Saturday, November 21, 2009

பழைய நினைப்பு - (19-11-2006) - பதிவர் சந்திப்பு

இன்று எதேச்சையாக ஃபேஸ்புக் தளத்தில் நண்பர் ஒருவர் Tag செய்து வைத்திருந்த புகைப்படத்தைக் கண்ட பொழுது மகிழ்ச்சியாக இருந்தது. சரியாக மூன்று வருடங்களுக்கு முன்ன நடந்த பதிவர் சந்திப்பில் எடுத்த புகைப்படம் அது.பதிவர் சந்திப்புகள், பட்டறைகள் சுமாரான என் எழுத்துக்களை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கி ஓரளவுக்குத் திறம்பட செய்தன என்பதை மறுக்க முடியாது.
கடைசி ஒருவருடமாக எந்த பதிவர் சந்திப்பிலும் கலந்து கொள்ளமுடியவில்லை. சுவீடனில் யாரவது நடத்துங்கப்பா!!!





சிவப்பு சட்டையில் இருப்பவர்களை எல்லாம் சரியாக அடையாளம் கொண்டு கொள்ள முடியும். படத்தில் இருப்பவர்கள் அனைவரையும் சரியாக சொல்பவர்களுக்கு ”மூத்தப் பதிவர்” என்ற பட்டம் வழங்கப்படும்.

இந்த சந்திப்பைப் பற்றிய பதிவைப் படிக்க இங்கேச் சொடுக்கவும்

பேயில்லாமல் நானில்லை - சர்வேசன் ‘நச்' போட்டிக்கு அனுப்ப மறந்தக் கதை

என் பேரு கார்த்தி, கார்த்தி ராமச்சந்திரன். கஜினிப் பட சஞ்சய் ராமசாமி மாதிரி சொல்றேன்னு நினைச்சுடாதீங்க, சுவீடனுக்கு வந்தப் பிறகு அப்பா பெயரையும் சேர்த்து சொல்றது வழக்கமாப் போச்சு. நான் ஒரு அமெச்சூர் எழுத்தாளன், அப்போ அப்போ கதை எழுதி என் நேரத்தையும் , வாசிக்கிறவங்க பொறுமையையும் கொல்றது எனக்கு ஒரு ஹாபி. சில சமயங்களில் முன்னாள், இன்னாள் காதலிகளையும் பிடிக்காத, பிடித்தவர்களையும் கதையில் கதாபாத்திரங்களா ஆக்கி தாளிச்சுவிட்டுடுறதும் உண்டு. சரி விசயத்துக்கு வரேன், அம்மு, தன்னைப் பற்றி கதையில் எதுவும் எழுதக்கூடாதுன்னு சொல்லிட்டதுனால இப்பொவெல்லாம் வெறும் பேய்க்கதைகள் தான் எழுதிட்டு இருக்கேன்.

முதல் கதையில் இருந்த திகில் இப்பொவெல்லாம் கிடைக்கிறது இல்லை அப்படின்னு எனக்கு இருக்கிற வாசகர்கள்???!!! தொடர்ந்து சொல்லிட்டு இருக்காங்க.

சிலபேர் மருதமலைப் பட வடிவேலு சிரிப்பு போலிஸ் மாதிரி, என் கதையில் வர்ற பேய்கள் எல்லாம் சிரிப்புப் பேய்யா தெரியுதுன்னு கிண்டல் பண்றாங்க, இது எல்லாம் பரவாயில்லீங்க, நம்ம அப்பாவி கணேசன் , அதுதான் என் ரூம் மேட், விக்ரமன் படம் மாதிரி லாலாலா பாடுற செண்டிமெண்ட் எபெக்ட் ல என் பேய்கதைகள் இருக்குன்னு சொல்லிட்டாரு. I felt very bad, you know,, அதுதான் கண்டிப்பா ஒரு டெரிபிக் பேய்க்கதை எழுதிடனும் ஒரு மாசமா யோசிச்சுட்டு இருந்தப்ப தான் ஒரு சம்பவம் நடந்துச்சு.

பேய்க்கதை எழுதுறதுல பெரிய வெரைட்டி கிடைக்காது. ஒரு சம்பவம், அந்த சம்பவத்துல இருக்கிற யாரவது ஒருத்தர் உயிரோடு இருப்பவர் கிடையாதுன்னு முடிக்கனும், அந்த அதிர்ச்சியை வாசிக்கிறவங்களுக்கு கொடுக்கிற விதத்துல தான் இருக்கு கதையோட சக்ஸஸ்.

