Sunday, July 19, 2009

டிப்ளோமெடிக்காய் ஒரு முத்தம் - ஒரு நிமிடக்கதை

கீர்த்தனாவிடம் தொலைபேசியில் உரையாடும்பொழுதெல்லாம் நான் அதிகம் உபயோகப்படுத்தும் வார்த்தை “டிப்ளோமெடிக்”. இந்த சங்கேத வார்த்தைக்கு அர்த்தம் என்னைச் சுற்றி நண்பர்கள் இருக்கின்றனர், அதனால் இயல்பாக உரையாட முடியாது என்பதுதான். வெளிநாட்டில் படிக்கும்போது சிக்கனமாக இருக்கவேண்டும் என்று 15 க்கு 15 அடி அறையில் நான்கு பேர் தங்கி இருப்பதனால் வரும் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று.இதற்காகவே அர்த்த ராத்திரியில் எழுந்து இந்தியாவில் தூங்கிக்கொண்டிருக்கும் கீர்த்தனாவை எழுப்பி, பேசுவது உண்டு, அவள் எரிந்து விழுந்தாலும் கூட.

சுவீடன் நேரம் இரவு இரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது.கீர்த்தனாவின் தொலைபேசி அழைப்பிற்காகக் காத்துக் கொண்டிருந்தேன். சனி,ஞாயிற்று கிழமைகளில் வீட்டில் இருந்துவிட்டு திங்கட் கிழமை அதிகாலைப் பேருந்தைப் பிடித்து சென்னைக்கு வரும் வழியில் என்னிடம் வார இறுதிகளில் நடந்தவைகளை சொல்வது அவள் வழக்கம்.

தூங்காமல் மானாட மயிலாட இணைய தளம் ஒன்றில் பார்த்துக்கொண்டிருந்த அறை நண்பன் கிருஷ்ணமூர்த்தி தயங்கியபடியே என்னிடம் வந்து,

“கார்த்தி, நீ கீர்த்தனாகிட்ட பேசுறப்ப அடிக்கடி டிப்ளோமேடிக் யூஸ் பண்றியே அதோட அர்த்தம் என்ன?”

“டேய் சிபிஎஸ்ஈ ஸ்கூல்ல படிச்சிட்டு வந்த உனக்கு அர்த்தம் தெரியுதா? என்ன நக்கலா!!”

“நான் லிட்டரல் மீனிங் கேட்கல, உங்க ரெண்டு பேருக்குள் அது ஏதாவது கோட் வேர்டா!! கோட் வேர்டுக்கு என்ன அர்த்தம்”

“நத்திங், ரூம்ல நிறைய பேரு இருக்காங்க, அம்மு,செல்லம்,புஜ்ஜிக்குட்டின்னு எல்லாம் பேச முடியாது, டிப்ளோமெடிக்காத்தான் பேசுவேன் அப்படிங்கிறது... சரி நீ எதுக்கு கேட்டே!! நீ கூட அன்னக்கி டிப்ளோமெடிக்குன்னு உன் ஆளு உமாகிட்ட சொல்லிட்டு இருந்தியேடா”

கொஞ்சம் வழிதல் முகத்தோடு ”எங்களுக்குள்ள டிப்ளோமெடிக் நா கிஸ் நு அர்த்தம்” என்றான்.

”ராஜராஜ சோழன் நான் எனை ஆளும் காதல்” என கைபேசி மணி அடித்தது எடுத்து, கிருஷ்ணமூர்த்தி அறையில் இருப்பதால் சன்னமான குரலில் கீர்த்தனாவுடன் பேச ஆரம்பித்தேன்.

“அம்மு, ரெண்டு நாள் ரொம்ப மிஸ் பண்ணேன்”

“அப்படியா!!! இந்தா சாட்டர்டே மர்னிங் பியானோ, இது லஞ்சுக்கு, இது டின்னர் பியானோ” என தொடர்ந்து தொலைபேசியில் முத்தங்களைக் கொடுத்துக்கொண்டே இருந்தாள்.

Saturday, July 18, 2009

நண்பர்களின் பதிவுகள் - ஓர் அறிமுகம்

நமக்கு கைப்படாத விசயங்கள் மற்றவர்களின் திறமையாக வெளிப்படும்போது ஏனோ சற்று பொறாமையாகத்தான் இருக்கும். பல மணி நேரம் அமர்ந்து , மூளையைக் கசக்கிப் பிழிந்தாலும் கவிதை மட்டும் கை வசம் ஆக மாட்டேன் என்கிறது. பொறாமையைத் தூரத்தள்ளிவிட்டு புதிதாக ஆங்கிலம் மற்றும் தமிழில் எழுத வந்திருக்கும் திரு.அன்பரசன் அவர்களின் கவிதைப் பதிவை அறிமுகப் படுத்துவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

அவர் எழுதி இருந்த கவிதைகளில் என்னை மிகவும் கவர்ந்தது

என் பார்வையின்
காமத்தை உதறிவிட்டு
காதலை மாத்திரம் எடுத்து கொள்ளும்
அதிசய அன்னம் நீ..!!!

