கிரிக்கெட் வினாடி வினா - விடைகள்
கடந்த பதிவின் கிரிக்கெட் புதிர்களுக்கான விடைகள் இங்கே
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்
கடந்த பதிவின் கிரிக்கெட் புதிர்களுக்கான விடைகள் இங்கே
எழுத்தாக்கம்
வினையூக்கி
at
2:31 AM
4
பின்னூட்டங்கள்/Comments
வகைகள்: அரசியல், அனுபவம், நிகழ்வுகள்
வினாடி வினா வகையில் ஒரு பதிவைப்போடுவது எப்போதும் அலாதியானது. நீண்ட நாட்களாக பதிவுலகில் இவ்வகையிலான பதிவுகள் ஏதும் தென்படாததால் ஒரு “ஓவர்” கிரிக்கெட் க்விஸ் இங்கே !
எழுத்தாக்கம்
வினையூக்கி
at
11:27 AM
23
பின்னூட்டங்கள்/Comments
வகைகள்: அரசியல், கிரிக்கெட், நிகழ்வுகள்
”இது தற்செயலானதா!! ”என ஒரே வரியில் மோகனிடம் இருந்து என்னுடைய சிறுகதையின் பிரதியுடன் அவருடைய ஆங்கிலக் கதையின் பிரதியையும் இணைத்து ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. வாசுகிரெட்டி சொன்ன ஒருவரிக்கதைக்கு கைகால் வைத்து சின்ன எதிர்பாராத முடிவுடன் ஒரு கதையை போன மாதம் எழுதி இருந்தேன். மோகனின் ஆங்கிலக் கதையை வாசித்துப் பார்த்தேன். நடக்கும் சூழலைத் தவிர முடிவு முதற்கொண்டு அப்படியே கதையின் கரு அப்படியே என்னுடையது. என்ன விசயம் என்றால் மோகனின் கதை மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்டிருந்தது.
எழுத்தாக்கம்
வினையூக்கி
at
12:47 PM
6
பின்னூட்டங்கள்/Comments
வகைகள்: அனுபவம், சிறுகதைகள்
கொஞ்சிக் குலாவுதல் எல்லாம் கல்யாணத்திற்குப்பின்னர் தான் என்று வாசுகிரெட்டி திடமாக சொல்லிவிட்டதால்,ரோன்னிபி ஆற்றில் கால்களை நனைத்துக்கொண்டு , அடுத்து என்னவகையில் வார்த்தைகளில் மட்டும் காதல் செய்யலாம் என்றிருந்தபொழுது,
”கார்த்தி, எப்பொவெல்லாம் தூக்கம் கலையுதோ அப்பொவெல்லாம் மணி கரெக்ட்டா 11.11 காட்டுது"
”பகல் தூக்கதிலுமா"
”இப்புடு நேனு கொட்டேஸ்தானு நின்னு” முகத்தில் காட்டிய கோபத்திற்கு என்னை ஆற்றிலேயே தள்ளிவிட்டுவிடுவாள் போல
”அம்மாயி, தெலுகு போதும், தமிழ்ல மாத்லாடண்டி”
“சீரியஸா, நான் சொல்றதைக் கேளு, தினமும் இரண்டு தடவையும் டைம் 11.11 ஆகுறப்ப கரெக்ட்டா வாட்ச் இல்லாட்டி மொபைல்ல பார்த்துடுறேன், ரொம்ப பயமாயிருக்குடா”
“அடடா!! ஒரு கோடு எக்ஸ்ட்ராவாபோச்சே,இல்லாட்டி ஏழு கொண்டலவாடா நாமம்தான்”
“கார்த்தி, ப்ளீஸ், பி சீரியஸ்” எரிச்சலுடன் சொல்லிவிட்டு எழுந்து நடக்க ஆரம்பித்தாள்.
“சரி,சரி எதேச்சையா நடந்து இருக்கும், எனக்குக் கூட சின்ன வயசில 10.10 டைம் மட்டும் தான் கனவா வரும், எங்க வீட்டு பக்கத்துல இருந்த கடிகாரக் கடைதான் அந்தக் கனவுக்கு காரணம்னு ரொம்ப நாள் கழிச்சுதான் புரிஞ்சது, டோண்ட் வொரிடா புஜ்ஜிமா”
“ஐ யம் நாட் ஜோக்கிங், எனக்கு இப்படி ஏதாவது தோனுச்சுன்னா, அப்படியே நடக்கும், நம்ம காலேஜ் பில்டிங் என் கனவில வந்து இருக்கு, தெலுசா”
“....”
