Thursday, August 30, 2007

அம்முவாகிய நான் - திரைப்பட பார்வை

இதுவரை பெரும்பாலும் துணைக்கதைகளாகவே கையாளப்பட்டுள்ள, "கரணம் தப்பினால் மரணம்" வகையிலான வில்லங்கமான ஒரு கதைக்களத்தை எடுத்துக் கொண்டு "அம்முவாகிய நான்" திரைப்படத்தை இயக்கி உள்ள இயக்குனர் திரு.பத்மா மகனை நிச்சயம் பாராட்டலாம்.
"அழகி" படத்தில் நடுத்தட்டு தமிழ் குடும்பத்து ஆண்மகனை திரையில் பிரதிபலித்த பார்த்திபன் இப்படத்தில் எழுத்தாளனுக்கே உரிய மிடுக்கு, கண்ணியம் . எள்ளல், சமூக அக்கறை , உணர்ச்சி வசப்படுதல் என அனைத்து பரிமாணங்களையும் காட்டி தூள் பண்ணி
இருக்கிறார். இயற்பிலேயே பார்த்திபன் "எழுத்தாளனாக" இருப்பதால் கௌரிசங்கர் கதாபாத்திரத்திற்கு தேவையான குணாதிசயங்கள் பார்த்திபனை மனதில் வைத்துத்தான் உருவாக்கப்பட்டதோ என மனதில் எண்ணம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

படத்தில் மொத்தம் இருக்கும் கதாபாத்திரங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது ஒரு முறை "ரீவைண்ட்" பண்ணி பார்த்தால் அத்தனை கதாபாத்திரங்களுக்கும் ஒரு காட்சியாவது மனதில் நிற்கும் படி இயக்குனர் அமைத்துள்ளார்.
"தங்கச்சின்னு கூப்பிட்டா தப்பாயிடும், நீ நல்லா இரு" என சொல்லும் அபிஷேக் ஆகட்டும், டாக்டரிடம் போய்விட்டு கண்கலங்கி பேசும் "விஜியக்கா" ராஜஸ்ரீ ஆகட்டும் துணைகதாபாத்திரங்கள், சாதனா, ராகசுதா, தென்னவன், பிதாமகன் மகாதேவன்,சாந்தி வில்லியம்ஸ் உட்பட அனைவரும் பாத்திரமறிந்து அளவாக நடித்து இருக்கிறார்கள்.
பாத்திர படைப்புகளும் கதையின் போக்குடனேயே இருப்பது இயக்குனர் ஒரு நல்ல திரைக்க(வி)தை ஆசிரியர் என நிருபிப்பதாக உள்ளது.

"கடவுள் சொன்னாரா? "
"இல்லை கடவுள்கிட்ட நான் சொன்னேன்"

இதுபோல நான் ரசித்த இன்னொரு வசனம்
அம்முவாகிய நாவலை அறிமுகப்படுத்தும் காட்சியில் வரும் வசனம், "

இது ஒரு மொழிபெயர்ப்பு நூல் ஆம், வாழ்க்கை வார்த்தைகளாய்"

குழந்தையை ராணிமடத்தின் தலைவி சாதனாவிடம் கொடுக்கும் காட்சியை பின்னனியாகக் கொண்டு, முன்னே காய்கறி பேரபேசும் வியாபாரக் காட்சி, "இன்னக்கி உனக்கு ஃப்ர்ஸ்ட் நைட்" என சொல்லி கதாநாயகியை பார்த்திபன் தூங்க வைக்கும் காட்சி என நிறைய காட்சிகள் உண்மையிலேயே விஷுவல் டிரீட்.

