Friday, April 04, 2008

தொட்டனைத்து ஊறும் மணற்கேணி - இவ்வார தமிழோவியம் இணைய இதழில் வெளியான சிறுகதை

"அகரம் இப்போ சிகரமாச்சு,தகரம் இப்போ தங்கமாச்சு, காட்டு மூங்கில் பாட்டுப்பாடும் புல்லாங்குழலாச்சு" எனஅடுத்த தடுப்பில் இருந்த மோகனின் கைத்தொலைபேசி பாட, அவர் எடுத்துப் பேசினார்.

"சொல்லுங்க பஷீர்"

"----"

"அன்னக்கி காலையில வந்து கடைப்பையன் இஸ்மாயில் கிட்ட கொடுத்தேனே!!"

"----"

"ஓ அப்படியா, சரி பஷீர், மதியம் வந்து தரேன்.. வயசாயிடுச்சுல்ல, மறதி அதிகமாயிடுச்சு"

கைத்தொலைபேசியை வைத்து விட்டு, அவரின் இடத்திற்கு மோகன் என்னை அழைத்தார்.

"கார்த்தி, முந்தாநேத்து பஷீர் கடையில ரீசார்ஜ் பண்ணதுக்கு உன் முன்னதானே பணம் கொடுத்தேன்.. எவ்வளவு ரூபாய் கொடுத்தேன்னு நினைவு இருக்கா?"

"ஞாபகம் இல்லையே சார்..."

"லாஸ்ட் வீக்ல ரம்யாவுக்காக வீட்டிலேந்து போன் செஞ்சு ரீசார்ஜ் செய்ய சொன்னேன்... முதல் தடவை 225, மறுதடவை 125 ரூபிஸ்.. 125 கொடுத்தாச்சு 225 ரீசார்ஜுக்கு இன்னும் பணம் தரலேன்னு, பஷீர் இப்போ சொன்னாரு.. தின செலவுக்குன்னு நான் வச்சிருக்கிற எக்ஸல் சீட்லே இரண்டையும் கொடுத்துட்டேன்னு தான் இருக்கு."

"சார், உங்க ஞாபக சக்தியில எனக்கு நம்பிக்கை உண்டு, நீங்க கண்டிப்பா கொடுத்து இருப்பீங்க, திரும்ப எல்லாம் கொடுக்காதிங்க, இவனுங்கெல்லாம் இப்படித்தான், நம்மளை எக்ஸ்ப்ளாய்ட் பண்ண டிரை பண்ணுவானுங்க...நான் எப்போதும் இந்த மாதிரி ஆட்களை நம்புறதே கிடையாது... நீஙக் மேடத்துக்கு போஸ்ட் பெய்ட் கனெக்‌ஷன் வாங்க்கொடுங்க.. இந்த பிரச்சினை எல்லாம் அதுலக் கிடையாது.. "

"ச்சேசே பஷீர் பொய் எலலாம் சொல்ல மாட்டாரு, அவரு ஒரு வேளை மறந்து இருப்பாரு, கடைப்பையன் இஸ்மாயில் சொல்லாம விட்டு இருக்கலாம், நமக்கு இந்த 200 ரூபாய் சாதாரணமா இருந்தாலும், அவங்களுக்கு இதுல கிடைக்கிற கொஞ்சம் கமிஷன் தான் பொழைப்பே!! நான் போய் கொடுத்துட்டு வந்துடுறேன்,"

சொல்லிவிட்டு பஷீர் கடைக்கு கிளம்பிப்போனார்.

மோகன் அநியாயத்துக்கு அடுத்தவர் நிலையில் இருந்து யோசிப்பார். கடைநிலை ஊழியரிலிருந்து அவருக்கு மேலே அதிகாரத்தில் இருக்கும் யார் கேட்டாலும் பொருள் உதவி, அவரின் செல்வாக்கினால் பெற்றுத்தர முடிகிற உதவி என எதுவாக இருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் போய் செய்துவிட்டு வருவார். அலுவலகத்தில் மக்களுக்கு கொடுத்து திரும்பி வாரா பணமே கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய் இருக்கும். மோகனின் மனைவி ஒரு ஆர்கிடெக்ட், கன்சர்வேசன் ஆர்கிடெக்ட்.. பழையக் கட்டிடங்களைப் புராதன சின்னங்களைப் பாதுகாக்கும் கட்டிடக்கலையியலில் முதுகலைப் பட்டம் பெற்று. அது சம்பந்தபட்ட நல்ல வேலையில் இருப்பதால், இந்த பணம் விசயத்தில் மோகனுக்கு எப்போதுமே பிரச்சினை இல்லாததால் கடன் கொடுத்தவர்களிடமிருந்து திரும்ப எதிர்பார்ப்பதில்லை போலும்.

