Monday, April 19, 2010

When you desire something, the universe conspires to help you to realize the dream - சிறுகதை

தூக்கமில்லாத கண்கள் ஜிவ்ஜிவு என எரிச்சலைத் தந்து கொண்டிருந்தன.தலைகீழாக கவிழ்த்தும் நான்கு சொட்டுகளுக்கு மேல் தேராதபொழுதுதான் பிளாஸ்க்கில் கொண்டு வைத்திருந்த வீட்டுக் காப்பியும் தீர்ந்துப் போய்விட்டது தெரிந்தது.சுவீடனில் செலவு செய்யும் ஒவ்வொரு க்ரோனருக்கும் ஏழால் பெருக்கி தனிக்கணக்குப் போட வேண்டியது இருப்பதால் வெளியே எங்கேயும் சாப்பிட மனது ஒப்புக்கொள்வதில்லை. நார்வே தலைநகர் ஓஸ்லோவுக்கான ரயில் கிளம்ப இன்னும் ஒரு மணி நேரம் இருக்கின்றது.பல்லவனுக்கு வைகைக்கும் அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடும் சென்னை எழும்பூரின் காலைப் பரபரப்பில் நூறில் ஒரு பங்கு கூட இல்லை. கோட்டும் சூட்டுமாக நாளிதழ்களைப் புரட்டிக்கொண்டு இருந்த மக்களை வேடிக்கைப் பார்த்தபடியே தானியங்கி மெஷினில் காப்பி எடுத்துக் கொண்டுத் திரும்புகையில், மற்றும் ஒருமுறை மனதினுள் இந்த ஒட்டுமொத்தப் பயணமும் அனாவசியமனதோ எனத் தோன்றியது.






நான் வசிக்கும் கார்ல்ஸ்க்ரோனாவில் நேற்று மாலை ஐந்தரைக்கு கிளம்பி,எம்மபோடா வில் ரயில் மாறி கோதன்பர்க் வந்து சேர்ந்தபொழுது இரவு 10 மணி. வாழ்வின் பல முக்கியக் கட்டங்களை ஒத்திப்போட்டு ரசிக்க ஏதுவானவை ரயில் பயணங்களும் ரயில்நிலையங்களும் தான் என்றாலும் என் வாழ்வில் கடந்துப்போன மிதமிஞ்சிய முக்கியக் கட்டங்களும் சலித்துப்போகின்ற வகையில் ஏற்பட்ட ரயில் பயணங்களும் மலரும் நினைவுகளைச் சிலாகிக்க வைக்கவில்லை.கதை எழுத கரு வேண்டுமே என்ற ஒரு காரணத்திற்காக மக்களை உன்னிப்பாக கவனிப்பதுண்டு. வழியனுப்ப வந்த காதலர்கள், தம்பதியினரின் முத்தங்களை ரசனையுடன் பார்த்துக்கொண்டே கையில் பவுலோ கோயல்ஹோ எழுதி இருந்த வால்கெய்ரிஸ் புத்தகத்தை வைத்து வாசிப்பதைப் போல பாவனை செய்து கொண்டிருந்தேன்.


வால்கெய்ரி என்றால் ஸ்காண்டிநேவியா நார்ஸ் புராண நம்பிக்கைகளின் படி போரில் கொல்லப்படுபவர்களைத் தேர்ந்தெடுக்கும் பெண்.ஆனால் வால்கெய்ரிஸைவிட பவுலோ கோயல்ஹோவின் அல்கெமிஸ்ட் புத்தகம் தான் பிரசித்திப்பெற்றது. என் காதல் வாழ்க்கைகளில் தகரத்தை தங்கமாக மாற்றும் அல்கெமிஸ்ட்டாக என்னையும் , வால்கெய்ரிகளாக என் காதலிகளையும் உணர்ந்ததுண்டு. இந்த இரண்டு புத்தகங்களையும் குறைந்தது 10 தடவையாவது படித்து இருந்தாலும், ரயில் பயணங்களில் நான் அறிவுசார்ந்த சமுதாயத்தைச் சார்ந்தவன் என்பதைக் காட்டிக்கொள்ள இரண்டில் ஏதாவது ஒன்றை கையில் வைத்துக் கொள்வதுண்டு.



