Saturday, April 17, 2010

பனிமலைகளில் எரிமலைகள் - ஐஸ்லாந்து

ஐஸ்லாந்து, பிரிட்டனுக்கு வடமேற்கே வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் இருக்கும் தீவுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய நாடாகும். தன்னிறைவு பெற்ற நாடு என அறியப்பட்ட ஐஸ்லாந்து பொருளாதார மந்தநிலையின் ஒரு பகுதியாக, நாட்டின் முக்கிய மூன்று வங்கிகள் நிதி நெருக்கடியில் சிக்கிய பொழுது உலகசெய்திகளில் அடிபட்டது. இந்த நாட்டை விற்க ஈபே இணையதளத்தில் விளையாட்டாக ஏலம் கூட நடந்தது. கடந்த இரண்டு மூன்று தினங்களாக ஐஸ்லாந்து மீண்டும் செய்திகளில் அடிபட ஆரம்பித்துள்ளது. பனிமலைகள் அடர்ந்த பனிபிரதேச நாட்டில் இருக்கும் எரிமலைகள் உமிழ ஆரம்பித்ததில் உருவான சாம்பல் மேகங்கள் வான் வெளி மண்டலத்தில், குறிப்பாக ஐரோப்பா கண்டத்தில் மேலாக விரவியதனால் வான்வெளிப்போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

ஐரோப்பாசிய கண்டத்தகடையும் வட அமெரிகக்க கண்டத்தகடையும் பிரிக்கும் மத்திய அட்லாண்டிக் முகட்டுத்தொடரின்(Mid-Atlantic ridge) மேல் இந்த ஐஸ்லாந்து நாடு அமைந்துள்ளது. கண்டத்தகட்டுகளைப் பிரிக்கும் இது போன்ற ஆழ்கடல் முகட்டுத்தொடர்களில்தான் புவியின் உள்ளிருந்து வெளியே வரும் கற்குழம்பை கக்கும் முகத்துவாரங்கள் எரிமலைகளாக அமைந்துள்ளன. ஏறத்தாழ 35 செயலில் இருக்கும் எரிமலைகளை உள்ளடக்கிய ஐஸ்லாந்து தீவில் ஹெக்லா, காட்லா மற்றும் கிரிம்ஸ்வோத்ன் என்ற மூன்று பெரிய எரிமலைகல் மத்திய அட்லாண்டிக் ஆழ்கடல் முகட்டுத்தொடரில் அமைந்துள்ளன. ஐஸ்லாந்தில் மக்கள் குடியேற்றம் ஏற்பட்ட பிறகு எரிமலை வெடிப்பில் மிகப்பெரியது கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள கிரிம்ஸ்வொத்ன் எரிமலையும் லாகி என்ற
மற்றொரு எரிமலையும் ஒரே சமயத்தில் வெடித்ததுதான். 1783 முதல் 1785 வரை லாவாக் குழம்பைக் கக்கி கால்வாசி மக்களை காவு கொண்டது மட்டுமல்லாமல் , எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட சாம்பல் மேகம் விவாசாயத்தைப் பாதித்ததோடு மட்டுமல்லாமல் மண்ணையும் நச்சுத்தன்மை வாய்ந்ததாக மாற்றியது.


தற்போது இரண்டு முறை வெடித்து இருக்கும் ஈயபியலக்யுல்(Eyjafjallajökull) என்ற எரிமலைதான் ஐரோப்பாவின் இன்றைய அசாதாரணமான நிலைக்கு காரணம். இந்த வருடம் மார்ச் 14 ஆம் நாள் தன் உமிழ்வைத் துவங்கிய இந்த எரிமலை, சிறிய இடைவெளிக்குப்பின் ஏப்ரல் 14 ஆம் தேதி சற்றேப் பெரிய அளவில் உமிழத் தொடங்கியதானால் ஏற்பட்ட சாம்பல் மண்டலம் ஐரோப்பா முழுவதும் கிட்டத்தட்ட 20,000 அடிகள் உயரத்திற்கு மேலே பரவி வான்வெளிப் போக்குவரத்தைப் பாதிப்பு அடையச் செய்துள்ளன.

