ரீமிலேயர்ல இன்னும் குழப்பம் இருக்கும்.. பாதி நீதி கிடைச்சாலும் அநீதி தான். எனிவே ஒன்றுமே இல்லாததற்கு இது பெரிய விசயம்"

"க்ரீமிலேயரும் வேணுங்கிறீங்களா, இப்படியே பேசி பேசி நாட்டை சீரழிச்சுடுங்க"

"முதல் தலைமுறையில கிளர்க் ஆகி ரிடையர்ட் ஆகிற சிலவருஷத்துக்கு முன்ன தத்தி தத்தி ஆபிஸர் ஆகுற ஆளோட பையனுக்கு க்ரீமிலேயரில வருவான்னு அவனோட உரிமையைப் பறிக்கிறது கொடுமை. விவசாயம் பண்ற ஒருத்தன் விளைச்சல் நல்லா இருந்தா அந்த வருஷம் லட்சாதிபதி... வானம் பார்த்த பூமி ஆச்சுன்னா எலிக்கறி சாப்பிடவேண்டியதுதான்"

"அப்போ தலைமுறை தலைமுறையா இந்த நாட்டைக் குட்டிச்சுவராக்கிடுங்க"

"லெவல் பிளேயிங் ஃபீல்ட் அமைச்சுக்கொடுக்கிற எந்த அமைப்பும் குட்டிச்சுவராயிடாது."

பேச்சு கடுமையாவதைக் கண்ட

ரம்யா எங்களின் பேச்சை மாற்றும் விதமாக

"கிச்சா, சேவக்கோட பழைய டிரிபில் செஞ்சுரி டிவிடி அத்திம்பேர் கேட்டிருந்தாரே, எடுத்துட்டு வந்தியா?"

கையோடு கொண்டு வந்திருந்த அந்த குறுந்தகட்டை கிருஷ்ணமூர்த்தி என்னிடம் கொடுத்த பின் எங்களுடைய பேச்சு அகமதாபாத் டெஸ்ட், ஐபிஎல்,ஐசிஎல் ஒகேனேக்கல் என ரம்யாவை சங்கடப்படுத்தாத அளவில் , அவள் செய்து கொடுத்த பகோடா, காபியுடன் திசை மாறியது.

கிருஷ்ணமூர்த்தி போகிறப்ப தனது மேசையில் அமர்ந்து வீட்டுப்பாடங்கள் செய்து கொண்டிருந்த அஞ்சலிப்பாப்பாவை பார்த்து,

"ரம்யா, நம்ம பேமிலியிலேயே சிரமமில்லாம உன் குழந்தைக்குத்தான் காலேஜ்ல எல்லாம் சீட் கிடைக்கப்போகுது, கொடுத்த வச்ச குழந்தை" சொல்லிவிட்டுப் போனபின் ரம்யாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

"விடு ரம்யா, சாதி மதம் கடந்து நம்ம குழந்தை அஞ்சலியை வளர்க்கனும்னு ரிசர்வேஷன் பெனிபிட்ஸ் வேண்டாம்,வேற ஒரு தேவையான குழந்தைக்கு எதிர்காலத்தில் போய்சேரட்டும்னு தானே சாதி,மதம் ஏதும் சொல்லாமல் ஸ்கூல்ல சேர்த்திருக்கிற விசயம் அவனுக்கு தெரியாதுல்ல..."

எனச்சொல்லிவிட்டு தீர்ப்பின் சாராம்சங்களை இணையத்தில் தேட ஆரம்பித்த சில நிமிடங்களுக்குப்பின்னர் தனது வேலைகளை முடித்த ரம்யா "நாளைக்கு நானும் காலேஜ்ல போய் இந்த தீர்ப்போட பெனிபிட்ஸை பத்தி என்னோட ஸ்டூடண்ட்ஸ்க்கு சொல்லனும்," என சிலக்குறிப்புகளை எடுக்க என்னருகே வந்தமர்ந்தாள்.
தமிழோவியத்தில் வெளிவந்தது

Wednesday, April 09, 2008

தொலைபேசி எண் - ஒரு நிமிடக்கதை

குழந்தை அஞ்சலியுடன் விளையாடிக்கொண்டே இருந்த கார்த்தி, வீட்டு வேலைகளை முடித்து அருகில் வந்து உட்கார்ந்த ரம்யாவிடம்

"ரம்யா, என்னோட புது மொபைல் நம்பரை குறிச்சுக்கோ!”

“கார்த்தி, என் மொபைலுக்கு ஒரு மிஸ்ட் கால் கொடுங்க, ஸ்டோர் பண்ணிடுறேன்”

ரம்யா சொன்னவாறே செய்துவிட்டு குழந்தை அஞ்சலிக்கு தனது உலாபேசியின் எண்ணை மனனம் செய்யவைத்த கார்த்தி அஞ்சலிபாப்பாவிடம்.

“கார்த்திபா வோட போன் நம்பர் சொல்லுடாக்குட்டி”

“98407...”

”ம்ம் அடுத்த அஞ்சு நெம்பர் சொல்லுடா செல்லம்”

அதையும் அஞ்சலிபாப்பா சரியாகச் சொல்ல வாரி அணைத்துக் கொண்டான்.

“கார்த்தி, யூகேஜி படிக்கிற குழந்தைக்கு போன் நெம்பர் எல்லாம் ஞாபகம் வச்சுக்கனும்னு என்ன அவசியம்?”

“ நினைவு சக்தியை அதிகமாக்கிக்கொள்ள இது கூட ஒரு பிராக்டிஸ் ரம்யா.. அது இருக்கட்டும் நாளைக்கு ஈவ்னிங் மோகன் சார் வீட்டுல சின்ன கெட்டுகெதர்... அஞ்சலியைக் கூட்டிட்டு நேரா அங்க வந்துடு”

மறுநாள் புறநகர்ப்பகுதியில் அமைந்திருந்த மோகனின் வீட்டிற்கு ரம்யா அஞ்சலிப்பாப்பாவுடன் வண்டியில் போகும்பொழுது அவளது ஸ்கூட்டி பாதி வழியில் நின்று தகராறு செய்தது. சரி கார்த்தியை உலாபேசியில்கூப்பிடலாம் என்றால் அதை வீட்டிலேயே மறதியாக வைத்துவிட்டு வந்திருந்தாள். வண்டியை மெதுவாக உருட்டிக்கொண்டு அருகில் இருந்த ஒரு கடைக்கு வந்து கார்த்திக்கு தொலைபேச நினைத்தபொழுதுதான் கார்த்தியின் புது எண் அவளுக்குத் தெரியவில்லை. அஞ்சலிப்பாப்பாவிடம்

“குட்டிமா, கார்த்திபாவோட போன் நம்பர் சொல்லு”

“9..8.. ..4... 0 7” என தனது மழலை மொழியில் கார்த்தியின் உலாபேசி எண்ணை அஞ்சலிப்பாப்பா சொல்லி முடித்தவுடன் அதை இறுக்க அணைத்த படி, இரவு போனதும் தனது எண்ணையும் அஞ்சலிப்பாப்பாவிற்கு மனப்பாடம் செய்ய வைக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் கார்த்தியை, தொலைபேசியில் அழைத்தாள்.

-----

Tuesday, April 08, 2008

நடைபாதை இட்லிக்கடையும் நானும் - ஒரு நிமிடக்கதை

நள்ளிரவைக்கடந்தும் விழித்து இருந்து, டான் பிரவுனின் ஏஞ்சல் அண்ட் டெமொன்ஸ் புத்தகத்தை வாசித்து விட்டு அப்படியேத் தூங்கிப்போன நான், எழுந்தபோது மணி எட்டரை. கூன்பாட்டியின் நினைவு வந்தது. அவசர அவசரமாகக் குளித்துவிட்டு நான் வழக்கமாக காலை உணவு சாப்பிடும் உணவகத்தை நோக்கி வண்டியை விரட்டினேன். என்னை என் அலுவலக மக்கள் கஞ்சன் என அழைப்பதற்கு இந்த உணவகத்தில் சாப்பிடுவதும் ஒரு காரணம்.

