Saturday, February 15, 2014

பாலுமகேந்திரா என்ற நாயகனும் அவரின் நாயகிகளும் - சிறுகுறிப்பு

ஒவ்வொரு இயக்குநரும் தங்களுக்கென்று ஒரு மைதானத்தை  வைத்திருப்பார்கள். அங்கு அவர்கள் களமிறங்கினால் அடிப்பொளிதான். பாலுமகேந்திராவிற்கு 'ஓர் ஆண் - இரண்டு பெண்கள் - காதல்' இதுதான் அந்தக்களம். சமூகம் அங்கீகரிக்கும் ஒரு காதல், அதைத் தாண்டி சமூகம் முகம் சுளிக்கும் இன்னொரு காதல் , இந்தப் பிரச்சினையை எப்படி நாயகன் சமாளிக்கின்றான் என்பதை  வெவ்வேறு காலக்கட்டங்களில் தான் விரும்பிய முடிவுகளுடன் கோகிலா, ஓலங்கள், இரட்டைவால் குருவி, மறுபடியும், சதிலீலாவதி, ஜூலி கணபதி என வரிசையாக படம் எடுத்தவர் இயக்குநர் பாலுமகேந்திரா.

கோகிலா :-  காதலன் - காதலி, காதலனுக்கு வேறொரு பெண்ணுடன் விபத்தாக தொடர்பு , புதியவள் கர்ப்பமடைகின்றாள் காதலன் புதிய பெண்ணுடன் வாழ்க்கையைத் தொடங்குகின்றான்.

ஓலங்கள்:- கணவன் - மனைவி , கணவனின் முந்தையக் காதல் குழந்தையின் ரூபத்தில் வாழ்க்கையில் வருகின்றது, எப்படி நாயகன் சமாளிக்கின்றான்.

இரட்டைவால் குருவி :- கணவன் - இரண்டு மனைவிகள். இறுதியில் இரண்டு மனைவிகளும் சமாதானமாக ஒரே குடும்பமாக கணவனுடன் தத்தமது குழந்தைகளுடனும் வாழ்வதாக படம் முடியும்.

மறுபடியும் :-  பத்தாண்டுகள் பழைய ,   மகேஷ் பட் தன் வாழ்வின் ஒரு பகுதியை கதையாக எடுத்திருந்தஅர்த் எனும் இந்திப்படத்தைத் தூசித்தட்டி மறு உருவாக்கம் செய்த படம். பாலுமகேந்திராவின் வாழ்க்கைக்கு நெருக்கமான படம் என்றும் சொல்வார்கள். இயக்குநர் - மனைவி - புதிதாய் வந்த நடிகை. என்ன ஆகின்றது என்பதுதான் கதை.  பாலுமகேந்திராவை அறிந்தவர்களுக்கு 'மறுபடியும்' என்ற பெயரே கதையைச் சொல்லிவிடும்.

சதிலீலாவதி :-  கணவன் - மனைவி - குழந்தைகள், புதிதாய் வரும் பெண்.  புதிதாய் வரும் பெண் தனது பழையக் காதலனுடன் போய்விட,  கணவன் மனைவி மீண்டும் ஒன்று சேர்ந்துவிடுவார்கள்.

ஜூலிகணபதி :- மணமான எழுத்தாளன் மேல் எழுத்தின் மேல் மையல் கொண்டு அவனை சிறைப்பிடித்து வைத்திருக்கும் பெண். அவளிடம் இருந்து நாயக எழுத்தாளன் எப்படி தப்பிக்கின்றான்.

மேற்சொன்ன படங்களில் முடிவுகள் வெவ்வேறாக இருந்தாலும் மைய இழை,  ஒரே சமயத்தில் இரண்டு பெண்களிடம் சிக்கிக் கொண்டு தவிக்கும் ஓர் ஆணின் மனப்போராட்டம்தான்.  தனது படைப்புகளுக்கும் தன் வாழ்க்கைக்கும் பெரிய இடைவெளிகளை வைக்காதவன் கலைஞன். அவ்வகையில் தன்னுடைய போராட்டங்களையே கதைகளாக்கி திரையில் ஓவியமாக்கி , தனது இயல்வாழ்க்கை  எதிர்பார்ப்புகளை திரை முடிவுகளாக பரிசோதித்து இருக்கின்றாரோ என அடிக்கடித்தோன்றும்.

பாலு மகேந்திரா என்ற மனிதனைத் தெரிந்து கொள்ள இந்தப்படங்களைப் பார்த்தாலே போதுமானதோ !!

பிகாசோ சொன்னபடி, தனது படைப்புகளில் தன் வாழ்க்கையை ஒளித்துவைத்திருப்பவன் தான் மிகச்சிறந்த கலைஞன். பாலுமகேந்திரா பிகாசோ வகைக் கலைஞன்.

Friday, February 14, 2014

அம்முவின் அப்பா - காதலர் தின சிறப்பு சிறுகதை

சென்ற ஆண்டு இதைப் பற்றி நான் யோசித்ததுக் கூட இல்லை. போன வருடம் வரை, என் மகள்அம்மு இங்கு வீட்டில் இருந்து கல்லூரி போய் படித்துக் கொண்டிருந்தாள். படிப்பு முடிந்து போன செப்டம்பரில் இருந்து வேலை நிமித்தமாக  சென்னைவாசியாகிவிட்டாள். சமீபத்தில் வேறு அடிக்கடி கார்த்தி என்ற பையனைப் பற்றி  அடிக்கடி பேசுகின்றாள்.  பழக்கம் பத்து நாட்கள், நட்பு நாற்பது நாட்கள் என ஐம்பதே நாட்களில் காதல் பூத்துவிடலாம். இன்னும் சில தினங்களில் காதலர் தினம் வேறு வருகின்றது.