முதல் முறையாக படம் பார்க்கும் பொழுதுதான் பாடல்களைக் கேட்டாலும், திரையரங்கத்தை விட்டு வெளியே வந்த பின்னும் "உன்னைச் சரணடைந்தேன்" "தோரணம் ஆயிரம்" பாடல்கள் காதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன. சபேஷ்-முரளி பாடல் இசை மட்டுமின்றி, பின்னனி இசையிலும் சிறப்பாக உழைத்து இருப்பது
கண்கூடாகத் தெரிகிறது.பழனிபாரதியின் பாடல் வரிகளும் அருமை. படத்தில் இயக்குனரின் கண்களாக ஒளிப்பதிவு உள்ளது என்றால் அது மிகையாகாது.கதைக்கு தேவைப்படுவதினால் நெருக்கமான காட்சிகள் அதிகம், ஆனால் எதுவும் வரம்பு மீறவில்லை.

பாராட்டுக்கள் பத்மாமகன்.

படத்தைப்பற்றி கிட்டத்தட்ட அனைத்து விசயங்களையும் சொல்லியாகிவிட்டது. ஏதோ ஒன்று குறைகிறதே!! ஆமாம் ஆமாம் படத்தின் கதாநாயகி அம்முவைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே என கேட்கலாம். "லைஃப் டைம் ரோல்" அப்படின்னு நடிகைகளுக்கு 30, 40 படங்களுக்கு பின்புதான் வரும், அம்முவாக வாழ்ந்து காட்டியுள்ள பாரதிக்கு முதற்படத்திலேயே அப்படிப்பட்ட கதாபாத்திரம். இந்தப்படம் திரைப்பட விழாக்களில் பங்கு
பெறும்பொழுது பாரதிக்கு "ஸ்டாண்டிங் ஒவேஷன்" நிச்சயம் கிடைக்கும்... திறமை அழகு ஒரு சேர அமைந்த பாரதிக்கு திரைஉலகில் பெரிய சகாப்தம் காத்திருக்கின்றது..

மொத்தத்தில் ஒரு "பிரீ பேய்ட் காதல் கதை" அம்முவாகிய நான்.

அம்முவிற்காக" இன்னொருமுறை கூட படம் பார்க்கலாம்.

Movie Review : Ammuvagiya Naan by www.vinaiooki.com

Wednesday, August 29, 2007

ஆகஸ்ட் 26 பதிவர் சந்திப்பு - படங்கள்

மா.சி யிடம் “சுரதா யாழ்வாணன் வருவதாக சொன்னார்களே, இன்னும் வரலியா சார், சுரதா வெப்சைட்லேந்து தான் நான் வலையுலகத்திற்குள் வந்தேன், அவரைப் பார்த்தா ஒரு தாங்க்ஸ் சொல்லனும்“

அடுத்த சில நிமிடங்களில் சுரதா யாழ்வாணன் வந்தார், நண்பர்களிடம் கைக்குலுக்கி விட்டு நேராக என்னிடம் வந்தார், எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. அவர் வேறு யாருமில்லை, பட்டறை அன்று நான் “வாங்க உங்களுக்கு தமிழ் டைப்பிங் பத்தி சொல்லித் தரேன்” என்று கூப்பிட்ட ஈழ அன்பர் தான். ... To read more click here
இப்படி ஒரேயடியாக, சுரதாவுக்கே தமிழ் தட்டச்சக் கற்றுக் கொடுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று எந்தக் காலத்திலும் நினைத்தது கூட இல்லை! சந்திப்பன்று ‘இப்புடி ஏமாத்திப்புட்டீங்களே ஐயா!’ என்று கேட்டால், “என்ன அக்கா, உங்கள் மாணவன் எண்டால் பெருமை தானே! ” என்று சேம் சைட் கோல் வேறு! To read more of Pons Article click here

Monday, August 20, 2007

ர.தி (எ) ரம்யா திருவேங்கடம் - சிறுகதை

என் பேரு கார்த்தி, எனக்கு ஒரு பிரெண்டு அவள் பேரு ரம்யா, முழுப்பேரு ரம்யா திருவேங்கடம், இஞ்சினியரிங்ல என்னோட கிளாஸ்மேட், நாங்க எல்லாம் அவளை ர.தி தான் கூப்பிடுவோம். இந்த சுருக்கமான பேருக்கு ஏத்த மாதிரியே ரொம்ப ரொம்ப அழகா இருப்பா… காலேஜ் ல இருக்கிறப்ப ஒரு ஹாய் , பை மட்டுமே சொல்லிக் கொள்கிற அளவுக்கு இருந்த எங்களுக்கிடையேயான அறிமுகம் நானும் அவளும் ஒரே கம்பெனிக்கு கேம்பஸ் ல செலக்ட் ஆகி வேலைக்கு சேர்ந்த பிறகு அதிகமானது. அவளிடம் பழக ஆரம்பித்த பிறகு தான [..]