”இருக்கு ஆனால் இல்லை” - ”இல்லை ஆனால் இருக்கு” அப்படிங்கிற மாதிரி திகிலுக்கு கதைக்கரு யோசிக்க சிலப்பல இங்கிலீஷ் பேய்ப்படங்கள் டவுன்லோட் செஞ்சு வச்சிருந்தேன். அப்பாவி கணேசன் நீச்சல் பிராக்டிஸுக்கு போனப்பின்ன பார்ப்பதுண்டு. கணேசன் ஏதாவது சுவிடீஷ் பிகர்ங்களை கரெக்ட் பண்ணலாம்னு ஒவ்வொரு வீக் எண்டும் நீச்சல் குளத்துக்குப்போறார். ஆனால் அவருக்கு செட் ஆனது என்னமோ அவரு இடுப்பு உயரமே இருக்கிற பிலிப்பைன்ஸ் பிகரு. இப்படிதாங்க, டிராக்கை விட்டு வேறு எதாவது சொல்லிட்டு இருப்பேன். அப்பாவி கணேசன் போயிட்டாருன்னு பேய்ப்படம் பார்க்க உட்கார்ந்தா எல்லா பேய்ப்படத்துலேயும் திகில் சீன்களை விட கில்மா சீன் தான் ஜாஸ்தி இருக்கு. இந்தப் படம் எல்லாம் பார்த்தா கில்மாக் கதை தான் எழுத வரும்.

சரி நம்ம ஊரு ராம்கோபால் வர்மாவை இன்ஸ்பிரேஷனுக்கு எடுத்துக்கலாம்னா, எனக்கு என்ன கதை எல்லாம் தோணுதோ அது எல்லாத்தையும் அவரு முன்னமே படமா எடுத்துட்டாரு. திங்கிங் ல நான் ராம்கோபால் வர்மாவுக்கு முன்னோடி..

jokes apart, சீரியஸான விசயம் சொல்லனும், போன வாரம் சனிக்கிழமை , எங்க அபார்ட்மெண்ட் பின்ன இருக்கிற பாதி உறைஞ்சி போய் இருந்த ஏரியை வேடிக்கைப் பார்க்கிறப்ப ஒரு ஐடியா தோனுச்சு, அந்த ஏரில மனித முகம் மாதிரி ஒரு வடிவம் தெரிஞ்சுச்சு.அந்த முகச்சாயல்ல திடீர்னு ஒரு மனுஷனை சந்திச்சா எப்படி இருக்கும். கேட்கிறப்பவே திகிலா இருக்குல்ல,

சரி, அந்தக் கருவுக்கு ஏற்ற சில சம்பவங்களை யோசிச்சு கதையாக மறுநாள் ஞாயிற்றுக்கிழமை எழுதாலாம்னு உட்கார்ந்தால் , லெட்டர் வந்து விழுற சவுண்ட் கேட்டுச்சு. சண்டேஸ் ல போஸ்ட் மேன் வர்ற மாட்டானுங்களே!! அட்வர்டைஸ்மெண்டா இருக்கும்னு போய் எடுத்தால் என் பெயருக்கு ஒரு லெட்டர், முழுக்க முழுக்க சுவிடீஷ் ல எழுதி இருந்துச்சு, இரண்டு ஏ4 சைஸ் பேப்பர் அளவுக்கு இருந்த லெட்டரை கூகிள் டிரான்ஸ்லேட்டர் டைப் பண்ணி இங்கிலிஷ் ல டிரான்ஸ்லேட் பண்ணி படிக்கிறப்ப அப்படியே உடம்பு வெடவெட என நடுங்க ஆரம்பிச்சுடிச்சு, நான் யோசிச்சு வச்சிருந்த அதேக் கதை டீடெயில்டா, என்ன மாதிரி டிவிஸ்ட் எல்லாம் இருக்கனும்னு நினைச்சேனோ அப்படியே அந்த லெட்டர் ல வரிக்கு வரி இருந்துச்சு. நான் இந்தக் கதையை கணேசன் கிட்ட கூட டிஸ்கஸ் பண்ணல, எனக்கு மட்டுமே தெரிஞ்சக் கதை. ஏங்க எனக்கு மட்டும் இப்படி நடக்குது.