நவீன ரக ரயில்கள் ஓடினாலும் கோதன்பர்க் யார்ன்வெகன்ஸ்டாஹூனனின் (järnvägenstationen)கட்டிடம் பழமையின் செழுமை மாறாமலே இருந்தது. யார்ன்வெகன்ஸ்டஹூனைன் சரியான மொழிப்பெயர்ப்பு இருப்புப் பாதை நிலையம்.யார்ன் என்றால் இரும்பு, வெகன் பாதை எனப்பொருள் தரும். நம்ம ஊரிலும் இப்படித்தானேபெயர்ப்பலகைகளில் போட்டிருப்பார்கள்.வேறு வேலை இல்லாததால் மொழி ஆராய்ச்சியும் செய்து கொண்டிருந்தேன்.

கோதன்பர்க் நகரின் மையச் சாலைகளில் புதுமையின் சமகால வடிவங்களுடன் போட்டிப்போட்டுக்கொண்டு பழங்கால டிராம்களும் ஓடிக்கொண்டிருந்தன. நேற்றிரவு ஒரு நிலையத்தில் டிராமில் ஏறி கடைசி மறு நிலையம் வரைப்போய் அதிலேயே திரும்பி வந்து கொண்டிருந்ததில் நள்ளிரவு வரை ஓடியது.அதன் பின் வசந்தகால குளிரில் ரயில்நிலையத்திற்கு அருகில் இருக்கும் தெருக்களில் ஒருச் சுற்று. அரைகுறை சுவிடிஷில் டாக்ஸி டிரைவர்களுடன் உரையாடல் என நேரம் ஓரளவிற்கு சுவாரசியமாகவே கொல்லப்பட்டது.



மதியம் ஓஸ்லோவில் வாசுகியைப் பார்த்துவிட்டு இன்று மாலையே கடைசி ரயிலைப் பிடித்து திரும்ப வரவேண்டும். நேற்றிரவைப் போல இன்றிரவும் இதே கோதன்பர்க் நகர்வலத்தில் தான் பொழுது கழியும். ஆனால் இன்று வெள்ளிக்கிழமையாதலால் ஏதாவதுநடன விடுதிக்குப் போய் இரவு தீரும் வரை ஆட்டம் போடலாம். ஸ்டாக்ஹோல்ம் செல்லும் x2000 அதிவேக ரயில் வண்டியின் முன்பக்கம் நின்று என்னை நானே புகைப்படம் எடுத்துக்கொண்டு திரும்ப எனது பிளாட்பாரத்திற்கு வந்தேன். இது போன்ற படங்களின் மூலமாகத்தான் எங்களின் வெளிநாட்டு வாழ்க்கையை பறைசாற்ற வேண்டி இருக்கின்றது. உண்மையில் நான்
வாசுகியைப் பார்க்கப்போவதற்காக மகிழ்ச்சி அடைய வேண்டும். மகிழ்ச்சி இல்லாவிடினும் சலிப்பு இல்லாமல் ஆவது இருக்கவேண்டும்.ஆனால் ஒவ்வொரு மறுநொடிக்கும் சலிப்பும் பயணச் செலவு 2000 க்ரோணர்களுமே மனதில் வந்து நிற்கின்றன.

வாசுகி என் வாசகியாக மீள் அறிமுகம் ஆனவள். கல்லூரியில் ஜூனியர். கடைசி வருடத்தில் என்.எஸ்.எஸ் காலங்களில் கடலைப்போட்ட பல பெண்களில் இவளும் ஒருத்தி. முகச்சாயலில் பழைய நடிகை நிரோஷா மாதிரி இருப்பாள். கல்லூரியில் பார்த்தபொழுது ஒல்லியாக இருந்தவள் தற்பொழுதைய ஆர்குட் புகைப்படங்களில் முன்பைவிட கொஞ்சம் பூசினாற்போல இருக்கிறாள்.