காதலுக்கும் பயமில்லை, காதலர் தினத்தன்று ஊர்ச்சுற்றுவாளோ என்ற கெட்ட எண்ணமும் இல்லை. நானே காதல் திருமணம் செய்து கொண்டவன் தான்.  என்னுடைய ஒரே பயம், காதலர் தினத்தன்று ஊர்ச்சுற்றிக்கொண்டிருக்கும் ரவுடிகள் தான். முன்பெல்லாம் ரவுடிகள் என்றால் கைலிகள் கட்டி இருப்பார்க்கள், மீசை வைத்திருப்பார்கள், மரு இருக்கும். கண்களில் சிவப்பு நிறம் கொப்பளிக்கும். இப்பொழுது ரவுடிகள், காவித்துண்டு அணிந்து இருக்கின்றார்கள் அல்லது குல்லா வைத்திருக்கின்றார்கள். முன்பெல்லாம் ரவுடிகள் சென்னைத்தமிழ் அல்லது சேரித்தமிழ் பேசுவார்கள். இப்பொழுதெல்லாம் ரவுடிகள் சமஸ்கிருதம், அரபி எல்லாம் பேசுகின்றார்கள், சமயங்களில் ஆங்கிலமும்....

பிப்ரவரி 14, வெள்ளியன்று வருகின்றது, நானும் அம்முவின் அம்மாவும், அப்படியே வார இறுதிக்கு சென்னை வருவதைப்போல போய், பாதுகாப்பாக அவளுடன் இருந்துவிடலாமா...

ச்சே... கருமாந்திரம் பிடித்தவர்களுக்காக, ஏன் என் மனம் இப்படி எல்லாம் யோசிக்கின்றது.   என் பிள்ளைக்கு அத்தனை சுதந்திர எண்ணங்களையும் விதைத்து வளர்த்து இருக்கின்றேன். அவளுக்குத் தெரியாததா... ஒருவேளை கார்த்தியைக் காதலித்தால் அம்முவின் முதல் நண்பனான என்னிடம் சொல்லாமலா இருப்பாள் , ஒருவேளை பிறகு சொல்லிக் கொள்ளலாம் என இருந்தாலும்  வாலன்டைன்ஸ் தினத்தன்று கொண்டாடிவிட்டுத்தான் போகட்டுமே...

விடியற்காலையில் கெட்ட கனவு,  நாங்கள் வெறும் நண்பர்கள் என்று சொல்ல சொல்ல, கார்த்தியையும் அம்முவையும் இரண்டு வகையான ரவுடிகளும் அடிக்கின்றனர். கனவு கலைந்து  எழுந்து செய்தித்தாளைப் படித்தால், கடற்கரை வரும் காதலர்களை விரட்டுவோம் என கூட்டாக ரவுடிகள் பேட்டிக்கொடுத்து இருந்தனர்.

பிப்ரவரி 14 ஆம் தேதியன்று அம்முவிற்கு உடம்புக்கு சரியில்லாமல் போய் அவள் விடுதியிலே இருந்துவிடவேண்டும் என அபத்தமாய் மனம் யோசித்தது.  அம்முவோட அம்மாவிற்கு உடம்புக்கு சரியில்லை, உடனே கிளம்பி வா, என சொல்லி வரவழைக்கலாம் , ஆனால் என் மகளிடம் இதுவரை பொய் சொன்னது இல்லையே ....

கவலைகள், குழப்பங்கள், சஞ்சலங்கள், சங்கடங்கள் அனைத்தின் எரிச்சலையும் அம்முவின் அம்மாவிடமே காட்டினேன். காரணங்களைக் கேட்கவில்லை. வழக்கம்போல சகித்துக் கொண்டிருப்பாளாய் இருக்கும்.  காதலின் மற்றொருவடிவம் சகிப்புத்தன்மை.

பிப்ரவரி 14 , காலையில் வெகுசீக்கிரம் அலுவலகம்  வந்துவிட்டேன். அம்முவின் கைப்பேசிக்கு அழைக்கலாமா... ச்சே வேண்டாம் ..அநாகரிகம்... எந்தக்காலத்திலும் அம்முவிற்கும் எனக்குமான அந்த நட்பை , அப்பா என்ற அதிகாரத்தால் பிடுங்கி எறியக்கூடாது என நினைத்துக் கொண்டிருக்கையில். அம்முவிடம் இருந்தே அழைப்பு....

"மிஸ்டர், சுப்ரமணி, கொஞ்சம் வீட்டிற்கு வரமுடியுமா?" அம்மு உற்சாகமாய் இருந்தால் என்பெயரைச் சொல்லித்தான் அழைப்பாள்.  என் நிறுவனம் என் உரிமை என யாருடனும் சொல்லிக்கொள்ளாமல், வீட்டிற்கு விரைந்தேன்.

"மிஸ்டர் சுப்ரமணி, வேலன்டைன்ஸ் டே அன்னக்கி , நான் காதலிப்பதை, என் அப்பா அம்மாகிட்ட தான் சொல்லனும்னுதான் திடீர்னு கிளம்பி வந்தேன்"

"சொல்லுடாமா ..."

" கார்த்தின்னு சொன்னேன்ல, அந்த பையன் தான், பிடிச்சிருந்துச்சு,  பேசிக்கிட்டோம், அவங்கவீட்டுல அவன் இன்னைக்கி தகவல் சொல்லிடுவான், நான் இங்க வந்து சொல்லிட்டு இருக்கேன்"

அனுமதி என்றில்லாமல், தகவல் என்ற பொருளில் அவள் சொல்லுவது எனக்குப்பிடித்து இருந்தது. ஒரு பெண் குழந்தைக்கான பரிபூரண சுதந்திரத்தை என் மகள் முழுமையாக்கிக் கொண்டு இருக்கிறாள்.

இடையில் கார்த்தியின் பெற்றோரிடம் இருந்து எங்களுக்கு தொலைப்பேசி அழைப்பு வந்தது. பேசினோம். நல்ல நாளில் எல்லாம் நல்லபடியாக அமைந்தது.

இரவு மொட்டை மாடியில், விளையாட்டாய் அம்முவிடம்

"அம்முக்குட்டி, வாலன்டைன்ஸ்டே அன்னக்கி பொதுவா லவ்வர்ஸ் ஊர்தானே சுத்துவாங்க,,,, நீங்க இரண்டு பேரும் எப்படி இப்படி டிசைட் பண்ணீங்க"

".. பிப்ரவரி 14 அன்னைக்கு ரவுடிங்க தொல்லை தாங்க முடியாது, அதனால நாங்க இரண்டு நாளைக்கு முன்னமே வேலன்டைன்ஸ் டே கொண்டாடிட்டோம்."





