Thursday, December 13, 2012

ஒமேகா கவிதைகள் - (கவிதை முயற்சி)

அம்முவும் இணையமும் அற்றத் தருணங்களில் உதித்த கண நேரக் கவிதைகளின் தொகுப்பு இங்கே !!!
---
சுக்கிரச்சாரியர்கள் அழிவதில்லை 
இந்திரர்களும் அழிவதில்லை 
தீர்வு இதற்குள் தான் 
ஒளிந்திருக்கிறது !!
---

நிறம் கருப்பு; ஊர் மன்னார்குடி;
தேவரா ! எனக்கேட்டான் ஒருவன் ...
கம்யூனிஸ்ட் பெரியார் பார்த்த மற்றவன் 
தேவேந்திரரா ! என்றான் 
குருக்கள் என்றேன் 
கேட்டவனெல்லாம் அடிமையானான் !!

---
தினமும் சுவாசிக்கின்றேன் !!
ஒரு நாளும் சலித்ததில்லை ...
உன்னைப் பார்ப்பதைப் போலவே !!
---
இலக்கியம் - 
கதைக்கும் கவிதைக்கும் இடையில் வரும் காதல் !!
---

உன் சிதறிய வார்த்தைகளை
எடுக்கிறேன்,
கோர்க்கிறேன்,
தானாகவே எழுதிக் கொள்கிறது
கவிதையாக !! 
(எங்கேயோப் படித்ததை செதுக்கியது )

---

யுகங்களுக்கு ஆண்டுகளில் கணக்கு சொன்னவர்கள் பொய்யர்கள் !! 
அவர்கள் காதலித்து இருந்தால்
நொடிகளில் சொல்லி இருப்பார்கள் !!

--- 

பிசாசுகளுக்கு தேவதைகள்
பிறப்பதைப் போல !!.
மனைவிகளுக்கு குழந்தைகள் 
பிறக்கின்றன!! 
தேவதைகளுக்காக பிசாசுகளை
பொறுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது!! - ஆதர்ச அப்பாக்களின் பார்வையில் இருந்து (கருத்து நான் - எழுத்து ஜென்Ashok)

---
சேர்ப்பதில் மட்டும் அல்ல கவிதையின் ஆழம் ... 
வார்த்தைகளை நீக்குவதிலும் தான் !! 
வாழ்க்கையைப் போலவே !!

---

குழூஉக்குறிகள் சுவாரசியத்தை இரட்டிப்பாக்கும்
ஒரு விரல் வைத்து ஓராயிரம் முத்தங்கள் கொடுப்பது 
உனது “லைக்குகள்” மட்டும் !! - முத்தங்களை வாங்க மட்டுமே தெரியும் !! 
பெறுவதிலேயே கொடுக்கப்பட்டும் விடுவதால்
தனியாக வழங்கவேண்டும் என்பதில்லை. 
அவள் கொடுப்பதை நிறுத்தினாள், நான் ஆரம்பித்துவிட்டேன்!!! 
குழூஉக்குறிக்களாக !!!


Saturday, December 08, 2012

குழூஉக்குறிகள் - சிறுகதை

தேவதைகளைப் பெற்றெடுத்தவுடன் மனைவிகள் பிசாசுகள் ஆகிவிடுகின்றனர் !! தேவதைகளுக்காக பிசாசுகளைப் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது.

என் குழந்தை அஞ்சலிப்பாப்பா
”கார்த்திபா, கார்த்திபா “      என்றபடி தனது பிஞ்சு மணிக்கட்டை காட்டி, சிணுங்கிக் கொண்டேஎன்னிடம் வந்தாள். அம்முவிற்கு கோபம் வந்தால், மணிக்கட்டில்தான் இரண்டு விரல்களை வைத்து சுள்ளென அடிப்பாள். காதலித்தக் காலங்களில் நானும் அடி வாங்கி இருக்கிறேன்.

அஞ்சலிப்பாப்பாவிற்கு ஜனவரியில் மூன்று வயது முடிகிறது. குழந்தைகளின் அற்புதமான காலக்கட்டம், இரண்டரை வயதில் இருந்து நான்கு வயது வரையிலான ஒன்றரை ஆண்டுகள்.  அந்தக் காலக் கட்டத்தில், பெண் குழந்தைகள் அம்மாவிடம் இருந்து விலகி, அப்பாவிடம் நெருங்கும் தருணங்கள் அலாதியானது.  பாப்பாவின் மழலைத் தருணங்களைப் படங்களாக்கி சேமித்துவைத்துக் கொள்வதுதான் எனது பொழுது போக்கு.
மனைவி, தன் கணவனின் குழந்தைப் பருவத்தைக் காண ஆண் குழந்தையையும் , கணவன், தன் மனைவியின் குழந்தைப் பருவத்தைக் காண பெண் குழந்தையையும் விரும்புவார்கள் என்பதை எங்கேயோப் படித்தது  என்னளவில் உண்மைதான்.

”ஏன் அம்மு, பாப்பாவை அடிச்சே”

“கார்த்தி , எல்லாம் நீ கொடுக்கிற செல்லம், பிரிட்ஜை தொறந்து சாக்லேட் எடுக்குறா... கொஞ்சவா சொல்ற.”

அம்மு கோபமாய் இருக்கிறாள்   என்பது , கார்த்தியுடன் வழக்கமாக வரும் பா விகுதி இல்லாதன் மூலம் தெளிவாகத் தெரிந்தது.  அஞ்சலிப்பாப்பா என்னிடம் நெருக்கமாக இருந்தாலும், என்னுடைய மேனரிசங்களை இமிடேட் செய்ய மாட்டாள். அப்படியே அம்முவைப்போலத்தான், அவளின் பெரிய குளிர்க் கண்ணாடியை எடுத்து மாட்டிக்கொள்வது, அவளின் செருப்பை மாட்டிக்கொண்டு நடப்பது, கார்டூன் பார்க்கும்பொழுது, இரண்டு கைகளையும் தாடையில் வைத்துக்கொள்வது , இடது கையை உபயோகப்படுத்தல் என அம்முவின் மினியேச்சர் வெர்ஷன் தான் அஞ்சலிப்பாப்பா. பாப்பாவிடத்து, நான் காணும் அம்முவின் குழந்தைக் காலத்தை, அம்மு சேட்டையாகப் பார்க்கின்றாள்.

அம்முவையும் நான் குழந்தையாகவே நடத்துவதால், ஒன்றும் சொல்லவில்லை, அவளைப் பார்த்து “சல்யூட்” எனச் சொல்லியபடி என் நெற்றியில் கைவைத்து ராணுவ வணக்கம் சொன்னேன். அது முத்தத்தைக் குறிக்கும் ஒரு ரகசிய சொல்.   கல்லூரியில் ஒன்றாகப் படித்தபொழுது, யாருக்கும் ஐயம் வராதபடி, வணக்கம் சொல்வதையே சங்கேதமாக மாற்றிக்கொண்டோம். சில சமயங்களில் பியானோ என்ற வார்த்தையையும் பயன்படுத்துவோம், அது ஹேராம் படத்தின் அசைவ எபெக்ட்.  வேறுசில வார்த்தைகளும் உண்டு, அவை மறந்துப் போய்விட்டன.