"தமிழ் திகில் கதைகள் அப்படின்னு கூகிளில் போட்டதில உங்க வெப்சைட் கிடைச்சது, அப்படியே உங்க கதைகள் எல்லாம் படிச்சேன் !!! வாவ் ,ரியலிஸ்டிக் ரைட்டிங்" இப்படித்தான் ஆர்குட் அழைப்பிதழுடன் ஆறு மாதங்களுக்கு முன்னர் வாசுகி திரும்ப வந்தாள். அப்பொழுது அம்மு விட்டுவிட்டுப்போன சமயம், ஆறுதலுக்கு யார் பேசினாலும் நல்லா இருக்கும் என்ற நிலையில் ஏற்கனவே அறிமுகம் ஆன வாசுகியின் நட்பு வரவேற்கத்தக்கதாகவே இருந்தது.

ஓஸ்லோ ரயிலுக்கான அறிவிப்பு மும்மொழிகளிலும் வர கைப்பெட்டியைத் தள்ளிக்கொண்டே எனது ரயிலுக்குள் ஏறி அமர்ந்தேன். ஐரோப்பிய நாடுகளில் ஒரு சிறப்பு என்னவெனில் அறிவித்த நேரத்திற்கு வண்டியை எடுப்பார்கள். சொன்ன நேரத்தில் வண்டி நகரத் தொடங்கியதுமேதான் வாசுகிக்கு எந்த அன்பளிப்புமே வாங்கிக் கொள்ளவில்லையே என நினைவுக்கு வந்தது. இந்த நாட்டு மக்களைப்போல ஒரு பூங்கொத்து அல்லது பூச்செடியையாவது வாங்கி இருந்திருக்கலாம். பெட்டியில் வைத்திருக்கும் அல்கெமிஸ்ட் புத்தகத்தைக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிடலாம் என்றால் , என்னுடைய முன்னாள் காதலிகள், ஈர்ப்பு ஏற்படும் பெண்கள் அனைவருக்கும் நான் வாங்கி பரிசளிப்பது இதே அல்கெமிஸ்ட் புத்தகத்தைத் தான். எல்லா நட்புகளுமே நட்டாற்றில் விடப்பட்டதால் கெட்ட சகுணமாக, கொடுக்க வேண்டாம் என முடிவு செய்தேன். ரயில் வேகம் எடுக்க எடுக்க, வாசுகியுடன் ஆன பழைய உரையாடல்கள் கோர்வையின்றி மனதில் மறு ஒலிபரப்பு செய்ய ஆரம்பித்தன.


”கார்த்தி, நான் நார்வே வர்றேன், வுட் கன்சர்வேசன் பத்தின ஒரு ஆர்க்கிடெக்சர் கோர்ஸுக்கு வரேன், 15 டேஸ்”

“ஓ அப்படியா !!”

“என்ன கார்த்தி எக்ஸைட்மெண்டே காணோம் !!”

“ச்சே சந்தோசம் தான்... எங்கே தங்குவீங்க !!”

“அத்திம்பேர் சைட் ரிலேட்டிவிஸ் ஓஸ்லோல இருக்காங்க, அங்க தங்கிடுவேன்”

