Tuesday, April 27, 2010

சுவிடீஷ் (Svenska) மொழி - சில குறிப்புகள்

சுவீடனில் தாய் மொழியாகவும் பின்லாந்து நாட்டின் அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாகவும் இருக்கும் சுவிடீஷ் (ஸ்விடீஷ் - Swedish) மொழி வடக்கு ஜெர்மானியக் குடும்பத்தைச் சேர்ந்த மொழியாகும்.ஆங்கிலத்தில் சுவிடீஷ் என அழைக்கப்பட்டாலும் சுவென்ஸ்கா(ஸ்வென்ஸ்கா - Svenska) என்பதே இந்த மொழியின் இயற்பெயர்.

லத்தீன் எழுத்துருக்கள் பயன்படுத்தப்படும் இந்த மொழியில் மொத்த 29 எழுத்துகள் உள்ளன. ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் 26 எழுத்துகளுடன் சுவென்ஸ்கா மொழிக்கானச் சிறப்பு எழுத்துகள் å, ä,ö ஆகியவற்றுடன் இந்த மொழி புழங்கப்படுகிறது.

ஒரு காலத்தில் ஸ்காண்டிநேவியா முழுவதும் புழங்கப்பட்ட பண்டைய நார்ஸ் மொழியின் பரம்பரையில் வந்த சுவிடீஷ் மொழி ஏறத்தாழ ஒரு கோடி மக்களால் பேசப்படுகின்றது. மேற்கு ஸ்காண்டிநாவியாவில் புழங்கப்பட்ட நார்ஸ் , நார்விஜியன் , ஐஸ்லாண்டிஸ்க் மொழியாகவும் கிழக்கில் புழங்கப்பட்ட நார்ஸ் மொழி டேனிஷ் மற்றும் சுவிடீஷ் மொழியாகவும் உருவெடுத்தது. நவீன சுவிடீஷ் மொழியின் வரலாறு அச்சுத்துறையில் ஏற்பட்ட மறுமலர்ச்சியுடன் தொடங்குகிறது.

சுவீடனிம் புகழ்பெற்ற மன்னரான குஸ்டாவ் வாசா ஆணையின் பெயரில் 1541 ஆம் ஆண்டு பைபிளின் புதிய ஏற்பாடு மொழிப் பெயர்க்கப் படுகிறது. இந்த மொழிப் பெயர்ப்பு பழமையான நார்ஸ் மொழியையும் புழக்கத்தில் இருந்த மொழியையும் இணைத்து ஒரு நிலையான சுவிடீஷ் மொழியை உருவாக்க ஒரு காரணியாக இருந்தது. இன்று கொஞ்சி குலாவிக் கொண்டாலும் அந்த காலத்தில் அடிபிடி சண்டையில் இருந்து டேனிஷ்காரர்களின் பைபிள் மொழிப்பெயர்ப்பில் இருந்து வேறுபடுத்தவும் சுவிடிஷின் சிறப்பு உயிர் எழுத்துகள் ö,ä, å இதில் அறிமுகப்படுத்தப்பட்டன. மொழியாக உருவெடுத்திருந்தாலும் 17 ஆம் நூற்றாண்டு வரை
சுவிடிஷ் மொழியின் இலக்கணங்கள் வரையப்படவில்லை. 19 ஆம் நூற்றாண்டில்தான் எழுத்துமுறைகள் நிலைப்படுத்தப்பட்டன.

நகரமயமாக்கல், தொழிற்மயமாக்கல் ஆகியவற்றின் தாக்கத்தில் தற்கால சுவிடீஷின் வளர்ச்சி 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆரம்பிக்கின்றது. இலக்கணம், ஒரேச் சீரான வார்த்தை வடிவமைப்புகள் என சுவீடீஷ் நிலை பெறத் தொடங்கியது. சுவிடீஷ் இலக்கிய வரலாறும் இந்தக் காலக் கட்டத்தில் இருந்து தான் துவங்குகின்றது.

தலைவனாக இருந்தாலும் தொண்டனாக இருந்தாலும் /நீ/ என ஒருமையில் அழைக்கக் கற்றுக்கொடுக்கும் சுவிடீஷ் மொழியிலும் மரியாதைக்குரிய அடைமொழிகள் புழங்கப்பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு ஆங்கிலத்தில் Mr. , Miss, Mrs, எனக்குறிப்பதை herr, fröken , fru எனவும் பிரெஞ்சில் நீங்கள் என்பதை vous எனக்குறிப்பதைப் போல சுவிடீஷில் ni எனவும் 1960 வரைப் புழங்கப்பட்டு வந்திருக்கின்றன. சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகளைச் சீராக்க , மக்கள் அனைவரும் சமம் என்பதை ரத்தத்திலேயே ஊட்ட , வார்க்க வேறுபாடுகளைக் காட்டும் இந்த மரியாதைக்குரிய அடைமொழிகள் அன்றாட வழக்கில் இருந்து மொழிச்சீர்திருத்த நடவடிக்கையில் ஒழிக்கப்பட்டன.

ஒலிப்பியல் (phonetic) மொழியான சுவிடீஷில் எழுத்துகளின் உச்சரிப்புகள் , வேற்று மொழியில் இருந்து கடன் வாங்கிய வார்த்தைகளைத் தவிர , ஏனையவை அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்கின்றன. ஆங்கிலத்தில் cut - put அல்லது through - cough என மாறுபாட்டுடன் ஒலிப்பதைப்போல தொந்தரவுகள் சுவிடீஷில் இல்லை.

9 உயிர் எழுத்துகள்(vowels) குறில் ,நெடில் உச்சரிப்புடன் 18 வகையாக வார்த்தைகளில் உச்சரிக்கப்படும். a,e,i,o,u,y,å,ö,ä . ஏனைய 20 மெய்யெழுத்துகள் (consonants) 23 வகையாக வார்த்தைகளில் உச்சரிக்கப்படுகின்றன. இவற்றின் உச்சரிப்புகளை கேட்டுப் பழக பின் வரும் சுட்டியைச் சொடுக்கவும் http://www2.hhs.se/Isa/swedish/chap9.htm#pronunciation

ஆங்கிலமும் சுவிடீஷைப் போல ஜெர்மானியக் குடும்பத்தைச் சார்ந்ததனால் ஆங்கிலத்தின் நிறைய வார்த்தைகள் பல, எழுதும் முறையில்/உச்சரிக்கும் முறையில் சிறுது மாறுபட்டு அப்படியே பயன்படுத்தப் படுகின்றன. இருந்த போதிலும் சில ஆங்கில வார்த்தைகள் சுவிடீஷ் மொழியில் நேர் எதிரிடையான அர்த்தங்களைத் தரக்கூடும். முத்தத்தைக் குறிக்கும் ஆங்கிலச் சொல் சுவிடீஷில் சிறுநீரைக் குறிக்கும் , இந்த வேறுபாட்டை அறியாமல் காதலியிடமோ காதலனிடமோ பயன்படுத்தினால் என்னவாகும் என யோசியுங்கள்.

http://sv.wikipedia.org/wiki/Lista_%C3%B6ver_falska_v%C3%A4nner_mellan_svenska_och_engelska

படித்த மேற்தட்டு மக்களின் மொழி என 18, 19 ஆம் நூற்றாண்டுகளில் கருதப்பட்ட பிரெஞ்சு மொழியின் தாக்கமும் சுவிடிஷீல் உண்டு. Idé – idée , Dramatik – dramatique , Byrå - Bureau, nivå - niveau ஆகியன சில பிரெஞ்சு வார்த்தைகள் அதே உச்சரிப்புடனும் பொருளுடனும் ஆனால் வேறுபட்ட எழுத்துக் கோர்வையிலும் இருக்கும் சுவிடீஷ் வார்த்தைகள்.

ஆங்கிலத்தில் வாக்கியங்களில் வினைச்சொற்கள் வரும் இடம் மாறுபடலாம். ஆனால் சுவிடிஷில் ஜெர்மன் மொழியைப் போல வினைச்சொல் எப்பொழுதும் இரண்டாம் இடத்தில் தான் இருக்க வேண்டும். ஆங்கிலமோ , ஜெர்மனோ தெரிந்திருந்தால் சுவிடீஷ் மொழியைச் சுலபத்தில் கற்றுக் கொள்ளலாம். சுவிடிஷ் மொழியின் இலக்கணம் மிகவும் எளிது. உச்சரிப்புகளைத் தொடர்ந்த பயிற்சியின் மூலம் கற்றுக்கொண்டால் ஏனைய ஐரோப்பிய மொழிகளைக் காட்டினாலும் எளிதாக கைவசப்படும். குறிப்பிடத்தக்க விசயம் என்னவெனில் நார்விஜியன், டேனிஷ் மொழிகளை சுவிடீஷ் தெரிந்திருந்தால் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். ஏறத்தழ தமிழ் தெரிந்தவர்கள் ஏனையத் திராவிட மொழிகளைப் புரிந்து கொள்ள முடிவது போல்தான்.

எந்த மொழியாக இருந்தாலும் பெரும்பாலானோர் கற்றுக்கொள்ள விரும்புவது 'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்பதை எப்படி அந்த மொழியில் சொல்லுவது என்பதைத்தான்,

jag älskar dig - யாக் எல்ஸ்கார் தெய்க் (புழக்கத்தில் யா எல்ஸ்கார் தெய் எனக் கூறப்படும்).

வேறு சில வாக்கியங்கள்

Vad heter du? - உங்கள் பெயர் என்ன? - வாட் (வா) ஹியத்தர் டு

Jag heter Vinaiooki - என் பெயர் வினையூக்கி - யாக் (யா) ஹியத்தர் வினையூக்கி

Tack så mycket - நன்றிகள் பல - தக் ஸோ மிக்கெத்


மொழித் தெரிந்தால் மட்டுமே அது சார்ந்த நிலப்பரப்பின் கலாச்சாரத்தை உணர்வுப்பூர்வமாகப் புரிந்து கொள்ள முடியும்.அதுவே நாம் அந்த மண்ணிற்கு செலுத்தும் மரியாதையாகவும் இருக்கும். நம் வாழ்வியல் முறைகளையும் வேற்று நாட்டு மக்களுக்கு எளிதில் கொண்டு சேர்க்க முடியும். தமிழ் அடையாளத்தை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்த தாம் வாழும் நிலத்தில் புழங்கப்படும் மொழியைக் கற்றுக்கொள்வது மிகவும் அவசியமாகின்றது. ஆங்கிலம் அகிலத்தின் மொழியாக மாறிவிட்டாலும் கூட, புலம் பெயர்ந்த இடத்தின் மொழியையும் அறிந்து கொள்வது நமது அறிவுக்கும் மட்டும் அல்ல, தமிழுக்கும் வளர்ச்சியாகும் !!.

Saturday, April 24, 2010

சச்சின் டெண்டுல்கர் - சிகரங்களின் சிகரம்

மோகன்தாஸ் கரம்சந்த் காந்திக்குப்பிறகு இந்திய உப கண்டத்தில் மதம், மொழி,இனம், சாதி , தேசம் என அனைத்தையும் கடந்து மக்களால் நேசிக்கப்படுபவர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர். மகாத்மா காந்திக்கு எத்தனை மரியாதை மேற்குலத்திற்கு இருந்தது அதே மரியாதை மதிப்பு, குறைந்த பட்சம் விளையாட்டில் இருக்கும் சமகால இந்தியர் டெண்டுல்கர். சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை ஒரு கட்டுரையில் பட்டியலிட்டு விட முடியாது. சகாபதங்களுக்கு பல தொகுதிகளில் எழுதினாலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.1999 ஆம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டிகளின் போது பெப்சி குளிர்பான விளம்பரம் வரும், எல்லோரும் வருங்காலங்களில் ஓய்வுபெற்றுவிட அசாரூதின் மட்டும் அணியின் தலைவராக இருந்து ஆடிக்கொண்டிருப்பதாக, நிஜத்தில் அந்த விளம்பரத்திற்கு ஏகப்பொருத்தமானவர் சச்சின் ஒருவர் மட்டுமே!! இவருடன் பள்ளியிலும் அப்போதைய பாம்பே அணியிலும் பின்னர் இந்திய அணியிலும் ஆடிய வினோத் காம்ப்ளி இன்று இரண்டாம் தர தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று வருகிறார். திறமை இருந்தாலும் தனிப்பட்ட ஒழுக்கம் ஒரு மனிதனை உயரத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்பதற்கு காம்ப்ளியும் டெண்டுல்கரும் எதிர் துருவ உதாரணங்கள். டெண்டுல்கரை விட நுட்பமான ஆட்டக்காரர் எதிர்கால அணித்தலைவர் எனவெல்லாம் அறியப்பட்ட சஞ்சய் மஞ்ச்ரேகர் இன்று தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளும் டெண்டுல்கர் புகழ்பாடி வருகிறார்.திறமையுடன் தன்னடக்கமும் இருந்தால்தான் சிகரத்தை அடையமுடியும் என்பதற்கு மஞ்ச்ரேகரும் டெண்டுல்கரும் மற்றும் ஒரு நேர் எதிரான உதாரணங்கள். தான் கிரிக்கெட் வானில் நட்சத்திரமாக நிலைத்தபின்னர், வந்த கிட்டத்தட்ட தனக்கு சமமாக ஒளிவீசி ஓய்வுபெற்ற கங்குலியின் நட்சத்திர வாழ்வு கடந்த பின்னரும் சுரேஷ் ரைனாக்களுக்கும் ரோஹித் சர்மாக்களுக்கும் சவால் விடும் வகையில் ஆடிவரும் சூரியனாக டெண்டுல்கர் இருக்கிறார் என்றால் நிச்சயமாக மிகைப்படுத்தல் இல்லை.

முதலில் தனக்காக ஆடிக்கொள்கிறார், பரிசுக்காக ஆடுகிறார் , புகழுக்காக ஆடுகிறார், அணிக்காக ஆடுவது என்பது டெண்டுல்கரின் கடைசித் தேர்வு என டெண்டுல்கரின் மேல் வைக்கப்படும் விமர்சனங்கள் அனைத்துமே மேலோட்டமாக வைக்கப்படுவதே !! டெண்டுல்கரின் புகழ் பாடுவதற்கு முன்னர் அவரின் ஆட்ட புள்ளிவிபர சாதனைகளைப் பார்த்தாலே அவரின் மேல் வைக்கப்படும் விமர்சனங்கள் புஸ்ஸாகிவிடும்.

உலகிலேயே அதிக டெஸ்ட் ஆட்டங்கள் ஆடியவர் என்றப் பெருமைய அடைய இன்னும் இரண்டு டெஸ்ட் கள் மட்டுமே பாக்கியுள்ள நிலையில் மொத்தம் 47 சதங்கள் அடித்துள்ளார். இதில் நான்கு இரட்டைச் சதங்களுடன் மொத்தம் 13,447 ஓட்டங்கள் எடுத்து இருக்கின்றார்.
சச்சின் ஆடியுள்ள 166 ஆட்டங்களில் 56 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி பெற்ற ஆட்டங்களில் 19 சதங்களுடன் 4895 ஓட்டங்கள் எடுத்து இருக்கின்றார். வெற்றி தோல்வி இல்லா டிரா ஆட்டங்களில் இவரின் பங்களிப்பு 18 சதங்களுடன் 5360 ஓட்டங்கள். இதில் பல ஆட்டங்களில் நிச்சயமான தோல்வியில் இருந்து கௌரவ டிராவிற்கு கொண்டு வந்ததில் சச்சின் டெண்டுல்கருக்கு மிகப்பெரும் பங்கு உண்டு. நன்றாக ஆடினாலும் வெற்றி உறுதிச் செய்யப்படும் வரை ஆடுவதில்லை என்றக் குற்றச்சாட்டு டெண்டுல்கரின் மேல் வைக்கப்படுவதற்கு காரணம் சில சதங்கள் மறக்க முடியாத தோல்வி ஆட்டங்களில் வந்ததுதான். ஆனால் அந்த ஆட்டங்களில் தோல்வி அடையாமல் இருந்திருந்தால் அந்த சதங்கள் இந்த அளவிற்கு நினைவு கூறப்பட்டிருக்குமா !!

