Thursday, November 15, 2007

கற்கப்போவது தமிழ் - சிறுகதை

மோகன் டீமில் ஒரு புதுப் பையன் சேர்ந்து இருந்தான். பொதுவாக அவன் டீமில் யார் புதிதாய் சேர்ந்தாலும் அவர்களைப் பிழிந்து எடுத்துவிடுவான். ஆறு மணிக்கு மேல் உட்கார வைத்து அவர்களுக்கு தினமும் அட்வைஸ் மழை பொழிவான். அத்திப்பூத்தாற் போல நான் சில நேரங்களில் வேலை நேரம் முடிந்த பிறகும் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்பொழுது அடுத்த தடுப்பில் இருக்கும் அவன் பேச்சு அப்படியே கேட்கும். புதிதாய் வந்துள்ள "ஜூனியர்கள்" மெல்லவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது எனக்கு சிரிப்பாய் வரும். ஆனால் அவன் "கோடிங்" சொல்லித்தரும் விதம் அலாதியானது. ஜூனியர்களுக்கு மிகவும் சிரத்தை எடுத்து சொல்லித்தருவான்.

என்ன இருந்தும் எனக்கும் மோகனுக்கும் எப்போதும் ஆகவே ஆகாது. இத்தனைக்கும் மோகனும் நானும் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். அவனுக்கும் எனக்கும் உள்ள பிரச்சினை எல்லாம் இப்போ வேண்டாம். இன்னொரு சந்தர்ப்பத்தில் சொல்றேன்.

இந்தப் புதுப்பையன் துறுதுறுவென இருந்தான். ஸ்ரீலங்கா கிரிக்கெட் டீம்ல முன்பு கலுவித்தாரனே என்கிற பெயரில் ஒரு விக்கெட்கீப்பர் ஞாபகம் இருக்கா!!. அச்சு அசலாக இந்தப் பையன் கலுவித்தாரனே மாதிரியே இருந்தான். மதிய உணவு இடைவெளியில் மோகன் அந்தப் பையனுடன் அருகில் உட்கார்ந்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான். எனக்கு கலுவித்தாரனே ரொம்ப ரொம்ப பிடிச்ச கிரிக்கெட்டர். எனக்கு உடனே அந்தப் புதுப்பையன் பெயரைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. என்னோட ஹெச்.ஆர் ஜெனியை இண்டர்காமில் கூப்பிட்டேன்.

"ஜெனி, மோகன் டீம்ல புதுசா ஒரு பையன் வந்திருக்கானே , அவன் பேரு என்ன?"

"யா, ஹீ ஈஸ் போஸ், ஸோ ஸ்வீட் பாய், நான் தான் அவனை பர்சனல் இண்டர்வியூ பண்ணேன், அவன் தான் கோலேஜ்ல டோப்பர், பெஸ்ட் அவுட் கோயிங் ஸ்டூடண்ட்.. உன்னை மாதிரி அவனும் மதுரைக்காரன் தான் .....பாண்டி.... பாண்டி பையன் "என மலையாள வாடையில் தமிழ் பேசி சிரித்தாள்.

அவள் கிண்டலுக்குப் பதிலாக நிலாவில் டீக்கடை வைத்த நாயரின் ஜோக்கை சொல்லி ஜெனியிடம் மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு மனம் இல்லாமல் போனை வைத்தேன். ஜெனியிடம் பேசுவது எப்போதும் சுவாரசியம் தான்.

பேரும் ஊரும் போஸை "நம்மாளு" என்று உறுதி செய்தன. அவன் மேல திடிரென புதுப்பாசம் வந்தது. மறுநாள் புகழ்பெற்ற தனியார் பல்கலை கழகம் நடத்தும் தொலை தூர பட்ட மேற்படிப்புகளுக்கான கலந்தாய்வு அலுவலக விறாந்தாவில் நடந்து கொண்டிருந்தது, போன வருஷமே TREASURY MANAGEMENT படிப்பில் சேரவேண்டும் என நினைத்திருந்தேன்.சேருகிறார்களோ இல்லியோ அலுவலகத்தில் இருந்த அனைவரும் அங்குதான் குழுமி இருந்தனர். போஸ் அந்த கூட்டத்தில் இல்லாமல் தன் இடத்தில் உட்கார்ந்து அமைதியாக வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.

