Thursday, April 03, 2008

சதானந்த் விசுவநாத் - மின்மினியாகிப் போன கிரிக்கெட் நட்சத்திரம்

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பையை வென்று வந்த இந்திய அணியைப் பாராட்டி பெங்களூரில் நடைபெற்ற பாராட்டுவிழா பற்றிய கிரிகின்போ கட்டுரையில் இறுதியில் இந்த வாக்கியம் இடம்பெற்றிருந்தது.



மேலே சொன்ன வாக்கியம் புகழை அடையப்போகும் போதும், புகழின் உச்சத்தில் இருக்கும் போதும் செய்யும் சிலதவறுகள் ,அதன் தொடர்ச்சியாக ஏற்படும் ஏமாற்றங்களைத் தாங்கிக் கொள்ள இயலாத மனநிலை உடைய விளையாட்டுவீரர்களுக்கு, குறிப்பாக இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு எச்சரிக்கை வாக்கியம். முகட்டில் இருந்து தான் எந்தவொரு வீழ்ச்சியும் தொடங்குகிறது எனபதற்கு மேலும் ஒரு அத்தாட்சி.




1983 உலகக்கோப்பை வெற்றிக்குப்பின்னர் இந்திய வந்த மேற்கிந்திய தீவுகள் அணியிடம் 4 - 0 என்றக் கணக்கிலும், ஆஸ்திரேலியாவுடன் 3-0 எனவும் இங்கிலாந்து உடன் ஆன போட்டிகளில் 4-1 என ஒரு நாள் போட்டிகளில் உள்ளூரிலேயே மண்ணைக் கவ்விய இந்தியாவின் உலகக் கோப்பை வெற்றி அதிர்ஷ்டத்தில் கிடைத்த ஒன்று என்ற வெளிப்படையாக பேசப்பட்ட சமயத்தில் தான் இந்திய அணி எந்தவித எதிர்ப்பார்ப்புகளும் இன்றி ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த பென்சன் அண்ட் ஹெட்ஜஸ் உலகத் தொடர் போட்டியில் பங்கேற்க சென்றது, யாரும் எதிர்பாராவிதமாக இந்தியா கோப்பையை வென்ற அப்போட்டித் தொடரில் . கோப்பையைவிட ரவிசாஸ்திரிக்கு கிடைத்த “ஆடி” கார் பேசப்பட்டது போல பேசப்பட்டு பின்னாளில் நினைவுகளைவிட்டு அகன்று போனவர்கள் இருவர். அந்த தொடரில் மிகச்சிறப்பாக விளையாடிய சுழல் பந்துவீச்சாளர் எல்.சிவராமகிருஷ்ணன் மற்றும் விக்கெட் கீப்பர் சதானந்த் விசுவநாத் ஆகியோர்தான் அந்த இருவர். சிவராமகிருஷ்ணன் வர்ணனையாளராக இரண்டாவது வலம் வந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் சிவராமகிருஷ்ணனைப் பார்க்கும்பொழுதெல்லாம் நினைவில் விசுவநாத்தும் வருவார்.

சையத் கிர்மானி யின் இடத்தை நிரப்புவதற்காக ஒருவரை தேர்வாளர்கள் தேடிக்கொண்டிருந்தபோது திறமையால் அவர்களின் மனதில்இடம்பிடித்து இங்கிலாந்துக்கு எதிராக பெங்களூரில் அசாருதின் அறிமுகமான அதே ஆட்டத்தில் சதானந்த் விசுவநாத் அறிமுகமானார்.

விசுவநாத்தின் விக்கெட் கீப்பிங் , அவர் அப்பீல் செய்யும் முறை அந்தக் காலக் கட்டத்தில் விக்கெட் கீப்பிங் முறையில் புதுப் பரிமாணத்தை புகுத்தியது. பத்துக்கும் அதிகமான கோணங்கள் கொண்டு ஒளிபரப்பட்ட அந்த தொடரின் ஆட்டங்களில் சுறுசுறுப்பாக விக்கெட் கீப்பிங் செய்வது, முடிந்தவரை எல்லா பந்துகளுக்கும் அவுட்டா என நடுவரிடம் முறையிடுவது , பந்துவீச்சாளரை உற்சாகப்படுத்திக்கொண்டே இருப்பது ஆகியன பார்க்கும் ரசிகர்களுக்கு பெரும் சுவாரசியத்தை தந்தது. சிவராமகிருஷ்ணனின் பந்துவீச்சில் மியாண்டடை ஸ்டம்பிங் செய்யும் காணொளி கீழே



ஆட்டவிபரம் இங்கே

சுனில்கவாஸ்கர் தனது "One day wonders" என்றபுத்தகத்தில் சதானந்த் விசுவநாத்தின் விக்கெட் கீப்பிங் நேர்த்தி கோப்பையை வெல்ல மிக முக்கியமான காரணிகளில் ஒன்று எனக்குறிப்பிட்டுள்ளார். அந்த சமயத்தில் ஆஸ்திரேலிய பத்திரிகை உலகமும் இந்தியா உருவாக்கிய சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவராக எதிர்காலத்தில் இவர் வலம் வருவார் சதானந்த் விசுவநாத்தை வெகுவாகப் பாராட்டி எழுதி இருந்தன.