இதன் தொடர்ச்சியைப் படிக்க இங்கே சுட்டவும் / Please click here to read further

Thursday, August 09, 2007

கண்ணாடி - கவிதை மாதிரி

---------------- கண்ணாடி ----------------


நினைவுகளுக்காக ஒரு முகம்
தொலைந்து போன கனவுகளுக்காக மறுமுகம்
கடமைகளுக்காக ஒரு முகம்
இல்லாத கடவுளுக்காக திருமுகம்
அன்புக்காக சிறுமுகம்
பண்பைக் காட்ட பலமுகம்
நிதம் ஒரு முகமாக தொலைந்து போன முகத்தை தேடினேன்
முகமிலியே உன்னிடம் கண்டேன் என் முகத்தை
ஆம் முகமிலிகள் கூட முகங்களே

தமிழ்மணத்தில் பழைய பதிவுகளுக்கான பின்னூட்டங்களை உடனடியாகத் தெரியவைத்தல்

பட்டறை நிகழ்வின் போது பதிவர் மக்கள் சட்டம்,, பழைய பதிவுகளுக்கு இடப்படும் பின்னூட்டங்கள் உடனடியாக தமிழ்மண மறுமொழியப்பட்ட இடுகைகளில் வருவதில்லையே என்று கேட்டார்,

"தெரியவில்லையே சார், எனக்கும் எனது பழைய இடுகைகளுக்கான மறுமொழிகளை பதிப்பைக்கும் போது தமிழ்மணத்தில் வெளிவர தாமதமாகிறது" என்றேன்

அப்போது, பதிவர் சுகுமாறன் அதற்கும் ஒரு வழி உண்டு என்று சொல்லி, விளக்கமாக உடனடியாக தமிழ்மணத்தில் தெரியவைப்பது எப்படி என்பதை சொன்னார்.

எளிமையான வேலை தான்,. மறுமொழியைப் பதிப்பித்தவுடன் , ஒரு முறை அந்த குறிப்பட்ட இடுகையை திறந்துவிட்டால் போதும், தமிழ்மணத்திற்கு மறுமொழிகளை அறிவிக்கும் "code” "Fresh" ஆக செயற்பட்டு தமிழ்மண முகப்பில், மறுமொழிகளுக்கான் பக்கத்தில் நமது இடுகையைக் காட்டிவிடும்.

மேலதிக தகவல்களுக்கு --->
தமிழ்மணம் உதவிப்பக்கத்தைப் பார்க்கவும்

Tuesday, August 07, 2007

கற்றதும் கற்றுக் கொடுத்ததும் - வலைப்பதிவர் பட்டறை

பட்டறைக்கு முந்தைய நாள் :

உற்சாகம் என்பது ஒரு தொற்று விசயம். ஒருவரின் உற்சாகமே நம்மை எளிதாகப் பீடித்துக் கொள்ளும் எனும்போது, உற்சாகக் கடலில் தள்ளி விட்டால் எப்படி இருக்கும்..பாலாவை வழக்கம்போல ஓட்டிவிட்டு(கலாய்த்து விட்டு) மா.சிவக்குமார் , நந்தா ஆகியோருடன் அரங்கை அடைந்தவுடனேயே அவர்களின் உற்சாகம் "ஆவி" போல் மனதிலும் உடலிலும் புகுந்து விட்டது. இந்த "ஜெயா" என்று பெயர் வைத்திருப்பவர்களே அதிரடிதான் போலும்.மறுநாள் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பதற்கான ஆலோசனைகளை கொடுத்து ஷாகித் அப்ரிடி போல அடித்து ஆடிக்கொண்டிருந்தார்.