அன்று மாலை அலுவலக நூலகத்தில் நான் அன்றைய நாளிதழ்களை மேய்ந்து கொண்டிருக்கும்பொழுது போஸ் அங்கு இருந்த பொதுவான பிரிண்டரில்
சில பிரிண்ட் அவுட்களை எடுத்துக் கொண்டிருந்தான்.

அவன் என்னைப்பார்த்து சிரிக்கலாமா வேண்டாமா என்று தயங்கிக் கொண்டிருக்கும்போதே நானே முந்திக் கொண்டு சிரித்து "ஹாய் போஸ்" என்றேன். அவன் முகம் பிரகாசமானது. பெயரைச் சொல்லிக் கூப்பிட்டாலே மக்களுக்கு சந்தோசம் தான். அதுவும் ஜுனியராகிய தன் பெயரை சீனியர் நான் தெரிந்து வைத்திருப்பது அவனுக்கு மேலும் சந்தோசத்தைக் கொடுத்திருக்கும்.

"ஆபிஸ் பிடிச்சிருக்கா"

"ஓ யெஸ் சார், நிறைய கத்துக்கிட்டு இருக்கேன்"

"ம்ம்.. அது என்ன பிரிண்ட் அவுட்ஸ்?"

"மெட்றாஸ் யுனிவர்ஸிட்டி தமிழ் பி.ஏ அப்ளிகேஷன் ஃபார்ம் சார்,"

"உன் பிரெண்ட்ஸ்க்கா?"

"இல்லை சார், எனக்குத்தான்.. நான் தான் பண்ணலாம்னு இருக்கேன். 10 வது வரை நான் தமிழ் நல்லா படிப்பேன். டென்த்ல தமிழ்ல எங்க டிஸ்ட்ரிக்ட் ஃபர்ஸ்ட் ... ஆனால் அப்பா +2 ல நல்ல டோட்டல் வரனும்னு பிரெஞ்சு எடுக்கச் சொல்லிட்டாரு. அப்புறம் இஞ்சினியரிங்ல நாலு வருஷம் போயிடுச்சு,,,இருந்தாலும் அந்த ஆர்வம் இன்னும் நீர்த்துப் போகாமல் இன்னும் இருக்கு.. ஜாயின் பண்ணிடலாம்னு இருக்கேன் சார்"

அவன் அப்படி பேசுவதைக்கேட்கும்பொழுது சந்தோசமாகத்தான் இருந்தது. பெருமையாகவும் இருந்தது. போனவாரம் என் மனைவி ரம்யா "கற்றது தமிழ்" படம் பார்த்த பிறகு "வீட்டில் வெறுமன இருப்பதற்கு கரஸ்ல தமிழ் படிக்ட்டுமா?" என்று சீரியஸாகவே கேட்டது ஞாபகத்திற்கு வந்து போனது.

போஸின் தோளைத்தட்டிக் கொடுத்துவிட்டு நூலகத்தை விட்டு வெளியே வரும்போது மோகன் எதிரே வந்தான். அவனைப்பார்த்து கடைசியா எப்பொழுது புன்னகைத்தேன்.. மறந்து போய்விட்டது,, ம்ம் ஆறு மாதங்கள் இருக்கலாம்.

"ஹாய்டா கார்த்தி" அவனே பேச்சை ஆரம்பித்து என் புரஜெக்ட் பற்றி விசாரிக்க ஆரம்பித்தான். வழக்கம்போல அதை இப்படி செய் அப்படி அப்படி என அட்வைஸினால் நான் எரிச்சல் ஆவதைக் கண்ட மோகன்,

"கார்த்தி, நான் எம்.ஏ தமிழ் கிளியர் பண்ணிட்டேண்டா!!!"

