Tuesday, January 31, 2012

ஒன்றிற்குப் பின் இரண்டு, பின்னர் மற்றொன்று - சிறுகதை

எல்லோருடைய இரண்டாவது காதலும், முதல் காதலைப் பற்றியப் பகிர்தலில் தான் ஆரம்பிக்கின்றது. என்னுடைய இந்த இத்தாலியக் காதல் எத்தனையாவது என்பது முக்கியமல்ல. எத்தனையாவது முறை என்றாலும், தங்களது முதல் காதலைப் பற்றியே சுவாரசியமாக ஆண்கள் பகிர்ந்து கொள்வார்கள். தனது முன்னாள் காதலியை எதிர்மறைப் பிம்பமாக மாற்றாமல் அவளுக்கு ஒரு தேவதை உருவைக் கொடுத்து, தற்பொழுதைய தோழியிடம் பகிர்வதில்தான், நட்பு காதலாக முன்னெடுப்பதை முடிவு செய்கிறது. பிடித்தமான பெண் நட்புகளிடம் முந்தையக் காதல் பகிரப்படும்பொழுது, கிடைக்கும் அனுதாபம் காதல் உருமாற்றத்திற்கு வலு சேர்க்கும்.

“நீ எத்தனை வருடங்கள் உன் அம்முவைக் காதலித்தாய்?”

“மூன்றரை வருடங்கள்?, ஆனால் இப்பொழுதும் அவளைப் பற்றி அடிக்கடி யோசிப்பேன்” நிஜத்தில் ஒன்றரை வருடம் தான்., பிரிவின் தொடர் தாக்கங்களின் வலிகளையும் கணக்கில்
கொண்டதால் மேலும் இரண்டு ஆண்டுகள்,

“உன்னைப் போன்ற நல்லவனைப் பிரிய அவளுக்கு எப்படி மனம் வந்தது?” அடடா, இதே வசனத்தை இடையில் ஸ்வீடனில் இருந்தபொழுது சிலத் தெலுங்குப் பெண்களிடமும்
கேட்டிருக்கின்றேனே !!! அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் என்ற வகையில் சுந்தரத் தெலுங்குத் தோழிகளும் வலி தராமல் சென்றுவிட்டனர்.

“நான் அப்படி ஒன்றும் நல்லவன் இல்லை, குடிப்பேன், பெண்களை உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை பார்ப்பேன்,, வாய்ப்பு இருந்தால் வலை விரிப்பேன்”

“எனக்கு அப்படி ஒன்றும் தெரியவில்லை, ஏனைய இந்தியர்களைக் காட்டிலும் நீ கண்ணியமாகவே நடந்து கொள்கின்றாய்,”

தன்னிடம் இல்லாத எதிர் விழுமியங்களை, இருப்பதாகக் காட்டிக்கொண்டு, தாழ்த்திக் கொள்ளும் நட்பரசியல் இவளிடமும் வேலை செய்தது. எதிர் இருக்கையில் இருந்து மாறி,
என்னருகே வந்து உட்கார்ந்தாள்.

“பொதுவாக தென்னிந்தியாவில் இருந்து வருபவர்கள், குறிப்பாக தமிழ் பேசுபவர்கள் பெண்களை மதிப்பவர்கள், அனுமதி கிடைக்கும் வரை அமைதியாகவே இருப்பார்கள்”

”அம்முவைப் பற்றி மேலும் கொஞ்சம் சொல்லு, உன்னை விலக்கி வைத்தவளைப் பற்றி நான் தெரிந்து கொள்ள வேண்டும்” எனக் கதை கேட்க ஆரம்பித்தாள்.

இதைத் தானடா எதிர்பார்த்தாய் என, அலுவலகத்தில் அம்முவைச் சந்தித்தது, அவள் என்னைப் பொறுக்கி என்றது, தொடர் மன்னிப்பு, மாயாஜால் திரைப்படங்கள், பெற்றோர்களிடம் மாட்டிக்கொண்டது, சூழ்நிலைக் கைதியாதல், அவளின் திருமணம் என முழுநீள் விக்ரமன் திரைப்படம் போல சிலப்பல லாலாலா க்களுடன் கதையை முடித்தேன். பின்னணியில் இளையரஜாவின் இசை சூழலுக்கு மேலும் இனிமைச் சேர்த்தது.

“ஒன்று தெரியுமா, அவளின் மேல் என் சுண்டு விரல் கூடப் பட்டது கிடையாது?”

”என்ன?” வியப்பாக கண்களை அகட்டிக் கேட்டாள்.

”இரண்டு காரணங்கள், உடல் சாரா காதல் தான் உயர்ந்தது என்று அன்றிருந்த ஒரு தவறான அபிப்ராயம், இரண்டாவது வாய்ப்புக் கிடைக்காமை”

“இங்கே எல்லாம் காதல், காமத்தில் ஆரம்பித்து, கலவியில் கண்டிப்பாக பரிசோதனை செய்யப்படும், காமமும் கலவியும் காதலில் மிகமிக முக்கியமானது” என்றபடி தோளில் சாய்ந்தாள்.

“ஆமாம் கார்த்தி, இன்னும் நீ பிரம்மசரியத்தைத் தான் கடைப்பிடிக்கிறாயா ...”

“இல்லை இல்லை, ஸ்வீடனில் இருந்த பொழுது இடையில் சில பரிட்சார்த்த முயற்சிகள் நடந்திருக்கின்றன”

மனம் விட்டு சிரித்தபடி என்னை இறுக்கிக் கட்டிக்கொண்டாள்.

”கொக்கு ஒன்னு கொக்கிப்போடுது ஹோய்.... ” என கங்கை அமரன் பாட, காதல் முழுமையடைவது காமத்திலும் கலவியிலுந்தான் என்பதை உணர்ந்தபடி அன்றிரவு நீடித்த இரவாக மாறிப்போனது.

அடுத்த இரண்டு வருடங்கள் இணைந்து வாழ்வது, பின்னர் தோதுப்பட்டால் திருமணம் செய்து கொள்ளாலாம் எனவும் முடிவு செய்தோம்.

அந்த வருட, புதுவருடக் கொண்டாட்டத்திற்காக, அருகில் இருக்கும் மிகப்பிரபலமான உணவரங்கத்திற்கு சென்றபொழுது, எனது இத்தாலியக் காதலி திடிரென வருத்தமானாள்.
தொடர் வற்புறுத்தல்களுக்குப்பின்னர் தூரத்தில் இருக்கும் மேசையைக் காட்டினாள். அங்கே மொட்டைத்தலையுடன் ஒரு இத்தாலிய இளைஞன், அழகான இத்தாலியப் பெண்ணுடன் அமர்ந்திருந்தான். அவன் எனதுக் காதலியின் முன்னாள் காதலன் எனப் பார்த்தவுடன் புரிந்து கொண்டேன்,

“கடந்த காலங்களைத் திரைப்படங்கள் போலப் பார்க்க பழகிக் கொள்ளவேண்டும், நாம் வேண்டுமானால் வேறு இடத்திற்குப் போகலாமா”

“வேண்டாம் கார்த்தி, நான் அன்று அவனைப் பற்றி நினைத்தது எல்லாம் உண்மை, அவன் உண்மையிலேயே பொம்பளைப் பொறுக்கிதான், அப்பொழுது எல்லாம் என்னை எவ்வளவு கொடுமைப்படுத்தியிருக்கின்றான் தெரியுமா, எதற்கு எடுத்தாலும் சந்தேகம், படுப்பதற்கு மட்டும் தேவையான ஒரு பொருளாக என்னைப் பயன்படுத்திக் கொண்டான்” என அவளின் முன்னாள் காதலனை, சிலப்பல கெட்ட வார்த்தைகளையும் சேர்த்துத் திட்டிக்கொண்டிருந்தாள். சிலத் திட்டுகளில் உண்மையிருந்த போதிலும், பெரும்பான்மையான திட்டுகள் மிகைப்படுத்தப்பட்டவையாகவேத் தோன்றின. அவளைச் சமாதனப்படுத்தி இரவு உணவை முடித்தோம்.

முன்னாள் காதலன் இவள் இருப்பதைக் கவனித்துவிட்டு, தன்னுடையப் பெண்ணுடன் எங்களின் மேசைக்கு வந்து எங்கள் இருவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் சொன்னான். அவன் கண்களில் என்னுடைய காதலி இன்னமும் தேவதையாகவே இருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது., ஆண்கள் தங்களுடைய அனைத்துக் காதலிகளையும் எல்லாக் காலக் காட்டத்திலும் நேசித்துக் கொண்டிருக்கிறார்கள்., முன்னாள் காதலி என்ற சொற்பதம் என்பதே ஆண்களுக்கு கிடையாது, ஆனால் பெண்களுக்கு தங்களது முன்னாள் காதலன் எப்பொழுதும் வில்லன் தான், என்பதை எனது பேஸ்புக் நிலைத்தகவலாக தமிழில் வைக்கவேண்டும் என முடிவு செய்து கொண்டேன்.

Sunday, January 29, 2012

ஹலால் - சிறுகதை

பங்கேற்பாளனாய் இருப்பதைவிட பார்வையளானாய் இருப்பதே மேல், என்பதை நுட்பமான உணர்வுகள் சம்பந்தப்பட்ட விவாதங்களில் நான் கடைப்பிடிக்கும் அணுகுமுறை.

°மீனையும் தானே கொன்று சாப்பிடுகிறீர்கள், அது மட்டும் எப்படி எந்த சடங்கும் இன்றி ஹலால் ஆகின்றது” தன்னுடையை சீண்டலை, அறிவார்ந்த கேள்விமாதிரி வாசுதேவ் ஷாகித்திடம் கேட்டான்.

ஷாகித் பதில் சொல்லவில்லை. வாசுதேவ் என்னைப் பார்த்து ”பார்த்தியா, மடக்கிட்டேன்” என்ற வகையில் கண் சிமிட்டினான். வர வர வாசுதேவின் மேல் எரிச்சல் கூடிக்கொண்டே வந்தது. ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக, குறைந்த பட்சம் கிரிக்கெட் பற்றி பேசுவதற்காகவது, அவனுடன் இருக்க வேண்டி இருக்கின்றது.

பாகிஸ்தானிலிருந்து ஷாகித் வந்தபின்னர், தமிழ்நாட்டு வழக்கமான, இயல்பான இஸ்லாமிய இணக்க வளர்ப்பு சூழலினால் அவனுடன் நட்பாக முடிந்தது. ஆனால் வடநாட்டு வாசுதேவிற்கு சீண்டலையும் கேலியையும் மட்டுமே கொடுக்கத் தெரிந்தது.

வழமையான புன்னகையைக் கொடுத்துவிட்டு, எங்களது ஆராய்ச்சிக்கூடத்தின் முதல் தளத்திற்கு ஷாகித்தின் மதிய தொழுகைக்கு சென்றுவிட்டான்.

ஷாகித் இந்த மீன் ஹாலால் பற்றிய விளக்கத்தை ஏற்கனவே எனக்கு தனிப்பட்ட முறையில் சொல்லி இருக்கின்றான். ”செதில் வைத்த எல்லா மீன்களும் ஹலால், சாப்பிடலாம். வெப்பரத்தப் பிராணிகளுக்கும் குளிரரத்தப் பிராணிகளுக்கும் ஏக வித்தியாசமுண்டு. மீன்களின் ரத்த ஓட்டம், அதன் ரத்தவகையும் நிலவாழ் , பறவைகளைக் காட்டிலும் வேறானது. ஆகையினால், தேர்ந்த முறையில் மீன்களை வெட்ட வேண்டிய அவசியம் இல்லை” என அவன் சொன்ன அந்த விளக்கம் எனக்கு ஏற்புடையதாக இருந்தது.


“புலாலில் ஹலால் என்பது சுத்த வியாபரத்தந்திரம், அவங்க ஆட்கள் கடைகளில் மட்டுமே வியாபரம் நடக்க வேண்டும் என்று போடப்பட்ட சூட்சுமம்” வாசுதேவனின், சீண்டல் பொருளாதாரக் கோணம் எடுத்தது.

ஒருவேளை பொருளாதாரக் காரணங்கள் இருந்தாலும் கூட, அதுவும் சரிதானே... நான் கூட 25 கிலோமீட்டர்கள் பயணம் செய்து, ரோம் நகரத்திற்கு வெளியே இருக்கும் ஈழத்தமிழர் கடையில் தான் போய் அரிசி, பருப்பு இன்ன பிற வகையறாக்கள் வாங்குவேன்.

என்னைப் பொறுத்தவரை, என் சாப்பாட்டுத் தட்டில் கை வைக்காதவரை எந்தக் கோட்பாடுகளைப் பற்றியும் எனக்குக் கவலை இல்லை. ஆடோ, மாடோ, பன்றியோ... ஏன் ஒணானாக இருந்தாலும் என் வாய்க்கு ருசியாகவும் வயிற்றுக்கு ஜீரணம் ஆகும் அனைத்து உணவு வகைகளும் ஹலாலே.... அவரவருக்கு சரி என்பதை அவரவர் பின்பற்றுகிறார்கள். நல்லதே ஆனாலும் திணிக்கப்படும்பொழுதுதான் பிரச்சினை.

ஷாகித்திடம் ஒரு நல்ல குணம் உண்டு, அன்புடன் வற்புறுத்தினால்,

“அன்பிற்காக சில விதிவிலக்குகளை பின்பற்றலாம்” நான் கொண்டு வந்திருக்கும் ஹலால் அல்லாத கோழிக்கறியை சிறிதளவேனும் ருசி பார்ப்பான்.

“எப்படித்தான் பிணத்தை எல்லாம் சாப்பிடுகிறீர்களோ” ஒரு நாள் நான் கோழிக்கறி வறுவல் சாப்பிட்டுக்கொண்டிருந்த பொழுது வாசுதேவ் கேட்டபிறகு அவனுக்கு மட்டும் தெரியும் படி, சைவச் சாப்பாட்டுப் பிரியர்களைக் கேலி செய்யும் சித்திரங்களையும் தகவல்களையும் பேஸ்புக்கில் பகிர ஆரம்பித்தேன். தாவரங்களுக்கும் உயிருண்டு என்பதைக் கண்டுபிடித்து அரை நூற்றாண்டுக்கும் மேல் ஆகப்போகின்றது என்பதை பல சைவப்பிரியர்கள் மறந்துவிடுகிறார்கள்.

நடுநிலை என்பதைவிட, சமனிலைப் படுத்தும் காரணியாக நான் இருந்ததால், ஷாகித்தை , பலசமயங்களில் வாசுதேவ்வின் உள்குத்துகளில் இருந்து காப்பாற்ற முடிந்தது.

சில மாதங்களுக்குப் பின்னர், ஷாகித்திற்கு திருமணம் நிச்சயம் ஆகிவிட்டதால், அவன் வீட்டில் விருந்துக் கொடுக்க முடிவு செய்தான். வாசுதேவ் வரவில்லை என்று சொல்லிவிட்டான். இருந்த போதிலும் நான் ஷாகித்திற்கு அறிமுகப்படுத்தி இருந்த வேறு துறை மாணவர்கள் ரங்கநாதனும் ஸ்ரீராமும் வருவதாக சொன்னார்கள்.

விருந்து தினத்தன்று, அவனுக்கு உதவுவதற்காக காலையிலேயே சென்ற பொழுது, சமையலறையில் புதுப்பாத்திரங்களாக அடுக்கி வைத்திருந்தான். இரண்டு குழம்பு வைக்கும் சட்டிகள், அரிசி வைக்கப் புதுப்பாத்திரம், வாணலி, கரண்டிகள் என எல்லாம் முந்தைய நாள் வாங்கியவை.

“எதற்கு இந்தப் புதுப்பாத்திரங்கள், கல்யாணப்பையன் காசு சேர்க்க வேண்டாமா”

“இல்லை கார்த்தி, ஸ்ரீராமும் ரங்காவும் சைவர்கள், மாமிசம் சமைத்த எனது பாத்திரங்களில் சாப்பாடு செய்து கொடுத்தால், ஒரு வேளை அவர்களுக்கு அசூயையாக இருக்கக் கூடும், நான் கொடுக்கும் விருந்து அவர்களுக்கும் ஏற்புடையதாக இருக்க வேண்டும்”

ஷாகித்தின் மேல் இருக்கும் மதிப்பு உயர்ந்தது. அடுத்த முறை, ஹாலால் கோழி வாங்கி, ஷாகித்திற்கு சமைத்துக் கொடுக்க வேண்டும் என மனதினுள் முடிவு செய்தேன்.