சுந்தருடன் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கையிலேயே அவர் காபி மெஷின் எடுக்க நந்தாவுடன் வடபழனிக்கு பறந்து போனார். அதனை அடுத்து ஓசை செல்லா , தான் ஹோட்டலில் இருந்து வருவதையும் நேரிடை ஒலிபரப்பை மா.சிவக்குமாரிடம் செய்து கொண்டிருக்க, லக்கிலுக்கும், அவரின் நணபரும் ஸ்டேஷனரி அயிட்டங்களை வாங்கிக் கொண்டு வந்து சேர்ந்தனர். லக்கி உங்களுக்கு மட்டும் எப்படிங்க இண்ஸ்டண்ட் நண்பர்கள் கிடைக்கிறாங்க...

மாலை டீ கூட குடிக்காமல் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளை செவ்வனே செய்து கொண்டிருக்க , நந்தாவும் ஜேகேவும் சமயோசிதமாக பீச்சில் டீ விற்றுக் கொண்டிருந்தவரை பல்கலை வளாகத்திற்கு தள்ளிக் கொண்டு வந்தனர். 3 ரூபாய் டீக்கு தான் எவ்வளவு சக்தி... மக்கள் மீண்டும் பம்பரமாக வேலை பார்க்க ஆரம்பித்தனர். இதனிடையில் உண்மைத்தமிழன் வந்து சேர்ந்தார். மீண்டும் அவரை பதிவு எழுத வருமாறு நண்பர்கள் திகிலுடன் கேட்டுக்கொண்டனர்.

உண்மைத்தமிழனுடன் நானும் கதைக்க ஆரம்பித்த போது என்னையும் ஜேகேவையும் பரிமேலழகர் பயிற்சி அறைக்கு சென்று கணினிகளை இணைக்க மா.சிவக்குமார் பணித்ததனால் மேலே சென்று, கணினிகளை இணைக்க ஆரம்பித்தோம். ஜேகேவின் சுறுசுறுப்பு ஆச்சர்யப்பட வைத்தது. ஒரே சமயத்தில் பலவேலைகளை எடுத்துக் கொண்டு அனைத்தையும் செவ்வனே செய்து முடித்தார். பாலபாரதி கண்டிப்பாக தமிழ்99 பற்றி தான் சொல்லவேண்டும் என்று சொல்லிவிட்டதால் இ-கலப்பை/பயர்பாக்ஸ் ஆகியனவற்றை பொன்ஸின் மேற்பார்வையில் அனைத்து கணிணிகளிலும் தரவிறக்கினோம்.
கணினி வேலைகளை முடித்துவிட்டு கீழே வரும்போது செந்தழல் ரவி வரவனையான் ஜெய்சங்கர் ஆகியோர் மும்முரமாக குறுந்தகடுகளையும் சுவடிகளையும், அதற்கான பையில் போட்டுக் கொண்டிருந்தனர்.

இரவு வீட்டிற்கு கிளம்பும்ப முன், சிவக்குமார் அரங்க காவலாளிகளுக்கு சில ரூபாய் தாள்களைக் கொடுதது "கவனி"த்தார்.
“சார், நீங்களா இப்படி" என்று கேட்ட போது
“தமிழுக்காக இதையும் செய்வோம்" என்றார்.

பட்டறை அன்று :

பட்டறை நாள் சரியாக 7 மணிக்கு மா.சிவக்குமார் அரங்க கதவைத் திறந்து வேலைகளை முடுக்கி விட்டார். வரிசையாக பட்டறையின் "Core – team” வந்து சேர பட்டறைக்கான கடைசிக் கட்ட ஆயத்த வேலைகள் முடிந்தன. நானும் ஜேகேவும் செய்முறை பயிற்சி அரங்கத்திலேயே இருந்ததால் கருத்து பரிமாற்ற அரங்கத்தில் நடந்தவைகளைப் பற்றி தெரியவில்லை. (பதிவர்களின் பதிவுகளைப் படித்து தெரிந்து கொள்ளவேண்டும்). இதனிடையில் முத்து(தமிழினி) பட்டறைக்கான முயற்சிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டிருக்க அறையினுள் நுழைந்த பொன்ஸ் "ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன்" என்று சில கல்லூரி மாணவிகளை உள்ளே அனுப்ப அவர்கள் நேராக யோசிப்பவரின் இடத்திற்கு சென்று அமர்ந்து சுவாரசியமாக கற்றுக் கொள்ள ஆரம்பித்தனர்.