http://themajusculetornado.blogspot.com/2009/07/1.html

மேற்கு ஐரோப்பாவில் புதிதாக வீடு தேடும் நபர்கள் எப்படி ஏமாற்றப்படலாம் என்பதைப் பற்றி அவர் ஆங்கிலத்தில் எழுதிய பதிவு ஐரோப்பாவிற்கு படிக்க/வேலை பார்க்க வரும் நண்பர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

http://themajusculetornado.blogspot.com/2009/07/my-recent-experience-with-scammer-not.html


-----

நண்பர் திரு.நிஹேவி அவர்கள் தனது கல்லூரி அனுபவங்களையும், சில திகில் கதைகளையும் எழுத ஆரம்பித்துள்ளார். அவரின் கடைசிப்பக்கம் என்ற சிறுகதையில், மெல்லிய ‘சஸ்பென்ஸ்' , மூட நம்பிக்கை, அமானுஷ்ய விசயங்களின் மேல் மனிதனுக்கு இருக்கும் விருப்பம், ஆன்மீகத்தை வியாபாரமாக்கும் போலிச்சாமியார் ஆகியோர்களை கோடிட்டு அழகாக எழுதி இருக்கின்றார்.

http://nihevi.blogspot.com/2009/07/blog-post.html

கார்ல்ஷாம் ஸ்டேசன் என்றக் கதையில் சுவீடனில் பகுதி நேர வேலைத் தேடுவதைப் பற்றி கூறியிருப்பது மெல்லிய புன்னகையை வரவழைக்கின்றது.

http://nihevi.blogspot.com/2009/07/blog-post_13.html

சுவீடனில் மேற்படிப்புப் பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ளவும் இவரைத் தொடர்பு கொள்ளலாம். இவரின் மின்னஞ்சல் முகவரி grashok4u@gmail.com

Friday, July 17, 2009

அதோ அந்த வெள்ளைக் குதிரை - சிறுகதை

பலமுறைப் பார்த்து சலித்துப்போன இடங்களை நமக்குப் பிடித்தமான ஒருத்தியோடு வந்து சுற்றிக்காட்டும்பொழுது இருக்கும் சுவாரசியமே தனிதான்.

“அம்மு, இந்த பெஞ்ச்ல உட்கார்ந்துக்கிட்டுதான் உங்க அப்பாகிட்ட நம்ம லவ்வப் பத்தி எக்ஸ்ப்லெயின் பண்ணேன்” சொல்லிவிட்டு காதலித்துக் கரம்பிடித்த மனைவியோடு அந்த மரப்பலகையில் அமர்ந்தேன்.

“கார்த்தி, லைட்டெல்லாம் போட்டு, நல்லா மெயிண்டெயின் இந்த வழிய தான், டெய்லி காட்டுப்பாதைல வர்றேன், பயமாயிருக்குன்னு முன்ன சொன்னீங்களா?”


போன வாரம் வரை “டேய்..டெட்ட டேய்” என்று கூப்பிட்டுக்கொண்டிருந்த கீர்த்தனா ”ங்க” போட்டு மரியாதையாக கூப்பிடுவதும் நன்றாகத்தான் இருந்தது.

“அம்மு, விண்டர் நடுக்குற குளிர்ல வரப்பத்தான் பயம் தெரியும்...அந்த பேரலல் ரோடு போகுது பார்த்தியா.. அங்க தான் நீ ஒரு நாள் நாம பிரிஞ்சுடலாம்னு சொன்னப்ப உட்கார்ந்து அழுதேன்”

“அழுது அழுதே காரியத்தை சாதிச்சுக்கிட்டீங்க..பொறுக்கி..பொறுக்கி “

சுவீடனின் அழகான பூங்கா எனத்தேர்வு செய்யப்பட்ட இந்த ப்ரூன்ஸ்பார்க்கில், கீர்த்தனாவிற்கு ஒவ்வொரு இடமாக சுற்றுலா வழிகாட்டி போல சுற்றிக்காட்டிக்கொண்டிருந்தேன்.

”அங்கப் பாருங்க, சூப்பர் வெள்ளைக் குதிரை”

“அது நிஜக் குதிரை இல்லைமா!!! சிலை... அந்தக் குதிரைச் சிலையைப் ஒரு புருடாக் கதை.. சாரி புராணக்கதை இருக்கு”

“புராணம் எல்லாம் புருடா இல்லை” கீர்த்தனாவின் முகத்தில் கோபம் எட்டிப்பார்த்தது. அவளைப் பொருத்தவரை பழங்கால புராணக்கதைகள் எல்லாம் நடந்தவை,அது மதுரையைத் தாண்டி இருக்கின்ற சின்ன ஊரின் தலபுராணமாக இருந்தாலும் சரி, இந்த உறை பனி தேசத்தில் சொல்லபடுகின்ற செவிவழிக்கதையாக இருந்தாலும் சரி.

“ஓகே ஒகே... சிலைக்குப் பக்கத்திலே போய் அந்தக் கதையைச் சொல்றேன்” என அந்த ஏரிக்கு அருகில் இருக்கும் அந்த குதிரையிடம் அழைத்துப்போனேன்.