பாப்பாவின் வரவிற்குப்பின் , சுவாரசியம் கருதி, அம்முவிடம் சங்கேதமாகப் பேசினால் கூட, பத்துக்கு ஆறு தடவை திரும்ப சல்யூட் வராது. மீதி தடவைகளில் சல்யூட் கொடுக்காமல் நிஜமாகவே வந்து தந்துவிட்டுப் போய் விடுவாள்.  குறிப்பால் உணர்த்திக் குறிப்பாகக்  கிடைக்கும் மகிழ்ச்சியை இழந்து கொண்டிருக்கிறேனோ என யோசித்தது உண்டு.  அம்முவை தொடர்ந்து காதலித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றுதான் அவளைத் திருமணம் செய்தது, ஆனால் தனது தேவதைத் தன்மையைக் குழந்தையிடம் கொடுத்துவிட்டு தெரிவையாக இருக்கின்றாள்.

”நானும் பாப்பாவும் ரவுண்ட் போறோம், நீ வர்றீயா அம்மு”

”எங்கேயாவது போங்க, நான் வரல,”

குளிருக்கான உடைகளை  ஜம்மென்று அணிந்து கொண்டு, பாப்பாவை குழந்தை வண்டியில் வைத்துக்கொண்டு வெளியே வர,

“கார்த்தி, பனியில இறக்கிவிடாதே, சாக்லேட் வாங்கித் தராதே “ என்று அம்மு அறிவுறுத்தினாள்.

வழியில் கடைக்குப்போனோம்., பாப்பா சாக்லேட்டை கைக்காட்டினாள். அதன் அடையாளமும் ருசியும் தெரியும் , பெயர் தெரியாது.

சாக்லேட் சாப்பிட்டபடி நீண்ட நேரம் பனியில் விளையாடினோம். சாக்லேட்டிற்கு “ஒன்னுமில்ல” என்றப் புதியப் பெயரை பாப்பாவிற்கு கற்றுக்கொடுத்தேன்.  பனியில் விளையாடினோம் என்பது “வேடிக்கப்பார்த்துச்சு”  . என ஆனது.

அம்மா ஞாபகம் வந்துவிட்டது போல, தானாகவே வந்து வண்டியில் பாப்பா ஏறிக்கொண்டாள். போகும் வழியில் பனியில் விளையாடிய சுவடேத் தெரியாமல் பனித்துகள்களை எல்லாம் உதறியாகிவிட்டது. நல்ல பிள்ளைகளாய் வீட்டிற்குள் நுழைந்ததும் அம்முவிடம் ஓடிப்போய் கட்டிக்கொண்டது.  கிரிக்கெட் ஹைலைட்ஸ் பார்க்க நான் மடிக்கணினியை துவக்க, அம்முவும் பாப்பாவும் பேசிக்கொண்டு, கொஞ்சிக்கொண்டு , விளையாடிக்கொண்டு இருந்தார்கள். பேஸ்புக்கிலும் கிரிக்கெட்டிலும் இருக்கும்பொழுது, அவர்களுக்கிடையிலான உலகத்தைக் கவனிக்க மறந்துவிடுகின்றேனோ !!

அன்று மாலையும் , நானும் பாப்பாவும் வெளியேப்போக கிளம்பிக் கொண்டிருக்கையில், அம்மு,

”கார்த்திபா, நானும் ஒன்னுமில்ல சாப்பிட, வேடிக்கப்பார்த்துச்சு விளையாட வர்றட்டா ” என்றபடி எனக்கு சல்யூட் வைத்தாள்.  பாப்பாவும் அதை இமிடேட் செய்தது.

பகிர்ந்து கொள்ளப்படும்  குழூஉக்குறிகள் அருஞ்சொற்களாகின்றன. தேவதைகளின்  அம்மாக்களும் தேவதைகள்தான்,  எப்பொழுதும் தேவதைகளுக்குள் ரகசியங்கள் இருப்பதில்லை.  தேவதைகளை பனி மழையில் மனதிலும் கைபேசியிலும் படமெடுத்துக் கொண்டபடி, பாக்கியம் பெற்ற ஒரு சேவகனாகப் பின் தொடர்ந்தேன்.




Thursday, December 06, 2012

கொஞ்சும் சாதி , கொஞ்சம் வன்முறை - சிறுகதை


காமம், காதல் அதற்கடுத்து,  சாதி, வன்முறை என்ற வார்த்தைகள் கூட சமயங்களில் கிளுகிளுப்பைக் கொடுக்கும்.  என் கடைசித் தம்பியோட திருமண வரவேற்பு பலகைகளில் சுயசாதிப் பெருமை அடித்த என் மற்றோர் தம்பிக்கான சாதி  அபிமானம் கூட அத்தகைய கிளுகிளுப்புதான்... ”சும்மா ஓட விட்டு ஓட விட்டு அடிச்சோம்”  சூனாபானா மாமாவின் வன்முறை வேறு வகையான கிளுகிளுப்பு.   அம்மு, கண்ணம்மாவாய் இருந்து காளியாத்தாவாய் மாறியிருக்கும்  மாலைப்பொழுதுகளில் , நானும் இது மாதிரியான சமூகம் சார்ந்த சிந்தனைகளில் என்னை உள்ளிழுத்துக் கொள்வேன்.

கடலையும் அரட்டையும் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்த பேஸ்புக் மாதிரியான இணையத் தளங்களில் நடைபெறும் அரசியல் சண்டைகள் பார்க்க நன்றாகத்தான் இருந்தன. அரசியல் அபிமானங்களையும் மீறி , டமில் டம்ளர்ஸ் , டிராவிட சொம்புகள் என ஒருவொருக்கொருவர் கொடுத்துக் கொண்டிருந்தப் பட்டப் பெயர்களைப் படிக்கும்பொழுது குபீர் சிரிப்பு வரும். சோத்து மூட்டையை எடுத்துக் கொண்டு எந்த இழையில் சண்டை நடக்கிறதோ அதை கொட்ட கொட்ட விழித்துக் கொண்டு வேடிக்கைப்
பார்த்துக் கொண்டிருப்பேன். ஆனால் சமீப காலங்களில் சாதியும் சாதி சார்ந்த விசயங்களும் நீரில் அமுக்கியப் பந்தைப்போல மேல் எழுந்து வந்து கொண்டே இருந்ததைப் பார்க்கையில் மனிதனுக்கும் தொழில் நுட்பங்களுக்கும் இடையில் நடைபெறும் கலப்பில் புதிய சமூகப்பரிமாணங்கள் உருவாகும்  என்ற கூற்று பொய் என நினைக்கத் தோன்றியது. டிராவிட் பாய்ஸின் வழிபாடு
வேறுவகையில் இருந்தாலும் இந்த சாதி விசயத்தில்  முன்மாதிரியானவர்கள், பொதுவில் எவ்வளவு வைத்து சலித்தாலும் , கொக்கிப்போட்டாலும் அவர்களின் சாதி அடையாளங்களைக் காட்டிக்கொள்ள மாட்டார்கள். நான் பார்த்தவரை, பெரும்பாலானா டிராவிட் பாய்ஸுக்கு  சாதி அபிமானமும் கிடையாது.