கிரிக்கெட் இருக்கும் காலம் வரை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான தோல்வி சதத்தை மறக்க முடியுமா !! முதுகுபிடிப்பு இருந்த போதும் 82 க்கு ஐந்து விக்கெட்டுகள் என்ற நிலையில் இருந்து 17 ஓட்டங்கள் எடுத்தால் என்ற நிலை வரை எடுத்துச் சென்ற சச்சின் ஆட்டமிழந்த பின்னர், பின் வந்த வால் ஆட்டக்காரர்களால் மீதம் இருக்கின்ற சொற்ப ஓட்டங்களை எடுக்க இயலாமல் போனதற்கு டெண்டுல்கரை குற்றம் சாட்டுவது நியாயம் ஆகாதே!!
1996 ஆம் ஆண்டு கேப்டவுனில் நடந்த டெஸ்ட் போட்டியில் மிரட்டும் டொனால்ட், மெக்மில்லன் , போலாக்கை சமாளித்து கழுத்து சுளுக்கு பவுல் ஆடம்ஸை கதற வைத்து அசாருதீனுடன் இணைந்து ஆடிய அதிரடி ஆட்டம் தோல்வியில் முடிவடைந்தாலும் கிரிக்கெட் ரசிகர்களால் இன்றும் மீள் நினைவுச் செய்யப்படும். ஆடம் பாக்கர் மட்டும் எல்லைக் கோட்டில் அந்த அற்புதமான கேட்சைப் பிடிக்காவிடில் அன்று டெண்டுல்கர் இருந்த மனநிலைக்கு முன்னூறு ஓட்டங்களே அடித்திருப்பார்.ஐந்து வருடங்களுக்குப்பிறகு பிளொம்ஃபைண்டன் மைதானத்தில் அன்றைய அறிமுக ஆட்டக்காரர் வீரேந்திர சேவக்குடன் பின்னி எடுத்தது என்ன!! தோனிக்கள் யுவராஜுக்களின் காலமாக இன்று மாறிப்போனாலும் டெண்டுல்கர் ஆடினால் அவர் முடித்துக் கொடுத்து விட்டுத்தான் சென்றிருக்க வேண்டும் எனச் சொல்லப்படுவதற்கு சமீபத்திய உதாரணம் கடந்த வருடம் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரு நாள் போட்டி. இமாலய 350 ஓட்டங்களை துரத்தி, மூன்று விக்கெட்டுகள் இருக்கும் நிலையில் 17 பந்துகளில் 19 ரன்கள் எடுக்க வேண்டும் எனும்பொழுது, 175 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்த டெண்டுல்கருக்குப்பின்னர் தேவையான ஓட்டங்கள் எடுக்க முடியாமல் 3 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது.

ஏற்கனவே கேட்ட மெட்டை சிறிது மாற்றி திரும்பக்கொடுத்தாலோ , எடுத்தக் காட்சியமைப்பை திரும்பத் திரைப்படங்களில் காட்டினாலோ சலிப்படையும் ரசிகனை, ஆயிரம் முறை அடித்தாலும் அந்த கவர் டிரைவை வைத்த கண் வாங்காமல் பார்க்க வைக்க டெண்டுல்கரால் மட்டுமே முடியும். அதே போல் படித்த டெண்டுல்கரின் சாதனைகளை மீண்டும் மீண்டும் படித்தாலும் சுவாரசியம் குறைவதே இல்லை.

இன்று (ஏப்ரல் 24, 2010) அன்று தனது 37 வயதை நிறைவுச் செய்யும் சச்சின் ரமேஷைப் பற்றி வெளியுலகம் அறிந்து கொண்டது, டெண்டுல்கர் தனது பள்ளித் தோழன் வினோத் காம்ப்ளி யுடன் இணைந்து இணையாட்டமாக எடுத்த 664 ஓட்டங்கள் எடுத்த பொழுதுதான்.

தனது 15 வது வயதில் குஜராத் அணிக்கெதிராக தனது முதலாவது ரஞ்சிப் போட்டியிலேயே சதம் அடித்து தனது வரவைப் பதிவு செய்தார்.தனது முதலாவது டெஸ்ட் தொடரில் பாகிஸ்தானுக்கெதிராக , அசூர வேகத்தில் பந்து வீசும் வாக்கர் யூனிஸ் பந்தில் முகத்தில் காயமடைகிறார். ரத்தம் சொட்ட சொட்ட துடைத்துக் கொண்டு ஆடி 57 ரன்கள் அடிக்கிறார். அந்த வாக்கர் யூனுஸை பின் வந்த 2003 உலகக்கோப்பையில் புரட்டி எடுத்து அவரின் கிரிக்கெட் வாழ்வை அஸ்தமிக்க வைத்ததில் டெண்டுல்கருக்குப் பெரும்பங்கு உண்டு.

ஒரு நாள் போட்டிகளைப் பொருத்தவரை ஆரம்ப 90களில் கடை ஏழாவது வள்ளலாக களமிறக்கப்பட்டதால் அவ்வளவாக சோபிக்க்காத டெண்டுல்கர், 1994 ஆம் ஆண்டு நியுசிலாந்துக்கு எதிராக துவக்க ஆட்டக்காரராக களம் இறக்கப்பட்டார். ஓவருக்கு நான்கரை அடித்தால் போதும் என்ற காலக் கட்டங்களில் அதிரடியாக ஆடி 49 பந்துகளில் 82 ரன்கள் அடித்தது சகாப்த புத்தகத்தில் மற்றொரு அத்தியாயத்தைத் துவக்கினார். மழைக் காளான்கள் போல சட சட வென துவக்க ஆட்டக்காரராக சதங்களை குவிக்க ஆரம்பித்தார். 96 ஆம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்தது,பின் ஷார்ஜாவில் தொடர்ச்சியான இரண்டு சதங்கள், 1999 உலகக்கோப்பையில் தந்தையின் இறுதிச் சடங்கிற்குப்பின்னர் ஆடுகளத்திற்கு திரும்பி வந்து சதமடித்து இந்திய அணிக்கு உற்சாகத்தை அளித்தது, 2003 ஆண்டு உலகக்கோப்பை ஆட்டங்களில் இறுதி வரைக் கொண்டு வந்து சேர்த்தது என இந்திய கிரிக்கெட் அணி என்றாலே டெண்டுல்கர் என ஆனது நிதர்சனம்.

கங்குலியும் திராவிடும் லக்‌ஷ்மனும் அவரின் சுமையைப் பகிர்ந்து கொண்டாலும் டெண்டுல்கர் எப்பொழுதும் மூலவராகவே இருந்தார். அரசியல், சூழ்ச்சிகள் நிறைந்த இந்திய கிரிக்கெட் சூழலில் சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டவராக டெண்டுல்கர் இருந்தாலும் , சச்சின் சிக்கிய சர்ச்சைகளில் முக்கியமானது 98 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளுக்கு போக விருப்பம் காட்டாமல் இருந்ததும் அன்றைய விளையாட்டுத்துறை அமைச்சர் உமாபாரதியின் நெருக்குதலில் சென்றமையுதாம். இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அணியாக மட்டுமே பன்னாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி, இந்திய தேசிய அணியாக பங்கேற்றதும் இந்தப் போட்டிகளில் மட்டுமே.

பந்தைச் சேதப்படுத்தினார் என நடுவர் மைக் டென்னஸினால் குற்றஞ்சாட்டப்பட, ராமனுக்கு களங்கமா என கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வரிந்து கொண்டு களமிறங்க தென்னாப்பிரிக்கவுடன் ஆன மூன்றாவது டெஸ்ட் போட்டி அங்கீகாரம் இல்லாமலே அரங்கேறியது. பெர்ராரி காருக்கான சுங்கவரி விலக்குப் பெற்றதும், பிரச்சினை வந்தவுடன் பின்னர் அதற்கான வரியை பியட் நிறுவனமே ஏற்றுக்கொண்டு, பிராட்மேனின் சதங்களைக் கடந்தமைக்காக பரிசளித்தது பெருமை என்றாலும் டெண்டுல்கருக்கு சங்கடமான விசயம் ஆனது.

தனக்கு நெருக்கமான அபய் குருவில்லா, சமீர் திகே, ராபின்சிங் , கடைசி கால வினோத் காம்ப்ளி, சில காலம் அகர்கர் என சத்தமே இல்லாமல் அணிக்கு இவர் கொண்டு வந்த ஆட்களும் உண்டு. கிரிக்கெட் சூதாட்டங்களில் நேரிடையாக தொடர்பு இல்லை எனினும் நடந்த விசயங்கள் அரசல் புரசலாக தெரிந்ததை வெளியில் சொல்லவில்லை, ஒரு நாள் போட்டிகளில் துவக்க ஆட்டக்காரராக மட்டுமே ஆடுவேன் என 2003 உலகக் கோப்பைப் போட்டிகளில் கங்குலியிடம் விருப்பத்தை தெரிவித்தது, முல்தான் டெஸ்ட் போட்டியில் 194 ரன்கள் எடுத்திருந்த நிலையில் திராவிட் ஆட்டத்தை டிக்ளேர் செய்தபொழுது தனது வியப்பைக் காட்டியது, என ஆட்டத்திறன் இல்லாத காரணங்களுக்காச் செய்திகளில் வந்தாலும் இவை எல்லாம் பரந்து விரிந்த வெண்ணிற நிலப்பரப்பில் ஆங்காங்கே இருக்கும் சில நுண்ணிய கருப்புத் துகள்தாம்.

மட்டையாட்டத்தில் மட்டுமின்றி, ஆட்டக்களத் தடுப்பிலும் சுழற்பந்து வீச்சிலும் சற்றும் குறைந்தவர் இல்லை என அவ்வப்பொழுது நிறுபித்துக் கொண்டே இருப்பார் சச்சின். பெரும்பாலானோருக்கு ஹீரோ கோப்பையின் இறுதி ஓவரை கோலியாத்தைப்போல இருக்கும் மேக்மில்லனை ஒருமுனையில் நிறுத்தி ரன் எடுக்க விடாமல் தடுத்து வெற்றிக்கனியைப் பறித்துக் கொடுத்தது தான் நினைவில் இருக்கும். ஆனால் இந்த ஆட்டத்திற்கு முன்னோட்டமாக 1991 ஆம் ஆண்டு ‘டை' யில் முடிவடைந்த ஆட்டத்திற்கு காரணகர்த்தாவாக இருந்திருக்கின்றார்.

126 சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்திய அணி, எதிராடிய மேற்கிந்திய அணியை 76 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள் எடுத்து மட்டுப்படுத்தியது. ஆனால் அம்ப்ரோஸும் ஆண்டர்சன் கம்மின்ஸும் தட்டி தட்டி வெற்றி ஓட்டத்தை நோக்கி நெருங்க அம்ப்ரோஸ் ஆட்டமிழக்கிறார். கடைசி ஆட்டக்காரர் பாட்ரிக் பாட்டர்சனும் ஆட்டமிழக்கமால் இந்திய அணியினரை வெறுப்பேற்ற, முக்கிய பந்து வீச்சாளர்களின் 10 ஓவர் கோட்டா எல்லாம் முடிந்து 60 பந்துகளில் 6 ரன்கள் எடுக்க வேண்டிய சூழலில் டெண்டுல்கரை, அணித்தலைவர் அசாருதீன் பந்து வீச அழைக்கிறார். ஸ்கோர் சமமான நிலையில் கம்மின்ஸ் ஆட்டமிழக்க ஆட்டம் சமனில் முடிவடைகிறது.

பாலோ ஆன் வாங்கியும் வெற்றிப்பெற்ற லக்‌ஷ்மன் புகழ் கோல்கத்தா ஆட்டத்திலும் டெண்டுல்கரின் கைவண்ணம் உண்டு. இரண்டு இன்னிங்ஸ்களிலும் டென் - டென் என எடுத்தப்போதிலும் ஆஸ்திரேலியாவின் இரண்டாம் இன்னிங்க்ஸில் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றி வரலாற்றின் வெற்றியில் தன் பங்கும் உண்டு எனக் காட்டிக்கொண்டார்.

அறிமுகம் ஆகி இதுவரை ஒரு போட்டித் தொடரில் கூட நீக்கப்படாத டெண்டுல்கர், 2007 பங்களாதேஷ் அணிக்கெதிரான ஒருநாள் போட்டித்தொடரில் அவரின் விருப்பம் இல்லாமாலேயே ஓய்வு அளிக்கப்பட்டார். வாய்ச்சொல்லில் தனது வீராப்பைக் காட்டாமல் அதன் பின் ஆடிய இரண்டு டெஸ்ட் ஆட்டங்களில் சதமடித்து மட்டையால் பதிலளித்தார்

தற்பொழுது ஐபிஎல் 2010 போட்டிகளில் அணித்தலைவராக கலக்கிக் கொண்டிருக்கும் டெண்டுல்கரின் இந்திய அணியின் தலைமைக் காலம் அவ்வளவு இனிப்பானதாக இல்லை. அணித்தலைவராக ஆடிய 25 டெஸ்டுகளில் நான்கில் வென்று 9ல் தோல்வியைத் தழுவினார். தனக்கு அளிக்கப்பட்ட அணியில் எத்தனை முறைதான் 11 பேருக்காகவும் ஒருவராகவே ஆடுவது, ஒரு நாள் போட்டிகளிலும் டைட்டன் கோப்பை, டோரண்டோ போட்டிகளைத் தவிர வேறு எவற்றிலும் பெரும் வெற்றியைக் காணவில்லை.

எத்தனை ஆட்டங்கள், எத்தனை ஓட்டங்கள். சச்சின் டெண்டுல்கரின் கிரிக்கெட் புள்ளிவிபரக் கணக்கை தோண்ட ஆரம்பித்தால் கணிதத்தின் அத்தனைச் சூத்திரங்களையும் பயன் படுத்தும் அளவுக்கு தேவையான விபரங்கள்.

