Wednesday, November 21, 2007

அணில் கும்ப்ளேவும் பெரோஷா கோட்லா மைதானமும்

அணில் கும்ப்ளே தனக்கு பிடித்தமான மைதானமான தில்லி பெரொஷா கோட்லா மைதானத்தில் நாளை பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் கேப்டனாக களம் இறங்குகிறார். 1999 ஆம் ஆண்டு இங்கு தான் பாகிஸ்தான் அணியின் இரண்டாவது இன்னிங்க்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. கும்ப்ளே இங்கு ஐந்து டெஸ்ட் ஆட்டங்களில் ஆடி மொத்தம் 48 விக்கெட்டுகளை
வீழ்த்தியுள்ளார். இந்த ஐந்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் தரப் போட்டி ஒன்றில் அணில்கும்ப்ளே இங்கு சதம் ஒன்று அடித்துள்ளது மேலும் ஒரு சுவாரசியமான விசயம்.

அணில் கும்ப்ளேவின் பத்துக்குப் பத்து வீடியோ இங்கே


இந்தியா இங்கு மொத்தம் 28 ஆட்டங்களில் விளையாடி 9 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. 1952 ஆம் ஆண்டு பாகிஸ்தான் உடன் ஆன டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியாவின் கடைசிவிக்கெட்டிற்கு இணையாக ஹெமு அதிகாரி மற்றும் குலாம் அகமது ஆடி எடுத்த 109 ரன்கள் இன்றளவும் இந்திய சாதனையாகும்.

விபரமான ஸ்கோர் கார்டுக்கு இங்கு சொடுக்கவும்

இங்கு தான் சுனில் கவாஸ்கர் டான் பிராட் மேனின் அதிக சதங்கள் அடித்த சாதனையை முறியடித்தார்.

1883 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டு வெலிங்டன் பெவிலியன் என அழைக்கப்பட்ட இந்த மைதானம் துக்ளக் வம்சாவளி அரசரான பெரோஷா பெயரைக் கொண்டு தற்போது அழைக்கப்படுகிறது. டெஸ்ட் ஆட்டங்களில் இந்த மைதானத்தில் இந்திய வீரர்கள் சிறப்பாகவே விளையாடி வந்துள்ளனர். இந்த முறையும் புது கேப்டன் தலைமையில் சிறப்பாக ஆடுவார்கள் என வாழ்த்துவோம்.

Tuesday, November 20, 2007

மௌனராகம் - கார்த்திக் - ரேவதி காட்சிகள்

தொலைக்காட்சி ஓடைகளில் மௌனராகம் படம் ஒவ்வொரு முறை ஒளிபரப்பப்படும்பொழுதும் கார்த்திக்-ரேவதி வரும் காட்சிகளைப் பார்க்காமல் விடுவதே இல்லை. எத்தனை முறைப் பார்த்தாலும் சலிப்புத்தட்டாத காட்சியமைப்புகள் , இந்தக் காட்சிகளுக்குப் பின்னணி இசைக்கோர்வைகள் பெரிய பலம் என்பது நூறுசதவீத உண்மை.



ஒரு காட்சியில் மணிரத்னம் "continuity" யைத் தவற விட்டு இருப்பார். ரேவதி பயணம் செய்யும் பேருந்தை தொடர்ந்து வரும் கார்த்திக் லேசாக தாடி வைத்திருப்பார். ஆனால் பேருந்துக்குள் வரும்பொழுது முழுக்க சவரம் செய்யப்பட்டு பளபளப்பான முகத்தோடு வருவார். Frame by frame ரசிகர்கள் உன்னிப்பாக கவனிக்க மாட்டார்கள் என்று நினைத்து இருந்து இருக்கலாம்.