இ-கலப்பை பற்றி கேட்டுக் கொண்டிருந்த ஈழத்தை சார்ந்த இரு சகோதரர்கள், நான் தான் வினையூக்கி என்று சொன்னதும் "நீங்க பேய் கதை எழுதி ஏன் இப்படி பயமுறுத்திறீங்க" என்று அடையாளம் கண்டு கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது,

தமிழ் தட்டச்சு கற்றுக் கொடுக்கையில் நாங்கள் பின்பற்றிய முறை, தமிழில் எளிமையாக தமிங்கிலிஷ் முறையில் அடிக்கலாம். அப்படி செய்து காட்டியவுடன் கற்றுக் கொள்ள வந்தவர்கள் ஆஹா இவ்வளவு எளிமையா, என்று குஷியானவுடன், மெல்ல தமிழ்99 முறையை எடுத்து சொல்லி, சிந்தாநதியின் கணினிச்சுவடியில் இருந்த தட்டச்சு அமைப்பை வைத்து தட்டச்சு பயிற்சியை செய்ய வைத்தோம்.அவர்கள் காரணம் கேட்க, க் + ஏ தான் கே , kee = கே கிடையாது, தமிழில் சிந்திப்போம் என்ற அடிப்படை தமிழ் உணர்வைக் கிளறி விட , ஆர்வமாக தமிழ்99 தட்டச்சு செய்து கற்றுக் கொள்ள ஆரம்பித்தார்கள்.லக்கிலுக் ஸ்டைலில் சில துளிகள் :

பதிவர் இரா.சுகுமாரன் நான் தடுமாறிய போதெல்லாம் அதை எளிமையாக எனக்கும், கற்றுக் கொன்ள வந்தவர்களுக்கும் சொல்லி புரியவைத்தார். பதிவர் பிரேம்குமார் கூடவே இருந்து சில நுட்பங்களை அருமையாக சொல்லி தந்தார்.சிவஞானம்ஜி வேர்டுபிரஸ் சந்தேகங்களை கேட்க , யோசிப்பவர் சிவஞானம்ஜியின் ஐயங்களை தீர்த்து வைத்தார்.

மக்கள் சட்டம் பதிவர் கேட்ட சில ஐயங்களை என்னால் தீர்க்க இயலவில்லை.

பதிவர் வெயிலான் , கற்றுக் கொள்ள வந்தவர் என்று நினைத்து வாங்க தமிழ் தட்டச்சு வலைப்பதிவு கற்றுக் கொடுக்கிறேன் என்று நான் கூப்பிட நான் தான் பதிவர் வெயிலான் என்று சொல்லி என் முகத்தில் அசடு வழிய வைத்தார்.

சிஃபி யின் பொறியாளர் ஒருவர் கோபி என்று இருக்க, அங்கு வந்த பிரபல பதிவர் ஒருவருக்கும் அவருக்கும் நடந்த உரையாடல்

“நான் --------”

“நான் கோபி"

“ஹாய் கோபி"

“யா , ஹாய்"

பிறகு அவர்கள் இருவரும் எதோ கதைத்துக் கொண்டனர்.

சிஃபி கோபி அங்கிருந்து நகர்ந்து விட , உண்மையான தகடூர் "ஹாய்" கோபி, அங்கு வர டிபிகல் கிரேசி மோகன் ஸ்டைல் கலாட்டாவானது.