சந்தன மரம் நாள் பட நாள் படத்தான் அதன் தனித்தன்மையை வெளியேக் கொண்டுவரும்.டெண்டுல்கரும் வயது வயது ஏற ஏற ஆட்டத்திறனும் பலவேறு பரிமாணங்களில் வெளிப்பட்டு வருகின்றது. 20 வருட கிரிக்கெட் உலகில் முடிசூடா மன்னனாகத் திகழும் டெண்டுல்கரின் மணி மகுடத்தில் ஒரு நாள் இரட்டைச் சதம் மற்றும் ஒரு வைரமகா ஜொலிக்கிறது. டைம் நாளிதழ் இவ்வாறாக சொல்லி இருந்தது ”ஒரு மைல் தூரத்தை நான்கு நிமிடங்களுக்கு குறைவாக கடக்கும் சாதனையைப்போல சச்சின் டெண்டுல்கர் ஒரு நாள் போட்டிகளில் இரட்டைச்சதம் அடித்தார்”. சச்சின் டெண்டுல்கரின் இரட்டைச் சதத்தைப் பார்க்க இங்கே சொடுக்கவும்

நிகழ்த்த முடியாது என நினைக்கப்படும் சாதனைகள் நம் காலத்தில் நம் கண்முன்னமே நிகழ்த்தப்படும் பொழுது பெரும்பாலும் அதன் முழு வீரியம் உள்வாங்கிக் கொள்ளப்படுவதில்லை. இந்தச் சாதனைகள் எல்லாம் ஒரே ஏற்பட்டவை அல்ல. திறமை, தனி மனித ஒழுக்கம், தான் இருக்கும் துறையில் ஈடுபாடு, காலத்திற்கேற்ப தன்னைத் தயார்படுத்திக் கொள்ளல், தன்னடக்கம், பயிற்சி என அனைத்தும் ஒரு சேர அமைந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் ஆடும்பொழுது மட்டுமே சாத்தியம் ஆகிறது. தொடர்ந்து எழுதிக் கொண்டே போனால் டெண்டுல்கரின் சாதனைப் புள்ளிவிபரக் குறிப்பாகப் போய்விடக்கூடும். 1992,96,99,2003,2007 ஆகிய வருடங்களில் செய்ய தவறியதை 2011 உலகக் கோப்பையில் ல் செய்து கொடுத்துவிட்டு தன் ஆட்டத்தை டெஸ்ட் போட்டிகளில் தொடர்வார் என்ற நம்பிக்கையுடன் இன்று பிறந்த நாள் காணும் சச்சின் டெண்டுல்கரை வாழ்த்துவோம்.

கிரிக்கெட்டை மதமாக்கி டெண்டுல்கரை தலைமைக் கடவுளாக ஆக்கினால் நாத்திகர்களும் ஆத்திகத்தை ஏற்றுக்கொள்ள ஒரு சந்தர்ப்பம் அமையலாம். பாரதரத்னா போன்ற விருதுகளைக் கொடுத்து டெண்டுல்கரை மீண்டும் அரசியல் ஆக்காமல், அவருக்குப் பெருமைச் சேர்க்கும் விதமாக ஒன்று செய்யலாம், இந்தியக் கட்டுப்பாட்டில் இருக்கு இமாலயச் சிகரங்களுக்கு ஏதேனும் ஒன்றை அவரின்பெயரைச் சூட்டி சிகரத்திற்கு சிறப்பு அளிப்போம்.

Friday, April 23, 2010

அவுட்சோர்ஸ்ட் - Outsourced - திரைப்பார்வை

இந்தியாவின் அடையாளங்கள் என மேற்கத்திய உலகினரால் அறியப்படும் நெரிசாலான ரயில்கள், சண்டை போட்டுக்கொள்ளும் டாக்ஸி டிரைவர்கள் , எருமை மாடுகள், ஹோலிப்பண்டிகை என வழக்கமான அம்சங்களுடன், ஒரு அமெரிக்க ஆள் இந்தியாவில் படும் பாட்டைச் சொல்லப்போகும் படமாக இருக்கும் என 'அவுட்சோர்ஸ்ட்' படத்தை ஆர்வமின்றி பார்க்க ஆரம்பித்தால் என்ன ஆச்சரியம், எதிர்பார்த்ததை விட சுவாரசியமாகவே இருந்தது. டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார் என்ற அளவில் மட்டுமே இன்னும் ஆங்கிலம் இருப்பதால், புரிந்து கொண்ட அளவிற்கு இந்த திரைப்பார்வையைப் பதிகின்றேன்.இந்தியாவின் ஏழ்மைக்கு ஆஸ்கார் வாங்கித் தந்த ஸ்லாம்டாக் மில்லியனர் வெளியாவதற்கு மூன்று வருடங்களுக்கு முன் வெளியான அவுட்சோர்ஸ்ட் ஆங்கில ஹாலிவுட் திரைப்படத்தின் கதை, மும்பையில் காராபுரி என்னும் புறநகர்ப்பகுதியில் அமைந்திருக்கும் அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசியில் சேவை அளிக்கும் மையத்தின் பணித்திறனை அதிகப்படுத்த வரும் அமெரிக்க கதாநாயகனின் பார்வையில் விரிகின்றது.

சாராசரியாக,ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் எடுக்கும் சேவை அழைப்பின் நேரத்தை(MPI - Minutes per Incident) ஆறு நிமிடங்களுக்கு கீழ் குறைக்க வேண்டும் என்ற பணியுடன்வரும் டாட் ஆண்டர்சன் (ஜோஸ் ஹாமில்டன்) எப்படி சக ஊழியர்களை அரவணைத்து (ஊழியர்களில் ஒருவரான கதாநாயகி ஆயிஷா தார்கரையும் தான்)தன்னுடைய நோக்கத்தை செயலாக்குகிறார் என்பதை நகைச்சுவை இழையோடச் சொல்லி இருக்கிறார்கள்.

”என் வேலையை எடுத்துக்கொள்ளப்போறவனுக்கு நானே பயிற்சி அளிக்க வேண்டுமா” என வேண்டாவெறுப்பாக இந்தியா வரும் நாயகனுக்கும் ஹாலிவுட் ரசிகர்களுக்கும் இந்திய ரயில், டாக்ஸி, எருமை மாடு, தெருவோர ஐஸ் என அறிமுகப்படுத்திய பின்னர் Future Call Center Manager என அறிமுகமாகும் புரோகித் நரசிம்மாசார்யா விஜயநாரயணன் (ஆசிப் பஸ்ரா) வருகைக்குப்பின்னர் படம் சூடு பிடிக்கிறது.யாரையும் குறைவாக எடைபோடாமலும் மட்டம் தட்டாமலும் இந்திய விழுமியங்களும் அமெரிக்க விழுமியங்களும் இணையும் புள்ளிகளில் மெல்லியக் காதலுடன் கதையை நகர்த்திச் சென்றிருக்கிறார் இயக்குனர் ஜான் ஜெஃப்கோட்.

நாயகனின் கைபேசியைத் திருடிச்செல்லும் சிறுவன் ஒவ்வொரு கட்டத்திலும் அதைத் திருப்பிக் கொடுக்கும் வகையில் காட்சி அமைத்திருப்பதும் சிறுவனின் ஓவியத்திறமையை நாயகன் ஊக்குவிக்கும் சில நொடிக்காட்சிகளும் பிரமாதம்.முட்டைக் கண்களுடன் கொஞ்சம் முதிர்ச்சியாகத் தெரிந்தாலும் ஆயிஷா தார்க்கர் 'என் அம்மா என் அப்பாவை நேசிக்க கற்றுக்கொண்டாள், நானும் என் கணவனை நேசிக்கக் கற்றுக்கொள்வேன்' எனும்பொழுதும் ‘ஹாலிடே இன் கோவா' விளக்க காட்சிகளிலும் பின்னுகிறார். சிவலிங்கத்தின் காரணத்தை விளக்கிக் கூறும் இடமும் குறிப்பிடத்தக்க்கது.

ஒரு அமெரிக்கனுக்கான சம்பளத்தில் பத்து பேர் வேலைப்பார்த்ததால் இந்தியாவுக்கு வேலைகளை மாற்றிய அமெரிக்க நிறுவனங்கள் அதே சம்பளத்தில் 15 அடிமைகள் சிக்கினால் இங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்றவும் தயங்க மாட்டார்கள் என்ற அரசியலையும் சொல்லத் தயங்கவில்லை. இந்தியாவில் சீனாவிற்கு இடம்பெயரும் கால் செண்டருக்கு நிர்வாகியாக புரொகித்தை நாயகன் பரிந்துரைத்து அனுப்புவது புன்னகையை வரவழைக்கும் நெகிழ்ச்சியான காட்சி.

மூன்றாவது கண்ணாக ஜார்ஜ் வாஷிங்டனில் நெற்றியில் வைக்கப்படும் கதாநாயகியின் பொட்டு, மறுபக்கம் இருக்கும் சேரிக்கும் இந்தப்பக்கம் இருக்கும் மாளிகை வீட்டையும் பிரிக்கும் சுவர், காளியின் படம், இடது கையின் பயன்பாடு, அலுவலகத்து தொலைபேசியை சொந்த அழைப்புக்கு பயன்படுத்தாத வெள்ளைக்காரர்களின் மனோபாவம், காதலி நாயகனின் கைபேசியில் அழைப்பு மணி வைப்பது, தன் உள்ளாடைகள் கூட அயர்ன் செய்யப்பட்டிருக்கிறதே என கேட்கும் நாயகனிடம் உன் அம்மாவாக இருந்தால் செய்ய மாட்டாளா என்பது, அமெரிக்கா திரும்பியவுடன் நாயகி தன் தாயாரிடம் பேசுவது எனப்பல விடயங்கள் ரசிக்கும் படியான விதத்தில் படத்தில் கையாளப்பட்டிருக்கின்றன. டைட்டிலில் கால் தாளம்போடும்படியான மெட்டில் அமைந்த ஹிந்திப்பாடலும் படம் நெடுக வரும் வீணை பின்னணி இசையும் இனிமையாகவே இருக்கின்றன.

மனதை லேசாக்கிக் கொள்ள ஒரு நூறு நிமிடங்கள் உங்கள் மனதை இந்தப் படத்திற்கு வார இறுதிகளில் கண்டிப்பாக ஒரு முறை அவுட்சோர்ஸ் செய்யலாம். படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பு கீழே

Tuesday, April 20, 2010

சோஹைல் அப்பாஸ் - சிறுகதை

மென்பொருள் கட்டமைப்பு மற்றும் தரம் இதை ஆங்கிலத்தில் சொல்வதானால் சாஃப்ட்வேர் ஆர்க்கிடெக்சர் அண்ட் குவாலிட்டி. நாளை மறுநாள் இந்தப் பாடத்தில்தான் இறுதித் தேர்வு இருக்கின்றது. இந்த முறையாவது தேர்ச்சி அடையவேண்டும். அம்முவைத் தவிர வேறு யாருடனும் மின்னரட்டை இல்லை, டிண்டோ பிராஸ் படங்கள் இல்லை எனக் கட்டுக்கோப்பாக படித்துக் கொண்டிருக்கின்றேன். நானும் என் வகுப்பில் சோஹைல் அப்பாஸ் இருவர் மட்டுமே இன்னும் தேர்ச்சி அடையவில்லை. எங்கள் இருவரை விட சுமாராக படிப்பவர்கள் எல்லாம் இந்தப் பாடத்தை சர்வசாதரணமாக தேறி இருந்தார்கள். இத்தனைக்கும் நான் ஐரோப்பிய கல்விமுறையில் சி கிரேடு எடுக்கும் வகை. நம் கல்வியமைப்பில் 75 விழுக்காடுகள் வகையில் வரும். சோஹைல் அப்பாஸ் எப்பொழுதும் ஏ கிரேடு எடுக்கும் ஆள். அதாவது 90 விழுக்காடுகளுக்கும் மேல். அலட்சியமா , இல்லை உண்மையிலேயே எங்கள் இருவரால் பாடத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லையா என்பது தெரியவில்லை.

"இந்தியன், ஹிந்தி நஹி மாலும் வர்ரே வாவ்" என்ற சீண்டும் கேள்விக்கு

" ஐ யம் நாட் ஹியர் டு ப்ரூவ் யூ தட் ஐயம் அன் இண்டியன் ஆர் நாட், டு செட் யுவர் ஃபேக்ட்ஸ் ரைட் , ஹிந்தி இந்தியா கா ராஷ்ட்ரபாஷா நஹி ஹய்" எனற பதிலுடன் எங்களுடைய அறிமுகம் சென்ற வருடம் ஆரம்பமானது. அவனுடன் இணைந்து குழு வேலைகளையும் , ஏனையப் பாடங்களுக்கான கட்டுரைகளையும் எழுதி இருந்ததால் விருப்பு இல்லை என்றாலும் வெறுப்பற்ற ஒரு நட்பு இருந்தது.

நான் இப்பொழுது படித்துக் கொண்டிருக்கும் பாடத்தைத் தேர்ச்சி பெறாவிடில் எங்களுக்கு முதுகலைப் பட்டம் கிடைக்காது. இது ஒரு கட்டாயப்பாடமாகும். கடைசியாக, அறைத்தோழன் அன்பரசனுடன் சோஹைலைப் பார்த்தபொழுது அவன் தன் ஆராய்ச்சிக் கட்டுரையைச் சமர்ப்பித்து விட்டதாகவும் இந்த ஒரு பாடத்தைத் தேர்ச்சி அடைந்துவிட்டால் பட்டம் வாங்கிவிட்டு ஸ்டாக்ஹோல்ம் தொழில்நுட்ப கல்லூரியில் மேலாண்மைப் படிப்பு படிக்கப் போகப்போவதாகவும் சொன்னான்.

மென்பொருள் பொறியியலுடன் மேலாண்மையும் படித்துவிட்டு பாகிஸ்தானுக்குத் திரும்பி ஆசிரியப்பணி செய்ய அவனுக்கு விருப்பமாம். உண்மை என்னவெனில் சுவீடனுக்கு வந்த மாணவர்கள் விசாவை நீட்டிப்பதற்காகவே ஒரு பட்டம் வாங்கி முடிக்கும் முன்னரே இன்னொரு கல்லூரியில் அனுமதிப் பெற்று அங்கும் படிப்பைத் தொடர்வார்கள். நான் கூட அங்கு விண்ணப்பித்து இருந்தேன். சோஹைலுடன் அன்பரசனுக்கும் அனுமதி கிடைத்ததும், நான் காத்திருப்புப் பட்டியலில் இருப்பதும் என்னுடைய சமீபத்திய வயிற்றெரிச்சலுக்கு ஒரு காரணம். வயதுக்கும் தகுதிக்கும் வயிற்றெரிச்சல் படுதல் தவறு என அம்மு சொல்லி இருந்ததால் அதை மட்டுப்படுத்தி நுனிப்புல் மேயாமல் ஆழமாகப் படிப்பதை தொந்தரவு செய்யும் விதமாக ரேஹான் ஜாவேத்திடம் இருந்து அதிர்ச்சி
செய்தியுடன் ஒரு அழைப்பு வந்தது. சோஹைல் அப்பாஸ் டென்மார்க், கோபன்ஹேகனில் இருந்து காரில் திரும்பும் பொழுது சாலைவிபத்தில் மரணமடைந்து விட்டதாக ரேஹான் அழுதுகொண்டே சொன்னான்.

மரணம், ஒருவரின் அபிப்ராயத்தைப் பற்றி எப்படி ஒரு நொடியில் மாற்றிவிடுகிறது. சில நிமிடங்களுக்கு முன்னர் இருந்த சோஹைல் பற்றிய எதிர்மறை எண்ணங்கள் மறைந்து, அவனின் துறுதுறுத்தனம், வகுப்பில் பதில் சொல்லும் விதம்,பழைய இந்திநடிகர் சஞ்சீவ் குமாரின் முகச்சாயல் என அவனைப்பற்றிய நேர்மறை எண்ணங்கள் வந்து விழுந்தன. அவனுக்குப் பிடித்தப் ஹிந்திப் படமாக ஷாருக்கான் நடித்திருந்த சுவதேஷை அடிக்கடி குறிப்பிடுவான். அந்தக் கதாபாத்திரம் அவனுக்கும் ஆதர்சனமாம்.