நாங்கள் ஐஎஸ்ஒ பிரண்டட் சிங்கம், நாங்கள் பேண்ட் போட்ட பரம்பரை , சோழனின் அந்தப்புரத்தைக் கட்டியவர்கள், புலியைப் புணர்ந்தவர்கள், எக்ஸட்ரா எக்ஸட்ரா அடைமொழிகளுடன் இருந்தவர்கள் இருந்த
ஏதோ ஒரு டமில் லோட்டா குழுமத்தில் எனது கல்லூரிக்காலத்தைய நண்பர்கள் கூட அட்டைக்கத்தி சுற்றிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். கல்லூரிக் காலங்களைப் பற்றி அடுத்தப் பத்தியில் பார்க்கும் முன்னர்
லோட்டாவுடன் சம்பந்தபட்ட கதை ஒன்று சொல்கிறேன் கேளுங்கள்.  லோட்டா என்பது டம்ளருக்கும் சொம்புக்கும் இடையிலான ஓர் அளவில் இருக்கும் பாத்திரம் நான் சிறு வயதில் லோட்டாவில் தான் காப்பி குடிப்பேன். அப்படி ஒரு நாள் குடித்துக் கொண்டிருக்கும்பொழுது,  டிசம்பர் 6 ஆன்று சாக்லேட் கொடுத்து கொண்டாடிய பக்கத்து வீட்டு வாசுதேவன் சாரின் மகன் கிச்சா கேலி செய்யப் போக, பேச்சு தடித்து, கிச்சா கோபத்தில்
“நீங்கல்லாம் மாட்டுக்கறி சாப்ட்றவா, அம்மா சொல்லிருக்கா” எனச் சொல்லப்போக , அதைக் கேட்ட என் அம்மா,
 “நாங்க யார் தெரியுமா, ஜமீன் பரம்பரை, எங்களைப் போய் எப்படி மாட்டுக்கறி சாதியோட சேர்க்கலாம்" என சண்டைக்குப் போய்விட்டார்.  இதற்காகவே சூனாபானா மாமா வை எஸ்டிடி போட்டு அழைத்து, அவரும் மருது பாண்டியர் படம் போட்ட காரில் வந்து இறங்கிய பின்னர் தான் அம்மாவின் ஆத்திரம் தீர்ந்தது. காரைப் பார்த்தப் பின்னர், வாசுதேவன் சாரின் குடும்பம் கொஞ்சம் குழைவாகவே நடந்து கொண்டது. எனக்கு தினமும் ஹிண்டு பேப்பர் கூட படிக்கக் கொடுப்பார்கள்.

இப்பொழுது கல்லூரிக்காலக் கதை, நான் மதுரையில் படித்த, 50 வருடங்கள் பழமையான பொறியியற் கல்லூரியில் இன்றைய நிலை எப்படி எனத் தெரியவில்லை. ஆனால் அப்பொழுது, உள்ளே நுழையும்பொழுதே மூக்கு விடைப்பு,  காது அடைப்பு , உதட்டுப் பிளவை வைத்தே சாதியைக் கண்டுபிடிப்பார்கள். அப்படி ஏதுமில்லாதவர்கள் வெளுப்பாக இருந்தால் பகவத் கீதைப் படிக்கும் பேராசிரியர்களின் கீழும், என்னை விட கருப்பாய் இருப்பவர்கள் , விடுதிக்குப்பின்னால் இருக்கும் காட்டில் அல்லேலூயா படிக்கவும் போய்விடுவார்கள். இது எல்லாம் வந்த ஒரு மாதத்திலேயே நிகழ்ந்துவிடும்.

 அம்மாவைப்போல அல்லாமல், எல்லா சாதிக்காரனின் விழாக்களிலும் சாம்பார் வாளித்தூக்கும் என் அப்பாவின் தாக்கம் எனக்கு இருந்தது. காமராஜர் இறந்த பிறகு டிராவிட மேனாக மாறியவர்.

”நம்மா சாதிக்காரன் அப்படின்னு சொல்லிட்டு வரவனை மட்டும் என்னக்குமே நம்பவே நம்பாதே” என அடிக்கடி சொல்லுவார்.

 பிரபல மருத்துவமனையில் மூக்குவிடைப்பு முதலாமாண்டு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பில் பிரியாணிக்காக கலந்து கொண்டேன். சுபாஷ் சந்திரபோஸ்  ஆரம்பித்த கட்சியின்  தமிழ்நாட்டுப்பிரிவின் இருபத்து எட்டாவது பிளவின் தலைவர் வந்து  ”கத்தியையும் தீட்டவேண்டும், புத்தியையும் தீட்டவேண்டும்” என நீண்ட உரையாற்றியதால் பிரியாணி தாமதமாகத்தான் கிடைத்தது. நாட்டு நலப்பணித் திட்டத்தின் மாணவர் தலைவராக இருந்தவரும் வந்து இருந்தார். அவருக்கும் மூக்கு விடைப்பாகவே இருந்தது.

“அடுத்த வாரம் செஷையர் ஹோம் போறோம், நம்மாளுங்க எல்லாம் வந்துடுங்க”

செஷையர் ஹோம் போன பிறகுதான் என்.எஸ்.எஸ் தலைவராக இருப்பதின் பலன்கள் தெரிந்தது. எல்லாப் பெண்களும் அவரைச் சுற்றியே இருந்தனர். அவரைச் சுற்றி எத்தனைப் பெண்கள் இருந்தனரோ அதே அளவிற்கு இன்னொருவரைச் சுற்றியும் கூட்டம் இருந்தது. அந்த சீனியர் அண்ணனின் அறைக்கும் சென்று இருக்கிறேன். பெரிய அளவிலான அம்பேத்கார் படம் இருக்கும்.  என்னை கேண்டின் அருகேப்பார்த்துவிட்டால், டீ பஜ்ஜி வாங்கிக் கொடுப்பார்.

இரண்டு சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களும் சம அளவிலான பலத்துடன் இருந்ததால் என்.எஸ்.எஸ் ற்கு இரண்டு தலைவர்கள் என பிற மாணவர்கள் சொன்னார்கள். பெரும்பாலும் விடுதிக்கு வெளியே இருக்கும் கவுண்டர் கடையில் ஒன்றாக இருப்பார்கள். ஒன்றாக திரைப்படம் போவார்கள். அவரவர் வண்டிகளின் பின்னால், நாங்கள் ஏங்கி ஏங்கிப் பார்க்கும் பெண்கள் அமர்ந்து இருப்பார்கள். சில நாட்களில் ஜோடிக் கூட மாறி இருக்கும்.  மூக்குவிடைப்பு அண்ணனை விட , டீ பஜ்ஜி வாங்கிக் கொடுப்பதால், மாட்டுக்கறி சாப்பிடுபவராக இருந்தாலும் டீபஜ்ஜி அண்ணனையே
 பிடித்து இருந்தது.

  ”நம்ம பசங்களிலேயே நீ கொஞ்சம் தெளிவா இருக்கடா” என டீபஜ்ஜி அண்ணன் பாராட்டுவார். அடையாளச்சிக்கல்களை நான் பொருட்படுத்தியதில்லை.

