சச்சின் டெண்டுல்கர் - சிகரங்களின் சிகரம்
மோகன்தாஸ் கரம்சந்த் காந்திக்குப்பிறகு இந்திய உப கண்டத்தில் மதம், மொழி,இனம், சாதி , தேசம் என அனைத்தையும் கடந்து மக்களால் நேசிக்கப்படுபவர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர். மகாத்மா காந்திக்கு எத்தனை மரியாதை மேற்குலத்திற்கு இருந்தது அதே மரியாதை மதிப்பு, குறைந்த பட்சம் விளையாட்டில் இருக்கும் சமகால இந்தியர் டெண்டுல்கர். சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை ஒரு கட்டுரையில் பட்டியலிட்டு விட முடியாது. சகாபதங்களுக்கு பல தொகுதிகளில் எழுதினாலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.
1999 ஆம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டிகளின் போது பெப்சி குளிர்பான விளம்பரம் வரும், எல்லோரும் வருங்காலங்களில் ஓய்வுபெற்றுவிட அசாரூதின் மட்டும் அணியின் தலைவராக இருந்து ஆடிக்கொண்டிருப்பதாக, நிஜத்தில் அந்த விளம்பரத்திற்கு ஏகப்பொருத்தமானவர் சச்சின் ஒருவர் மட்டுமே!! இவருடன் பள்ளியிலும் அப்போதைய பாம்பே அணியிலும் பின்னர் இந்திய அணியிலும் ஆடிய வினோத் காம்ப்ளி இன்று இரண்டாம் தர தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று வருகிறார். திறமை இருந்தாலும் தனிப்பட்ட ஒழுக்கம் ஒரு மனிதனை உயரத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்பதற்கு காம்ப்ளியும் டெண்டுல்கரும் எதிர் துருவ உதாரணங்கள். டெண்டுல்கரை விட நுட்பமான ஆட்டக்காரர் எதிர்கால அணித்தலைவர் எனவெல்லாம் அறியப்பட்ட சஞ்சய் மஞ்ச்ரேகர் இன்று தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளும் டெண்டுல்கர் புகழ்பாடி வருகிறார்.திறமையுடன் தன்னடக்கமும் இருந்தால்தான் சிகரத்தை அடையமுடியும் என்பதற்கு மஞ்ச்ரேகரும் டெண்டுல்கரும் மற்றும் ஒரு நேர் எதிரான உதாரணங்கள். தான் கிரிக்கெட் வானில் நட்சத்திரமாக நிலைத்தபின்னர், வந்த கிட்டத்தட்ட தனக்கு சமமாக ஒளிவீசி ஓய்வுபெற்ற கங்குலியின் நட்சத்திர வாழ்வு கடந்த பின்னரும் சுரேஷ் ரைனாக்களுக்கும் ரோஹித் சர்மாக்களுக்கும் சவால் விடும் வகையில் ஆடிவரும் சூரியனாக டெண்டுல்கர் இருக்கிறார் என்றால் நிச்சயமாக மிகைப்படுத்தல் இல்லை.
முதலில் தனக்காக ஆடிக்கொள்கிறார், பரிசுக்காக ஆடுகிறார் , புகழுக்காக ஆடுகிறார், அணிக்காக ஆடுவது என்பது டெண்டுல்கரின் கடைசித் தேர்வு என டெண்டுல்கரின் மேல் வைக்கப்படும் விமர்சனங்கள் அனைத்துமே மேலோட்டமாக வைக்கப்படுவதே !! டெண்டுல்கரின் புகழ் பாடுவதற்கு முன்னர் அவரின் ஆட்ட புள்ளிவிபர சாதனைகளைப் பார்த்தாலே அவரின் மேல் வைக்கப்படும் விமர்சனங்கள் புஸ்ஸாகிவிடும்.
உலகிலேயே அதிக டெஸ்ட் ஆட்டங்கள் ஆடியவர் என்றப் பெருமைய அடைய இன்னும் இரண்டு டெஸ்ட் கள் மட்டுமே பாக்கியுள்ள நிலையில் மொத்தம் 47 சதங்கள் அடித்துள்ளார். இதில் நான்கு இரட்டைச் சதங்களுடன் மொத்தம் 13,447 ஓட்டங்கள் எடுத்து இருக்கின்றார்.