கடலைக் கொறித்துக்கொண்டே கார்த்திக் பின்னோக்கி நடந்து வரும் காட்சி, அதே வசனங்களுடன் மணிரத்னத்தின் முதல்படமான அனில்கபூர் நடித்த பல்லவி அனுபல்லவியிலும் இடம்பெற்றிருக்கும். (கன்னடப் படமான இது, பின்பு தமிழாக்கம் செய்யப்பட்டு வெளிவந்தது)

கார்த்திக், ரேவதியின் அப்பாவை மிஸ்டர் சந்திரமவுலி என காபி சாப்பிட அழைக்கும் காட்சி ஒரு அழகிய குட்டிக்கவிதை.


படத்தை யுடியூப் தளத்தில் வலையேற்றி வைத்திருந்த பால்ஸ்055 க்கு நன்றி

Thursday, November 15, 2007

கற்கப்போவது தமிழ் - சிறுகதை

மோகன் டீமில் ஒரு புதுப் பையன் சேர்ந்து இருந்தான். பொதுவாக அவன் டீமில் யார் புதிதாய் சேர்ந்தாலும் அவர்களைப் பிழிந்து எடுத்துவிடுவான். ஆறு மணிக்கு மேல் உட்கார வைத்து அவர்களுக்கு தினமும் அட்வைஸ் மழை பொழிவான். அத்திப்பூத்தாற் போல நான் சில நேரங்களில் வேலை நேரம் முடிந்த பிறகும் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்பொழுது அடுத்த தடுப்பில் இருக்கும் அவன் பேச்சு அப்படியே கேட்கும். புதிதாய் வந்துள்ள "ஜூனியர்கள்" மெல்லவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது எனக்கு சிரிப்பாய் வரும். ஆனால் அவன் "கோடிங்" சொல்லித்தரும் விதம் அலாதியானது. ஜூனியர்களுக்கு மிகவும் சிரத்தை எடுத்து சொல்லித்தருவான்.

என்ன இருந்தும் எனக்கும் மோகனுக்கும் எப்போதும் ஆகவே ஆகாது. இத்தனைக்கும் மோகனும் நானும் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். அவனுக்கும் எனக்கும் உள்ள பிரச்சினை எல்லாம் இப்போ வேண்டாம். இன்னொரு சந்தர்ப்பத்தில் சொல்றேன்.

இந்தப் புதுப்பையன் துறுதுறுவென இருந்தான். ஸ்ரீலங்கா கிரிக்கெட் டீம்ல முன்பு கலுவித்தாரனே என்கிற பெயரில் ஒரு விக்கெட்கீப்பர் ஞாபகம் இருக்கா!!. அச்சு அசலாக இந்தப் பையன் கலுவித்தாரனே மாதிரியே இருந்தான். மதிய உணவு இடைவெளியில் மோகன் அந்தப் பையனுடன் அருகில் உட்கார்ந்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான். எனக்கு கலுவித்தாரனே ரொம்ப ரொம்ப பிடிச்ச கிரிக்கெட்டர். எனக்கு உடனே அந்தப் புதுப்பையன் பெயரைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. என்னோட ஹெச்.ஆர் ஜெனியை இண்டர்காமில் கூப்பிட்டேன்.

"ஜெனி, மோகன் டீம்ல புதுசா ஒரு பையன் வந்திருக்கானே , அவன் பேரு என்ன?"

"யா, ஹீ ஈஸ் போஸ், ஸோ ஸ்வீட் பாய், நான் தான் அவனை பர்சனல் இண்டர்வியூ பண்ணேன், அவன் தான் கோலேஜ்ல டோப்பர், பெஸ்ட் அவுட் கோயிங் ஸ்டூடண்ட்.. உன்னை மாதிரி அவனும் மதுரைக்காரன் தான் .....பாண்டி.... பாண்டி பையன் "என மலையாள வாடையில் தமிழ் பேசி சிரித்தாள்.