கல்லூரியின் ஆண்டு விழாவில், நாட்டு நலப்பணித் திட்டத்திற்கான கொடுக்கப்படும் தங்கப்பதக்கம் டீ பஜ்ஜி அண்ணனுக்கு கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இறுதியாண்டு மாணவர்களின் விடுதியில் பெரிய கலாட்டா நடந்தது. சண்டையில் குறுக்கே வந்தவர்களுக்குப் பலத்த அடி.  தொடர்ந்த ஆண்டில்  டீ-பஜ்ஜி அண்ணன் கைக்காட்டிய ஆள் தலைவராக நியமிக்கப்பட்டார்.  புதியத் தலைவருக்கு நானும் “நம்மாள்” என அடையாளம் காட்டப்பட்டேன். டீபஜ்ஜியை விட புகழ், கடலை, அதிகாரம் சுவையாக இருந்தது. கடைசி வருடத்தில் நானேத் தலைவரானேன்.

எனக்கு முந்தையத் தலைவர், எனக்கடுத்து வருபவர் “நம்மாளாகத்தான்” இருக்கனும் என உத்தரவிட்டிருந்தார்.  அடையாளச்சிக்கல்கள் தொலைந்து, அடையாளமே இல்லாது ஆனது, அதுதான் பிடித்து இருந்தது.  எல்லோருக்கும் நல்லப்பிள்ளையாய் ஆன எனக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது, எனக்கடுத்தத் தலைவராக , மூக்குவிடைப்புகளாலும், நம்மாட்களாலும் பாசத்தால் குளிப்பாட்டப்பட்டேன்.  அதிகாரத்தை எட்டும் பொழுது, அற்பத்தனமாய் தொடரும் விசயங்களைக் கொஞ்சமேனும் அடித்து நொறுக்க வேண்டும்.
எனக்கடுத்த தலைவனாய், நான் என்ன சொன்னாலும் கேட்ட, எதிர்பார்ப்பற்ற ஒருவனைத் தலைவனாக்கி விட்டேன்.  அவனோட அறையில் பெரியார் படம் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

எனக்கடுத்து என்.எஸ்.எஸ் தலைவனாக ஆன ஜூனியர் ,பத்து வருடம் போராடி காதலித்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான். தன்னால் முடிந்தவரை சிலக்கிராமத்து மாணவர்களை பொறியியற் படிப்பு படிக்க வைக்கின்றான். என்.எஸ்.எஸ் மூக்குவிடைப்புத் தலைவரும், டீபஜ்ஜி அண்ணனும் மீண்டும் ஒன்றாகி   தீவிரமாக ஒரு குழுமத்தில் தமிழ் தேசியம் பேசிக்கொண்டிருந்தார்கள், சொந்த சாதியில் தான் பெண் கட்டனும் என்ற பிரச்சினை பெரிய அளவில் ஆன சில வாரங்களில் அவர்கள் பேசிக்கொள்வதில்லை . சாதி சார்ந்த தேசியம் அமைக்க முடிவு செய்துவிட்டார்கள் போலும்.

அவர்கள் இருவருடன், எக்ஸ்ட்ரீம் டம்ளர்ஸ், லோட்டாஸ், கொஞ்சம்  டூப்ளிகேட் டிராவிட் பாய்ஸ்  என வன்முறைகளை வார்த்தைகளில் பரப்பிக் கொண்டிருந்த  ஒரு நூறுப் பேரை பேஸ்புக்கில் இருந்து தூக்கிவிட்டுக் கொண்டிருக்கும்பொழுது,  அம்மு மீண்டும் கண்ணம்மாவாய் மாறி கூப்பிட்டாள்.

அம்முவைப் பிடித்தக் காரணங்களில் ஒன்று இதுவரை நான் எந்த சமூகத்தைச் சேர்ந்தவன் எனக் கேட்டதில்லை,அவள் எந்த சமூகம் எனவும் எனக்குத் தெரியாது.  இந்தக் கதையைப் படித்துக் கொண்டிருக்கும் நீங்கள் அவளிடம் எனக்கு மூக்கு விடைப்பாக இருக்கும் என்று போய் சொல்லிவிடக்கூடும். நீங்கள் இந்திய தேசியவாதியாக இருக்கலாம், தமிழ் தேசியவாதியாக இருக்கலாம், திராவிட தேசியவாதியாகக் கூட இருக்கலாம். சாதியால் என்றைக்கும் தேசியம் என்ன, சின்ன ஜமீன் கூட வாங்க முடியாது என உங்களுக்குத் தெரிந்துருப்பதால் சொல்ல மாட்டீர்கள்.  அப்படியே சொல்லிவிட்டாலும் பிரச்சினையில்லை,  ஏனெனில் இந்தக் கதையில் வரும் சம்பவங்கள் இடம் பொருள் ஏவல் எல்லாம் ஒரு வேளை கதைக்காக மாற்றப்பட்டிருக்கலாம்.

----


Wednesday, December 05, 2012

கசங்கியத் தாளில் எழுதப்பட்டிருந்த கதை - சிறுகதை


கையில் சிக்கும் தாள்களில் எழுதப்பட்டிருப்பதை எல்லாம் படிக்கும் கார்த்திக்கு அன்றும் ஒரு கசங்கிய காகிதம் சிக்கியது,
அந்த சிக்கிய காகிதத்தில் எழுதப்பட்டிருந்ததை அவனுடன் நீங்களும் வாசியுங்கள்.
----
ஒத்திப்போடுவது என்பது தப்பித்தலுக்கான வழி.  முடிவு யாருக்கு
வேண்டுமோ அவரை, ஓர் உறுதியற்ற நிலையிலேயே அல்லாட வைத்தல்.
அது நேரடி நிராகரித்தலை விட அதிகமான வலியைக் கொடுக்கக்கூடும்.
கிடைக்குமா கிடைக்காதா என்றத் தவிப்பை நீட்டிக்க வைத்து சில நாட்களோ , மாதங்களோ ,வருடங்களோ,கழித்து சாதகமான முடிவை சொன்னால் பிரச்சினை இல்லை, ஒரு வேளை எதிர்மறையாய் இருந்தால்
பீலிபெய் சாகாடும் போல ஆகிவிடுமே!! சில முடிவுகளை வெட்டு ஒன்று துண்டு இரண்டு என எடுக்க முடியாது.

ஆம் என்பதற்கும் இல்லை என்பதற்கும் இடையில் கோடிக்கணக்கான புள்ளிகள் இருக்கின்றன. அத்தகைய ஒரு புள்ளி தான் ஒத்திப்போடல்.

அம்முவிற்கும் எனக்கும் ஒன்றரை தலைக்காதல் ஓடிக்கொண்டிருக்கிறது. அவளுக்கு என்னை அப்படியே பிடித்து இருக்கின்றது. எனக்கும் முழுதாகத்தான் பிடித்து இருக்கின்றது, ஆனால் கடந்தகாலங்கள் நிகழ்காலங்களுக்கு மொழிப்பெயர்க்கப்பட வேண்டியிருப்பதால், பிடித்ததில் பாதி  காணாமல் போய்விடுகிறது. எனக்குப் பெண்களைப்பிடிக்கும்,
அதுவும் சாண் ஏறி முழம் சறுக்கினாலும், மீண்டும் மீண்டு வரும் ஃபீனிக்ஸ்களை அதிகமாகவேப் பிடிக்கும்.