Sunday, February 09, 2014

ஓர் அனுபவமும் யுவன் சங்கர் ராஜாவும்

பிடிப்பு ஏதேனும் சிக்காதா , தத்தளித்துக் கொண்டிருக்கும் நடுக்கடலில் இருந்து தப்பிக்கமாட்டோமா , என ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு காலக்கட்டம் வரும். அப்படியான ஒரு காலக்கட்டம் எனக்கும் வந்தது. எதைத் தின்னால் பித்தம் தெளியும், சீக்கிரம் தெளியும் என்று மந்திரிச்சுவிட்டபடி இருந்த காலக்கட்டம். அந்த சமயத்தில்தான் என் கல்லூரி சீனியர் அரவிந்த்ராஜேஷ் தமிழ்மணி அவர்களை நீண்டகாலம் கழித்து சந்தித்தேன். பண்ணையாரும் பத்மினி படத்தில் வரும் சிறுவர்களைப்போல நானும் கார் பிரியன். அதுவும் முன் சீட்டில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்தபடி போகவேண்டும் என ஆசைப்படுபவன். காரில் வந்தார், முன் சீட்டில் அமரவைத்தார், சோறு வாங்கிக் கொடுத்தார். வயிற்றுக்கு ஈயப்பட்டப்பின், பவுலோ கோயல்ஹோ எழுதிய The Alchemist என்ற புத்தகத்தை வாங்கித்தந்தார். ஒரே இரவில் ஒரே மூச்சில் படித்து முடித்தேன். பித்தம் தெளிந்தது. கரை சேர்ந்ததாக உணர்ந்தேன். அல்கெமிஸ்ட் புத்தகத்தைவிட சிறப்பான புத்தகங்களை எல்லாம் அதன் பின்னர் மற்ற நண்பர்கள் பரிந்துரைக்க படித்திருக்கின்றேன். ஆனால் எப்பொழுது எல்லாம் தத்தளிக்கும் தருணங்கள் வருகின்றனவோ அப்பொழுதெல்லாம் அல்கெமிஸ்ட் புத்தக்கத்தை மனம் தேடும். ஒருவேளை அல்கெமிஸ்ட் படித்தவர்களைக் கொண்டு ஒரு மதம் உருவாக்கப்பட்டு, பவுலோ கோயல்ஹோ தூதராக அறிவிக்கப்பட்டு இருந்தால் ரசவாத மதத்தில் வினையூக்கியாக சேர்ந்து இருப்பேன். இன்றும் நண்பர்கள், வாசகர்கள், தோழிகள் தடுமாற்றத்தில் இருக்கும் சமயங்களில் நான் பரிந்துரைக்கும் முதல் புத்தகம் அல்கெமிஸ்ட்.

மனம் பிடிப்பற்ற சூழலில் இருக்கையில் பிடிப்பாய் ஒரு கருவி கிடைக்கையில் கருவியின் தாசனாய் மாறிப்போவது சமயங்களில் தவிர்க்கமுடியாது. ஒருவேளை கருவி இல்லாவிடின் கிடைக்காவிடின் அழிந்துபோய் விடக்கூட வாய்ப்பு அதிகம். யுவன் சங்கர் ராஜாவிற்கும் அத்தகைய சூழல் ஏற்பட்டு இருக்கக்கூடும். திருக்குரான் புத்தகம் வாழ்க்கையில் அவருக்கு மிகுதியான பிடிப்பையும், இழந்த நம்பிக்கையை மீட்டு எடுத்துக் கொடுத்து இருக்கலாம். தன்னை இழக்க விரும்பாத யுவ-ராஜா தாசன் ஆகலாம். தவறில்லை.

யுவன் சங்கர் ராஜா வாக இருந்தாலும் சரி, அவர் யூனுஸ் அப்துல்லாவாக மாறினாலும் அவரின் இசை ஒன்றுதான். மீட்டப்படும் வீணைக்கு விரல்கள்தான் முக்கியம். விரல்களுக்கான உடல், என்ன ஆடை போட்டுஇருக்கின்றது பார்ப்பதில்லை. இசை என்னும் இயற்கை அவதாரத்தின் தூதுவன் யுவன் சங்கர் ராஜாவிற்கும் அவரின் புதுத்தத்துவ வாழ்க்கைக்கும் வாழ்த்துகள்.

Saturday, February 08, 2014

520 ஈரோ - சிறுகதை

"இந்த மாசம் கொஞ்சம் எக்ஸ்ட்ரா பணம் அனுப்ப முடியுமா" என்ற அப்பாவின் மென்மையான வேண்டுகோளும்
"எவ்வளவு நாள்தான்டா கார்த்தி படிச்சிக்கிட்டே இருப்ப, சீக்கிரம் வேலைக்குபோடா" என்ற அம்மாவின் புலம்பலும்  காதில் இருந்து அகன்றுவிட்டாலும் இன்னும்   மனதில் எதிரொலித்துக் கொண்டே இருந்தன.

நான் ஆராய்ச்சிப்படிப்பு மாணவன்.  ஆராய்ச்சிப்படிப்பிற்கு என் நிறுவனம் தரும் 1000 ஈரோ , வீட்டிற்கு அனுப்ப 500 எனக்கு ஐநூறு என சரியாகப் போய்விடுகின்றது.  நான் ஊர்ச்சுற்ற, வெளிநிறுவனத்திற்கு , மாதத்தில்  நான்கு ஐந்து நாட்கள் மென்பொருள் நிரலி அடித்து கொடுத்தால் இருநூறு முன்னூறு தேறும். பத்து நாட்கள் செய்ய வேண்டிய வேலையை, மாட்டினான்டா மங்குனிசாமி என, இரண்டே நாட்களில் செய்யச் சொல்வார்கள்.  எல்லா மாதங்களிலும் இந்த வேலை கிடைக்காது. வேலை இல்லாத மாதங்களில்  Running Royal Life Only On Photos என முன்பு எடுத்த சுற்றுப்பயண போட்டோக்களை பேஸ்புக்கில் போடுவதோ அல்லது இப்படி இந்த பிரஸ்காட்டி மலை மேல் உட்கார்ந்து தூரத்தில் ரோம் நகரைப் பார்ப்பதிலோ நேரம் போகும்.