Friday, January 27, 2012

க்ரிஷ் - சிறுகதை

”கார்த்திபா ஒரு விசயம் கேட்கனும், கோச்சுக்க மாட்டதானே” என்ற அம்முவிடம்

“சொல்லு குட்டிமா~ என்றதும் எனது மடியில் அமர்ந்து என்னுடன் குழந்தைப் பாடல்களைப் பார்த்துக் கேட்டுக்கொண்டிருந்த அஞ்சலிப்பாப்பா தலைத் திருப்பி என்னைப் பார்த்தாள்.

”உன்னை இல்லைடாக் குட்டி, நான் கூப்பிட்டது சீனியர் குட்டிமாவை.. ” மீண்டும் அஞ்சலிப்பாப்பாவிற்கு ”தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு - அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி அம்மா... என்றது வெள்ளைப்பசு- உடன் அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி.” பாட்டின் மேல் கவனம் சென்றது. எங்கள் வீட்டில் மொத்தம் மூன்று நபர்கள், ஆனால் கூப்பிடப் பயன் படுவது இரண்டே பெயர்கள். குட்டிமா இருவருக்கும் நான் கார்த்திபா. ஜூனியர் குட்டிமாவிற்கு ஜூலை வந்தால் 3 வயது. குழந்தைகளின் இரண்டு வயது முதல் நான்கு வயது வரைக்கான காலம் அற்புதமானது. நீங்கள் அவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதை விட, அவர்கள் உங்களுக்கு கற்றுக்கொடுப்பது ஏராளம்.

“அம்மா, அப்பா இரண்டு பேரும் கோவிலுக்குப் போக ஆசைப்படுறாங்க,”

“ஹரே கிருஷ்னா க்ருப்போட கோயில் ஃப்ரீத்ஹெம்ஸ்காத்தான் பக்கம் தானே, அங்கேப் போயிட்டு வரச்சொல்லு”

“அவங்க... குட்டிப்பாவையும் கூட்டிட்டுப் போக ஆசைப்படுறாங்க, இதுவரைக்கும் பாப்பாவை கோவிலுக்கோ சர்ச்சுகோ கூட்டிட்டுப் போகலேன்னு ரொம்ப வருத்தப்படுறாங்க ..”

வாசுதேவனும் ரங்கநாயகியும் நீண்டகால கோபத்தை மறந்து , ஒரு மாதம் எங்களுடன் தங்க ஸ்வீடன் வந்து இருக்கிறார்கள். மருமகனை மாப்பிள்ளை என வாய்நிறையக் கூப்பிடாமல் பெயர் சொல்லி அழைப்பவர்களை நானும் பேர் சொல்லித்தான் அழைப்பேன்.

“நாமதான் பாப்பாவுக்கு சாமி, பூதம் கண்டதை எல்லாம் கத்துக்கொடுக்ககூடாதுன்னு பேசி இருக்கோமே,,, பின்ன என்ன திடீர்னு” என்றதும் அம்முவின் கண்களில் நீர் முட்டிக்கொண்டு நின்றது. தனது கோரிக்கையை விட, தன் அம்மா அப்பாவின் விருப்பம் நிரகாரிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்கான ஆயுதம் அது. கிருஷ்ணன் தேவையில்லை, ஆனால் அம்மு முக்கியம் அல்லவா... குழந்தைக்கு சாமி கண்ணைக்குத்தும் ரீதியிலான விளக்கங்கள் எல்லாம் கொடுத்து பயமுறுத்தக் கூடாது என்ற நிபந்தனையுடன், கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அஞ்சலிப்பாப்பா அச்சில் அம்முவைப்போல இருந்ததால், வாசுதேவன், ரங்கநாயகி இருவரும், மறுநாள் கோவிலில் குழந்தைக்கு நடைப்பழக்கியபடி மகளின் குழந்தைபிராயத்தை மறுவாசிப்பு செய்து கொண்டிருந்தார்கள். அவர்களின் ஒரே மகளை , அவர்களின் விருப்பமின்றி கவர்ந்தெடுத்ததின் கோபம் கொஞ்சம் கொஞ்சமாக அஞ்சலியின் வடிவில் கரைந்து கொண்டிருந்தது.

பூசை நடக்கும்பொழுது, அஞ்சலிப்பாப்பாவிற்கு அது எல்லாம் புதியதாகத் தோன்றியது,. கொஞ்சம் மிரண்டுபோய் என் பக்கத்தில் வந்துவிட்டாள்,. இருந்த போதிலும் அவளுக்கு அங்கிருந்த கிருஷ்ணர் படங்களின் மேலும் பொம்மைகளின் மேலும் ஒர் ஈர்ப்பு வந்துவிட்டது.

“கார்த்திபா, அது என்ன?” என மழலையாக கிருஷ்ணன் சிலையை கைக் காட்டிக் கேட்டாள்.

“நல்லா .. மாட்டினியா ... பதில் சொல்லு” எனத் தோளில் இடித்தாள் அம்மு.

“அது, கிருஷ்ணன், அர்ஜுனோட நண்பன்... காம்பிஸ்” , ஸ்வீடனிலேயே இருக்கப்போகின்றோம் என முடிவாகிவிட்டதால், தமிழும் ஸ்வீடிஷும் கலந்தே பேசி அஞ்சலிப்பாப்பவைப் பழக்கப் படுத்தி வருகின்றோம். நாங்கள் இருவரும் வேலைக்குப்போவதால் பகல் நேர முழுவதும் குழந்தைகள் காப்பகத்தில் இருப்பதனால், தமிழுக்கு இணையாக ஸ்வீடிஷையும் அஞ்சலிப்பாப்பா வேகமாக கற்றுவருகிறாள். இந்த மூன்று வாரங்களாக அம்முவின் பெற்றோர் இருப்பதால் குழந்தைகள் காப்பகத்திற்கு மட்டமடித்துவிட்டு தமிழையும் பாசத்தையும் கற்று வருகின்றாள்.

“அஜூன் ஆரு”

“வீட்டுக்குப்போனதும் யூடூப்ல குட்டிம்மாவுக்கு கட்டுறேன்” எனச்சொல்லி வீட்டுக்கு வந்ததும் யுடுயுபில் மகாபாரதத் தொலைக்காட்சித் தொடரின் தமிழ் மொழிமாற்று வடிவத்தைத் தேடி எடுத்து,

“இதுதான் அஜூன்” என்றேன் குழந்தையின் மொழியில்.

“அஜுனும் க்ரிஷும் காம்பிஸ்” அவளுக்கு எளிமையாக்க கிருஷ்ணனை க்ரிஷ் ஆக்கி, “அஜூனுக்கு எப்போ பிரச்சினை வந்தாலும் க்ரிஷ் உதவி பண்ணுவார்”

“பிச்சினா” அடடா, குழந்தைகளுக்கு ஏதுப் பிரச்சினை, பிரச்சினை என்பதை எப்படி புரியவைப்பது. குழம்ப,

“இந்தே பிச்சினா ... யெல்பர், க்ரிஷ் யெல்ப்பர் அஜுன் ஆல்தீத், பெர்சொன் வெம் யெல்பர் எர் க்ரிஷ் “ க்ரிஷ் எப்பொழுதும் அஜுனுக்கு உதவுவார், யார் உதவி செய்கிறார்களோ அவரின் பெயர் க்ரிஷ் என்ற பொருள்படும் விதத்தில் அம்மு ஸ்விடீஷில் தொடர்ந்தாள்.

வாசுதேவனும் ரங்கநாயகியும் ஊருக்குப்போன பின்னர், குழந்தையை அழைக்க நானும் அம்முவும் காப்பகத்திற்கு சென்றபொழுது, கருப்பு, வெள்ளை குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருந்த எங்களின் தேவதையுடன் வேறு ஒரு குட்டி அரபுக்குழந்தையும் ஓடிவந்தது.

“குட்டிமா, இது யாரு... “ என அரபுக்குழந்தையையும் அரவணைத்தபடி அஞ்சலிப்பாப்பாவிடம் கேட்டேன்.

“க்ரிஷ்” என்றாள் குழந்தை.

----------

Thursday, January 26, 2012

கிரிக்கெட் வினாடி வினா - ஆறுக்கு ஆறு

நெருக்கப்பட்ட பன்னாட்டு கிரிக்கெட் போட்டிகளின் அட்டவணையில் சாமானிய ரசிகனால் உள்ளூர் போட்டிகளைத் தொடர்ந்து கவனிக்க முடிவதில்லை. ஐபிஎல் போட்டிகள் உள்ளூர் போட்டிகள் என்ற போதிலும், அதில் இருக்கும் பன்னாட்டு வீரர்களினால் இருபதுக்கு இருபதை சர்வதேசத் தரப் போட்டியாகவே நோக்கப்படுகிறது. கட்டமைப்பான உள்ளூர் போட்டிகளினாலும் தொடர்ந்த ஆஸ்திரேலிய ரசிகர்களின் ஆதரவாலும், ஆஸ்திரேலியா 30 வருடங்களுக்கு மேல் தொடர்ந்து நீட்டிப்பான வெற்றிகளைத் தொடர்ந்து பெற முடிகிறது. இந்தியாவிலும் உள்ளூர் முதல் தரப்போட்டிகளுக்கு ஆதரவு அதிகமானால் மேலும் இந்தியக் கிரிக்கெட்டின் தரம் உயரும். இந்த வினாடி வினாவில், நம் கிரிக்கெட் ரசிகர்களால் எந்த அளவிற்கு முதல் தரப்போட்டிகள் நோக்கப்படுகிறது என்பதை “டெஸ்ட்” செய்யும் விதமாக இந்த ஆறு கேள்விகளும் அமையப்போகின்றது. முடிந்தவரை எளிமையாகவே கேள்விகளை அமைத்து இருக்கின்றேன். வினாக்கள் முதல் தரப்போட்டிகளில் இருந்து கேட்கப்பட்டுள்ளன. ஒரு வேளை கேள்விகளில் தகவல் பிழை இருந்தாலும் சுட்டிக்காட்டவும்.

1. கீழ்கண்ட படத்தில் பிரபல ஆட்டக்காரர் கவாஸ்கர் இடதுகையால் மட்டையடிப்பது போல இருக்கின்றது, இது கண்ணாடி வழியாக இடவல மாற்றப் புகைப்படம் அல்ல, நிஜமாகவே ஒரு ஆட்டத்தில் கவாஸ்கர் இடதுகை ஆட்டக்காரராகவும் ஆடினார். அந்த இந்திய முதல் தர ஆட்டம் என்ன? எந்த சூழலில் அவர் ஆடினார் என்பதையும் தெரிந்தால் சொல்லுங்களேன்.2. முதல் தரப்போட்டிகளில் பிரையன் லாரா அடித்த ஆட்டமிழக்காத 501 ஓட்டங்களே இன்று வரை அதிகபட்சமாக இருக்கின்றது. கேள்வி, பிரையன் லாராவிற்கு முன்னர் அந்த சாதனையை வைத்திருந்தவர் யார்?

3. இந்திய முதல்தரப்போட்டிகளில், முந்தைய ரஞ்சிக்கோப்பையை வென்ற அணியுடன், இதர இந்திய வீரர்களின் அணி (Rest of India)ஆடும் போட்டிக்கான கோப்பையின் பெயர் என்ன?

4. ஐபில் இருபதுக்கு இருபது ஆட்டமாக நகரங்களுக்கு இடையிலான போட்டிகளாக நடத்தப்படுகிறது. ஆனால் இந்திய அளவில் வேறு ஒரு இருபதுக்கு இருபது போட்டித்தொடரும் முதல்தரப் போட்டிகளாக நடத்தப்படுகின்றது. அதாவது ரஞ்சிப் போட்டிகளில் ஆடும் அணிகள் இந்த இருபதுக்கு இருபது போட்டிகளில் பங்கேற்கும். இந்தப் போட்டித் தொடரின் பெயர் என்ன?

5. கீழ்க்காணும் படத்தில் இருக்கும் கிரிக்கெட் வீரர் யார்? தொடர்ந்து இந்திய முதல் தரப்போட்டிகளைக் கவனித்து வருபவர் என்றால் இவரை சுலபத்தில் கண்டுபிடித்துவிடலாம்.6. கடைசிக் கேள்வி, லீ ஜெர்மோன், தனது முதல் டெஸ்ட் ஆட்டத்தை கேப்டனாக அறிமுகமாகி ஆடினார். கேண்டர்பர்ரி அணிக்காக இவர் ஆடிய முதல் தர ஆட்டமொன்று கிரிக்கெட் பதிவுகளில் நீங்கா இடம் பெற்றுவிட்டது. அந்த ஆட்டத்தில் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க நிகழ்வு என்ன, அதில் இவரின் பங்கு என்ன?

விடைகள்

1. 81/82 ரஞ்சிப்போட்டிகளின் அரை இறுதி ஆட்டத்தில், ரகுராம் பட் என்ற கர்னாடகா அணியின் சுழற்பந்து வீச்சாளரின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் பம்பாய் அணியினர் சுருண்டனர். ஏற்கனவே முதல் இன்னிங்ஸில் அதிக ஓட்டங்கள் குவித்திருந்ததின் அடிப்படையில் கர்னாடகா இறுதிக்குத் தகுதிப்பெற்றிருந்தது. ஒட்டு மொத்தத் தோல்வியைத் தவிர்க்க, ரகுராம் பட் பந்து வீசும்பொழுது மட்டும் இடதுகை ஆட்டக்காரராக ஆடி, ஆட்டத்தை டிரா செய்தார். முதல் தரப்போட்டிகளில் நன்றாக விளையாடியும் சொற்ப பன்னாட்டு ஆட்டங்களே ஆடி ரகுராம் பட் ஓய்வுப் பெற்றார்.

ஆட்டவிபரம் இங்கே

2. ஹனீப் முகமது கராச்சி அணிக்காக அடித்த 499 ஓட்டங்கள். சுவாரசியமான விசயம் என்னவெனில் இவர் 500 வது ஓட்டத்தை எடுக்கும்பொழுது ரன் அவுட் என்ற முறையில் ஆட்டமிழந்தார். அதைப்பற்றியக் கட்டுரையை பின்வரும் சுட்டியில் படிக்கலாம்.
http://www.espncricinfo.com/magazine/content/story/385930.html

3. இரானி கோப்பை

4. எதிர்பார்த்த விடை சையத் முஷ்தாக் அலி கோப்பை என்ற போதிலும் Interstate 20 என்ற விடையும் சரியானதே

5. ராபின் பிஸ்ட் , ராஜஸ்தான் அணியின் ஆட்டக்காரர். இந்த சீசனில் அதிக ஓட்டங்களை ரஞ்சிப்போட்டிகளில் எடுத்தவர் என்ற பெருமை உடையவர்.

இவரின் பக்கம் http://www.espncricinfo.com/ci/content/player/262464.html

6. 59 ஓவர்களில் 291 வெற்றி இலக்கு என்று கடைசிநாளில் களமிறங்கிய கேண்டர்பர்ரி அணி, 108 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக்கொண்டிருந்தது. இருந்த போதிலும் லீ ஜெர்மோனும் ரோஜர் போர்டும் ஓரளவிற்கு சமாளித்து டிராவை நோக்கி ஆட்டத்தை நகர்த்திக் கொண்டிருந்தனர். எதிராக ஆடிய வெலிங்க்டனின் அணியின் கேப்டனும் பயிற்சியாளரும் ஒரு திட்டத்தை வகுத்தனர். இரண்டு ஓவர்கள் மீதம் இருக்கும் நிலையில் எளிதாக பந்துகளை ஆட்டக்காரர்களுக்கு வீசுவதன் மூலம் , இரண்டு மூன்று பந்து ஆடி வாங்கினாலும், கிட்டத்தட்ட 95 ஓட்டங்களை கண்டிப்பாக எடுக்க முடியாது, மீதமிருக்கிற இரண்டு விக்கெட்டுகளை எடுக்க வாய்ப்பு இருக்கின்றது என பெர்ட் வான்ஸ் என்பவரை பந்து வீசச்செய்தனர். வேண்டுமென்றே நோபால்களை வீசச் செய்து மட்டையாளர்களை குஷிப்படுத்தினர். கொடுத்தக் காசுக்கு மேல் கூவ ஆரம்பித்த வான்ஸ் வாரி வழங்கி 77 ஓட்டங்களைக் கொடுத்தார். கடைசி ஓவரில் 18 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் 17 ஓட்டங்களை எடுத்த லீ ஜெர்மோன் ஸ்கோரை சமன் செய்தார். அதனைப் பற்றிய விவரணையான கட்டுரை இங்கே

http://www.espncricinfo.com/magazine/content/story/451716.html

தினைத் துணை நன்றி செயினும் - சிறுகதை

இந்திப் பேசும் இந்தியர்களை விட உருது பேசும் பாகிஸ்தானியர்களிடம் பழகியதுதான் அதிகம். ஆரம்பத்தில் விஜய்காந்த் , அர்ஜூன் பட வில்லன்களைப்போல அவர்களைப் பார்த்தாலும், போகப்போக நம்மவர்களைக் காட்டிலும் ஒரு படி மேலாகவே தெரிந்தார்கள். கடைசி சில வருடங்களாக பாகிஸ்தானியர்களிடம் பழகுவது பெரிய சிரமமான காரியமாகவே தெரியவில்லை. கடவுளைத் தவிர்த்து வேறு எந்த விசயத்தையும் அவர்களிடம் விவாதம் செய்யலாம். இந்த பாகிஸ்தானிய முன்னனுபவம் இருந்ததால் புதிதாக வந்து இருந்த ஆய்வு மாணவன் ஷாகித்தை வழி நடத்தும்படி என் பேராசிரியர் கேட்டுக்கொண்டார்.