சிலையின் மேல் அவளை ஏற்றி புகைப்படங்களை எடுத்துக் கொண்டபின்,
“அம்மு, முன்ன ஒரு காலத்தில இந்த காட்டுல ஒரு வெள்ளைக்குதிரை இருந்துச்சாம்.. அந்தக் குதிரை இங்க விளையாட வர சின்னப்பசங்களை முதுகில ஏத்திக்கிட்டு ரவுண்ட் அடிச்சுக்காட்டுமாம்”

“ம்ம் அப்புறம்”

“ரவுண்ட் அடிச்சுட்டு இந்த ஏரில குழந்தைங்கள பிடிச்சு தள்ளி விட்டுருமாம்”

“அய்யோ, அப்புறம்”

”ம்ம் ,,, எத்தனை குழந்தைங்கள தண்ணீல தள்ளிவிடுதோ அதுக்கு ஏத்த மாதிரி குதிரை நீட்டமா வளருமாம்”

“இண்டரஸ்டிங்.. சொல்லுங்க”

“பின்ன ஒரு ராஜகுமாரன் வந்து அந்த குதிரையை கொன்னுட்டாராம், அந்த மிதலாஜிக்கல் ஸ்டோரி ஞாபகமா இந்தக் குதிரை சிலையை இங்கே தத்ரூபமா செஞ்சு வச்சிருக்காங்க”டிசம்பரில் அலுவலகத் தோழன் கிறிஸ்டோபருடன் இங்கு வரும்பொழுது அவன் இந்தக் கதையை என்னிடம் சொல்லி இருந்தான். அப்போது விளையாட்டாக நான் அளந்து பார்த்தேன். என் கையளவில் 16 சாண் வந்தது.

அந்த ஞாபகம் இப்பொழுது வர மீண்டும் என் கையை வைத்து குதிரையின் கழுத்துப் பகுதியில் இருந்து வால் ஆரம்பிக்கும் இடம் வரை அளக்க ஆரம்பித்தேன். இப்பொழுது இரண்டு விரற்கிடை அதிகமாக இருந்தது. அதிர்ச்சியாகவும் இருந்தது. உண்மையில் இந்த கற்குதிரை வளர்ந்து இருக்கின்றதா!!!

“அம்மு, கிட்டத்தட்ட ரெண்டு இஞ்ச் லெங்த் ஜாஸ்தி ஆயிருக்கு”

”சும்மா சொல்லாதீங்க”

“எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு எக்ஸ்காக்ட்டா சிக்ஸ்டீன் இருந்துச்சு”

“கார்த்தி, கம் ஆன், அப்போ விண்டர், கல் எல்லாம் கொஞ்சம் சுருங்கி இருக்கும், இப்போ 25 டிகிரில வெயில் சுள்ளுன்னு அடிக்குது.. எக்ஸ்பாண்ட் ஆகி இருக்கும்.. ரயில்வே டிராக் ல கேப் விட்டு , தண்டவாளம் சேர்ப்பாங்கன்னு நாம படிச்சிருக்கோம்ல”

“அட, மொக்கை காமர்ஸ் படிச்ச உனக்கு இவ்ளோ சயிண்டிபிக் அறிவா” என அவளை மெச்சிக்கொண்டேன்.

மறுநாள் காலை, தூங்கிக் கொண்டிருந்த கீர்த்தனாவிற்கும் சேர்த்து காப்பி போட்டு எடுத்துக்கொண்டு சுவீடனின் ஆங்கில செய்தி இணைய தளங்களில் ரோன்னிபே உள்ளூர் செய்திகளை மேய ஆரம்பித்தேன். எனக்குத் தலைச்சுற்ற ஆரம்பித்தது, முதல் செய்தியைப் படித்ததுமே!!!!

”போன வாரம் காணாமல் போன இரண்டு குழந்தைள்,பல இடங்களில் தேடுதலுக்குப் பின்னர் ப்ரூன்ஸ்பார்க் ஏரியில் இருந்து சடலங்களாக மீட்டெடுக்கப்பட்டனர்”

-------------

Wednesday, July 15, 2009

வினோத் காம்ப்ளி

வட இந்திய இந்தித் தொலைக்காட்சிகளில் ‘உண்மை நிகழ்ச்சிகளில்' அடிக்கடித் தலைக்காட்டிக்கொண்டிருக்கும் வினோத்காம்ப்ளிக்கு மற்றும் ஒரு சிக்கல். தான் சொல்லாதக் கருத்தை சொன்னதாக ஊடகங்கள் வெளியிட பல இடங்களில் மண்டகப்படிதான். அவர் அப்படி என்னதான் சொன்னார்? “சச்சின் எனக்கு இன்னும் கொஞ்சம் உதவி இருக்கலாம்” மேலும் கிரிக்கெட் வாரியம் என்னை சாதியாலும் நிறத்தாலும் ஒதுக்க ஆரம்பித்தது' எனக்கூறியதைக் கண்டு கொதிப்படைந்த வெள்ளை வட இந்திய ஊடகங்கள் வரிந்து கொண்டு ‘வில்லனாக' சித்தரிக்க 'நான் அப்படி எதுவும் சொல்லவில்லை' என புலம்பிக்கொண்டிருக்கின்றார். நல்லதொரு வீணை இப்படி தன்னாலும் பிறராலும் நலங்கெடப்போனதை வினோத் காம்ப்ளியின் ரசிகன் என்ற முறையில் மனம் வருத்தப்படுகிறது.