நடைபாதையின் மேல் ஏற்றி நிறுத்தப்பட்டிருக்கும் தள்ளுவண்டி. அதில் ஒரு பக்கம் மண்ணென்னெய் அடுப்பு, இட்லிப்பானை , வண்டியை சுற்றி, மரப்பெஞ்சுகள் காலை ஏழரை மணியில் இருந்து 10 வரை படு சுறுசுறுப்பாக வியாபாரம் நடக்கும். சாம்பார், காரச்சட்னி. தேங்காய் சட்னி உடன் தோசை நாலு ரூபாய் ,4 இட்லி ஆறே ரூபாய்தான்.

ஒரு வாரத்திற்கு முன்னால் இப்படி 10 ரூபாயில என் காலை சாப்பாடை முடித்துக்கொண்டிருக்கும் பொழுது தான் அந்த கூன் பாட்டியை முதன் தடவையாக பார்த்தேன். கையில் மூங்கில் கம்பை வைத்துக்கொண்டு என் பக்கத்தில் வந்து நின்றார். எதுவும் பேசவில்லை ஆனால் கண்களில் பசி தெரிந்தது,

“அண்ணே, அந்தப் பாட்டிக்கு நாலு இட்லி கொடுங்க, அதுக்கும் சேர்த்து இந்தாங்க காசு”

மறுநாள் சாப்பிடப்போகும்போது அந்த தள்ளுவண்டி இருக்கும் இடத்தில் இருந்து பத்தடி தள்ளி இருந்த மரத்தினடியில் உட்கார்ந்திருந்த. அந்தப் பாட்டி நான் கடையில் வண்டியை நிறுத்தியவுடன் மெதுவாக எழுந்து என்னருகே வந்து நின்றார். அன்றில் இருந்து கடைசி ஒரு வாரமாக தினமும் நான் சாப்பிடப்போகும்பொழுது அந்த பாட்டிக்கும் சாப்பாடு வாங்கித் தருவது வழக்கமாகிவிட்டது.

இப்பொழுது ”அந்த பாட்டி. நான் வருவேன் இட்லி வாங்கித்தருவேன்னு காத்திருக்குமே!!.. அந்தக் கடைக்காரர் பாட்டியை விரட்டி இருப்பாரோ,” என நினைத்துக் கொண்டே அரை மணிநேரம் தாமதமாக அந்தக் கடைக்கு வந்துசேர்ந்த பொழுது ,

பாட்டியை ஓரமாக உட்கார வைத்து, இட்லி வைத்து பரிமாறிக்கொண்டிருந்த அந்த நடைபாதை
இட்லிக்கடைக்காரர் என்னைப்பார்த்ததும்.

“வாங்க தம்பி, என்ன லேட், கிழவி நீங்க வருவீங்களான்னு எல்லா பைக்கையும் பார்த்துக்கிட்டே இருந்துச்சு, பார்க்கவே மனசு கஷ்டமாஇருந்துச்சு, அதான் நானே சாப்பிடக்கூப்பிட்டுட்டேன்”

----------

Friday, April 04, 2008

தொட்டனைத்து ஊறும் மணற்கேணி - இவ்வார தமிழோவியம் இணைய இதழில் வெளியான சிறுகதை

"அகரம் இப்போ சிகரமாச்சு,தகரம் இப்போ தங்கமாச்சு, காட்டு மூங்கில் பாட்டுப்பாடும் புல்லாங்குழலாச்சு" எனஅடுத்த தடுப்பில் இருந்த மோகனின் கைத்தொலைபேசி பாட, அவர் எடுத்துப் பேசினார்.

"சொல்லுங்க பஷீர்"

"----"

"அன்னக்கி காலையில வந்து கடைப்பையன் இஸ்மாயில் கிட்ட கொடுத்தேனே!!"

"----"

"ஓ அப்படியா, சரி பஷீர், மதியம் வந்து தரேன்.. வயசாயிடுச்சுல்ல, மறதி அதிகமாயிடுச்சு"

கைத்தொலைபேசியை வைத்து விட்டு, அவரின் இடத்திற்கு மோகன் என்னை அழைத்தார்.

"கார்த்தி, முந்தாநேத்து பஷீர் கடையில ரீசார்ஜ் பண்ணதுக்கு உன் முன்னதானே பணம் கொடுத்தேன்.. எவ்வளவு ரூபாய் கொடுத்தேன்னு நினைவு இருக்கா?"

"ஞாபகம் இல்லையே சார்..."

"லாஸ்ட் வீக்ல ரம்யாவுக்காக வீட்டிலேந்து போன் செஞ்சு ரீசார்ஜ் செய்ய சொன்னேன்... முதல் தடவை 225, மறுதடவை 125 ரூபிஸ்.. 125 கொடுத்தாச்சு 225 ரீசார்ஜுக்கு இன்னும் பணம் தரலேன்னு, பஷீர் இப்போ சொன்னாரு.. தின செலவுக்குன்னு நான் வச்சிருக்கிற எக்ஸல் சீட்லே இரண்டையும் கொடுத்துட்டேன்னு தான் இருக்கு."

"சார், உங்க ஞாபக சக்தியில எனக்கு நம்பிக்கை உண்டு, நீங்க கண்டிப்பா கொடுத்து இருப்பீங்க, திரும்ப எல்லாம் கொடுக்காதிங்க, இவனுங்கெல்லாம் இப்படித்தான், நம்மளை எக்ஸ்ப்ளாய்ட் பண்ண டிரை பண்ணுவானுங்க...நான் எப்போதும் இந்த மாதிரி ஆட்களை நம்புறதே கிடையாது... நீஙக் மேடத்துக்கு போஸ்ட் பெய்ட் கனெக்‌ஷன் வாங்க்கொடுங்க.. இந்த பிரச்சினை எல்லாம் அதுலக் கிடையாது.. "

"ச்சேசே பஷீர் பொய் எலலாம் சொல்ல மாட்டாரு, அவரு ஒரு வேளை மறந்து இருப்பாரு, கடைப்பையன் இஸ்மாயில் சொல்லாம விட்டு இருக்கலாம், நமக்கு இந்த 200 ரூபாய் சாதாரணமா இருந்தாலும், அவங்களுக்கு இதுல கிடைக்கிற கொஞ்சம் கமிஷன் தான் பொழைப்பே!! நான் போய் கொடுத்துட்டு வந்துடுறேன்,"

சொல்லிவிட்டு பஷீர் கடைக்கு கிளம்பிப்போனார்.

மோகன் அநியாயத்துக்கு அடுத்தவர் நிலையில் இருந்து யோசிப்பார். கடைநிலை ஊழியரிலிருந்து அவருக்கு மேலே அதிகாரத்தில் இருக்கும் யார் கேட்டாலும் பொருள் உதவி, அவரின் செல்வாக்கினால் பெற்றுத்தர முடிகிற உதவி என எதுவாக இருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் போய் செய்துவிட்டு வருவார். அலுவலகத்தில் மக்களுக்கு கொடுத்து திரும்பி வாரா பணமே கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய் இருக்கும். மோகனின் மனைவி ஒரு ஆர்கிடெக்ட், கன்சர்வேசன் ஆர்கிடெக்ட்.. பழையக் கட்டிடங்களைப் புராதன சின்னங்களைப் பாதுகாக்கும் கட்டிடக்கலையியலில் முதுகலைப் பட்டம் பெற்று. அது சம்பந்தபட்ட நல்ல வேலையில் இருப்பதால், இந்த பணம் விசயத்தில் மோகனுக்கு எப்போதுமே பிரச்சினை இல்லாததால் கடன் கொடுத்தவர்களிடமிருந்து திரும்ப எதிர்பார்ப்பதில்லை போலும்.

