Saturday, July 03, 2010

இது நமது தேசம் அல்ல - சிறுகதை

கொஞ்சம் மீன் பிடித்தல் கொஞ்சம் வைன் என மொர்ரம் ஆற்றங்கரை ஓரமாக அருமையான கோடைப்பொழுதைக் கழித்த பின்னர் எனது ஊருக்கு திரும்பிசெல்ல கடைசி ரயிலுக்காகக் காத்துக்கொண்டிருந்தேன்.காலை ஆற்றங்கரைக்கு செல்லும்பொழுது 'டேய் கருப்பா' எனக்கூப்பிட்ட ஒரு சுவிடீஷ் இளைஞன் தற்பொழுது முழுப்போதையில் என்னை இன்னும் அதே கேலி முகபாவத்துடன் பார்த்தபடியே, சில அடிகள் தள்ளி நின்று கொண்டிருந்தான்.

காலையில் கேலி செய்ததற்கு மூக்கில் ஒரு குத்துவிடலாம் எனத் தோன்றினாலும், குடிபோதையில் இருப்பவர்களை அடிக்கக் கூடாது என்பதனால் பேசாமல் இருந்து விட்டேன். கடிகாரத்தையும் தண்டவாளத்தையும் மாறி மாறிப்பார்த்துக் கொண்டிந்த பொழுதே டென்மார்க் எல்சினோர் நகரத்தில் இருந்து கோபன்ஹேகன் வழியாக நான் இருக்கும் கார்ல்ஸ்க்ரோனா வரைச் செல்லும் ரயிலும் வந்து சேர்ந்தது.

ரயிலின் மையப்பகுதியில் முதுகை சன்னலுக்கு காட்டியபடி இருக்கும் இருக்கையில் அமர்ந்து கொண்டேன். எனக்கு நேர் எதிராக சுவீடீஷ் இளைஞனும் அமர்ந்து கொண்டான். முன்னழகு பின்னழகு திமுதிமுவென, அரபிக்குதிரையாட்டம் இருந்த பெண்தான் பயணச்சீட்டுப் பரிசோதகர். அவள் சுவிடீஷ் இல்லை என்பதை அவளின் தலைமுடி நிறம் காட்டிக்கொடுத்தது. பெண்களை அளவுக்கு மீறி வர்ணிக்கின்றேன் என்று அம்மு கோபப்பட்டு, ஒரு வாரம் பேசாமல் இருந்ததில் இருந்து யாரையும் வர்ணிப்பதில்லை என முடிவெடுத்து இருக்கின்றேன். நீங்களே இந்த ரயில் பரிசோதகரின் அழகை கற்பனை செய்து கொள்ளுங்கள்.

பிலெங்கியே மாநிலம் முழுவதும் சுற்றிவரும் எனது மாதாந்திர பயணச்சீட்டைக் காட்டியவுடன் பார்த்துவிட்டு நன்றி சொல்லி அந்த சுவீடீஷ் இளைஞனிடம் பயணச்சீட்டைக் கேட்டாள்.

'அடுத்த ரயில் நிலையத்தில் 7 நிமிடங்களில் இறங்கப்போகின்றேன் , அதனால் பயணச்சீட்டு எடுக்கவில்லை' என்றான்

இதற்கு முன் பல்வேறு பயணங்களில், சுவிடீஷ் பயணச்சீட்டுப் பரிசோதகர்கள், மத்திய கிழக்கு நாட்டு அகதிகளை, அவர்கள் பயணச்சீட்டு இல்லாமல் பிரயாணம் செய்யும்பொழுது எப்படி நடத்துவார்கள் எனப் பார்த்து இருக்கின்றேன். அவசரத்தில் ஓடி வந்தேன், தானியங்கி இயந்திரம் வேலை செய்யவில்லை என்று உண்மையைச் சொன்னாலும் கூட அபராதத்துடன் பயணச்சீட்டுக் கொடுப்பார்கள். இதையே சுவிடீஷ் ஆட்கள் செய்தால் அந்த அபராதம் இருக்காது.