Eyjafjallajoekull என்றால் மலைத்தீவின் பனியாறு எனப் பொருள்படும்(Eyja - தீவு, Fjall - மலை , Joekull - பனியாறு) இந்த எரிமலை இதற்கு முன் கி.பி 921, 1612, 1812-13 ஆம் ஆண்டுகளில் கற்குழம்பை வெளியிட்டபொழுதெல்லாம், அதனைத் தொடர்ந்து இதன் அருகாமையில் உள்ள இதைவிட பெரிய எரிமலையான காட்லாவும் உமிழத் தொடங்கி இருக்கின்றது. புவியியல் ஆய்வாளர்கள் அடுத்து காட்லா எப்பொழுது தனது உமிழ்வைத் தொடங்கும் என நோக்கத் தொடங்கி உள்ளனர். காட்லா இதுவரை அமைதியாகவே இருந்து வருவது ஆறுதலான விசயம். 40 - 80 வருடங்களுக்கு ஒரு முறை வெடிக்கும் காட்லா கடைசியாக சிறு அளவில் வெடித்தது 1950 களில். ஐரோப்பாவின் உயரமான எரிமலைகளில் ஒன்றான காட்லா வின் வாய்ப்பகுதி 10 கிலோ மீட்டர்கள் விட்டம் கொண்டது. இது கற்குழம்பைக் கக்கத் துவங்கினால் பனியாறு உருகி பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.


காட்லாவும் மற்றொரு எரிமலை ஹெக்லாவும் கோபக்காரச் சகோதரிகள் என அழைக்கப்படுகின்றன. ஹெக்லா கடைசியாக கோபப்பட்டது 1947-48 ஆம் ஆண்டுகளில். இந்தக் கோபம் கிட்டத்தட்ட 11 மாதங்கள் நீடித்தது.ஹெய்ம்சே என்ற மீன்பிடி தீவில் இருக்கும் எல்ட்ஃபெல் எரிமலை 1973 ஆம் ஆண்டு வெடித்த பொழுது கிட்டத்தட்ட 400 வீடுகள் வெளிப்பட்ட லாவாக்குழம்பில் மூழ்கிப்போயின. ஆனால் அதற்கு முன்னர் அங்கு வசித்த கிட்டத்தட்ட 5300 நபர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். க்ரிம்ஸ்வோத்ன் எரிமலை 1996 ஆம் ஆண்டு தான் வெடித்ததோடு மட்டுமல்லாமல் தன் வெளிப்புறம் ஓடிக்கொண்டிருந்த பனியாற்றையும் வெடிக்க செய்தது. இதே எரிமலையில் 2004 ஆம் ஆண்டு வெடிப்பில் வெளிப்பட்ட சாம்பல் 12 கிலோ மீட்டர்கள் வரை உயர்ந்து காற்று மண்டலத்தில் கலந்தது.


எரிமலையின் ஆங்கிலப்பதமான Volcano, வால்கன் என்ற ரோமானியர்களின் நெருப்புக்கடவுளைக் குறிக்கும் சொல்லில் இருந்து வந்தது. எரிமலைகள் வெறும் புவியியல் மாற்றத்தையும் தட்பவெப்ப நிலைமற்றங்களை உருவாக்கிவிட்டு மட்டுமே செல்வதில்லை. மக்களின் இடம்பெயர்வு, புதியத் தேவைகளுக்கான தேடல்கள் ஆகியவற்றையும் தொடங்கி வைக்கின்றன. பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் மிகப்பெரும் எரிமலை வெடிப்பான இந்தோனேசியாவின் தம்போரா எரிமலை வெடிப்பு நிகழ்வின் தொடர்ச்சி 19 ஆம் நூற்றாண்டின் வரலாறு காணாத பஞ்சத்தை ஐரோப்பாவில் ஏற்படுத்தியது. கந்தக அமிலம் கலந்த எரிமலை சாம்பல் மேகங்கள் புவியைச் சூழ்ந்து சூரிய வெப்பத்தையும் ஒளியையும் சிதறடித்து பூமியைக் குளிரச்செய்துவிடும்.

தம்போரா எரிமலை வெடிப்பு ஐரோப்பாவில் கடும் குளிரை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் 1816 ஆம் ஆண்டை கோடைக்காலமே இல்லாத வருடமாக்கியது. ஜெர்மனியில் குதிரைகளுக்கு கொடுக்க்பட்டும் ஓட்ஸ் தானியத்தின் பற்றாக்குறை, கார்ல் டிரையாஸ் என்ற கண்டுபிடிப்பாளரை தற்போதைய மிதிவண்டிக்கு மூதாதையாரான வெலொசிப்பைடைக் கண்டுபிடிக்க வைத்தது. இத்தாலியில் அமைந்திருக்கும் வெசூவியஸ் எரிமலை கிபி 79 ஆம் ஆண்டில் வெடித்தபொழுது பொம்பெய் மற்றும் ஹெர்குலினியம் என்ற இரு நகரங்கள் அழிந்துப்போயினவாம். தற்போதைய இந்தியாவின் தக்காண பீடபூமிகளில் இருந்த எரிமலைகளின் வெடிப்பினால் ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன் இருந்த டைனோசர் விலங்கினங்கள் அழிந்துப்போயின என்ற ஒரு கூற்றும் இருக்கிறது.