“நீ காட்டினியே உன் சின்ன வயசு போட்டோ அதுக்கூட என் கனவில வந்து இருக்கு”
“நான் சின்ன பாப்பாவ இருக்கிறப்ப, மர்ஃபி ரேடியோ அட்வர்டைஸ்மெண்ட்ல வர குட்டிக்குழந்தை மாதிரித்தான் இருப்பேன், நெல்லூர்ல உங்க தாத்தா வீட்டுல மர்ஃபி ரேடியோவை பார்த்துட்டு தூங்கிருப்ப, அதுதான் கனவா வந்து இருக்கும்”
“அய்யோ ராமா .. எனக்கு 11.11 ஏன் கனவுல வருதுன்னு தெரியலேன்னா தலை வெடிச்சிடும்”
“அம்மாடி, இங்க உட்காரு, ஐ வில் எக்ஸ்ப்லெய்ன் , 1111 பைனரியில பார்த்தால் 15, உனக்கு வர்ற 15 தீஸிஸ் பிரசண்டேஷன், அதைத்தான் ரிமைண்ட் பண்னிட்டு இருக்கு”
“மண்ணாங்கட்டி, நவம்பர் 11, எனக்கு மேரேஜ் பிக்ஸ் பண்ணப்போறாங்கன்னு நினைக்கிறேன்”
பட்டம் வாங்க திரும்ப வருவேன் என்று இந்தியா சென்ற வாசுகியைக் கட்டாயப்படுத்தி அவளின் பெற்றோர் அங்கேயே தங்க வைத்துவிட்டனர். அவள் நினைத்தபடியே நவம்பர் 11
அன்று ஏதோ ஒரு அமெரிக்க மாப்பிள்ளையுடன் கல்யாணமாம். இப்பொழுது எனக்கு கைக்கடிகாரமும் கைபேசியும் பார்க்கும்பொழுதெல்லாம் 11.11 யை மட்டும் காட்டுவதாக தோன்றியது.
சென்னை, பாண்டிச்சேரி என இதற்கு முந்தையக் காதல்களை எல்லாம் என் தைரியமின்மையால் கோட்டை விட்டாயிற்று. என்ன நடந்தாலும் பரவாயில்லை என விமானம் ஏறி, தெலுங்கு சம்போசிவ சம்போ மாதிரியே வாசுகிரெட்டியை வீட்டில் இருந்து தூக்கி, நெல்லூர் சென்னை சாலையில் பெரிய சேஸிங்கில் இருந்து தப்பித்து பெங்களூரில் அப்பாவி கணேசன் வீட்டில் ஒரு மாதம் அடைக்கலம். சில அடிகள், நிறைய அழுகை, ஒருவழியாக ராமிரெட்டி மாதிரியே இருந்த வாசுகிரெட்டியின் அப்பா கல்யாணத்திற்கு சம்மதித்தார்.
