எனக்கே எனக்கா!! - குறுந்தொடர்(3)
எனக்கே எனக்கா - முதல் பாகம் இங்கே
எனக்கே எனக்கா - இரண்டாம் பாகம் இங்கே
ஆரம்பிக்கப்படும் வேகத்தைவிட முடிவின் வேகம் அதிகமாக இருக்கும். அன்று மாலை ரம்யாவிற்காகக் காத்திருந்த கார்த்தி எடுக்கப்போகும் முடிவும் அத்தகைய ஒன்றாகத்தான் இருந்தது.
மழை லேசாகத் தூறிக்கொண்டிருந்தது. திருநகர் விளையாட்டு மைதானத்தின் கோவில் முனையில் கார்த்தி மழையை ரசித்தபடி "இரவெல்லாம் உறங்காமல் தவிக்கிறேன்
உன் கனவு எதுவாய் இருக்குமென்று " என்ற வரிகளை எப்படி அமைத்தால் நல்லா இருக்கும் என மனதில் ஓடவிட்டுக்கொண்டு ரம்யாவுக்காகக் காத்திருந்தான்.
"ஹாய் கார்த்தி" எனச்சொல்லியபடியே ஸ்கூட்டியில் வராமல் ஆட்டோவில் வந்து இறங்கினாள்.
"ஏன் லேட்"
"சாரிடா செல்லம்.. கொஞ்சமா லேட்டாச்சு" அவளின் கொஞ்சல்களை ரசிக்கும் மனோபாவத்தில் கார்த்தி இல்லை.
"நான் ஏன் லேட்டுன்னு கேட்டேன்?"
"வரவழியில செருப்பு அறுந்துடுச்சு, தைச்சுட்டு வர லேட்டாச்சு, பத்து நிமிசம் தானே லேட்டாச்சு?"
"பத்து நிமிசம் உனக்கு சாதரணமா போச்சா, என் இடத்தில இருந்து பாரு, வெயிட் பண்றதோட கஷ்டம் தெரியும்..ஒவ்வொரு செகன்டும் யுகம் மாறிப் போகும் தெரியுமா?..என்ன ஆச்சோ ஏது ஆச்சோன்னு ஒரு பதைபதைப்பு!!!"
"சாரிடா கார்த்திக்கண்ணா, இனிமேல் இப்படி ஆகாது" என அவன் கையைப்பிடித்துக் கொண்டு " ஒரு கவிதை சொல்லேன் ப்ளீஸ்" என்றாள்.
"இது வரை அழகாய் தெரிந்த மழையும்
பிடிக்காமல் போனது உன்னை நனைத்ததனால்"
"வாவ்... ஸோ ஸ்வீட் ..செம சிச்சுவேசனல், எனக்கு ரொம்பப் பசிக்குது, ஆரத்தி ஹோட்டல் போகலாம், ஒரு மஷ்ரூம் பஃப் உம் ஒரு சூடா காப்பியும் வாங்கித்தா!!!" அந்தக் கவிதையின் அர்த்தத்தை உணராமலேயே வார்த்தைகளுக்காக பாராட்டிவிட்டு கார்த்தியின் வண்டியின் பின்னால் ஏறி அமர்ந்தாள்.
வண்டி திருப்பரங்குன்றம் ரயில்வே கேட்டைத்தாண்டி, ஏரிக்கரையின் மேல் அமைந்திருந்த பைபாஸ் சாலையில் விரைந்த பொழுது, கார்த்தி பேச்சை ஆரம்பித்தான்.
"ஸ்கூட்டி சர்விஸுக்குதானே கொடுத்து இருக்கே!! எப்படி கம்ப்யூட்டர் கிளாஸ் போன?"
"போறப்ப ஆட்டோல போனேன், வர்றப்ப வாசுவோட வந்துட்டேன்"
"வாசு, யார் அது? "
"என் பக்கத்துவீட்டுப்பையன், நான் கூட சொல்லி இருக்கேனே!! நான் +2 படிக்கிறப்ப எனக்கு லவ் லெட்டர் கொடுத்து இருக்கான், அவனை நல்லா அம்மா அப்பாக்கிட்ட மாட்டிவிட்டு அடி வாங்க வச்சேன்! கே.எல்.என் ல படிக்கிறான்.. இப்போ எல்லாம் ரொம்ப நல்ல பையனாயிட்டான். என்கூட தான் ஜாவா படிக்கிறான்"
"அவன் கூட எப்படி போன?"
"என்னை உப்பு மூட்டைத் தூக்கிட்டுப்போனான், கேள்வியைப்பாரு, அவனோட பைக்லதான் போனேன்"
"கண்டவன் கூட எல்லாம் பைக்ல ஏறிப்போய்டுவியா நீ" மழைத்துளிகளை விட வேகவேகமாக கார்த்தியிடம் இருந்து வார்த்தைகள் வந்து விழுந்தன.