அவள் சொன்னதைப்போலவே நான் ஆர்வமின்றி தான் கேட்டுக்கொண்டிருந்தேன். முதல் இரண்டு காதல்களைப்போல இந்தக் காதலில் பெரும் நாட்டம் இல்லை. நாட்டம் என்பதை விட முன்பு பேசிய அதே வசனங்களைப் பேச, கேட்க வேண்டிய கட்டாயம். ஒரு காதலுக்கும் இன்னொரு காதலுக்கும் குறைந்த பட்சம் இரண்டு வருடங்கள் இடைவெளியாவது தேவை என்ற எண்ணத்துடம் படிப்பில் மட்டும் கவனம் செலுத்திக்கொண்டிருந்த பொழுது, “வாசகி,உன் வாசுகி வள்ளுவன் இந்த வாசுகி” நான் அவ்வளவாக கேட்டிராதா ஒரு பாடலை தனக்கு ஏற்றவாறு ஸ்கைப்பில் பாடி காதலிப்பதாகச் சொன்னாள். என் வாழ்க்கையில் மூன்றாவதாக ஒரு பெண் தன் காதலை நயமாக சொல்வது பிடித்து இருந்தாலும், கடந்த கால கசப்புகள் தொண்டைக்குழியில் இன்னும் நஞ்சாய் சிக்கிக் கொண்டு இருந்ததால் உடனடியாக அவளுக்கு சம்மதம் சொல்லவில்லை.

ஒவ்வொரு இரவு ஸ்கைப்பில் நடக்கும் அரட்டையிலும் நான் எழுதி இருக்கும் ஒவ்வொரு கதையைப் பற்றியும் வரிக்கு வரி விவரிப்பாள்.

“கார்த்தி, எப்படிடா, ஜெனியும் அம்முவும் உன்னை இவ்வளவு ஹர்ட் பண்ண பிறகும், அவங்களை கேரக்டர் அசாசினேட் பண்ணாமல் கதைகளில் எழுத முடியுது, நீ ஒரு ஜெண்டில்மேன்... ஐ லவ் யூ ஸோ மச்”

ஐ லவ் யூ என்ற வாக்கியத்தைக் கேட்கும்பொழுதே அசூயையாக இருப்பதையும் கதைகளில் அவர்களைப் பற்றி எழுதுவதே நான் அவர்களுக்குத் தரும் தண்டனை , அதைவிட வேறு என்ன வேண்டும் என சொல்லத் தோன்றியது.

"நான் அம்முவாகவோ இல்லாட்டி ஜெனியாவோ இருந்திருந்தால் உன்னை மிஸ் பண்ணி இருந்திருக்கவே மாட்டேன்”

எனக்குச் சிரிப்பை அடக்க முடியாமல் “அம்மு கூட இப்படித்தான் சொன்னாள், ஜெனி இடத்தில அவ இருந்திருந்தா என் கூட ஓடி வந்திருப்பாள்னு”

ஸ்கைப் வீடியோவில் அவள் அழப்போவது தெரிந்தது. “உன்னோட அவளுக மாதிரி டைம் பாஸுக்கு பேசுறேன்னு நினைக்கிறீயா, இந்த ஆர்க்கிடெக்சர் வேண்டாம், அம்மா அப்பா வேண்டாம், பிரண்ட்ஸ் வேண்டாம், சம்பிரதாய் எதுவுமே வேண்டாம், எல்லாரையும் விட்டுட்டு வந்துடுறேன்”

“அம்மாடி நீ யாரையும் விட்டுட்டு வரவேண்டாம், எல்லாம் நடக்கிறபடி நடக்கட்டும், கீறி தழும்பான இடத்தில இன்னொரு தடவை கீறல் பட்டுச்சுன்னா தாங்க முடியாது”

“கார்த்தி, நீ இல்லாட்டி நடைபிணமாத்தான் இருப்பேன்”

இப்படித்தான் நானும் சொன்னேன், என் காதலிகளும் என்னிடம் சொன்னார்கள். ஒருத்தி இரட்டைக்குழந்தைகளுடனும் இன்னொருத்தி எதிர்கால வாரிசை சுமந்தபடியும் சுகமாகத்தான் இருக்கிறார்கள். நானோ ஒன்றுக்கு இரண்டாய் காதலித்து மூன்றாவதில் இருக்கின்றேன். உலகத்தில் பணம் புகழ் பதவி இவைகளை விட மனிதன் காதலுக்காகத்தான் காதலில் தான் அதிகம் பொய் சொல்கின்றான்.

