Wednesday, July 21, 2010

11 : 11 - சிறுகதை

கொஞ்சிக் குலாவுதல் எல்லாம் கல்யாணத்திற்குப்பின்னர் தான் என்று வாசுகிரெட்டி திடமாக சொல்லிவிட்டதால்,ரோன்னிபி ஆற்றில் கால்களை நனைத்துக்கொண்டு , அடுத்து என்னவகையில் வார்த்தைகளில் மட்டும் காதல் செய்யலாம் என்றிருந்தபொழுது,

”கார்த்தி, எப்பொவெல்லாம் தூக்கம் கலையுதோ அப்பொவெல்லாம் மணி கரெக்ட்டா 11.11 காட்டுது"

”பகல் தூக்கதிலுமா"


”இப்புடு நேனு கொட்டேஸ்தானு நின்னு” முகத்தில் காட்டிய கோபத்திற்கு என்னை ஆற்றிலேயே தள்ளிவிட்டுவிடுவாள் போல

”அம்மாயி, தெலுகு போதும், தமிழ்ல மாத்லாடண்டி”

“சீரியஸா, நான் சொல்றதைக் கேளு, தினமும் இரண்டு தடவையும் டைம் 11.11 ஆகுறப்ப கரெக்ட்டா வாட்ச் இல்லாட்டி மொபைல்ல பார்த்துடுறேன், ரொம்ப பயமாயிருக்குடா”

“அடடா!! ஒரு கோடு எக்ஸ்ட்ராவாபோச்சே,இல்லாட்டி ஏழு கொண்டலவாடா நாமம்தான்”

“கார்த்தி, ப்ளீஸ், பி சீரியஸ்” எரிச்சலுடன் சொல்லிவிட்டு எழுந்து நடக்க ஆரம்பித்தாள்.

“சரி,சரி எதேச்சையா நடந்து இருக்கும், எனக்குக் கூட சின்ன வயசில 10.10 டைம் மட்டும் தான் கனவா வரும், எங்க வீட்டு பக்கத்துல இருந்த கடிகாரக் கடைதான் அந்தக் கனவுக்கு காரணம்னு ரொம்ப நாள் கழிச்சுதான் புரிஞ்சது, டோண்ட் வொரிடா புஜ்ஜிமா”

“ஐ யம் நாட் ஜோக்கிங், எனக்கு இப்படி ஏதாவது தோனுச்சுன்னா, அப்படியே நடக்கும், நம்ம காலேஜ் பில்டிங் என் கனவில வந்து இருக்கு, தெலுசா”

“....”

“நீ காட்டினியே உன் சின்ன வயசு போட்டோ அதுக்கூட என் கனவில வந்து இருக்கு”

“நான் சின்ன பாப்பாவ இருக்கிறப்ப, மர்ஃபி ரேடியோ அட்வர்டைஸ்மெண்ட்ல வர குட்டிக்குழந்தை மாதிரித்தான் இருப்பேன், நெல்லூர்ல உங்க தாத்தா வீட்டுல மர்ஃபி ரேடியோவை பார்த்துட்டு தூங்கிருப்ப, அதுதான் கனவா வந்து இருக்கும்”

“அய்யோ ராமா .. எனக்கு 11.11 ஏன் கனவுல வருதுன்னு தெரியலேன்னா தலை வெடிச்சிடும்”

“அம்மாடி, இங்க உட்காரு, ஐ வில் எக்ஸ்ப்லெய்ன் , 1111 பைனரியில பார்த்தால் 15, உனக்கு வர்ற 15 தீஸிஸ் பிரசண்டேஷன், அதைத்தான் ரிமைண்ட் பண்னிட்டு இருக்கு”

“மண்ணாங்கட்டி, நவம்பர் 11, எனக்கு மேரேஜ் பிக்ஸ் பண்ணப்போறாங்கன்னு நினைக்கிறேன்”

பட்டம் வாங்க திரும்ப வருவேன் என்று இந்தியா சென்ற வாசுகியைக் கட்டாயப்படுத்தி அவளின் பெற்றோர் அங்கேயே தங்க வைத்துவிட்டனர். அவள் நினைத்தபடியே நவம்பர் 11
அன்று ஏதோ ஒரு அமெரிக்க மாப்பிள்ளையுடன் கல்யாணமாம். இப்பொழுது எனக்கு கைக்கடிகாரமும் கைபேசியும் பார்க்கும்பொழுதெல்லாம் 11.11 யை மட்டும் காட்டுவதாக தோன்றியது.

சென்னை, பாண்டிச்சேரி என இதற்கு முந்தையக் காதல்களை எல்லாம் என் தைரியமின்மையால் கோட்டை விட்டாயிற்று. என்ன நடந்தாலும் பரவாயில்லை என விமானம் ஏறி, தெலுங்கு சம்போசிவ சம்போ மாதிரியே வாசுகிரெட்டியை வீட்டில் இருந்து தூக்கி, நெல்லூர் சென்னை சாலையில் பெரிய சேஸிங்கில் இருந்து தப்பித்து பெங்களூரில் அப்பாவி கணேசன் வீட்டில் ஒரு மாதம் அடைக்கலம். சில அடிகள், நிறைய அழுகை, ஒருவழியாக ராமிரெட்டி மாதிரியே இருந்த வாசுகிரெட்டியின் அப்பா கல்யாணத்திற்கு சம்மதித்தார்.

எல்லாம் நல்லபடியாக முடிந்து இதோ எனக்கானவாளாய் வாசுகிரெட்டியை அணைக்க காத்துக்கொண்டிருக்கின்றேன்.காதலிக்கும்பொழுது தமன்னா , அனுஷ்கா போல கெட்ட ஆட்டம் போடுபவர்களுக்கு, திருமணத்திற்குப்பின்னர் சரோஜாதேவியின் அன்ன நடை எப்படித்தான் வந்து ஒட்டிக்கொள்ளுமோ தெரியவில்லை. வலதுகையில் மாமனார் சீதனமாகக் கொடுத்திருந்த தங்கக் கைக்கடிகாரத்துடன் ,அவளை லாவகமாக அணைத்து இதழ் குவித்து எனக்கும் அவளுக்குமான முதல் முத்தத்தை பரிமாறிக்கொள்ளும்பொழுதுதான் நேரத்தைக் கவனித்தேன் 11:11

9 பின்னூட்டங்கள்/Comments:

said...

Nice... Something like 23 enigma... :)

said...

ரசித்தேன் வினையூக்கி
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

said...

வாழ்த்துக்கள் கார்த்தி சார்!

Anonymous said...

இதுவும் பேய்க்கதை மாதிரி த்ரில்லிங்கா தான் இருக்கு

said...

11:11 kku pinutam podraen ,mee te escape now-but chinna amini solra mathiri , yenga kadhal kathiya paeikathai maathiri writing ?

said...

பேயைக் காணோம்!!!

said...

நல்லா இருந்தது.தெலுங்கு அதிகமாகவே காணப்பட்டாமாதரி ஒரு எண்ணம்.

said...

where is tamilish account for put vote?

said...

இதே கருவில் முன்பு வவா சங்கத்தில் எழுதப்பட்ட கதை