சோஹைலின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சுவதேஷ் படத்தை இணையத்தில் தேடிக்கண்டுபிடித்து பார்க்க ஆரம்பித்தேன். கல்லூரியில் இருந்த தொழுகை அறையில் அவனுக்காக மறுநாள் நடத்தப்பட்ட இரங்கல் கூட்டத்தில் உருதுக் கவிதை ஒன்றை வாசித்து அவனுக்கு அஞ்சலி செலுத்தினேன். இரங்கலில் செலவிட்ட பகல் கடந்த பின்னர், இரவு கண்விழித்து பாடத்திட்டத்தில் அனைத்துப்பகுதிகளையும் படித்து முடித்து இருந்தேன். தேர்வு நாள் அன்று காலை பத்து சுற்று வோட்கா குடித்ததுப் போல இருந்தது. பல்லை மட்டும் விளக்கிவிட்டு கல்லூரிக்கு அவசரகதியில் சென்று எதிர்ப்பட்டவர்களிடம் என்ன பேசினேன் எனத் தெரியாமாலேயே தேர்வு அறைக்கு வந்துச் சேர்ந்தேன்.

மேகங்களுக்கு ஊடே மிதக்கும் மதமதப்பான மனநிலையிலும் தேர்வுத்தாளில் இருந்த அனைத்துக் கேள்விகளுக்கும் விடைத் தெரிந்தது. கொடுக்கப்பட்டிருந்த மென்பொருள் தயாரிப்பு தேவைக்குறிப்புகளுக்கு அழகாக கட்டமைப்பு திட்டம் வரைந்து விட்டு அனைத்துக் குறுவினாக்களுக்கும் விடையளித்து மூன்று மணிநேரத்தில் விடைத்தாள்களை அறை பொறுப்பாளியிடம் கொடுத்தபொழுதுதான் ஒரு அதிர்ச்சிக் காத்திருந்தது. விடைத்தாள்களில் சோஹைல் அப்பாஸின் பெயரையும் அவனின் எண்ணையும் எழுதி வைத்திருந்தேன். சோஹைல் அப்பாஸ் உயிருடன் இல்லை, இரண்டு நாட்களாக அவனைப்பற்றி யோசித்துக் கொண்டிருந்ததில் விடைத்தாளில் அவனின் பெயரை எழுதிவிட்டேன் என விளக்கம் கொடுத்துத் தப்பி வந்தாலும் மனதினுள் இருந்த ஒரு உறுத்தல் அறையில் வந்து தூங்கியதில் மறைந்துப் போனது.

மறுநாள் "யுவர் உருது ஈஸ் எக்ஸலண்ட் மேன்" எனவும் , இவ்வளவு நாள் ஏன் உருது மொழியில் பேசவில்லை எனவும் பாகிஸ்தானிய நண்பர்கள் கோவித்துக் கொண்டனர்.

"நான் உருதுப்பேசினேனா " என அடிவயிற்றைக் கலக்கினாலும், ஏக் கவுர் மே எக் கிசான் வகையில் நான் கற்ற தூர்தர்ஷன் இந்தி, தேர்வுநாளன்று எதிர்ப்படும் பாகிஸ்தானிய மாணவர்களிடம் வந்து விழுந்து இருக்கலாம் என மனதைத் தேற்றிக்கொண்டேன். எனக்கு நானே கொடுத்துக் கொண்ட ஆறுதல் ஆறு மாதங்கள் கூட நீடிக்கவில்லை. எழுதியப் பரிட்சையில் ஏ கிரேட் வாங்கி, ஆராய்ச்சிக்கட்டுரையிலும் சி கிரேடுடன் தேறி, வேலைத் தேடும் படலத்திற்காக ஸ்டாக்ஹோல்ம் நகரத்தில் அன்பரசனின் அறைக்கு இடமாற்றம் செய்த முதல்நாள்வரை எதுவுமே பிரச்சினை இல்லை.

"கார்த்தி, இங்கே வந்த பின்னாடி எல்லாத்துலேயும் ஏ கிரேட் தான்" அன்பரசன் என்னைப்போல சோம்பேறியாக இருந்தாலும் கெட்டிக்கார கற்பூரபுத்தி பையன்.

தமிழில் என்னுடன் உரையாடிக்கொண்டிருந்த அன்பரசன் அறைக்கு வந்த சில பாகிஸ்தானிய நண்பர்களுடன் சரளமாக உருதுவில் பேச ஆரம்பித்தார். கற்பூரபுத்தி உடைய இளைஞன் என்றாலும் ஆறு மாதங்களில் ஒரு மொழியை இவ்வளவு சரளமாக பேச வாய்ப்பே இல்லை. என மன ஓட்டத்தைப் புரிந்து கொண்டதைப்போல, அன்பரசன் என்னை நோக்கித் திரும்பி

"கார்த்தி, நான் பேசுறது உருது இல்லை, பஞ்சாபி பாகிஸ்தானில் 40 சதவீத மக்களின் தாய்மொழி " எனத் தமிழில் சொல்லிவிட்டு பாகிஸ்தானிய நண்பர்களுடன் உரையாடலைத் தொடர்ந்தார். என்னைத்தான் யாரோ நான் முன்பு வரைந்திருந்த மென்பொருள் கட்டமைப்பு வரைபடங்களில் சுருக்கி திணிப்பதை போன்ற உணர்வுடன் படுக்கையில் சாய்ந்தேன். யூன் ஹி சலா சல் ராஹி யூன் ஹி சலா சல், கித்னி ஹஸீன் ஹாய் யே துனியா எனத் தொடங்கும் சுவதேஷ் படத்தின் பாடல் ஒலிக்கத் தொடங்கியது. எனக்கும் இப்பொழுது இந்தப் பாடலின் வரிகள் அச்சர சுத்தமாகப் புரிய ஆரம்பித்தது.

Monday, April 19, 2010

When you desire something, the universe conspires to help you to realize the dream - சிறுகதை

தூக்கமில்லாத கண்கள் ஜிவ்ஜிவு என எரிச்சலைத் தந்து கொண்டிருந்தன.தலைகீழாக கவிழ்த்தும் நான்கு சொட்டுகளுக்கு மேல் தேராதபொழுதுதான் பிளாஸ்க்கில் கொண்டு வைத்திருந்த வீட்டுக் காப்பியும் தீர்ந்துப் போய்விட்டது தெரிந்தது.சுவீடனில் செலவு செய்யும் ஒவ்வொரு க்ரோனருக்கும் ஏழால் பெருக்கி தனிக்கணக்குப் போட வேண்டியது இருப்பதால் வெளியே எங்கேயும் சாப்பிட மனது ஒப்புக்கொள்வதில்லை. நார்வே தலைநகர் ஓஸ்லோவுக்கான ரயில் கிளம்ப இன்னும் ஒரு மணி நேரம் இருக்கின்றது.பல்லவனுக்கு வைகைக்கும் அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடும் சென்னை எழும்பூரின் காலைப் பரபரப்பில் நூறில் ஒரு பங்கு கூட இல்லை. கோட்டும் சூட்டுமாக நாளிதழ்களைப் புரட்டிக்கொண்டு இருந்த மக்களை வேடிக்கைப் பார்த்தபடியே தானியங்கி மெஷினில் காப்பி எடுத்துக் கொண்டுத் திரும்புகையில், மற்றும் ஒருமுறை மனதினுள் இந்த ஒட்டுமொத்தப் பயணமும் அனாவசியமனதோ எனத் தோன்றியது.


நான் வசிக்கும் கார்ல்ஸ்க்ரோனாவில் நேற்று மாலை ஐந்தரைக்கு கிளம்பி,எம்மபோடா வில் ரயில் மாறி கோதன்பர்க் வந்து சேர்ந்தபொழுது இரவு 10 மணி. வாழ்வின் பல முக்கியக் கட்டங்களை ஒத்திப்போட்டு ரசிக்க ஏதுவானவை ரயில் பயணங்களும் ரயில்நிலையங்களும் தான் என்றாலும் என் வாழ்வில் கடந்துப்போன மிதமிஞ்சிய முக்கியக் கட்டங்களும் சலித்துப்போகின்ற வகையில் ஏற்பட்ட ரயில் பயணங்களும் மலரும் நினைவுகளைச் சிலாகிக்க வைக்கவில்லை.கதை எழுத கரு வேண்டுமே என்ற ஒரு காரணத்திற்காக மக்களை உன்னிப்பாக கவனிப்பதுண்டு. வழியனுப்ப வந்த காதலர்கள், தம்பதியினரின் முத்தங்களை ரசனையுடன் பார்த்துக்கொண்டே கையில் பவுலோ கோயல்ஹோ எழுதி இருந்த வால்கெய்ரிஸ் புத்தகத்தை வைத்து வாசிப்பதைப் போல பாவனை செய்து கொண்டிருந்தேன்.


வால்கெய்ரி என்றால் ஸ்காண்டிநேவியா நார்ஸ் புராண நம்பிக்கைகளின் படி போரில் கொல்லப்படுபவர்களைத் தேர்ந்தெடுக்கும் பெண்.ஆனால் வால்கெய்ரிஸைவிட பவுலோ கோயல்ஹோவின் அல்கெமிஸ்ட் புத்தகம் தான் பிரசித்திப்பெற்றது. என் காதல் வாழ்க்கைகளில் தகரத்தை தங்கமாக மாற்றும் அல்கெமிஸ்ட்டாக என்னையும் , வால்கெய்ரிகளாக என் காதலிகளையும் உணர்ந்ததுண்டு. இந்த இரண்டு புத்தகங்களையும் குறைந்தது 10 தடவையாவது படித்து இருந்தாலும், ரயில் பயணங்களில் நான் அறிவுசார்ந்த சமுதாயத்தைச் சார்ந்தவன் என்பதைக் காட்டிக்கொள்ள இரண்டில் ஏதாவது ஒன்றை கையில் வைத்துக் கொள்வதுண்டு.நவீன ரக ரயில்கள் ஓடினாலும் கோதன்பர்க் யார்ன்வெகன்ஸ்டாஹூனனின் (järnvägenstationen)கட்டிடம் பழமையின் செழுமை மாறாமலே இருந்தது. யார்ன்வெகன்ஸ்டஹூனைன் சரியான மொழிப்பெயர்ப்பு இருப்புப் பாதை நிலையம்.யார்ன் என்றால் இரும்பு, வெகன் பாதை எனப்பொருள் தரும். நம்ம ஊரிலும் இப்படித்தானேபெயர்ப்பலகைகளில் போட்டிருப்பார்கள்.வேறு வேலை இல்லாததால் மொழி ஆராய்ச்சியும் செய்து கொண்டிருந்தேன்.

கோதன்பர்க் நகரின் மையச் சாலைகளில் புதுமையின் சமகால வடிவங்களுடன் போட்டிப்போட்டுக்கொண்டு பழங்கால டிராம்களும் ஓடிக்கொண்டிருந்தன. நேற்றிரவு ஒரு நிலையத்தில் டிராமில் ஏறி கடைசி மறு நிலையம் வரைப்போய் அதிலேயே திரும்பி வந்து கொண்டிருந்ததில் நள்ளிரவு வரை ஓடியது.அதன் பின் வசந்தகால குளிரில் ரயில்நிலையத்திற்கு அருகில் இருக்கும் தெருக்களில் ஒருச் சுற்று. அரைகுறை சுவிடிஷில் டாக்ஸி டிரைவர்களுடன் உரையாடல் என நேரம் ஓரளவிற்கு சுவாரசியமாகவே கொல்லப்பட்டது.மதியம் ஓஸ்லோவில் வாசுகியைப் பார்த்துவிட்டு இன்று மாலையே கடைசி ரயிலைப் பிடித்து திரும்ப வரவேண்டும். நேற்றிரவைப் போல இன்றிரவும் இதே கோதன்பர்க் நகர்வலத்தில் தான் பொழுது கழியும். ஆனால் இன்று வெள்ளிக்கிழமையாதலால் ஏதாவதுநடன விடுதிக்குப் போய் இரவு தீரும் வரை ஆட்டம் போடலாம். ஸ்டாக்ஹோல்ம் செல்லும் x2000 அதிவேக ரயில் வண்டியின் முன்பக்கம் நின்று என்னை நானே புகைப்படம் எடுத்துக்கொண்டு திரும்ப எனது பிளாட்பாரத்திற்கு வந்தேன். இது போன்ற படங்களின் மூலமாகத்தான் எங்களின் வெளிநாட்டு வாழ்க்கையை பறைசாற்ற வேண்டி இருக்கின்றது. உண்மையில் நான்
வாசுகியைப் பார்க்கப்போவதற்காக மகிழ்ச்சி அடைய வேண்டும். மகிழ்ச்சி இல்லாவிடினும் சலிப்பு இல்லாமல் ஆவது இருக்கவேண்டும்.ஆனால் ஒவ்வொரு மறுநொடிக்கும் சலிப்பும் பயணச் செலவு 2000 க்ரோணர்களுமே மனதில் வந்து நிற்கின்றன.

வாசுகி என் வாசகியாக மீள் அறிமுகம் ஆனவள். கல்லூரியில் ஜூனியர். கடைசி வருடத்தில் என்.எஸ்.எஸ் காலங்களில் கடலைப்போட்ட பல பெண்களில் இவளும் ஒருத்தி. முகச்சாயலில் பழைய நடிகை நிரோஷா மாதிரி இருப்பாள். கல்லூரியில் பார்த்தபொழுது ஒல்லியாக இருந்தவள் தற்பொழுதைய ஆர்குட் புகைப்படங்களில் முன்பைவிட கொஞ்சம் பூசினாற்போல இருக்கிறாள்.

"தமிழ் திகில் கதைகள் அப்படின்னு கூகிளில் போட்டதில உங்க வெப்சைட் கிடைச்சது, அப்படியே உங்க கதைகள் எல்லாம் படிச்சேன் !!! வாவ் ,ரியலிஸ்டிக் ரைட்டிங்" இப்படித்தான் ஆர்குட் அழைப்பிதழுடன் ஆறு மாதங்களுக்கு முன்னர் வாசுகி திரும்ப வந்தாள். அப்பொழுது அம்மு விட்டுவிட்டுப்போன சமயம், ஆறுதலுக்கு யார் பேசினாலும் நல்லா இருக்கும் என்ற நிலையில் ஏற்கனவே அறிமுகம் ஆன வாசுகியின் நட்பு வரவேற்கத்தக்கதாகவே இருந்தது.

ஓஸ்லோ ரயிலுக்கான அறிவிப்பு மும்மொழிகளிலும் வர கைப்பெட்டியைத் தள்ளிக்கொண்டே எனது ரயிலுக்குள் ஏறி அமர்ந்தேன். ஐரோப்பிய நாடுகளில் ஒரு சிறப்பு என்னவெனில் அறிவித்த நேரத்திற்கு வண்டியை எடுப்பார்கள். சொன்ன நேரத்தில் வண்டி நகரத் தொடங்கியதுமேதான் வாசுகிக்கு எந்த அன்பளிப்புமே வாங்கிக் கொள்ளவில்லையே என நினைவுக்கு வந்தது. இந்த நாட்டு மக்களைப்போல ஒரு பூங்கொத்து அல்லது பூச்செடியையாவது வாங்கி இருந்திருக்கலாம். பெட்டியில் வைத்திருக்கும் அல்கெமிஸ்ட் புத்தகத்தைக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிடலாம் என்றால் , என்னுடைய முன்னாள் காதலிகள், ஈர்ப்பு ஏற்படும் பெண்கள் அனைவருக்கும் நான் வாங்கி பரிசளிப்பது இதே அல்கெமிஸ்ட் புத்தகத்தைத் தான். எல்லா நட்புகளுமே நட்டாற்றில் விடப்பட்டதால் கெட்ட சகுணமாக, கொடுக்க வேண்டாம் என முடிவு செய்தேன். ரயில் வேகம் எடுக்க எடுக்க, வாசுகியுடன் ஆன பழைய உரையாடல்கள் கோர்வையின்றி மனதில் மறு ஒலிபரப்பு செய்ய ஆரம்பித்தன.