ஒரு நாள் வாசுகி அழுது ஆர்ப்பாட்டம் செய்தபின்னர் முன்னிரண்டு பெண்களை விட வாசுகியைத் தான் அதிகம் காதலிப்பதாக சொன்னேன். முழுப் பொய் இல்லை, காதலிப்பது உண்மை . அதிகம் என்ற சொன்னதில் தான் உண்மை பாதியாக்கப்பட்டது. என் வாழ்வில் ஒன்றிற்கு மேற்பட்ட சீதைக்கள் வந்திருந்தாலும் ஒவ்வொரு சீதைக்கும் அந்த அந்த காலக்கட்டங்களில் அவர்களுக்கு நான் ராமனாகத்தான் இருந்திருக்கின்றேன். இந்த சீதைக்கும் ராமனாக இருக்க முடிவு செய்தேன், இந்த சீதை வனவாசம் போகும் வரை.

எப்பொழுது இந்தியா வரலாம் எனத் திட்டமிட்டுக் கொண்டிருந்த பொழுதுதான் வாசுகிக்கு இந்த நார்வேப் பயணம் அமைந்தது. அவளுடன் நான் பதினைந்து நாட்களும் இருக்க வேண்டும் என்பது அவளின் ஆசை. எனக்கு நார்வேயில் தங்க யாரையும் தெரியாது. அவளின் அத்திம்பேர் உறவினர் வீட்டிற்கு வந்துப் பார்க்க கூட அவள் அனுமதிக்கவில்லை. அவளுடன் வெளிநாட்டில் 15 நாட்கள் தங்கி காதலிக்கும் அளவிற்கு பொருளாதாரமும் இடம் தரவில்லை. முன்பு அம்மு அவளின் நிறுவன ஆண்டறிக்கைக் கூட்டத்திற்கு பெங்களூருக்குச் சென்றபொழுது அவளின் அக்கா வீட்டில் அவள் தங்கிக் கொள்ள நான் ஒரு வாரம் விடுதியில் தங்கி தேவுடு காத்துக் கொண்டிருந்தது எலலாம் தேவை இல்லாமல் நினைவுக்கு வந்தது. எல்லாப் பெண்களும் ஒரே மாதிரிதான். பேசவேண்டும், ஆறுதல் வேண்டும். ஆனால் வீட்டுக் தெரியக்கூடாது. வீட்டிற்குத் தெரியும் வரை காதலிகளைப்போல தைரியசாலிகளைப் பார்க்கவே முடியாது.

ஒரு வழியாக பல கோணங்களையும் சிந்தித்து ஓஸ்லோ ரயில்நிலையத்தில் நான்கு மணிநேரம் சந்திப்பது என முடிவாகியது. சந்திப்பின் திட்டம் நிறைவேற இன்னும் ஒரு மணி நேரம் தான். கிட்டத்தட்ட ஐந்தாறு வருடங்கள் கழித்துப் பார்க்கப்போகின்றேன். என்னதான் மணிக்கணக்கில் ஸ்கைப்பில் மின்னரட்டையில் பேசி இருந்தாலும் நேரில் பேசுவதைப்போல் வருமா !!! ஓஸ்லோ நகரத்தின் வானுயர்ந்த கட்டிடங்களை எல்லாம் நொடிப்பொழுதுகளில் கடந்து ஓஸ்லோ ரயில்நிலையத்தை அடைந்தது. கண்ணாடி சன்னலுக்கு வாசுகியின் கண்கள் என்னைத் தேடிக்கொண்டிருப்பது என் கண்களுக்கு முன் மனதிற்கு புலப்பட்டது.



“சீனியர் ... நான் வாசுகி, வாசுகி திருவேங்கடம்” என ரயிலை இறங்கியவுடன் நேருக்கு நேர் வந்து நின்று சொன்னாள். இப்படித்தான் என்.எஸ்.எஸில் என்னிடம் வந்து அறிமுகப்படுத்திக்கொண்டது நினைவுக்கு வந்தது.