"மோகன் சார், உங்க வீட்டுல இரண்டு பேருமே சம்பாதிக்கிறனால உங்களுக்கு காசோட அருமை தெரியல " என ஒருமுறை வெளிப்படையாகக் கேட்ட பொழுது

"நம்ம எம்.டி வீட்டுகிரகபிரவேசத்திற்கு நம்ம ஆபிஸிலேந்து எத்தனை பேர் வந்து இருந்தாங்க?"

"கால்வாசிப் பேரு கூட இல்லை!!!"

"என் குழந்தை அஞ்சலியோட மூனாவது பிறந்த நாளுக்கு எத்தனைப்பேரு வந்திருந்தாங்க"

"நம்ம ஆபிஸ் மொத்தமும்..."

"அதுதான்... எனக்கு கிடைக்கிற மிகப்பெரிய ரிடர்ன்.. அந்த மகிழ்ச்சிக்கு ஈடு கிடையாது... "

அவர் சொல்வதும் சரிதான். எங்க அலுவலகத் துப்புரவுத் தொழிலாளி நாரய்யா கூட 50 ரூபாய்க்கு ஒரு மரச்சட்டத்தில் சிலேட்டுப்பலகை வாங்கி அஞ்சலிப்பாப்பாவிற்குக் கொடுத்ததை மோகன் அடிக்கடிச் சொல்லி சந்தோசப்படுவார்.

"கொடுக்க முடியுற அளவுக்கு பணம் இருக்கு, உதவி பண்ற அளவுக்கு எனக்கு செல்வாக்கு இருக்கு, அதனால செய்யுறேன்.. இரண்டுமே தீரக்கூடிய விசயம் கிடையாது... தொட்டனைத்து ஊறும் மணற்கேணின்னு பெரியவங்க சொல்றது சரிதானே "

மோகன் என்ன விளக்கம் சொன்னாலும் குறைந்த பட்சம் அவர் பண விசயத்திலாவது கறாராக இருக்கலாம். ஒரு வேளை கறாராக இருந்தால் தன் விரும்பும் பிம்பம் உடைபடுமோ என்ற பயம் இருக்குமோ!! .. ம்ம் இருக்கலாம் தெரிந்தோ தெரியாமலோ அமைந்த பிம்பத்திற்கான அவர் கொடுக்கும் விலை அதிகமோ என எனக்குப்பட்டது.

பஷீருக்குப் பணம் கொடுத்துவிட்டு வந்த மோகனின் கையில் போஸ்ட் பெய்ட் இணைப்புக்கான பாரம் இருந்தது. ஆச்சரியமாக இருந்தாலும் நான் ஏதும் கேட்டுக்கொள்ளவில்லை. இரண்டு நாட்கள் கழித்து, எங்கள் அலுவலக வரவேற்பறையில் மோகன் வருவதற்கு முன்னமே, பஷீர் மோகனுக்காக வந்து உட்கார்ந்திருந்தார்.

நானும் மோகனும் ஒரு சேர உள்ளே நுழைந்த போது, பஷீர் எழுந்து, "சாரி மோகன் சார், கடைப்பையன் நீங்க கொடுத்த பணத்தை வேறுபெயரில் குறித்து வைத்திருக்கிறான், நேற்றுதான் கவனித்து கேட்டேன்.. நீங்க கொடுத்ததுன்னு சொன்னான்.. நீங்க மறுபடியும் கொடுத்தப் பணத்தை திரும்பக் கொடுத்துட்டு மன்னிப்பும் கேட்டுட்டுபோகலாம்னு வந்தேன்" என கெஞ்சலாகப் பேசி அந்த 225 ரூபாயை மோகனிடம் திரும்பக் கொடுத்தார். வாங்கிக் கொண்ட மோகன் என்னைத் திரும்பிப் பார்த்து ஒரு
புன்னகை செய்தார்.

"பஷீர், மன்னிப்பு எல்லாம் எதுக்கு, நான் கேட்டிருந்த போஸ்ட்பெய்ட் கனெக்‌ஷன் என்ன ஆச்சு?"

"ஏர்டெல் ஆபிஸ்ல நேத்தேக் கொடுத்துட்டேன்..இன்னக்கி ஆக்டிவேட் ஆகிடும் சார்.." எனச் சொல்லிவிட்டு திரும்பவும் ஒரு முறை தவறுதலாக இரண்டாம் முறை பணம் பெற்றமைக்காக மன்னிப்புக்கேட்டுக்கொண்டு பஷீர் விடைபெற்றார்.

சமூகத்தில் நிறைய சமயங்களில் நாம் நினைத்திருப்பதைவிட அருமையான மக்களும் இருக்கிறார்கள் என்ற எண்ணத்துடன் இருக்கையில் வந்தமர்ந்தவுடன் எனக்கு வந்திருந்த மின்னஞ்சல்களை வாசிக்க ஆரம்பித்தேன்.

ஜெனியிடமிருந்து "ரீசார்ஜ் செய்ய டைம் இல்லை... மிஸ்ட் கால் கொடுக்கக் கூட மொபைலில் பைசா இல்லை. ரீசார்ஜ் செய்து ஈவ்னிங் கூப்பிடுறேன்" என வந்திருந்த மின்னஞ்சலை வாசித்து முடித்துவிட்டு மோகனிடம் பஷீரின் தொலைபேசி எண்ணை வாங்கி வைத்துக்கொண்டேன்.

--------------

பின் குறிப்பு : இந்தியாவில் எந்த மூலையில் இருந்தும் மொபைல் சர்விஸ் புரவைடர்களின் ஏஜென்டுகள், தங்களது மொபைல் மூலம் அந்தந்த சர்விஸ் புரவைடர்களின் எண்களுக்கு ரீசார்ஜ் செய்யலாம்.

எனக்கே எனக்கா - நிறைவுப் பகுதி

முந்தையப்பகுதிகளைப்படிக்க இங்கே சொடுக்கவும்

ரம்யாதான் மோகனின் மனைவியாகப் போகிறவள் என்று தெரிந்த நாள் முதற்கொண்டு,மோகனிடம் சகஜமாகப் பேசுவதை அடியோடு கார்த்தி நிறுத்தினான். ஆண்களை விட பெண்கள் தங்களது முந்தைய கடந்த கால காதலை வெகுவேகமாக மறந்துவிடுவார்கள் என்று எங்கோ படித்தது நினைவுக்கு வந்தது. அது எத்தனை நிதர்சனமான உண்மை என்று தன்னுள் நினைத்துக்கொண்ட கார்த்தியால் ரம்யாவுக்கு திருமணம் என்பதை விட அது காதல் திருமணம் என்பதைத்தான் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.

ரம்யாவே எல்லாவற்றையும் மறந்து புதுவாழ்க்கைக்கு தயாரானபொழுது தான் மட்டும் ஏன் அவள் நினைவுகளோடு இருக்க வேண்டும் என்று கார்த்தி ஆரம்பித்த புதுஅத்தியாயம் சுவாரசியமாகவே இருந்தது. தோற்றுப்போன ஒரு விசயம் மீண்டும் வேறுவடிவம் எடுத்து வாழ்வில் மீண்டும் வரும்பொழுது அதன் மேல் இருக்கும் ஆர்வம் இரட்டிப்பாகவே இருக்கும் என்பது கார்த்தியின் இரண்டாவதுக் காதலிலும் உண்மையாகவே இருந்தது.