அவள் கிண்டலுக்குப் பதிலாக நிலாவில் டீக்கடை வைத்த நாயரின் ஜோக்கை சொல்லி ஜெனியிடம் மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு மனம் இல்லாமல் போனை வைத்தேன். ஜெனியிடம் பேசுவது எப்போதும் சுவாரசியம் தான்.

பேரும் ஊரும் போஸை "நம்மாளு" என்று உறுதி செய்தன. அவன் மேல திடிரென புதுப்பாசம் வந்தது. மறுநாள் புகழ்பெற்ற தனியார் பல்கலை கழகம் நடத்தும் தொலை தூர பட்ட மேற்படிப்புகளுக்கான கலந்தாய்வு அலுவலக விறாந்தாவில் நடந்து கொண்டிருந்தது, போன வருஷமே TREASURY MANAGEMENT படிப்பில் சேரவேண்டும் என நினைத்திருந்தேன்.சேருகிறார்களோ இல்லியோ அலுவலகத்தில் இருந்த அனைவரும் அங்குதான் குழுமி இருந்தனர். போஸ் அந்த கூட்டத்தில் இல்லாமல் தன் இடத்தில் உட்கார்ந்து அமைதியாக வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.

அன்று மாலை அலுவலக நூலகத்தில் நான் அன்றைய நாளிதழ்களை மேய்ந்து கொண்டிருக்கும்பொழுது போஸ் அங்கு இருந்த பொதுவான பிரிண்டரில்
சில பிரிண்ட் அவுட்களை எடுத்துக் கொண்டிருந்தான்.

அவன் என்னைப்பார்த்து சிரிக்கலாமா வேண்டாமா என்று தயங்கிக் கொண்டிருக்கும்போதே நானே முந்திக் கொண்டு சிரித்து "ஹாய் போஸ்" என்றேன். அவன் முகம் பிரகாசமானது. பெயரைச் சொல்லிக் கூப்பிட்டாலே மக்களுக்கு சந்தோசம் தான். அதுவும் ஜுனியராகிய தன் பெயரை சீனியர் நான் தெரிந்து வைத்திருப்பது அவனுக்கு மேலும் சந்தோசத்தைக் கொடுத்திருக்கும்.

"ஆபிஸ் பிடிச்சிருக்கா"

"ஓ யெஸ் சார், நிறைய கத்துக்கிட்டு இருக்கேன்"

"ம்ம்.. அது என்ன பிரிண்ட் அவுட்ஸ்?"

"மெட்றாஸ் யுனிவர்ஸிட்டி தமிழ் பி.ஏ அப்ளிகேஷன் ஃபார்ம் சார்,"

"உன் பிரெண்ட்ஸ்க்கா?"

"இல்லை சார், எனக்குத்தான்.. நான் தான் பண்ணலாம்னு இருக்கேன். 10 வது வரை நான் தமிழ் நல்லா படிப்பேன். டென்த்ல தமிழ்ல எங்க டிஸ்ட்ரிக்ட் ஃபர்ஸ்ட் ... ஆனால் அப்பா +2 ல நல்ல டோட்டல் வரனும்னு பிரெஞ்சு எடுக்கச் சொல்லிட்டாரு. அப்புறம் இஞ்சினியரிங்ல நாலு வருஷம் போயிடுச்சு,,,இருந்தாலும் அந்த ஆர்வம் இன்னும் நீர்த்துப் போகாமல் இன்னும் இருக்கு.. ஜாயின் பண்ணிடலாம்னு இருக்கேன் சார்"

அவன் அப்படி பேசுவதைக்கேட்கும்பொழுது சந்தோசமாகத்தான் இருந்தது. பெருமையாகவும் இருந்தது. போனவாரம் என் மனைவி ரம்யா "கற்றது தமிழ்" படம் பார்த்த பிறகு "வீட்டில் வெறுமன இருப்பதற்கு கரஸ்ல தமிழ் படிக்ட்டுமா?" என்று சீரியஸாகவே கேட்டது ஞாபகத்திற்கு வந்து போனது.