சச்சின் ஆடியுள்ள 166 ஆட்டங்களில் 56 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி பெற்ற ஆட்டங்களில் 19 சதங்களுடன் 4895 ஓட்டங்கள் எடுத்து இருக்கின்றார். வெற்றி தோல்வி இல்லா டிரா ஆட்டங்களில் இவரின் பங்களிப்பு 18 சதங்களுடன் 5360 ஓட்டங்கள். இதில் பல ஆட்டங்களில் நிச்சயமான தோல்வியில் இருந்து கௌரவ டிராவிற்கு கொண்டு வந்ததில் சச்சின் டெண்டுல்கருக்கு மிகப்பெரும் பங்கு உண்டு. நன்றாக ஆடினாலும் வெற்றி உறுதிச் செய்யப்படும் வரை ஆடுவதில்லை என்றக் குற்றச்சாட்டு டெண்டுல்கரின் மேல் வைக்கப்படுவதற்கு காரணம் சில சதங்கள் மறக்க முடியாத தோல்வி ஆட்டங்களில் வந்ததுதான். ஆனால் அந்த ஆட்டங்களில் தோல்வி அடையாமல் இருந்திருந்தால் அந்த சதங்கள் இந்த அளவிற்கு நினைவு கூறப்பட்டிருக்குமா !!
கிரிக்கெட் இருக்கும் காலம் வரை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான தோல்வி சதத்தை மறக்க முடியுமா !! முதுகுபிடிப்பு இருந்த போதும் 82 க்கு ஐந்து விக்கெட்டுகள் என்ற நிலையில் இருந்து 17 ஓட்டங்கள் எடுத்தால் என்ற நிலை வரை எடுத்துச் சென்ற சச்சின் ஆட்டமிழந்த பின்னர், பின் வந்த வால் ஆட்டக்காரர்களால் மீதம் இருக்கின்ற சொற்ப ஓட்டங்களை எடுக்க இயலாமல் போனதற்கு டெண்டுல்கரை குற்றம் சாட்டுவது நியாயம் ஆகாதே!!
1996 ஆம் ஆண்டு கேப்டவுனில் நடந்த டெஸ்ட் போட்டியில் மிரட்டும் டொனால்ட், மெக்மில்லன் , போலாக்கை சமாளித்து கழுத்து சுளுக்கு பவுல் ஆடம்ஸை கதற வைத்து அசாருதீனுடன் இணைந்து ஆடிய அதிரடி ஆட்டம் தோல்வியில் முடிவடைந்தாலும் கிரிக்கெட் ரசிகர்களால் இன்றும் மீள் நினைவுச் செய்யப்படும். ஆடம் பாக்கர் மட்டும் எல்லைக் கோட்டில் அந்த அற்புதமான கேட்சைப் பிடிக்காவிடில் அன்று டெண்டுல்கர் இருந்த மனநிலைக்கு முன்னூறு ஓட்டங்களே அடித்திருப்பார்.
ஐந்து வருடங்களுக்குப்பிறகு பிளொம்ஃபைண்டன் மைதானத்தில் அன்றைய அறிமுக ஆட்டக்காரர் வீரேந்திர சேவக்குடன் பின்னி எடுத்தது என்ன!! தோனிக்கள் யுவராஜுக்களின் காலமாக இன்று மாறிப்போனாலும் டெண்டுல்கர் ஆடினால் அவர் முடித்துக் கொடுத்து விட்டுத்தான் சென்றிருக்க வேண்டும் எனச் சொல்லப்படுவதற்கு சமீபத்திய உதாரணம் கடந்த வருடம் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரு நாள் போட்டி. இமாலய 350 ஓட்டங்களை துரத்தி, மூன்று விக்கெட்டுகள் இருக்கும் நிலையில் 17 பந்துகளில் 19 ரன்கள் எடுக்க வேண்டும் எனும்பொழுது, 175 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்த டெண்டுல்கருக்குப்பின்னர் தேவையான ஓட்டங்கள் எடுக்க முடியாமல் 3 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது.