பழைய யூகோஸ்லாவியா, ஈராக், ஆப்கானிய அகதிகள் சமீபகாலமாகத்தான் சுவீடனுக்கு வரத் தொடங்கி இருப்பதனால், இந்தப் பெண் நடத்துனர் லெபனான் அல்லது பாலஸ்தீன நாடுகளில் ஏதேனும் ஒன்றைச் சேர்ந்தவளாக இருக்கலாம் என நினைத்தேன். அவளின் சுவிடீஷ் உச்சரிப்பு அவள் சிறுவயதாக இருக்கும்பொழுதே இங்கு வந்திருக்க வேண்டும் என்பதை மேலும் உறுதிப்படுத்தியது.

சுவிடீஷ் இளைஞன் பயணச்சீட்டு இல்லை என்று சொன்னவுடன் இவளின் முகம் இறுக்கமானது.

'ரயிலில் சீட்டு வாங்கினால் மொத்தம் 150 க்ரோனர்கள்' என்றாள்.

'என்னிடம் பணம் இல்லை'

'அடையாள அட்டையைக் கொடு'

சுவீடனில் அடையாள அட்டை வைத்திருந்தால் பணம் இல்லை என்றாலும் அடையாள எண்ணை வைத்து கட்ட வேண்டியத் தொகைக்கான படிவத்தை வீட்டிற்கு அனுப்பிவிடுவார்கள்.

'வேறு எங்கோ இருந்து இங்கு வந்து விட்டு, என்னை நீ எப்படி கேள்வி கேட்கலாம்' அவன் போதையில் கேட்பதாக இருந்தாலும் ஆழமனதில் இருக்கும் வெறுப்பின் உச்சமாகத்தான் எனக்குத் தெரிந்தது.

இந்த உரையாடல்களைப் பார்க்காமல் வெறும் காது மட்டும் கொடுத்துக் கவனித்துக் கொண்டிருந்தேன்.

அந்த பெண் பரிசோதகர் ஏதும் சொல்லவில்லை, அங்கிருந்து நகர்ந்து அடுத்தப் பெட்டிக்குச் சென்றுவிட்டாள்.

என்னதான் இவள் இந்த நாட்டின் குடியுரிமைப் பெற்றுவிட்டாலும், எப்பொழுதும் இரண்டாம் தரம் தான் என்பது குடிகார இந்நாட்டு மன்னர்களின் மூலம் நிறுபிக்கப்படுகிறதோ என நினைத்துக் கொண்டேன். அடுத்த சில நிமிடங்களில் கார்ல்ஷாம்ன் ரயில் நிலையம் வந்தது.

ரயில் நின்று தானியங்கி கதவுத் திறந்து சில நொடிகள்தான் தாமதம், இரு சுவீடீஷ் காவலதிகாரிகள் உள் நுழைந்து அந்த சுவீடீஷ் இளைஞனை இரு கைகளையும் சேர்த்துப்பிடித்துக் கொண்டு அவனைத் தள்ளிக்கொண்டு சென்றனர். அவன் போகும் பொழுது ரயில் நடத்துனரையும் அவளின் குடும்பத்தையும், அவளின் கடவுளையும் பொது இடத்தில் பதிப்பிக்க முடியாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டேப்போனான்.

ரயில் மீண்டும் புறப்படப்போகும் சமயத்தில் பரபரவென ஓடி வந்து ஒருவர் ஏறிக்கொண்டார். வயது நாற்பதுகளில் இருக்கும். நிறமும் தலைமுடியும் இவர் மத்தியக்கிழக்கைச் சேர்ந்தவர் எனப்தைக் காட்டியாது. முகத்தில் லேசான பயம் தெரிந்தது.

ஒவ்வொரு ரயில்நிலையத்தைக் கடக்கும்பொழுதும் புதிதாக ஏறி இருப்பவர்களிடம் பயணச்சீட்டுப் பரிசோதிக்கப்படும். மீண்டும் அவள் வந்தாள்.

'தானியங்கியில் எப்படி எடுப்பது எனத் தெரியவில்லை, கடைசி ரயில் ஆதலால் ஓடி வந்து ஏறிவிட்டேன்' என நடுங்கிய குரலில் அரைகுறை ஆங்கிலம் அரைகுறை சுவீடீஷில் அவர் சொல்லிக்கொண்டிருந்தார்.

அவரின் தர்மசங்கடத்தை உற்று நோக்கி அவரை மேலும் சங்கடப்படுத்த வேண்டாமென, காதுகளை மட்டும் தீட்டிக்கொண்டு உரையாடலைக் கவனிக்கத் தொடங்கினேன்.