1985 லிருந்து 88 வரை டெஸ்ட் போட்டிகள் மற்றும் 22 ஒரு நாள் போட்டிகள் ஆடிய சதானந்த் விசுவநாத், விக்கெட் கீப்பிங் பணியைச் சிறப்பாக செய்து இருந்தாலும் முதல்தர போட்டிகளில் காட்டிய பேட்டிங் திறமையை பன்னாட்டு அரங்கில் வெளிப்படுத்தவில்லை. விஸ்டன் தரப்பினால் நூற்றாண்டின் சிறந்த இந்தியா அணியாக அறிவிக்கப்பட்ட , 1985 உலகத்தொடரைக் கைப்பற்றிய கவாஸ்கர் தலைமையிலான அணியில் இடம்பெற்ற பெருமையுடன் ,இலங்கைக்கு எதிரான டெஸ்டில் 6 கேட்சுகளை பிடித்தவர் என்ற சாதனையும் தன்னகத்தே வைத்துள்ளார். ஆனால் அந்த டெஸ்ட் ஆட்டமே அவரது கடைசி டெஸ்ட்போட்டியாக அமைந்தது ஒரு முரண்நகை.
ஆட்டவிபரம் இங்கே

பாகிஸ்தானை 87 ரன்களுக்குள் சுருட்டிய மறக்க முடியாத ஷார்ஜா ஆட்டத்திலும் இவர்தான் விக்கெட் கீப்பர். அந்தக் காணொளி கீழே




ஆட்டவிபரம் இங்கே

”விஷி” என கிரிக்கெட் வட்டாரத்திலும் ரசிகர்களாலும் அன்புடன் அழைக்கப்பட்ட சதானந்த் விசுவநாத், காதல் தோல்வி , பெற்றோர்களின் மரணம் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட குடிப்பழக்கம் காரணமாக கிரிக்கெட்டை விட்டு விலகியதும் அப்படியே ரசிகர்களால் மறக்கப்பட்டார்.

ஒருமுறை குடிபோதையில் இருந்த சதானந்த் விசுவநாத்தை, நிருபர் ஒருவர் இவ்வளவு திறமை வைத்துக்கொண்டு ஏன் இப்படி வீணடிக்கிறீர்கள் எனக் கேட்டதற்கு, ஒரு வேளை அவள் என்னுடன் இருந்திருந்தால் என் வாழ்க்கை இப்படி இல்லாமல் இருந்திருக்குமோ என்றாராம்.

சிண்டிகேட் வங்கியில் கணக்கராக வேலைபார்த்த சதானந்த் விசுவநாத் , அந்த வேலையைத் துறந்து ,சிறிதுகாலம் வளைகுடா நாட்டில் இருந்து இரண்டாண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா திரும்பியதும் பயிற்சியாளராக மீண்டும் கிரிக்கெட் வாழ்வை ஆரம்பித்துள்ளார். கர்நாடக கிரிக்கெட் சங்கம் அளித்த 20 லட்சரூபாயும், இந்திய கிரிக்கெட் வாரியம் சிலஆண்டுகள் முன்பு சேலஞ்சர் போட்டிகளில் ஒன்றை இவரின் நலநிதிப் போட்டியாக நடத்திக் கொடுத்தப் பணமும் இவரின் புணர்வாழ்க்கைக்குப் பெரிதும் உதவியது.




பயிற்சியாளராக மட்டுமல்லாமல் நடுவராகவும் நிலைநிறுத்திக் கொள்ள முயற்சித்து வருகிறார். நடுவர்களுக்கான தேர்வுகளில் தேசிய அளவில் தேர்ச்சியாக முயற்சித்துக் கொண்டிருக்கும் 'விஷி' சர்வதேச அளவிலும் நல்லதொரு நடுவராகவும் வருவார் என நம்புவோம். வாழ்க்கை சில கவுரவங்களைத் தாமதமாகத்தான் மனிதனுக்கு அளிக்கிறது. தாமதமானாலும் தவறாமல் அந்த கவுரவத்தை சதானந்த் விசுவநாத் அடைவார் என வாழ்த்துவோம்.

8 பின்னூட்டங்கள்/Comments:

Anonymous said...

தாமதமானாலும் தவறாமல் அந்த கவுரவத்தை சதானந்த் விசுவநாத் அடைவார் என வாழ்த்துவோம்

said...

அருமையான கட்டுரை வினையூக்கி!!!

said...

கலக்கல் கட்டுரை வினையூக்கி. பழைய ஞாபகங்களை கிளறிவிட்டீர்கள்....

said...

அருமையான கட்டுரை. நேர்த்தியான தொகுப்பு

said...

அருமை வினையூக்கி..! இவர நல்லா கவனிச்சது ரவி ஷாஸ்த்ரி ஆடி கார் ஜெயிச்சாரே..அந்த தொடர்லதான்.ரொம்ப நல்ல விளையாண்டார்.நம்ப ஷ்ரீகாந்த் சொல்லுவார்.....wicket keeping is a thankless job ன்னு அது இவர் விஷயத்துல உண்மையாயிருச்சு.(இவருடைய டிப்ரெஷனும் ஒரு காரணம்னு வச்சுகோங்க!!)......எப்படியோ இவருக்கு ஒரு நல்ல மறுவாழ்வு அமைஞ்சா சந்தோஷம்.:):)

Anonymous said...

ஹர்பஜன் சிங் விஸ்வநாத்தைப்பார்த்து கொஞ்சம் அடக்கி வாசிக்கக் கத்துக்கணும். விஸ்வநாத்தை மறந்துபோனவர்களுல் நானும் ஒருத்தி.

said...

நல்ல ஆய்வுக்கட்டுரை..பல விவரங்களை தேடிப்பிடித்து எழுதியுள்ளீர்கள்..

said...

கால ஓட்டத்தில் மறக்கப்பட்ட ஒரு வீரனை உங்கள் பதிவின் மூலம் தெரியபடுத்தி உள்ளீர்கள்..நன்றி..