ஏற்கனவே கேட்ட மெட்டை சிறிது மாற்றி திரும்பக்கொடுத்தாலோ , எடுத்தக் காட்சியமைப்பை திரும்பத் திரைப்படங்களில் காட்டினாலோ சலிப்படையும் ரசிகனை, ஆயிரம் முறை அடித்தாலும் அந்த கவர் டிரைவை வைத்த கண் வாங்காமல் பார்க்க வைக்க டெண்டுல்கரால் மட்டுமே முடியும். அதே போல் படித்த டெண்டுல்கரின் சாதனைகளை மீண்டும் மீண்டும் படித்தாலும் சுவாரசியம் குறைவதே இல்லை.
இன்று (ஏப்ரல் 24, 2010) அன்று தனது 37 வயதை நிறைவுச் செய்யும் சச்சின் ரமேஷைப் பற்றி வெளியுலகம் அறிந்து கொண்டது, டெண்டுல்கர் தனது பள்ளித் தோழன் வினோத் காம்ப்ளி யுடன் இணைந்து இணையாட்டமாக எடுத்த 664 ஓட்டங்கள் எடுத்த பொழுதுதான்.
தனது 15 வது வயதில் குஜராத் அணிக்கெதிராக தனது முதலாவது ரஞ்சிப் போட்டியிலேயே சதம் அடித்து தனது வரவைப் பதிவு செய்தார்.
தனது முதலாவது டெஸ்ட் தொடரில் பாகிஸ்தானுக்கெதிராக , அசூர வேகத்தில் பந்து வீசும் வாக்கர் யூனிஸ் பந்தில் முகத்தில் காயமடைகிறார். ரத்தம் சொட்ட சொட்ட துடைத்துக் கொண்டு ஆடி 57 ரன்கள் அடிக்கிறார். அந்த வாக்கர் யூனுஸை பின் வந்த 2003 உலகக்கோப்பையில் புரட்டி எடுத்து அவரின் கிரிக்கெட் வாழ்வை அஸ்தமிக்க வைத்ததில் டெண்டுல்கருக்குப் பெரும்பங்கு உண்டு.
ஒரு நாள் போட்டிகளைப் பொருத்தவரை ஆரம்ப 90களில் கடை ஏழாவது வள்ளலாக களமிறக்கப்பட்டதால் அவ்வளவாக சோபிக்க்காத டெண்டுல்கர், 1994 ஆம் ஆண்டு நியுசிலாந்துக்கு எதிராக துவக்க ஆட்டக்காரராக களம் இறக்கப்பட்டார். ஓவருக்கு நான்கரை அடித்தால் போதும் என்ற காலக் கட்டங்களில் அதிரடியாக ஆடி 49 பந்துகளில் 82 ரன்கள் அடித்தது சகாப்த புத்தகத்தில் மற்றொரு அத்தியாயத்தைத் துவக்கினார். மழைக் காளான்கள் போல சட சட வென துவக்க ஆட்டக்காரராக சதங்களை குவிக்க ஆரம்பித்தார். 96 ஆம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்தது,பின் ஷார்ஜாவில் தொடர்ச்சியான இரண்டு சதங்கள், 1999 உலகக்கோப்பையில் தந்தையின் இறுதிச் சடங்கிற்குப்பின்னர் ஆடுகளத்திற்கு திரும்பி வந்து சதமடித்து இந்திய அணிக்கு உற்சாகத்தை அளித்தது, 2003 ஆண்டு உலகக்கோப்பை ஆட்டங்களில் இறுதி வரைக் கொண்டு வந்து சேர்த்தது என இந்திய கிரிக்கெட் அணி என்றாலே டெண்டுல்கர் என ஆனது நிதர்சனம்.
கங்குலியும் திராவிடும் லக்ஷ்மனும் அவரின் சுமையைப் பகிர்ந்து கொண்டாலும் டெண்டுல்கர் எப்பொழுதும் மூலவராகவே இருந்தார். அரசியல், சூழ்ச்சிகள் நிறைந்த இந்திய கிரிக்கெட் சூழலில் சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டவராக டெண்டுல்கர் இருந்தாலும் , சச்சின் சிக்கிய சர்ச்சைகளில் முக்கியமானது 98 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளுக்கு போக விருப்பம் காட்டாமல் இருந்ததும் அன்றைய விளையாட்டுத்துறை அமைச்சர் உமாபாரதியின் நெருக்குதலில் சென்றமையுதாம். இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அணியாக மட்டுமே பன்னாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி, இந்திய தேசிய அணியாக பங்கேற்றதும் இந்தப் போட்டிகளில் மட்டுமே.