”கார்த்தி, நான் நார்வே வர்றேன், வுட் கன்சர்வேசன் பத்தின ஒரு ஆர்க்கிடெக்சர் கோர்ஸுக்கு வரேன், 15 டேஸ்”

“ஓ அப்படியா !!”

“என்ன கார்த்தி எக்ஸைட்மெண்டே காணோம் !!”

“ச்சே சந்தோசம் தான்... எங்கே தங்குவீங்க !!”

“அத்திம்பேர் சைட் ரிலேட்டிவிஸ் ஓஸ்லோல இருக்காங்க, அங்க தங்கிடுவேன்”

அவள் சொன்னதைப்போலவே நான் ஆர்வமின்றி தான் கேட்டுக்கொண்டிருந்தேன். முதல் இரண்டு காதல்களைப்போல இந்தக் காதலில் பெரும் நாட்டம் இல்லை. நாட்டம் என்பதை விட முன்பு பேசிய அதே வசனங்களைப் பேச, கேட்க வேண்டிய கட்டாயம். ஒரு காதலுக்கும் இன்னொரு காதலுக்கும் குறைந்த பட்சம் இரண்டு வருடங்கள் இடைவெளியாவது தேவை என்ற எண்ணத்துடம் படிப்பில் மட்டும் கவனம் செலுத்திக்கொண்டிருந்த பொழுது, “வாசகி,உன் வாசுகி வள்ளுவன் இந்த வாசுகி” நான் அவ்வளவாக கேட்டிராதா ஒரு பாடலை தனக்கு ஏற்றவாறு ஸ்கைப்பில் பாடி காதலிப்பதாகச் சொன்னாள். என் வாழ்க்கையில் மூன்றாவதாக ஒரு பெண் தன் காதலை நயமாக சொல்வது பிடித்து இருந்தாலும், கடந்த கால கசப்புகள் தொண்டைக்குழியில் இன்னும் நஞ்சாய் சிக்கிக் கொண்டு இருந்ததால் உடனடியாக அவளுக்கு சம்மதம் சொல்லவில்லை.

ஒவ்வொரு இரவு ஸ்கைப்பில் நடக்கும் அரட்டையிலும் நான் எழுதி இருக்கும் ஒவ்வொரு கதையைப் பற்றியும் வரிக்கு வரி விவரிப்பாள்.

“கார்த்தி, எப்படிடா, ஜெனியும் அம்முவும் உன்னை இவ்வளவு ஹர்ட் பண்ண பிறகும், அவங்களை கேரக்டர் அசாசினேட் பண்ணாமல் கதைகளில் எழுத முடியுது, நீ ஒரு ஜெண்டில்மேன்... ஐ லவ் யூ ஸோ மச்”

ஐ லவ் யூ என்ற வாக்கியத்தைக் கேட்கும்பொழுதே அசூயையாக இருப்பதையும் கதைகளில் அவர்களைப் பற்றி எழுதுவதே நான் அவர்களுக்குத் தரும் தண்டனை , அதைவிட வேறு என்ன வேண்டும் என சொல்லத் தோன்றியது.

"நான் அம்முவாகவோ இல்லாட்டி ஜெனியாவோ இருந்திருந்தால் உன்னை மிஸ் பண்ணி இருந்திருக்கவே மாட்டேன்”

எனக்குச் சிரிப்பை அடக்க முடியாமல் “அம்மு கூட இப்படித்தான் சொன்னாள், ஜெனி இடத்தில அவ இருந்திருந்தா என் கூட ஓடி வந்திருப்பாள்னு”

ஸ்கைப் வீடியோவில் அவள் அழப்போவது தெரிந்தது. “உன்னோட அவளுக மாதிரி டைம் பாஸுக்கு பேசுறேன்னு நினைக்கிறீயா, இந்த ஆர்க்கிடெக்சர் வேண்டாம், அம்மா அப்பா வேண்டாம், பிரண்ட்ஸ் வேண்டாம், சம்பிரதாய் எதுவுமே வேண்டாம், எல்லாரையும் விட்டுட்டு வந்துடுறேன்”

“அம்மாடி நீ யாரையும் விட்டுட்டு வரவேண்டாம், எல்லாம் நடக்கிறபடி நடக்கட்டும், கீறி தழும்பான இடத்தில இன்னொரு தடவை கீறல் பட்டுச்சுன்னா தாங்க முடியாது”

“கார்த்தி, நீ இல்லாட்டி நடைபிணமாத்தான் இருப்பேன்”

இப்படித்தான் நானும் சொன்னேன், என் காதலிகளும் என்னிடம் சொன்னார்கள். ஒருத்தி இரட்டைக்குழந்தைகளுடனும் இன்னொருத்தி எதிர்கால வாரிசை சுமந்தபடியும் சுகமாகத்தான் இருக்கிறார்கள். நானோ ஒன்றுக்கு இரண்டாய் காதலித்து மூன்றாவதில் இருக்கின்றேன். உலகத்தில் பணம் புகழ் பதவி இவைகளை விட மனிதன் காதலுக்காகத்தான் காதலில் தான் அதிகம் பொய் சொல்கின்றான்.

ஒரு நாள் வாசுகி அழுது ஆர்ப்பாட்டம் செய்தபின்னர் முன்னிரண்டு பெண்களை விட வாசுகியைத் தான் அதிகம் காதலிப்பதாக சொன்னேன். முழுப் பொய் இல்லை, காதலிப்பது உண்மை . அதிகம் என்ற சொன்னதில் தான் உண்மை பாதியாக்கப்பட்டது. என் வாழ்வில் ஒன்றிற்கு மேற்பட்ட சீதைக்கள் வந்திருந்தாலும் ஒவ்வொரு சீதைக்கும் அந்த அந்த காலக்கட்டங்களில் அவர்களுக்கு நான் ராமனாகத்தான் இருந்திருக்கின்றேன். இந்த சீதைக்கும் ராமனாக இருக்க முடிவு செய்தேன், இந்த சீதை வனவாசம் போகும் வரை.

எப்பொழுது இந்தியா வரலாம் எனத் திட்டமிட்டுக் கொண்டிருந்த பொழுதுதான் வாசுகிக்கு இந்த நார்வேப் பயணம் அமைந்தது. அவளுடன் நான் பதினைந்து நாட்களும் இருக்க வேண்டும் என்பது அவளின் ஆசை. எனக்கு நார்வேயில் தங்க யாரையும் தெரியாது. அவளின் அத்திம்பேர் உறவினர் வீட்டிற்கு வந்துப் பார்க்க கூட அவள் அனுமதிக்கவில்லை. அவளுடன் வெளிநாட்டில் 15 நாட்கள் தங்கி காதலிக்கும் அளவிற்கு பொருளாதாரமும் இடம் தரவில்லை. முன்பு அம்மு அவளின் நிறுவன ஆண்டறிக்கைக் கூட்டத்திற்கு பெங்களூருக்குச் சென்றபொழுது அவளின் அக்கா வீட்டில் அவள் தங்கிக் கொள்ள நான் ஒரு வாரம் விடுதியில் தங்கி தேவுடு காத்துக் கொண்டிருந்தது எலலாம் தேவை இல்லாமல் நினைவுக்கு வந்தது. எல்லாப் பெண்களும் ஒரே மாதிரிதான். பேசவேண்டும், ஆறுதல் வேண்டும். ஆனால் வீட்டுக் தெரியக்கூடாது. வீட்டிற்குத் தெரியும் வரை காதலிகளைப்போல தைரியசாலிகளைப் பார்க்கவே முடியாது.

ஒரு வழியாக பல கோணங்களையும் சிந்தித்து ஓஸ்லோ ரயில்நிலையத்தில் நான்கு மணிநேரம் சந்திப்பது என முடிவாகியது. சந்திப்பின் திட்டம் நிறைவேற இன்னும் ஒரு மணி நேரம் தான். கிட்டத்தட்ட ஐந்தாறு வருடங்கள் கழித்துப் பார்க்கப்போகின்றேன். என்னதான் மணிக்கணக்கில் ஸ்கைப்பில் மின்னரட்டையில் பேசி இருந்தாலும் நேரில் பேசுவதைப்போல் வருமா !!! ஓஸ்லோ நகரத்தின் வானுயர்ந்த கட்டிடங்களை எல்லாம் நொடிப்பொழுதுகளில் கடந்து ஓஸ்லோ ரயில்நிலையத்தை அடைந்தது. கண்ணாடி சன்னலுக்கு வாசுகியின் கண்கள் என்னைத் தேடிக்கொண்டிருப்பது என் கண்களுக்கு முன் மனதிற்கு புலப்பட்டது.“சீனியர் ... நான் வாசுகி, வாசுகி திருவேங்கடம்” என ரயிலை இறங்கியவுடன் நேருக்கு நேர் வந்து நின்று சொன்னாள். இப்படித்தான் என்.எஸ்.எஸில் என்னிடம் வந்து அறிமுகப்படுத்திக்கொண்டது நினைவுக்கு வந்தது.

“ஆய்தஎழுத்து மாதிரி விடாம கட்டிப்பிடிப்பேன்னு சொன்னீங்க, எதையும் காணோம்” எனத் தோளில் இடித்தபடிக் கேட்டாள்.

பயணக்களைப்பு , முன் தோன்றிய எண்ணங்களினால் ஏற்பட்ட சலிப்பு எதுவுமே இப்பொழுது இல்லை. உற்சாகம் ஒரு தொற்றுவியாதி. அவளின் உற்சாகம் , காதலுடன் உபரியாக வந்து ஒட்டிக்கொண்டது. நடைமேடையில் இருந்த ஒரு பெஞ்சில் உட்கார வைத்து வீட்டில் எடுத்து வந்திருந்த பிளாஸ்க்கில் காப்பி ஊற்றிக் கொடுத்தாள்.

“இட்லி சாப்பிடுறியா !! நான் செஞ்சு எடுத்துட்டு வந்தேன்”

ஒரு கையை தாடையில் ஊன்றியபடியே நான் சாப்பிடுவதை ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தாள். கல்லூரிக்கதைகள், என்னை கல்லூரிக்காலங்களிலேயே எவ்வளவுப்பிடிக்கும் என்பதை அபிநயம் செய்து காண்பித்தாள். ஏற்கனவே பலமுறை தொலைபேசியில் சொல்லக் கேட்டிருந்தாலும் அலுக்கவில்லை.

“நீ என்கிட்ட ஸ்லாம்புக்ல சைன் வாங்குவேன்னு நினைச்சே , கடைசி வர வரவே இல்லை அபிஷ்டு” இதுவும் ஏற்கனவே நிறையதடவைச் சொல்லி இருக்காள்.

அவள் ஒவ்வொரு வாக்கியம் பேசி முடிக்கும் போதெல்லாம் “ஐ லவ் யூ” என பதில் சொன்னேன்.

“திருப்பரங்குன்றத்தில் ஏற்பட்ட அறிமுகம் எங்கே கொண்டுவந்து விட்டிருக்குப்பாரு”உனக்கான பொக்கிஷம் உன் காதல் இருக்கும் இடத்தில் தானாகவே வந்து சேரும் பவுலோ கோயல்ஹோ அல்கெமிஸ்ட்டில் சொன்ன வாக்கியம் நினைவுக்கு வந்துச் சென்றது. பொக்கிஷங்கள் காதல் என்ற பொட்டலத்தில் தான் வருகின்றன. அந்த பொட்டலம் கருநீல முழுக்கைச் சுடிதாரை அணிந்து கொண்டு என் முன்னால் உட்கார்ந்து இருந்தது. கடிகாரை முள்ளை யாரோ கை வைத்து நகர்த்திவிட்டது போல நான்கு மணி நேரம் சென்றதே தெரியவில்லை. கோதன்பர்க் செல்லும் ரயில் வர, தன் கைப்பையைத் திறந்து அழகாக அட்டையிடப்பட்டிருந்த பரிசுப்பொருள் ஒன்றைக் கொடுத்தாள்.

“இங்கேப் பிரிக்காதே !! டிரெயின் கிளம்பின பின்ன பிரி”

வழியனுப்ப ஏனைய பயணிகளின் துணைகள் முத்தமிட்டு பிரியாவிடைப் பெற்றுக்கொண்டிருக்க, வாசுகியிடம் கைக்குலுக்கி விடைபெற்றேன்.

கவனமாக அட்டையைப்பிரித்து உள்ளே என்ன இருக்கிறது எனப்பார்த்தேன். The Alchemist பவுலோ கோயல்ஹோவின் புத்தகம். முதல் பக்கத்தில் ”நீ விரும்பும் விசயங்களை, கண்டிப்பாக அடைய நினைத்தால், அவற்றை அடையும் பொருட்டு இந்த உலகமே உனக்கு உதவிச் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கும், ” என தமிழில் எழுதி வாசுகி திருவேங்கடம் என கையொப்பமிட்டிருந்தாள்.

Saturday, April 17, 2010

பனிமலைகளில் எரிமலைகள் - ஐஸ்லாந்து

ஐஸ்லாந்து, பிரிட்டனுக்கு வடமேற்கே வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் இருக்கும் தீவுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய நாடாகும். தன்னிறைவு பெற்ற நாடு என அறியப்பட்ட ஐஸ்லாந்து பொருளாதார மந்தநிலையின் ஒரு பகுதியாக, நாட்டின் முக்கிய மூன்று வங்கிகள் நிதி நெருக்கடியில் சிக்கிய பொழுது உலகசெய்திகளில் அடிபட்டது. இந்த நாட்டை விற்க ஈபே இணையதளத்தில் விளையாட்டாக ஏலம் கூட நடந்தது. கடந்த இரண்டு மூன்று தினங்களாக ஐஸ்லாந்து மீண்டும் செய்திகளில் அடிபட ஆரம்பித்துள்ளது. பனிமலைகள் அடர்ந்த பனிபிரதேச நாட்டில் இருக்கும் எரிமலைகள் உமிழ ஆரம்பித்ததில் உருவான சாம்பல் மேகங்கள் வான் வெளி மண்டலத்தில், குறிப்பாக ஐரோப்பா கண்டத்தில் மேலாக விரவியதனால் வான்வெளிப்போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

ஐரோப்பாசிய கண்டத்தகடையும் வட அமெரிகக்க கண்டத்தகடையும் பிரிக்கும் மத்திய அட்லாண்டிக் முகட்டுத்தொடரின்(Mid-Atlantic ridge) மேல் இந்த ஐஸ்லாந்து நாடு அமைந்துள்ளது. கண்டத்தகட்டுகளைப் பிரிக்கும் இது போன்ற ஆழ்கடல் முகட்டுத்தொடர்களில்தான் புவியின் உள்ளிருந்து வெளியே வரும் கற்குழம்பை கக்கும் முகத்துவாரங்கள் எரிமலைகளாக அமைந்துள்ளன. ஏறத்தாழ 35 செயலில் இருக்கும் எரிமலைகளை உள்ளடக்கிய ஐஸ்லாந்து தீவில் ஹெக்லா, காட்லா மற்றும் கிரிம்ஸ்வோத்ன் என்ற மூன்று பெரிய எரிமலைகல் மத்திய அட்லாண்டிக் ஆழ்கடல் முகட்டுத்தொடரில் அமைந்துள்ளன. ஐஸ்லாந்தில் மக்கள் குடியேற்றம் ஏற்பட்ட பிறகு எரிமலை வெடிப்பில் மிகப்பெரியது கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள கிரிம்ஸ்வொத்ன் எரிமலையும் லாகி என்ற
மற்றொரு எரிமலையும் ஒரே சமயத்தில் வெடித்ததுதான். 1783 முதல் 1785 வரை லாவாக் குழம்பைக் கக்கி கால்வாசி மக்களை காவு கொண்டது மட்டுமல்லாமல் , எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட சாம்பல் மேகம் விவாசாயத்தைப் பாதித்ததோடு மட்டுமல்லாமல் மண்ணையும் நச்சுத்தன்மை வாய்ந்ததாக மாற்றியது.