“ஆய்தஎழுத்து மாதிரி விடாம கட்டிப்பிடிப்பேன்னு சொன்னீங்க, எதையும் காணோம்” எனத் தோளில் இடித்தபடிக் கேட்டாள்.

பயணக்களைப்பு , முன் தோன்றிய எண்ணங்களினால் ஏற்பட்ட சலிப்பு எதுவுமே இப்பொழுது இல்லை. உற்சாகம் ஒரு தொற்றுவியாதி. அவளின் உற்சாகம் , காதலுடன் உபரியாக வந்து ஒட்டிக்கொண்டது. நடைமேடையில் இருந்த ஒரு பெஞ்சில் உட்கார வைத்து வீட்டில் எடுத்து வந்திருந்த பிளாஸ்க்கில் காப்பி ஊற்றிக் கொடுத்தாள்.

“இட்லி சாப்பிடுறியா !! நான் செஞ்சு எடுத்துட்டு வந்தேன்”

ஒரு கையை தாடையில் ஊன்றியபடியே நான் சாப்பிடுவதை ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தாள். கல்லூரிக்கதைகள், என்னை கல்லூரிக்காலங்களிலேயே எவ்வளவுப்பிடிக்கும் என்பதை அபிநயம் செய்து காண்பித்தாள். ஏற்கனவே பலமுறை தொலைபேசியில் சொல்லக் கேட்டிருந்தாலும் அலுக்கவில்லை.

“நீ என்கிட்ட ஸ்லாம்புக்ல சைன் வாங்குவேன்னு நினைச்சே , கடைசி வர வரவே இல்லை அபிஷ்டு” இதுவும் ஏற்கனவே நிறையதடவைச் சொல்லி இருக்காள்.

அவள் ஒவ்வொரு வாக்கியம் பேசி முடிக்கும் போதெல்லாம் “ஐ லவ் யூ” என பதில் சொன்னேன்.

“திருப்பரங்குன்றத்தில் ஏற்பட்ட அறிமுகம் எங்கே கொண்டுவந்து விட்டிருக்குப்பாரு”



உனக்கான பொக்கிஷம் உன் காதல் இருக்கும் இடத்தில் தானாகவே வந்து சேரும் பவுலோ கோயல்ஹோ அல்கெமிஸ்ட்டில் சொன்ன வாக்கியம் நினைவுக்கு வந்துச் சென்றது. பொக்கிஷங்கள் காதல் என்ற பொட்டலத்தில் தான் வருகின்றன. அந்த பொட்டலம் கருநீல முழுக்கைச் சுடிதாரை அணிந்து கொண்டு என் முன்னால் உட்கார்ந்து இருந்தது. கடிகாரை முள்ளை யாரோ கை வைத்து நகர்த்திவிட்டது போல நான்கு மணி நேரம் சென்றதே தெரியவில்லை. கோதன்பர்க் செல்லும் ரயில் வர, தன் கைப்பையைத் திறந்து அழகாக அட்டையிடப்பட்டிருந்த பரிசுப்பொருள் ஒன்றைக் கொடுத்தாள்.

“இங்கேப் பிரிக்காதே !! டிரெயின் கிளம்பின பின்ன பிரி”

வழியனுப்ப ஏனைய பயணிகளின் துணைகள் முத்தமிட்டு பிரியாவிடைப் பெற்றுக்கொண்டிருக்க, வாசுகியிடம் கைக்குலுக்கி விடைபெற்றேன்.

கவனமாக அட்டையைப்பிரித்து உள்ளே என்ன இருக்கிறது எனப்பார்த்தேன். The Alchemist பவுலோ கோயல்ஹோவின் புத்தகம். முதல் பக்கத்தில் ”நீ விரும்பும் விசயங்களை, கண்டிப்பாக அடைய நினைத்தால், அவற்றை அடையும் பொருட்டு இந்த உலகமே உனக்கு உதவிச் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கும், ” என தமிழில் எழுதி வாசுகி திருவேங்கடம் என கையொப்பமிட்டிருந்தாள்.