வந்ததும் வராததுமாய் எடுத்தவுடன் உருதுவில் பேச ஆரம்பித்தான்.

”நீ என்ன சொல்கிறாய் விளங்கவில்லை” என்றேன் ஆங்கிலத்தில்,

“இந்தி பேசமாட்டாயோ, அது உங்களின் ராஷ்டிரபாஷை அன்றோ” வேண்டுமென்றே சமஸ்கிருதம் கலந்த இந்தியில் பேசினான்.

ராட்டிரபாஷையோ கூட்டுற பாஷையோ என மனதில் நினைத்துக் கொண்டு, ”எனக்கு இந்தியோ உருதுவோ தெரியாது., தயவு செய்து ஆங்கிலத்தில் பேசவும்” முகத்தில் மென்மையும் குரலில் கடுமையும் காட்டினேன்.

இரண்டு நாட்களுக்கு அவனுடன், அவனுக்கான வரி எண், குடியிருக்கும் அட்டை, காப்பீடு போன்றவைகளை வாங்க அவனுடன் சென்ற பொழுது, என்னைப்போலவே நடுத்தரக் குடும்பத்தில் இருந்து மிகவும் கஷ்டப்பட்டு மேலே வந்து இருக்கின்றான் என்று அவன் சொன்ன அனுபவங்களின் மூலம் புரிந்து கொள்ள முடிந்தது.

அடுத்த ஒரு மாதத்தில் நைய்யி நையின்னு ஒவ்வொரு விசயத்துற்கு என்னையும், எனது ஆராய்ச்சிக் கூடத்தில் இருக்கும் சக இத்தாலியப் மாணவியையும் அரித்து எடுத்தாலும், ஒவ்வொன்றிற்கும் அவனுக்கு நான் மட்டும் பொறுமையாக்வே விளக்கிக் கொண்டிருந்தேன்.

ஷாகித்தின் பிரச்சினை என்னவெனில் ஆங்கிலம் அத்தனை சரளமாக வராது. ஒவ்வொரு வாக்கியத்தையும் உருதில் இருந்து மொழிப்பெயர்த்து ஆங்கிலத்தில் பேசுவதால், இலக்கணமும் அடிபட்டு, சரியான சொற்களும் கிடைக்கப்பெறாமல் அவன் சொல்ல வந்த விசயத்தின் அர்த்தமே மாறிவிடும். அவனுக்கு இத்தாலியப் மாணவியிடம் நட்பு பாராட்ட வெண்டும் என்ற விருப்பம் இருந்ததால் அவளிடமே சின்ன சின்ன சந்தேகங்களைக் கூட என் பின் பக்கத்து இருக்கையில் இருந்து அடுத்த முனை இருக்கை வரை சென்று கேட்பான்.
இடம் பொருள் ஏவல்களை சரியாகப் புரிந்து கொள்ள மாட்டான். அவள் சிடுசிடுத்தப்பின்னரே என்னிடம் வருவான். நான் எளிய ஆங்கிலத்தில் ஷாகித்திற்கு விளக்கி , அப்படியும் புரியாவிடில் எனக்குத் தெரிந்த தூர்தர்ஷன் இந்தியைக் கொண்டு விளக்கி புரியவைப்பேன்.

ஒரு வார இறுதியில் மூன்றாவது மதுபானச் சுற்று முடிந்தவுடன் என் தோளில் சாய்ந்தபடி சக இத்தாலிய மாணவி கேட்டாள்.

“கார்த்தி, சிலநாட்களாகவே உன்னிடம் கேட்கவேண்டும் என்று நினைத்தேன், ஷாகித் தொட்டதற்கெல்லாம் உன்னிடம் வந்து நிற்கும்பொழுது, எப்படி பொறுமையாக அவனுக்கு உதவுகின்றாய், இத்தனைக்கும் அவன் உன் நாட்டுக்காரனோ, உன் மொழிக்காரனோ ஏன் உன் மதத்துக்காரனோ இல்லை, அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதே பல சமயங்களில் புரியாது, பேராசிரியரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்றுதானே இப்படி செய்கிறாய்” என கண் சிமிட்டினாள்.

“அப்படி எல்லாம் இல்லை, பத்து வருடங்களுக்கு முன்னர், முதன் முதலாக பம்பாயில் உள்ள ஒரு நிறுவனத்தில் சேர்ந்த பொழுது, அப்பொழுது ஊரும் புதியது, நுனி நாக்கு ஆங்கிலம் பேச முயற்சி செய்யும் நிறுவனத்தின் சூழலும் புதியது, சிறுநகரச் சூழலில் வளர்ந்த நான் அன்று தடுமாறிய பொழுது எனது உடைந்த ஆங்கிலத்தைப் புரிந்து கொண்டு, அவரின் உடைந்த தமிழுடன் ஒரு தெலுங்கு பேசும் நண்பர் உதவினார்.... ஷாகித் முதன் முறையாக தனது சொந்த ஊர், நாடு, கண்டம் விட்டு இங்கு முழுக்க முழுக்க அந்நியமான தேசத்திற்கு வந்து இருக்கின்றான், ... ஷாகித்திற்கு உதவும் பொழுதெல்லாம், ஏதோ ஒரு வகையில் எனக்கு அன்று கிடைத்த உதவியைத் திருப்பிச் செலுத்துவதாகவே ஒரு மகிழ்ச்சி,... வாய்ப்புகள் இருக்கும்பொழுது நமக்குக் கிடைத்ததை மற்றவருக்கு கொடுக்கத் தவறக்கூடாது ... நிச்சயம் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் ஷாகித்தும், ஒரு தமிழன் எனக்கு உதவினான் என்று நினைவுகூர்ந்து வேறு யாருக்காவது உதவுவான்”

“Pay it forward° எனச் சொல்லிவிட்டு என்னை மேலும் இறுக்கமாகக் கட்டிக் கொண்டாள்.

Wednesday, January 25, 2012

காகிதக் கடவுள் - உரைநடைக்கும் கவிதைக்கும் நடுவிலான ஒரு முயற்சி

சாமிப்படத்தை மிதித்த போது நாத்திகன் எனக்கும் கடவுள் நம்பிக்கை வந்தது.

காந்தி, ஜின்னா, பெஞ்சமின் பிராங்ளின், வாஷிங்டன்,
ஜெபர்சன், மாவோ, கோமேனி, அகஸ்டஸ் 2, குஸ்டாவ் 1, எலிசபெத் 2,
பியரி க்யுரி , யூசுப்-பின்.இசாக்
ஏன் ரத்தக் காட்டேறி ராஜபக்சேவுடன்
இன்னும் ஏராளமானோர் என் கடவுள்கள்...

எண்ணிக்கையில் குறைவானவர்கள்
படைக்கப்பட்ட கடவுள்களை விட மேலானவர்கள்
காகிதங்களில் இருக்கும் கருணாமூர்த்திகள் ...

மிதிபட்ட படத்தைக் குப்பையில் வீசி,
அருகில் கிடந்த 100 ரூபாய்த் தாளை எடுத்துக்கொண்டேன்.

தொலைந்ததைத் தேடி தன்னையும் கடவுளையும் நிந்தித்தபடி
கடந்து சென்றான் ஒருவன்.

Tuesday, January 24, 2012

479 - ஒரு நிமிடக்கதை

உலகத்தின் ஒரு பகுதியை ஆண்ட ரோமானிய தேசத்தின் இன்றைய தலைமுறையினருக்கு தங்கள் நாட்டின் கலாச்சாரத்தின் மேல் பெருமை இருப்பது தவறில்லை. ஆனால் எனது இத்தாலியத் தோழி ஒரு படி மேலே ... அவளுக்கு ஆங்கிலம் தெரியும், ஆனால் இத்தாலியத்தில் தான் பேசுவாள்.

”இங்கு இருக்கும்பொழுது இந்த மொழியைக் கற்றுக்கொள்ளவிடில் எங்கு போய் கற்றுக்கொள்வாய்” அவளது வாதம் நியாயமானதுதான்.

இன்று ஞாயிறு முழுவது அவளுடன் ரோம் நகரத்து கடைத்தெருக்களில் சுற்றிக்கொண்டிருக்கின்றேன். சில ஆடைகள் மற்றும் அழகுப் பொருட்கள் வாங்குவதற்காக என்னைத் துணைக்குக் கூட்டிச்சென்றாள். பெரும்பாலான கடைகளின் வாசற்படியில் Made in Italy , என்று வெளிப்படையாக விளம்பரத் தட்டிகள் வைத்திருக்கும் கடைகளில் மட்டுமே நுழைகின்றாள். ஒரு பொருளை எடுக்கிறாள். அதில் இருக்கும் பார்கோடைப் பார்க்கிறாள். பொருளின் விலையும் தரமும் ஏற்புடையது என்றாலும் ஏனோ நிராகரித்து விட்டு வேறு ஒன்றை தேர்வு செய்கிறாள்,

“உன் கண்களில் என்ன பார்கோட் ரீடரையா வைத்திருக்கிறாய்?” என்றேன் சிரித்தபடி...

“இல்லை கார்த்தி ... முதல் இரண்டு இலக்கங்களை வைத்து பொருட்கள் என் நாட்டில் தயாரிக்கப்பட்டவையா எனப் பார்த்தேன் 80 யில் இருந்து 83 வரை இருக்கும் எண்கள் இத்தாலிக்கானது”

“அதுதான் வாசற்படியிலேயே கொட்டை எழுத்தில் எழுதி வைத்திருக்கின்றனரே,,,, பின்ன என்னவாம்?”

“அது வியாபாரத் தந்திரமாகக் கூட இருக்கலாம், எதற்கும் ஒரு முறை சரிபார்த்து வாங்குவதுதானே நலம்,... நான் வேறுநாட்டுப் பொருட்களை வெறுக்கவில்லை, அதே சமயத்தில் பொருளாதார ரீதியாக நொறுங்கிப் போய் இருக்கும் இத்தாலிக்கு என்னால் முடிந்த சிறு உதவி~அவள் சொல்லிக்கொண்டிருக்கும்பொழுதே, எனது ஐபோனை எடுத்து, வேறு சில பார்கோடுகளைத் தேடிவிட்டு

”இனிமேல் 479 என்ற எண்ணையும் நினைவில் வைத்துக்கொள்”

“இந்த எண்ணில் இருக்கும் பொருட்களையும் வாங்கவேண்டுமா ...”

“இல்லை இல்லை... வாங்கக்கூடாது ... ரத்தத்தில் தோய்ந்த பொருட்களை நீ வாங்க மாட்டாய் என எனக்குத் தெரியும்”

“இது எந்த நாட்டின் குறி எண்கள்”

“இலங்கை ... ”

Monday, January 23, 2012

நான்காவது பரிமாணம் - சிறுகதை

என்னமோ தெரியவில்லை, இத்தாலி வந்ததில் இருந்து அம்முவின் நினைவுகள் அதிகமாகிக்கொண்டே இருக்கின்றது. கடந்த இரண்டு நாட்களில் அவளின் பெயரை கூகுளில் பத்துத் தடவைகளாவது தேடி இருப்பேன். அவளின் பெயரும் படிப்பும் தனித்துவமானவை... எத்தனைத் தேடியும் என்னுடைய ஆராய்ச்சிக்கட்டுரையில் நன்றித் தெரிவித்தப் பக்கத்தைத் தவிர வேறு எங்குமே அவளின் பெயர் இல்லை.-... மூன்று வருடங்களில் லிங்டின் தளத்திலாவது இருக்க மாட்டாளா என்ற ஒரே நப்பாசைதான் ... ஒரு வேளை நேரத்தை நிறுத்தக் கூடிய ஆற்றல் எனக்கு இருந்தால், செப்டம்பர் 3, 2009 ஆம் ஆண்டோடு நிறுத்தி இருப்பேன். அன்றுதான் நான் அவளுடன் பேசிய கடைசி தினம். எத்தனைக் கெஞ்சியும் அவளின் பெற்றோர் பேச்சை மீறமாட்டேன் என்று விலகிப்போய்விட்டாள். பெண்கள் தொடர்புகளைத் துண்டித்துக் கொண்டால், மிச்சமீதின்றி அத்தனையும் துடைத்து எடுத்தது போல, இருந்த சுவடே இல்லாமல் மறைந்துவிடுவார்கள். அவளை நினைவூட்டும் நபர்களை நானும் தள்ளிவைத்தேன் ... தள்ளிவைத்தலில் பலப் பாடல்களும், ஏன் உணவுப்பழக்கங்கள் கூட உள்ளடங்கிப் போயின.

இதோ அவளின் நினைவுகளை சுப்ரமணியபுரத்தில் வரும் இளையராஜாப் பாட்டுடன் ஆளரவமற்ற , ரோம் நகரத்துப் புறநகர்ப் பகுதிகளில் பொட்டல் திடலில் மறுவாசிப்பு செய்து
கொண்டிருக்கின்றேன். எப்படியாவது அம்முவைக் கண்டுபிடித்துவிட வேண்டும், கடைசியாக அவளைப் பற்றிக் கேள்விப்ட்டது, இரட்டைக் குழந்தைகளுக்கு தாயாகி இருக்கின்றாள் என.
விபரத்தை சொன்ன முன்னாள் அலுவலகத் தோழியை ஒட்டு மொத்தமாக நட்பு வட்டாரத்தில் இருந்து நீக்கி இருந்தேன். முதலில் அந்தத் தோழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற
எண்ணத்தோடு, இயற்கையின் உந்துதலை கழிக்க, நமது ஊர்ப்புறங்களில் இருக்கும் பாழடைந்த கட்டிடத்தைப்போலக் காணப்பட்ட கூரையில் சுவர்களின் பின்னால் ஒதுங்கினேன்.

”பலப்பேர் வந்து போகின்ற தபால் நிலையத்திற்கு முன்னால் சிறுநீர் கழிக்கின்றாயே உனக்கு அறிவில்லையா “ என ஆங்கிலத்தில் ஒரு குரல் கேட்டது. இத்தாலியில் அதுவும் இந்த
இடத்திலா... எனது பேராசிரியர் வந்த முதல் நாளே சொன்னார், தனியாக எங்கும் தெரியாத இடங்களுக்கு செல்லவேண்டாம் என்று.. நான் கேட்டால்தானே....

“இல்லை இல்லை... நிறுத்திவிட்டேன். தாங்கள் யார்” குரலிலும் உடலிலும் தானாகவே நடுக்கம் வந்து சேர்ந்தது. அழுக்கு உடைகளுடன், நீண்ட தாடி, தலைமுடியுடன் ஒருவர்
மற்றொரு சுவற்றின் பின்பக்கத்தில் இருந்து வெளிவந்தார். ராணுவத்தின் உடையைப்போல ஒன்றை அணிந்திருந்தார், தோராயமாக 80 வயது இருக்கும்.

“அட ... இந்தியனா ... ~ என கண்களைச் சுருக்கி என்னைப் பார்த்து வியப்பு மேலிட, மேலும் கீழும் பார்த்தார். எனக்கு இரண்டு ஆறுதல்கள், கையில் இருப்பதைப் பிடுங்கிக் கொள்ளும் வழிப்பறித் திருடன் இல்லை. பேய்களும் பிசாசுகளும் இந்தியனா என ஆச்சரியமாக கேட்டதாக எங்கும் படித்ததில்லை.

“ஆமாம், தமிழ்நாட்டில் இருந்து வருகின்றேன்”

“எனக்கும் ஒரு தமிழ் நண்பன் இருந்தான், அதோ அந்தக் கால்வாயைக் கடக்கும்பொழுது, அச்சு நாட்டுப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டான்” என அந்தக்காலத்து ஆங்கிலத்தில்.