பந்தைச் சேதப்படுத்தினார் என நடுவர் மைக் டென்னஸினால் குற்றஞ்சாட்டப்பட, ராமனுக்கு களங்கமா என கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வரிந்து கொண்டு களமிறங்க தென்னாப்பிரிக்கவுடன் ஆன மூன்றாவது டெஸ்ட் போட்டி அங்கீகாரம் இல்லாமலே அரங்கேறியது. பெர்ராரி காருக்கான சுங்கவரி விலக்குப் பெற்றதும், பிரச்சினை வந்தவுடன் பின்னர் அதற்கான வரியை பியட் நிறுவனமே ஏற்றுக்கொண்டு, பிராட்மேனின் சதங்களைக் கடந்தமைக்காக பரிசளித்தது பெருமை என்றாலும் டெண்டுல்கருக்கு சங்கடமான விசயம் ஆனது.
தனக்கு நெருக்கமான அபய் குருவில்லா, சமீர் திகே, ராபின்சிங் , கடைசி கால வினோத் காம்ப்ளி, சில காலம் அகர்கர் என சத்தமே இல்லாமல் அணிக்கு இவர் கொண்டு வந்த ஆட்களும் உண்டு. கிரிக்கெட் சூதாட்டங்களில் நேரிடையாக தொடர்பு இல்லை எனினும் நடந்த விசயங்கள் அரசல் புரசலாக தெரிந்ததை வெளியில் சொல்லவில்லை, ஒரு நாள் போட்டிகளில் துவக்க ஆட்டக்காரராக மட்டுமே ஆடுவேன் என 2003 உலகக் கோப்பைப் போட்டிகளில் கங்குலியிடம் விருப்பத்தை தெரிவித்தது, முல்தான் டெஸ்ட் போட்டியில் 194 ரன்கள் எடுத்திருந்த நிலையில் திராவிட் ஆட்டத்தை டிக்ளேர் செய்தபொழுது தனது வியப்பைக் காட்டியது, என ஆட்டத்திறன் இல்லாத காரணங்களுக்காச் செய்திகளில் வந்தாலும் இவை எல்லாம் பரந்து விரிந்த வெண்ணிற நிலப்பரப்பில் ஆங்காங்கே இருக்கும் சில நுண்ணிய கருப்புத் துகள்தாம்.
மட்டையாட்டத்தில் மட்டுமின்றி, ஆட்டக்களத் தடுப்பிலும் சுழற்பந்து வீச்சிலும் சற்றும் குறைந்தவர் இல்லை என அவ்வப்பொழுது நிறுபித்துக் கொண்டே இருப்பார் சச்சின். பெரும்பாலானோருக்கு ஹீரோ கோப்பையின் இறுதி ஓவரை கோலியாத்தைப்போல இருக்கும் மேக்மில்லனை ஒருமுனையில் நிறுத்தி ரன் எடுக்க விடாமல் தடுத்து வெற்றிக்கனியைப் பறித்துக் கொடுத்தது தான் நினைவில் இருக்கும். ஆனால் இந்த ஆட்டத்திற்கு முன்னோட்டமாக 1991 ஆம் ஆண்டு ‘டை' யில் முடிவடைந்த ஆட்டத்திற்கு காரணகர்த்தாவாக இருந்திருக்கின்றார்.
126 சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்திய அணி, எதிராடிய மேற்கிந்திய அணியை 76 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள் எடுத்து மட்டுப்படுத்தியது. ஆனால் அம்ப்ரோஸும் ஆண்டர்சன் கம்மின்ஸும் தட்டி தட்டி வெற்றி ஓட்டத்தை நோக்கி நெருங்க அம்ப்ரோஸ் ஆட்டமிழக்கிறார். கடைசி ஆட்டக்காரர் பாட்ரிக் பாட்டர்சனும் ஆட்டமிழக்கமால் இந்திய அணியினரை வெறுப்பேற்ற, முக்கிய பந்து வீச்சாளர்களின் 10 ஓவர் கோட்டா எல்லாம் முடிந்து 60 பந்துகளில் 6 ரன்கள் எடுக்க வேண்டிய சூழலில் டெண்டுல்கரை, அணித்தலைவர் அசாருதீன் பந்து வீச அழைக்கிறார். ஸ்கோர் சமமான நிலையில் கம்மின்ஸ் ஆட்டமிழக்க ஆட்டம் சமனில் முடிவடைகிறது.