சென்னையைத் தவிர எந்த ஊரிலும் வேலை செய்யத்தயார் என்ற மனநிலையில் இருந்த கார்த்திக்கு எதிர்பார்த்ததைவிட விரைவாக திருவனந்தபுரத்தில் வேலைக்கிடைத்தது.
குறைந்த நேர அவகாசம் கொடுத்து ராஜினாமா செய்தாலும் , அலுவலகத்தில் ஏதும் பிரச்சினை செய்யவில்லை. ஜெனியை சமாதானப்படுத்துவதுதான் கார்த்திக்கு பெரிய விசயமாக இருந்தது.ஊருக்குப்போகும் முன் ஜெனியின் அனைத்து மின்னஞ்சல் முகவரிகளின் கடவுச்சொற்களை மறக்காமல் வாங்கி வைத்துக்கொண்டான். மோகன் ரம்யா திருமணம் நடைபெற்ற அதே நாளில் கார்த்தி தன் சம்பளத்தில் கால்வாசிப்பகுதி தொலைபேசி செலவுக்கு எனமுடிவு செய்து திருவனந்தபுரத்தில் புதுவேலையில் சேர்ந்தான்.

திருமணம் முடிந்து சென்னையில் வாழ்க்கையை ஆரம்பித்த பின் ரம்யா ஒருநாள் தனது கல்லூரிப்புகைப்படங்களை மோகனிடம் காட்டியபோது முதன்முறையாக மோகனிடம் தனது கல்லூரிக்கால காதலைப்பற்றிச்சொல்ல ஆரம்பித்தாள். கார்த்தி அந்தப்படத்தில் மிக ஒல்லியாக இருந்தபொழுதும் மோகன் அவனை சரியாக அடையாளம் கண்டுகொண்டார். ஆனாலும் கார்த்தி தன் நிறுவனத்தில் முன்பு வேலைப்பார்த்தவன் என்பதை மோகன் ரம்யாவிடம் சொல்லவில்லை. முதன்முறையாக கார்த்தி ராஜினாமா செய்துவிட்டுப்போனதற்காக மகிழ்ச்சி அடைந்தார்.

பழையநினைவுகளை மோகனிடம் பகிர்ந்து முடித்துவிட்டு அழ ஆரம்பித்த ரம்யாவிடம் மோகன்

“எல்லோருக்கும் அட்லீஸ்ட் ஒரு பாஸ்ட் லவ்வாவது இருக்கும் ரம்யா, இதுஎல்லாம் பெரிய விசயம் இல்லை.... எனக்குக்கூடத்தான் ஏகப்பட்டகிறஸ் இருந்து இருக்கு...காலேஜ்ல நான் விரட்டி விரட்டி ஒரு பொண்ணைக் காதலிச்சு இருக்கேன்”

“-----”

“பாஸ்ட் பத்திஎல்லாம் யோசிக்காதடா செல்லம்,எல்லோருக்கும் ஒரு கவலையான கடந்தகாலம் இருக்கும் அதெல்லாம் நினைச்சுட்டு இருந்தா செக்கு மாடு மாதிரி ஒரே இடத்தில தான் நிக்கவேண்டி இருக்கும்”

மோகனால் ரம்யாவை சமாதனப்படுத்தி,சிரிக்க வைக்க எவ்வளவு முயன்றும் முடியவில்லை. மறுநாள் மோகன் அலுவலகம் சென்றபின் அந்த ஆல்பத்தில் இருந்து கார்த்தியுடன் தான் எடுத்துக்கொண்டப் படங்களை எடுத்துவிடலாம் என்று ஆல்பத்தை தேடியபொழுது அதைக் காணவில்லை. மாலை மோகன் அந்த ஆல்பத்துடனும் வரும் வரையில் முழுவதும் சல்லடை போட்டுத்தேடிக்கொண்டே இருந்தாள்.

“நீங்கதான் எடுத்துட்டுப் போய் இருந்திங்களா?”

“ஆமாம், போட்டோஸ் எல்லாம் மங்கலாயிட்டே இருக்கு.. எல்லாத்தையும் ஸ்கேன் பண்ணி லேப்டாப்ல ஏத்திட்டேன்... டிஜிடல் பார்மட் ல நினைவுகளை வச்சுக்கிறது நல்லது ரம்யா”

“யூ ஆர் ஸோ ஸ்வீட், ஐ லவ் யூ ஸோ மச்” என அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டாள்.

அதே நேரத்தில் ”ஏன் கார்த்தி , மொபைல் இவ்ளோ நேரம் என்கேஜ்டா இருந்துச்சு ” கார்த்தியின் காதுகிழிய தொலைபேசியில் ஜெனி கத்திக்கொண்டு இருந்தாள்

“பிரண்டு கிட்ட பேசிட்டு இருந்தேன் ஜெனி”

“எந்த பிரண்டு, பையனா பொண்ணா?!!!... 40 மினிட்ஸா டிரைபண்றேன்”

“பையன் தான்.. அவனுக்கு ஒரு பெர்சனல் பிராப்லம்..அதுக்கு சொல்யூஷன்ஸ் கொடுத்துட்டு இருந்தேன்”

“என்னோட நெம்பர் வரது உன் மொபைல்ல காட்டும்ல, பார்த்துட்டு எடுத்து இருக்கலாம்ல?”

“சரி இனிமேல் சரியா எடுத்துடுறேன் போதுமா ஜெனி!!!”

”இன்னொரு தடவை நான் பேசக்கூப்பிடுறப்ப நீ எடுக்கலேன்னா நடக்கறதே வேற”

“அப்படி எடுக்கலாட்டி என்னோட ஜெனிச்செல்லம் என்ன பண்ணுவாள்?”

“கார்த்தி, நீ மிஸ் பண்ற ஒவ்வொரு call க்கும் என் கையிலே பிளேடால கோடுபோட்டுக்குவேன்!!!”

------ முற்றும் -----------

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.

Thursday, April 03, 2008

சதானந்த் விசுவநாத் - மின்மினியாகிப் போன கிரிக்கெட் நட்சத்திரம்

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பையை வென்று வந்த இந்திய அணியைப் பாராட்டி பெங்களூரில் நடைபெற்ற பாராட்டுவிழா பற்றிய கிரிகின்போ கட்டுரையில் இறுதியில் இந்த வாக்கியம் இடம்பெற்றிருந்தது.மேலே சொன்ன வாக்கியம் புகழை அடையப்போகும் போதும், புகழின் உச்சத்தில் இருக்கும் போதும் செய்யும் சிலதவறுகள் ,அதன் தொடர்ச்சியாக ஏற்படும் ஏமாற்றங்களைத் தாங்கிக் கொள்ள இயலாத மனநிலை உடைய விளையாட்டுவீரர்களுக்கு, குறிப்பாக இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு எச்சரிக்கை வாக்கியம். முகட்டில் இருந்து தான் எந்தவொரு வீழ்ச்சியும் தொடங்குகிறது எனபதற்கு மேலும் ஒரு அத்தாட்சி.
1983 உலகக்கோப்பை வெற்றிக்குப்பின்னர் இந்திய வந்த மேற்கிந்திய தீவுகள் அணியிடம் 4 - 0 என்றக் கணக்கிலும், ஆஸ்திரேலியாவுடன் 3-0 எனவும் இங்கிலாந்து உடன் ஆன போட்டிகளில் 4-1 என ஒரு நாள் போட்டிகளில் உள்ளூரிலேயே மண்ணைக் கவ்விய இந்தியாவின் உலகக் கோப்பை வெற்றி அதிர்ஷ்டத்தில் கிடைத்த ஒன்று என்ற வெளிப்படையாக பேசப்பட்ட சமயத்தில் தான் இந்திய அணி எந்தவித எதிர்ப்பார்ப்புகளும் இன்றி ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த பென்சன் அண்ட் ஹெட்ஜஸ் உலகத் தொடர் போட்டியில் பங்கேற்க சென்றது, யாரும் எதிர்பாராவிதமாக இந்தியா கோப்பையை வென்ற அப்போட்டித் தொடரில் . கோப்பையைவிட ரவிசாஸ்திரிக்கு கிடைத்த “ஆடி” கார் பேசப்பட்டது போல பேசப்பட்டு பின்னாளில் நினைவுகளைவிட்டு அகன்று போனவர்கள் இருவர். அந்த தொடரில் மிகச்சிறப்பாக விளையாடிய சுழல் பந்துவீச்சாளர் எல்.சிவராமகிருஷ்ணன் மற்றும் விக்கெட் கீப்பர் சதானந்த் விசுவநாத் ஆகியோர்தான் அந்த இருவர். சிவராமகிருஷ்ணன் வர்ணனையாளராக இரண்டாவது வலம் வந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் சிவராமகிருஷ்ணனைப் பார்க்கும்பொழுதெல்லாம் நினைவில் விசுவநாத்தும் வருவார்.