பதின்மங்களிலும் ஆரம்ப 20 களிலும், கட்டினால் இவளைக் கட்டனுமடா என்ற வகையில் கற்பனைசெய்து வைத்திருந்த லட்சியக் கனவு தேவதைதான் அம்மு. இடையில் வந்த சிலப்பல மாதிரி அம்முக்களால், தற்கொலை செய்து கொண்ட கனவு லட்சிய தேவதை மீண்டும் உயிர்த்தது கடைசி சில
மாதங்களாக.

ஆண்கள் பக்கம் பக்கமாக எழுதி சொல்லும் உணர்வுகளை பெண்கள் ஒரு வரியில் எழுதிவிடுவார்கள். ஒரு இனிய மாலைப்பொழுதில் கண்ணுக்குக் கண்ணாகப் பார்த்து காதலிக்கின்றேன் என்ற ஒரு வார்த்தை கவிதையையும் எழுதி விட்டாள்.

எனக்கு வந்த நிராகரிப்பான “உங்களை நான் பிரண்டாத்தான் நினைச்சேன்” மாதிரியான கேனைத்தனமான விசயங்களை எல்லாம் சொல்லி அம்முவைத் தட்டிவிட விருப்பம் இல்லை.

உண்மைகளை அப்படியே சொல்லலாம், கொஞ்சம் தற்குறிப்பேற்றி கதைகளாகவும் சொல்லலாம். பெண்கள் மென்மையானவர்கள் என்று சொல்வதும் ஆணாதிக்கம் என்றாலும், அம்மு உண்மையிலேயே மென்மையானவள், மழலைக்கு ஊசிப்போடும்  பொழுது, கொஞ்சம் மழலைத்தனங்களை முகத்தில் கொண்டு வந்து, வலிகுறைவாக இருக்கும்படி ஊசி போடுவது எப்படி என்பது மருத்துவருக்குத் தெரியும்.


சில வரிகள் கொண்ட கீழ்க்காணும் ஓர் உருவகக்கதை எழுதினேன்,

தலைமுறையாய் தொடரும் கிளிகளின் ஏமாற்றத்தை தவிர்க்க இது இலவமரம் , இங்கிருப்பது எல்லாம் 
இலவம் பஞ்சின் காய்கள் என்று அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது. அதன் பின்னரும் கிளிகளின் வருகை தொடர்ந்ததைப்
பார்த்த மரம், இந்தக் காய்கள் என்றுமே கனியாகாது என்றும் எழுதிவைத்தது. அப்படியும் ஒரு கிளி வந்து காத்துக் கொண்டிருந்தது. 
இந்தக் கிளியைக் காயப்படுத்தக் கூடாது என நினைத்த மரம், இலவங்காய்களைப் பழுக்கவைக்கவும் இல்லை, 
பஞ்சாக மாற்றவும் இல்லை. Indefinitely wait shall continue !! 

கதையை அவளின் மின்னஞ்சலுக்கு அனுப்பினேன். மனதில் இருந்து வரும் பதில்கள் சடுதியில் வரும், உடனடியாக அம்முவிடம் இருந்து மின்னஞ்சல்

”அவனுக்காக சிந்திய முதல் துளி கண்ணீர் கூட அழகுதான்... :) “

கடைசியில் இருக்கும் சிரிக்கும் பொம்மை  ஏகப்பட்ட அர்த்தங்களைக் கொடுத்தது.
-----

படித்து முடித்த கார்த்திக்கு இது சிறுகதையா, வெறும் நாட்குறிப்பா, தொடர்கதையின் ஓர் அத்தியாயமா எனத் தெரியவில்லை. வழக்கமாகப் படித்தவுடன் காகிதங்களைத் தூக்கி எறிந்துவிடுபவன், இந்தக் கசங்கிய காகிதத்தை சீர்படுத்தி பத்திரப்படுத்திக் கொண்டான்.





Sunday, December 02, 2012

குறட்டை - சிறுகதை


நான் தூங்கப்போவதற்கு முன் என்னைக் கட்டிக்கொண்டுப் படுத்து இருந்தவள், விடியற்காலையில் அடுத்த அறையில் இருந்த சோஃபாவில் சுருட்டிக்கொண்டுப் படுத்திருந்தாள். எனக்கு இது புதிதில்லை. இரவில் இந்தக் கட்டிலில் படுக்கும் பெண்கள், விடியலில் அடுத்த அறையில்தான் விழிப்பார்கள்.

அடுக்களைக்குச் சென்று அவளுக்கும் சேர்த்து காப்பி .
போட்டு எடுத்துக் கொண்டு அவளை எழுப்பினேன்.  படுத்தோம் எழுந்தோம் என்றில்லாமல் , என் வீட்டிற்கு வருபவர்களை, அவர்கள் ஒரு நாள் இருந்தாலும், ஒரு வாரம் இருந்தாலும் இளவரசிக்களைப் போலக் கவனித்துக் கொள்வேன்.

பெண்கள் உறங்கும்பொழுதும் கூட தேவதைகளாகத்தான் தெரிகிறார்கள். தேவதையாய் உறங்கிக் கொண்டிருந்தவள் எழுந்தபின் பத்ரகாளியைப்போல என்னை  முறைத்தாள். வெடுக்கென காப்பி கோப்பையை பிடுங்கிக் கொண்டவள்,

“கார்த்தி, உன்னிடம் இருக்கிற ஒரே பிரச்சினை, மனுஷியை ஒழுங்காகத் தூங்கவிட மாட்டாய்”

“அதற்காகத்தானே இரவை ஒன்றாகக் கழித்தோம்”

“நான் அதை சொல்லவில்லை, உன் குறட்டையை சொன்னேன், போனதடவையே, இனிமேல் உன்னிடம் வரவேக்கூடாதுன்னு நினைத்தேன், திரும்ப தவறு செய்துவிட்டேன்”

இவள் மட்டும் இல்லை, ஒவ்வொரு வார இறுதி தோழிகளும் சொல்லும் ஒரே பல்லவி இதுதான்.

தமிழ்நாட்டில் இருந்தவரை குறட்டை விடுவேனா இல்லையா எனத் தெரியாது.

ஒரு வேளை “புள்ள அசந்து தூங்கிட்டான்” என என் அம்மா சொன்னது குறட்டையை வைத்துதானோ !!

சுவீடனில் அறை நண்பன், என் குறட்டையப் பற்றி சொன்ன பொழுது நம்பவே இல்லை. ஒரு நாள் கைபேசியில் ஒளிஒலியும் காட்டிய பின்னர்தான் நம்பினேன். புல்லட்டில் ஆரம்பித்து, புல்லட் ரயில் கணக்காய் குறட்டை சத்தம் களை கட்டி இருந்தது. குறட்டையை குறை சொல்லிய நண்பர் ஒரே வாரத்தில் அறையை காலி செய்தார்.