"கார்த்தி, நீ ஏன் இப்படி பேசுற, பர்ஸ்ட் ஸ்டான்டர்ட்லேந்து அவனை எனக்குத் தெரியும்.. பேமிலிபிரன்டு.. கண்டவன் நு எல்லாம் சொல்லாதே பிளீஸ்"
"நீ என்கூட மட்டும் தான் பைக்ல சுத்துறேன்னு நினைச்சேன், இப்போதான் ஊரில இருக்கிறவன் பைக்லே எல்லாம் நீ சுத்துவேன்னு!"
"கார்த்தி, ஏன்டா இப்படி பேசுறே!!இது எல்லாம் சின்ன விசயம்" கண்கலங்க ஆரம்பித்தாள்.
"எதுடி சின்ன விசயம் ,, எவனோ ஒருத்தன் உன்னை பைக்ல வச்சு ஊர் சுத்துவான்.இது சின்ன விசயமா" கார்த்தியின் வார்த்தைகள் தடித்தன.
"அசிங்கமா பேசாதே கார்த்தி. ஒன்பது மணிக்கு கிளாஸ் லேட்டாகி ஆட்டோல போறதைவிட வாசுவோட போறது ஒரு சேஃப்டின்னு தான் போனேன்.
"நல்லா சாக்கு சொல்றே!!... நீ என்னைத்தவிர வேறொருத்தன் கூடப் போறதை ..அதுவும் உனக்கு ஏற்கனவே புரபோஸ் பண்ணவனோடதை நினைச்சா ஏதையோ மிதிச்ச மாதிரி இருக்கு"
"இப்படி நீ பேசுறது என்னை, என் கேரக்டரை அசிங்கப்படுத்துற மாதிரி இருக்கு"
"ஓ உண்மையை சொன்னா உறுத்துதோ," என அப்படியே வண்டியை நிறுத்தினான். அவளை இறக்கிவிட்டுவிட்டு அவள் கூப்பிட கூப்பிட மதிக்காமல் போனான்.
மழையினால் அவளின் அழுகை அங்கே இருந்தவர்களுக்குத் தெரியவில்லை. அப்படியே வீடு சென்ற ரம்யா கொஞ்சம் தைரியம் வரவழைத்துக் கொண்டு, கார்த்தியை கைத்தொலைபேசியில் அழைத்தாள். கைத்தொலைபேசி அணைக்கப்பட்டிருந்தது. "இனிமேல் யார்கூடவும் வண்டியில் போகமாட்டேன், மன்னிக்கவும், பிளீஸ்" என கெஞ்சல் குறுந்தகவல்களுக்கும் பதில் இல்லை. வழக்கமாக சந்திக்கும் இடங்களில் ரம்யாவிற்காகக் காத்திருந்ததைப் கார்த்தி அறிந்திருந்தாலும் அவளை மதிக்கவே இல்லை.ஃபேர்வெல் பார்ட்டியின் போது ரம்யாவிடம் திரும்பப் பேச ஆரம்பிக்கலாம் என நினைத்திருந்த கார்த்திக்கு அன்றைக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அன்று வாசுவின் வண்டியில் வந்திறங்கிய ரம்யா நேராக கார்த்தியிடம் பேச வந்தாள்.
"கார்த்தி, ஐ மிஸ் யூ, என்னோட பேசு, ப்ளீஸ்" என்று அவள் சொல்லி முடிப்பதற்குள் ஒரு ஓங்கி அவளின் கண்ணத்தில் அறைவிட்டான். அதிர்ச்சியில் நிலைகுலைந்து போன நண்பர்கள் என்ன ஏது என்று கேட்பதற்குள்ளாகவே, கார்த்தி அந்த அரங்கை விட்டு வெளியேறினான். கல்லூரியில் தேர்வுகள் முடிந்து திட்ட நேர்காணல் தேர்வு அன்று கல்லூரியில் பார்த்த ரம்யாவை அதற்குப்பின் பார்க்கவே இல்லை.
அடுத்தப் பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும்
-----
கவிதைகள்,நன்றி : "கண்ணாடி மழை" எழில்பாரதி
5 பின்னூட்டங்கள்/Comments:
what next??????
when????????????
anbudan aruna
ரொம்ப ஓவரா இருக்கே இந்தப் பையன் செய்யறது...
கதை மிகவும்
இயல்பாய் செல்கிறது.....
உரையாடல்கள் மிகவும் இயல்பாய் இருக்கிறது
வாழ்த்துகள் !!!!!
உங்களுடைய கதைகளைத் தொடர்ந்து படிக்கிறேன்... ஒரே பெயர்கள் இருப்பதால் ஒருவித அயர்ச்சி வருவது போல் இருக்கு... மாற்றம் செய்யலாமே?... :) ஒன்லி சஜசன்
3 parts இப்போ சேர்த்து படிச்சாச்சு, நல்லா இருக்கு:))
கவிதை உபயம்-எழில் அக்கா:))
திரைகதை உபயம்-திவ்யா அக்கா:))
உரையாடல் எல்லாம் 'நச்'சுன்னு இருக்கு.
நட்போடு
நிவிஷா.
Post a Comment