இரண்டு நாள் தூக்கமே இல்லை, ஒன்னும் மட்டும் புரியுதுங்க, என்னைச் சுத்தி வேற ஏதோ ஒன்னு இருக்கு. இருங்க, லெட்டர் போடுற சவுண்ட் கேட்குது, போய் பார்த்துட்டு வந்து சொல்றேன்.

வழக்கம் போல சுவிடீஷ் ல தான் லெட்டர், ஏ4 சைஸ் பேப்பர்ல நாப்பது பக்கம் இருக்கும்போல, முதல்வரி மட்டும் வாசிக்கிறேன்.

Jag heter Karthi, Karthi Ramachandran, tänker du av filmen Gajini's Sanjai Ramasamy!!, Nej, Efter kom jag till Sverige , jag talar mitt namn med min pappas namn.

அதோட தமிழாக்கம் கீழே!!

“என் பேரு கார்த்தி, கார்த்தி ராமச்சந்திரன். கஜினிப் பட சஞ்சய் ராமசாமி மாதிரி சொல்றேன்னு நினைச்சுடாதீங்க, சுவீடனுக்கு வந்தப் பிறகு அப்பா பெயரையும் சேர்த்து சொல்றது வழக்கமாப் போச்சு.”

Sunday, November 15, 2009

அப்பாவி கணேசனும் அமானுஷ்யமும் - சிறுகதை

கணேசன் என்னதான் வாட்டசாட்டமாய் சக்திமான் முகேஷ் கண்ணா மாதிரி இருந்தாலும் இந்த சுவீடன் குளிரை மட்டும் அவரால் தாங்க முடியவில்லை. விடியற்காலை மூன்று மணிக்கு என் போர்வையை யாரோ உருவுவது போல இருக்க, எழுந்து பார்த்தால் நம்ம கணேசன், சத்தமே இல்லாமல் போர்வையை இழுத்துக் கொண்டிருந்தார். ஏற்கனவே தூக்கத்தில் வந்த பேய்க்கனவினால் நடுங்கிப்போய் இருந்த நான்,

“யோவ், என்னய்ய பண்றீங்க!!! “

“கார்த்தி, ரொம்ப குளுருது , அதுதான் உங்க போர்வை எடுத்துக்கலாம்னு”

“அப்போ என்னை விறைச்சுபோய் சாக சொல்றீங்களா?” எரிந்து விழாத குறையாகக் கடிந்து கொண்டேன்.

“சாரி நண்பா” எனச் சொல்லிவிட்டு, தனது பெட்டியில் இருந்து இன்னொரு மேற்சட்டையும் , கால் சட்டையும் எடுத்துப் போட்டுக்கொண்டு தூங்கிவிட்டார்.

கணேசனை நான் எரிந்து விழாத நாளே கிடையாது. இத்தனைக்கும் இந்த மாத அறையின் வாடகையான 3000 க்ரோனரை அவர்தான் கட்டி இருக்கிறார். அவரின் ஆங்கிலத்தில் இருந்து, அவர் சுவிடீஷ் பெண்களை உற்றுப்பார்க்கும் விதங்கள் வரை அவரின் எல்லா செயல்களுமே கிண்டலடிக்கப்படும். நான் எடுத்துக் கொடுக்கும் கிண்டல்களை மற்ற நண்பர்கள் செவ்வனே செய்து முடிப்பார்கள். எனக்கும் பெரிய நிம்மதி, எனது பேய் பயங்களைப் பற்றிக் கிண்டலடிக்கும் நண்பர்கள் , என்னை விட அப்பாவி பலிகடா சிக்கிக் கொண்டதால் என்னை விட்டுவிட்டார்கள்.

”பத்து டிகிரிக்கே குளுருதுன்னு சொன்னா, நீங்க எப்படி மைன்ஸ் லே எல்லாம் தாக்குப்பிடிக்கப்போறீங்க கணேசன்” நக்கலாக சொன்னபோது,போனவருடம் இதே நேரம் எப்படி எல்லாம் குளிரை சமாளிக்கப்போராடினேன் என்று எனக்கே உறுத்தியது. பழைய அறை நண்பர்கள் எல்லாம் வெவ்வேறு ஊர் சென்றவுடன் நான் செய்த முதல் காரியம் எனது கட்டிலை ஹீட்டரை ஒட்டி போட்டுக்கொண்டதுதான்.