சென்ற வருடம் தமிழ்மணம் நட்சத்திரமாக இருந்த பொழுது வினோத் காம்ப்ளியைப் பற்றி இக்கட்டுரையை இங்கு நினைவுகூர்கின்றேன். கட்டுரையை வாசிக்க இங்கே சொடுக்கவும்.

Sunday, July 12, 2009

நான் , கீர்த்தனா மற்றும் சில மரங்கள் - சிறுகதை

இயற்கையான வடிவங்களில் மனித முகங்களைத் தேடும் பழக்கம் ஆறாவதுப் படிக்கும்பொழுது இறந்து போன தாத்தா உருவம் அவருக்கு படைக்கப்பட்டிருந்த வாழை இழையில் சற்று சாய்வான கோணத்தில் தெரிவதாக சொன்னதில் இருந்து ஆரம்பித்தது. மேகங்கள் ஒன்று கூடும் போது முகங்கள் பலவித பாவங்களை வெளிப்படுத்திக்கொண்டு ஒன்றை ஒன்று முட்டுவது போலத் தோன்றும். பிள்ளையார் மரத்தில் தெரிந்தார், யேசு கட்டிட்டத்தில் தெரிந்தார் என வரும் செய்திகளை எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் சுவாரசியத்துடன் வாசிப்பேன்.

அண்மையில் நான் ரசித்துக்கொண்டிருக்கும் உருவம் நான் கல்லூரிக்கு போகும் குறுக்கு வழியான ப்ரூன்ஸ்பார்க் காட்டில் இருக்கும் ஒரு மரம். இந்த மரத்தில் இருந்து ஒரு பெண்ணை உருவாக்குவதற்கு பெரிய வேலைகள் எதுவும் செய்ய வேண்டியதில்லை. செதில்களை செதுக்கிவிட்டு கிளைகளைச் சற்றேச் சரிசெய்தால் பெண்ணாகிவிடும். சில நாட்களாக அந்த மரத்தைப் பார்க்கும் பொழுதெல்லாம் கீர்த்தனாவின் நினைவுகள் அதிகம் வருகின்றன. முழுநிலவின் வெளிச்சத்தில் கீர்த்தனாவின் நினைவாக, அவளின் பெயரை எழுதிவிட்டு வடிந்த சிவப்பு நிற மரப்பிசினைத் துடைத்துவிட்டுப் போவதை, நடக்கும் பாதையின் ஓரமாக நின்று கொண்டிருந்த பெண் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் அவளைப் பார்த்து சினேகமாக சிரித்தேன். அவள் சிரிக்கவில்லை. இங்கு நள்ளிரவிலும் மக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதைப் பார்த்திருப்பதாலும் இதற்கு முன்பு இது போல சிரித்து அவர்கள் சிரிக்காமல் போக, நான் அசடுவழிவது வழக்கமான ஒன்று. சாதரண இவ்விரண்டு விசயங்களும் எனது பக்கத்துவீட்டு சுவிடீஷ் பையனின் அறிமுகம் கிடைக்கும் வரை பெரிய விசயமாகத் தெரியவில்லை.

கோத்திக் பிரிவைப் பின்பற்றும் என் பக்கத்து வீட்டுப் பையனின் தலையலங்காரம் அவன் நம்பிக்கைகள் எல்லாம் வித்தியாசமாகவும் சில சமயங்களில் அச்சமூட்டுபவையாகவும் இருக்கும். பேய், ரத்தக் காட்டேரி , பகலில் பெண்ணாகவும் இரவில் ஓநாயாகவும் மாறும் ஒநாய்ப்பெண் போன்ற விசயங்களை விவரிப்பது கிலியூட்டும். இருந்த போதிலும் எனதுக் குடியிருப்பில் என்னுடன் பேசும் ஒரே சுவிடீஷ் ஆள் என்பதால் இவைகளைப் பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. நான் வழக்கமாக கடந்து செல்லும் ப்ரூன்ஸ்பார்க் காட்டைப்பற்றி அவன் சொன்ன ஒரு விசயம் என்னைத் தூக்கி வாரிப்போட செய்தது.

“கார்த்தி உனக்கு ஒரு விசயம் தெரியுமா!! மரத்தால் ஆன ஒரு பெண் ப்ரூன்ஸ்பார்க்கில் இருப்பதாக ஒரு நம்பிக்கை உண்டு” என்றான் உடைந்த ஆங்கிலத்தில்.

என்னுடைய அதிர்ச்சியைக் காட்டிக்கொள்ளாமல் “நீ பார்த்திருக்கியா ?” என்றேன் சுவிடீஷில்.