வரலாற்றின் ஏனைய எரிமலை வெடிப்புகளை ஒப்பிடும்பொழுது, இந்த ஈயபியலக்யுல் எரிமலை வெடிப்பு அளவில் மிக மிகச் சிறியவை. பரபரப்பான வான்பரப்பில் மையத்தில் இந்த எரிமலை வெடிப்பு நிக்ழந்ததனால்,வெடிப்பின் சாம்பல் துகள் பரவல் 20 ஐரோப்பிய நாடுகள் தங்கள் வான்பரப்பில் விமானப்போக்குவரத்தை நிறுத்த செய்துள்ளது. பல்கேரியா, கிரீஸ் மற்றும் துருக்கி நாடுகளைத் தவிர அனைத்து ஐரோப்பிய நாடுகளுமே பகுதியளவிளாவது பாதிக்கப்பட்டுள்ளன. பனிக்கட்டிகள் உருகிய தண்ணீருடன் கற்குழம்பு கலந்து உமிழ்வு ஏற்படுவதால் சாம்பல் வெளிப்பாடும் அதிக அளவில் இருக்கின்றது. அடுத்தச் சில நாட்களுக்கு எரிமலை வெடிப்பு நிற்கப்போவதில்லை என விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
நுண்ணிய சாம்பல் துகள்கள் ஜெட் விமான எஞ்சினை குளிர்விக்கும் துவாரங்களை அடைத்துக்கொண்டு 2000 டிகிரி செண்டிகிரேட் வெப்பநிலையில் செயற்படும் எஞ்சின்களை நிறுத்திவிடும். 1982 ஆம் ஆண்டில் இந்தோனேசியாவின் மேல் பறந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் பயணிகள் விமானம் இதே பிரச்சினையில் சிக்கியது. சாம்பல் மேகங்களை விட்டு நகர்ந்து எஞ்சின்களை திரும்பவும் இயக்கத் தொடங்கிய பொழுது விமானம் விபத்தில் இருந்து காப்பற்றப்பட்டது.தற்பொழுது 18000 அடிகளில் இருந்து 35000 அடிகள் வரை சாம்பல் மேகங்கள் சில ஆயிர சதுர கிலோமீட்டர்களில் விரவி இருப்பதால் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பிளைட் 8 போலவோ அல்லது அலஸ்காவின் மேல் எரிமலைச் சாம்பல் துகள்களின் ஊடாகப் பறந்த கே.எல்.எம் 867 போலவோ அவ்வளவு எளிதாக சாம்பல்கள் எஞ்சின்களில் சிக்கினாலும் தப்பித்து ஓட்டிவிடலாம் என அலட்சியமாக இருந்துவிட முடியாது. அதனால் தான் விமானப் போக்குவரத்தை நிறுத்தி வைத்துள்ளனர்.


உலகமெங்கும் வர்த்தகத்தில் பல ஆயிரம் கோடிகள் நட்டம் ஒட்டுமொத்த ஐரோப்பாவின் இயக்கமே தடுமாறிப்போய் இருக்கிறது,, பல ஆயிர மக்கள் தவிப்புகளுடன் விமான நிலையங்களில் முடங்கிக் கிடப்பதை பார்க்கையில் மனதிற்கு வருத்தமாக இருந்தாலும் இயற்கை தான், மனிதனை விட உயர்ந்தது என அவ்வப்பொழுது உணர்த்த நிகழ்ந்த நிகழ்வுகளில் இதுவும் ஒன்றோ எனத்தோன்றுகிறது. மனிதன் இயற்கையைப் பொருத்த மட்டில் ஒரு பார்வையாளன் மற்றும் பதிவாளானே. மைதானத்தில் ஆடும் ஆட்டம் எல்லாம் இய்றகையின் உடையது. உலகம் வெப்பமடைகிறது என உலகநாடுகள் கதறிக்கொண்டிருந்தாலும், இயற்கை நினைத்தால் தான் உறங்க வைத்திருக்கும் சூப்பர் எரிமலைகளில் ஏதேனும் ஒன்றை உமிழ வைத்து புவியின் வெப்பத்தை தனக்கு ஏற்ற அளவுக்கு கொண்டு வரமுடியும். இயற்கையை புரிந்து கொள்ள எத்தனிக்கும் ஒவ்வொரு நொடியும் தரும் வியப்புக்குரிய அம்சங்கள் ஏராளம்.


17 பின்னூட்டங்கள்/Comments:

said...

இந்த கட்டுரை குறித்து உங்களுக்கு ஒரு தனிமடல் அனுப்பியுள்ளேன்

said...

//மண்ணையும் நச்சுத்தன்மை வாய்ந்ததாக மாற்றியது.//

ஆனா நா ஒரு புக்ல படிச்சேன் - எரிமலைச் சாம்பல் கலந்த மண்ணில் கனிமப் பொருட்கள் சேருவதால் மண் வளமாகிறது. இந்த ஒரே காரணத்துக்காகவே ஆபத்து என உணர்ந்தும் எரிமலை அடிவாரங்களில் பெரும் அளவில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது" அப்பிடின்னு... இதுல ஏது சரி?

said...