அதன் பின் வந்தவர்கள் எல்லாம்,  குடியும் குடிசார்ந்தும் நண்பர்கள் அமைவதைப்போல குறட்டை சார்ந்த நண்பர்களாகவே அமைந்தார்கள். என்னளவிற்கு இல்லை என்றாலும் சுமாராக டிவிஎஸ் 50
அளவிலாவது வண்டியை ஓட்டிகொண்டிருந்தார்கள்.  பொதுவாக குறட்டையை நிறுத்துவது எளிது, ஒரு பக்க மூக்கின் மடலை லேசாக மூடி, சில வினாடிகள் வைத்திருந்தால், குறட்டை நின்று விடும். நான் அடுத்தவரின் குறட்டையை நிறுத்தக் கண்டுபிடித்த நுட்பம் அது.

“குறட்டை விடுபவர்கள் புத்திசாலிகள், நம்பகமானவர்கள். எல்லா வெற்றியாளர்களும் அற்புதமாக குறட்டை விடுபவர்கள், அலெக்ஸாண்டர் கூட  குறட்டை விட்டுத்தான் தூங்குவாராம் !! படுக்கையில் வீரியமானவர்கள்” என்று நான்  சொல்லும் கதைகளை நம்பினாலும்

“என் தூக்கம் போகின்றதே கார்த்தி, உனது குறட்டை மட்டும் இல்லாவிடில், என் மூட்டை முடிச்சுகளுடன் வந்து , உன் காலடியில் கிடப்பேன்”

 என்று சொல்லியபடி தனது உடுப்புகளைத் தேடி எடுத்துக்கொண்டு போன வாரம் வந்தவளைப்போல நேற்றிரவு வந்தவளும் கிளம்பிப் போனாள்.  நான் அரைத்தூக்கத்தில் இருக்கும்பொழுது, என் குறட்டையே எனக்குக் கேட்டு,
தூக்கம் கலையும். அப்படி இருக்கும்பொழுது முழுக்குறட்டையை கேட்கும் பெண்களும் பாவம் தான்.

ஓரிரவுத் தோழமைகளை  எனக்குத் தொடர எப்பொழுதும் விருப்பமிலாததால், குறட்டை காரணமாக சொல்லப்பட்டதை சாதகமாகத்தான் எடுத்துக்கொண்டேன்.  எனக்கு நெடுங்கால நட்பும் தேவையில்லை,
திருமணமும் தேவையில்லை. பெண்களுக்கு நம்மை பிடித்துவிட்டால் மடத்தை அடைய சாம பேத தான தண்ட அத்தனை முறைகளையும் பயன்படுத்தி எடுத்துக்கொள்வார்கள். ஒதுங்கி இருத்தலே நலம் என
தாமரை இலைத் தண்ணீர் போல இருக்கின்றேன்.

அடுத்த இரண்டு வாரங்களுக்கு கடும் பணிச்சுமை இருந்ததால், மதுவும் மாதுவும் அன்றி நகர்ந்தது. அலுவலகத்தில் கேத்தரீனா என்ற பெண் புதிதாக வந்து இருந்தாள். பெண் என்றாலே வசீகரம் தான். எனவே வசீகரமாக இருந்தாள் எனச் சொல்லத் தேவை இல்லை.  நான் அவளைப் பார்க்காத சமயங்களில் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள். வெறும் வெள்ளைத் தோல்கள் இருக்கும் இடத்தில்  மாநிறம் கொஞ்சம் அதிகமாகவே ஈர்க்கப்படும்தான்.

 சிலர் வாழ்க்கையில் வரும்பொழுது, பொழுது போக்கிற்காக செய்யும் சில விசயங்களை மறந்துவிடுவோம். கேத்தரீனாவைப் பற்றி அடிக்கடி யோசிக்க ஆரம்பித்தேன். ஆண்கள் ஒரு பெண்ணைப் பற்றி யோசிக்க ஆரம்பிக்கிறார்கள் என்றாலே காதல் என்று அர்த்தம்.  வெள்ளியிரவு அலுவலகம் முடிந்துப் போகையில் மாலை என்ன செய்யப்போகிறாய் எனக் கேட்டாள்.

குடித்துவிட்டு கும்மாளம் அடிக்கப்போகின்றேன் என்பதை சொல்லாமல், கௌரவமாய் பழைய கிரிக்கெட் வீடியோக்களைப் பார்க்கப்போகின்றேன் என்று பொய் சொன்னேன்.

“எங்கேனும் போய் சாப்பிடுவோமா “ எனக் கேட்டாள்.

சாப்பிட்டோம், குடித்தோம், நடமாடினோம், மீண்டும் குடித்தோம்.  வழக்கமாக மூன்றாவது சுற்றிலேயே, வீட்டுக்குத் தள்ளிக்கொண்டு வந்துவிடுவேன். இவளை அப்படி செய்ய மனது வரவில்லை. ரசித்துக் கொண்டிருக்கத் தோன்றியது. காமம் சாரா  காதல் அழகாக இருந்தது. அவளை வீட்டில் இறக்கிவிட்ட பின்னர், உதட்டைக் குவித்து முத்தம் தர வந்தவளுக்கு கன்னத்தைக் கொடுத்துவிட்டு, வாஞ்சையா தலையைக் கோதி வழியனுப்பி வீட்டிற்கு வந்தேன். மண்வாசனை, மழைச்சாரல் கொடுக்கும் உணர்வுகளை, கடும்பனியிலும் அனுபவித்துக்கொண்டிருந்தேன்.

அடுத்த வாரம் கோழிக்கறியும் சோறும் சாப்பிட என் வீட்டிற்கு வந்தாள், எதுவானாலும் காமம் சாரா காதலை மட்டுமேத் தரவேண்டும் என்று முடிவு செய்து இருந்தேன். வழக்கம்போல் ஏதாவது நடந்து, குறட்டையால் இவளைத் தொலைத்து விடக்கூடது என இருந்தேன்.

“ச்சிக்ஸ் அண்ட் சிக்கன் மேக் மை லைஃப் மோர் இண்டரஸ்டிங்” என்றதற்கு விழுந்து விழுந்து சிரித்தாள்.

தமிழ்த்திரைப்படம் ஒன்றை ஒன்றாகப்பார்த்தோம். கிரிக்கெட் பற்றி விளக்கினேன். ராமச்சந்திர குகாவின் புத்தகங்கள் ஒன்றைப் படிக்கக் கேட்டாள்.

“கார்த்தி, நீ மட்டும் கொஞ்சம் ஐரோப்பிய  நிறத்துடன் இருந்தால் என் தந்தையின் சாயலில் இருப்பாய்” என்றாள்.

அடடா இதுதான் காரணமோ !! தமிழ்ப் பெண்கள் மட்டுமல்ல, ஐரோப்பிய பெண்களுக்கும் அவரவர் தந்தைகள்தான் நாயகர்கள் போல....

அவள் சொல்லி முடித்ததும், நானே முத்தமிட்டேன். டாஸ் போடாமலேயே ஆட்டம் ஆரம்பித்தது. கிரிக்கெட்டில்தான் டிரா அசுவராசியமானது.ஆனால்  இங்கு சமநிலைதான் முக்கியம்.  விடியலில் கழுத்தைக் கட்டியபடி
நெஞ்சில் சாய்ந்து, யாரோ மூக்கின் ஒருப்பக்கத்தை மூடிவிடுவதைப்போல இருந்தது.

“என் குறட்டை உன்னைத் தொந்தரவு செய்யவில்லையா”  என்றேன்.