சையத் கிர்மானி யின் இடத்தை நிரப்புவதற்காக ஒருவரை தேர்வாளர்கள் தேடிக்கொண்டிருந்தபோது திறமையால் அவர்களின் மனதில்இடம்பிடித்து இங்கிலாந்துக்கு எதிராக பெங்களூரில் அசாருதின் அறிமுகமான அதே ஆட்டத்தில் சதானந்த் விசுவநாத் அறிமுகமானார்.

விசுவநாத்தின் விக்கெட் கீப்பிங் , அவர் அப்பீல் செய்யும் முறை அந்தக் காலக் கட்டத்தில் விக்கெட் கீப்பிங் முறையில் புதுப் பரிமாணத்தை புகுத்தியது. பத்துக்கும் அதிகமான கோணங்கள் கொண்டு ஒளிபரப்பட்ட அந்த தொடரின் ஆட்டங்களில் சுறுசுறுப்பாக விக்கெட் கீப்பிங் செய்வது, முடிந்தவரை எல்லா பந்துகளுக்கும் அவுட்டா என நடுவரிடம் முறையிடுவது , பந்துவீச்சாளரை உற்சாகப்படுத்திக்கொண்டே இருப்பது ஆகியன பார்க்கும் ரசிகர்களுக்கு பெரும் சுவாரசியத்தை தந்தது. சிவராமகிருஷ்ணனின் பந்துவீச்சில் மியாண்டடை ஸ்டம்பிங் செய்யும் காணொளி கீழேஆட்டவிபரம் இங்கே

சுனில்கவாஸ்கர் தனது "One day wonders" என்றபுத்தகத்தில் சதானந்த் விசுவநாத்தின் விக்கெட் கீப்பிங் நேர்த்தி கோப்பையை வெல்ல மிக முக்கியமான காரணிகளில் ஒன்று எனக்குறிப்பிட்டுள்ளார். அந்த சமயத்தில் ஆஸ்திரேலிய பத்திரிகை உலகமும் இந்தியா உருவாக்கிய சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவராக எதிர்காலத்தில் இவர் வலம் வருவார் சதானந்த் விசுவநாத்தை வெகுவாகப் பாராட்டி எழுதி இருந்தன.

1985 லிருந்து 88 வரை டெஸ்ட் போட்டிகள் மற்றும் 22 ஒரு நாள் போட்டிகள் ஆடிய சதானந்த் விசுவநாத், விக்கெட் கீப்பிங் பணியைச் சிறப்பாக செய்து இருந்தாலும் முதல்தர போட்டிகளில் காட்டிய பேட்டிங் திறமையை பன்னாட்டு அரங்கில் வெளிப்படுத்தவில்லை. விஸ்டன் தரப்பினால் நூற்றாண்டின் சிறந்த இந்தியா அணியாக அறிவிக்கப்பட்ட , 1985 உலகத்தொடரைக் கைப்பற்றிய கவாஸ்கர் தலைமையிலான அணியில் இடம்பெற்ற பெருமையுடன் ,இலங்கைக்கு எதிரான டெஸ்டில் 6 கேட்சுகளை பிடித்தவர் என்ற சாதனையும் தன்னகத்தே வைத்துள்ளார். ஆனால் அந்த டெஸ்ட் ஆட்டமே அவரது கடைசி டெஸ்ட்போட்டியாக அமைந்தது ஒரு முரண்நகை.
ஆட்டவிபரம் இங்கே

பாகிஸ்தானை 87 ரன்களுக்குள் சுருட்டிய மறக்க முடியாத ஷார்ஜா ஆட்டத்திலும் இவர்தான் விக்கெட் கீப்பர். அந்தக் காணொளி கீழே
ஆட்டவிபரம் இங்கே

”விஷி” என கிரிக்கெட் வட்டாரத்திலும் ரசிகர்களாலும் அன்புடன் அழைக்கப்பட்ட சதானந்த் விசுவநாத், காதல் தோல்வி , பெற்றோர்களின் மரணம் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட குடிப்பழக்கம் காரணமாக கிரிக்கெட்டை விட்டு விலகியதும் அப்படியே ரசிகர்களால் மறக்கப்பட்டார்.

ஒருமுறை குடிபோதையில் இருந்த சதானந்த் விசுவநாத்தை, நிருபர் ஒருவர் இவ்வளவு திறமை வைத்துக்கொண்டு ஏன் இப்படி வீணடிக்கிறீர்கள் எனக் கேட்டதற்கு, ஒரு வேளை அவள் என்னுடன் இருந்திருந்தால் என் வாழ்க்கை இப்படி இல்லாமல் இருந்திருக்குமோ என்றாராம்.

சிண்டிகேட் வங்கியில் கணக்கராக வேலைபார்த்த சதானந்த் விசுவநாத் , அந்த வேலையைத் துறந்து ,சிறிதுகாலம் வளைகுடா நாட்டில் இருந்து இரண்டாண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா திரும்பியதும் பயிற்சியாளராக மீண்டும் கிரிக்கெட் வாழ்வை ஆரம்பித்துள்ளார். கர்நாடக கிரிக்கெட் சங்கம் அளித்த 20 லட்சரூபாயும், இந்திய கிரிக்கெட் வாரியம் சிலஆண்டுகள் முன்பு சேலஞ்சர் போட்டிகளில் ஒன்றை இவரின் நலநிதிப் போட்டியாக நடத்திக் கொடுத்தப் பணமும் இவரின் புணர்வாழ்க்கைக்குப் பெரிதும் உதவியது.
பயிற்சியாளராக மட்டுமல்லாமல் நடுவராகவும் நிலைநிறுத்திக் கொள்ள முயற்சித்து வருகிறார். நடுவர்களுக்கான தேர்வுகளில் தேசிய அளவில் தேர்ச்சியாக முயற்சித்துக் கொண்டிருக்கும் 'விஷி' சர்வதேச அளவிலும் நல்லதொரு நடுவராகவும் வருவார் என நம்புவோம். வாழ்க்கை சில கவுரவங்களைத் தாமதமாகத்தான் மனிதனுக்கு அளிக்கிறது. தாமதமானாலும் தவறாமல் அந்த கவுரவத்தை சதானந்த் விசுவநாத் அடைவார் என வாழ்த்துவோம்.

எனக்கே எனக்கா - குறுந்தொடர்(4)

முந்தையப் பகுதிகளை வாசிக்க இங்கே சொடுக்கவும்”காற்றே என் வாசல் வந்தாய், மெதுவாக கதவைத் திறந்தாய் காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்” ரம்யாவிற்கு பிடித்தமானப் பாடல் மோகனின் கைத்தொலைபேசியில் பாட ஆரம்பிக்க கார்த்தி பழைய நினைவுகளில் இருந்து நிகழ்காலத்துக்கு வந்தான்.