பாலோ ஆன் வாங்கியும் வெற்றிப்பெற்ற லக்ஷ்மன் புகழ் கோல்கத்தா ஆட்டத்திலும் டெண்டுல்கரின் கைவண்ணம் உண்டு. இரண்டு இன்னிங்ஸ்களிலும் டென் - டென் என எடுத்தப்போதிலும் ஆஸ்திரேலியாவின் இரண்டாம் இன்னிங்க்ஸில் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றி வரலாற்றின் வெற்றியில் தன் பங்கும் உண்டு எனக் காட்டிக்கொண்டார்.
அறிமுகம் ஆகி இதுவரை ஒரு போட்டித் தொடரில் கூட நீக்கப்படாத டெண்டுல்கர், 2007 பங்களாதேஷ் அணிக்கெதிரான ஒருநாள் போட்டித்தொடரில் அவரின் விருப்பம் இல்லாமாலேயே ஓய்வு அளிக்கப்பட்டார். வாய்ச்சொல்லில் தனது வீராப்பைக் காட்டாமல் அதன் பின் ஆடிய இரண்டு டெஸ்ட் ஆட்டங்களில் சதமடித்து மட்டையால் பதிலளித்தார்
தற்பொழுது ஐபிஎல் 2010 போட்டிகளில் அணித்தலைவராக கலக்கிக் கொண்டிருக்கும் டெண்டுல்கரின் இந்திய அணியின் தலைமைக் காலம் அவ்வளவு இனிப்பானதாக இல்லை. அணித்தலைவராக ஆடிய 25 டெஸ்டுகளில் நான்கில் வென்று 9ல் தோல்வியைத் தழுவினார். தனக்கு அளிக்கப்பட்ட அணியில் எத்தனை முறைதான் 11 பேருக்காகவும் ஒருவராகவே ஆடுவது, ஒரு நாள் போட்டிகளிலும் டைட்டன் கோப்பை, டோரண்டோ போட்டிகளைத் தவிர வேறு எவற்றிலும் பெரும் வெற்றியைக் காணவில்லை.
எத்தனை ஆட்டங்கள், எத்தனை ஓட்டங்கள். சச்சின் டெண்டுல்கரின் கிரிக்கெட் புள்ளிவிபரக் கணக்கை தோண்ட ஆரம்பித்தால் கணிதத்தின் அத்தனைச் சூத்திரங்களையும் பயன் படுத்தும் அளவுக்கு தேவையான விபரங்கள்.
சந்தன மரம் நாள் பட நாள் படத்தான் அதன் தனித்தன்மையை வெளியேக் கொண்டுவரும்.டெண்டுல்கரும் வயது வயது ஏற ஏற ஆட்டத்திறனும் பலவேறு பரிமாணங்களில் வெளிப்பட்டு வருகின்றது. 20 வருட கிரிக்கெட் உலகில் முடிசூடா மன்னனாகத் திகழும் டெண்டுல்கரின் மணி மகுடத்தில் ஒரு நாள் இரட்டைச் சதம் மற்றும் ஒரு வைரமகா ஜொலிக்கிறது. டைம் நாளிதழ் இவ்வாறாக சொல்லி இருந்தது ”ஒரு மைல் தூரத்தை நான்கு நிமிடங்களுக்கு குறைவாக கடக்கும் சாதனையைப்போல சச்சின் டெண்டுல்கர் ஒரு நாள் போட்டிகளில் இரட்டைச்சதம் அடித்தார்”. சச்சின் டெண்டுல்கரின் இரட்டைச் சதத்தைப் பார்க்க இங்கே சொடுக்கவும்
நிகழ்த்த முடியாது என நினைக்கப்படும் சாதனைகள் நம் காலத்தில் நம் கண்முன்னமே நிகழ்த்தப்படும் பொழுது பெரும்பாலும் அதன் முழு வீரியம் உள்வாங்கிக் கொள்ளப்படுவதில்லை. இந்தச் சாதனைகள் எல்லாம் ஒரே ஏற்பட்டவை அல்ல. திறமை, தனி மனித ஒழுக்கம், தான் இருக்கும் துறையில் ஈடுபாடு, காலத்திற்கேற்ப தன்னைத் தயார்படுத்திக் கொள்ளல், தன்னடக்கம், பயிற்சி என அனைத்தும் ஒரு சேர அமைந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் ஆடும்பொழுது மட்டுமே சாத்தியம் ஆகிறது. தொடர்ந்து எழுதிக் கொண்டே போனால் டெண்டுல்கரின் சாதனைப் புள்ளிவிபரக் குறிப்பாகப் போய்விடக்கூடும். 