”பார்த்ததில்லை, ஆனால் ப்ரூன்ஸ்பார்க் கடக்கும்பொழுது எனக்கு சில மரங்களிடையேப் போகும்பொழுது அவைகள் ஏதோ சொல்ல வருகின்றன எனத் தோன்றும்”

இதைக் கேட்டதில் இருந்து அந்த வழியில் நான் செல்லுவதை நிறுத்திவிடலாமா என யோசித்தேன். மூன்று நிமிட திகிலுக்காக மூன்று கிலோமீட்டர் சுற்றிக்கொண்டுப் போக வேண்டுமா என தைரியத்துடன் மறுநாளும் அந்த வழியேச் செல்வதை தொடர்ந்தேன். பேயாவது பிசாசாவது, அப்படியே வந்தாலும் பெண் பேய் தானே!! பார்த்துக்கொள்ளலாம் என தொடர்ந்தேன். பின்னிரவு வேளைகளில் நிலவு வெளிச்சம் இருக்கும் நாட்களில் முன்பு பார்த்த பெண்ணைப் பார்ப்பேன். வழக்கம்போல சிரிப்பேன். அவள் சிரிக்க மாட்டாள். கடந்துப் போய் விடுவேன். சில வாரங்களுக்குப்பின் விடியற்காலை மூன்றரை மணி அளவில் கல்லூரி ஆய்வகத்தில் வேலையை முடித்துவிட்டு வீடுத் திரும்புகையில் அவளைப் பார்த்தேன். கோடைக் காலம் ஆகையால் மெல்ல சூரியன் எட்டிப் பார்க்க ஆரம்பித்தது. கீர்த்தனாவின் காலை தொலைபேசி அழைப்பு இன்னும் வரவில்லையே, இந்தியாவில் மணி 7 ஆகி இருக்குமே என்ற நினைவுடன் வேகமாக நடக்க ஆரம்பித்தேன். வழக்கமாக சிரிக்காதப் பெண் இன்று அழகாகப் புன்னகைத்தாள். அட, இந்த சிரிப்புடன் கொஞ்சம் மாநிறமாக இருந்தால் அப்படியே கீர்த்தனாவைப்போல இருப்பாளே!! என்னையும் அறியாமல் அவளை நெருங்கினேன். அலைபேசி அடிக்க ஆரம்பித்தது. எடுத்துப்பார்த்தேன் கீர்த்தனாவின் அறைத்தோழியிடம் இருந்து, அலைபேசியை எடுத்துப்பேசாமல்,

“வா ஹீத்தர் டு?” எனக் கேட்டவாறு என்னைப் பார்த்த சிரித்த பெண்ணிடம் மேலும் நெருங்கினேன்

“என் பெயர் கீர்த்தனா” என்று அழகான தமிழில் சொல்லிவிட்டு என்னை அணைத்துக்கொண்டாள்.சூரிய வெளிச்சம் மேலும் பிரகாசமாக, என் கைகளில் மரச்செதில்கள் தட்டுப்பட, எனது கை கால்களும் இறுக ஆரம்பித்தன.என் முதுகில் கார்த்தி என தனது கூரிய விரல்களால் கீர்த்தனா எழுத ஆரம்பித்தாள். சிவப்பு நிறத்தில் மரப்பிசின் வடிய ஆரம்பித்தது.

Thursday, July 09, 2009

நாடோடிகள் - திரைப்பார்வை


சுப்ரமணியபுரம் டெம்ப்ளேட்டிலேயே நட்பு-காதல்-தோல்வி-துரோகம் என நகைச்சுவை இழையோட,எல்லாத் தரப்பு மக்களும் ரசிக்கும்படி சமுத்திரக்கனியின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் தான் நாடோடிகள். நல்ல இயக்குனராகவும் நல்ல தயாரிப்பாளராகவும் தன்னை நிலை நிறுத்திக்கொண்ட சசிக்குமாருக்கு தனக்கு கதைக்கேற்ற நடிப்பையும் தரமுடியும் என்பதைக் காட்டும் படம் நாடோடிகள். கதையை நகர்த்திச் செல்லும் மையக்கதாபாத்திரமாக சசிக்குமார் பாராட்டும்படியே நடித்து இருக்கின்றார்.

பலவருடங்களுக்கு முன் சந்தர்ப்பவாத நட்பு + காதல் ஆகியவற்றை வைத்து கார்த்திக், பானுப்ப்ரியா நடிக்க, பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளிவந்த கோபுரவாசலிலே படத்தின் நேர் எதிர் துருவம் இப்படம்.

நண்பனின் நண்பன் தனக்கும் நண்பன் என்பதை வைத்து பின்னப்பட்ட இக்கதையில் சமூகத்தின் வெவ்வேறு பொருளாதார/சாதி தளங்களில் இருக்கும் நண்பர்களுக்குள் இருக்கும் அன்னியோன்யத்தையும் வாழ்வின் அடுத்தத் தளத்தை நோக்கி நடைபோட அவர்கள் எடுக்கும் முன் முயற்சிகளையும் அது ஒரு காதலால் எப்படி சின்னாபின்னமாகின்றது என்பதை அழகாக சொல்லியுள்ளார் இயக்குனர். காதலர்கள் தங்களைச் சேர்த்து வைத்த நண்பர்களின் தியாகத்தை எத்தனைத் தூரம் மதிக்கின்றனர் என்பதை சுவைபட சொல்லி இருக்கின்றனர். சசிக்குமாரின் கதாப்பாத்திரப்படைப்போன்று எல்லோர் வீட்டிலும் ஒரு உறவினர் கண்டிப்பாக இருப்பார். அலட்சியமாக இருப்பது போலத் தோன்றினாலும் உண்மையில் அக்கறையுடனும் பொறுப்பாகவும் நடந்து கொள்ளும் இயல்பான கதாபாத்திரம் சசிக்குமாருடையது. ஐந்து தந்தை கதாபாத்திரங்களை(மூன்று நண்பர்களின் தந்தைகள், முறைப்பெண்ணின் தந்தை, ஓடிவரும் காதலியின் தந்தை ) வெவ்வேறு பரிமாணங்களில் தந்தைக்குரிய குணாதிசயங்களுடன் காட்டி இருப்பது படத்தின் சிறப்பு.