“எக்ஸ்க்யூஸ் மீ, நீங்க போட்டோஸ் பார்த்துட்டு இருங்க, இதோ வந்துடுறேன்” என சொல்லிவிட்டு கைத்தொலைபேசியை எடுத்து பேசியபடி அலுவலகத் தோட்டத்திற்கு மோகன் போனார். அந்த அழைப்பு யாரிடம் இருந்து வந்து இருக்கும் என்று கார்த்திக்குப் புரிந்தது.

முதல் படத்தைத்தவிர மற்றப்படங்களை கடமையாகப் பார்த்துக் கொண்டிருந்த கார்த்தியிடம் ஜெனி “ரொம்ப அழகா இருக்காங்கல்ல!!”

“ம்ம், ஆனால் இவளைவிட நீ இன்னும் அழகா இருக்க” என்ற பதிலுக்கு ஜெனி தான் வெட்கப்படுவதா கோபப்படுவதா என நினைத்தவாறே அந்த இடத்தைவிட்டு நகர்ந்தாள்.

மறுநாள் மாலை இரண்டு முறை வலிய இடத்துக்கு வந்து மோகன் அழைத்தபோதும் ,அவர் அலுவலக நண்பர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த விருந்துக்கு கார்த்தி போகவில்லை. கார்த்தி போகவில்லை என்பதால் ஜெனியும் போகவில்லை. எட்டு மணி ஆகியும் கார்த்தி அலுவலகத்தை விட்டு கிளம்பாமல் பழைய மின்னஞ்சல்களை எல்லாம் எடுத்து வாசித்துக்கொண்டிருந்தான். ரம்யாவும் அவனும் கல்லூரிக்காலத்தில் பரிமாறிக்கொண்ட மின்னஞ்சல்களை மறுவாசிப்பு செய்து இனி இந்த நினைவுகள் அவசியம் இல்லை என ஒவ்வொன்றாக அழித்து முடித்து , மான்ஸ்டர், நௌக்ரி வேலை வாய்ப்புத் தளங்களில் தன்னைப் பற்றிய விவரங்களைத் தரவு செய்து முடிப்பதற்கும் ஜெனி பின்னால் வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது.

“கார்த்தி, இப்போ ஏன் இதை எல்லாம் அப்டேட் பண்றீங்க”

“ஒன்னும் ஸ்பெசல் காரணம் இல்லை, அடிக்கடி அப்டேட் செய்து வச்சுக்கிறது நல்லது ஜெனி”

”சொல்லிக்காம எல்லாம் திடீர்னு எல்லாம் ரிசைன் பண்ணிடாதிங்க, அப்புறம் உங்களை மிஸ் பண்ணுவேன்”

“ம்ம் இன்னும் கொஞ்ச நாள் இருப்பேன், டோண்ட் வொரி”

கணினியை அணைத்துவிட்டு கார்த்தியுடன் அலுவலகத்தை விட்டு வெளியே வந்த ஜெனி வழக்கமாக ஒரு பக்கம் கால் போட்டு உட்காருவது போல் அல்லாமல் இருபக்கமும் கார்த்தியின் வண்டியின் பின் கார்த்திக்கும் அவனுக்கும் இடையில் நல்ல இடைவெளிவிட்டு உட்கார்ந்து கொண்டாள்.

சிலமுன்முடிவுகளை எடுத்திருந்த கார்த்தி , வேண்டுமென்ற வண்டியை மெதுவாக கோடம்பாக்கம் வழியாக வராமல் தி.நகர் வழியே சுற்றி வந்து கொண்டிருந்தான். மௌனமாக இருப்பதாக அவன்காட்டிக்கொண்டாலும் , மனம் சலசலத்துக்கொண்டிருந்தது.

“நீங்க மோகன் கல்யாணத்திற்கு வருவீங்கல்ல, அவரோட மெயில் பார்த்தீங்களா, கன்பார்ம் பண்ணிட்டா அவரு டிரெயின் டிக்கெட்,ஸ்டே எல்லாம் செய்ய வசதியா இருக்கும்னு சொல்லி இருந்தார்” ஜெனி பேச ஆரம்பித்தாள்.

”ம்ம் நான் போகல, அன்னக்கி ஒரு வேலை இருக்கு”

“ம்ம்,நீங்க வரமாட்டிங்களா , அப்போ நானும் போறதைப் பத்தி யோசிக்கனும்.”

“அடடா, என்னது இது !! நீ போயிட்டுவா”

“இல்லை, உங்க கூட டிராவல் பண்ணலாம், நிறைய நேரம் இருக்கலாம்னு நினைச்சேன். நீங்க வரலேன்னா டிரிப் போரடிக்கும்... அதனால நானும் போகல”

“வாழ்க்கைப் பயணத்திலும் வழித்துணையாய் சகப்பயணியாய் பயணிக்க வேண்டும், சரி என்றால் சொல் , என் பயண திசையைக்கூட மாற்றிக் கொள்கிறேன்”

”கார்த்தி, நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியல”

“நேரடியாகவே கேட்கிறேன்.. நாமக் கல்யாணம் பண்ணிக்கலாமா?”

ஜெனி பதில் பேசவில்லை. இடைவெளியைக் குறைத்து நெருக்கமாக உட்கார்ந்து அவன் தோளைப்பற்றிக்கொண்டாள். கார்த்தியின் வண்டி வேகம் எடுத்தது.

நிறைவுப்பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

Wednesday, April 02, 2008

எனக்கே எனக்கா!! - குறுந்தொடர்(3)

எனக்கே எனக்கா - முதல் பாகம் இங்கே

எனக்கே எனக்கா - இரண்டாம் பாகம் இங்கே

ஆரம்பிக்கப்படும் வேகத்தைவிட முடிவின் வேகம் அதிகமாக இருக்கும். அன்று மாலை ரம்யாவிற்காகக் காத்திருந்த கார்த்தி எடுக்கப்போகும் முடிவும் அத்தகைய ஒன்றாகத்தான் இருந்தது.

மழை லேசாகத் தூறிக்கொண்டிருந்தது. திருநகர் விளையாட்டு மைதானத்தின் கோவில் முனையில் கார்த்தி மழையை ரசித்தபடி "இரவெல்லாம் உறங்காமல் தவிக்கிறேன்
உன் கனவு எதுவாய் இருக்குமென்று " என்ற வரிகளை எப்படி அமைத்தால் நல்லா இருக்கும் என மனதில் ஓடவிட்டுக்கொண்டு ரம்யாவுக்காகக் காத்திருந்தான்.

"ஹாய் கார்த்தி" எனச்சொல்லியபடியே ஸ்கூட்டியில் வராமல் ஆட்டோவில் வந்து இறங்கினாள்.

"ஏன் லேட்"

"சாரிடா செல்லம்.. கொஞ்சமா லேட்டாச்சு" அவளின் கொஞ்சல்களை ரசிக்கும் மனோபாவத்தில் கார்த்தி இல்லை.

"நான் ஏன் லேட்டுன்னு கேட்டேன்?"

"வரவழியில செருப்பு அறுந்துடுச்சு, தைச்சுட்டு வர லேட்டாச்சு, பத்து நிமிசம் தானே லேட்டாச்சு?"

"பத்து நிமிசம் உனக்கு சாதரணமா போச்சா, என் இடத்தில இருந்து பாரு, வெயிட் பண்றதோட கஷ்டம் தெரியும்..ஒவ்வொரு செகன்டும் யுகம் மாறிப் போகும் தெரியுமா?..என்ன ஆச்சோ ஏது ஆச்சோன்னு ஒரு பதைபதைப்பு!!!"

"சாரிடா கார்த்திக்கண்ணா, இனிமேல் இப்படி ஆகாது" என அவன் கையைப்பிடித்துக் கொண்டு " ஒரு கவிதை சொல்லேன் ப்ளீஸ்" என்றாள்.