 வெப்பமண்டல தமிழ் நாட்டுக்காரன் ஆன எனக்கு ஐரோப்பாவில்  மழைப்பிடிக்கும். குளிர்காலத்தில் மழை பெய்தால் தட்பவெப்பம் சுழியத்திற்கு மேல் இருக்கின்றது எனப்பொருள். மேலும் மேகமூட்டம் வெப்பத்தை வெளியிடாமல் காத்து வைத்திருக்க , குளிர் வாட்டாது. ஆதலால் மனம் மழைக்கு ஏங்கும். இரண்டு நாட்கள் மழை அடித்து ஓய்ந்து இன்றுதான் கதிரவனின் வெளிச்சம் வந்து இருப்பதால் இந்தக் குட்டி மலை நகரத்தின் தெருக்களில் நல்ல சன நெருக்கடி.  காப்பிக்கடைகள் இன்று களை கட்டின. மதியம் வந்ததில் இருந்து மூன்று காப்பிசினோ வகை காப்பிகள் குடித்தாகிற்று.  வெளிச்சம் மறைய வெப்பம்  குறைய  குளிர் என்னை வாட்டியது.  பசி இருந்தால் குளிர் அதிகமாக தெரியும்.  பசியுடன் வருத்தமும் சேர்ந்து கொண்டதால் மென்குளிர் நடுக்கக் குளிராக எனக்குத் தெரிந்தது.

மேலதிகமாக பணம் அனுப்பவில்லை என்றாலும் அப்பா சமாளித்துக்கொள்வார். ஆனால் அனுப்பினால் உதவியாக இருக்கும், யாரிடம் கேட்பது என்ற யோசனையை ஒரே இடத்தில் இருந்தபடி அசைபோடுவது அயற்சியாய் இருந்தது. இரண்டு கொண்டை ஊசி வளைவுகளை கடந்து  கீழேப்போய் ரயில் நிலையத்தில் அமர்ந்து ரயிலை வேடிக்கைப் பார்த்தபடி யோசிக்கலாம். ரயிலும் ரயில் நிலையங்களும் பல சமயங்களில் எனக்கு போதிமரம்.

சாலையின் ஓரமாக வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த கார்களை ஒன்று இரண்டு என எண்ணிக்கொண்டே, பத்தாவது கார் இருந்த பெஞ்சில் ஒரு தாத்தா உட்கார்ந்திருந்ததால் அவரைக் கடந்து  இருபதாவது கார் அருகே இருந்த மரப்பெஞ்சில் அமர்ந்தேன். ரயில் நிலையத்திற்கு இன்னும் சில கார்களை எண்ணவேண்டும்.

 அந்த தாத்தாவுடன் உட்கார்ந்து இருக்கலாம் . மூன்று காரணங்களினால் அவருடன் உட்காரவில்லை. அவர் பேச ஆரம்பித்தால் என்னால் சரளமாக இத்தாலியத்தில் பேச முடியாது. இரண்டாவது , எனக்கு புன்னகையைக் கொடுத்தாலும் அவரின் தோற்றம் படு ஏழ்மையாக இருந்தது. மூன்றாவது  மணி பத்து ஆகப்போகின்றது, சரியான மேலங்கி கூட இல்லாமல் குளிரில் உட்கார்ந்து இருக்கின்றார். ஏதாவது ஒன்று கிடக்க ஒன்று ஆகி நமக்கு ஏன் பிரச்சினை என்பதால் தான் இந்த  இருபதாவது கார் அருகே இருந்த பெஞ்ச் தேர்ந்தெடுக்கப்பட்டது.

பெஞ்சில் உட்கார்ந்தவுடன் தாத்தா நினைவுப்போய், பணத்தின் நினைவு வந்தது.  என்ன செய்யலாம் என்ற யோசனையின் அசை தொடர்ந்தது. கண்களுக்கு மட்டும் குளிர்வதில்லை.  மனதிற்கு எது தேவையோ அதைக் காட்டும்.   தூரத்தில் ஈரோ பணத்தாள் இருப்பதாக மூளைக்கு சொன்னது. கவலையில் கானல் நீர் தென்படலாம் என பார்வையைத் திருப்பிக் கொண்டேன். உந்தப்பட்ட இரண்டாம் பார்வையில் அது பணத்தாள் என உறுதியானது. பணம் கிடந்த இடத்திற்கு அருகில் இருபத்திரண்டாவது கார் நின்றிருக்கவேண்டும்.  நான் ஓடிய வேகத்தில் 100 மீட்டர் பந்தயங்களில் ஓடியிருந்தால் உசைன் போல்ட்டைத் தோற்கடித்து இருப்பேன். ஓடிய வேகத்திற்குப் பரிசாய் அது 500 ஈரோத்தாள்.   கடைசியாக நான் இப்படி சாலையில் பணம் எடுத்தது , வியன்னா சென்றிருந்த பொழுதுதான். அன்று  ஒரு பத்து ஈரோத்தாள் கிடைத்தது. ஆஸ்திரியாவில் பத்து ஈரோ அல்லது அதற்கு குறைவான மதிப்புள்ள பொருட்கள் கீழே கிடந்தால் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு மீண்டும் பெஞ்சில் வந்து அமர்ந்து, பணக்கவலைத் தீர்ந்தது என கடவுளுக்கு நன்றி சொல்லும் தருணத்தில் புதுக்கவலைகள் முளைத்தன.
ஒருவேளை, என்னைப்போன்ற சிரமமான சூழலில் இருப்பவர்கள் பணத்தைத் தொலைத்துவிட்டு போய் இருந்தால் ;
கள்ளநோட்டாக இருந்தால் , இத்தாலியில் இது சர்வசாதாரணம், புழக்கத்திலே இல்லாத ஆயிரம் ஈரோத்தாள் கூட இத்தாலியில் கிடைக்கும்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வருவதைப்போல பணத்தை தரையில் போட்டுவிட்டு தூரத்தில் இருந்து படம்பிடித்து பகடி செய்யப்போகின்றார்களோ என்ற பயமும் வந்தது.