"மோகன் சார், உங்க வீட்டுல இரண்டு பேருமே சம்பாதிக்கிறனால உங்களுக்கு காசோட அருமை தெரியல " என ஒருமுறை வெளிப்படையாகக் கேட்ட பொழுது

"நம்ம எம்.டி வீட்டுகிரகபிரவேசத்திற்கு நம்ம ஆபிஸிலேந்து எத்தனை பேர் வந்து இருந்தாங்க?"

"கால்வாசிப் பேரு கூட இல்லை!!!"

"என் குழந்தை அஞ்சலியோட மூனாவது பிறந்த நாளுக்கு எத்தனைப்பேரு வந்திருந்தாங்க"

"நம்ம ஆபிஸ் மொத்தமும்..."

"அதுதான்... எனக்கு கிடைக்கிற மிகப்பெரிய ரிடர்ன்.. அந்த மகிழ்ச்சிக்கு ஈடு கிடையாது... "

அவர் சொல்வதும் சரிதான். எங்க அலுவலகத் துப்புரவுத் தொழிலாளி நாரய்யா கூட 50 ரூபாய்க்கு ஒரு மரச்சட்டத்தில் சிலேட்டுப்பலகை வாங்கி அஞ்சலிப்பாப்பாவிற்குக் கொடுத்ததை மோகன் அடிக்கடிச் சொல்லி சந்தோசப்படுவார்.

"கொடுக்க முடியுற அளவுக்கு பணம் இருக்கு, உதவி பண்ற அளவுக்கு எனக்கு செல்வாக்கு இருக்கு, அதனால செய்யுறேன்.. இரண்டுமே தீரக்கூடிய விசயம் கிடையாது... தொட்டனைத்து ஊறும் மணற்கேணின்னு பெரியவங்க சொல்றது சரிதானே "

மோகன் என்ன விளக்கம் சொன்னாலும் குறைந்த பட்சம் அவர் பண விசயத்திலாவது கறாராக இருக்கலாம். ஒரு வேளை கறாராக இருந்தால் தன் விரும்பும் பிம்பம் உடைபடுமோ என்ற பயம் இருக்குமோ!! .. ம்ம் இருக்கலாம் தெரிந்தோ தெரியாமலோ அமைந்த பிம்பத்திற்கான அவர் கொடுக்கும் விலை அதிகமோ என எனக்குப்பட்டது.

பஷீருக்குப் பணம் கொடுத்துவிட்டு வந்த மோகனின் கையில் போஸ்ட் பெய்ட் இணைப்புக்கான பாரம் இருந்தது. ஆச்சரியமாக இருந்தாலும் நான் ஏதும் கேட்டுக்கொள்ளவில்லை. இரண்டு நாட்கள் கழித்து, எங்கள் அலுவலக வரவேற்பறையில் மோகன் வருவதற்கு முன்னமே, பஷீர் மோகனுக்காக வந்து உட்கார்ந்திருந்தார்.

நானும் மோகனும் ஒரு சேர உள்ளே நுழைந்த போது, பஷீர் எழுந்து, "சாரி மோகன் சார், கடைப்பையன் நீங்க கொடுத்த பணத்தை வேறுபெயரில் குறித்து வைத்திருக்கிறான், நேற்றுதான் கவனித்து கேட்டேன்.. நீங்க கொடுத்ததுன்னு சொன்னான்.. நீங்க மறுபடியும் கொடுத்தப் பணத்தை திரும்பக் கொடுத்துட்டு மன்னிப்பும் கேட்டுட்டுபோகலாம்னு வந்தேன்" என கெஞ்சலாகப் பேசி அந்த 225 ரூபாயை மோகனிடம் திரும்பக் கொடுத்தார். வாங்கிக் கொண்ட மோகன் என்னைத் திரும்பிப் பார்த்து ஒரு
புன்னகை செய்தார்.