"இது வரை அழகாய் தெரிந்த மழையும்
பிடிக்காமல் போனது உன்னை நனைத்ததனால்"

"வாவ்... ஸோ ஸ்வீட் ..செம சிச்சுவேசனல், எனக்கு ரொம்பப் பசிக்குது, ஆரத்தி ஹோட்டல் போகலாம், ஒரு மஷ்ரூம் பஃப் உம் ஒரு சூடா காப்பியும் வாங்கித்தா!!!" அந்தக் கவிதையின் அர்த்தத்தை உணராமலேயே வார்த்தைகளுக்காக பாராட்டிவிட்டு கார்த்தியின் வண்டியின் பின்னால் ஏறி அமர்ந்தாள்.

வண்டி திருப்பரங்குன்றம் ரயில்வே கேட்டைத்தாண்டி, ஏரிக்கரையின் மேல் அமைந்திருந்த பைபாஸ் சாலையில் விரைந்த பொழுது, கார்த்தி பேச்சை ஆரம்பித்தான்.

"ஸ்கூட்டி சர்விஸுக்குதானே கொடுத்து இருக்கே!! எப்படி கம்ப்யூட்டர் கிளாஸ் போன?"

"போறப்ப ஆட்டோல போனேன், வர்றப்ப வாசுவோட வந்துட்டேன்"

"வாசு, யார் அது? "

"என் பக்கத்துவீட்டுப்பையன், நான் கூட சொல்லி இருக்கேனே!! நான் +2 படிக்கிறப்ப எனக்கு லவ் லெட்டர் கொடுத்து இருக்கான், அவனை நல்லா அம்மா அப்பாக்கிட்ட மாட்டிவிட்டு அடி வாங்க வச்சேன்! கே.எல்.என் ல படிக்கிறான்.. இப்போ எல்லாம் ரொம்ப நல்ல பையனாயிட்டான். என்கூட தான் ஜாவா படிக்கிறான்"

"அவன் கூட எப்படி போன?"

"என்னை உப்பு மூட்டைத் தூக்கிட்டுப்போனான், கேள்வியைப்பாரு, அவனோட பைக்லதான் போனேன்"

"கண்டவன் கூட எல்லாம் பைக்ல ஏறிப்போய்டுவியா நீ" மழைத்துளிகளை விட வேகவேகமாக கார்த்தியிடம் இருந்து வார்த்தைகள் வந்து விழுந்தன.

"கார்த்தி, நீ ஏன் இப்படி பேசுற, பர்ஸ்ட் ஸ்டான்டர்ட்லேந்து அவனை எனக்குத் தெரியும்.. பேமிலிபிரன்டு.. கண்டவன் நு எல்லாம் சொல்லாதே பிளீஸ்"

"நீ என்கூட மட்டும் தான் பைக்ல சுத்துறேன்னு நினைச்சேன், இப்போதான் ஊரில இருக்கிறவன் பைக்லே எல்லாம் நீ சுத்துவேன்னு!"

"கார்த்தி, ஏன்டா இப்படி பேசுறே!!இது எல்லாம் சின்ன விசயம்" கண்கலங்க ஆரம்பித்தாள்.

"எதுடி சின்ன விசயம் ,, எவனோ ஒருத்தன் உன்னை பைக்ல வச்சு ஊர் சுத்துவான்.இது சின்ன விசயமா" கார்த்தியின் வார்த்தைகள் தடித்தன.

"அசிங்கமா பேசாதே கார்த்தி. ஒன்பது மணிக்கு கிளாஸ் லேட்டாகி ஆட்டோல போறதைவிட வாசுவோட போறது ஒரு சேஃப்டின்னு தான் போனேன்.

"நல்லா சாக்கு சொல்றே!!... நீ என்னைத்தவிர வேறொருத்தன் கூடப் போறதை ..அதுவும் உனக்கு ஏற்கனவே புரபோஸ் பண்ணவனோடதை நினைச்சா ஏதையோ மிதிச்ச மாதிரி இருக்கு"

"இப்படி நீ பேசுறது என்னை, என் கேரக்டரை அசிங்கப்படுத்துற மாதிரி இருக்கு"

"ஓ உண்மையை சொன்னா உறுத்துதோ," என அப்படியே வண்டியை நிறுத்தினான். அவளை இறக்கிவிட்டுவிட்டு அவள் கூப்பிட கூப்பிட மதிக்காமல் போனான்.

மழையினால் அவளின் அழுகை அங்கே இருந்தவர்களுக்குத் தெரியவில்லை. அப்படியே வீடு சென்ற ரம்யா கொஞ்சம் தைரியம் வரவழைத்துக் கொண்டு, கார்த்தியை கைத்தொலைபேசியில் அழைத்தாள். கைத்தொலைபேசி அணைக்கப்பட்டிருந்தது. "இனிமேல் யார்கூடவும் வண்டியில் போகமாட்டேன், மன்னிக்கவும், பிளீஸ்" என கெஞ்சல் குறுந்தகவல்களுக்கும் பதில் இல்லை. வழக்கமாக சந்திக்கும் இடங்களில் ரம்யாவிற்காகக் காத்திருந்ததைப் கார்த்தி அறிந்திருந்தாலும் அவளை மதிக்கவே இல்லை.ஃபேர்வெல் பார்ட்டியின் போது ரம்யாவிடம் திரும்பப் பேச ஆரம்பிக்கலாம் என நினைத்திருந்த கார்த்திக்கு அன்றைக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அன்று வாசுவின் வண்டியில் வந்திறங்கிய ரம்யா நேராக கார்த்தியிடம் பேச வந்தாள்.
"கார்த்தி, ஐ மிஸ் யூ, என்னோட பேசு, ப்ளீஸ்" என்று அவள் சொல்லி முடிப்பதற்குள் ஒரு ஓங்கி அவளின் கண்ணத்தில் அறைவிட்டான். அதிர்ச்சியில் நிலைகுலைந்து போன நண்பர்கள் என்ன ஏது என்று கேட்பதற்குள்ளாகவே, கார்த்தி அந்த அரங்கை விட்டு வெளியேறினான். கல்லூரியில் தேர்வுகள் முடிந்து திட்ட நேர்காணல் தேர்வு அன்று கல்லூரியில் பார்த்த ரம்யாவை அதற்குப்பின் பார்க்கவே இல்லை.

அடுத்தப் பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும்

-----
கவிதைகள்,நன்றி : "கண்ணாடி மழை" எழில்பாரதி

Tuesday, April 01, 2008

எனக்கே எனக்கா - குறுந்தொடர் (2)

எனக்கே எனக்கா - முதல் பாகம் இங்கே

கல்லூரியில் கார்த்தியின் துறையில் ஒரு வருட இளைய மாணவியான ரம்யாவிற்கு இரண்டாம் வருடத்தில் ஆய்வக நோட்டுப்புத்தகங்களைக் கொடுத்து உதவியதில் ஆரம்பித்த கார்த்தி-ரம்யா நட்பு, கார்த்தியின் இறுதி ஆண்டில் தினம் பொடிநடையாக திருப்பரங்குன்றம் கோவில் சென்று வருவதில் வலுப்பெற்றது.

உடன் படிக்கும் மாணவ மாணவிகள் அரசல் புரசலாக இருவருக்கும் காதல் என பேச ஆரம்பிக்க, ஒரு நாள் ரம்யா நேரடியாகவே கார்த்தியிடம் கேட்டாள்.

"கார்த்தி, நம்ம பிரன்ட்ஸிப் லவ் ஆகிடுமா?"