தற்போது இரண்டு முறை வெடித்து இருக்கும் ஈயபியலக்யுல்(Eyjafjallajökull) என்ற எரிமலைதான் ஐரோப்பாவின் இன்றைய அசாதாரணமான நிலைக்கு காரணம். இந்த வருடம் மார்ச் 14 ஆம் நாள் தன் உமிழ்வைத் துவங்கிய இந்த எரிமலை, சிறிய இடைவெளிக்குப்பின் ஏப்ரல் 14 ஆம் தேதி சற்றேப் பெரிய அளவில் உமிழத் தொடங்கியதானால் ஏற்பட்ட சாம்பல் மண்டலம் ஐரோப்பா முழுவதும் கிட்டத்தட்ட 20,000 அடிகள் உயரத்திற்கு மேலே பரவி வான்வெளிப் போக்குவரத்தைப் பாதிப்பு அடையச் செய்துள்ளன.

Eyjafjallajoekull என்றால் மலைத்தீவின் பனியாறு எனப் பொருள்படும்(Eyja - தீவு, Fjall - மலை , Joekull - பனியாறு) இந்த எரிமலை இதற்கு முன் கி.பி 921, 1612, 1812-13 ஆம் ஆண்டுகளில் கற்குழம்பை வெளியிட்டபொழுதெல்லாம், அதனைத் தொடர்ந்து இதன் அருகாமையில் உள்ள இதைவிட பெரிய எரிமலையான காட்லாவும் உமிழத் தொடங்கி இருக்கின்றது. புவியியல் ஆய்வாளர்கள் அடுத்து காட்லா எப்பொழுது தனது உமிழ்வைத் தொடங்கும் என நோக்கத் தொடங்கி உள்ளனர். காட்லா இதுவரை அமைதியாகவே இருந்து வருவது ஆறுதலான விசயம். 40 - 80 வருடங்களுக்கு ஒரு முறை வெடிக்கும் காட்லா கடைசியாக சிறு அளவில் வெடித்தது 1950 களில். ஐரோப்பாவின் உயரமான எரிமலைகளில் ஒன்றான காட்லா வின் வாய்ப்பகுதி 10 கிலோ மீட்டர்கள் விட்டம் கொண்டது. இது கற்குழம்பைக் கக்கத் துவங்கினால் பனியாறு உருகி பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.


காட்லாவும் மற்றொரு எரிமலை ஹெக்லாவும் கோபக்காரச் சகோதரிகள் என அழைக்கப்படுகின்றன. ஹெக்லா கடைசியாக கோபப்பட்டது 1947-48 ஆம் ஆண்டுகளில். இந்தக் கோபம் கிட்டத்தட்ட 11 மாதங்கள் நீடித்தது.ஹெய்ம்சே என்ற மீன்பிடி தீவில் இருக்கும் எல்ட்ஃபெல் எரிமலை 1973 ஆம் ஆண்டு வெடித்த பொழுது கிட்டத்தட்ட 400 வீடுகள் வெளிப்பட்ட லாவாக்குழம்பில் மூழ்கிப்போயின. ஆனால் அதற்கு முன்னர் அங்கு வசித்த கிட்டத்தட்ட 5300 நபர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். க்ரிம்ஸ்வோத்ன் எரிமலை 1996 ஆம் ஆண்டு தான் வெடித்ததோடு மட்டுமல்லாமல் தன் வெளிப்புறம் ஓடிக்கொண்டிருந்த பனியாற்றையும் வெடிக்க செய்தது. இதே எரிமலையில் 2004 ஆம் ஆண்டு வெடிப்பில் வெளிப்பட்ட சாம்பல் 12 கிலோ மீட்டர்கள் வரை உயர்ந்து காற்று மண்டலத்தில் கலந்தது.


எரிமலையின் ஆங்கிலப்பதமான Volcano, வால்கன் என்ற ரோமானியர்களின் நெருப்புக்கடவுளைக் குறிக்கும் சொல்லில் இருந்து வந்தது. எரிமலைகள் வெறும் புவியியல் மாற்றத்தையும் தட்பவெப்ப நிலைமற்றங்களை உருவாக்கிவிட்டு மட்டுமே செல்வதில்லை. மக்களின் இடம்பெயர்வு, புதியத் தேவைகளுக்கான தேடல்கள் ஆகியவற்றையும் தொடங்கி வைக்கின்றன. பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் மிகப்பெரும் எரிமலை வெடிப்பான இந்தோனேசியாவின் தம்போரா எரிமலை வெடிப்பு நிகழ்வின் தொடர்ச்சி 19 ஆம் நூற்றாண்டின் வரலாறு காணாத பஞ்சத்தை ஐரோப்பாவில் ஏற்படுத்தியது. கந்தக அமிலம் கலந்த எரிமலை சாம்பல் மேகங்கள் புவியைச் சூழ்ந்து சூரிய வெப்பத்தையும் ஒளியையும் சிதறடித்து பூமியைக் குளிரச்செய்துவிடும்.

தம்போரா எரிமலை வெடிப்பு ஐரோப்பாவில் கடும் குளிரை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் 1816 ஆம் ஆண்டை கோடைக்காலமே இல்லாத வருடமாக்கியது. ஜெர்மனியில் குதிரைகளுக்கு கொடுக்க்பட்டும் ஓட்ஸ் தானியத்தின் பற்றாக்குறை, கார்ல் டிரையாஸ் என்ற கண்டுபிடிப்பாளரை தற்போதைய மிதிவண்டிக்கு மூதாதையாரான வெலொசிப்பைடைக் கண்டுபிடிக்க வைத்தது. இத்தாலியில் அமைந்திருக்கும் வெசூவியஸ் எரிமலை கிபி 79 ஆம் ஆண்டில் வெடித்தபொழுது பொம்பெய் மற்றும் ஹெர்குலினியம் என்ற இரு நகரங்கள் அழிந்துப்போயினவாம். தற்போதைய இந்தியாவின் தக்காண பீடபூமிகளில் இருந்த எரிமலைகளின் வெடிப்பினால் ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன் இருந்த டைனோசர் விலங்கினங்கள் அழிந்துப்போயின என்ற ஒரு கூற்றும் இருக்கிறது.

வரலாற்றின் ஏனைய எரிமலை வெடிப்புகளை ஒப்பிடும்பொழுது, இந்த ஈயபியலக்யுல் எரிமலை வெடிப்பு அளவில் மிக மிகச் சிறியவை. பரபரப்பான வான்பரப்பில் மையத்தில் இந்த எரிமலை வெடிப்பு நிக்ழந்ததனால்,வெடிப்பின் சாம்பல் துகள் பரவல் 20 ஐரோப்பிய நாடுகள் தங்கள் வான்பரப்பில் விமானப்போக்குவரத்தை நிறுத்த செய்துள்ளது. பல்கேரியா, கிரீஸ் மற்றும் துருக்கி நாடுகளைத் தவிர அனைத்து ஐரோப்பிய நாடுகளுமே பகுதியளவிளாவது பாதிக்கப்பட்டுள்ளன. பனிக்கட்டிகள் உருகிய தண்ணீருடன் கற்குழம்பு கலந்து உமிழ்வு ஏற்படுவதால் சாம்பல் வெளிப்பாடும் அதிக அளவில் இருக்கின்றது. அடுத்தச் சில நாட்களுக்கு எரிமலை வெடிப்பு நிற்கப்போவதில்லை என விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
நுண்ணிய சாம்பல் துகள்கள் ஜெட் விமான எஞ்சினை குளிர்விக்கும் துவாரங்களை அடைத்துக்கொண்டு 2000 டிகிரி செண்டிகிரேட் வெப்பநிலையில் செயற்படும் எஞ்சின்களை நிறுத்திவிடும். 1982 ஆம் ஆண்டில் இந்தோனேசியாவின் மேல் பறந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் பயணிகள் விமானம் இதே பிரச்சினையில் சிக்கியது. சாம்பல் மேகங்களை விட்டு நகர்ந்து எஞ்சின்களை திரும்பவும் இயக்கத் தொடங்கிய பொழுது விமானம் விபத்தில் இருந்து காப்பற்றப்பட்டது.தற்பொழுது 18000 அடிகளில் இருந்து 35000 அடிகள் வரை சாம்பல் மேகங்கள் சில ஆயிர சதுர கிலோமீட்டர்களில் விரவி இருப்பதால் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பிளைட் 8 போலவோ அல்லது அலஸ்காவின் மேல் எரிமலைச் சாம்பல் துகள்களின் ஊடாகப் பறந்த கே.எல்.எம் 867 போலவோ அவ்வளவு எளிதாக சாம்பல்கள் எஞ்சின்களில் சிக்கினாலும் தப்பித்து ஓட்டிவிடலாம் என அலட்சியமாக இருந்துவிட முடியாது. அதனால் தான் விமானப் போக்குவரத்தை நிறுத்தி வைத்துள்ளனர்.


உலகமெங்கும் வர்த்தகத்தில் பல ஆயிரம் கோடிகள் நட்டம் ஒட்டுமொத்த ஐரோப்பாவின் இயக்கமே தடுமாறிப்போய் இருக்கிறது,, பல ஆயிர மக்கள் தவிப்புகளுடன் விமான நிலையங்களில் முடங்கிக் கிடப்பதை பார்க்கையில் மனதிற்கு வருத்தமாக இருந்தாலும் இயற்கை தான், மனிதனை விட உயர்ந்தது என அவ்வப்பொழுது உணர்த்த நிகழ்ந்த நிகழ்வுகளில் இதுவும் ஒன்றோ எனத்தோன்றுகிறது. மனிதன் இயற்கையைப் பொருத்த மட்டில் ஒரு பார்வையாளன் மற்றும் பதிவாளானே. மைதானத்தில் ஆடும் ஆட்டம் எல்லாம் இய்றகையின் உடையது. உலகம் வெப்பமடைகிறது என உலகநாடுகள் கதறிக்கொண்டிருந்தாலும், இயற்கை நினைத்தால் தான் உறங்க வைத்திருக்கும் சூப்பர் எரிமலைகளில் ஏதேனும் ஒன்றை உமிழ வைத்து புவியின் வெப்பத்தை தனக்கு ஏற்ற அளவுக்கு கொண்டு வரமுடியும். இயற்கையை புரிந்து கொள்ள எத்தனிக்கும் ஒவ்வொரு நொடியும் தரும் வியப்புக்குரிய அம்சங்கள் ஏராளம்.


Sunday, April 11, 2010

ஐபில் 2010 - அரையிறுதிக்கான அடிதடி சண்டைமுந்தைய இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த முறை, ஐபிஎல் இல் அரையிறுதிப் போட்டிகளுக்கான இடங்களைத் தக்க வைத்துக்கொள்ள மும்பையைத் தவிர்த்து ஏனைய ஏழு அணிகளுமே கடுமையாக முயற்சிக்க வேண்டியுள்ளது. பஞ்சாபிற்கு கூட காகித கணக்கில் நூலிழை வாய்ப்பு இருக்கின்றது. முன்பு போல போட்டித்தொடரின் மத்தியிலேயே தனது அரையிறுதி வாய்ப்புகளை உறுதி செய்து கொண்டவர்கள், வேண்டிய அணிகளிடம் தோற்று வேண்டா அணிகளை வெளியேற்ற முடியாத சூழல் இப்பொழுது இருக்கின்றது. மும்பை அணியின், ராஜஸ்தானுக்கு எதிரான வெற்றியின் மூலம் அரையிறுதிக்காக இடம் உறுதிச் செய்யப்பட்டுள்ளது. மும்பை தனக்கு வேண்டியவர்களை வரச்செய்ய கொஞ்சம் ‘விளையாடியும்' பார்க்கலாம்.இந்த ஐபில் இல் போன வாரம் வரை சோப்ளாங்கி அணியாக இருந்த பஞ்சாப் அணிதான் மற்றவர்களுக்கு தலைவலியாக உருவெடுத்துள்ளது.
வடிவேலுவைப் போல தொடர்ந்து அடி வாங்கிக் கொண்டிருந்த பஞ்சாப் அணி கோல்கத்தாவிற்கு எதிரான ஆட்டத்தில் 200 ஓட்டங்களை துரத்தி அடித்து வென்றதன் மூலம் புத்துயிர் பெற்று அதன்பின்பு மும்பை மற்றும் தில்லி அணிகளை வீழ்த்தியதன் மூலம் ஒரு குழப்பமான சூழலை உருவாக்கிவிட்டுள்ளனர். இங்கே தோற்று அங்கே வெற்றி பெற்றால் தமது அணி இடம் பெறுமா, இல்லை 0.0001 ஓட்டவிகிதத்தில் உள்ளேவருவோமா என்ற இழுபறி நிலை இல்லாமல் அவரவர் அணிகள் அரையிறுதிக்குள் உள்ளே நுழைய ஒரே மந்திரம்

“ஆடும் ஆட்டங்களை எல்லாம் இறுதிப் போட்டியாய் நினை, தொடரும் ஆட்டங்கள் அனைத்தையும் வெல்”
பெரும்பாலான தமிழ்கூறும் நல்லுலகம் ஆதரிக்கும் அணியான சென்னை இதுவரை 11 ஆட்டங்களில் ஆடி ஐந்து ஆட்டங்களில் வென்று 10 புள்ளிகளுடன் ஓட்டவிகித அடிப்படையில் ஐந்தாம் இடத்தில் இருக்கின்றது. சென்னை அணி அடுத்து கோல்கத்தாவுடன் சேப்பாக்கம் மைதானத்தில் ஆட இருக்கின்றது. சொந்த மைதானம், ரசிகர்களின் ஆதரவு ஆகியன சென்னையின் பெரும்பலம். கோல்கத்தா அனேகமாக மெண்டிஸிற்குப் பதிலாக ஷேன் பாண்டை உள்ளே கொண்டு வருவார்கள். கிறிஸ் கெயிலோ மெக்கல்லமோ ஒரு 50 பந்துகள் மட்டையடித்தால் சென்னைக்கு ஆப்புதான். இது கிட்டத்தட்ட ஒரு வகையில் காலிறுதி ஆட்டம்போல, இதில் தோற்பவர்கள் அரையிறுதிக்கு தகுதி பெறாமல் போவதற்கான சாத்தியம் அதிகம்.