உன்னுடைய பணம் இல்லை.. வேண்டாம்...
உழைக்காத பணம் ஒட்டாது.
ஆனால் நான் திருடவில்லை. ஏமாற்றவில்லை. தானாகவே பணம் , இயற்கையாய் வந்து விழுந்து இருக்கின்றது.
 முதன் முதலாய் ரோம் வந்து இறங்கியபொழுது, எனது கைப்பை கிட்டத்தட்ட 600 ஈரோ பணத்துடன் காணாமல் போனதற்கான இழப்பீட்டு பணமாக எடுத்துக் கொள்ளலாமே ...
எத்தனை நாட்கள் சம்பளம் இல்லாமல் வேலைப்பார்த்து இருக்கின்றாய் அதற்கான சன்மானமாய் இருக்கட்டும்.
 மனம் இரண்டு பக்கத்திற்கும் பேசியது.  கடைசிப்பேருந்திற்கு இன்னும் நாற்பது நிமிடங்கள் இருந்தன. இங்கிருந்து பேருந்து நிலையம் நடக்க 10 நிமிடங்கள். இன்னும் முப்பது நிமிடங்கள் காத்து இருப்போம்.  யாராவது வந்து தேடினால் கொடுத்துவிடுவோம். இல்லாவிடில் இன்று நான் அதிர்ஷ்டமானவன்.

ஒவ்வொரு நிமிடமும்  மெல்ல நகர்ந்தது.  யாரும் வந்துவிடக்கூடாதே என்று ஒரு புறமும் , முப்பது நிமிடங்கள் எப்படி கரையும் என மறுபுறமும் என்னிடம் நான் அருமையாக நடித்துக் கொண்டிருந்தேன்.  அந்த பத்தாவது பெஞ்ச் தாத்தா மெல்ல ஒவ்வொரு காராக தொட்டபடி என்னை நோக்கி வந்தார்.

கண்டிப்பாக இந்த தாத்தாவின் பணமாக இருக்காது.   அருகில் வந்த தாத்தா,

"இந்த இருபது ஈரோத்தாள் நீ சென்றவழியில் கிடந்தது , இப்பொழுதான் பார்த்தேன் , உன் பணமா " என இத்தாலியத்தில் கேட்டார்.

ஐநூறுடன் மேலும் இருபதா... இதுவரை இரண்டு பக்கமும் வாசித்துக் கொண்டிருந்த மனம், விடாதே வாங்கிக் கொள் என்றது.  முப்பது நிமிட கெடு ஒருமுகம் ஆன ஆசை மனத்தினால் வெறும் 5 நிமிடங்களில் மறந்து போனது.

"ஆம் என்னுடையதுதான் நன்றி " என பொய்யுடன் வாங்கிப் பையில் வைத்துக் கொள்ளும்பொழுது கொஞ்ச தூரத்தில் ஒரு கார் மெல்ல  வருவதையும் கவனித்தேன். ஒருவேளை தொலைத்த பணத்தைத் தேட வரும் காரா !! .

தூரத்தில் ரயிலின் சத்தம் கேட்டது.

"சரி தாத்தா, ரயிலுக்கு நேரம் ஆகிவிட்டது, நல்லிரவு" என மற்றொருப் பொய்யை  சொல்லிவிட்டு நடக்கையில் ,  ஒருகணம் கூடத்திரும்பிப் பார்க்கவில்லை , ஒரு வேளை அந்தக் கார் பணத்தைத் தேடும் காராக இருந்து, தேடுபவர்களைப் பார்த்தால் ஆசைமனம் தோற்றுவிடுமோ என்ற பயம்... நிமிடங்களில் மாறியதற்கு மனம் வெட்கப்படவில்லை. சமாதானத்தை தேடிக்கொண்டிருந்தது.
  ரயில்  எனக்கு போதி மரம் தானே ... ஊர் சுற்றிப்போகப் போகும்  ரயில் பயணத்தில் இந்த 520 ஈரோக்களுக்கு ஏதாவது ஒரு சமாதானம் கண்டுபிடித்துகொள்ளலாம்.  மழைப்புழுக்கமா மனப்புழுக்கமா எனத் தெரியவில்லை...வெக்கையாக இருந்தது.  மென்குளிரை வென்ற வெக்கையுடன்   ரயில் நிலையம் நோக்கி நடந்தேன்.
--------------------


Thursday, February 06, 2014

மேரி - சிறுகதை

சந்தர்லேந்தில் இருந்து 20 மைல்கள் தொலைவில் இருக்கும் இந்த பள்ளிக்கு, அம்மு, நிரந்தர தலைமை சமையல்காரராக வந்ததும் வராததுமாய்   தனது உதவியாளர்கள் லின், ஜாக்குலின் , ஜின், கரோலின் ஆகியோர்களிடம் கேட்ட கேள்வி " மேரி எப்படி இருக்கின்றாள் " என்பதுதான்.

ஏற்கனவே நடுங்கிக் கொண்டிருந்த  அவர்களை அம்மு அப்படி கேட்க ஒரு பெரிய கதை இருக்கின்றது. அந்தக் கதையை நான் உங்களுக்கு சொல்கின்றேன்.  ஆறு மாதங்களுக்கு முன்னர் , இதே பள்ளிக்கு தற்காலிக தலைமை சமையல் ஆளாக அம்மு வந்திருந்த பொழுது நடந்த கதை.   
---
அம்மு, இந்தியத் தமிழ்ப்பெண்,  வடக்கு இங்கிலாந்தில் , அதுவும் வயதில் 50 களைக் கடந்த  உதவி சமையல் ஆட்களுக்கு  வெள்ளையரல்லாத ஒருத்தி அதிகாரம் செலுத்தும் இடத்திற்கு வருவது அறவே பிடிக்கவில்லை.  ஆங்கிலேயர்களுக்கு அன்றும் இன்றும் மற்றவர்கள் ஏவலாட்களாக இருந்தால் பிடிக்கும்.  மேலாளர்களாக , மற்றவர்களை ஏற்றுக் கொள்ள முடியாது.   இருந்தாலும் , இரண்டு வாரங்கள் தானே என வெறுப்பைக் காட்டிக்கொள்ளாமல் அம்முவுடன் நட்பு பாராட்டினர். 