"ம்ம் தெரியல ரம்யா, பிரன்ட்ஸிப்புக்கும் லவ்வுக்கும் நடுவுல இருக்கிற இந்த ஸ்டேட் ஆப் மைன்ட் ரொம்ப நல்லா இருக்கு.. "

"ம்ம்ம்"

"ஆனால் ஒரு விசயம், நானா லவ் சொல்ல மாட்டேன், நீயா சொன்னின்னா, நான் மறுக்க மாட்டேன்"

சாந்தமாக இருந்த ரம்யாவின் முகம் சட்டென மாறி எழுந்துபோனாள். அதில் பொய்க்கோபம் மட்டுமே ஒளிந்திருந்தது.

அன்றிரவு "Do I deserve you" எனக் கார்த்தி ஒரு குறுந்தகவலை அனுப்பிய சிலநிமிட இடைவெளிக்குப்பின்னர் "எஸ்" என பதில் வந்தது.

அந்த சமயத்தில் வெளிவந்த ரிலையன்ஸின் கைத்தொலைபேசி இணைப்பினால் இருவரும் செலவில்லாத "சங்கீத ஸ்வர" இரவுகளினால் தங்களது காதலை வளர்த்தனர்.


"ரம்யா, ஒரு கவிதை சொல்லவா"

"சொல்லு கார்த்தி"

"நீ தும்மும்போது அருகில் நான் இருக்க
வேறு யார் உனை நினைக்க என தேட தொடங்குது மனம்"

"ம்ம் நல்லா இருக்கு, தாங்ஸ்,,, இன்னொன்னு சொல்லு ப்ளீஸ்"

"உன் இதழ்களில் தவழும்
உரிமை என் பெயருக்கு மட்டும்"

இப்படி காதலும் கவிதையுமாக, காலையில் எழுந்தவுடன் தன்னுடன் பேசவேண்டும், வகுப்புகள் இல்லாத பொழுது தன்னுடன் இருக்க வேண்டும் ,மதிய உணவு தன்னுடன் அருந்த வேண்டும். என "காதலன்" என்ற உரிமையுடன் கார்த்தி கட்டளை இடுவது அனைத்தும் ரம்யாவிற்கு பிடித்திருந்தது.


கார்த்தியும் தான் என்ன ரம்யாவிடம் எதிர்பார்க்கிறானோ, அதே அளவு முக்கியத்துவத்தை ரம்யாவிற்கும் கொடுத்துவிடுவான். வேலை வாய்ப்பிற்கான கல்லூரி வளாக இறுதிச்சுற்று நேர்முகத் தேர்விற்கு செல்லும்முன் ரம்யாவின் வாழ்த்து கிடைக்கவில்லை என்பதால் கடினமான முந்தைய சுற்றுக்களை எளிதாக கடந்திருந்த அவனுக்கு வேலை உறுதி என்ற நிலையில் பேராசிரியர்கள் கடிந்து கொண்டபோதிலும் அவன் கடைசி சுற்றுக்கு செல்ல மறுத்துவிட்டான்.

மறுநாள் ரம்யா, "ஏன் கார்த்தி இப்படி பைத்தியக்காரத்தனமா பண்றே!!"

"பைத்தியம் தான், உன் மேல .. நான் செய்யுற ஒவ்வொரு விசயத்துலேயும் உன் பிரசன்ஸ் வேண்டும் ரம்யா!!"

நட்பின் போது மென்மையாய் இருந்த அன்பு காதலில் முரட்டுத்தனமாக கார்த்தியிடம் மாறி இருப்பது ரம்யாவிற்கு ஒரு வித பயத்தைக் கொடுத்தது.

அடுத்த வளாகத்தேர்வில் காலை நுழைவுத்தேர்வில் இருந்து, குழு உரையாடல், தொழில்நுட்பச்சுற்று,மனிதவளச்சுற்று என இரவு பத்து மணிவரை கார்த்தியை உற்சாகப்படுத்த அவனுடனே ரம்யா இருந்தாள். கார்த்தியின் பெயர் தேர்வு முடிவுகளில் அறிவிக்கப்பட , ரம்யா மகிழ்ச்சியின் உச்சத்தில் சுற்றம் பற்றிக் கவலைப்படாமல் கார்த்தியை இறுகத் தழுவிக்கொண்டாள்.

அடுத்த சில நாட்களில் இருவருக்கும் செமஸ்டர் முடிவுகள் வர, சராசரியாக 10 விழுக்காடு குறைவாகப் பெற்று வகுப்பில் 10 இடங்கள் ரேங்கில் கீழ் இறங்கிய ரம்யாவை துறைத் தலைவர் அழைத்து படிப்பில் மட்டும் கவனம் வேண்டும் என்று சொல்லவந்ததை பல உதாரணங்களுடன் சொல்லி எச்சரித்து அனுப்பித்தார்.

கார்த்தி தப்பித்தது தம்பிரான் புண்ணியம் என எல்லாப் பாடங்களிலும் இதுவரை இல்லாத அளவு மோசமான மதிப்பெண்களுடன் தேர்வாகி இருந்தான்.

ஆனால் இருவருமே அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. எதிர்கால வாழ்க்கையை வார்த்தைகளில் திட்டமிடவே நேரம் போதவில்லை. எந்த ஒருவிசயத்திற்கும், உச்சத்தில் இருக்கும்பொழுதுதான் அதன் வீழ்ச்சி தொடங்குகிறது. கார்த்தி ரம்யாவின் காதலுக்கும் அந்த நிலை வந்தது.

தொடர்ச்சிக்கு இங்கே சொடுக்கவும்

--------------

கவிதைகள்,நன்றி : 'கண்ணாடி மழை' எழில்பாரதி

”பிடிச்சிருக்கு” அசோக், வளர்ந்து வரும் தமிழ் கதாநாயக நடிகர்மத்திய 90களில் தூர்தர்ஷனில் ஞாயிற்றுக் கிழமைகளில் ஒளிபரப்பப்பட்ட ஸ்ரீகிருஷ்னா தொலைக்காட்சித்தொடரில் சிறுவயது கிருஷ்ணாவாக நடித்தவர் தான் தற்பொழுது முருகா, பிடிச்சிருக்கு ஆகிய படங்களின் மூலமாக தமிழ்ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்க ஆரம்பித்து இருக்கும் அசோக் என்ற இளம் கதாநாயக நடிகர். அந்த தொலைக்காட்சித் தொடருக்காக சிறந்த குழந்தை நட்சத்திரம் என்ற விருதையும் பெற்றவராம்.

திருவையாறில் பிறந்து இருந்தாலும், மும்பையில் படித்து வளர்ந்த அசோக், முறையாக பரதம், மேற்கத்திய ஜாஸ் பாலே நடனமுறைகளைப் பயின்றதோடு மட்டுமல்லாமல் கிஷோர் நமித் கபூர் நடிப்பு பயிற்சி மையத்தில் நடிப்புக்கானப் பயிற்சி முறைகளை கற்றுக்கொண்டவர் என விக்கீபிடியா வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆர்.டி.நடேசனின் இயக்கத்தில் முருகா என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான அசோக், பிடிச்சிருக்கு படத்தின் வாயிலாக ஒரு நல்ல அறிமுகம் தமிழுக்கு கிடைத்திருக்கிறது என்று சொல்லவைத்தார். விமர்சகர்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் இப்படம் நல்ல அபிப்ராயத்தைப் பெற்றது. அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு அழகான பாடலின் காணொளி கீழே
“பிடிச்சிருக்கு” படத்தைப்பற்றி சிஃபி யின் விமர்சனத்தைக் காண இங்கே சொடுக்கவும்

ரீடிப் இணையதளத்தின் விமர்சனம் இங்கே


லால்ஜோஸின் இயக்கத்தில் திலீப் நடித்த முல்லா என்ற மலையாளப்படத்திலும் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார்.

நல்லத் தோற்றமும் குரல் வளமும் கொண்டுள்ள அசோக், தனது நடிப்புத்திறமையால் தமிழ் திரையுலகில் நல்ல பேரையும் புகழையும் அடையவேண்டும் என்று வாழ்த்துவோம்