எல்லாம் நல்லபடியாக முடிந்து இதோ எனக்கானவாளாய் வாசுகிரெட்டியை அணைக்க காத்துக்கொண்டிருக்கின்றேன்.காதலிக்கும்பொழுது தமன்னா , அனுஷ்கா போல கெட்ட ஆட்டம் போடுபவர்களுக்கு, திருமணத்திற்குப்பின்னர் சரோஜாதேவியின் அன்ன நடை எப்படித்தான் வந்து ஒட்டிக்கொள்ளுமோ தெரியவில்லை. வலதுகையில் மாமனார் சீதனமாகக் கொடுத்திருந்த தங்கக் கைக்கடிகாரத்துடன் ,அவளை லாவகமாக அணைத்து இதழ் குவித்து எனக்கும் அவளுக்குமான முதல் முத்தத்தை பரிமாறிக்கொள்ளும்பொழுதுதான் நேரத்தைக் கவனித்தேன் 11:11
எழுத்தாக்கம்
வினையூக்கி
at
1:20 PM
9
பின்னூட்டங்கள்/Comments
வகைகள்: அனுபவம், சிறுகதைகள்
கல்லூரி எனக்கு அளித்திருக்கும் படிப்பு சம்பந்தமான தனி இணைய தளத்திற்கு தொடர்ந்து ஒரு வாரமாக பாண்டிச்சேரி இணைய முகவரி எண்களில் இருந்து வருகைகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. ஒரு வேளை அம்முவாக இருக்குமோ என சின்ன எதிர்பார்ப்புடன் யோசித்துக் கொண்டிருக்கும்பொழுதே தொலைபேசி அழைப்பு,
"நீ எப்படி மாட்டுக்கறி சாப்பிட மாட்டியோ அதுபோல இனிமேல் நானும் ஆக்டோபஸை சாப்பிடமாட்டேன் !! இனிமேல் எனக்கு ஆக்டோபஸ் புனிதமான பிராணி"
எனது ஸ்பானிஷ் தோழியின் கால்பந்து ஆர்வத்தை எனது கிரிக்கெட் வெறியுடன் ஒப்பிட முடிந்ததால் புரிந்து கொள்ள முடிந்தது. வேண்டும் என்றே இவளை
வெறுப்பேற்ற, அவளது காதலன் மார்க்கஸ் தனது ஃபேஸ்புக் வாக்கியங்களில் அடுத்த 10 நாட்களுக்கு ஆக்டோபஸ் வறுவல் தான் எனக்குறிப்பிட்டு இருந்தான். மார்க்கஸின் தாய் டச்சு, தந்தை ஜெர்மானியர் என்பதும் குறிப்பிடத்தக்கது
உலகக் கோப்பை கால்பந்து ஆட்டங்கள் முடிந்ததோ இல்லையோ, இந்த ஜோசியன் ஆக்டோபஸ் பற்றிய விவாதங்களுக்கு முடிவில்லை. ஆறு பந்துகளையும் தொடர்ந்து
மைதானத்தை விட்டு வெளியே அடிப்பது எத்தனை சிரமமோ அத்தனை சிரமம் எட்டுக்கு எட்டையும் இந்த எட்டுக்கால் விலங்கு சரியாகச் சொல்லுவதும்.
ஃபேஸ்புக்கில் வகுப்புத் தோழிகளின் புகைப்படங்களை மேய்ந்து கொண்டிருந்த பொழுது,
உங்களுக்கான பவுல் ஆக்டோபஸின் எதிர்காலம் என்ற அறிவிப்பு ஒன்று வந்து முகப்பில் விழுந்து கிடந்தது. சின்ன குறுகுறுப்பு, என்னதான் இந்த ஆக்டோபஸ் சொல்கிறது என்று பார்ப்போமே என, அந்த அழைப்பைத் தொடர்ந்தேன்.
உங்களது பழைய காதலி உங்களைத் தேடித் திரும்ப வருவார் என்ற கணிப்பு கிடைத்தது. 99 சதவீதம் பொய்யான கணிப்பு என்று புத்திக்குத் தெரிந்தாலும் மனதுக்கு குதுகலமாக இருந்தது. அத்துடன் அந்த பாண்டிச்சேரி ஐபி எண்களின் வருகையும் உற்சாகத்தை மேலும் கூட்டின. அம்மு வீட்டு தொலைபேசி எண் இன்னும் நினைவில் இருந்தது. 18 மாதங்கள் எத்தனை சடுதியில் ஓடிவிட்டன. கூப்பிட்டுப் பார்ப்போம், திருமணம் ஆகி இருந்தால் நட்பைத் தொடருவோம், இல்லை எனில் திரும்ப அவளுடன் இணைய முயற்சிப்போம் என யோசித்துக் கொண்டிருதேன். வேண்டாம்!! எதிர்மறையாக நடந்து விட்டால் மீண்டு வருவதற்கு இன்னும் ஒரு வருடம் ஆகுமே !! இந்த விஷப்பரிட்சை எதற்கு !! ஒரு வேளை ஆக்டோபஸ் கணிப்பு சரியாக இருந்தால், நிச்சயம் அவளே கூப்பிடுவாள். அப்படி கூப்பிட்டால் பார்த்துக்கொள்வோம்.
அடுத்த சில தினங்களுக்கு எனது இணையதள பார்வையாளர்களின் விபரங்களைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருதேன். தினமும் குறைந்த பட்சம் இரண்டு முறைகளாவது பாண்டிச்சேரி ஐப்பி எண்ணில் இருந்து ஒரு பார்வை. புகைப்படங்கள் ஏற்றி இருந்தால் அன்று மட்டும் பார்வையிடப்படும் நேரம் அதிகமாகக் காட்டும். இப்படியே ஒருமாதம் ஆகிப்போனது.