உடற்பசிக்காகத்தான் அவர்கள் கல்யாணம் செய்து கொள்ள வந்தார்கள் என நண்பர்கள் சகட்டு மேனிக்குத் திட்டித் தீர்ப்பதை ஒரு சராசரி மனிதன் தன் தியாகங்கள் கேலிக்கிடமாகக்போய் விட்டதே என்று உணரும்போது வந்து விழும் வார்த்தைகளாகப் புரிந்து கொள்ள முடிகிறது. நம் சமூகம் மற்றவர்களைக் கேவலப்படுத்த பாலியல் ரீதியான வசவுகளின் மூலம் இழிவுப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது என்பதை இயக்குனர் உணர்த்துகிறாரோ!!.. உடற்பசி என்றால் பணக்கார காதலர்கள் எங்கு வேண்டுமானாலும் காதலிக்கும் காலங்களிலேயே தீர்த்துக்கொண்டிருக்க முடியும். காதலர்களை சுடுமணலில் நிராதரவாக விட்டுவிட்டு வரும்பொழுது காதலன் காதலியை நோக்கி நடந்து வரும் காட்சியை சிலவினாடிகள் நீட்டித்ததன் மூலம் அவர்களின் காதல் உண்மைதான், ஆனால் தாங்கள் வாழ்ந்த பணக்காரச் சூழல் இன்றி வாழும்போது ஏற்படும் பிரச்சினைகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவமின்மை அவர்களுக்குள் வெறுப்பை ஏற்படுத்தி பிரிய வைத்தது என இயக்குனர் காட்டியிருப்பதாக தோன்றுகின்றது.மற்றவர்களது காதலுக்காகப் போராடும் சசிக்குமார், முறைப்பெண் தனக்காக வீட்டைவிட்டு வெளியேறி இருந்தால் போராடி இருப்பாரோ!! பெண்ணின் சம்மதம் இல்லாமல் (காதல்/விருப்பம் இருந்தாலும் கூட)அவர்களின் பெற்றோருக்கு எதிராக்கி கவர்ந்து வருதல் அவசியம் இல்லை என சொல்லப்படுவதாக இருக்கின்றது. முறைப்பெண்ணாக வரும் அனன்யா, விஜய் தொலைக்காட்சியில் சினிமா காரம் காப்பி யில் வரும் நடுத்தரவயது பெண் இளமையாக இருந்தால் எப்படி இருப்பாரோ அப்படி இருக்கின்றார். அனன்யா தனது சொந்தக்குரலையேப் படத்தில் கொடுத்து இருக்கின்றார்.


மொட்டை மாடிக் காட்சியில் ”அவனுக்கும் ரொம்ப நாளா உன்மேல ஒருக் கண்ணு” என முறைப்பெண்ணை சீண்டுவதும் “முள்ளைப்பிடிச்சாலும் முழுசாப் பிடிக்கனும்” என்ற வசனமும் , சடுதி நேரத்தில் நண்பர்கள் காதலர்களைச் சேர்த்து வைக்க கிளம்பும் முன் சென்னை 28 விஜய் க்கு சசியின் தங்கை கன்னத்தில் முத்தமிடும் காட்சியும் அழகு.

முறைப்பெண்ணின் தந்தை தனது மருமகனுடன் உற்சாகமாகப் பேசிக்கொண்டு வர, முறைப்பெண் இறுக்கமான முகத்துடன் அவர்களைப் பின் தொடர்வதைப் பார்க்கும் சசிக்குமார் அந்த இடத்தை விட்டு நகர்வது அருமை.

இணைக் கதாபாத்திரங்களாக வாழ்ந்து இருக்கும் 'கல்லூரி' பரணி , சென்னை28 விஜய் ஆகியோரின் நடிப்பு தமிழ் திரையுலகில் நல்ல நடிப்புக்கு பஞ்சமில்லை என்பதற்கு மற்றும் ஒரு உதாரணம். மன்சூர் அலிகான் போன்று தோற்றமளிக்கும் நடிகர் செய்யும் அலப்பரைகள் அட்டகாசமாக இருக்கின்றன. கஞ்சா கருப்புவின் புலம்பல்கள் சிரிப்பாக இருந்தாலும் உண்மையில் அவரைப்போன்ற அப்பாவிகள் பலிகடாக்களாக ஆக்கப்படுகின்றனர் என்பது நிதர்சனம்.