'பிராட்டா டு அரபிஸ்கா' உனக்கு அரபித் தெரியுமா என அவள் அந்த நபரைக் கேட்டபின்னர் உரையாடல் அரபியில் தொடர்ந்தது. எதற்கும் இருக்கட்டும் என என கைப்பேசியில் அந்த உரையாடல் முழுமையையும் பதிவு செய்தாகிற்று.

அந்த ஆளும் என்னுடனேயே ரயிலின் கடைசி நிறுத்தமான கார்ல்ஸ்க்ரோனாவில் இறங்கினார். இறங்கியவுடன், ரயில் நடத்துனர் பெண்ணுடன் பேசிக்கொண்டே இருவரும் என்னைக் கடந்து சென்றனர்.

'அட அதுக்குள்ள உஷார் பண்ணிட்டானப்பா !!' என நினைத்தபடியே வீடு வந்து சேர்ந்தேன்.

பின்னொரு நாளில் அரபி நண்பன் ஒருவனிடம், அன்று பதிவு செய்த உரையாடலை ஓடவிட்டு விளக்கம் கேட்டபொழுது அவன் சொன்னதன் தமிழாக்கம் கீழே

'இது நமது தேசம் அல்ல, அல்லாவின் ஆணையினால் நாம் இங்கு வந்து சேர்ந்து விட்டோம், இவர்களுக்கு நம்மைப் பிடிக்கவில்லை, நம் கைபட்டால் குற்றம் கால்பட்டால் குற்றம் என நம்மைப்பற்றி தவறாகவே பரப்பிக்கொண்டிருப்பவர்களுக்கு, இப்படி பயணச்சீட்டு இல்லாமல் வருவது எல்லாம், நம்மைப் பற்றி மேலும் அவதூறு சொல்ல கிடைக்கும் ஒரு வாய்ப்பு, இனிமேல் இப்படி வரவேண்டாம், உங்களுக்கு அபராதம் விதிக்கவில்லை, வெறும் பயணச்சீட்டுக்கான பணத்தை மட்டும் கொடுங்கள், இறங்கியவுடன் என்னுடன் வாருங்கள், நான் எப்படி தானியங்கியில் பயணச்சீட்டு எடுப்பது என்பதைச் சொல்லித் தருகின்றேன்'.

14 பின்னூட்டங்கள்/Comments:

Nimal said...

//என்னதான் இவள் இந்த நாட்டின் குடியுரிமைப் பெற்றுவிட்டாலும், எப்பொழுதும் இரண்டாம் தரம் தான் என்பது குடிகார இந்நாட்டு மன்னர்களின் மூலம் நிறுபிக்கப்படுகிறதோ என நினைத்துக் கொண்டேன்.//

பல நாடுகளிலும் இவ்வாறான சில மன்னர்களை காணமுடியும். இதுவும் ஒரு வகையான பொதுப்புத்திதான்.

Nimal said...

I like the positive message.

ரோகிணிசிவா said...

//அட அதுக்குள்ள உஷார் பண்ணிட்டானப்பா !!' என நினைத்தபடியே வீடு வந்து சேர்ந்தேன்//

eppa daa neenga thirunthuveenga

கிணற்று தவளை said...

kadai nalla irukku boss...
idhu unmaiya nadandu irukkumo nu nenaikren...
:)

Enfielder said...

நேற்று எனது நண்பர் ஒருவருடன் இந்த ஸ்வீடிஷ் மக்களின் நிறவெறியை பற்றி பேசிவிட்டு , ஸ்வீடனுடன் ஒப்பிடும் பொழுது மற்று scandinavia naatu மக்களும் இதேபோல் தான் நிறவெறி பிடித்தவர்களாக இருப்பார்களா என கேட்டதற்கு அவர் சொன்ன " They are the same shits" என்ற பதில் எனக்கு சிரிப்பை வரவழைத்தது .

நீங்கள் நன்றாக உற்று நோக்கினால் , இந்த ஸ்வீடிஷ் மக்கள்தான் அதிகமாக தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுவார்கள் . இந்த நோயில் இருந்து மீளவும், தங்களது வெள்ளை நிறத்தை காக்கவும்தான் ஒரு வேளை இந்த ஈராக், ஆப்கானிய அகதிகளை இவர்கள் தங்கள் நாட்டுக்குள் அனுமதிகிறார்களோ என்ற சந்தேகம் எனக்கு நீண்ட நாளாக உண்டு .