ஈழத்து நண்பர் ஒருவரை சந்திக்க பாரிஸ் சென்றிருந்தபொழுது மதுரை தியாகராசரில் உடன் படித்த மாணவன் அப்பாவி கணேசனிடம் இருந்து ஒரு மின்னஞ்சல், அவர் கடந்த மாதம் முழுவதும் பாண்டிச்சேரி பொறியியல் கல்லூரி ஒன்றில் சிறப்பு விரிவுரையாளராக இருந்ததாகவும், என்னுடைய தளத்தில் ஆராய்ச்சிக் கட்டுரைகளை, படித்து வந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். புகைப்படங்களைப் பார்த்துவிட்டு ஏதேனும் வெள்ளைக்காரத்தோழி உண்டா என விசாரித்தும் எழுதி இருந்தார்." அடச்சே, அப்ப பாண்டிச்சேரியிலிருந்து தளத்தை பார்த்தது கணேசனோ”
"இன்றைக்கு என்ன சமையல் செய்யலாம்" என்று எனது கவனத்தைக் கலைத்த நண்பரிடம்
"கணவாய், சாக்குக்கணவாய் பாரிஸில் கிடைக்குமா!! என்றேன்.
அன்று மாலை, பேய்க்கடம்பான், சாக்குச்சுருளி, சிலந்தி மீன் என்றெல்லாம் ஈழத்துத் தமிழில் அழைக்கப்படும் ஆக்டோபஸ் வறுவலை சாப்பிட்டு முடிக்கும்வரை கைபேசியில் +91413 எனத்தொடங்கிப் பதிவாகி இருந்த எண்ணைக் கவனிக்கவில்லை.
எழுத்தாக்கம்
வினையூக்கி
at
7:27 AM
5
பின்னூட்டங்கள்/Comments
வகைகள்: அனுபவம், சிறுகதைகள்
கருப்பு மனிதர்களை இவர்களுக்குப் பிடிக்கின்றதோ இல்லையோ, நேசப்பிராணிகளில் இந்த சுவிடீஷ் மக்கள் கருப்பு நிறத்தையே விரும்புகின்றனர். ஒருவேளை இப்படி இருக்கக்கூடும், கருப்பாக இருக்கும் விலங்குகளை நேசிப்பதால் கருப்பாக இருக்கும் மனிதர்களையும் விலங்குகள் போல நடத்துகின்றனரோ என அரசியல் மனஓட்டத்துடன் எனக்கு முன்னால் தனியாக நடந்துபோய் கொண்டிருந்த கருப்புக் குதிரையை வேடிக்கைப் பார்த்தபடியே அலுவலகத்தில் இருந்து வீடு நோக்கிச் செல்லும்பொழுதுதான் வழியில் ஒரு பெரிய கல்லறைத் தோட்டம் இருப்பதை கவனித்தேன்.
எடுத்தவுடன் பரந்த புல்வெளி, பின்னர் பச்சைச் செடிகளால் ஆன வேலி, சில மரப்பெஞ்சுகளுடன் ஏதோ ஒரு பூங்கா என இத்தனை நாட்களாக நினைத்துக் கொண்டிருந்த அளவிற்கு அதன் பரமாரிப்பு அத்தனை நேர்த்தியாக இருந்தது. ஊரில் சுடுகாட்டுப்பக்கம் செல்லவேண்டும் என்பதற்காகவே ஐந்து கிலோமீட்டர்கள் சுற்றிக்கொண்டுப்போனது காரண காரியத்தோடு நினைவுக்கு வந்து சென்றது. கல்லூரியை முடித்த பின்னர் மனிதனின் கற்பனைகளில் ஏதோ ஒரு அலாதியான ஈர்ப்பு ஏற்பட்டு விட தொடர்ந்து அதனால் தான் அடிக்கடி கடவுள்கள், பேய்கள் பற்றிய புத்தகங்களும் வாசித்து வருகின்றேன். கல்லறைக்குள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யாருமில்லை. யாரும் இல்லாததனால் பயமும் இல்லை !!