கோல்கத்தாவிற்கு அடுத்து சென்னை சந்திக்கும் அணி தில்லி, சென்னையைச் சந்திக்கும் முன் தில்லி அணி மும்பையைச் சந்தித்து விட்டு தங்களது 13 வது ஆட்டத்தை சென்னையுடன் ஆடுவார்கள். ஒரு வேளை தில்லி முந்தைய ஆட்டத்தில் மும்பையை வீழ்த்தினால் 14 புள்ளிகளுடன் கொஞ்சம் அதிக தெம்பில் ஆடுவார்கள். ஒரு வேலை மும்பையுடன் தோற்று வந்து ஆடினால், இதுவும் இன்னொரு காலிறுதிப்போட்டிபோல் அமையும்.

கடைசியாக பஞ்சாபுடன் மோதும் ஆட்டத்திலும் சென்னை வென்றாக வேண்டும். முதல் சுற்றுப்போட்டியில் சூப்பர் ஓவரில் சென்னை தோற்றதை நினைவில் கொள்ளவேண்டும். ஆக சென்னை அரையிறுதிக்குச் செல்ல மூன்று நாக்-அவுட் வகையிலான ஆட்டங்களை ஆடவேண்டும். சென்னையின் பலம் டௌக் போலிங்கர் பந்துவீச்சிலும் முரளிவிஜயின் சமீபத்திய அதிரடி ஆட்டங்களின் வாயிலாக பிரகாசிப்பது. 90களின் மத்தியில் இருந்த இந்திய அணியின் மனோபாவத்தை பிரதிபலிப்பது சென்னையின் பலவீனம்.

10 புள்ளிகளுடன் இருக்கும் கில்கிறிஸ்ட்டின் தலைமையிலான தக்காண அணியும் சென்னை அணியின் நிலைமைதான். தொடர்ந்து மூன்று ஆட்டங்களை வெல்லவேண்டும். பெங்களூர், பஞ்சாப் மற்றும் தில்லி அணிகளுடன் ஆட வேண்டியிருக்கின்றது. இதில் பெங்களூருடன் நடைபெறும் போட்டியில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம்.பெங்களூர் 12 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்கின்றது. அவர்கள் ஆட வேண்டிய மூன்று ஆட்டங்களில் ஏதேனும் இரண்டை வென்றால் போதுமானது, அரையிறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிடுவார்கள். கும்ப்ளே , வினய்குமாரின் பந்துவீச்சு , காலிஸின் தோள்கொடுக்கும் ஆட்டம், உத்தப்பாவின் சிக்சர்கள் ஆகியன் பெங்களூரின் மிகப்பெரும் பலம். ஒரு வேளை தக்காணத்துடன் பெங்களூர் தோற்றால் ராஜஸ்தான் அணியுடன் ஆட்டம் இன்னும் விறுவிறுப்பாக இருக்கும்.

ராஜஸ்தான் அணிக்கு பெங்களூர் ஆட்டத்தைத் தவிர தில்லியுடன் ஒரு ஆட்டம் இருக்கின்றது. ராஜஸ்தானால் மட்டுமே ஒரு நாளில் சிறப்பான ஆட்டத்தையும் அதற்கடுத்த நாள் நேரெதிராக படுமோசமான ஆட்டத்தையும் ஆடமுடியும். மும்பையுடன் தோற்றதனால் ராஜஸ்தான் அடுத்து ஆடப்போகும் இரண்டு ஆட்டங்களையும் வென்றால் மட்டுமே தனது இடத்தை உறுதிச் செய்ய முடியும்.
வங்காளச்சிங்கம் கங்குலியின் கோல்கத்தா அணி சென்னை, ராஜஸ்தான் மற்றும் மும்பை அணிகளுடன் மோத உள்ளது. தகுதி பெற அனைத்து ஆட்டங்களையும் வென்றாக வேண்டும். ஏதேனும் ஒரு ஆட்டத்தை தோற்றாலும் ஏனைய மற்ற இரண்டு ஆட்டங்களை மிகச்சிறப்பான ஓட்டவிகிதத்தில் வெற்றி பெற வேண்டும். சென்னைக்கும் தக்காணத்திற்கும் இதே நிலைமைதான். தில்லிக்கு தனது இடத்தை உறுதிச் செய்ய மூன்றில் இரண்டை வென்றாக வேண்டும். அந்த இரண்டு தக்காணமாகவும் சென்னையாகவும் இருந்தால் இவர்கள் இருவரின் இடமும் காலி.

பஞ்சாப் அணி கூட அரையிறுதிக்கு வர முடியும். முதலில் பஞ்சாப் தான் ஆடும் அனைத்து ஆட்டங்களையும் மிகப் பெரும் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும். சென்னை கோல்கத்தாவை வெல்ல வேண்டும். அதன் பின்னர் கோல்கத்தா அணி ராஜஸ்தானை தோற்கடிக்க வேண்டும். தில்லி அணி சென்னையையும் தக்காணத்தையும் வீழ்த்த வேண்டும். பெங்களூர் தக்காணத்தையும் ராஜஸ்தானையும் வீழ்த்த வேண்டும். இந்த சூழலில் நான்காவது அரையிறுதி இடத்திற்கு (முதல் மூன்று இடங்களுக்கு மும்பை, பெங்களூர், தில்லி தகுதிப் பெற்றுவிடும்) பஞ்சாப் , சென்னை, கோல்கத்தா , ராஜஸ்தான் 12 புள்ளிகளுடன் சமனிலையில் இருக்கும். அப்பொழுது பஞ்சாபிற்கு அரையிறுதிக்கு ஓட்டங்களின் விகித அடிப்படையில் தகுதி பெற வாய்ப்பு உள்ளது.

அடுத்து வரும் ஆட்டங்கள்

46வது ஆட்டம் - தக்காணம் v பெங்களூர் ( தக்காணத்திற்கு வாழ்வா சாவா, பெங்களூர் தோற்றாலும் இன்னும் இரண்டு ஆட்டங்கள் இருக்கின்றன )

47வது ஆட்டம்- மும்பை v தில்லி (மும்பைக்கு பிரச்சினை இல்லை, தில்லி வென்றால் அரையிறுதி பிரகாசம் )

48வது ஆட்டம்- சென்னை v கோல்கத்தா (இருவருக்குமே வாழ்வா சாவா )

49வது ஆட்டம்- ராஜஸ்தான் v பெங்களூர் (ராஜஸ்தானிற்கு வாழ்வா சாவா, பெங்களூர் தக்காணத்தை வென்றிருக்காவிடில் பெங்களூருக்கும் பிரச்சினை)

50வது ஆட்டம்- சென்னை v தில்லி ( சென்னை வாழ்வா சாவா, தில்லி மும்பையுடன் வென்றிருந்தால் தோற்றாலும் பரவாயில்ல்லை.

51வது ஆட்டம்- பஞ்சாப் v தக்காணம் ( தக்காணம் வாழ்வா, சாவா - பஞ்சாப் அடுத்தவர் குடியைக் கெடுக்கலாம்)

52வது ஆட்டம்- பெங்களுர் v மும்பை (மும்பைக்கு பிரச்சினை இல்லை, பெங்களூர் முன்னர் ஏதேனும் ஆட்டத்தை வெல்லாவிடின் பிரச்சினை)

53வது ஆட்டம்- கோல்கத்தா v ராஜஸ்தான் ( இருவருக்குமே நாக் அவுட் ஆட்டம்)

54வது ஆட்டம்- பஞ்சாப் v சென்னை (சென்னையின் காலிறுதி ஆட்டம் - பஞ்சாப் குடியைக் கெடுக்கலாம்)

55வது ஆட்டம்- தில்லி v தக்காணம் (தில்லி முன்னர் வென்றிருந்தால் இங்குப் பிரச்சினை இல்லை, தக்காணத்திற்கு காலிறுதி ஆட்டம்)

56வது ஆட்டம்- கோல்கத்தா v மும்பை ( கோல்கத்தாவிற்கு காலிறுதி ஆட்டம், மும்பை கொஞ்சம் ‘விளையாடி'ப் பார்க்கலாம்)

மும்பை அணியுடன் , அரையிறுதிப் போட்டிகள் நடைபெறும் பெங்களூரு அணி, இந்திய தேசிய அணியின் தலைவரின் சென்னை அணி நிச்சயமாக அரையிறுதிக்கு தகுதி பெறும். மற்ற ஒரு இடத்திற்கு யார் வர வேண்டும் என்பதை மும்பை அணியின் நிர்வாகம் தீர்மானிக்கும். அது தில்லியாக இருக்கலாம், கில்லியாக இருக்காலாம். ஏன் !! மற்றுமொரு ‘மும்பை நிர்வாக' அணியான கோல்கத்தாவாகக் கூட இருக்கலாம்.---

தமிழோவியம் இணைய இதழுக்காக எழுதியது

Saturday, April 10, 2010

ஸ்மோலென்ஸ்க் நகரமும் போலந்து நாட்டின் சாபக்கேடும்

இத்தாலியர் அல்லாத ஒரு போப்பரசரை உலகிற்கு தந்த தேசம் !!! ஷாருக்கானையும் ஹிந்தித் திரைப்படங்களையும் ஆராதிக்கும் நாடு !! மளிகைக் கடைகளில் பழச்சாறுகளுடன் வோட்காவும் கிடைக்கும் கொண்டாட்ட தேசம். சண்டை போடனுமா,எல்லோரும் வங்கப்பா போலாந்து என்று ஒரு மைதானம் இருக்கு அங்கே சண்டைகளை வைத்துக் கொள்வோம்,இப்படியான ஐரோப்பிய நாடுகளின் போர் மைதானம். ரேடியத்தைக் கண்டுபிடித்த மேரி கியூரியின் தாயகம் !! நூறு வருடங்கள் உலக வரைபடத்திலேயே இல்லாத நாடு. மொழியையும் கலாச்சாரத்தையும் எப்படி பதுங்கு குழிகளில் பாதுகாப்பது என உலகிற்கு கற்றுத் தந்த கலாச்சார பூமி. கம்யூனிசப்பிடியில் இருந்து முதலில் வெளிவந்து இரும்புத்திரையை விலக்கிய, ஐரோப்பாவின் மேற்கையும் கிழக்கையும் இணைக்கும் அற்புதமான பால்டிக் கடற்கரை நாடுதான் போலாந்து.ஏப்ரல் 10 , 2010 அன்று போலாந்து நாட்டின் அதிபர் லேக் அலெக்ஸாண்டர் கஸ்ஸின்சிகி, கேத்தின் வனப் படுகொலைகளின் 70வது ஆண்டு நிறைவடைதலை நினைவுகூற ரஷியாவில் இருக்கும் ஸ்மொலென்ஸ்க் சென்ற பொழுது நடந்த விமான விபத்தில் பலியானர். இவருடன் போலாந்து ராணுவதளபதி , மத்திய வங்கி ஆளுநர் உட்பட அரசாங்கத்தின் முக்கிய நபர்களும் பலியானார்கள். இந்த விமான விபத்தில் கவனிக்கப்பட வேண்டிய விசயம் என்னவெனில் கேத்தின் படுகொலை நடந்த அதே வனப்பகுதியில் தான் இந்த விமான விபத்து நடந்துள்ளது.
மறைந்த லேக் கஸ்ஸின்சிகி அவரது முகச்சாயல் கொண்ட இரட்டைச் சகோதரர் முன்னாள் பிரதமர் ஜார்ஸ்லாவ் (தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரான இவர் கஸ்ஸின்சிகியுடன் பயணம் செய்யவில்லை) உடன் இணைந்து போலாந்தை முன்னேற்றப்பாதையில் எடுத்துச் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.கடுமையான கம்யூனிச(ரஷ்ய),ஜெர்மனி எதிர்ப்பாளரும், தீவிர கத்தோலிக்க வலதுசாரி அரசியல்வாதியுமான கஸ்ஸின்சிகி, ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் நாட்டை நற்திசையில் கொண்டு செல்ல முடியும் என்று நம்பிக்கையுடன் செய்ற்பட்டவர்.தன்னையும் தன் சகோதரர் ஜார்ஸ்லாவையும் போலாந்தின் உருளைக்கிழங்குகள் என ஒரு ஜெர்மானிய இடதுசாரிப் பத்திரிக்கை கிண்டலடித்ததால், ஜெர்மன் அதிபருடன் உடன் ஆன சந்திப்பை ரத்து செய்தவர். இந்தியாவின் லல்லுபிரசாத்தைப் போலத் தோற்றமளிக்கும் இவர், மத்தளத்திற்கு இருபக்கமும் அடி என மேற்குலகம், கிழக்கு ரஷியா என இருப்பக்கங்களின் ஏச்சுப் பேச்சுக்களையும்(ஐரோப்பிய ஊடகங்களால் அதிக அளவு கேலி செய்யப்பட்டவர்) சமாளித்து போலாந்தை முன்னேற்றப்பாதையில் கொண்டு சென்றவர் என்பது சிறப்பு.

ஒரு தேசத்தை அல்லது ஒரு இனத்தை நிர்மூலமாக்க வேண்டுமென்றால் , அந்த இனம் அல்லது தேசத்தின் அறிவுசார்ந்த ஆளுமைகளை அகற்றினாலே போதுமானது. வல்லரசுகளும் வல்லரசு ஆக வேண்டும் என நினைக்கின்ற அரசாங்கங்கள் தொன்று தொட்டு இதைத் தான் செய்து வருகின்றன. இதில் வசப்படுவது தனித்தன்மை வாய்ந்த தேசிய இனங்கள் தாம். இரண்டாம் உலகப்போரில் யூத இனம் பட்ட துயரங்களை மட்டும் பேசும் உலகத்திற்கு போலாந்து வாங்கிய அடிகள் ஏதேனும் பெரிய நிகழ்வு நடந்தால் மட்டுமே நினைவுக்கு வருகிறது. போலாந்து அதிபரின் விமானம் விபத்துக்குள்ளானது மற்றும் விபத்துக்குள்ளான நிலப்பரப்பு ஆகியன 70 வருடங்களுக்கு முன்னர் நடந்த கேத்தின் வனப்படுகொலைகளை மீள்நினைவு கொள்ள வைத்துவிட்டது.

போலாந்து மக்களுக்கு ஜெர்மனியின் மேல் இருக்கும் வெறுப்பை விட ரஷியாவின் மேல் இருக்கும் வெறுப்புதான் அதிகம். ஜெர்மனி தங்களைச் சில வருடங்கள் தான் கட்டுக்குள் வைத்திருந்தது, ஆனால் ரஷியாவின் இன்னொரு மாநிலமாகத்தான் 40 வருடங்கள் இருந்தோம் என்பனர். ரஷ்யர்களோ போலாந்து மக்கள் நன்றி கெட்டவர், தாங்கள் மட்டும் இல்லை என்றால் யூதர்களை நசுக்கியது போல போலாந்தையும் நசுக்கி இருப்பார்கள் எனச் சொல்வார்கள். ஜெர்மானியர்கள் கலாச்சார ரீதியாகவும் மத ரீதியாகவும் எங்களவர்கள், ரஷியர்களை நாங்கள் காலம் தொட்டே அந்நிய சக்திகளாகத்தான் பார்க்கின்றோம் என்பது போலாந்து மக்களின் வாதம்.

என்னது போலந்து மக்கள் அரசாங்கத்தின் மேல் கோபமாக இருக்கின்றனரா, இருக்கட்டும் இருக்கட்டும் அடுத்த மாதத்தில் இருந்து வோட்காவையும் வினிகரையும் அதிகமாக கொடுங்கள், அமைதியாகிவிடுவார்கள் என்பதுதான் ரஷ்யாவிற்கும் போலாந்தின் பொம்மை அரசாங்கத்திற்கும் குறைந்த பட்ச செயல்திட்டமாக இருந்தது. They ruled us with two "V"s Vodka and Vinegar, போலாந்து சென்றிருந்த பொழுது பயணவழிகாட்டி இப்படித்தான் சொன்னார்.