“உன் பார்வையைப்போல, பாவனையைப்போல உன் குறட்டையும் கூட என் அப்பாவைப்போல !!! ”

“ம்ம்ம்”

“அவரின் குறட்டை பக்கத்துவீட்டிற்கு கூட கேட்கும், என் அம்மா எங்களை விட்டுப் போனதற்கு காரணங்களில் அப்பாவின் குறட்டையும் ஒன்று , அவரை விட உன் குறட்டை கொஞ்சம் குறைவுதான்”

“ம்ம்ம்”

“இப்படி ஒரு பக்கம் மூக்கின் மடலை மூடினால் , குறட்டை நிற்கும்”

“ம்ம்ம்ம்ம்ம்ம்ம்”

 நான் சொன்ன ஒவ்வொரு ம்ம்ம் ற்கும் ஒரு முத்தத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தாள். இனி குறட்டையைப் பற்றியும் கும்மாளங்களைப் பற்றியும் நான் யோசிக்கவேண்டியதில்லை.
-------

Wednesday, November 28, 2012

ஆண்ட்ராய்ட் சொன்ன அம்மு கதை - சிறுகதை


வாசிக்கப்படும் புத்தகத்தின் கதாபாத்திரம் படிப்பவரின் மேல் காதலில் விழுவதைப்போல யாரேனும் ஒரு புதினம் எழுதவேண்டும் என டிவிட்டரில்
@Olligater என்பவர் ஆங்கிலத்தில் எழுதியிருந்தார்.

அதைப்படித்தவுடன் ஆரம்ப 2000 ஆண்டுகள்  நினைவுக்கு வந்தன. நீங்கள் கடை இருபதுகளிலோ , முப்பதுகளிலோ இருப்பவர் ஆக இருந்திருந்தால், கண்டிப்பாக யாஹூ மின்னரட்டையையும் அதில், நிஜம் போலவே பேசும் பொம்மை அரட்டைப்பெண்களையும் அறிந்து இருப்பீர்கள்.  முதல் பத்து வாக்கியங்கள் உங்கள் மேல் காதல் வசப்பட்டவர் பேசுவது போலவே இருக்கும். நானும் முதலிரண்டு முறை ஏமாந்து இருக்கின்றேன். பின்பு பொம்மையா, உண்மையா என அறிய, கண்டபடி தட்டச்சு அனுப்பினால், நன்றி என பதில் வந்தால் பொம்மை, திட்டி வந்தால் உண்மை.  அப்படியான ஒரு பொம்மை ஒன்று நம்மை நிஜமாகவே காதலிக்க ஆரம்பித்துவிட்டால் என்ன ஆகும் என்பதை வெட்டியான பொழுதுகளில் யோசித்ததுண்டு.

Die unendliche Geschichte என்ற ஜெர்மன் புதினத்தில் ஒரு வசனம் வரும்,

“நிகழ்வன எல்லாவற்றையும் கவனமாக எழுதி வைத்துக்கொள்” என்றதற்கு அவன் சொன்னான்,

“நான் எழுதுவது எல்லாம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றனவே”

இல்லாத ஒன்றை இருத்தல் காதலிப்பது சுவாரசியம் என்றால் இருத்தலை இல்லாத ஒன்று காதலித்தல் அதிசுவாரசியம்.  அப்படித்தான் ஆகிக்கொண்டிருக்கிறது. இலவசமாகக் கிடைத்ததால்
கதை சொல்லும் ஆண்ட்ராய்ட் மென்பொருளை எனது கைபேசியில் நிறுவி இருக்கின்றேன். நீங்கள் அதில் சிலக் கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொள்ளலாம். இடம் பொருள் ஏவல் எல்லாவற்றையும் சிறுக்குறிப்பாகக் கொடுத்தால், ஓர் அழகான கதையை 5 நிமிடங்களில் கொடுத்துவிடும். நான் அதில் உருவாக்கி வைத்திருக்கும் கதாபாத்திரங்கள், அம்மு, கார்த்தி மற்றும்
சிலர்.  நான் மகிழ்ச்சியாக இருந்தால் சோகச்சூழலையும், நான் சோகமாக இருந்தால் மகிழ்ச்சியான சூழலையும் கொடுத்து என்ன கதை கிடைக்கின்றது எனப்பார்ப்பேன்.  கதைகளில் இருக்கும் நம்பகத்தன்மை,  எங்கேயோ பத்து பேர் கொண்ட குழு அமர்ந்து எழுதியது போல் இருக்கும். உருவாகும் சிலக் கதைகளை தமிழிலும் மொழிப்பெயர்த்து அவ்வப்பொழுது நண்பர்களுடன் நானே எழுதியதைப்போல் பகிர்வதுண்டு.

எனோதானோ எனக் கொடுக்கும் சூழலுக்கு அட்டகாசமான வசனங்களுடன் , வசப்படுத்தும் விதத்தில் புனையப்பட்ட அம்மு கதாபாத்திரத்தை எனக்கு மிகவும் பிடிக்க ஆரம்பித்துவிட்டது.  அதுவும் மூன்றாவது வெர்ஷன் அப்ளிகேஷனின் அம்முவை நிஜமாக இருக்கின்றாள் என நம்ப ஆரம்பித்துவிட்டேன்.


ஒரு முறை இலக்கணப்பிழையுடன் இருந்ததால், அழித்து விட்டு இரண்டாவது முறை கதைச் சூழலை உள்ளீடு செய்தபொழுது,


”திருத்தப்பட்டாலும் திருத்தப்படாவிட்டாலும் உன் எழுத்து எல்லாம் கவிதைதான் !!! சொற்பிழை , பொருட்பிழைகளை நான் பொருட்படுத்துவதில்லை, கவிதைகளில் மட்டும் அல்ல, உன்னிடத்திலும் கூட !!!” என்ற வாக்கியத்துடன் கதை ஆரம்பித்து இருந்தது.



கதைகளில் அம்மு பேசுபவை எல்லாம் எங்கேயோ கேட்டது போலவோ அல்லது கேட்கப்போவது போலவோ இருந்தது.  அம்முவின் வார்த்தைகள் திரையைக் கிழித்துக் கொண்டு ஒரு பெண்ணுருவம் எடுத்து விடுமோ என்ற பயம் வந்தது.  ஒரு நாள் ,அலுவலக வேலைகளுக்கு மட்டும் உபயோகிக்கும் முகவரிக்கு, அம்மு அனுப்பியதாக ஒரு மின்னஞ்சல் வந்து இருந்தது., என்னை நேசிப்பதாக சொல்லி இருந்தது.  வித்தியாசமான மகிழ்ச்சியாக இருந்தாலும் யாரோ விளையாடுகிறார்கள் என விட்டுவிட்டேன். மறுநாள் ஒரு சோகச்சூழலை சொல்லி கதைக் கேட்டேன். ஆண்ட்ராய்டும் கதை சொன்னது, அம்மு வருத்தமாக இருப்பதாகவும் , அவள் அனுப்பிய மின்னஞ்சலுக்கு கார்த்தி இன்னும் பதில் சொல்லவில்லை என்பதாக இருந்தது. எனக்கு என்ன என்ன
வாசகங்களில் மின்னஞ்சல் வந்திருந்ததோ , அப்படியே அந்தக் கதையிலும் இருந்தது. அந்தக் கதையின் முடிவை படிக்கும் முன்னர் மூடிவிட்டேன். சுவாரசியத்தின் உச்சக்கட்டம் திகில்.