ஒளித்து வைத்திருந்த தைரியத்தை உடன் கொண்டு ஒவ்வொரு கல்லறையையும் பார்த்தபடியே வடக்கு மூலை நோக்கி புகைப்படங்கள் எடுத்துக் கொண்டே நடக்க ஆரம்பித்தேன். மார்க்கஸ் ஸ்வென்ஸன் கல்லறை பளிங்குகளில் புத்தம் புதிதாய் பளபளாவென இருந்தது. தோற்றம் 15, ஜனவரி 1917 மரணம் சென்ற மாதம் 5 ஆம் தேதி. 90 களைக் கடந்து மனிதன் அனாயசமாக வாழ்ந்து இருக்கிறார். பக்கத்திலேயே லீனா ஸ்வென்ஸன், மனைவியாக இருக்கக்கூடும். மறைவு 2000. மார்க்கஸின் நீண்ட ஆயுளின் காரணம் புரிந்தது.
கல்லறைக்குள் வாழ்ந்து கொட்டிருப்பவர்களின் செல்வச் செழிப்பு கல்லறையின் வடிவமைப்பில் காட்டியது. பெரும்பாலானவர்கள் சராசரியாக எண்பது வயது வரை வாழ்ந்து இருக்கின்றனர். எத்தனை ஆட்டம்போட்டாலும் இது போன்று சில அடிகள் குழிக்குள்ளோ கைப்பிடி அளவு
சாம்பலிலோ வாழ்க்கை முடியப்போகின்றது என தத்துவார்த்தமாக யோசிக்க ஆரம்பித்து இருந்த மனதை 12 வயதின் குழந்தையின் கல்லறை மனதைக் கனப்படுத்தியது. ஏலின் கோண்ட்ராட்ஸன், தோற்றம் 1996, நவம்பர் 25 மறைவு 2008, செப்டம்பர் 23.
எல்லா மக்களுக்கும் நீண்ட வாழ்வைக் கொடுத்த இயற்கை குழந்தையை இப்படி அற்ப ஆயுளில் முடித்துவிட்டதே !! கல்லறைக்கு முன் குழந்தை பயன்படுத்திய விளையாட்டு பொருட்கள் , பொம்மைகள் இருந்தது மனதைப் பிசைந்தது. கண்கலங்க ஆரம்பித்து விடுவதற்கு முன்னால் நகர்ந்து விட நினைத்த பொழுது வெறும் சிலுவையுடன் வெறும் மணற்பரப்புடன் ஒரு கல்லறை இருந்தது. பாவம் ஏழையாக இருக்கக் கூடும். முன் பக்கமாக வந்து பார்த்தால் இஸபெல்லா என சிலுவையில் எழுதி இருந்தது. பெயரைத் தவிர வேறு எந்த விபரங்களும் இல்லை. இஸபெல்லா என்ற பெயரை இதற்கு முன்னால் கொலம்பஸின் வரலாற்றில் படித்து இருக்கின்றேன். ஆங்கிலத்தில் எலிசபெத் என்பார்களே என அந்த சிலுவையைப் பார்த்துக் கொண்டிருக்கும்ப் பொழுதே ஏதோ அமானுஷ்ய உணர்வு ஏற்பட்டு,
"உர்ஷக்தா" எனக்குரல் கேட்க திரும்பினேன். 14 அல்லது 15 வயதில் ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். என்னைச் சிலுவையை விட்டு தள்ளி இருக்கச் சொல்லிவிட்டு சிறிது நேரம் பிரார்த்தித்தாள்.சொன்னால் சிரிப்பீர்கள். இஸபெல்லா கல்லறைக்குப் பின்னால் இருக்கும்
அந்த ஏலினின் பேயாக இவள் இருக்கக்கூடுமோ என பயந்தேன். ஏலின் இறந்து இரண்டு வருடங்கள் ஆகின்றன !! பேய்களுக்குக் கூட வயது வளர்ச்சி உண்டா !!
என்ன நடந்தாலும் பரவாயில்லை என அவள் நகரும் வேளையில், "கேன் டு டா என் ஃபோட்டோ அவ் மெய்க்" என்னை ஒரு புகைப்படம் எடுத்துக் கொடுக்க முடியுமா என சுவிடீஷில் கேட்டுக்கொண்டேன்.