" இனிமேல் நாங்கள் நான்கு பேரும் உன் தோழிகள், இன்னொரு தோழியும்  கூட இருக்கின்றாள் "  

" யார் அந்த தோழி , வேலைக்கு விடுப்பா ?"  என்ற அம்முவின் கேள்விக்கு   நான்கு ஆங்கிலேய உதவியாளர்களும் சிரித்தனர். 

" மேரி ,  இந்தப்பள்ளியில் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வேலை பார்த்தவள் , ஒரு நாள் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுதே மாரடைப்பினால் இறந்து போனாள்"  

"பயப்படாதே , புதிதாய் வந்து இருப்பவர்களை மட்டும் மிரட்டும், பழைய ஆட்களை ஒன்றும் செய்யாது " என லின் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்க 

அம்முவின் கண்களில் கலவரம் தெரிந்தது . இருந்தாலும் காட்டிக்கொள்ளாமல்  

"இந்தியாவில் இருந்த பொழுது , உங்களின் ஆங்கிலேயப் பேய்களை விட பயங்கரமான பேய்களைப் பார்த்து இருக்கின்றேன் , சரி வேலையை ஆரம்பிப்போம் "   என பயத்தையும் வேலையாட்களையும் விரட்டினாள். 

ஒரு நாள் கழிப்பறை உட்பக்கமாக தாழிடப்பட்டு இருக்கிறது. மற்றொரு நாள் யாரோ ஓடுவதைப்போல இருக்கின்றது என லின் , ஜாக்குலின் அம்முவிடம் வந்து சொன்னார்கள். 
  
அடுத்த வாரம் ,

 "லின் ... மேசையில் இருந்த இனிப்புகளைக் காணவில்லை  இனிப்பின் காகிதங்கள், குப்பைத் தொட்டியில் கிடக்கின்றன , வெள்ளியன்று நான் தான் சமையல் அறையைப் பூட்டினேன் , இன்று திங்கள் , நான் தான் முதல் ஆளாய் திறந்தேன் .. வார இறுதியில் வேறு யாரவது இங்கு வருவார்களா  "  

"அனேகமாக , மேரி எடுத்து சாப்பிட்டு இருக்கலாம் "  

" நகைச்சுவைக்கான நேரம் இதுவல்ல, லின்,  பொருட்கள் ஏதேனும் காணமல் போய் இருக்கின்றதா எனப்பாருங்கள் " 

கெகெபிக்கெவென நான்கு உதவியாளர்களும் சிரித்ததைப் பார்த்த அம்மு அவர்களைப் பார்த்து முறைத்தபடி 

" தங்களை வைத்து கிண்டல் செய்யப்பட்டால், இந்தியப் பேய்களுக்கு கோவம் வரும், தொடர்ந்து வந்து துரத்தும்...  ஆங்கிலப் பேய்களுக்கு எப்படி எனத் தெரியவில்லை "  

வெட்டியாய் இருத்தல்தான் கிலியைத்தரும். சமையல் கால் பங்கு என்றால், அது சார்ந்த சுகாதாரம்,  சரிவிகித உணவு கண்காணிப்பு , பரிமாறுதல்  வேலைகள்  ஆகியன முக்கால் பங்கு. ஆரம்ப பள்ளி குழந்தைகளுக்கான உணவு என்பதால் இந்தக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை சரியாக கடைப்பிடிக்க வேண்டும். இந்தக்கவனக்குவிப்பான வேலை மும்முரத்தில் பேயாவது பிசாசாவது என அடிக்கடி சொல்லிக்கொண்டு அம்மு பணிகளில் மூழ்கி போய்விட்டாள். தற்காலிகப் பொறுப்பின் கடைசி நாளன்று ஒரு புகார் ஒன்று வந்தது.  தலைமை ஆசிரியர் , அம்முவை அழைத்து , ஒரு குழந்தை , உணவு சூடாகப் பரிமாறப்படுவதில்லை என , தனது பெற்றோரை இன்று கூட்டி வருகின்றது என சொன்னார். 

உதவியாளர்கள் இந்த பிரச்சினையைப்பற்றி கவலையேப்படாமல்  அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். அம்மு, தான் இந்தப்பள்ளிக்கு வந்த நாள் முதல் , உணவு விகிதங்கள் , வெப்ப அளவீடுகள் என அனைத்தையும் அலுவலக  குறிப்பு ஏடுகளில் ஆவணப்படுத்தி வைத்து இருந்தமையால் உதவியாளர்களின் அக்கறை இன்மையை பற்றிக் கவலைப்பட்டதாக தெரியவில்லை.  குழந்தைகளுக்கு உணவுப் பரிமாறப்படும் முன் , சூட்டை அளவு எடுத்துவிடலாம் என்றால் , வெப்ப மணியைக் காணவில்லை.  அதைத் தேடி எடுத்து சூட்டை சோதித்தால் கருவி வேலை செய்யவில்லை. நேரம் ஓடிக்கொண்டே இருந்தது. அம்மு படபடப்பானாள்.  புதிதாக வாங்கிய கருவி. பழுதாக வாய்ப்பில்லை என ஆராய்ந்ததில்  பேட்டரியைக் காணவில்லை.  பேட்டரி கழண்டு கீழே விழும் அளவிற்கு இலகுவான மூடி அல்ல.  