”ஓ நீங்கள் இரண்டாம் உலகப்போரில் பங்கேற்றவரா”

“ஆமாம் .... கனடாவில் இருந்து வந்த படையணிகளைச் சேர்ந்தவன், இத்தாலியை நாஜிக்களிடம் இருந்து மீட்டதில் உங்கள் இந்திய வீரர்களுக்கும் பங்கு உண்டு”

“படித்திருக்கின்றேன், கிட்டத்தட்ட 30 ஆயிரம் நபர்களுக்கு மேல் இந்திய துணைக்கண்டத்தைச் சேர்ந்தவர்கள் இத்தாலியப் போர் முனைகளில் உயிரிழந்திருக்கின்றனர்” அந்த
முதியவருடனான உரையாடல் எனக்கும் தேவையாக இருந்தது. அம்முவின் சோக நினைவுகளில் இருந்து கொஞ்சம் ஆசுவாசப்படுத்தியது.

என்னைப்பற்றி விசாரித்தார். கணினிப் பற்றி எல்லாம் அவர் அறிந்திருக்கவில்லை. இந்த நேரத்தில் இங்கே எதற்கு என அவர் என்னிடம் கேட்ட அதே கேள்வியை அவரிடம் திரும்பக்
கேட்டேன்.

“தபால் நிலையத்திற்கு தபால்களைப்போட வந்தேன்”, கையில் சில உறையிடப்பட்ட கடிதங்களையும் வைத்திருந்தார். நான் சிறுநீர் அடித்த இடத்திற்கு பத்தடித் தள்ளி சன்னல்
அமைப்பாக இருந்திருக்க வேண்டிய இடத்திற்கு அப்பால் கடிதங்களைப்போட எத்தனித்தவரிடம்,

“ஐயா, தபால் பெட்டியில் தான் போடவேண்டும், இங்கு போட்டால் தபால்கள் போகாது, என்னிடம் கொடுங்கள் நகரத்திற்கு செல்லும்பொழுது நான், பெட்டியில் போட்டுவிடுகின்றேன்”

“அது சரிதான், போக வேண்டிய இடத்திற்குப்போகும், போக வேண்டிய காலக்கட்டத்திற்குப் போகுமே,,,, இந்த ராணுவ தபால் நிலையமே சேரவேண்டியவர்களுக்குச் சேர்ப்பிக்கும்” என
தபால்களை சன்னலில் எறிந்துவிட்டு எதுவும் பேசாமல் எதிர்ப்பக்கம் நடந்துபோனார். ஒரு வேளை மனக்கிறுக்குப்பிடித்தவராக இருக்கக்கூடும் என நானும் மாணவர் விடுதியை நோக்கி
நடக்கலானேன். அடுத்த இரண்டு நாட்கள் படிப்பிலும், அம்முவிற்கும் எனக்கும் பொதுவாக இருந்த நண்பர்களைத் தேடுவதிலேயே காலம் கழிந்தது. ஒரு சிலரைக் கண்டுபிடித்து,
அவர்களிடம் தான் அவளைச் சந்திக்க விரும்புவதாகவும் என்னுடைய இத்தாலிய முகவரியை அவளுக்குத் தெரிவித்துவிடவும் கேட்டுக்கொண்டேன்.


வேறொரு இளையராஜாப்பாடலுடன் மீண்டும் முந்தையப் பகுதிக்கு நடைபயிலப் போனபொழுது அந்த முதியவரும் அவரின் கடிதங்களும் நினைவுக்கு வந்தது. கடிதங்களை எடுத்து சரியான தபால் பெட்டியில் போட்டுவிடலாம் என அந்தக் கட்டிடத்தில் கடிதங்களைத் தேடினேன். கலைந்து கிடந்த சில உறைகளை சேகரித்துக் கொண்டிருந்த பொழுதுதான்
கவனித்தேன். அனைத்திலும் 43 ஆம் ஆண்டு , இங்கிலாந்து ராணியின் படம் போட்ட தபால் தலை ஒட்டப்பட்டிருந்தது. இத்தாலிய முகவரிக்கு கடிதம் எழுதப்பட்டு கனடாவில்
இருந்து அனுப்பப்பட்டிருந்தது.அந்த முதியவர் வயதின் மூப்பினால் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று உறுதியாக நம்பினேன். இரண்டாம் உலகப்போர் காலக்கட்ட கடிதங்கள்,
அரியப்பொக்கிஷங்கள், ஏலத்திற்கு விட்டால் எப்படியும் கோடி ரூபாய் பெறுமானம் பெறும். அடுத்த மூன்று வருட படிப்பைப் பிரச்சினை இன்றி முடித்துவிடலாம் என மனம்
கணக்குப்போட்டது. ஒரு கடிதத்தை படிக்கப் பிரிக்க , முதுகில் மென்மையான அடி விழுந்தது. திகிலுடன் திரும்பிப்பார்க்க, முதியவர் கோபமாக என்னிடம் இருந்து கடிதங்களைப்
பிடுங்கிக்கொண்டார்.

“அடுத்தவர்களுக்கு வந்தக் கடிதத்தைப் பிரித்துப் படிப்பது அநாகரிகம்” என்றபடி, கையில் கொண்டு வந்திருந்த வேறு கடிதங்களை சன்னலில் எறிந்துவிட்டு அவரின் பாதையில்
திரும்பிப்போனார்.

“பைத்தியக்கார கிழவன்~ என்று மனதில் நினைத்தபடி, புதிதாக அவர் எறிந்த கடிதங்களைப் பொறுக்குகையில் ஒரு அதிர்ச்சிக் காத்திருந்தது. எதிலும் தபால் தலைகள் ஒட்டப்படவே
இல்லை. புத்தம் புதிதாக கனடிய முகவரிக்கு எழுதப்பட்ட கடிதங்கள். மறுநாள் விடியற்காலையிலேயே அந்த கட்டிடத்திற்கு வந்து, நேற்று எறியப்பட்ட கடிதங்கள் கிடக்கின்றனவா எனத் தேடினேன். தபால் தலையில்லாமல் எறியப்பட்ட ஒன்றுகூட
இல்லாமல் , புதிய கடிதங்கள் கிடந்தன தபால் தலைகளுடன், ஆனால் 44 ஆம் ஆண்டு அச்சிடப்பட்டு. கண்கள் சொருக கீழே சரியப் போனவனை அந்த முதியவர் மீண்டும்
கைதாங்கலாகப் பிடித்துக் கொண்டார். மனதும் உடலும் தெளிவடைந்தபின்னர்,

“அவரிடம் நேரிடையாகவே கேட்டேன், நீங்கள் கடந்த காலத்திற்கா கடிதங்கள் எழுதுகின்றீர்கள்”

“எதிர்காலத்தில் போய் சேரக்கூடிய கடிதங்களை நம்மால் அனுப்ப முடியும் பொழுது, ஏன் கடந்த காலத்திற்கு அனுப்ப முடியாது, இந்த ராணுவ தபால் நிலையம் அந்த சேவையை
எனக்கு கடந்த 70 வருடங்களாக செய்துவருகின்றது ... வேண்டுமானால் நீ கூட முயற்சி செய்து பாரேன்” என்று சித்தர் வாக்கு போல சொல்லிவிட்டு தனது கடிதங்களுடன் அந்த
இடத்தை விட்டு நகர்ந்தார்.

அந்த இடம் அமானுஷ்யமாக திகிலூட்டினாலும், அம்முவிற்கு 2009 துவக்கத்தில் கடிதத்தை எழுதி இந்த கட்டிடத்தில் போட்டால் என்ன எனத் தோன்றியது. அன்று இரவே, அம்முவின்
பிரிவிற்கு சில மாதங்களுக்கு முன்னர் நடந்த சிலத் தென்றல் வருடும் சம்பவங்களை நினைவில் கொண்டு, அந்தக் காலக் கட்டத்தில் எழுதுவதைப் போலவே ஒரு கடிதம் எழுதி,
அவளின் அந்நாளைய அலுவலக முகவரியுடன் ,மறுநாள் அந்த கட்டிடத்தில் போட்டுவிட்டு வந்தேன், பத்து நாட்கள் நடையாய் நடந்து எனக்கு அம்முவிடம் இருந்து ஏதேனும் பதில் வந்து இருக்கின்றதா என எதிர்ப்பார்ப்பதிலேயே கழிந்தது. அந்த முதியவரும் தென்படவில்லை, அவருக்கான கடிதங்களும் அங்கே காணப்படவில்லை. இரண்டு வாரமாகியும் எந்தக் கடிதமும் எனக்கு வரவில்லை. ஒருவேளை எனக்கு வந்த கடிதத்தை இந்தக் கிழவர் எடுத்துக் கொண்டு போய் இருப்பாரோ என சந்தேகமும் ஏற்பட்டது. 15 ஆம் நாள் நம்பிக்கை கைவிடாமல், கடிதம் வந்திருக்கிறதா, எனப் பார்க்க போகையில் கிழவர் எதிரில் வந்தார்.

“எனக்கு வந்த கடிதம் ஏதேனுமொன்றை நீங்கள் எடுத்துச் சென்றுவிட்டீர்களா” எனப்பாவமாய் கேட்டேன்.

மையமாய் சிரித்துவிட்டு, ”உனக்கான தபால்கள் வந்து சேருமிடம் உனது இல்லத்திற்கு அருகில் இருக்கும் தபால் நிலையம் தான். இங்கு அனுப்ப மட்டும்தான் முடியும். , நாளை அங்கு போய் கேள், ஒரு வேளை வந்து இருக்கலாம்”

மறுநாள், உடைந்த இத்தாலியத்தில் என் வீட்டு முகவரிக்கு ஏதேனும் தபால்கள் வந்து இருக்கின்றனவா எனக்கேட்டேன்.... உள்ளேப் போய் சில நிமிடங்கள் கழித்து வந்த தபாலதிகாரி,

ஒரே ஒரு தபால் மட்டும் வந்திருக்கின்றது எனக் கையில் கொடுத்தார். தபால் தலையின் அச்சிடப்பட்டத் தேதியைப் பார்த்தேன்... கருப்புமை விரவி வருடம் தெரியவில்லை....
அனுப்புனர் முகவரி இல்லை, உறையின் மேல் இருந்த கையெழுத்து அம்முவினதுதான்.

அன்புடன் கார்த்திக்கிற்கு,

அம்மு எழுதிக் கொண்டது... நலம் நலமறிய ஆவல்........

எனக் கடிதத்தைப் பிரித்துப் படிக்கலானேன்.

----------

Friday, January 20, 2012

விவிஎஸ். லக்‌ஷ்மண்

1998 ஆம் ஆண்டு, ஷார்ஜாவில் இந்திய அணிக்கு இரண்டு இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டன. ஒன்று ஆட்டத்தில் வெற்றி பெறுவதற்கு, மற்றொன்று இறுதிப்போட்டிக்கு ஓட்டங்கள் விகித அடிப்படையில் தகுதி பெறுவதற்கு,,, இரண்டில் எதையுமே அடைய விட மாட்டோம் என ஆஸ்திரேலியா கடினமான இலக்கை நிர்ணயிக்கிறது. சோம்பலுக்கும் சொதப்பலுக்கும் பெயர் போன, 90களின் இந்திய அணி 138 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக்கொண்டிருந்தது. அதன் பின்னர் தான் கதையே , அன்றிரவு ஏற்பட்ட மணற்புயலைக்காட்டிலும் பரபரப்பாக மறுநாள் பேசப்பட்டது டெண்டுல்கரின் சூறாவளித்தனமான ஆட்டம். டெண்டுல்கர் மட்டுமே பேசப்பட்டார்.... மறு முனையில் உறுதியாகவும் உறுதுணையாகவும் நின்ற விவிஎஸ் லக்‌ஷ்மணைப் பற்றி மக்கள் பேசவே இல்லை. டெண்டுல்கருடன் இணைந்து இணையாட்டமாக 104 ஒட்டங்கள் எடுத்து ரன்ரேட் அடிப்படையில் தகுதிப் பெற செய்ததில் கண்டிப்பாக லக்‌ஷ்மணுக்கு கால்வாசிப் பங்காவது உண்டு. இத்தனைக்கும் லக்‌ஷ்மணுக்கு மூன்றாவது ஒரு நாள் ஆட்டம்.

கடைசி 15 வருடங்களில் தொடர்ந்து கத்தித் தொங்கிக் கொண்டே இருப்பது லக்‌ஷ்மணினின் கழுத்துக்குத்தான் ... அணியில் தடகளப்பு சரியில்லையா.... தூக்கு லக்‌ஷ்மணை, பந்து வீச்சாளர்கள் சரி இல்லையா... லக்‌ஷ்மணை தூக்கிவிட்டு மேலதிக பந்துவீச்சாளரை சேருங்கள் ...என்னது இந்தியா தோற்றுவிட்டதா ... லக்‌ஷ்மணை எல்லாம் இன்னும் ஏனப்பா வைத்திருக்கிறார்கள் ... இந்தப் பல்லவியை லக்‌ஷ்மண் ஆடத்தொடங்கிய நாள் முதல் இன்று வரை கேட்கலாம். இந்திய அணியின் மறுமலர்ச்சிக்கு கங்குலியின் தலைமைப் பண்புகள் எந்த விதத்தில் உதவியதோ அந்த அளவிற்கு லக்‌ஷ்மணது நிதானமான கோல்கத்தா 2001 டெஸ்ட் ஆட்டமும் இந்தியக் கிரிக்கெட்டிற்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த டெஸ்ட் போட்டிகளுக்கே புதுப் பரிமாணத்தைக் கொண்டு வந்தது. அற்புதங்கள் அடிக்கடி நிகழ்த்தப்பட்டால் அவை சாதாரண நிகழ்வுகள் ஆகிவிடும். லக்‌ஷ்மணால் அந்த அளவிற்கு மீண்டும் ஒரு ஆட்டத்தைக் கொண்டு வர இயலாவிட்டாலும், அந்த ஆட்டத்தின் அடர்த்திக்கு நெருக்கமாக பல ஆட்டங்களில் ஆடி வென்றோ அல்லது அணியைத் தோல்விகளில் இருந்து காத்தோ இருக்கின்றார். முதுகுவலி இருந்தாலும் பொறுத்துக்கொண்டு, புறமுதுகிட்டு ஓடிப்போன ஆட்டக்காரர்களைப்பற்றி நினையாமல் இஷாந்த் சர்மாவுடனும் கடைசியில் பிரக்யான் ஓஜாவுடனும் வெற்றிக்கான இலக்கை அடைய அவர் எடுத்த ஓட்டம் வெறு 76 ரன்களாக இருந்தாலும் அது 281 ரன்களுக்கு எந்தவகையிலும் குறைந்தது இல்லை.ஏனோதானோவென்று லக்‌ஷமண் இந்திய அணியில் இடம்பெறவில்லை, வலுவாக முதல்தர ஆட்டங்களில் பிரகாசித்து, வெகுவான ஓட்டங்களை எடுத்துத்தான் உள்ளே நுழைந்தார். ரஞ்சிப்போட்டிகளில் இரண்டு முச்சதங்களை அடித்ததோடு மட்டுமல்லாமல், தொடர்ந்து 9 ஆட்டங்களில் சதமடித்து தனது இருப்பை தேர்வாளர்களுக்குக் காட்டிக்கொண்டே இருந்தார். கடவுள்களும் மஹாராஜாக்களும் இருந்த இந்திய அணியில் முழுக்க முழுக்க தனது விடாமுயற்சியாலும், தொடர்ந்த அர்ப்பணிப்புடனும் அணியில் இருந்து வருபவர்.

