Tuesday, April 02, 2013

ஒரு வாளி ஆக்சிஜன் - மொழிப்பெயர்ப்பு நெடுங்கதை (பகுதி 1)

Fritz Leiber எழுதிய A Pail of Air என்ற அறிவியல் புனைவு சிறுகதையின் தமிழாக்க முயற்சி
----
இன்னும் ஒரு வாளி காற்று தேவைப்பட்டது என்பதற்காக அப்பா என்னை அனுப்பி இருக்கின்றார். வாளி முழுவதும் அள்ளப்பட்ட காற்று அத்தனையும், அதைப் பார்த்த பின்னர், என் விரல்களின் வழியே வழிந்து ஓடியது. உங்களுக்குத் தெரியுமா, நான் முதலில் அது ஓர் அழகான இளம்பெண்ணாகத்தான் இருக்கும் என  நினைத்தேன். ஆம் காரிருளில் மின்னும் அழகான இளம்பெண்., எதிரே இருந்த கட்டிடடத்தின் ஐந்தாவது தளத்தில் இருந்து என்னைப் பார்த்தாள். அந்த ஐந்தாவது மாடி, உறைந்த வெண்ணிற காற்றுப் போர்வையினுள் மேலாக இருந்தது.

இதற்கு முன்னர் எந்த ஓர் இளம் பெண்ணையும் நேரில் நான் பார்த்தது கிடையாது. பழைய நாளிதழ்களில் பார்த்து இருக்கின்றேன்.
என் வாழ்க்கையில் பெண்கள் என்றால் என் தங்கை , அவளும் குழந்தை, அம்மா சுகவீனமானவர்,அம்மாவின் நிலை படு துயரமானது. இந்த நிலையில் அந்த இளம்பெண்ணைப் பார்த்ததும் பயம் கவ்விக்கொண்டது, வாளியை தவறவிட்டேன்.

 நான், என் அம்மா , அப்பா, குட்டித்தங்கையைத் தவிர இந்த உலகத்தில் இருக்கும் அனைவரும் இறந்துவிட்டனர் எனும்பொழுது, யாருக்குத்தான் பயம் வராது. இருந்த போதிலும் அதைப் பார்த்ததற்காக நான் வியப்படைந்து இருக்கக்கூடாது. நாங்கள் இதைப்போல் அடிக்கடி சில விசயங்களைப் பார்ப்போம். அம்மா, கண்களை இடுக்கிக் கொண்டு, ஏதோ ஒன்றை இருப்பதாக நினைத்துக் கொண்டு, பயந்து வீறீட்டு எங்கள் கூட்டின் போர்வைகளை தன் பக்கம் இழுத்து அதனுள் ஒடுங்கிக் கொள்வார். அம்மாவின் நிலை இயற்கையான ஒன்று, சில சமயங்களில் அப்படி நடந்து கொண்டுதான் ஆக வேண்டும் என அப்பா சொல்வார்.

திரும்ப வாளியை எடுத்துக்கொள்கையில், அந்த கட்டிடத்தைத் திரும்பப் பார்த்தேன். அம்மா ஏன் அடிக்கடி அப்படி பயப்படுகிறார், என்பதற்கான காரணம் கிடைத்தது. எதிர் கட்டிடத்தில், இப்பொழுது அந்த இளம்பெண் இல்லை, வெறும் வெளிச்சம், வானில் இருந்து குதித்த ஒரு குரூரமான குட்டி நட்சத்திரம், காற்று வெளியற்ற பூமி, ஏன் சூரியனை விட்டு விலகியது என்பதை ஆராய வந்திருப்பதைப் போல, திருட்டுத்தனமாக  மெல்ல ஒரு சன்னலில் இருந்து அடுத்த சன்னலுக்கு நகர்ந்து கொண்டிருந்தது. ஒரு வேளை சூரியனின் பாதுகாப்பற்ற பூமியை வேட்டையாட வந்த ஒன்றாக இருக்குமோ

கொஞ்சம் திகிலைக் கொடுத்தது, நடுங்கியபடியே நின்றேன். கால் பாதங்கள் அப்படியே உறைந்துபோனதைப்போல இருந்தது, உறுதியான தலைகவசத்திற்குள்ளும் உறைவதைப்போல உணர்ந்தேன். இருந்தாலும் தொடர்ந்து அங்கு என்னை இருக்க வைக்காமல் புத்தி கூட்டிற்கு போகவைத்தது.

அடுத்தச் சில நிமிடங்களில் , தொங்கிக் கொண்டிருந்த 30 கெட்டியான போர்வைகளையும் தரைவிரிப்புகளையும் கடந்து எங்கள் கூட்டிற்கு வர வேண்டும், கூட்டினுள் இருந்து காற்று வெளியேறுவதைத் தடுக்க, அப்பா, இப்படி போர்வைகளைத் தொங்க விட்டுள்ளார்.  எங்கள் கூட்டினுள் இருந்து வரும் கடிகாரங்களின் சத்தம் கேட்க கூடு நெருங்கி விட்டது என்பதை உணர்ந்தேன். பயம் இல்லை என்றாலும் அந்தக் காட்சியின் நினைவுகள் அசௌகரியமாகத்தான் இருந்தன். அலுமினியத்தால் ஆன அந்த கடைசி போர்வையை விலகிக்கொண்டு கடைசியாக எங்கள் கூட்டிற்குள் வந்து சேர்ந்தேன்.

தொடரும் . இரண்டாம் பகுதி