"பஷீர், மன்னிப்பு எல்லாம் எதுக்கு, நான் கேட்டிருந்த போஸ்ட்பெய்ட் கனெக்‌ஷன் என்ன ஆச்சு?"

"ஏர்டெல் ஆபிஸ்ல நேத்தேக் கொடுத்துட்டேன்..இன்னக்கி ஆக்டிவேட் ஆகிடும் சார்.." எனச் சொல்லிவிட்டு திரும்பவும் ஒரு முறை தவறுதலாக இரண்டாம் முறை பணம் பெற்றமைக்காக மன்னிப்புக்கேட்டுக்கொண்டு பஷீர் விடைபெற்றார்.

சமூகத்தில் நிறைய சமயங்களில் நாம் நினைத்திருப்பதைவிட அருமையான மக்களும் இருக்கிறார்கள் என்ற எண்ணத்துடன் இருக்கையில் வந்தமர்ந்தவுடன் எனக்கு வந்திருந்த மின்னஞ்சல்களை வாசிக்க ஆரம்பித்தேன்.

ஜெனியிடமிருந்து "ரீசார்ஜ் செய்ய டைம் இல்லை... மிஸ்ட் கால் கொடுக்கக் கூட மொபைலில் பைசா இல்லை. ரீசார்ஜ் செய்து ஈவ்னிங் கூப்பிடுறேன்" என வந்திருந்த மின்னஞ்சலை வாசித்து முடித்துவிட்டு மோகனிடம் பஷீரின் தொலைபேசி எண்ணை வாங்கி வைத்துக்கொண்டேன்.

--------------

பின் குறிப்பு : இந்தியாவில் எந்த மூலையில் இருந்தும் மொபைல் சர்விஸ் புரவைடர்களின் ஏஜென்டுகள், தங்களது மொபைல் மூலம் அந்தந்த சர்விஸ் புரவைடர்களின் எண்களுக்கு ரீசார்ஜ் செய்யலாம்.

5 பின்னூட்டங்கள்/Comments:

said...

வினையூக்கி, 14 ஆண்டுகளாக வணிக இதழ்களில் பணியாற்றி வருபவன் நான். அந்த அனுபவத்தில் சொல்கிறேன். கதை எழுதும் திறமை தங்களிடம் கை கூடியிருக்கிறது. வாசிப்பும், முயற்சியும் தொடர்ந்தால் நல்ல எழுத்தாளராக பெயரும், புகழும் வாங்க முடியும்.

தங்கள் படைப்புகளை வார, மாத இதழ்களுக்கு அனுப்பியிருக்கிறீர்களா? அச்சில் ஏதேனும் பிரசுரமாகியிருக்கிறதா?

ஒருவேளை இன்னும் அச்சு ஊடகங்கள் பக்கம் நீங்கள் செல்லவில்லையென்றால் உடனே அந்த முயற்சியில் இறங்குங்கள். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்.

said...

One More NICE Piece of Gem!!!
(But I think, that "pinkurippu is not necessary. what do you say?)

said...

பைத்தியக்காரன் சார் தங்களின் வருகையும் பின்னூட்டமும் மகிழ்ச்சி அளிக்கிறது. தங்களதுப் பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி. இதுவரை நான் எந்த அச்சு ஊடகத்திற்கும் கதை அனுப்பியதில்லை சார்.வருங்காலங்களில் அதைக் கண்டிப்பாக செய்கிறேன். வாசிப்பனுவத்தை அதிகப்படுத்திக்கொண்டு மேலும் சிறப்பாக எழுத முயற்சிக்கின்றேன்

said...

யோசிப்பவர் மிக்க நன்றி. உங்களிடம் இருந்து கிடைக்கும் பாராட்டும் எப்பொழுதும் மகிழ்ச்சிகரமானதே!!! பின்குறிப்பு , ரீசார்ஜ் செய்யப்படும் முறைகளப்பற்றி இந்தியரல்லாத தமிழர்களுக்கு குழப்பம் ஏற்படும் என்பதற்காக கொடுத்திருந்தேன். ம்ம் நீங்கள் சொல்லுவது போல அது இல்லாமல் கூட கதை நன்றாகவே விளங்குகிறது.

said...

பைத்தியக்காரன் சொல்றா மாதிரி நாளுக்கு நாள் நீங்க கதை சொல்ற விதம், கரு எல்லாமே மெருகேறிக்கிட்டே வருது. வாழ்த்துக்கள்.