மாற்றுத்திறன் உடையவர்களை அப்படியே நடிக்க வைத்து அனுதாபத்தை மட்டுமே பெற்றுத்தரும் இயக்குனர்கள் மத்தியில் சசிக்குமாரின் தங்கையாக மாற்றுத்திறன்கள் இருக்கும் பெண்ணை(அபிநயா) பேசும் கேட்கும் கதாபாத்திரமாக வாழ வைத்த சமுத்திரக்கனிக்கு தனிப்பட்ட முறையில் நன்றி.

சுந்தர்.சி பாபு வின் இசையில் சம்போ சிவசம்போ பாடல் இணையத்தில் படம் பார்க்கும்பொழுதே மிரட்டுகின்றது. குத்துப்பாட்டு அவசியம் இல்லாதது போலத் தோன்றினாலும் வணிக ரீதியிலும் நல்ல திரைப்படத்தை வெற்றிப் பெறச்செய்ய இது போன்ற சமாதானங்கள் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதே.

இப்படத்தை பார்த்தவர்கள் “நண்பா, என் லவ்வை சேர்த்து வைங்கடா” என யாராவது வந்துக் கேட்கும்பொழுது இனி ஒருக் கணமாவது தங்களது வாழ்வாதரத்தைப் பற்றியும் சிந்தித்துவிட்டுத்தான் உதவப்போவார்கள் என்பது உறுதி.

படங்கள் நன்றி : cityhitsonline.com , mirchigossips.com


பின்குறிப்பு :
திரையரங்கத்தில் குடும்பத்துடன் போய் ரசித்துப்பார்க்க வேண்டிய படம் இது.
திரையரங்கிற்குப் போய் பார்க்கும் வாய்ப்பு, நான் இருக்கும் தேசத்தில் இல்லாததால் இணையத்தில் தான் பார்க்க முடிந்தது. திரைப்படக்குழுவினர் மன்னிக்கவும்.

Tuesday, July 07, 2009

Floorball - Floor Hockey - Innebandy - சுவீடன் அனுபவங்கள்

ஸ்காண்டிநேவியா நாடுகளில் பிரபலமான இந்த ஃப்ளோர்ஹாக்கி ஆட்டம் அணிக்கு 6 பேர் வீதம் மொத்தம் 60 நிமிடங்களில் மூன்று இடைவெளிகளுடன் ஆடப்படுகிறது. குளிர்காலங்களில் ஐஸ் ஹாக்கிக்கு இணையாக உள்ளரங்குகளில் பெரிய ரசிகர் வட்டாரத்துடன் ரசிக்கப்படும் இந்த ஆட்டம் 70 களுக்குப்பின் புகழ் பெற ஆரம்பித்தது. இலகுவான மட்டைகளுடனும் துளைகள் நிறைந்த பந்துடன் ஆடப்படும் இந்த ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சம் கிடையாது.

சிறு வயது முதல் நான் ஏதேனும் பெரிய அரங்கங்களில் விளையாட்டுப்போட்டிகளில் பங்கு பெற வேண்டும் அதில் வெற்றிக்கு நான் காரணமாக இருக்கவேண்டும் என யோசித்துப்பார்ப்பது உண்டு. சிறுவயதில் தெருக்களில் கிரிக்கெட் விளையாடியதுண்டு. எனது சகோதரர்களின் தயவால் ஒரு 10 பந்துகள் மட்டையடிக்க வாய்ப்புக்கிடைக்கும். உட்கார்ந்து கொண்டு ”லாலிபாப்” போல் அடிக்க ஏதுவாக சுழற்பந்து என்று சொல்லிக்கொண்டு பந்து வீசுவேன். அதன் பின் தியாகராசர் பொறியியற் கல்லூரிக்காலங்களில் வெள்ளொளிப்போட்டியில் ஆடியதுண்டு. அதன் பின் ஏழெட்டு வருடம் எந்த விளையாட்டிலும் கவனம் செலுத்த நேரமில்லாமல் போனது. சுவீடனுக்கு மேற்படிப்பு படிக்க வந்த பின் எனது சமூக வாழ்க்கையை அதிகரிக்க ஏதாவது விளையாடலாம் என எனதுக் கல்லூரியின் மாணவர்களுக்கான கலந்தாய்வாளரை அணுகிய போது அவர் ஃப்ளோர்பால் ஆட்டத்தில் நான் கோல்கீப்பராக இருக்க வாய்ப்பு உண்டு என எனது ஊரில் இருக்கும் ஃப்ளோர்பால் குழுமத்திற்கு அனுப்பினார். ஃப்ளோர்பால் ஆட்டத்தில் கோல்கீப்பராக இருப்பவர் நிற்க வேண்டியது இல்லை என்பதால் எனக்கும் அது வசதியாகப்போயிற்று.
இலகுவான பிளாஸ்டிக் பந்து என்றாலும் கோல் கம்பங்களுக்குள் வேகமாக அடிக்கப்படும்போது காயங்களில் இருந்து தப்பிக்க கவசங்களும் வலிதாங்கும் உடைகளும் உண்டு.. மாற்றுத்திறன் உடையவர்களுக்காக மால்மோ என்ற நகரத்தில் நடைபெற்ற மால்மோ-ஓபன் என்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளில் ஃப்ளோர்பால் ஆட்டங்களில் எங்களது அணியும் பங்கு பெற்றது. தொடர்ந்து புதன்கிழமைகள் தோறும் நாங்கள் கடும்பயிற்சி எடுத்துக்கொண்டாலும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியைப்போல போகும் இடங்களிலெல்லாம் உள்ளூர் போட்டிகளிலும் நாங்கள் தர்மசாத்து வாங்குவோம். கடைசிவரை போராடுங்கள் தோல்விப்பற்றி கவலை வேண்டாம் என ஓவ்வொரு முறையும் எங்களது பயிற்சியாளர் சொல்லி அனுப்புவார். எதையெல்லாம் தவிர்த்தால் தோல்வி வித்தியாசம் குறையும் என்று சொல்லி அனுப்புவாரோ அந்த அடிப்படைத் தவறுகளைச் சரியாகச் செய்து 15-0, 19-1, 21-1 5-2 10-1 என சுற்று ஆட்டங்களில் படுதோல்வியைத் தழுவி எங்களது பயிற்சியாளர்கள் முன் அசடு வழிந்தோம்.