96 ஆம் ஆண்டும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக டெஸ்ட் ஆட்டங்களில் அறிமுகமான லக்‌ஷ்மண் முதல் ஆட்டத்திலேயே அரை சதத்தைக் கடந்தார். இவர் அணில் கும்ப்ளேவுடன் இணைந்து எட்டாவது விக்கெட்டிற்கு எடுத்த 56 ஓட்டங்கள் கடைசியில் இந்தியா வெற்றியைப் பெற மிகப்பெரும் காரணமாகும். கடைவரிசை ஆட்டக்காரர்களை கண்ணியமாக வழி நடத்தி, தேவைப்படும் ஓட்டங்களை எடுக்க வைப்பதில் லக்‌ஷ்மண் எப்பொழுதுமே கெட்டிக்காரர். பின்வரிசை ஆட்டக்காரர்கள் லக்‌ஷ்மணுடன் ஆடும்பொழுது, தன்னம்பிக்கையுடன் ஆடுவதைக் கவனித்து இருக்கலாம். மத்திய வரிசை ஆட்டக்காரரான இவரை, அணியின் துவக்க ஓட்டக்காரராக பலிகடா ஆக்கப்பட்டார். லக்‌ஷ்மணுக்கு விருப்பம் இல்லை என்றாலும் துவக்க ஆட்டக்காரராக சித்துவுடனும் ரமேஷுடனும் சில ஆட்டங்கள் களமிறங்கினார். சில அரைசதங்களை எடுத்தபோதிலும், இவரின் சிட்னி ஆட்டம் இவரைக் கவனிக்க வைத்தது. இவர் எடுத்த 167 ஓட்டங்கள் தொடர்ந்த ஒரு நாள் போட்டிகளுக்கான அணியில் இடம்பெற வைத்தது. ஒரு நாள் போட்டிகளில் சோபிக்காவிட்டாலும், சில டெஸ்ட் போட்டிகளுக்குப்பின்னர் இந்தியா வந்த ஆஸ்திரேலியாவை நொங்கு எடுத்த 281 ஓட்டங்கள் இவரின் இரண்டாவது சதமானது,

ஆரம்பகால விவிஎஸ் லக்‌ஷ்மணினின் பேட்டியைக் காண http://www.espncricinfo.com/ci/content/story/85437.html

ஆறு ஒருநாள் சதங்கள் , இரண்டாயிரம் ஓட்டங்களுக்கு மேல் எடுத்தும் , ஒரு உலகக்கோப்பைப் போட்டிகளில் கூட ஆடாத பிரபல வீரர் யார் என வினாடிவினா வகையில் கேள்வி கேட்கப்பட்டால் அதன் விடை விவிஎஸ் லக்‌ஷ்மண், ஓடத் தெரியாதவர், ஆடத்தெரியாதவர் என்றெல்லாம் எகத்தாளமாகப் பேசப்பட்டாலும், பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை பாகிஸ்தானிலேயே கைப்பற்றக் காரணமாக இருந்தவர் விவிஎஸ் லக்‌ஷ்மண். லாகூரில் நடை பெற்ற ஐந்தாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் சதமடித்து அந்த ஆட்டத்தையும் தொடரையும் வெற்றி பெறச்செய்தார். மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக இந்தியா 325 இலக்கை வெற்றிகரமாக எட்டிய அகமதாபாத் ஒருநாள் ஆட்டம், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான சிட்னி ஒருநாள் ஆட்டசதம் என பல சிறப்பான ஆட்டங்களை ஆடியிருந்த போதிலும் ஒவ்வொரு ஆட்டத்திலும் தான் எடுக்கும் 20 களையும் 30 களையும் சதமாகவோ அரைசதமாகவோ மாற்றமுடியாமல் போகும்பொழுது , நன்றாக ஆடி இருந்த போதிலும் சராசரிகளையும் சதங்களையும் வைத்து ஆட்டத்திறனை மதிப்பிடும் இந்தியக் கிரிக்கெட் மனோபாவத்தில் ஒருநாள் போட்டிகளில் இருந்து 2006 ஆம் ஆண்டு ஒட்டு மொத்தமாக நீக்கப்பட்டார்.

எல்லா சாபங்களிலும் ஒரு மறைமுக வரம் இருக்கின்றது. லக்‌ஷ்மணால் டெஸ்ட் ஆட்டங்களில் மேலும் நேர்த்தியாக ஆட முடிந்தது. பணிச்சுமை குறைந்தது. டெஸ்ட் ஆட்டங்கள் இல்லாதபொழுது ஓய்வு எடுக்காமல் பயிற்சிகளோ அல்லது ரஞ்கிப்போட்டிகளிலோ தொடர்ந்து ஆடி வருபவர். வலைப்பயிற்சிகளைக் காட்டிலும் , உண்மையான ஆட்டங்கள் ஆடும்பொழுதே சிறந்த பயிற்சி கிடைக்கின்றது, அது உள்ளூர் போட்டிகளாக இருந்த போதிலும் கூட..... யார் வீசினாலும் சில மைக்ரோ வினாடி கவனம் சிதறினாலும் ஆட்டமிழக்க இருக்கும் நிகழ்தகவு அனைத்துப்போட்டிகளிலும் ஒரே அளவே....

டெண்டுல்கருக்கும் கங்குலிக்கும் திராவிட் ஏவிஎம் ராஜன் என்றால் , திராவிடிற்கு லக்‌ஷ்மண் ஏவிஎம் ராஜன். கோல்கத்தா, அடிலெய்ட் என மறக்க முடியாத டெஸ்ட் ஆட்டங்களில் இந்த இணை கலக்கி இருந்தாலும் உள்ளூர்ப்போட்டிகளிலும் அதே அளவு ஆட்டத்தைத் தருவார்கள் என்பதற்கு ஒரு உதாரணம், 2003 ஆம் ஆண்டு சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இரானிக் கோப்பை ஆட்டத்தில் வெற்றி இலக்கு 340 என மும்பையால் நிர்ணயிக்கப்பட்டபொழுது, அசராமல் சிவாஜி - திராவிடும், ராஜன் - லக்‌ஷமனும் இணைந்து வெற்றியைத் தேடித் தந்தனர். ஆட்ட விபரம் இங்கே http://www.espncricinfo.com/india/engine/match/133757.html

கடைசி 10 வருடங்களில் மறக்க முடியாத இந்திய டெஸ்ட் வெற்றிகளை எடுத்துப்பாருங்கள், அதில் லக்‌ஷ்மணது பங்கு பாதிக்குப் பாதி இருக்கும். தோல்வியின் விளிம்பில் இருந்து காப்பாற்றிய ஆட்டங்களை எடுத்துக் கொள்ளுங்கள் அதிலும் லக்‌ஷமணது பங்கு இருக்கும். 37 வயது ஆகி இருந்தாலும் , கடந்த 6 வருடங்களாக ஒருநாள் போட்டிகளில் ஆடததால் , லக்‌ஷமணது ஆட்டத்திறனின் நீட்டிப்பு அதிகமே.... இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் ஊடகங்களும் எவ்வளவு மறதித் திறன் உடையவர்கள் என்பதற்கு உதாரணம், சமீபத்தில் நடந்து முடிந்த மேற்கிந்தியத் தீவுகள் டெஸ்ட் போட்டிகளில் மிகப்பெரும் சதத்தை அடித்தவர் லக்‌ஷமண்.

சிலர் சொகுசாக அனைத்தும் தனக்கு சாதகமாக இருந்தால் தான் ஆடுவார்கள், வெகுசிலர் எட்ட முடியாத இலக்கு, போராடினால்தான் வெற்றி , கழுத்துக்கு மேலே கத்தி, ஏழு கடல் ஏழு மலைத் தாண்டித்தான் சாதனையை அடைய முடியும் என்றால் புத்துணர்ச்சியுடன் ஆடுவார்கள். டெஸ்ட் ஆட்டங்களை தொடர்ந்து கவனித்துக்கொண்டிருப்பவர்களுக்கு, எப்படி லக்‌ஷ்மண் ஒவ்வொரு சறுக்கலிலும் மீண்டு வந்தார் என்பது தெரியும்.

தன்னை ஏமாற்றி பவுல்ட் ஆக்கிவிட்டார்களோ என முழிக்கும் அதே லக்‌ஷ்மண் , அடுத்த ஆட்டத்தில் எதிர்ப்பக்கம் போகும் பந்தை மணிக்கட்டை சுழற்றி கால்பக்கம் அடித்து நம்மை மெய் மறக்கச்செய்வார். சிலர் வைனைபோன்றவர்கள், காலம் ஆக ஆகத்தான் அவர்களின் மதிப்பும் பெருமையும் கூடிக்கொண்டேப்போகும். வாழ்க்கைக்கு நெருக்கமான விளையாட்டான டெஸ்ட்போட்டிகளில் வயதைக் காரணம் காட்டி ஒருவரைக் கீழேத் தள்ளிவிடுவது டெஸ்ட்போட்டிகளின் மூலம் நாம் கற்கும்பாடங்களுக்கு அழகல்ல.... நிச்சயம் பத்தாயிரம் டெஸ்ட் ஓட்டங்களை எடுத்தப்பின்னர்தான் லக்‌ஷமண் ஓய்வு பெறவேண்டும் , அப்பொழுதுதான் அவருக்கும் அவரின் பங்கிற்கும் ஒரு முழுமைத்துவம் கிடைக்கும்.

“நிக்காதடா.... வேடிக்கைப்பார்க்கதேடா ...ஓடுறா டேய் “ என அன்று ஓஜாவிடம் கத்தியது போல, உமேஷ் யாதவிடமோ அஷ்வினிடமோ அணிக்காகவும் அணியின் வெற்றிக்காகவும் லக்‌ஷ்மண் மீண்டும் ஒருமுறையல்ல, பலமுறை சத்தம் போட வேண்டும் என்பதே டெஸ்ட் கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பம்.

Thursday, January 19, 2012

சிக்ஸர் சித்துவும் பெருந்தகையாளர் கபில்தேவும் - மறக்க முடியாத மெட்றாஸ் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி - 1987

சென்னை-மெட்றாஸ் , கிரிக்கெட் இவை இரண்டும் தேனும் பாலும் போல.... ஒன்றிணையும்பொழுது ரசிகர்களுக்கு திகட்டத்திகட்டக் கொண்டாட்டந்தான்... பெரும்பான்மையான சமயங்களில் காப்பியின் தொண்டைக்குழித் தித்திப்புக் கசப்பைப்போல வருத்தமான தோல்விகள் கிடைக்கப்பெறும் இடம் சென்னை சேப்பாக்கம் மைதானம்., இருந்த போதிலும் தோல்வியோ வெற்றியோ ஆட்டத்தை ஆட்டமாகப் பார்த்து கிரிக்கெட்டை நேசிப்பவர்கள். சொற்ப ஓட்டங்களில் தோல்வியுற்ற பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியாக இருக்கட்டும், சையத் அன்வர், அன்றைய உலகசாதனை ஓட்டங்கள் எடுத்த போதாகட்டும், எதிரணியினரைப் பாராட்ட சென்னை ரசிகர்கள் தவறியதேக் கிடையாது.

வெற்றியும் இல்லாமல் தோல்வியும் இல்லாமல் டிராவும் இல்லாமல், டையில் முடிவுற்ற ஆஸ்திரேலியா - இந்திய டெஸ்ட் ஆட்டம் நடைபெற்று ஒருவருடம் முடிந்த நிலையில், 1987 ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் துவங்குகிறது. இந்தியாவிற்கான முதல் ஆட்டம் மெட்றாசில்.... எள்ளு எண்ணெய் ஆகும் அளவிற்கு ரசிகர் கூட்டம்.... நாணய சுண்டலில் வென்ற இந்திய அணித்தலைவர் கபில்தேவ் ஆஸ்திரேலியாவை முதலில் ஆட பணிக்கிறார். ஜெஃப் மார்ஷ் சதமடிக்க, டீன் ஜோன்ஸ் அதிரடியாக ஆட , அன்றையக் காலக் கட்டங்களில் எட்ட முடியாத இலக்காக 271 ஓட்டங்கள் வெற்றி பெற நிர்ணயிக்கப்படுகிறது.சோம்பேறித்தனமான ஆட்டத்திற்குப் பெயர் பெற்ற, கவாஸ்கர் அதிரடியாக ஆட, அரங்கமே ஆச்சரியத்தில் மூழ்கியது. வழக்கமாக விரைவாக ஆடும் ஸ்ரீகாந்தை விட கவாஸ்கர் குறைந்த பந்துகளில் 37 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்க, பின் வருகிறார் நவ்ஜோத் சிங் சித்து. அவருக்கான முதல் ஆட்டம். சித்துவும் ஸ்ரீகாந்தும் ஆஸ்திரேலிய பந்துவீச்சை பிளக்க, எளிதாக இந்தியா வெற்றியைப் பெற்றிவிடும் என்ற நிலையில் ஸ்ரீகாந்த் 70 ஓட்டங்கள் எடுக்க ஆட்டமிழந்தாலும், சித்து 5 சிக்ஸர்களுடன் வான வேடிக்கைகளைத் தொடர்ந்தார். அப்பொழுதெல்லாம், சிக்ஸர் என்றால் ஒன்றோ இரண்டோ ஆட்டத்திற்கு கிடைக்கும் நிலையில் ஐந்து சிக்ஸர்கள், அதுவுமொரு அறிமுக நாயகன் அடிப்பது என்பது பெரிய விசயம். 207 க்கு இரண்டு விக்கெட்டுகள், 90 பந்துகளில் வெறும் 64 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தொடங்கியது இந்திய அணியின் தொன்று தொட்டப்பழக்கம்... சித்து, வெங்க்சர்க்கார், ரவி சாஸ்திரி, கபில்தேவ் என வரிசையாக இருக்கைக்குத் திரும்ப, கடைசி ஓவர், 6 ரன்கள் எடுத்தால் வெற்றி,,, மட்டையடிப்பது மனிந்தர் சிங் .... டை ஆன டெஸ்ட் ஆட்டத்தில் கடைசியாக ஆட்டமிழந்தது, மனிந்தர் சிங் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பந்து வீச வருவது ஸ்டீவன் வாக் ... மறு முனையில் நம்பகமான கிரன் மோரே ... அடுத்தடுத்து இரண்டு இரண்டாக நான்கு ஓட்டங்களை எடுத்த மனிந்தர் சிங் நம்பிக்கை சேர்க்கிறார். இரண்டு பந்துகளில் இரண்டு ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி,.. விட்டதைப்பிடிப்பாரா மனீந்தர் சிங்.... ஸ்டீவ் வாஹின் மிதவேகப்பந்து வீச்சில் கிளீன் பௌல்ட் .... ஆஸ்திரேலிய அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.... இதே போல மேலும் ஒரு ரன் வித்தியாச பரபரப்பான வெற்றியை 92 ஆம் ஆண்டு உலகக்கோப்பைப்போட்டியிலும் ஆஸ்திரேலியா மீள்பதிவு செய்தது.-......

சரி கிரிக்கெட் வர்ணனையெல்லாம் இருக்கட்டும், கபில்தேவ் எப்படி பெருந்தகையாளர் ஆனார் என்று கேட்கிறீர்களா !!! ஆஸ்திரேலியா ஆடும்பொழுது, டீன் ஜோன்ஸ் அடித்த ஒரு சிக்ஸர் நான்காக அறிவிக்கப்படுகிறது. எல்லைக்கோட்டின் அருகே இருந்த ரவி சாஸ்திரி பந்து தலைக்கு மேலே பறந்து எல்லைக்கோட்டைத் தாண்டிய பொழுதும், சிக்ஸர் இல்லை எனக்கூறியதை நம்பி நடுவர் டிக்கி பேர்ட் நான்கு என அறிவிக்கிறார். சாதாரணமாகவே போங்கு ஆட்டம் ஆடும் ஆஸ்திரேலியர்கள், அடித்த சிக்ஸரை சும்மா விட்டுவிடுவார்களா என்ன ... ஆஸ்திரேலிய அணி ஆட்டம் முடிந்த பின்னர், ஆட்ட இடைவெளியின் பொழுது டீன் ஜோன்ஸ் அடம்பிடித்து, அணி மேலாளர் அலன் கிராம்ப்டனை கபில்தேவிடம் பேச வைத்தனர். ஆட்டத்தை கண்ணியமாக ஆடும் கபில்தேவ், எந்த ஆட்சேபனையும் இன்றி இரண்டு ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். நான்கு ஆறாக மாற்றப்பட்டு, ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் 270 ஆக உயர்த்தப்பட்டது. கடைசியில் தோல்விக்கு அந்த பெருந்தன்மை காரணம் என சராசரி ரசிகர்களால் பேசப்பட்டாலும், அன்றைய கிரிக்கெட் ஆட்டம் இன்றும் ரசிகர்களால் நினைவுகூறப்படுவதற்கு காரணம் கபில்தேவின் பெருந்தன்மை..... இன்று நன்னடத்தைகளைப் பற்றியும் அழுகுனி ஆட்டங்களைப் பற்றியும் வாய்கிழிய பேசும் ரவிசாஸ்திரியும் டீன் ஜோன்ஸும் எப்பொழுதும் கபில்தேவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விசயங்கள் ஏராளமாக இருக்கின்றன. அதுவரை போகிற வருகிறவர்களால் எல்லாம் அடித்து நொறுக்கப்பட்ட ஆஸ்திரேலிய அணி, வீறுகொண்டு அடுத்த 30 வருடங்களுக்கு அசைக்கமுடியாத கிரிக்கெட் சக்தியாக மாறிய வித்து இந்த மெட்றாஸ் ஒரு நாள் போட்டியில் தான் விதைக்கப்பட்டது. எழுச்சிப் பெற்ற 1987 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா வென்றது அதற்குபின் வந்த வெற்றிகள் எல்லாம் வரலாறு ஆனது.
ஆட்ட விபரங்களை இங்கே காணலாம் http://www.espncricinfo.com/ci/engine/match/65093.html