போஸின் தோளைத்தட்டிக் கொடுத்துவிட்டு நூலகத்தை விட்டு வெளியே வரும்போது மோகன் எதிரே வந்தான். அவனைப்பார்த்து கடைசியா எப்பொழுது புன்னகைத்தேன்.. மறந்து போய்விட்டது,, ம்ம் ஆறு மாதங்கள் இருக்கலாம்.

"ஹாய்டா கார்த்தி" அவனே பேச்சை ஆரம்பித்து என் புரஜெக்ட் பற்றி விசாரிக்க ஆரம்பித்தான். வழக்கம்போல அதை இப்படி செய் அப்படி அப்படி என அட்வைஸினால் நான் எரிச்சல் ஆவதைக் கண்ட மோகன்,

"கார்த்தி, நான் எம்.ஏ தமிழ் கிளியர் பண்ணிட்டேண்டா!!!"

போஸின் தமிழார்வம் மீண்டும் கிளர்ந்து எழுந்ததற்கு இவனும் ஒரு காரணம் என எனக்குப் புரிந்தது.

"கங்கிராட்ஸ், மன்னிச்சுக்கோ வாழ்த்துக்கள் "

"நன்றி நன்றி .. ரம்யா எப்படி இருக்கா? "

"ஷீ ஈஸ் ஃபைன் .."

"நான் கேட்டதாக சொல்லு"

"ஸ்யூர் ஸ்யூர்"

மோகனுடனான உரையாடலை முடித்துவிட்டு, போஸிடம் எனக்கும் ஒரு பி.ஏ தமிழ் அப்ளிகேஷன் பிரிண்ட் அவுட் எடுத்து தரச்சொன்னேன்.அதை ரம்யாவிடம் கொடுத்தபொழுது இஞ்சினியரிங் டிகிரி வாங்கும்பொழுது அடைந்த சந்தோசத்தை விட அதிகம் சந்தோசப்பட்டாள்.

இந்த சம்பவங்களுக்குப் பிறகு , நீண்ட நாள் கழித்து போஸ் "எங்காளு" இல்லை என்று உறுதியாகத் தெரிந்தது. இருந்தும் அவனை எனக்கு இன்னும் அதிகமாகவே பிடித்தது. மறுவருடம் நானும் தமிழ் படிப்பிற்கு அப்ளிகேஷன் போட்டேன். மோகனைப் பற்றி சொல்லவில்லையே.. அவன் வேலையை விட்டுவிட்டு பிரான்சு போய்விட்டான். அங்கு தமிழ்- ஆங்கிலம்- பிரெஞ்சு அகராதி ஒன்றை answers.com ஸ்டைலில் உருவாக்கிக்
கொண்டிருப்பதாகவும் , ரம்யாவைக் கேட்டதாகவும் மெயில் அனுப்பி இருந்தான். மோகன் ரம்யாவை விசாரித்தது பற்றி நான் ரம்யாவிடம் வழக்கம் போல சொல்லவில்லை.

Wednesday, November 14, 2007

பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் - 3 வலைப்பதிவர்களின் கூட்டுத் தொடர்கதை

முந்தையப் பகுதிகள் :
பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் - 1 எழுதியவர் சிறில் அலெக்ஸ்

பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் - 2 எழுதியவர் லக்கிலுக்

இனி

"அன்புள்ள அண்ணா சுரேஷுக்கு" இந்த வாக்கியம் அவனது மூளையில் சுத்தியலால் அடிப்பது போல திரும்ப திரும்ப வந்து கொண்டே இருந்தது.மின்னஞ்சலை எரிச்சலுடன் படித்து முடித்துவிட்டு , அலுவலக தோட்டத்தில் கையில் சிகரெட்டுடன் வலம் வந்து கொண்டிருந்தான். ஒரு மணி நேரத்தில் ஒரு பாக்கெட் சிகரெட்டுகளை
உள்ளிழுத்துவிட்டு மீண்டும் இருக்கைக்கு வந்தமர்ந்தான். மீண்டும் ஒரு முறை அந்த மின்னஞ்சலை வாசிக்க ஆரம்பித்தான்.