19 பின்னூட்டங்கள்/Comments:

said...

//என் வாழ்வில் ஒன்றிற்கு மேற்பட்ட சீதைக்கள் வந்திருந்தாலும் ஒவ்வொரு சீதைக்கும் அந்த அந்த காலக்கட்டங்களில் அவர்களுக்கு நான் ராமனாகத்தான் இருந்திருக்கின்றேன். இந்த சீதைக்கும் ராமனாக இருக்க முடிவு செய்தேன், இந்த சீதை வனவாசம் போகும் வரை//-

சூப்பர் செல்வா ,நல்ல லயன்ஸ்,உங்க honesty சொல்ற லயன்ஸ்.

//எல்லாப் பெண்களும் ஒரே மாதிரிதான். பேசவேண்டும், ஆறுதல் வேண்டும். ஆனால் வீட்டுக் தெரியக்கூடாது. வீட்டிற்குத் தெரியும் வரை காதலிகளைப்போல தைரியசாலிகளைப் பார்க்கவே முடியாது. //

-அப்ப மேல்படிப்பு கணினியில் இல்ல போல , என்னமோ போங்க !!!!

said...

Alchemist!!??

கதை இன்னும் படிக்கல..:)

said...

yes nanba intha ponnungale ippadithan selva.i am realy admire this story . i tear my eyes....

said...

அருமை ... கதை ரொம்ப நீளமாக இருப்பது போல தோன்றுகிறது

said...

நல்ல கதை..... சுவாரஸ்யமான வார்த்தைகள்..... :-)

said...

அருமையா எழுதியிருக்கீங்க செல்வா. கதைங்கற விதத்துல இருக்குதா இல்லையான்னு சொல்ல முடியாமல் போனாலும், அங்கங்க தூவியிருக்கற வார்த்தைகள் கடைசிவரைக்கும் புன்முறுவலோடவே நகர வைக்குது..

said...

//அதிகம் என்ற சொன்னதில் தான் உண்மை பாதியாக்கப்பட்டது//


//எல்லாப் பெண்களும் ஒரே மாதிரிதான். பேசவேண்டும், ஆறுதல் வேண்டும். ஆனால் வீட்டுக் தெரியக்கூடாது. வீட்டிற்குத் தெரியும் வரை காதலிகளைப்போல தைரியசாலிகளைப் பார்க்கவே முடியாது. //

//வழியனுப்ப ஏனைய பயணிகளின் துணைகள் முத்தமிட்டு பிரியாவிடைப் பெற்றுக்கொண்டிருக்க, வாசுகியிடம் கைக்குலுக்கி விடைபெற்றேன். // (!!??)


எப்பவும் போல அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள். வாசகர்களுக்கும் அந்த அனுபவம் கிடைக்கிறது. இடையில் வரும் பல வாக்கியங்கள் (மேலுள்ளவை போல) மிகவும் சுவாரஸ்யமாகவும், புன்னகையையும் வரவழைத்தது. . நன்றி.

said...

"வழியனுப்ப ஏனைய பயணிகளின் துணைகள் முத்தமிட்டு பிரியாவிடைப் பெற்றுக்கொண்டிருக்க, வாசுகியிடம் கைக்குலுக்கி விடைபெற்றேன். "
vadivel solra madiri solanum na, vada pochae....
:P

said...

same blodd :)

கதையின் முடிவைப் பார்த்தா கெட்ட சகுணம் விடாம துரத்தும் போல இருக்கே :)

கதையோடு சேர்ந்த படங்கள் அழகு !

said...