ஜின்னா - உலகத்திரைப்படம் - ஒரு பார்வை

காயிதே ஆசாம் முகமது அலி ஜின்னா, இவரின் பெயரைக் கேட்டாலே அன்றைய பிரிட்டிஷ் - இந்திய அரசியல்வாதிகளுக்கு சிம்ம சொப்பனம். இன்றும் கூட ஜின்னாவைப் புகழ்ந்தால் இந்திய தேசியத்தின் எதிரி எனக் குற்றஞ்சாட்டப்படவும் வாய்ப்புகள் உண்டு. இந்திய துணைக்கண்டத்தில் ஒரு பகுதி மக்களுக்கு நாட்டைத் துண்டாடிய வில்லன், மறுபகுதி மக்களுக்கு வரலாற்று கதாநாயகன், அரசியல் வரலாற்று நோக்கர்களுக்கு ஒரு புதிர். ஒரு வேளை முகமது அலி ஜின்னா , இந்தியாவின் நேருவைப்போல அதிக காலம் ஆண்டிருந்தால் பாகிஸ்தான் ஒரு நவீன, மக்கள் நலன் நாடாக உருவெடுத்து இருக்கும் எனக் கூறும் அரசியல் நிபுணர்களும் உண்டு. ஒருங்கிணைந்த இந்தியாவிற்கான, தனது 14 அம்சத் திட்டம் ஏற்றுக்கொள்ளப்படாமல் அரசியலில் வேண்டுமென்றே தனிமைப்படுத்தப்பட்டபொழுது, தனது வீச்சைக் காட்டவேண்டும் என்று வீம்பாக பாகிஸ்தானிய கோஷத்தை எடுத்தவர், தனக்கு பிரதமர் பதவி கிடைக்காது என்ற கோபத்தில் பிரிவினை வாதத்தை கையில் எடுத்துக்கொண்டார் என்ற குற்றச்சாட்டுகளும் உண்டு. காந்தி கதாநாயகன் , நேரு துணை கதாநாயகன் , ஜின்னா வில்லன் என திரைப்படங்களில் காட்டப்படும் கதாபாத்திரக் கட்டமைப்புகளில்தாம் நாம் வரலாற்றில் படித்திருப்போம். ஸ்வீடன் வந்தபின்,
ஒரு திட்ட மேலாண்மை பாடத்தில் தலைமைப்பண்புகளை பற்றி ஒரு தலைவனை உதாரணமாகக் கொண்டு கட்டுரை எழுதவேண்டியிருந்தது. பெரும்பான்மையான பாகிஸ்தானிய மாணவர்கள் எழுதியது முகமது அலி ஜின்னாவைப் பற்றியதுதான். கட்டுரைகள் மிகையாக எழுதப்பட்டிருந்தாலும், சிலக்கட்டுரைகளை, படித்தபொழுது சுவாரசியமான மனிதராகப் பட்டார்.எனக்குத் தெரிந்திருந்த ஜின்னா, காந்தி திரைப்படத்தில் சிகரெட் பிடித்தபடி, முகத்தைக் கடுமையாக வைத்திருக்கும் இந்திய நடிகர் அலிக்பதமஸி தான். காந்தி திரைப்படத்தில் பிரிட்டீஷ் கதாபாத்திரங்களுக்கு அடுத்தபடியாக கெட்டவராக சித்தரிக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரம் ஜின்னாவினது. காந்தி திரைப்பட உருவாக்கத்தில் இந்திய திரைப்பட வாரியமும் பங்கு பெற்று இருந்ததால் திட்டமிட்ட சேறடிப்பு இருந்ததாக ஒரு வாதம் உண்டு. சரி காந்தியைப் பற்றி திரைப்படம் உலகிற்கு வந்தாகிவிட்டது. அவருக்கு இணையான வரலாற்று நாயகன் ஜின்னாவைப் பற்றி படம் வேண்டும் அல்லவா... பொதுவாக பொழுது போக்கு அம்சங்களுக்கு நேரிடை சந்தையிலோ கள்ள சந்தையிலோ இந்தித் திரைப்படங்களை நம்பி இருக்கும் பாகிஸ்தானிய சமூகம் போர்கள், சர்வாதிகாரிகள் என அல்லல்பட்டுக்கொண்டிருக்கையில் அவர்கள் திரைப்படம் எடுக்க எங்குப்போவார்கள்.காந்தித் திரைப்படம் வெளிவந்து கிட்டத்தட்ட 16 வருடங்கள் கழித்து, பன்னாட்டு வெகுசனங்களுக்கு ஜின்னா ஒரு எதிர்மறைநாயகன் என ஸ்திரப்படுத்தியப்பின்னர், 1998 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் ஜின்னா. கலைகளின் இருப்பிடம் கல்கத்தாவில் பிறந்து, இங்கிலாந்தில் குடியேறிய ஜமீல் தெஹ்லாவி இயக்க ஜின்னா திரைப்படம் ஆங்கிலத்திலும் உருது மொழியிலும் வெளியானது. ஜமீல் தெஹ்லாவியின் முந்தையத் திரைப்படமான தெ பிளட் ஆஃப் ஹுசைன் , ஜியா உல் ஹக் அரசாங்கத்தால் பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வரலாற்று கதாப்பாத்திரங்களைத் திரையில் வடிவமைக்கும்பொழுது, தேர்ந்தெடுக்கப்படும் நாயகர்கள்-நாயகிகள் வேறு எந்த பிம்பங்களுக்குள்ளும் சிக்காதிருப்பவர்களாக இருந்தால் நல்லது. மாறாக ஜின்னாவாக நடிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் கிறிஸ்டோபர் லீ.கிறிஸ்டோபர் லீ, தேர்ந்த நடிகர்தான், அதில் சந்தேகமுமில்லை, பிரச்சினை என்னவெனில் அவர் டிராகுலா வரிசைப்படங்களில் தொடர்ந்து நடித்தவர். பொதுவாகவே தொட்டாச்சிணுங்கிகளான துணைக்கண்ட மக்கள் இதற்கு குரூரமான படங்களில்
நடித்த நடிகர், தங்களின் தலைவனாக எப்படி நடிக்கலாம் என பாகிஸ்தானிய மக்களின் ஒரு பிரிவினர் கொதித்து எழுந்தனர். அடுத்தது, ஜின்னாவின் மனைவி ரத்தன்பாய் ஜின்னாவாக நடித்தவர் - இந்திரா வர்மா. காமசூத்திரா திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர். கேட்கவா வேண்டும், பாகிஸ்தானிய அரசாங்கம், நடுவில் திரைப்படத்திற்கு வழங்கிவந்த நிதி உதவியை நிறுத்தியது. தளராத ஜமீல் ஒத்தக் கருத்து உடைய மக்களின் உதவியுடன் திரைப்படத்தை முடித்து வெளியிட்டார்.

சுயசரிதங்களைப் படமாக்கும்பொழுது எழுதப்படவேண்டிய நேரிடை திரைக்கதை இந்தத் திரைப்படத்தில் பின்பற்றப்படவில்லை என்பது மூன்றாவது கோணல். மரணமடைந்த ஜின்னாவின் ஆத்மா வானுலகிற்கு வருகிறது. இந்தித் திரைப்பட நடிகர் சசிகபூர் தான் வானுலக தேவதூதர். ஜின்னா நரகத்திற்கு அனுப்பபடவேண்டியவரா, சொர்க்கத்திற்கு வரவேண்டியவரா என சசிகபூர் தனது கணினியின் கோப்புகளில் விபரங்களைத் தேடுகிறார். சிலக்கோப்புகள் அழிந்துவிட்டபடியால், சசிகபூரும் ஜின்னாவின் ஆத்மாவும் மீண்டும் பூமிக்குப் பயணிக்கின்றனர். சசிகபூருக்கும் ஜின்னவின் ஆத்மாவிற்கும் நடக்கும் உரையாடல்கள், கடந்த கால மீள்பார்வைகளாக விரிகின்றன. படம் முழுக்க, ஜின்னாவின் வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்கும்படியாகவே ஒவ்வொரு காட்சியமைப்பும் அமைக்கப்பட்டிருப்பது மிகப்பெரும் நெருடல். போகிற போக்கில் விளக்கங்கள் இல்லாமல், முழுத் திரைக்கதையும் விளக்கங்களைச் சுற்றியே இருக்கின்றது.

ஜின்னா நாயகப்பாத்திரம் என்றால், நேருவின் பாத்திரம் எதிர்மறைப்பாத்திரமாக சித்தரிக்கப்படுகிறது. ஜின்னா - ரத்தன்பாய் காட்சிகளை விட, நேரு - எட்வினா காட்சிகள் படத்தில் அதிகம். நேரு பத்திரமாட்டுத் தங்கமல்ல, என அவரை வெளிச்சப்படுத்தி,
ஜின்னாவை உயர்த்திக் காட்டும் கதைப்போக்கு இருப்பது ஒரு சறுக்கல். எந்தவித ஒப்புமைகளும் இல்லாமலேயே ஜின்னா மகத்தான தலைவர் என படத்தில் காட்சிப்படுத்தி இருக்கலாம். நேருவும் எட்வினாவும் படுக்கை அறையில் அமர்ந்து பேசிக்கொண்டும் சிகரெட் பிடித்துக் கொண்டும் இருப்பதும் போன்ற காட்சியமைப்புகள் உண்மையிலேயே தைரியமானவையே. மௌண்ட்பேட்டன் மற்றும் நேரு, எட்வினாவின் கைப்பாவைகள் எனக் குறிப்புகளால் காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பது, இந்திய வரலாற்று கற்பிதங்களில் ஊறியவர்களுக்கு அதிர்ச்சியளிக்கக்கூடும்.

ஒரு காட்சியில் லியாகத் அலிகான், சிலக்கடிதங்களைக் கொண்டு வந்து ஜின்னாவிடம் கொடுத்து, இக்கடிதங்கள் நேரு எட்வினாவிற்கு இடையில் பரிமாறப்பட்டவை, இவற்றைப் பகிரங்கப்படுத்தவேண்டும் எனச் சொல்லுவார். அதற்கு ஜின்னா இந்தக் கடிதங்கள் இரு தனிப்பட்ட நபர்களுக்கு இடையிலானது, அதைப் பிரசுரிப்பது என்பது தவறு, இக்கடிதங்களை எரித்துவிடுங்கள் என கோபமாக உத்தரவிடுவார். நேருவிற்கும் ஜின்னாவிற்கும் இடையிலான நீயா நானாப் போட்டியில் ஜின்னா எத்தனைப் பெருந்தன்மையானவர் என்பதை நிருபிப்பதிலேயேப் பாதிப்படம் போகின்றது.
பலரும் அறிந்திராத ஜின்னாவின் இளமைப்பருவத்தை உள்ளபடியே கூறியிருப்பது படத்திற்கு பலம் சேர்க்கும் விசயம். முதல் மனைவி இறந்த சோகத்தில் தனித்து இருக்கும் ஜின்னா, ரத்தன்பாய் என்ற பார்சிப் பெண்ணின் மேல் ஈர்ப்பாகிறார். ரத்தன்பாய் குடும்பம் எதிர்க்க, ரத்தன்பாய் சட்டப்பூர்வ திருமண வயது வரைக் காத்திருந்து இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். அரசியல் போராட்டங்கள், அரசியல் தனிமைப்படல், மனைவியின் மேற்கத்திய வாழ்க்கை முறைக்கு ஈடுகொடுக்கமுடியாமை, மேற்கத்திய சிந்தனையோட்டம் - இஸ்லாமிய தேசிய முன்னெடுப்பு இரண்டு நேரெதிர் கருத்தாங்களுக்கு இடையில் அல்லல் படல் என இளமையான ஜின்னாவாக ரிச்சர்ட் லிண்டர்ன் அருமையாக நடித்து இருக்கின்றார்.
படத்தில் என்னைக் கவர்ந்தப் பாத்திரமும் இவரே !!!!ஆண் பெண் சமம் என, தனது தங்கை பாத்திமா தீவிர அரசியலில் ஈடுபடுவதையும், தனக்கு ஆலோசனைகள் வழங்குவதையும் ஆதரித்த ஜின்னா, முஸ்லீம் அடிப்படைவாதிகளின் எதிர்ப்பை சம்பாதிப்பதாகவும் படத்தில் காட்டப்படுகிறது. ரத்தன்பாய் இறந்த பின்னர் பாத்திமா தனது பல்மருத்துவமனையை மூடிவிட்டு, தனது அண்ணனுடனேயே வந்துத் தங்குகிறார். ஜின்னா எடுக்கும் பெரும்பான்மையான முடிவுகளில் பாத்திமாவின் பங்கும் உண்டு என்பதை திரைப்படம் பதிவு செய்து இருக்கின்றது. (பாகிஸ்தானின் இந்திரா காந்தியாக உருவெடுத்து இருக்கக்கூடியவர், பின்னாட்களில் அயுப்கானின் அடாவடி தேர்தல் தில்லுமுல்லுகளால் அதிபராக முடியாமல் போய்விட்டார். )

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு பிணங்களுடன் ரயில்கள் வந்ததைப்போல , இந்தியப்பகுதிகளில் இருந்தும் அதே அளவிற்கு பிணங்களுடன் ரயில்கள் அனுப்பப்பட்டன என்பதையும் திரைப்படம் பதிவு செய்து இருக்கின்றது. கடைசிவரை சிறையே செல்லாமல் ஒரு நாட்டை வார்த்து எடுத்தது ஜின்னாவின் சிறப்பாக சொல்லப்பட்டாலும்,, அரசாங்கத்தை எதிர்த்து செய்யப்படும் போராட்டங்களுக்கு ஜின்னா ஆதரிக்கவில்லை என்பது நெருடுகிறது. போராட்ட விதைகளே சுதந்திரத்தை அறுவடை செய்யும் என்பதில் நம்பிக்கை இல்லாமல், ஜின்னா ஒரு மேட்டிமை மேசை அரசியல்வாதியோ எனப் புரிந்து கொள்ளக்கூடிய அபாயமும் இருக்கின்றது.

திரைப்படத்தின் இறுதியில், அனைவரையும் குற்றவாளிக்கூண்டில் ஏற்றி ஜின்னா வழக்கறிஞராக வாதாடுவது போன்ற கற்பனையான நீதிமன்றக் காட்சி மேலுலகில் நடத்தப்படுவது போல காட்சிகள் இருப்பது பார்க்க நன்றாக இருந்த போதிலும் முன்பே சொன்னபடி, சுயசரிதைப்படங்களுக்கான இலக்கணக் கூறாக இல்லை. காந்தி, நேருவுடன் ஜின்னா பாபர் மசூதி இடிப்பையும் அதனைத் தொடர்ந்த கலவரங்களையும் கணினியில் பார்ப்பது போலவும், ஜின்னா கலவரங்களைச் சுட்டிக்காட்டி, இவற்றை எல்லாம் தவிர்க்கத்தான் தான் அன்றே முஸ்லீம்களுக்கு தனிநாடு கேட்டதாக சொல்வதுடனும், காந்தியும் நேருவும் மௌனமாக அதை ஆமோதிப்பதுடனும் படம் முடிவடைகிறது.