அன்புள்ள அண்ணா சுரேஷுக்கு,
நான் உங்களை அண்ணா என்று அழைப்பது உங்களுக்கு வியப்பாய் இருக்கலாம். ஏன் அதிர்ச்சியாகக்கூட இருக்கலாம். மன்னிக்கவும். தங்களது சூசகமான வார்த்தைகளின் மூலம் தங்களது விருப்பத்தை அறிந்தேன். உங்களது பெயரும், பேச்சுக்களும் எனது பள்ளிக்காலத்தில் என்னுடன் படித்த சுரேஷையே நினைவுப்
படுத்துகின்றன. சுரேஷ் என் உண்மையான சகோதரன் போல் என் மேல் பிரியம் வைத்து இருந்தான். பள்ளி இறுதிக்குப் பின்னர் அவனை தொடர்பு கொள்ள முடியவில்லை. உங்களை இணையத்தில் சந்தித்து அரட்டையடிப்பது அவனுடனே பேசுவதைப் போல உணருகின்றேன்.

உங்கள் நட்பு தொடரும் என்ற நம்பிக்கையுடன்
ஆம்பல்

இந்த முறை நல்ல ஆங்கிலத்தில் எழுதிய மின்னஞ்சலை வாசித்துவிட்டு ஒரு பெருமூச்சுடன் சுரேஷ் ஆர்குட்டினுள் புகுந்தான். ஆம்பலுடனான நட்பு இங்குதான் அவனுக்கு ஆரம்பமானது. ஒரே ஒரு ஸ்கிராப் இருக்க ஸ்கிராப் புக் பக்கம் சென்றான். அது ஆம்பல் உடையது.
"அண்ணா, சுரேஷிற்கு காலை வணக்கம்" தமிழ் வாக்கியம் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யப்பட்டிருந்தது.

ஆம்பலின் மின்னஞ்சல் முகவரி கிடைத்ததில் இருந்து , அவளின் ஆர்குட் புரைபல் பக்கமே அவன் போனதில்லை. அவளின் புரைபலின் பக்கம் நீண்ட நாள் கழித்து அப்போது சென்றான். அவனைத்தவிர ஆம்பலுக்கு வேறு நண்பர்கள் அங்கு இல்லை. அவன் மட்டுமே இருந்தான். ஆர்குட்டில் இருந்து லாக் அவுட் செய்யலாம் என்று நினைத்து எலிக்குட்டியை இழுத்து சென்றபோது search கட்டத்தைக் கண்டவுடன் அவனுக்கு சடாரென ஏதோ தோன்றியது.

சுரேஷிற்கு இது ஒரு வியாதி போல, நாளுக்கொருமுறை தன் பெயரையோ தனக்கு நெருங்கியவர்களின் பெயரையோ கூகிளில் அடித்து தேடுவது. என்னமோ தெரியவில்லை ஆம்பலுடன் நெருக்கமான இந்த பூஜ்ய உறவின் நாட்களில் ஒரு முறைக்கூட அப்படி அவன் செய்ய நினைப்பு வரவில்லை. அடுத்து வரப்போகும் அதிர்ச்சிகளைப் பற்றி அறியாமல்
ஆர்குட் தேடுக கட்டத்தில் "Aambal" என்று அடித்து search பொத்தானை சொடுக்கினான்.



16 ஆர்குட் புரைபல் பக்கங்கள் வந்து விழுந்தன. அதைப் பார்க்கையில் அவனுக்குத் தலைச்சுற்றலே வந்தது, ஆம் அனைத்திலும் "ஆம்பலின்" புகைப்படங்கள். ஒவ்வொன்றாய் திறந்து பார்த்துக் கொண்டே வந்தான். அடுத்த அதிர்ச்சி அதனுள் காத்திருந்தது.