”கார்த்தி, நாம இடத்தை மாத்திக்குவோமா, ஹீட்டர் பக்கத்துல படுத்தால் குளிரை சமாளிச்சுடுவேன், பிளீஸ்”

கணேசன் கேட்ட விதமும், அவர் தினமும் குளிரில் படும் அவஸ்தையும் பாவமாகத்தான் இருந்தது. என்னை வருத்திக் கொண்டு மற்றவர்களுக்கு உதவ வேண்டியதில்லை என்பதால் அவரிடம் வழக்கம் போல மறுப்பைத் தெரிவித்தேன்.

நாங்க இருக்கும் குடியிருப்புப் பகுதி நகரத்தை விட்டு 3 நான்கு கிலோமீட்டர்கள் தள்ளி , அகதிகளுக்காக கட்டிவைத்தது. குடியிருப்பைச் சுற்றி மரங்களும், பார்த்தாலே கிலியூட்டும் ஏரியும் , ஏரிக்கரை ஒன்றில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் சில படகுகளும் ராம்கோபால் வர்மா படம்பிடிக்க ஏற்ற சூழலாக இருக்கும். அமானுஷ்ய சுற்றுப்புறமாக இருந்தாலும் பேய் போன்ற விசயங்களை கனவைத் தவிர நிஜத்தில் நான் உணர்ந்ததில்லை.

வழக்கம் போல கணேசனை இரவு 12 மணி வரை கிண்டலடித்துவிட்டு படுத்த பின்னர் ஹீட்டரை உடைத்துக் கொண்டு கை வருவது போல ஒரு கனவு. பொதுவாக என் பேய்க்கனவுகள் நான் காட்டிலோ இல்லை பொது இடங்களிலோ பேயை சந்திப்பது போல அமையும். நான் இருக்கும் இடங்கள் என் கனவுகளில் வந்தது இல்லை. எழுந்துப் பார்த்தேன் , மணி ஒன்றரை தான் ஆகி இருந்தது. கனவு கலைந்த பின்னரும் திகில் மனதில் இருந்து கரையவில்லை. ஹீட்டரைத் தடவிப்பார்த்தேன். ஏதும் உடைந்து இருக்கவில்லை. பழைய வலிகள் பேய் பயத்தை நீர்த்துப் போகச் செய்துவிடும் என எனது பழையக் காதலி அம்முவை நினைத்துக் கொண்டு தூங்க முயற்சித்தேன்.

அடுத்தடுத்த சிலநாட்களில் அதே கனவு திரும்ப வர, மனது கொஞ்சம் கலவரமானது.ஒவ்வொரு நாளும் கையின் நீளம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. உறுத்தும் நினைவுகளை உள்ளத்தில் வைக்கக்கூடாது என இடத்தை மாற்றிக் கொள்ள முடிவு செய்தேன். கட்டிலை மாற்றிப் போடும்போது ஒரு சந்தேகம் வந்தது. கணேசன் ஏதாவது சூனியம் வைத்திருப்பாரோ என, பட்டுக்கோட்டை காரனுங்க சூனியத்தில் கெட்டிகாரங்கன்னு எங்க பாட்டி சொல்லுவாங்க.

கல்லூரியில் திரும்பி வந்த கணேசனுக்கு ஒரே வியப்பு.

“கணேசன், நீங்க ரொம்ப நாளா கேட்டுக்கிட்டு இருந்தீங்கல்ல, இனிமேல் அந்த இடத்துல தூங்குங்க, ஹீட்டரை கட்டிப்பிடிச்சுட்டு”

“ரொம்ப தாங்க்ஸ் நண்பா!! ”

இரவு இனிதே கனவுகள் இல்லாமல் கழிந்தது. ஞாயிறு ஆனாலும், வழமைப்போல கணேசன் டீ போட்டு என் மேசை நாற்காலியின் அருகில் வைத்து இருந்தார். அவரின் முகத்தைப் பார்த்தேன், வழக்கமான அப்பாவி சிரிப்பு இல்லை.