படம் முழுக்க, ஜின்னாவினது மேல் இருக்கும் அவதூறுகளைக் களையவேண்டும் என்ற இயக்குனரின் தவிப்பு சாமனிய ரசிகனுக்கும் புரிவது போல் இருப்பதுதான் படத்தின் மிகப்பெரிய பலவீனம். கட்டுப்படுத்தப்பட்ட பொருட்செலவுகளுடனுடம் படத்தைத் தயாரித்து இருந்திருந்தாலும், ஒரு திரைப்படமாக கண்டிப்பாக ஜொலிக்கின்றது. தரமான ஒளிப்பதிவு, பொருந்துகின்ற பின்னணி இசை 50 களுக்கு முந்தைய வருடங்களை மீண்டும் திரையில் கொண்டு வந்தது, நவநாகரிக , மிடுக்கான கிறிஸ்டோபர் லீ மற்றும் ரிச்சர்ட் லிண்டர்ன் ஆகியோரது நடிப்பு ஆகியனவற்றுடன் , இந்தியத் துணைக்கண்டத்தின் மாற்று அரசியல் வரலாற்றைப் பதிவு செய்த படம் வகையில் கண்டிப்பாக ஜின்னா குறிப்பிடத்தக்க திரைப்படம். காந்தி திரைப்படத்துடன் இதை ஒப்பிடுவது நியாயமானது இல்லை என்றாலும், ஒப்புமைகள் தவிர்க்கப்பட முடியாதது. படம் திரையரங்குகளில் வெளிவந்து, கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் கழித்தே ஜின்னா திரைப்படத்தின் டிவிடி-விசிடி வடிவம் வெளிவந்தது என்பதிலும் சொல்லப்படாத அரசியல்கள் இருக்கின்றன. இத்திரைப்படம் ஆங்கிலத்திலும் உருதிலும் யூடியுப் இணையதளத்தில் கிடைக்கின்றது. திரைப்பட ஆர்வலர்கள், அரசியல் விமர்சகர்கள் என அனைவரும் ஒரு முறையேனும் பார்க்க வேண்டியத் திரைப்படம். படம் பார்த்து முடிந்த பின்னர், ஜின்னா கதாநாயகன் என்று ஏற்றுக்கொள்கிறீர்களோ இல்லையோ, அவரை இனிமேல் வில்லன் என கண்டிப்பாக சொல்ல மாட்டீர்கள், அதுவே இந்தப்படத்தின் வெற்றி.

Wednesday, January 18, 2012

கவிழ்ந்த கப்பலின் கேப்டன் பிரான்சிஸ்கோ ஸ்கெட்டினோடைட்டானிக் கப்பல் கவிழ்ந்து நூறாவது ஆண்டு நினைவுதினம் நெருங்கிக் கொண்டிருக்கையில், இத்தாலிய கடற்பகுதியில் பிரம்மாண்டமான கோஸ்டா கன்கார்டியோ ( Costa Concordia) தரைத் தட்டிக் கவிழ்ந்தது. நான்காயிரத்திற்கும் அதிகமான மக்களுடன் பிராயணப்பட்டுக்கொண்டிருந்த உல்லாசக்கப்பல், சிவிட்டாவெக்கியா(Civitavecchia) என்ற இடத்தில் இருந்து புறப்பட்ட சில மணி நேரங்களில் கியில்யோ (Giglio Islands)என்ற தீவுக்கருகில் தரைத் தட்டியது. இதுபோன்ற உல்லாசக்கப்பல்களில் சிலமுறை பயணம் செய்து இருப்பதால், தனிப்பட்ட அளவிலும் இந்த விபத்து பாதித்தது.டைட்டானிக் கப்பலைப் போல பெரும் உயிர்சேதம் இல்லை என்ற போதிலும், மத்தியத் தரைக்கடலின் மிதக்கும் நகரம் என்று பெருமையுடன் அழைக்கப்பட்ட இந்த கப்பல் சாய்ந்தபடி கிடக்கும் புகைப்படங்கள் பரவலாக அதிர்ச்சி அலைகளை உருவாக்கி உள்ளது. விபத்தைக் காட்டிலும் அதிகமாக இத்தாலியில் தற்பொழுது விவாதிக்கப்படுவது கப்பல் கேப்டனின் விபத்திற்கு முன்னரும் பின்னரும் அவரால் எடுக்கப்பட்ட முடிவுகள்தாம்.இருபது வருடங்களுக்கு முன்னர், தஞ்சாவூர் வாணக்காரத் தெரு வழியாக பேருந்துகள் செல்லாது, வண்டிக்காரத் தெருவழியாகத்தான் புறநகரப்பேருந்துகள் செல்லும். ஆனாலும் மதியம் ஒரு மணி அளவில் சில சோழன் போக்குவரத்து கழகபேருந்துகள் மட்டும் ஒன்று, தனது வீட்டில் இருந்து கட்டுச்சோற்றை வாங்கவோ, அல்லது தனது உறவினர்கள் யாரையேனும் இறக்கிவிடவோ வாணக்காரத் தெரு வழியாக பயணப்படும். பேருந்துகளுக்கு சரி, கப்பல்களுக்கு ... கப்பலை ஓட்டும் குழுவினரில் ஒருவர் வசிக்கும் தீவை ஒட்டி கப்பலை செலுத்தி, உறுப்பினருக்கு மரியாதை செலுத்தும் நிமித்தம் செய்ய முற்பட்டபொழுதுதான் இந்த விபத்து ஏற்பட்டது. அகண்ட கடற்பகுதி இருந்தாலும் பொதுவாகக் கப்பல்கள் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட வழித்தடத்தில்தான் பயணப்படவேண்டும். இருந்தபோதிலும் தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் கப்பல் தலைவரின் முடிவில் பாதைகள் மாற்றப்படலாம். எதிர்வரும் அபாயத்தை அறியாமல் கரையை ஒட்டிப்போக, பெரும்பாறையில் மோதி சாய்ந்தது.

கப்பலின் கேப்டன் பிரான்சிஸ்கோ ஸ்கெட்டினோவிற்கும் துறைமுகக் கட்டுப்பாட்டு அதிகாரிக்கும் நடந்த உரையாடலில், கப்பல் கவிழ்ந்தவுடன் கப்பலையும் பயணிகளையும் அதோகதியாக விட்டுவிட்டு கேப்டன் ஓடி இருக்கிறார் என்பது தெளிவாகி இருக்கின்றது.கேப்டனின் பதில்கள் வீட்டுப்பாடம் செய்யாத பள்ளி மாணவனின் சாக்குப்போக்குகள் இருக்கின்றன. உரையாடலின் உச்சமாக, துறைமுகப் பொறுப்பு அதிகாரி கோபம், நீ உயிர் பிழைத்து இருக்கலாம், இதற்கான விலையை நீ கொடுத்தாகவேண்டும்,, உன் வாழ்க்கை இனி அத்தனை சுலபமாக இருக்கப்போவதில்லை என வார்த்தைகளாக வெளிப்பட்ட போதிலும் கோழைத்தனத்தின் சிகரமாக பிரான்சிஸ்கோ கப்பலுக்கு மீண்டும் போகவே இல்லை. விடியற்காலையில் டாக்ஸி பிடித்து அருகில் இருக்கும் ஹோட்டலுக்கு சென்றுவிட்டார். அடிபட்ட நாயின் கண்களில் தெரியும் கலவரமும் பயமும் கேப்டனிடம் காணப்பட்டதாக இத்தாலியருக்கே உரிய உவமையுடன் அவரைக்கூட்டிச் சென்ற டாக்ஸி ஓட்டுனர் சொல்லுகின்றார்.தனக்கு அளிக்கப்பட்ட கடல் மேப்பில் அந்த பாறை இருக்கவே இல்லை, தன்னுடைய உயிர்கவச ஆடையை வேறு ஒருவருக்கு அளித்து விட்டதால் மீண்டும் கப்பலுக்கு செல்லவில்லை, தனது மேற்பார்வையின் பேரில் உயிர்ச்சேதம் பெருமளவில் தவிர்க்கப்பட்டது என வாதிட்டாலும், கேப்டனின் வாதங்கள் எடுபடப்போவதில்லை என இத்தாலிய சட்டவல்லுனர்கள் கூறுகின்றனர். 2002 ஆம் ஆண்டு பாதுகாப்பு அதிகாரியாக பணியில் கோஸ்டா கப்பல் நிறுவனத்தில் சேர்ந்த பிரான்சிஸ்கோ , 2006 ஆம் ஆண்டு கப்பலின் தலைவராகப் பதவி உயர்வு பெற்றார்.

எத்தனைப் பாதுகாப்பு அம்சங்களோடு இருந்தாலும் சரி, கப்பலின் கேப்டனாக முதன்முறை பொறுப்பேற்கும்பொழுது , டைட்டானிக் பற்றிய கேள்வித் தவிர்க்கப்படமுடியாதது.-

“பனிப்பாறைகள் மிதக்கும் கடல்பாதையின் வழியாக டைட்டானிக் கப்பலை பயணிக்கவைத்தது முதல் தவறு, மேலும் சமகால தொழில்நுட்ப வசதிகளில் டைட்டானிக் போன்று ஒரு விபத்து ஏற்படுவது சாத்தியமல்ல” என்பது தான் 6 வருடங்களுக்கு முன்னர் பிரான்சிஸ்கோவின் பதிலாக இருந்தது.

இவ்விபத்திற்குப்பின்னர், பிரான்சிஸ்கோவின் அத்தனை முந்தைய நடவடிக்கைகளும் அலசப்படுகின்றன. விபத்திற்கு முன்னர் ஒரு அழகிய இளம்பெண்ணுடன் அமர்ந்து இரவு உணவு சாப்பிட்டதை, இயல்பாக கப்பல்களில் நடக்கும் ஒன்றைக்கூட அலட்சியக்காரணிகளில் ஒன்றாக முன்வைக்கின்றார்கள்.

வரலாறு, அனைத்து பிரம்மாண்டங்களின் வீழ்ச்சிகளுக்கு அடிப்படை காரணம் அலட்சியமே எனத் திரும்ப திரும்ப பதிவு செய்தாலும், பாடங்கள் நினைவுக்கூறப்படுவதில்லை. மெத்தனத்துடன் அலட்சியமும் கைக்கோர்க்கும்பொழுது, விபத்துக்களுடன் கையாலாகத கோழைகளும் வரலாற்றில் அடிக்கடி நினைவுகூறப்படுவார்கள் , பிரான்சிஸ்கோ ஸ்கெட்டினோவும் அத்தகையவர்களில் ஒருவர் ஆவார் என்பது துரதிர்ஷ்டவசமானதே !!! அடுத்தமுறை கப்பலில் பயணப்படும்பொழுது, கேப்டனின் வரவேற்புரையை உன்னிப்பாகக் கேட்கவேண்டும், குறைந்த பட்சம் அடுத்த ஒரு நாளாவது எனது உயிரும் உடைமைகளும் அவரின் பொறுப்பல்லவா...

Friday, January 13, 2012

ரயில் பயணங்களில் - துணுக்குகளின் தொகுப்பு
பிடித்த விசயங்கள் சிலவற்றைப் பெண்களாக மாற்றிக்கொள்ளவரம் கிடைத்தால், கிரிக்கெட்டிற்குப்பின் ரயில்போக்குவரத்தைப் பெண்ணாக மாற்றிவிடுவேன். உலகத்தை சுருங்கிய கிராமமாக மாற்ற போடப்பட்ட முதல் அடிக்கல் இருப்புப்பாதைகள். இருப்புப்பாதைகளை, ரயில்வேஸ் என அழகான ஆங்கிலத்தில் சொல்லமால் அசிங்கமாக இரும்பினால் ஆனால் பாதைகள் என்ற பொருள் தரும் பதம் எப்படி வந்தது என்ற குழப்பம் நீண்ட நாட்களாகவே உண்டு. நெடுங்காலம் இந்தியாவை ஆண்ட பிரித்தானிய ஆங்கிலத்தில் ரயில்வே என்பதில் எந்த இரும்பு சம்பந்தப்பட்டதும் இல்லியே, பின்னர் எப்படி என யோசித்தது உண்டு. ஆங்கிலத்தைத் தவிர, ஏனைய ஐரோப்பிய மொழிகளில் ரயில்பாதைகளுக்கு, இரும்பினால் அமைக்கப்பட்ட பாதைகள் என்ற சொற்பதத்திலேயே அர்த்தங்கள் அமைந்துள்ளன. எடுத்துக்காட்டிற்கு, Chemin de fer என பிரெஞ்சு மொழியிலும், Eisenbahn என ஜெர்மன் மொழியிலும், Järnväg என சுவிடீஷ் மொழியிலும் , Ferrovie என இத்தலிய மொழியிலும் Fer, Eisen, Järn , Ferro என இரும்பைக் குறிப்பிடும் வார்த்தைகள் முறையே அமைந்துள்ளதை அறிந்த பின்னர் இருப்புப்பாதை என்ற மொழியாக்கம் ரயிலைப்போலவே அழகாக தெரிய ஆரம்பித்தது.

பெண்களும் கிரிக்கெட்டும் சுவாரசிய அம்சங்களாக வாழ்க்கையில் இடம்பெறும் முன், என் வாழ்க்கையில் நுழைந்தவை ரயில் வண்டிகளும், ரயில் பாதைகளும் ரயில்
நிலையங்களும்தான். கடை 80கள் ஆரம்ப 90களில் கொல்லத்தில் இருந்து திருச்சி வழியாக நாகூர் வரை செல்லும் தொடர்வண்டியில் கொரடாச்சேரி வரை செல்லும் பயணங்கள் தான்
ரயிலின் மீதான காதலை அதிகரித்தன. அன்றைய ரயில்வே அமைச்சர், ஜாபர்ஷெரீப் பெங்களூரில் இருந்து நேரிடையாக ரயிலில் நாகூர் செல்ல முடியவில்லை என திருச்சி நாகூர்
அகலரயில் பாதை திட்டம் ஏற்படுத்தப்பட்டதாக சொல்லுவார்கள். திருச்சி நாகூர் மீட்டர்வழி ரயில் பாதை நிறுத்தப்பட்டவுடன் சிலப்பல வருடங்கள் ரயில் பிரயாணங்கள்
தடைப்பட்டன.சன்னல் ஓரம் அமர்ந்து கொண்டு, நெடும் வளைவுகளில் தொடர்வண்டியின் எஞ்சினைப் பார்க்கும் ஆனந்தம் இன்றும் கோபன்ஹேகன் கார்ல்ஸ்க்ரோனா ரயிலில்
செல்லும்போதும் தொடர்கின்றது. ரயிலின் மீதான காதல் ரயிலைக்காட்டும் திரைப்படங்களையும் விரும்பிப்பார்க்க வைத்தது. செந்தூரப்பூவே என்ற ஒருபடம், ரயிலுக்காகவே அடிக்கடிப்பார்த்த படம்.

அகத்தா கிறிஸ்டியின் Murder on the Oriental Express என்ற கதை முழுக்க முழுக்க ஓரியண்டல் விரைவு ரயிலில் நடப்பதாக எழுதி இருப்பார். ஆடுகளம் திரைப்படம் பிடிக்க பலக்காரணங்களுள் ஒன்று, ரயில்வே காலனி பின்புலம். திருச்சியில் ரயில்வே காலனியைக் கடக்கும்பொழுதெல்லாம் இவர்கள் நினைத்தால் எப்பொழுது வேண்டுமானாலும் ரயிலில் போவார்களே ஒரு பொறாமை கலந்த ஏக்கம் ஏற்படும். ஒரு வேளை பத்தாவது படிக்கும்பொழுது எழுதிய ரயில்வே துறைக்கான தேர்வில் தேர்ச்சிப் பெற்று இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ !!காதல் தோல்விகள் எதைப்பார்த்து நினைவுக்கு வருகின்றதோ இல்லையோ, கைவிடப்பட்ட ரயில் பாதைகளைப் பார்த்தவுடன் சட்டென நினைவுக்கு வரும். உலகத்திலேயே அழகான
கோலம் என்னவென்றால் ரயில்பாதைகள்தாம், இந்தியத் துணைக்கண்ட பிரிப்பின் போது ரத்தமின்றி துண்டானது தண்டவாளங்களும்தான், எல்லைகளில் தொடர்பற்று துண்டுகளாகக்
கிடக்கும் தண்டவாளங்களும் தன் பங்கிற்கு வரலாற்றைச் சேர்த்து வைத்திருக்கின்றனஅதை அழிக்க எப்படி மனசு வருகின்றதோ....ரயில் போக்குவரத்துகளில் மிகவும் பிடித்தது
குறைவேக பயணிகள் ரயில்கள்தான் எனினும் சமீபகாலமாக ரயில்டிராம்கள் பிடிக்க ஆரம்பித்து இருக்கின்றன. டிராம் போக்குவரத்தை அனுபவிக்க வேண்டுமானால் கண்டிப்பாக
சுவிட்சர்லாந்தின் ஜூரிச் அல்லது ஆஸ்திரியாவின் வியன்னாவிற்கு ஒரு முறையேனும் பயணப்படவேண்டும். நகரம் முழுவதும் அழகிய கோலத்தின் மேல் ஊர்ந்து செல்லும் எறும்புகளைப் போல எண்ணிலடங்கா டிராம்கள் , டிராம்களில் நகரத்தைச் சுற்றிப்பார்ப்பது கவித்துவமானது.

பிடித்த ஒன்று என இருந்தால் பிடிக்காத ஒன்றும் இருக்கவேண்டும்தானே... சுரங்கவழிப்பாதைகளில் செல்லும் மெட்ரோ ரயில்களை காதை அடைக்கும் வேகத்தினாலும் நெரிசலினாலும் பிடிக்காது..