இஸபெல்லா சிலுவையில் தலையை வைத்து நான் அஞ்சலி செலுத்துவதைப்போல பல கோணங்களில் மகிழ்ச்சியாக எடுத்துக் கொடுத்தாள். எனக்கு விருப்பமான அளவில் புகைப்படம் எடுக்கப்பட்டவுடன் அவளின் பெயரைக் கேட்டேன், கேத்ரீன் என்றுச் சொல்லிவிட்டு வேகமாகச்
வடக்கு வாசலில் இருந்த காரை நோக்கிச் சென்றாள். நானும் அவளைப் பின் தொடர்ந்து அவள் காரில் ஏறும் வரை பார்த்தேன். நிச்சயமாக இவள் பேய் இல்லை. கார் சற்று தூரம் சென்றபின்னர் நான் முன்பு பார்த்தக் கருப்புக் குதிரையைக் கடக்கும்பொழுது நின்று பின்னர்
குதிரையும் காரும் இணையாகச் செல்லத் தொடங்கின.
மறுநாள் அலுவலகத் தோழர் மற்றும் அந்த நகர்ப்புற பகுதியிலேயே வசிப்பவருமான யூனாஸிடம் இந்தக் கல்லறைப்புகைப்படங்களைக் காட்டி இஸபெல்லா என்ற பெண்ணின் கல்லறைக்கு அஞ்சலி செலுத்த வந்த சிறுவயதுப் பெண்ணை பேய் என நினைத்து பயந்ததைச் சொல்லி சிரித்துக் கொண்டிருந்த பொழுது, யூனாஸ் இடைமறித்து
"சின்னத் திருத்தம், இஸபெல்லா பெண்மணி அல்ல, பெண் குதிரை " என்றார்
எழுத்தாக்கம்
வினையூக்கி
at
7:40 AM
13
பின்னூட்டங்கள்/Comments
வகைகள்: சிறுகதைகள்
கொஞ்சம் மீன் பிடித்தல் கொஞ்சம் வைன் என மொர்ரம் ஆற்றங்கரை ஓரமாக அருமையான கோடைப்பொழுதைக் கழித்த பின்னர் எனது ஊருக்கு திரும்பிசெல்ல கடைசி ரயிலுக்காகக் காத்துக்கொண்டிருந்தேன்.காலை ஆற்றங்கரைக்கு செல்லும்பொழுது 'டேய் கருப்பா' எனக்கூப்பிட்ட ஒரு சுவிடீஷ் இளைஞன் தற்பொழுது முழுப்போதையில் என்னை இன்னும் அதே கேலி முகபாவத்துடன் பார்த்தபடியே, சில அடிகள் தள்ளி நின்று கொண்டிருந்தான்.
காலையில் கேலி செய்ததற்கு மூக்கில் ஒரு குத்துவிடலாம் எனத் தோன்றினாலும், குடிபோதையில் இருப்பவர்களை அடிக்கக் கூடாது என்பதனால் பேசாமல் இருந்து விட்டேன். கடிகாரத்தையும் தண்டவாளத்தையும் மாறி மாறிப்பார்த்துக் கொண்டிந்த பொழுதே டென்மார்க் எல்சினோர் நகரத்தில் இருந்து கோபன்ஹேகன் வழியாக நான் இருக்கும் கார்ல்ஸ்க்ரோனா வரைச் செல்லும் ரயிலும் வந்து சேர்ந்தது.
ரயிலின் மையப்பகுதியில் முதுகை சன்னலுக்கு காட்டியபடி இருக்கும் இருக்கையில் அமர்ந்து கொண்டேன். எனக்கு நேர் எதிராக சுவீடீஷ் இளைஞனும் அமர்ந்து கொண்டான். முன்னழகு பின்னழகு திமுதிமுவென, அரபிக்குதிரையாட்டம் இருந்த பெண்தான் பயணச்சீட்டுப் பரிசோதகர். அவள் சுவிடீஷ் இல்லை என்பதை அவளின் தலைமுடி நிறம் காட்டிக்கொடுத்தது. பெண்களை அளவுக்கு மீறி வர்ணிக்கின்றேன் என்று அம்மு கோபப்பட்டு, ஒரு வாரம் பேசாமல் இருந்ததில் இருந்து யாரையும் வர்ணிப்பதில்லை என முடிவெடுத்து இருக்கின்றேன். நீங்களே இந்த ரயில் பரிசோதகரின் அழகை கற்பனை செய்து கொள்ளுங்கள்.