" இறுக்கமாக மூடி இருக்கின்ற வெப்ப மானியில் எப்படி பேட்டரி காணாமல் போகும்  "  

'ஒரு வேளை மேரி எடுத்து இருப்பாளோ "  என்று சொன்ன லின்னைப் பார்த்து ஒரு பேயைப்போல முறைத்தாள் அம்மு. 

அனைவரும் தேடினர். பாத்திரங்கள் வைக்கும் மரப்பலகைக்கு அடியில் சுவற்றை ஒட்டியபடி கிடந்த அந்த சிறிய  பேட்டரியை அம்மு எடுத்தாள், வெப்பமானியை சரி செய்தாள், சூட்டை குறித்துக் கொண்டாள். புகார் செய்த குழந்தையின் பெற்றோர் உணவை சரிப்பார்த்தனர். அவர்களுக்கு திருப்தி.  தலைமை ஆசிரியருக்கும் திருப்தி.  கடைசி நாள் அதுவுமாக பிரச்சினை ஏற்பட்டு நல்லவிதத்தில் சரியானது அம்முவிற்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.  எல்லோரிடமும் இருந்து விடைபெற்றுக் கொள்கையில் , அவளின் உதவியாளர்கள் பேயறைந்ததைப் போல இருந்தனர். 

நான்கு உதவியாளர்களும் , கறி பெண்   என அம்முவை திட்டிக்கொண்டே கூடினர் . கறி என்பது  இந்தியர்களுக்கான பட்டப்பெயர்.  

" ஜாக்குலின்  தானே பேட்டரியைக் கழட்டினாள்" 

" ஆமாம் லின் , இதோ பார், என்னிடம் தான் இருக்கின்றது, அப்புறம் எப்படி அந்த கறி பெண்ணிற்கு பேட்டரி கிடைத்தது " 

'ஒரு வேளை மேரி "  என்றாள் லின் . 

---

இதுதான் ஆறு மாதங்களுக்கு முன்னர் நடந்த கதை. இருங்கள் ... இருங்கள் , கதை முடியவில்லை.  உண்மையில் வெப்பமானியை வாங்கும் பொழுது ஒன்றிற்கு இரண்டாய் பேட்டரிகளை அம்மு வாங்கி வைத்து இருந்தாள்.  பேட்டரியைக் காணவில்லை என்றவுடன்,  இவர்கள் தான் எடுத்து இருப்பார்கள் என அவளுக்குப் புரிந்தது.  படபடப்பானதைப் போல காட்டிக்கொண்டு , பேட்டரியை அடியில் உருட்டி விட்டு பயம் காட்டியவர்களுக்கே பயம் காட்டிப் போனவள் தான் திரும்ப நிரந்தர தலைமையாக வந்து இருக்கின்றாள்.   சரி இந்தக் கதை எனக்கு எப்படித் தெரியும்  ....தெரியும்   தெரியும்   ....இதை எல்லாம் பார்த்தவள் நான்...நான் தான் மேரி. 

Sunday, February 02, 2014

எருதின் புண் - சிறுகதை


ஞாயிறு அன்று 12 மணிவரை தூங்குபவன், ஆனால் எட்டு மணிக்கே எழுந்து சிவஞானத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். ஆழ்வார்திருநகர் பக்கம் நீங்கள் வந்து இருந்தால் அச்சு அசப்பில் ஒரே மாதிரி இரண்டுவீடுகளைப்
பார்த்து இருக்கலாம். அந்த இரண்டுவீடுகளின் சொந்தக்காரர்தான் சிவஞானம்.  நான் அந்த வீடுகளில் ஒன்றில் குடித்தனம் இருப்பவன்.  அனேகமாக வீடு வாடகையை ஏற்றத்தான் வருகின்றார் என யூகித்து இருந்தேன். சென்ற ஆண்டு ஆயிரம் ரூபாய் ஏற்றினார்.

"முரசொலி படிச்செல்லாம் அறிவை வளர்த்துக்க முடியுமா என்ன?" என்ற வழமையான குசும்புடன் வெளி இரும்புக்கதவை உள்ளே தள்ளியபடி வந்தார் சிவஞானம்.  அவரின் கையில் இருந்த தினமலரை வாரமலருக்காக பெற்றுக்கொண்டேன்.

சிவஞானம் என்ற பெயரை , அவரின் பெற்றோர்கள் சிலம்புச்செல்வர் ம.பொ.சி நினைவாக வைத்தனர் என கேட்காமலேயே அடிக்கடி சொல்லுவார். ம.பொ.சி அவரின் நெருங்கிய சொந்தக்காரர் எனப் பெருமைசொல்லிக்கொள்வதற்காக அவர் போடும் முதல் வரி என்பது நீண்ட நாட்கள் கழித்துத்தான் புரிந்தது.  திமுக என்றால் அவருக்கு ஆகாது, கலைஞர் என்றால் அவருக்கு அப்படி ஒரு வெறுப்பு.

"என்ன உங்கத் தலீவர் டெசோ கிசோன்னு எதுவும் வேலை ஆரம்பிக்கலியா ? எலக்‌ஷன் டைம் வேற நெருங்கிடுச்சு"

மனைவியிடம் கூட கிண்டலுக்கு பதில் நக்கல் அடித்து விடலாம்.  ஆனால் வீட்டு உரிமைக்காரர்களிடம் ஸ்ட்ரிக்ட் நோ நோ.

ஆக, கலைஞர், பாராட்டு விழாக்களில் ஒரு ஓரசிரிப்பு சிரிப்பாரே, அதைப்போல சிரித்துக் கொண்டேன்.

"தமிழ்த்தலைவன்னு சொல்லிட்டு , சிங்களத்தமிழர்களுக்கு இப்படி துரோகம் செஞ்சிருக்கக் கூடாதுப்பா..."

ஆத்திரம் வந்தது. கலைஞரை கேலி செய்ததற்காக அல்ல. சிங்களத்தமிழர்கள் என்றதற்காக... அம்மு நான் ஆத்திரப்படும்பொழுது எல்லாம் சரியாக கண்டுபிடித்துவிடுவாள். ஆத்திரத்தைக் கட்டுப்படுத்தி நான் சிரிக்கும்பொழுது அது மிஸ்டர் பீன் சிரிப்பைப்போல இருக்குமாம்.  என் மிஸ்டர் பீன் சிரிப்பை ஆமோதித்தலாக நினைத்துக் கொண்டு கலைஞரை தொடர்ந்து வசைப் பாடிக்கொண்டிருந்தார். எனக்கு மனம் எவ்வளவு வாடகை ஏற்றப்போகிறார் என்பதில்  இருந்தது.