எப்பவும் போல கதை நடை அழகு.
/முன்னாள் காதலிகள், ஈர்ப்பு ஏற்படும் பெண்கள் அனைவருக்கும் நான் வாங்கி பரிசளிப்பது இதே அல்கெமிஸ்ட் புத்தகத்தைத் தான்/
வாசுகி முந்திக் கொண்டாளோ???

said...

நடை அழகு!

said...

நல்ல கதை. காதலிகள் காதல் இல்லையென்றாலும் சில பல கதைகளாவது தருவது சந்தோஷம்..

said...

தலைப்பு ஆங்கிலத்தில்; நமக்குப் புரியாத விடயமென நினைத்தேன்.
பயணக் கதையா? காதல் பயணக் கதையா?
எனக்கு காதல் அனுபவம் இல்லை அத்துடன்
காதல் என்ற விடயத்தில் நான் மிகத் தூரம் வந்ததால் எனக்கு இவை ஆச்சரியம் தருகிறது.
ஓ காதல் இப்படியா? என்பது போலும் இருக்கு!!!
காதல் தெவிட்டுவதில்லைப் போலும்;

பார்த்ததை அப்படியே கோர்வையாகச் கூறுவது; தங்கள் தனிச் சிறப்பு.
முடிவு வரை வாசிக்கவைத்தது. எழுத்துக்கு வெற்றியே

said...

கதை நான் நினைத்ததை விட நீளம் தான். ஆனால், நீங்கள் அங்கேயே குடியேற தகுதியாகி விட்டீர்கள் என்பதை மட்டும் உறுதியாக கூறலாம். இயல்பாக எழுதுவதில் உங்களை நீங்களே ஒவ்வொரு முறையும் தோற்கடிப்பதை காண முடிகிறது. கற்றுக்கொள்ள வேண்டிய வித்தை இதுவரை கைவரா வித்தை?! கதை கரு தேடும் படலம் அருமை. திருப்பரங்குன்றம்... "போங்கண்ணா, இதை நீங்க கதைனு சொன்னா... சும்மா கதை விடாதீங்கனு சொல்லுவாங்க்" மீண்டும் வருகிறேன்...

said...

அருமை... உங்கள் வார்த்தை நடை இறுதிவரை சுவாரசியத்துடன் படிக்க வைக்கிறது...

//நானோ ஒன்றுக்கு இரண்டாய் காதலித்து மூன்றாவதில் இருக்கின்றேன். உலகத்தில் பணம் புகழ் பதவி இவைகளை விட மனிதன் காதலுக்காகத்தான் காதலில் தான் அதிகம் பொய் சொல்கின்றான்.//

நானும் அதே அதே, அதனால் தானோ என்னவோ உங்கள் கதையின் பல சம்பவங்களோடு பொருத்திப்பார்க்க முடிகிறது... :-)

said...

கதை நிகரில்லாத தரம்.எல்லாம் (norway- gotheberg )புகைப்படமும் போட்டீர்கள்,ஆனால் ஏன் அந்த வாசுகி புகைப்படம் போடவில்லை.உங்களுக்கு மச்சம் அதிகமாக இருக்கிறது என நம்புகிறேன்.நீ நேசித்தது உண்மையானால்,உன்னை விட்டு பிறிந்தாலும் ,மீண்டும் அது ,உன்னை தேடி வரும்.

said...
This comment has been removed by the author.
said...

ரசிப்பூட்டியது இந்த கதை, கதையின் ட்விஸ்ட் அருமை
உங்கள் வாசுகி உங்களை தோளில் இடித்தது கண் முன் தெரிந்தது

said...

அழகிய நடை செல்வா !!!!!

ஒரு காதலுக்கும் இன்னொரு காதலுக்கும் ஆறு மாச இடைவெளி கூடத் தராத பயபுள்ளைகளை பார்த்ததுனாலே, ஒரு சின்ன வேண்டுகோள் இரண்டு வருச இடைவெளி தத்துவத்தை மாத்துங்க ப்ளீஸ் !!!!!!!

:))