Tuesday, July 20, 2010

ஆக்டோபஸ் - சிறுகதை

கல்லூரி எனக்கு அளித்திருக்கும் படிப்பு சம்பந்தமான தனி இணைய தளத்திற்கு தொடர்ந்து ஒரு வாரமாக பாண்டிச்சேரி இணைய முகவரி எண்களில் இருந்து வருகைகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. ஒரு வேளை அம்முவாக இருக்குமோ என சின்ன எதிர்பார்ப்புடன் யோசித்துக் கொண்டிருக்கும்பொழுதே தொலைபேசி அழைப்பு,

"நீ எப்படி மாட்டுக்கறி சாப்பிட மாட்டியோ அதுபோல இனிமேல் நானும் ஆக்டோபஸை சாப்பிடமாட்டேன் !! இனிமேல் எனக்கு ஆக்டோபஸ் புனிதமான பிராணி"

எனது ஸ்பானிஷ் தோழியின் கால்பந்து ஆர்வத்தை எனது கிரிக்கெட் வெறியுடன் ஒப்பிட முடிந்ததால் புரிந்து கொள்ள முடிந்தது. வேண்டும் என்றே இவளை
வெறுப்பேற்ற, அவளது காதலன் மார்க்கஸ் தனது ஃபேஸ்புக் வாக்கியங்களில் அடுத்த 10 நாட்களுக்கு ஆக்டோபஸ் வறுவல் தான் எனக்குறிப்பிட்டு இருந்தான். மார்க்கஸின் தாய் டச்சு, தந்தை ஜெர்மானியர் என்பதும் குறிப்பிடத்தக்கது

உலகக் கோப்பை கால்பந்து ஆட்டங்கள் முடிந்ததோ இல்லையோ, இந்த ஜோசியன் ஆக்டோபஸ் பற்றிய விவாதங்களுக்கு முடிவில்லை. ஆறு பந்துகளையும் தொடர்ந்து
மைதானத்தை விட்டு வெளியே அடிப்பது எத்தனை சிரமமோ அத்தனை சிரமம் எட்டுக்கு எட்டையும் இந்த எட்டுக்கால் விலங்கு சரியாகச் சொல்லுவதும்.

ஃபேஸ்புக்கில் வகுப்புத் தோழிகளின் புகைப்படங்களை மேய்ந்து கொண்டிருந்த பொழுது,
உங்களுக்கான பவுல் ஆக்டோபஸின் எதிர்காலம் என்ற அறிவிப்பு ஒன்று வந்து முகப்பில் விழுந்து கிடந்தது. சின்ன குறுகுறுப்பு, என்னதான் இந்த ஆக்டோபஸ் சொல்கிறது என்று பார்ப்போமே என, அந்த அழைப்பைத் தொடர்ந்தேன்.உங்களது பழைய காதலி உங்களைத் தேடித் திரும்ப வருவார் என்ற கணிப்பு கிடைத்தது. 99 சதவீதம் பொய்யான கணிப்பு என்று புத்திக்குத் தெரிந்தாலும் மனதுக்கு குதுகலமாக இருந்தது. அத்துடன் அந்த பாண்டிச்சேரி ஐபி எண்களின் வருகையும் உற்சாகத்தை மேலும் கூட்டின. அம்மு வீட்டு தொலைபேசி எண் இன்னும் நினைவில் இருந்தது. 18 மாதங்கள் எத்தனை சடுதியில் ஓடிவிட்டன. கூப்பிட்டுப் பார்ப்போம், திருமணம் ஆகி இருந்தால் நட்பைத் தொடருவோம், இல்லை எனில் திரும்ப அவளுடன் இணைய முயற்சிப்போம் என யோசித்துக் கொண்டிருதேன். வேண்டாம்!! எதிர்மறையாக நடந்து விட்டால் மீண்டு வருவதற்கு இன்னும் ஒரு வருடம் ஆகுமே !! இந்த விஷப்பரிட்சை எதற்கு !! ஒரு வேளை ஆக்டோபஸ் கணிப்பு சரியாக இருந்தால், நிச்சயம் அவளே கூப்பிடுவாள். அப்படி கூப்பிட்டால் பார்த்துக்கொள்வோம்.

அடுத்த சில தினங்களுக்கு எனது இணையதள பார்வையாளர்களின் விபரங்களைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருதேன். தினமும் குறைந்த பட்சம் இரண்டு முறைகளாவது பாண்டிச்சேரி ஐப்பி எண்ணில் இருந்து ஒரு பார்வை. புகைப்படங்கள் ஏற்றி இருந்தால் அன்று மட்டும் பார்வையிடப்படும் நேரம் அதிகமாகக் காட்டும். இப்படியே ஒருமாதம் ஆகிப்போனது.

ஈழத்து நண்பர் ஒருவரை சந்திக்க பாரிஸ் சென்றிருந்தபொழுது மதுரை தியாகராசரில் உடன் படித்த மாணவன் அப்பாவி கணேசனிடம் இருந்து ஒரு மின்னஞ்சல், அவர் கடந்த மாதம் முழுவதும் பாண்டிச்சேரி பொறியியல் கல்லூரி ஒன்றில் சிறப்பு விரிவுரையாளராக இருந்ததாகவும், என்னுடைய தளத்தில் ஆராய்ச்சிக் கட்டுரைகளை, படித்து வந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். புகைப்படங்களைப் பார்த்துவிட்டு ஏதேனும் வெள்ளைக்காரத்தோழி உண்டா என விசாரித்தும் எழுதி இருந்தார்." அடச்சே, அப்ப பாண்டிச்சேரியிலிருந்து தளத்தை பார்த்தது கணேசனோ”

"இன்றைக்கு என்ன சமையல் செய்யலாம்" என்று எனது கவனத்தைக் கலைத்த நண்பரிடம்

"கணவாய், சாக்குக்கணவாய் பாரிஸில் கிடைக்குமா!! என்றேன்.

அன்று மாலை, பேய்க்கடம்பான், சாக்குச்சுருளி, சிலந்தி மீன் என்றெல்லாம் ஈழத்துத் தமிழில் அழைக்கப்படும் ஆக்டோபஸ் வறுவலை சாப்பிட்டு முடிக்கும்வரை கைபேசியில் +91413 எனத்தொடங்கிப் பதிவாகி இருந்த எண்ணைக் கவனிக்கவில்லை.

5 பின்னூட்டங்கள்/Comments:

said...

//உங்களது பழைய காதலி உங்களைத் தேடித் திரும்ப வருவார்//
வந்தால் மகிழ்ச்சி!
//ஒரு வேளை ஆக்டோபஸ் கணிப்பு சரியாக இருந்தால், நிச்சயம் அவளே கூப்பிடுவாள்.//

கணிப்பு சரியாக இருந்தால் அவளே கூப்பிடுவாள்!!!

said...

நானும் அந்த ஆக்டோபஸ் ஜோசியத்தை பார்க்க போறேன்.
நீ நேசித்தது உண்மையானால் ,அது உன்னை விட்டு பிரிந்தாலும் உன் நேசம் நிஜமானால், அது மீண்டும் உன்னை தேடி வரும்.

said...

wow!

said...

கைபேசியில் +91413 எனத்தொடங்கிப் பதிவாகி இருந்த எண்ணைக் கவனிக்கவில்லை.

அது யார் சார்
கணேசனா
அம்முவா

நாங்களே முடிவு செய்ய வேண்டுமா

--

சுஜாதா டச் !!

said...

ஆக்டோபஸ் வாழ்க!