“கார்த்தி, என்னங்க இந்த இடத்துல படுத்த பின்ன வெறும் பேய்க்கனவா வருது, ஹீட்டர்லேந்து கை வர்ற மாதிரி கனவுங்க, கை நீண்டு கழுத்து வரை வர்ற மாதிரி இருந்துச்சு”

”அட விடுங்க, நமீதா கில்மா கனவு மாதிரி சில சமயங்களில் இப்படி பேய்க்கனவும் வரும்”

”ஆமாங்க, இருக்கும், நேத்து ஒரு இங்லீஷ் பேய் படத்தை தமிழ் டப்பிங் ல பார்த்துட்டு இருந்தேன்”

“ஆமாம் , அந்த நினைப்பு உங்களை இன்ப்ளூயன்ஸ் பண்ணி இருக்கும், சரி நான் கார்ல்ஸ்க்ரோனா ஷிப்ட் ஆகப்போறேன்” அவருக்கு ஏன் எதற்கு என்றெல்லாம் விளக்கம் கொடுக்கவில்லை. அன்றைக்குப்பிறகு ஒரு இரவு கூட அந்த அறையில் தூங்கவில்லை. புதுவீட்டில் ஹீட்டர் பக்கத்து இடத்தை கணேசனுக்கே கொடுத்தேன்.

ஒரு மாதம் கழித்து வந்த பத்திரிக்கைச் செய்தி அதிர்ச்சியைக் கொடுத்தது, எங்களது பழைய வீட்டிற்கு குடிவந்த குடும்பத்தின் கணவன் கழுத்தை நெறித்துக் கொல்லப்பட்டார், மனைவியை காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.

Saturday, November 14, 2009

நன்றி மனுஷ்யபுத்திரன் மற்றும் சாரு , சக்கர நாற்காலியின் பயன்பாடுகள்

சாருநிவேதிதாவின் இணையப்பக்கத்தை சிலநாட்களாகப் படிக்கவில்லையே என இன்று திறந்தால் ஆச்சரியம் அதில் யோகன்பாரிஸ் அவர்களின் கடிதம், அதன் பின் தொடர்ச்சி மனுஷ்யபுத்திரனின் சக்கர நாற்காலி கவிதையில் வந்து நின்றது. கவிதையும் சாருவின் அந்தக் கவிதை தொடர்பான விளக்கமும் அருமை. சாரு சொன்னது போல அது சுயவிரக்க கவிதை கிடையாது. கலக அரசியல் கவிதை.

மனுஷ்யபுத்திரனின் கவிதை இங்கே

ஒரு சக்கர நாற்காலியின் பயன்பாடுகள்

ஒரு நாற்காலியின் பயன்பாட்டைவிட பலமடங்கு அதிகமானவை.

நாற்காலியை இழந்துவிடுவோம்
என்கிற பயத்திற்கு இதில்
அவசியமே இல்லை

எந்த நியாயமான, நியாயமற்ற
காரணத்திற்காகவும்
நாற்காலியை யாருக்கும்
விட்டுக்கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் இல்லை

எல்லோரும் நின்றுகொண்டிருக்கும் வரிசையில்
நாம் நிற்க வேண்டியதில்லை

நமது பின்புறத்தைக் காட்டி
யாரையும் அவமானப்படுத்த நேர்வதில்லை

புனிதர்களோ கடவுள்களோ
சட்டென மண்டியிடும்படி
நம்மைக் கட்டாயப்படுத்துவதில்லை

நாட்டின் முதல் குடிமகன்கள்
சபையில் நுழையும்போது
நம் இருக்கைகளிலிருந்து பதட்டமடையவேண்டியதில்லை

கீழ்நிலை ஊழியர்களை
ஒருபோதும் அமரச்சொல்லாத
எஜமானர்களின் தந்திரங்கள்
நம்மிடம் பலிப்பதில்லை

இரண்டு நிமிட மௌன அஞ்சலிகளில்
பங்கேற்கவேண்டியதில்லை
தேசியகீதம் பாடும்போது
எழுந்து நிற்கவேண்டியதில்லை

யாருக்கும் வழிகாட்டிச் செல்லவோ
யாரையும் பின்தொடரச் செய்யவோ
யாரோடும் இணைந்து நடக்கவோ
வேண்டியதில்லை

எந்த இடத்திலும்
முண்டிக்கொண்டு செல்லவேண்டியதில்லை

முக்கியமாக
சக்கரநாற்காலிகள்
பூமியின் எந்த மையத்தோடும்
பிணைக்கப்படுவதே இல்லை





இது தொடர்பான சாருவின் கட்டுரை இங்கே

Friday, November 13, 2009

Paraskevidekatriaphobia, 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை

அட, இன்றைக்கு 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஆச்சே !! Paraskevidekatriaphobia பற்றி போன வருடம் எழுதினது இங்கே
http://vinaiooki.blogspot.com/2008/06/paraskevidekatriaphobia-13.html