பேய் - ஒரு நிமிடக்கதை
பேய்கள் , பிசாசுகளைப் பற்றி நண்பர்கள் சொல்லும்பொழுது எல்லாம் எனக்கு சிரிப்புதான் வரும். அவர்களிடம் பேயை நேரில் பார்த்து இருக்கிறீர்களா எனக் கேட்டால், பார்த்தது இல்லை என்பார்கள்., அட குறைந்த பட்சம் கேட்டாவது இருக்கிறீர்களா என்றால் அதுவும் இல்லை ஆனால் எல்லோரும் சொல்லும் ஒரே பதில், வெவ்வேறு தருணங்களில் உணர்ந்து இருக்கிறோம் என்பதுதான்.
இந்த புதுவீட்டுக்கு வந்ததில் இருந்து ஒரு பிரச்சினை, வீட்டினுள் சில உருவங்களைப் பார்க்கின்றேன். உருவங்களை வர்ணிக்க முடியவில்லை, ஆனால் என் உயரத்திற்கும் அகலத்திற்கு இருக்கும்படி சிலவைகள் நடமாடுகின்றன. சத்தம் எதுவும் எழுப்புவதில்லை, என்னைத் தொந்தரவும் செய்வதுமில்லை. முதலில் அசந்த தூக்கத்தில் வரும் கனவுகளோ என நினைத்தேன். சிறு வயது முதல், எனக்கு விவரிக்கப்பட்ட உருவங்களை கனவுகளின் வழியே அடிக்கடிப் பார்த்து இருக்கின்றேன். ஆனால் இவை கனவுகள் அல்ல,
நான் தெளிவாக இருக்கும்பொழுதே, அறையினுள் அங்கும் இங்கும் போய் வருகின்றன. பிரச்சினை தராத விசயங்கள் பேயாக இருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை என தொடர்ந்து எனக்கான கல்லூரிப் பாடங்களைக் கணினியின் வழியாக கேட்டுக்கொண்டிருந்தேன்.
மறுநாள் வெளியே என்னைக் கூட்டிச் செல்ல வந்த நண்பனிடம்,
“இந்த அறையில் சில உருவங்களைப் பார்க்கின்றேன், ஒரு வேளை பேயாக இருக்கக்கூடுமோ”
“சொல்லுறேன்னு கோவிச்சுக்காதே, பிறவியிலேயே கண்பார்வை தெரியாத உனக்கு எப்படி உருவங்கள் தெரியக்கூடும்” என சிரித்தான்
அவன் குரல் வந்த திசையை நோக்கி நான்கு உருவங்கள் கைநீட்டுவது போலத் தெரிந்தது.