Thursday, January 26, 2012

தினைத் துணை நன்றி செயினும் - சிறுகதை

இந்திப் பேசும் இந்தியர்களை விட உருது பேசும் பாகிஸ்தானியர்களிடம் பழகியதுதான் அதிகம். ஆரம்பத்தில் விஜய்காந்த் , அர்ஜூன் பட வில்லன்களைப்போல அவர்களைப் பார்த்தாலும், போகப்போக நம்மவர்களைக் காட்டிலும் ஒரு படி மேலாகவே தெரிந்தார்கள். கடைசி சில வருடங்களாக பாகிஸ்தானியர்களிடம் பழகுவது பெரிய சிரமமான காரியமாகவே தெரியவில்லை. கடவுளைத் தவிர்த்து வேறு எந்த விசயத்தையும் அவர்களிடம் விவாதம் செய்யலாம். இந்த பாகிஸ்தானிய முன்னனுபவம் இருந்ததால் புதிதாக வந்து இருந்த ஆய்வு மாணவன் ஷாகித்தை வழி நடத்தும்படி என் பேராசிரியர் கேட்டுக்கொண்டார்.

வந்ததும் வராததுமாய் எடுத்தவுடன் உருதுவில் பேச ஆரம்பித்தான்.

”நீ என்ன சொல்கிறாய் விளங்கவில்லை” என்றேன் ஆங்கிலத்தில்,

“இந்தி பேசமாட்டாயோ, அது உங்களின் ராஷ்டிரபாஷை அன்றோ” வேண்டுமென்றே சமஸ்கிருதம் கலந்த இந்தியில் பேசினான்.

ராட்டிரபாஷையோ கூட்டுற பாஷையோ என மனதில் நினைத்துக் கொண்டு, ”எனக்கு இந்தியோ உருதுவோ தெரியாது., தயவு செய்து ஆங்கிலத்தில் பேசவும்” முகத்தில் மென்மையும் குரலில் கடுமையும் காட்டினேன்.

இரண்டு நாட்களுக்கு அவனுடன், அவனுக்கான வரி எண், குடியிருக்கும் அட்டை, காப்பீடு போன்றவைகளை வாங்க அவனுடன் சென்ற பொழுது, என்னைப்போலவே நடுத்தரக் குடும்பத்தில் இருந்து மிகவும் கஷ்டப்பட்டு மேலே வந்து இருக்கின்றான் என்று அவன் சொன்ன அனுபவங்களின் மூலம் புரிந்து கொள்ள முடிந்தது.

அடுத்த ஒரு மாதத்தில் நைய்யி நையின்னு ஒவ்வொரு விசயத்துற்கு என்னையும், எனது ஆராய்ச்சிக் கூடத்தில் இருக்கும் சக இத்தாலியப் மாணவியையும் அரித்து எடுத்தாலும், ஒவ்வொன்றிற்கும் அவனுக்கு நான் மட்டும் பொறுமையாக்வே விளக்கிக் கொண்டிருந்தேன்.

ஷாகித்தின் பிரச்சினை என்னவெனில் ஆங்கிலம் அத்தனை சரளமாக வராது. ஒவ்வொரு வாக்கியத்தையும் உருதில் இருந்து மொழிப்பெயர்த்து ஆங்கிலத்தில் பேசுவதால், இலக்கணமும் அடிபட்டு, சரியான சொற்களும் கிடைக்கப்பெறாமல் அவன் சொல்ல வந்த விசயத்தின் அர்த்தமே மாறிவிடும். அவனுக்கு இத்தாலியப் மாணவியிடம் நட்பு பாராட்ட வெண்டும் என்ற விருப்பம் இருந்ததால் அவளிடமே சின்ன சின்ன சந்தேகங்களைக் கூட என் பின் பக்கத்து இருக்கையில் இருந்து அடுத்த முனை இருக்கை வரை சென்று கேட்பான்.
இடம் பொருள் ஏவல்களை சரியாகப் புரிந்து கொள்ள மாட்டான். அவள் சிடுசிடுத்தப்பின்னரே என்னிடம் வருவான். நான் எளிய ஆங்கிலத்தில் ஷாகித்திற்கு விளக்கி , அப்படியும் புரியாவிடில் எனக்குத் தெரிந்த தூர்தர்ஷன் இந்தியைக் கொண்டு விளக்கி புரியவைப்பேன்.

ஒரு வார இறுதியில் மூன்றாவது மதுபானச் சுற்று முடிந்தவுடன் என் தோளில் சாய்ந்தபடி சக இத்தாலிய மாணவி கேட்டாள்.

“கார்த்தி, சிலநாட்களாகவே உன்னிடம் கேட்கவேண்டும் என்று நினைத்தேன், ஷாகித் தொட்டதற்கெல்லாம் உன்னிடம் வந்து நிற்கும்பொழுது, எப்படி பொறுமையாக அவனுக்கு உதவுகின்றாய், இத்தனைக்கும் அவன் உன் நாட்டுக்காரனோ, உன் மொழிக்காரனோ ஏன் உன் மதத்துக்காரனோ இல்லை, அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதே பல சமயங்களில் புரியாது, பேராசிரியரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்றுதானே இப்படி செய்கிறாய்” என கண் சிமிட்டினாள்.

“அப்படி எல்லாம் இல்லை, பத்து வருடங்களுக்கு முன்னர், முதன் முதலாக பம்பாயில் உள்ள ஒரு நிறுவனத்தில் சேர்ந்த பொழுது, அப்பொழுது ஊரும் புதியது, நுனி நாக்கு ஆங்கிலம் பேச முயற்சி செய்யும் நிறுவனத்தின் சூழலும் புதியது, சிறுநகரச் சூழலில் வளர்ந்த நான் அன்று தடுமாறிய பொழுது எனது உடைந்த ஆங்கிலத்தைப் புரிந்து கொண்டு, அவரின் உடைந்த தமிழுடன் ஒரு தெலுங்கு பேசும் நண்பர் உதவினார்.... ஷாகித் முதன் முறையாக தனது சொந்த ஊர், நாடு, கண்டம் விட்டு இங்கு முழுக்க முழுக்க அந்நியமான தேசத்திற்கு வந்து இருக்கின்றான், ... ஷாகித்திற்கு உதவும் பொழுதெல்லாம், ஏதோ ஒரு வகையில் எனக்கு அன்று கிடைத்த உதவியைத் திருப்பிச் செலுத்துவதாகவே ஒரு மகிழ்ச்சி,... வாய்ப்புகள் இருக்கும்பொழுது நமக்குக் கிடைத்ததை மற்றவருக்கு கொடுக்கத் தவறக்கூடாது ... நிச்சயம் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் ஷாகித்தும், ஒரு தமிழன் எனக்கு உதவினான் என்று நினைவுகூர்ந்து வேறு யாருக்காவது உதவுவான்”

“Pay it forward° எனச் சொல்லிவிட்டு என்னை மேலும் இறுக்கமாகக் கட்டிக் கொண்டாள்.