பிலெங்கியே மாநிலம் முழுவதும் சுற்றிவரும் எனது மாதாந்திர பயணச்சீட்டைக் காட்டியவுடன் பார்த்துவிட்டு நன்றி சொல்லி அந்த சுவீடீஷ் இளைஞனிடம் பயணச்சீட்டைக் கேட்டாள்.
'அடுத்த ரயில் நிலையத்தில் 7 நிமிடங்களில் இறங்கப்போகின்றேன் , அதனால் பயணச்சீட்டு எடுக்கவில்லை' என்றான்
இதற்கு முன் பல்வேறு பயணங்களில், சுவிடீஷ் பயணச்சீட்டுப் பரிசோதகர்கள், மத்திய கிழக்கு நாட்டு அகதிகளை, அவர்கள் பயணச்சீட்டு இல்லாமல் பிரயாணம் செய்யும்பொழுது எப்படி நடத்துவார்கள் எனப் பார்த்து இருக்கின்றேன். அவசரத்தில் ஓடி வந்தேன், தானியங்கி இயந்திரம் வேலை செய்யவில்லை என்று உண்மையைச் சொன்னாலும் கூட அபராதத்துடன் பயணச்சீட்டுக் கொடுப்பார்கள். இதையே சுவிடீஷ் ஆட்கள் செய்தால் அந்த அபராதம் இருக்காது.
பழைய யூகோஸ்லாவியா, ஈராக், ஆப்கானிய அகதிகள் சமீபகாலமாகத்தான் சுவீடனுக்கு வரத் தொடங்கி இருப்பதனால், இந்தப் பெண் நடத்துனர் லெபனான் அல்லது பாலஸ்தீன நாடுகளில் ஏதேனும் ஒன்றைச் சேர்ந்தவளாக இருக்கலாம் என நினைத்தேன். அவளின் சுவிடீஷ் உச்சரிப்பு அவள் சிறுவயதாக இருக்கும்பொழுதே இங்கு வந்திருக்க வேண்டும் என்பதை மேலும் உறுதிப்படுத்தியது.
சுவிடீஷ் இளைஞன் பயணச்சீட்டு இல்லை என்று சொன்னவுடன் இவளின் முகம் இறுக்கமானது.
'ரயிலில் சீட்டு வாங்கினால் மொத்தம் 150 க்ரோனர்கள்' என்றாள்.
'என்னிடம் பணம் இல்லை'
'அடையாள அட்டையைக் கொடு'
சுவீடனில் அடையாள அட்டை வைத்திருந்தால் பணம் இல்லை என்றாலும் அடையாள எண்ணை வைத்து கட்ட வேண்டியத் தொகைக்கான படிவத்தை வீட்டிற்கு அனுப்பிவிடுவார்கள்.
'வேறு எங்கோ இருந்து இங்கு வந்து விட்டு, என்னை நீ எப்படி கேள்வி கேட்கலாம்' அவன் போதையில் கேட்பதாக இருந்தாலும் ஆழமனதில் இருக்கும் வெறுப்பின் உச்சமாகத்தான் எனக்குத் தெரிந்தது.
இந்த உரையாடல்களைப் பார்க்காமல் வெறும் காது மட்டும் கொடுத்துக் கவனித்துக் கொண்டிருந்தேன்.
அந்த பெண் பரிசோதகர் ஏதும் சொல்லவில்லை, அங்கிருந்து நகர்ந்து அடுத்தப் பெட்டிக்குச் சென்றுவிட்டாள்.
என்னதான் இவள் இந்த நாட்டின் குடியுரிமைப் பெற்றுவிட்டாலும், எப்பொழுதும் இரண்டாம் தரம் தான் என்பது குடிகார இந்நாட்டு மன்னர்களின் மூலம் நிறுபிக்கப்படுகிறதோ என நினைத்துக் கொண்டேன். அடுத்த சில நிமிடங்களில் கார்ல்ஷாம்ன் ரயில் நிலையம் வந்தது.
ரயில் நின்று தானியங்கி கதவுத் திறந்து சில நொடிகள்தான் தாமதம், இரு சுவீடீஷ் காவலதிகாரிகள் உள் நுழைந்து அந்த சுவீடீஷ் இளைஞனை இரு கைகளையும் சேர்த்துப்பிடித்துக் கொண்டு அவனைத் தள்ளிக்கொண்டு சென்றனர். அவன் போகும் பொழுது ரயில் நடத்துனரையும் அவளின் குடும்பத்தையும், அவளின் கடவுளையும் பொது இடத்தில் பதிப்பிக்க முடியாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டேப்போனான்.