எனக்கு தெரிந்த வரை மற்ற ஈராக், ஆப்கானிய நாடுகளில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுவார்களின் விகிதாசாரம் குறைவுதான் ...

எதுவாக இருந்தாலும் கதை கொஞ்சம் சுவாரசியமாகவே இருந்தது ...

நிஹேவி said...

நானும் இப்படி ஒருமுறை பயண சீட்டு இல்லாமல் பயணித்தேன்,அபராதமாக 100 க்ரொனர் கேட்டார்கள்.இல்லை நான் அடுத்த stationல் இறங்கிக் கொள்கிறேன் என்றேன்,பிறகு அடுத்த stationல் இறங்கி automatic machineல் ticket எடுத்தேன்,எப்பொழுதுமே 30 second மட்டும் நிற்கும் அந்த stationல் train அன்று எனக்கு 5 நிமிடம் நின்றது..

நிஹேவி said...

நானும் இப்படி ஒருமுறை பயண சீட்டு இல்லாமல் பயணித்தேன்,அபராதமாக 100 க்ரொனர் கேட்டார்கள்.இல்லை நான் அடுத்த stationல் இறங்கிக் கொள்கிறேன் என்றேன்,பிறகு அடுத்த stationல் இறங்கி automatic machineல் ticket எடுத்தேன்,எப்பொழுதுமே 30 second மட்டும் நிற்கும் அந்த stationல் train அன்று எனக்கு 5 நிமிடம் நின்றது..மீண்டும் அதே trainல் பயணித்தேன்!

Sruthi of Life said...

Anna, nalla irunthathu kathai...... kathai endru solvathai vida, sambavamnu sollalaam.....
but, swarasyamana sambavama irunthathu.......

en petror tamil naattin therku pakuthiyai sernthavargal, aanaal, velai vaippukkaaga vadakkupaguthikku pulam peyarnthavargal....... irunthaalum, naan therku paguthiyai sernthaval endru ithuvarai ennai adayaalam kaattikolla virumbiyathillai..........

aanaal, ippothu naan adikkadi ninaippen...... ennoda kulanthaigalidam ithai eppadi solli puriyaveippathendru "ippothu naam irukkum intha thesamey nam thesam illai" apdinnu......

en petror ikku iruntha "fondness towards south tamilnadu" evvalu nyayamaanathendru ippothu purigirathu.....

oru vagaila partha, intha thesam, mozhi, matham ellam naama amachukittathu thaney innum thonuthu...... "why should I define myself based on all these" innu thonuthu.....

life is full of contradictions... and that is why it is interesting to live.......


ungal kathaikku sambandam illaatha comment thaan ithu. irunthaalum sollanumnu thonuchu.

naam seyyum sila vishayangalai "patriotism" allathu "identity" allathu "palakkam" endrum, pirar seyyum sila vishayangalai "racism" endrum sollikondirukkirom.....
ivlo vishayam therintha naamey sila vishayangalil thavaru seyyumbothu, "oru kudikaaran" athuvum rail il ticket kooda edukkaamal payanam seybavan nichayama thappu seyyaththaan seyvaan...... apdinnu solli manasai thethikka vendiyathu thaan.....

The Majuscule Tornado said...

இன்னாமா கதை சொல்லிகுறீங்க குமாரு..!! அந்த பொண்ணு அவன இட்டுகினு வேற எங்கயாச்சு போச்சா??

அன்புடன் அருணா said...

நீங்க நமது தேசம் அல்ல பற்றிச் சொல்றீங்க!எனக்கு அடிக்கடி நம் தேசத்துக்குள்ளேயே இது என் இடமல்ல எனத் தோன்றும் நிகழ்வுகள் அநேகம்!நல்லாருக்கு!

ILA (a) இளா said...

போன வாரம் சிறந்த பதிவு என்பார்வையில்(சிபஎபா), இந்த இடுகைய சேர்த்திருக்கேன்.

பினாத்தல் சுரேஷ் said...

முடிவு பிடித்திருந்தது, நல்ல கதை :)

மா சிவகுமார் said...

அழகு நடை. முதிர்ந்த ஒரு கதை சொல்லி வெளிப்படுகிறார்.

நன்றி வினையூக்கி.

அன்புடன்,
மா சிவகுமார்

TBR. JOSPEH said...

மீண்டும் ஒரு நல்ல சிறுகதை. கதைக்கு கரு முக்கியமில்லை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.