சிவஞானம்ஜி, என் கதைகளை மோகன் கதைகள், ஜெனி கதைகள், பேய் கதைகள் என வகைப்பிரித்து சில விசயங்களை ஆராய்ந்து சொன்ன போது இன்னும் சிறப்பாக எழுத வேண்டும் என்ற உத்வேகம் ஏற்பட்டது.

நாமக்கல் சிபி 4 மணிக்கே கிளம்புவதாக சொல்லிவிட்டு 7 மணிவரை இருந்தார். அது அவரா... இல்லை அவரின் அமானுஷ்ய உருவமா என்ற சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது.
அவருடன் "அண்டார்டிகா ஆவியும் அமிஞ்சக்கரை ஆவியும்" வந்திருந்ததாக சீக்ரெட் ரிப்போர்ட்டர் "பகல் காக்கா" ரகசிய தகவல் சொன்னார்.

நீண்ட நாட்களுக்குப் பின்னர் என் காலேஜ் ஜூனியர்கள் கப்பிபய லையும், பட்டறைக்கு வந்திருந்த தமிழ்செல்வனையும் சந்தித்தேன்.


கற்றுக் கொடுத்தது என்னவோ எளிமையான அடிப்படை விசயங்கள் தான். ஆனால் இந்த பட்டறையின் வாயிலாக கற்றுக் கொண்ட விசயங்கள் தான் அதிகம்., தொழில் நுட்ப ரீதியாகவும், தனிப்பட்ட விதத்திலும். . தமிழ்99 பற்றி சொல்லிக்கொடுத்த போதிலும் , நான் இந்தப் பதிவு வரை தமிங்கிலிஷ் முறை தான் பயன்படுத்துகிறேன். முதல் வேளையாக தமிழ்99 பயிற்சி செய்ய வேண்டும்.

தனிப்பட்ட விதத்தில் கற்றுக் கொண்டதில் முக்கியமானது "The effectiveness of team work”.

“Core-Team” மற்றும் "Supporting-team" இருந்தவர்கள் வெவ்வேறு பலமான பின்புலங்களுடன் வந்திருந்தாலும், யாரும் "Ego” பார்க்காமல் "தமிழுக்காக " என்ற ஒரே உணர்வுடன் வேலை பார்த்தது ..”Amazing” .

கற்றது கையளவு , கல்லாதது உலகளவு, கற்றுக் கொடுத்ததை விட கற்றுக் கொண்டது தான் அதிகம்.

மெல்லத்தமிழ் இனிச்சாகும் என்ற கூற்று எழும்போதெல்லாம்., இந்த தமிழ் உணர்வினால் , தமிழ் மீண்டும் மி்ண்டும் விசுவரூபம் எடுக்கும் என்பது நிச்சயம்.

Monday, August 06, 2007

இந்தியன் எக்ஸ்பிரஸில் பதிவர் பட்டறை

இந்தியன் எக்ஸ்பிரஸில் முதல் பக்கத்தில் தலைப்புசெய்தி
நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ் , நிருபர் ரஞ்சிதா குணசேகரன், புகைப்பட கலைஞர் ஜவஹர்.
இந்தியன் எக்ஸ்பிரஸை இ-பேப்பராக கீழ்கண்ட தளத்தில் காணலாம்.
http://epaper.newindpress.com/
ஒரு லாகின் ஐடி பெற்றுக்கொண்டு பிடிஎஃப் கோப்பாகவும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Friday, August 03, 2007

ஹிந்திப் பாடல் ஒன்றைக் கேட்டுட்டுப் போங்க

ஹிந்தி மொழியில், வெளிவந்து ஒரு கலக்கு கலக்கிய அருமையான பாடல்.
படம் : கேங்ஸ்டர்
இசை : பிரீதம்
பாடியவர் : ஜுபின்இசை மொழிகளுக்கு அப்பாற்பட்டது, இந்தப் பாடலைக் கேட்கும்போது ஏதோ ஒரு இனம் புரியாத சோகம் மனதைக் கவ்வுவது உறுதி.

நன்றி : தீபாவின் பிலாக்கரில் ஆடியோக்களை இணைப்பதைப் பற்றிய பதிவு