1992,96,99,2003,2007 ஆகிய வருடங்களில் செய்ய தவறியதை 2011 உலகக் கோப்பையில் ல் செய்து கொடுத்துவிட்டு தன் ஆட்டத்தை டெஸ்ட் போட்டிகளில் தொடர்வார் என்ற நம்பிக்கையுடன் இன்று பிறந்த நாள் காணும் சச்சின் டெண்டுல்கரை வாழ்த்துவோம்.
கிரிக்கெட்டை மதமாக்கி டெண்டுல்கரை தலைமைக் கடவுளாக ஆக்கினால் நாத்திகர்களும் ஆத்திகத்தை ஏற்றுக்கொள்ள ஒரு சந்தர்ப்பம் அமையலாம். பாரதரத்னா போன்ற விருதுகளைக் கொடுத்து டெண்டுல்கரை மீண்டும் அரசியல் ஆக்காமல், அவருக்குப் பெருமைச் சேர்க்கும் விதமாக ஒன்று செய்யலாம், இந்தியக் கட்டுப்பாட்டில் இருக்கு இமாலயச் சிகரங்களுக்கு ஏதேனும் ஒன்றை அவரின்பெயரைச் சூட்டி சிகரத்திற்கு சிறப்பு அளிப்போம்.
14 பின்னூட்டங்கள்/Comments:
சூப்பர்
sachin is overrated :P
//திறமை, தனி மனித ஒழுக்கம், தான் இருக்கும் துறையில் ஈடுபாடு, காலத்திற்கேற்ப தன்னைத் தயார்படுத்திக் கொள்ளல், தன்னடக்கம், பயிற்சி என அனைத்தும் ஒரு சேர அமைந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் ஆடும்பொழுது மட்டுமே சாத்தியம் ஆகிறது.//
TO BE NOTED -DISCIPLINE IS ESSENTIAL TO BE SUCCESSFUL
Nevertheless to say, he is the lone superstar of indian skies :PPPP
கட்டுரை பெரியதாக இருந்தாலும் படிக்கும் பொழுது அது தெரிய வில்லை ... ஒரு வேளை நீங்க டெண்டுல்கரை பற்றி எழுதியதாலோ என்னவோ, மிகவும் ரசித்து படித்தேன்? அருமையாக இருந்தது நண்பா ...
சச்சினை பற்றி நான் படித்ததிலேயே மிகவும் பிடித்தது இதுதான்.
"A know is a drop and unknown is a ocean" this words make true, by your writing power... its very clearly tells about sachin tendulkar.. good..
sachin's cricket history is admirable.
sacin is really great...amazing player
http://infopediaonlinehere.blogspot.com/
சேமிப்பு செய்து வைக்க வேண்டிய பதிவு இது..!
வெல்டன் தம்பி..!
அருமை.
அண்ணே ,
அந்த olanga zimbabvae கதையை விட்டு விட்டர்களே :( பாவம் அந்த மனுஷன் ...,அந்த ஆட்டத்தில் அவர் ஓவர் அடிச்சு துவைத்து காய போடப்பட்டது ...,
டிஸ்கி : இந்த olanga டெண்டுலகர் விக்கெட்டை எடுத்து விட்டார் என்று குதி குதி என்று குதித்தார் ...,அதற்கு அடுத்த மாட்சில் தான் ஆப்பு அடிக்க பட்டது
:)
Nice write up though.
Super post.
Post a Comment