இயற்கையை பற்றிய உங்களது கருத்துக்கள் தான் எனதும் !!!!

ஆனால், பயணம் தடைபட்ட பயணிகளின் கண்ணீர் கதைகள் தான் மனதை வருத்தம் கொள்ளச் செய்கின்றன.

said...

நல்ல கட்டுரை..
மனிதனின் இடப்பெயர்வுகளில்..பலமுறை இதுப் போன்ற எரிமலைகள் தான் மக்கள் தொகையயை கட்டுப்படுத்தியிருக்கின்றது...

said...

அருமையான பகிர்வு செல்வா..

//எரிமலையின் ஆங்கிலப்பதமான Volcano, வால்கன் என்ற ரோமானியர்களின் நெருப்புக்கடவுளைக் குறிக்கும் சொல்லில் இருந்து வந்தது.//

ஒரு புது விசயத்தைக் கற்றுக்கொண்டேன். எழுத்தினில் அபார முதிர்ச்சி.. இது போன்ற கட்டுரைகளை அதிகம் எழுதுங்கள்..

said...

மிகவும் பயனுள்ள பதிவு. மிகவும் நன்றி.

கரிகாலனுக்கு ஏற்பட்டிருக்கும் சந்தேகம் எனக்கும்.

கொஞ்சம் விளக்கவும். நன்றி.

said...

இப்பொழுதுதான் ஹுசைனம்மா தளத்தில் எரிமலைகள் பற்றி படித்து விட்டு வருகிறேன்.உங்கள் விளக்கமும் அருமையாக இருக்கிறது.தகவல் களஞ்சியத்துக்கு நன்றி.

said...

//ஆனால், பயணம் தடைபட்ட பயணிகளின் கண்ணீர் கதைகள் தான் மனதை வருத்தம் கொள்ளச் செய்கின்றன.//

தாய்லாந்து போன்ற நாடுகளிலிருந்து இந்தியா வந்தடைந்த பயணிகள் மேலும் தங்கள் பயணத்தை தொடர முடியாமலும் இருக்கின்ற சூழலில்,பாதுகாப்பு கருதியோ என்னவோ திரும்ப அவர்கள் முன்பு புறப்பட்ட இடத்திற்கே திரும்ப போக வற்புறுத்துவதாக பி.பி.சி செய்தி அறிந்தேன்.

said...

Simply superb........What an information ....One of the best writing for understanding...

said...

இப்பத்தான் ஜீவன்பென்னி அளித்த சுட்டி மூலம் இப்பக்கத்தைப் பார்க்கிறேன். அதிக விளக்கங்கள் அறிந்துகொண்டேன். நன்றி. நானும் இதுகுறித்து இன்று எழுதியுள்ளேன்.

said...

பதிவர் ஹுசைனைம்மா எழுதிய ஐஸ்லாந்து எரிமலைகளைப் பற்றிய பதிவை இந்தச் சுட்டியில் வாசிக்கலாம்
http://hussainamma.blogspot.com/2010/04/blog-post_18.html

said...

/மனிதன் இயற்கையைப் பொருத்த மட்டில் ஒரு பார்வையாளன் மற்றும் பதிவாளானே. மைதானத்தில் ஆடும் ஆட்டம் எல்லாம் இய்றகையின் உடையது. உலகம் வெப்பமடைகிறது என உலகநாடுகள் கதறிக்கொண்டிருந்தாலும், இயற்கை நினைத்தால் தான் உறங்க வைத்திருக்கும் சூப்பர் எரிமலைகளில் ஏதேனும் ஒன்றை உமிழ வைத்து புவியின் வெப்பத்தை தனக்கு ஏற்ற அளவுக்கு கொண்டு வரமுடியும். இயற்கையை புரிந்து கொள்ள எத்தனிக்கும் ஒவ்வொரு நொடியும் தரும் வியப்புக்குரிய அம்சங்கள் ஏராளம்//-well said selva ,,,,,,.

said...

அருமையான கட்டுரை...

நன்றி..

said...

Good post.
Thz

said...

இயற்கை குறித்த உங்களது வார்த்தைகள் அருமையானவை.

said...

’’’இயற்கையை புரிந்து கொள்ள எத்தனிக்கும் ஒவ்வொரு நொடியும் தரும் வியப்புக்குரிய அம்சங்கள் ஏராளம். ’’
ஆம் ..
அழிவு எந்த ரூபதிலும் வரலாம்...

நல்ல பதிவு.....

said...

அருமையாக எழுதி இருக்கிறீர்கள் நண்பரே . அத்தி பூ அடிக்கடி பூப்பதில் எனக்கு சந்தோசமே ...