போஸின் தமிழார்வம் மீண்டும் கிளர்ந்து எழுந்ததற்கு இவனும் ஒரு காரணம் என எனக்குப் புரிந்தது.

"கங்கிராட்ஸ், மன்னிச்சுக்கோ வாழ்த்துக்கள் "

"நன்றி நன்றி .. ரம்யா எப்படி இருக்கா? "

"ஷீ ஈஸ் ஃபைன் .."

"நான் கேட்டதாக சொல்லு"

"ஸ்யூர் ஸ்யூர்"

மோகனுடனான உரையாடலை முடித்துவிட்டு, போஸிடம் எனக்கும் ஒரு பி.ஏ தமிழ் அப்ளிகேஷன் பிரிண்ட் அவுட் எடுத்து தரச்சொன்னேன்.அதை ரம்யாவிடம் கொடுத்தபொழுது இஞ்சினியரிங் டிகிரி வாங்கும்பொழுது அடைந்த சந்தோசத்தை விட அதிகம் சந்தோசப்பட்டாள்.

இந்த சம்பவங்களுக்குப் பிறகு , நீண்ட நாள் கழித்து போஸ் "எங்காளு" இல்லை என்று உறுதியாகத் தெரிந்தது. இருந்தும் அவனை எனக்கு இன்னும் அதிகமாகவே பிடித்தது. மறுவருடம் நானும் தமிழ் படிப்பிற்கு அப்ளிகேஷன் போட்டேன். மோகனைப் பற்றி சொல்லவில்லையே.. அவன் வேலையை விட்டுவிட்டு பிரான்சு போய்விட்டான். அங்கு தமிழ்- ஆங்கிலம்- பிரெஞ்சு அகராதி ஒன்றை answers.com ஸ்டைலில் உருவாக்கிக்
கொண்டிருப்பதாகவும் , ரம்யாவைக் கேட்டதாகவும் மெயில் அனுப்பி இருந்தான். மோகன் ரம்யாவை விசாரித்தது பற்றி நான் ரம்யாவிடம் வழக்கம் போல சொல்லவில்லை.

7 பின்னூட்டங்கள்/Comments:

said...

Nice one!

Good!

said...

தமிழின் சிறப்பை தெரியாமல் இன்னும் பலர் இருக்கும் சமயத்தில் வேலைக்குப்போன பின்பு தமிழை கற்க நினைக்கும் போஸ், மோகன் சூப்பர்.

ஆனாலும் அந்த சண்ட மேட்டர் செம சஸ்பென்ஸ் :)))

சென்ஷி

said...

நன்றி சிவபாலன் மற்றும் சென்ஷி

said...

நல்லா இருக்குங்கண்ணா.

said...

நீங்க எனக்கு சீனியரா? என் கதையை அப்படியே எடுத்து எழுதியிருக்கீங்க? :-)

ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லக்கூடாதுங்கற மாதிரி எங்க ஊரைச் சொல்லிட்டுப் பேரை மட்டும் மாத்திவிட்டுட்டீங்களே?! :-)

நான் இன்னும் எம்.ஏ. தமிழ் படிக்கலைங்கறதும் பிரான்ஸ்ல இல்லாம அமெரிக்காவுல உக்காந்துக்கிட்டு நானும் தமிழ்ல எழுதுறேன்னு பேர் பண்றேங்கறதையும் இப்போதைக்கு மறந்துடலாம். :-)

said...

அப்புறம் மறந்துட்டேனே. நானும் இப்ப மோகன்கிட்ட பேசறதில்லை; எனக்கும் அவனோட (அவரோட?) சண்டை.

ரம்யா எப்படி இருக்காங்க? கேட்டதா சொல்லுங்க.

said...

நல்லா இருக்கு...