ரயில்களைப் பற்றி சிலத்துணுக்குகளுக்குப் போகும் முன்னர் ஒரு கேள்வி, சென்னையில் இருந்து பாரிஸிற்கு ரயில்விடமுடியுமா தொடர்ச்சியாக ரயில்பாதை இணைப்புகள் இருந்த போதிலும் நேரிடையான ரயிலை இயக்க முடியாது. (Bogie exhange முறையில் சக்கரங்களை மாற்றி தொடர்ந்து ஓட வைக்க முடியும் எனினும், சில இடங்களில் சரக்கு ரயில்களைத் தவிர பயணிகள் ரயில்களுக்கு இந்த முறைப் பயன்படுத்தப்படுவதில்லை) ஏனெனில் இந்தியவில் பயன்படுத்தப்படும் அகலரயில் பாதைகள் ஐரோப்பாவில் பயன்படுத்தப்படுவதில்லை. இந்திய அகலரயில் பாதையில், தண்டவாளங்களுக்கு இடையில் இருக்கும் இடைவெளி, நீண்ட தூர பயணிகள் சரக்குப்போக்குவரத்தில் இந்திய ரயில்வே பயன்படுத்தும் ரயில்பாதைகள் ஐரோப்பியப் பாதைகளை விட அகலமானது. துணைக்கண்டத்தைத் தவிர, அர்ஜெண்டினாவிலும் சிலியிலும் 1676 மில்லிமீட்டர்கள் இடைவெளியுடன் கூடிய தண்டவாளப்பாதைகள் பயன்படுத்தப்படுகின்றன. ரஷியா பின்லாந்து நீங்கலாக ஐரோப்பாவில் பயன்படுத்தப்படும் ரயில் பாதைகளின் அகலம் 1435 மில்லிமீட்டர்கள். 1435 மில்லிமீட்டர்கள் அகலம் கொண்ட பாதைகளே பன்னாட்டுத் தரமாகப் பார்க்கப்படுகின்றது. சுற்றுத்தலங்களிலும், மலைத் தோட்டங்களிலும், பூங்காக்கள் அருங்காட்சியகங்களிலும் 600 மில்லிமீட்டர்களுக்கும் குறைவாக உள்ள இருப்புப்பாதைகள் இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வாழ்க்கையில் என்றாவது ஒருநாள் மிதமிஞ்சிய பணக்காரன் ஆகும்பொழுது, பரந்த நிலப்பரப்பை வாங்கி குறைந்தபட்ச தூரத்திற்காவது நிஜ ரயில் விட்டுப் பயன்படுத்தவேண்டும்.

மைசூரில் மீட்டர்வழிப்பாதையும், அகலவழிப்பாதையும் ஒரே தடத்தில்
இந்தியக்குடியரசில் ஹிம்சாகர் விரைவுவண்டி அகலரயில் பாதைகளில் தொலைத்தூரப்பாதைவண்டியாகும். கன்னியாகுமரியில் இருந்து ஜம்முதாவி வரை 3751 கிலோமீட்டர்கள் பயணப்படுகின்றது. அதிகநேரம் பயணப்படும் வண்டியும் இதுதான்.

மஹராஷ்டிராவில் ஸ்ரீராம்பூர் பேலாப்பூர் என்ற இரு ரயில்நிலையங்கள் இருக்கின்றன. இவற்றின் சிறப்பம்சம் என்னவெனில் தண்டவளாங்களுக்கு எதிரெதிரே அமைந்திருக்கின்றன. ஒரு வழியில் ஸ்ரீராம்பூர் எனவும் , எதிர்வழியில் பேலாப்பூர் எனவும் அழைக்கப்படுகின்றன.

பாகிஸ்தான் இந்தியப்போர்களில் இந்தியாவின் ஆதிக்கம் மேலோங்கிருந்தாலும், ஒருமுறை இந்திய ரயில் எஞ்சினை பாகிஸ்தானியர் கைப்பற்றி, அதற்கு இந்திராகாந்தி எனப்பெயரிட்டு
பாகிஸ்தானிலேயே வைத்துகொண்டனராம்.

உலகத்திலேயே சிறியரயில் பாதை வலையத்தைக் கொண்டிருக்கும் நாடு வாடிகன்.

கௌகாத்தி - திருவனந்தபுரம் விரைவு வண்டி இதுவரை ஒரு முறை கூட சரியான நேரத்திற்கு ஓடியது இல்லையாம்.

ஸ்வீடன் மால்மோ நகரத்தில் இருந்து பெர்லின் வரை செல்லும் விரைவுரயில், டென்மார்க் - ஜெர்மனி எல்லையில் ஒரு கப்பலில் ஏற்றப்பட்ட மறுமுனையில் இறக்கிவிடப்படும். கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் ரயில் கப்பலில் இருந்தபடி பயணிக்கும். (எதிர்காலத்தில் மதுரையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு இந்தவகையில் விரைவுவண்டிகள் ஓடவேண்டும்)
இந்தியரயில்வேயின் ஆரம்பக் காலங்களில் தில்லி - கல்கத்தா ரயில் பெட்டிகள் அலகாபாத்தில் படகுகள் மூலம் அக்கறைக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

பரப்பளவில் ஓரளவிற்கு பெரியபகுதியாக இருக்கும் ஐஸ்லாந்தில் ரயில் போக்குவரத்து கிடையாது.மேற்கண்ட புகைப்படம், படிதாண்டிய கிரான்வீல் - பாரிஸ் விரைவு வண்டி சுவரை உடைத்துக்கொண்டு மறுப்பக்கம் சாலையில் விழுந்து விபத்துக்குள்ளானது. ஆண்டு 1895.

பின்லாந்திற்கும் ஸ்வீடனுக்கும் ரயில்பாதைகளின் அகலங்களில் வேறுபாடுகள் இருப்பதால், பின்லாந்தின் துரூக்கு துறைமுகத்தில் Bogie exchange என்ற முறையில் சரக்கு ரயில் சக்கரங்கள் மாற்றப்படும். பயணிகள் போக்குவரத்தைப் பொறுத்தமட்டில் அவர்கள் வேறு ரயிலுக்கு மாறியாகவேண்டும்.

இந்தியதொடர்வண்டிகளுக்கான ரசிகர் மன்றமே கீழ்க்கண்ட தளத்தில் இயங்குகிறது. ரயில் ஆர்வலர்கள் சேமித்துவைக்க வேண்டியத் தளம் இது

http://www.irfca.org/index.html


உலகம் இணையத்தால் இணைகிறதோ இல்லையோ... இருப்புப்பாதைகளால் இணைக்கப்பட வேண்டும். இரும்பிற்கும் இதயம் உண்டு என்பதை வாழ்க்கை முழுவதும் நமக்கு கிடைக்கும் ரயில் சினேகங்கள் மூலம் உணர்ந்து கொண்டே இருக்கலாம்.

Wednesday, January 11, 2012

வெரொனிகா - சிறுகதை

சிலப் பெண்பால் பெயர்களைக் கேட்ட மாத்திரத்தில் ஒர் ஈர்ப்பு ஏற்பட்டு, மனது தானாகவே அந்தப் பெயருக்கு ஓர் உருவம் கொடுக்கத் தொடங்கிவிடும். நான் பெண்களைக் காதலித்ததை
விட பெயர்களைக் காதலித்தது அதிகம். வெரொனிகா, இந்தப் பெயரை சமீபத்தில் வாசித்தது பவுலோ கோயல்ஹோவின் ஒரு புதினத்தின் கதாநாயகியாக ... தற்கொலையின்
வாயிலில் நிற்பவள், தனது நாட்டைப்பற்றித் தவறாக எழுதப்பட்டிருக்கும் ஒரு கட்டுரையை வாசிக்க நேரிடுகையில், குறைந்த பட்சம் அதற்கு பதில் எழுதவாவது உயிரோடு இருக்க
வேண்டும் என மீண்டு வர நினைப்பவள். சென்ற வாரம் தான் வாசித்து முடித்ததில் இருந்து தொடர்ந்து வெரொனிகா பெயருக்கு சில உருவங்களைக் கொடுக்கத் தொடங்கி இருந்தேன்.

எனக்கு ஒரு பழக்கம், கட்டுரையிலோ, கதையிலோ ஏதேனும் ஈர்ப்பைத் தரக்கூடிய பெண் பெயர்கள் தெரிந்தால், அந்த பெயர்களை இணையத்தில் தேடி, அந்தப் பெயரில் இருக்கும்
சிலரிடமாவது நட்புப் பாராட்ட நினைப்பேன். கடைசி 10 வருடங்களில், சிலப்பெயர்கள் நட்பைத் தாண்டியும் சில உறவுகளையும் உணர்வுகளையும், சில சமயங்களில் உணர்ச்சிகளுக்கு வடிகாலாகவும் இருந்ததுண்டு.

வெற்றித்திருமகள் என்ற பொருள் கொண்ட வெரொனிகா பெயரில் இருக்கும் மெய்நிகர் உருவங்களை ஃபேஸ்புக்கில் தேடி அனைவருக்கும் நட்பு அழைப்பு விடுத்தேன். வழமைப்போல 80 சதவீதத்தினர் நிராகரித்து, 20 சதவீதத்தினர் ஏற்றுக்கொண்டனர். என்னை ஏற்றுக்கொண்ட, 15 வெரொனிக்காக்களில், எனது ஊரில் இருந்து நேரிடையாக விமானம் செல்லும் நகரத்தில் வசிக்கும் பெண்களை வடிகட்டினேன். உக்ரைன், இங்கிலாந்து நீங்கலாக எஞ்சிய ஸ்லோவாக்கியாவில் வசிப்பதாக காட்டிய வெரொனிகாவிற்கு தனிச்செய்தி அனுப்பினேன். அன்னா கோர்னிகாவின் சாயலில் இருந்தாள், கைகளற்ற , கழுத்து இறக்கம் அதிகத்துடன் கூடிய ஒரு ஆடையை அணிந்து இருந்தாள். கணினியின் முன் அமர்ந்தபடி எடுத்தப் புகைப்படம் மாதிரி தெரிந்தது. தோள்பட்டையின் மச்சமும் கழுத்தில் அணிந்து இருந்த சிலுவை சங்கிலியும் கவனத்தைக்கவர்ந்தன. அடுத்த நிமிடத்தில் பதில் ஆங்கிலம் தனக்கு சரளமாக வரும் என ஆங்கிலத்தில் பதில் வந்தது. முதல் பிரச்சினை மொழிப்பிரச்சினை தீர்ந்தது, என நினைத்துக்கொண்டே, மேட்டின இனத்திற்கே உரிய பொய் வார்த்தைகளுடன் பேச்சுத் தொடர்ந்தது.


“உனக்கு ஸ்லோவாக்கியாவைப் பற்றி என்னத் தெரியும்”

ஸ்லோவேனியா, ஸ்லோவாக்கிய இந்த இரண்டு நாடுகளும் அடிக்கடி குழப்பினாலும் “கத்தியின் ரத்தமின்றி, பெரிய சங்கடங்கள் இன்றி ஒருங்கிணைந்த செக்கஸ்லோவாக்கியா விடம் இருந்து பிரிந்த நாடு, விலைவாசிகள் சாமானிய மனிதனுக்கு ஏற்ற வகையில் இருக்கும் நகரமான பிராட்டிஸ்லாவா தான் தலைநகரம், பொதுவுடமை பெரும்பலனைத் தந்த
ஐரோப்பியப்பகுதி” மனதுக்குள் விக்கிபீடியாவிற்கு நன்றி சொல்லியபடி பதிலளித்தேன்.

அர்த்தராத்திரியில் அறிவுப்பூர்வமான கேள்விகளுக்கு பதில் அளிக்கவேண்டிய சங்கடத்தை நொந்தபடி, அவளின் ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளித்துக் கொண்டிருக்கும் பொழுது,

”உனக்குப் பெண் தோழி இருக்கின்றாளா.... ” நான் எதிர்பார்த்து இருந்த கேள்வியைக் கேட்டாள்.

“அழகும் அறிவும் கூடிய பெண்ணைத் தேடிக்கொண்டே இருக்கின்றேன்”

“அழகுடன் அறிவும் கூடிய பெண்கள் பிராட்டிஸ்லாவா வில் இருக்கின்றனர், சிலப்பெண்களின் பெயர்கள் வெரொனிகா என்று கூட இருக்கும்” என்று சொல்லி கண்ணடிக்கும் ஸ்மைலியை அனுப்பினாள்.

தொடர்ந்த நாட்களில் பேச்சின் சுவாரசியமும் கிளுகிளுப்பும் கூடிக்கொண்டே போனது. எவ்வளவுக் கேட்டும் ஸ்கைப்பிலோ , குரல் வழி அரட்டையிலோ வரமாட்டேன் என்றாள்.

“நாம் ஒருவரை ஒருவர் பார்ப்பதும், பேசுவதும் நேரில் மட்டுமே இருக்கவேண்டும்” என்று அவள் சொல்லியபொழுது அழகு கொஞ்சம் குறைவாக இருக்ககூடுமோ எனத் தோன்றியது.

மூடியிருக்கும் கையில் என்ன இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளும் ஆர்வம் அந்த சந்தேகத்தை அப்பால் தள்ளியது. பிப்ரவரியின் மத்தியில் சந்திக்கலாம் என்று முடிவெடுத்தோம்.

ஊருக்குக் கிளம்பும் இரண்டு நாட்களுக்கு முன்னர், போகிறதுதான் போகிறோம், வேறு ஏதாவது பெண் நட்பையும் பிராட்டிஸ்லாவாவில் ஏற்படுத்திக்கொள்வோம் என, கவர்ச்சியான ஒரு
ஐரோப்பியப் பெயரைத் தேடினேன். முன்னே நூறு கிலோமீட்டர்கள் வேகத்தில் போய்க்கொண்டிருக்கும் கனரகவாகனம், எந்த வித முன்னறிவிப்பின்றி வண்டியைத் திடுமென
நிறுத்தினால் பின்னால் வருபவருக்கு என்ன அதிர்ச்சி ஏற்படுமோ அந்த அந்த் அதிர்ச்சி முகத்தில் அறைந்தது. வெரோனிகாவின் அதே புகைப்படம், புதிதாகத் தேடிய பெண்ணின்
முகப்பில் இருந்தது. வெரொனிகாவின் முகப்பில் இருக்கும் நண்பர்களை நோட்டம் விட்டதில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண் நட்புகளின் மத்தியில் வெரொனிகாவின் படத்துடன்
வெவ்வெறுப் பெயர்களில் சில ஃபேஸ்புக் கணக்குகள் இருந்தன. கொஞ்சம் பயம் தொற்றிக்கொண்டது, பயணத்திட்டத்தை கைவிட்டு விடலாமா எனக்கூட யோசித்தேன்.

வாழ்க்கையில் எத்தனையோ அபயகரமான பாதைகளைக் கடந்து இருக்கிறேன், எது நடக்குமோ அது நடக்கும், போய் பார்த்துவிடலாம். மனதில் ஒரு குறுகுறுப்புடன், எப்போதும்
இல்லாத ஒரு திகிலுடனும் வெரொனிகா கொடுத்திருந்த முகவரிக்கு சென்றேன். அந்தக் குடியிருப்புப்பகுதியின் முதல் நுழைவாயில் வரவேற்றது. நுழைவாயிலில் வெரொனிகாவின்
வீட்டு எண்ணின் அழைப்பானை அழுத்தினேன். ஏனைய வீட்டு எண்களுக்கு நேர் எதிரே குடியிருப்பவர்களின் பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. ஆனால் வெரொனிகாவின் பெயர் எழுதப்பட்டிருக்கவில்லை. அழைப்பு மணி தொடர்ந்து கொண்டிருந்தது. கதவைத் திறப்பவர் நிஜமாகவே வெரொனிகாவாக இருக்கலாம் அல்லது மனநோயாளி ஆணாகவோ
பெண்ணாகவோ இருக்கலாம், விபாச்சார போதை மருந்துக் கும்பலின் பிரதி நிதியாக இருக்காலாம். யாராக இருந்தாலும் விளக்கைத்தேடும் விட்டில் பூச்சியைபோல அசாதாரண
தைரியத்துடன் இருந்தேன். அழைப்பு எடுக்கப்பட்டது, ஆனால் யாரும் பேசவில்லை, நிசப்தத்தைக் கேட்க முடிந்தது.

“என் பெயர் கேத்தரினா நீல்ஸ்ஸான், ஸ்டாக்ஹோல்ம் இருந்து வந்திருக்கும் பெண்” என்று நான் என்னை அறிமுகப்படுத்திக் கொள்ள கதவுத் திறக்கப்பட்டது.

-------------------