ஆம் ஒவ்வொன்றிலும் ஒரே ஒரு நண்பர் தான். அதுவும் சுரேஷ் என்ற பெயரில்
மட்டும். 15 யும் பார்த்து முடித்துவிட்டு கடைசியாக இருந்த ஆம்பலின் பக்கத்தை திறந்தான். அவன் கண்களை அவனாலேயே நம்ப முடியவில்லை. இதில் இரண்டு நண்பர்கள். ஒன்று முந்திய பக்கங்களில் இருந்தது போன்று எதோ ஒரு சுரேஷ்.

இன்னொன்று

...............................

............................

....................................
அது அவனின் மனைவியின் புரபைல். ஒரு கணம் அவன் இதயமே வெடித்துவிடும் போல் இருந்தது.

தொடரும்

அடுத்தப் பகுதியை எழுதப் போவது மகரந்தம் ஜி.ராகவன். (ஜிரா... ஜிரா... ஜிரா ....எக்கோ எபெக்ட்ல )

Tuesday, November 06, 2007

கலாபக் கனவுகள் - ஒரு நிமிடக்கதை

தீபாவளி சமயம் ஆதலால் எங்க மொத்த லேடிஸ் ஹாஸ்டலும் காலியாகி இருந்தது. என்னோட ரூம்மேட் ரம்யாவும் ஊருக்குப் போய்விட்டாள். ஆன்லைனிலும் யாரையும் காணவில்லை. ரொம்ப போரடித்ததால் நீண்ட நாட்களுக்குப் பிறகு மொபைல் எஃப்.எம்மை ஆன் செய்தேன். ஏதோ ஒரு அலைவரிசையில் கலாபக்கனவுகள் என ஒரு தொலைபேசியில் தன் காதல் வேண்டுகோள்களை/அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருந்தது. ஒவ்வொருவரும் தனது காதலன்/காதலியை எப்படி நேசிக்கிறார்கள் என்று உணர்வுப்பூர்வமாக அந்த நிகழ்ச்சித் தொகுப்பாளரிடம் பகிர்ந்து கொண்டிருந்தனர்.
தொகுப்பாளர் அடுத்து நம்மிடையே கார்த்தி பேசப்போகிறார் என சொல்வதைக் கேட்டு அரைத்தூக்கத்திலிருந்து நிமிர்ந்து உட்கார்ந்தேன்.இந்த கார்த்தி பெயர் என் வாழ்க்கையில மறக்க முடியாத ஒரு பெயர். அப்படியே அந்த வானொலி உரையாடலைக் கேட்கலானேன்.

"ஹல்லோ கார்த்தி சொல்லுங்க, உங்க காதலி பெயர் என்ன?"

"அவ பேரு ஜெனி, ஒரு சாஃப்ட்வேர் கம்பெனில வொர்க் பண்றாங்க"

அய்யோ என்னோட பேரைச் சொல்றான்.. இந்தக்குரல் அவனோட குரல்தானே!! எனக்கு முகமெல்லாம் வியர்த்துக் கொட்டியது.

"நீங்க ஜெனிக்கு எதாவது சொல்ல விரும்பிறீங்களா?"

"யெஸ், நான் எங்க இருந்தாலும் அவளோட நினைவுகளில் தான் இருக்கேன். நாளைக்கு எனக்கு ஒரு முக்கியமான நாள், அதை அவளுக்கு ஞாபகப் படுத்தத் தான் இப்போ உங்களுக்கு போன் பண்ணேன்"

கடவுளே, என்னக் கொடுமை இது, நாளைக்கு நவம்பர் 7, கார்த்தி போன வருஷம் இந்த தேதியில தான் தற்கொலை பண்ணிக்கிட்டான்.என் இதயத்துடிப்பு அதிகரித்தது.