ரயில் மீண்டும் புறப்படப்போகும் சமயத்தில் பரபரவென ஓடி வந்து ஒருவர் ஏறிக்கொண்டார். வயது நாற்பதுகளில் இருக்கும். நிறமும் தலைமுடியும் இவர் மத்தியக்கிழக்கைச் சேர்ந்தவர் எனப்தைக் காட்டியாது. முகத்தில் லேசான பயம் தெரிந்தது.
ஒவ்வொரு ரயில்நிலையத்தைக் கடக்கும்பொழுதும் புதிதாக ஏறி இருப்பவர்களிடம் பயணச்சீட்டுப் பரிசோதிக்கப்படும். மீண்டும் அவள் வந்தாள்.
'தானியங்கியில் எப்படி எடுப்பது எனத் தெரியவில்லை, கடைசி ரயில் ஆதலால் ஓடி வந்து ஏறிவிட்டேன்' என நடுங்கிய குரலில் அரைகுறை ஆங்கிலம் அரைகுறை சுவீடீஷில் அவர் சொல்லிக்கொண்டிருந்தார்.
அவரின் தர்மசங்கடத்தை உற்று நோக்கி அவரை மேலும் சங்கடப்படுத்த வேண்டாமென, காதுகளை மட்டும் தீட்டிக்கொண்டு உரையாடலைக் கவனிக்கத் தொடங்கினேன்.
'பிராட்டா டு அரபிஸ்கா' உனக்கு அரபித் தெரியுமா என அவள் அந்த நபரைக் கேட்டபின்னர் உரையாடல் அரபியில் தொடர்ந்தது. எதற்கும் இருக்கட்டும் என என கைப்பேசியில் அந்த உரையாடல் முழுமையையும் பதிவு செய்தாகிற்று.
அந்த ஆளும் என்னுடனேயே ரயிலின் கடைசி நிறுத்தமான கார்ல்ஸ்க்ரோனாவில் இறங்கினார். இறங்கியவுடன், ரயில் நடத்துனர் பெண்ணுடன் பேசிக்கொண்டே இருவரும் என்னைக் கடந்து சென்றனர்.
'அட அதுக்குள்ள உஷார் பண்ணிட்டானப்பா !!' என நினைத்தபடியே வீடு வந்து சேர்ந்தேன்.
பின்னொரு நாளில் அரபி நண்பன் ஒருவனிடம், அன்று பதிவு செய்த உரையாடலை ஓடவிட்டு விளக்கம் கேட்டபொழுது அவன் சொன்னதன் தமிழாக்கம் கீழே
'இது நமது தேசம் அல்ல, அல்லாவின் ஆணையினால் நாம் இங்கு வந்து சேர்ந்து விட்டோம், இவர்களுக்கு நம்மைப் பிடிக்கவில்லை, நம் கைபட்டால் குற்றம் கால்பட்டால் குற்றம் என நம்மைப்பற்றி தவறாகவே பரப்பிக்கொண்டிருப்பவர்களுக்கு, இப்படி பயணச்சீட்டு இல்லாமல் வருவது எல்லாம், நம்மைப் பற்றி மேலும் அவதூறு சொல்ல கிடைக்கும் ஒரு வாய்ப்பு, இனிமேல் இப்படி வரவேண்டாம், உங்களுக்கு அபராதம் விதிக்கவில்லை, வெறும் பயணச்சீட்டுக்கான பணத்தை மட்டும் கொடுங்கள், இறங்கியவுடன் என்னுடன் வாருங்கள், நான் எப்படி தானியங்கியில் பயணச்சீட்டு எடுப்பது என்பதைச் சொல்லித் தருகின்றேன்'.
எழுத்தாக்கம்
வினையூக்கி
at
1:58 AM
14
பின்னூட்டங்கள்/Comments
வகைகள்: அரசியல், அனுபவம், சிறுகதைகள்
மண்டப எழுத்தாளர்களிடம் இருந்து தொடர்ந்து கட்டுரைகள் பெற்றுவருவதால், சுயமான எழுத்து எழுதி நீண்ட காலம் ஆகிவிட்டது. ஆக, ஈயம் பூச...