கோல்கீப்பர் சேம்-சைட் கோல் போட்ட பெருமையை லுண்ட் என்ற நகர அணியுடன் விளையாடும்போது நான் பெற்றேன். கோல்கீப்பர் பந்தை தடுத்தவுடன் இரு முனைகளிலும் இருக்கும் தனது அணி ஆட்டக்காரரிடம் 5 வினாடிகளுக்குள் எறிய வேண்டும். அவசரத்தில் கைத்தவறி கோல் கம்பங்களுக்குள் எறிந்து எதிர் அணியின் எண்ணிக்கையை 20 ல் இருந்து 21 ஆக்கினேன்.தொலைக்காட்சிப்பெட்டியின் முன்னால் அமர்ந்து கொண்டு கிரிக்கெட் போட்டிகளின் போது “டேய் அல்வா மாதிரி வந்த கேட்சை வுட்டாண்டா, இவனெல்லாம் டீம்ல வச்சுக்கிட்டு இருக்கிறதவிட தூக்கிடலாம்” என்று வர்ணனைக் கொடுத்தது எல்லாம் எளிதான தடுப்புகளை எல்லாம் கோட்டை விட்டபோது நினைவுக்கு வந்து சென்றது.மற்ற அணிகளுக்கு இடையிலானப்போட்டிகளை வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்தபோது மிகப்பெரும் வித்தியாசத்தில் வெற்றிப்பெற போகின்ற அணியின் கோல் கீப்பர் ஒரு கோலை தடுக்க முடியாமல் போனதால் மிகவருத்தம் அடைந்து தனது தலைக்கவசத்தை விட்டெறிந்தார். ஒரு கோலுக்கே அவர் தலைக்கவசத்தை வீசி எறியும்போது 50 கோலுக்கு மேல் விட்டு அரைசதம் அடித்த நான் எனது சக்கர நாற்காலியை அல்லவா விட்டெறிந்து இருக்க வேண்டும் என நினைத்துக்கொண்டேன்.
கடைசி இரண்டு இடங்களுக்கானப் போட்டியில் வெற்றி பெற்றால் 11 வது இடத்தையாவது பெறலாம் என கடைசி ஆட்டத்தில் வெல்ல கடும் பயிற்சி எடுத்துக்கொண்டு 6- 1 என்றக் கணக்கில் வெற்றி பெற்றோம். கிட்டத்தட்ட 10 க்கு மேற்பட்ட கோல்களைத் தடுத்து பயிற்சியாளரின் பாராட்டைப்பெற்ற போது கொஞ்சம் மனநிறைவாக இருந்தது.

ஊருக்குத் திரும்பும்பொழுது பயிற்சியாளரிடம் நான் செய்த அடிப்படைத்தவறுகளினால் சில பல வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளாமல் படுதோல்வி அடைய நேரிட்டது என வருத்தமாகச் சொல்லிக்கொண்டிருந்த பொழுது “விளையாட்டுப்போட்டிகளின் முக்கிய நோக்கமே பங்கேற்பதில் தான் இருக்கின்றது, உன்னுடையப் பங்கேற்பு மற்றவர்களை உற்சாகப்படுத்தியது, அதுதான் நம் அணியின் வெற்றி” என்ற போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

Monday, July 06, 2009

உரிமை இழந்தோம் ....உடமையும் இழந்தோம் ... உணர்வை இழக்கலாமா !!!சோர்ந்து போய் இருக்கும் தருணங்களில் இந்தப்பாடலை ஒருமுறைக் கேட்டுப்பாருங்கள். சோர்வு , வருத்தம், கவலை, வேதனை என எல்லாம் விலகி உத்வேகம் வரும். P.B சீனிவாஸ் மற்றும் ஆபாவாணன் குழுவினருடன் பாட மனோஜ் கியானின் இரட்டை இசையமைப்பாளர்களின் இசையில் ஊமை விழிகள் என்ற படத்தில் இடம் பெற்ற இப்பாடல் தன்னம்பிக்கை ஊட்டும் பாடல்களில் முக்கியமான ஒன்று என சொல்லலாம்.

இந்த அருமையானப் பாடலை எழுதியவர் ஆபாவாணன்.