"கார்த்திக்காகவும் அவரோட காதலி ஜெனிக்காகவும் இந்த அருமையான பாடல் ஒலிபரப்பப்படுகிறது" என்று வானொலித் தொகுப்பாளர் சொல்லியவுடன் "தேவதை இளம் தேவி உன்னைச்சுற்றும் ஆவி" பாடல் ஒலிக்கத் தொடங்கியது. பாடல் ஒலித்துக் கொண்டிருக்க எனது அறை முழுவதும் கார்த்தி வழக்கமாக உபயோகப்படுத்தும் "ஃபர்ஃபியூமின்" வாசம் விரவத்தொடங்கியது.

Friday, November 02, 2007

நண்பரின் "ஹைக்கூ" கவிதைகள்

அலுவலக நண்பர் ஒருவருக்கு வலைப்பூ ஒன்றை உருவாக்கிக் கொடுத்து, அவரின் இரண்டு மழைக்கூ கவிதைகளை பதிய வைத்தாகிவிட்டது.

அந்த "மழைக்கூ" கவிதைகளைப் படிக்க இங்கு சொடுக்கவும்

அவர் தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

Thursday, November 01, 2007

தற்கொலை - ஒரு நிமிடக்கதை

கார்த்தி தற்கொலை பண்ணிக்கிட்டான் என்பதை கேட்ட பொழுது ஜெனிக்கு அதிர்ச்சியாக இருந்தது. சொன்னதை செய்துவிட்டான். கடைசி ஒரு வாரமாக அலுவலகத்திற்கு வராதவன் நேற்று அவள் கடற்கரையில் தனியாக நடந்து கொண்டிருந்தபோது எதிர்பாராமல் அங்கு வந்த கார்த்தி தன் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை எனில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டி இருந்தான்.ஏற்கனவே அவளை இது போல அவன் பலமுறை மிரட்டி இருப்பதால் அவள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.ஆனால் இன்று அலுவலகம் அவள் கிளம்பும் முன் மோகனின் தொலைபேசி அழைப்பில் இந்த அதிர்ச்சி செய்தி வந்திருந்தது.


“ஜெனி, கார்த்தி தங்கி இருந்த பிளாட் நாலு நாளா உட்பக்கமா பூட்டி இருந்துச்சாம், நேத்து புல்லா செம பேட் ஸ்மெல் அடிச்சதனால் பிளாட் செக்ரட்டரி கதவை உடைச்சி உள்ளே போய் இருக்காங்க... கார்த்தியோட பாடி டிகம்போஸ் ஆகி இருக்கு.. செத்து போய் மூணு நாள் ஆயிருக்கும்னு சொல்றாங்க" என மோகன் சொல்ல சொல்ல ஜெனிக்கு கைகள் நடுங்க ஆரம்பித்தன.

புண்ய பூமி நா தேசம் - தெலுங்கு பாடல், என்.டி.ஆர் கட்டபொம்மனாக

என்.டி.ராமாராவ் தனது உணர்ச்சிப்பிரவாகமான நடிப்பில் தெலுங்கு ரசிகர்களை மட்டுமன்றி தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர். தமிழகத்தில் கிருஷணர் , ராமர் என்றால் முதலில் நினைவுக்கு வருவது இவர்தான்.


மேஜர் சந்திரகாந்த் என்ற தெலுங்குப்படத்தில் வரும் பாடல் காட்சி இது. இதில் ராமாராவ் வரலாற்று நாயகர்களாக தோன்றி இருப்பார். வீரபாண்டிய கட்டபொம்மனாகவும் வருகிறார்.
வரி வட்டி வசனமும் பாடலின் இடையில் வரும்.

இந்த படம் ராமாராவின் கடைசிபடம் என்பது குறிப்பிடத்தக்கது.

பாடலுக்கு இசை : கீரவாணி(நம்ம ஊரில் மரகதமணி)

நன்றி: நந்தமூரி ரசிகர்கள் இணையதளம்