பத்தாம் நூற்றாண்டின் துவக்கத்தில் மேற்கு ஐரோப்பாவுடன் ஆன நெருக்கம், கத்தோலிக்க மதத்தை வரித்துக் கொண்டது ஆகியன போலாந்தை ஆதிக்க ரஷியாவிற்கு வேண்டாத நாடாகவே வைத்திருந்தது. போலாந்து - லித்துவேனியா கூட்டமைப்பு (1605 - 1618) ஆம் ஆண்டுகளில் ரஷியாவின் மேல் படையெடுத்து மாஸ்கோவைக் கைப்பற்றி ஒரு பொம்மை அரசாங்கத்தை நிறுவியது. இதற்கு ரஷியபிரபுக்கள் மத்தியில் ஆதரவும் இருந்தது. ஆனால் போலாந்து அரசர் மூன்றாம் சிகிஸ்முண்ட், தானே ரஷியாவின் அரசனாக முடிசூட்டிக்கொள்ள முயற்சித்த பொழுது ரஷியபிரபுக்களுடன் இருந்த நட்பு முறிந்து போலாந்து பின்வாங்க வேண்டியதாகியது. போலாந்து பின் வாங்கினாலும் ரஷியாவின் முக்கியத்துவம் வாய்ந்த ஸ்மோலென்ஸ்க் நகரை மற்றும் கைப்பற்றித் திரும்பியது. தாங்கள் கொடுத்த ஒரு அடி அதற்கடுத்த நான்கு நூற்றாண்டுகளுக்கு திரும்ப வந்து கொண்டே இருக்கும் என அப்பொழுதைய போலாந்து தேசத்திற்கு தெரியவில்லை.மாஸ்கோவிற்கு மேற்கே 360 கிலோமீட்டர்கள் தூரத்தில் இருக்கும் ஸ்மொலென்ஸ்க் நகரம் வரலாற்றில் மட்டும் அல்ல இலக்கியத்திலும் நீங்காத இடத்தைப்பெற்றிருக்கிறது. லியோ டால்ஸ்டாயின் போரும் சமாதானமும் நூலில் நெப்போலியன் படையெடுப்பைப் பற்றிய வர்ணனையில் இடம்பெறுவது இந்த நகரம் தான். இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியின் முன்னேற்றத்தை தடுத்தி நிறுத்திய செஞ்சேனையினர் நடத்திய போர் நடைபெற்ற இடமும் இதுதான்.

அதே செஞ்சேனையினர் ஸ்டாலினின் ஆணையின் பேரில் போலாந்தின் அரசியல் ஆளுமைகளை , ராணுவத் தளபதிகளை, அரசாங்க உயரதிகாரிகளை, முக்கியஸ்தர்களை போர்க்குற்றவாளிகள் என்ற போர்வையில் தீர்த்துக் கட்டிய இடமும் இந்த நகரம் தான். ரஷியாவை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்த ஜெர்மனியப் படைகள் ஸ்லோமென்ஸ்க் மாவட்டத்தில் இருந்த கேத்தின் காட்டுப்பகுதிகளில் புதைக்கப்பட்டிருந்த பிணங்களைக் கண்டெடுத்தது. சண்டை போடச் சென்றவர்கள் தோண்ட தோண்ட பிணமாக எடுத்துக் கொண்டிருந்தார்கள். இரண்டாம் உலகப்போரில் நாஜி ஜெர்மனி செய்த ஒரு நல்ல காரியம் இதுவெனக் கூட சொல்லலாம்.

கிட்டத்தட்ட 22 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு குவியல் குவியலாக புதைக்கப்பட்டிருந்தனர். நாஜி ஜெர்மனி உலக அரங்கில் ரஷியாவை மட்டம் தட்ட இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டது. ஒரு இடத்தில் மட்டும், 28 மீட்டர் ஆழமும் 16 மீட்டர் அகலமும் கொண்ட குழியில் இருந்து 12 அடுக்குகளாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த 3000 போலாந்து அதிகாரிகளின் பிணங்களைத் தோண்டிஎடுத்தனர். அப்பொழுது இதை மறுத்த ரஷியா சிறைபிடிக்கப்பட்ட போலாந்து மக்கள் ஸ்மொலென்ஸ்க் நகர கட்டுமான வேலைகளுக்கு அனுப்பப்பட்டனர் எனவும் அவர்களைக் கொன்றது ஜெர்மன் படைகள் தான் என சாதித்தனர். ஜெர்மனிய மருத்துவர்கள் கண்டெடுக்கப்பட்ட பிணங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே , அதாவது இரண்டாவது உலகப்போரின் ஆரம்பத்தில் ரஷியாவின் கட்டுப்பாட்டில் போலாந்து இருந்தபொழுது சிறைபிடிக்கப்பட்டவர்களுடையாதகும் என நிருபித்தனர்.ஸ்டாலின் கையொப்பமிட்ட கொலைக்கான உத்தரவு

இதனால் பிரிட்டனில் இருந்து செயற்பட்டு வந்த போலாந்தின் நாடுகடந்த அரசாங்கம் ரஷியாவுடன் ஆன தொடர்பைத் துண்டித்துக் கொண்டது. ரஷியாவோ போலாந்தின் நாடுகடந்த அரசாங்கம் நாஜி ஜெர்மனியுடன் கைக்கோர்த்துவிட்டது என அறிவித்தது. நாடுகடந்த அரசாங்கத்தின் அதிபரும் சில மாதங்களில் மர்மமான முறையில் இறந்துப் போனார்.

இரண்டாம் உலகப்போரில் ஜெர்மன் படைகள் பெலாரஸில் இருந்த ஒரு கிராமத்தை சூறையாடி அங்கிருந்த அனைவரையும் வீட்டோடு கொளுத்தியது. அந்த கிராமத்தின் பெயரும் கேத்தின் தான். ஜெர்மன் படைகள் எத்தனையோ இடங்களில் நாசம் செய்து இருந்தாலும், சோவியத் ரஷியா குறிப்பாக இந்த கிராமத்தைத் தேர்ந்தெடுத்து நினைவு மண்டபத்தைக் கட்டியது. இதைவிடக் கொடூரமாக தாங்கள் செய்திருந்த கேத்தின் வனப்படுகொலைகளை மறைக்க ரஷியா தந்திரமாக செய்தக் குழப்படி வேலையாகத்தான் நோக்கப்படுகிறது. இன்றும் இணையத்தில் தேடினால் கேத்தின் படுகொலை என்ற பெயரில் பெலராஸ் கிராமக் கொலைகளும் கிடைக்கும்.


1990 ஆம் ஆண்டு வரை தங்கள் செய்ததை ஒப்புக்கொள்ளாத ரஷியா, கம்யூனிசம் வீழ்ந்த பின்னர் ஒரு வழியாக ஒப்புக்குச் சப்பாக 22000 பேர் கொல்லப்பட்டனர் என்றது. ஆனால் அது போர்க்குற்றம் என்றோ அல்லது இனப்படுகொலை என்றோ ஒப்புக்கொள்ளவில்லை. ரஷிய முன்னாள் அதிபர் மிகையல் கொர்பச்சேவ் , ஸ்டாலின் அரசாங்கம் நடத்தியக் கொலைகள் என்று சொன்னாலும் ஸ்டாலின் அடக்குமுறைகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் கூட தரப்படவில்லை, கேத்தின் படுகொலைகளை ஸ்டாலினின் ரஷியப் பிரதமர் விளாடிமிர் புதின் கேத்தின் வனப்படுகொலை ‘அரசியல் குற்றம்' என்று சொன்னதுதான் ரஷியாவின் தரப்பில் இருந்து வந்த அதிகபட்ச ஒப்புக்கொள்ளல்.

தெற்கு ஒசேத்தியா போரில் போலாந்தின் ஜார்ஜியா ஆதரவு நிலை, நேட்டோ படைகளுக்கும், அமெரிக்க ஏவுதளத்திற்கும் இடமளித்தல் ஆகியன இரண்டு வருடங்களுக்கு முன் மற்றுமொரு ரஷிய-போலாந்து போர் ஏற்படும் சூழலைஏற்படுத்தி இருந்தாலும் இருநாடுகளின் பிரதமர்களின் சந்திப்பு பதட்டத்தைக் கொஞ்சம் தனித்திருந்த வேலையில் போலாந்து அதிபரின் இந்த விமான விபத்து போலாந்து மக்களை அதிர்ச்சியிலும் துக்கத்தில் ஆழ்த்தி இருக்கின்றது. போலாந்து அதிபர் பயணம் செய்த விமானம் 1960 களில் ரஷியாவில் தயாரிக்கப்பட்ட Tupolev ரகத்தைச் சார்ந்தது. விபத்து நடந்த இடம் கேத்தின் படுகொலைகள் நடந்த அதே வனப்பகுதியான ஸ்மோலென்ஸ்க் நகரம். வரலாறு திரும்புகின்றதா !! வரலாற்றின் சிலப்பக்கங்களைச் சமன் செயயும் நடவடிக்கைகளா !! தெரியவில்லை... உண்மைகள் விழித்துக்கொள்ள இன்னும் ஐம்பது வருடங்களாவது ஆகும்.

------

தமிழோவியம் இதழுக்காக எழுதியது

Thursday, April 08, 2010

சீறும் சிறுத்தை - சௌரப் கங்குலி

கோல்கத்தா க்நைட் ரைடர்ஸ் ஐபிஎல் 2010 போட்டிகளில் மற்றும் ஒரு வெற்றி பெற்றது. மேம்போக்காக பார்த்தால் கோல்கத்தா அணி தில்லி அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது என வெறும் புள்ளிவிபரக் கணக்காகத் தெரியும் 2008 ஆம் ஆண்டிம் மெக்கல்லமின் அதிரடி முதல் ஆட்டத்தைத் தவிர ஏனைய பெரும்பாலான ஆட்டங்களில் தோற்று கோமாளியைப்போல வெளியேறிய கோல்கத்தா போனவருடமும் பெரிதாகச் சாதிக்கவில்லை. அணி வீரர்களின் பெயர்களைக் கூட நினைவில் வைத்திராத மெக்கல்லம் அணியின் தலைவராகப் பொறுப்பேற்றாலும் கோமாளி அணிக்கு மற்றொரு மகுடமாக தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற போன வருட ஆட்டங்களில் கடைசி இடம் தான் கிடைத்தது. அணியின் உரிமையாளர் ஷாருக்கானின் சேட்டை வேலைகளும் 'புரளி' ஐபில் ஆட்டக்காரரின் வலைப்பதிவுகளும் கோமாளி என்ற அடையாளத்திற்கு மேலும் வலுசேர்த்தது.

மீண்டும் வந்தது 2010 ல் ஐபில் , சௌரப் கங்குலி அணியின் தலைவராக்கப்பட்டார். வாசிம் அக்ரம் பந்து வீச்சுக்கு பயிற்சியாளராக உள்ளே வந்தார். ஷாருக்கான் அடக்கி வாசிக்க ஆரம்பித்தார். 37 வயதில் ஆமை வேக ஆட்டம், நூடுல்ஸ் சமைக்கும் நேரத்தில் உள்ளேப் போய் வெளியே வருகிறார் வழக்கமான கேலிகள், ஆட்ட வர்ணனைக்குப்போகலாம் என்ற அறிவுரை வேறு, கங்குலியின் பலமே எப்பொழுதெல்லாம் அவரை மட்டம் தட்டுகின்றனரோ அப்பொழுதெல்லாம் சிறுத்தையாய் சீறி வருவார். சேப்பல் உடன் ஆன தகராறுக்குப் பின் கிரன் மோர்ரே கும்பலால் கட்டம் கட்டப்பட்டு ஒரு வருடத்திற்குப்பின் திரும்ப வந்து டெஸ்ட் ஆட்டங்களிலும் ஒரு நாள் ஆட்டங்களிலும் கலக்கு கலக்கியவர் என்பது இந்த நேரத்தில் குறிப்பிடத்தக்கது.
எள்ளல் பேச்சுகளுக்கும் கேலி கிண்டல்களுக்கும் தனது மட்டையால் பதில் சொல்லி வருகிறார். இதுவரை ஆடியுள்ள பத்து ஆட்டங்களில் 3 அரைசதங்களுடன் (அதிக பட்சம் 88) 333 ஓட்டங்கள் எடுத்து அதிக ஓட்டங்கள் எடுத்தவர் பட்டியலில் நான்காவது இருக்கிறார்.

இடது கை சுழற்பந்து வீச்சாளர் என்றால் அல்வா சாப்பிடுவது போல அதிரடியாக ஆடும் கங்குலி, இரண்டாவது ஓவரை வீசிய வெட்டோரியின் மூன்று பந்துகளை பௌண்டரிக்கு அனுப்பி கிறிஸ் கெய்லுடன் இணைந்து மற்றொரு நல்ல துவக்கத்தைக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் தனது அரை சதக் கணக்கையும் உயர்த்திக் கொண்டார். பஞ்சாபுடன் நடந்த ஆட்டத்தில் தோற்றாலும் , அதற்கு முந்தைய தக்காண அணியுடன் ஆடிய ஆட்டத்தில்(இதில் மதிப்படக்கூடிய இடது கை சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜாவை வெளுத்துக் கட்டி இருப்பார்) 88 ரன்கள் அடித்து ஆட்ட நாயகன் விருதை வாங்கிய கங்குலி இன்றும் கம்பீரை ரன் அவுட் செய்ததன் மூலமும் , தலைக்கு மேல் சென்ற பந்தை அலேக்காக எம்பிப் பிடித்து தனக்கு களத்தடுப்பும் வரும் என நிருபித்துள்ளார். தளக்கடுப்பைப் பொருத்தவரை தான் நாளுக்கு நாள் இளமையாக செயல்படுவதாக பேட்டிகளில் தெரிவித்த கங்குலி, இன்னும் பந்து வீச்சில் மட்டும் சோபிக்கவில்லை.

தொடர்ந்து வரும் ஆட்டங்களில் பெங்களூர் , சென்னை, மும்பை , ராஜஸ்தானுடன் மோத வேண்டியுள்ள கோல்கத்தா அணி, ஏதேனும் மூன்று போட்டிகளில் வென்றால் அரையிறுதிப்போட்டியில் நுழைய பிரகாசமான வாய்ப்பு இருக்கின்றது. கங்குலியின் தலைமைப் பண்பு மட்டும் அல்ல, மட்டையும் தொடர்ந்து பிரகாசித்தால் அது கைக்கெட்டப்போகும் கனிதான்.

2008 ஆம் ஆண்டில் கடைசி இரண்டு இடங்களைப் பெற்ற பெங்களுர் , தக்காணம்( ஹைதராபாத்) அணிகள் 2009 ஆம் ஆண்டுப் போட்டிகளில் இறுதிப்போட்டியில் ஆடின. அதேபோல 2009 வருடத்தில் கடைசி இரண்டு இடங்களைப் பெற்ற சச்சின் டெண்டுல்கரின் மும்பையும் சௌரப் கங்குலியின் கோல்கத்தாவும் இறுதிப்போட்டியில் மோதினால், அது பொருத்தமான போட்டியாகவும் அற்புதமான ஐபிஎல் ஆகவும் நிறைவுறும் என்பதில் வியப்பில்லை.

---