"சரி, தம்பி, இந்த மாசத்தில இருந்து வாடகை 2000 ரூபாய் எக்ஸ்ட்ரா கொடுத்துடுங்க" என்றார்.

தனிவீடு, கார் பார்க்கிங் இப்படி ஒரு வீடு சென்னையில் கிடைப்பது சிரமம் என்பதால், 2000 ரூபாய் ஏற்றம் அதிகம் என்றாலும் ஏற்றுக்கொண்டேன்.  காப்பி, மிக்சர் உபசரிப்புகள் முடிந்தவுடன் , வாரமலரில் சினிமா கிசுகிசு செய்திகளின்
சுவாரசியத்தினால், வாரமலர் இணைப்பை மட்டும் என்னுடன் வைத்துக்கொண்டு தினமலரை அவரிடம் திருப்பிக் கொடுத்தேன்.

வீட்டு வாசற்படி சென்றவர், திரும்ப வந்தார். "யோகநாதாராசா வீட்டிற்கும் போறேன். நீங்களும் கூட வர்றீங்களா" எனக் கூப்பிட்டார்.

யோகநாதராசா இன்னொரு வீட்டின் குடித்தனக்காரர். ஈழத்தமிழர். தன் மனைவியுடன் இங்கு வசிக்கின்றார். அவரின் மகன்கள் பிரான்சில் புகலிடம் விண்ணப்பம் கொடுத்து நீண்ட நாட்களாகக் காத்திருப்பதால் எப்பொழுதும்
மென்சோகத்துடன் தென்படுவார். கள்ள முகவர்கள் , எப்படி , அவரின் மகன்களை பிரான்சு என சொல்லி உருகுவேயில் இறக்கிவிட்டதையும் அங்கு கையில் சல்லிக்காசு இல்லாமல் கஷ்டப்பட்டதையும் சொல்லும்பொழுது, கடினமான உள்ளம் படைத்த காரியகார என்னையும் உலுக்கும்.

நான் கலைஞரின் ரசிகன் என்றாலும் யோகநாதாராசா "என்னய்யா , உங்க அய்யா எங்களை ஏமாத்திட்டாரே" சொல்லும்பொழுது மனதைப்பிசையும்.  நேரிடையாகப் பாதிக்கப்பட்டவர்களிடம் அறிவுப்பூர்வ அரசியல் பேசுவது அழகல்ல என்பதால் பதில் சொல்ல மாட்டேன். அவர் பேசுவர் நான் கேட்பேன். புலிவேசம் போடாத புலியாக இருந்தபோதிலும் சகோதரயுத்தம் தொடங்கி ராஜபக்சேவை வெற்றியடையச் செய்தது வரை புலிகளின் அரசியல் தடுமாற்றங்களைச் சொல்லுவார். பல சமயங்களில் கேட்டல் வழி வரலாறு ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்றை விட உண்மையாக இருக்கும்.

பாரிசில் இருந்து எனக்கு ஏதாவது தேவையா எனக் கேட்பார். நான் வேண்டாம் என மறுத்துவிடுவேன். பாரிசில் அலுவலக விசயமாக ஆறு மாதங்கள் இருந்திருக்கின்றேன். தூங்க கூட நேரமில்லாமல் தட்டுக்கழுவி குருவியாய் ஈழத்தமிழர்கள் எப்படி காசு சேர்ப்பார்கள் என்பதை கண்ணால் பார்த்து இருக்கிறேன்.  குருவிகளிடம் பங்கு கேட்கும் கோட்டானாக ஆக நான் விரும்பியதில்லை.

"உங்களுக்கு இதில எந்த கஸ்ரமும் இருக்காது.மகன்மார் எல்லாரும் வெளிநாட்டில தானே இருக்கிறாங்க..இந்த மாசத்தில இருந்து வாடகைய அஞ்சாயிரத்தால கூட்டலாம்னு இருக்கேன். ஈரோல பாத்தா கொஞ்சம் தான் வரும்.அத சொல்லலாம் எண்டு தான் வந்தனான்"

இமிடேடட் ஈழத்தமிழில் சிவஞானம் யோகநாதராசாவிடம் பேசினார்.  சிவஞானம் யோகநாதராசாவிடம் நெருக்கம் காட்டுவதற்காக ஈழத்தமிழில் பேசுகின்றார் என்பது என் அவதானம்.

யோகநாதராசா முகத்தில் சலனமின்றி சரி எனத் தலையாட்டினார்.   பார் கண்ணா பார், உனக்கு நான் மற்றவரைவிட குறைவாக வாடகைக்கு வீடு தந்து இருக்கின்றேன் என தனது பெருந்தன்மையை பறைசாற்றிக் கொள்வதற்காகத்தான் சிவஞானம் என்னை உடன் வரச்சொன்னார் என்பது புரிந்தது.

'பிறகு,மகன்மார ப்ரான்ஸில இருந்து நல்ல வைன் போத்தில் ஒண்ட அனுப்ப சொல்லிவிடுங்களேன்?'

யோகநாதராசா அதற்கும் சரி என்றார். சிவஞானம் விடைபெற்றுக்கொள்ள யோகநாதராசா என்னை இருந்துவிட்டு போக சொன்னார்.

'மகன்மாரோட விசாவ ரிஜெக்ட் பண்ணிட்டாங்க கார்த்தி,எப்ப கலைச்சுவிடுவாங்கன்னு பயந்துகொண்டு கள்ளமா இருக்கிறாங்க. இதுல .போன ஒரு வருசத்தில நாலு தரம் வாடகைய கூட்டிறாங்க , என்ன செய்றதுன்டு தெரியல்ல.'  யோகநாதராசாவின் கண்கள் கலங்கின.