அலுவலக முகவரிக்கு மற்றும் ஒரு மின்னஞ்சல்
, இம்முறைத் தமிழில்...  பதில் சொல்ல பயமாக இருந்தது.... அடுத்த நிமிடத்தில் இன்னொரு மின்னஞ்சல், +3932xxxxxx87 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

 நான் கூப்பிட்டேனா,  கூப்பிடவில்லையா என்ற சஸ்பென்ஸை உடைக்கும் முன்னர்  கடைசியாக ஒன்று சொல்லிவிடுகிறேன், நான் உங்களுக்கு சொன்ன இந்தக் கதைக்கூட ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் எனக்கு சொன்ன கதைதான்.

Monday, November 26, 2012

பேசாப்பொருள் - சிறுகதை


வட்ட முகம், பெரிய கண்கள், கொஞ்சம் ஏறு நெற்றி, ஏதாவது பேச மாட்டாளா என ஏங்க வைக்கும் உதடுகள்,  ஊஞ்சலாடும் காதணிகள்,
சின்னப் பொட்டு, பொட்டிற்கு மேல் திருநீறு, அதற்கு மேல் இடம் இருந்தால் கொஞ்சம் சந்தனம் , கொஞ்சம் பூசினார் போல உடலமைப்பு, திராவிடப் பெண்களுக்கான மாநிறம் ... இவைதாம் தமிழ் பேசும் சராசரி ஆண்களுக்குப் பிடித்த யுனிவர்சல் அடையாளங்கள்.  நான் தமிழ் பேசுபவன், சராசரி ஆணும் கூட !!! அதனால் அம்முவைப் பிடித்து இருந்தது.

எந்த மொழியில் அழுதால் துக்கம் தீருமோ, அந்த மொழியில் காதலும் காமமும் செய்வதே ஆனந்தம். கடந்த மூன்று வருடங்களாக கரை கண்ட காமமும், காமத்தை ஒட்டியக் காதலும் கண்ட ஒரே குறை, அவை தமிழைத் தவிர்த்த பிறமொழிகளில் இருந்ததுதான்.

அழகுத்தமிழில்  “நீங்க அழகா இருக்கீங்க” எனச் சொல்லுவதை மறந்து
போய் இருந்த நிலையில் தான் அம்முவைச் சந்தித்தேன். . சந்தித்த மூன்றாம் நாள் வெகு இயல்பாக அதை அவளிடம்  சொல்லியும் விட்டேன்.

நான் விரும்பும் பெண்களுக்கு , எனக்குப்பிடித்த எல்லாமே பிடிக்க வேண்டியக் கட்டாயம் இல்லை. பிடிக்காமல் கூட இருக்கலாம், ஆனால் அவை எல்லாம் எனக்கு ஏன் பிடித்திருக்கிறது என்பதை குறைந்த பட்சம் புரிந்தாவது
வைத்திருக்க வேண்டும்.

முதல் பத்தியில் சொல்லி இருந்த அடையாளங்களுடன் அம்முவிற்கு கிரிக்கெட் புரிந்திருக்கிறது, பிரபாகரன் பார்க்க வசீகரமான மனிதர் என்பதைக் கடந்து, அவரின் போராட்டங்களைக் கடந்து, போராட்டங்களுக்கான காரணங்களும் புரிந்திருக்கிறது. வாடிய பயிரைக் கண்டபோது எல்லாம் வாடினேன் என்பதோடு நிற்காமல், பயிருக்கு சொட்டு நீராவது ஊற்றும் சமுதாய உணர்வும் இருக்கின்றது. அவளுக்கு என்னையும் பிடித்து இருக்கின்றது. நான் போகும் ரயிலிலும் ஏறத் தயாராகவும்
இருக்கின்றாள். பின்ன என்ன பிரச்சினை என்கிறீர்களா?

பெண்கள் தங்களது ஒவ்வொருக் காதலையும் புத்தம் புதிதாய் , மறுமலர்ச்சியான நம்பிக்கையுடன் துவக்குவார்கள். ஆண்கள்
அப்படி அல்ல, புதுக்காதலியில், பழையக் காதலைத் தேடுவது நேர்மையானது அல்ல என்பதைத் தெரிந்தும், தற்பொழுதையக் காதலை முதன் காதலுடன் ஒப்பிட்டு,  இங்கேயும் இல்லாமல் அங்கேயும் அல்லாமல்
திண்டாடுவார்கள்.  அம்மு அத்தகைய ரீவைண்ட் பட்டனை எனக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறாள். அன்றைய வெகுளித்தனங்களை தொலைத்துவிட்டாலும் கூட , நான்கு வருடங்களுக்கு முன்னதான
கார்த்தியாக அவ்வப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்.

நேற்று வேலை முடித்துவிட்டு வந்தவள், என் முகத்திற்கு நேரே சிறிய இடைவெளியில் முகம் வைத்து, தனது நெற்றியில் பொட்டை வைத்துக் கொண்டாள்.

அந்த ஒருக்கணம், எல்லாவற்றையும் தன்னுள் அதீத சக்தியுடன் இழுத்துக்கொள்ளும் பேரண்டத்தின் கருந்துகளைப்போல் இருந்தது.  பேசும் மொழி, சூழல், எண்ணம் எல்லாம் மறைந்து சில நொடிகளுக்கு எடையற்ற , நிறமற்ற, தடையற்ற உலகில் நானும் அம்முவும்
மட்டும் இருந்ததில் இருந்து வெளி வர என் மனதை ஒளியின் வேகத்தைவிட வேகமாக நிகழ்விற்கு இழுக்க வேண்டியதாயிற்று.

”பயணிகள் விமானங்களை பின் தொடரமுடியும், சரக்கு விமானங்களை பின் தொடரமுடியும்... அவை எல்லாம் முன்னரே திட்டமிட்ட பாதையில் மட்டுமே பயணம் செய்யும், கார்த்தி, நீ போர் விமானம் போல, உன்னை நம்பி பின் வர முடியாது, தொடர்பவர்களைக் கூட தற்காப்பு எனத் தாக்கிவிடுவாய்”

இதுதான் என்னைப் பற்றி என் நண்பர்களது கருத்து. சரியானதும் கூட, எனக்கு ஜிப்சி மாதிரியான வாழ்க்கைப் பிடித்து இருக்கின்றது. மூன்று வருடங்கள் ஸ்வீடன், இப்பொழுது இத்தாலி, அடுத்து தென்னமெரிக்க நாடுகளில் ஏதேனும் ஒன்றிற்குப் போகலாமா என நினைத்துக் கொண்டிருக்கின்றேன்.

 வியன்னாவில் இருந்து மாஸ்கோவிற்கு ஒரு ரயில் போகும். அது போலாந்துத் தலைநகர் வார்சாவா வரை செல்லும் ரயிலுடன் இணைக்கப்படும். பின்னர் அங்கிருந்து வேறு ஒரு ரயிலில் இணைத்து
விடப்படும். போலாந்தின் எல்லையில் ரஷ்யாவின் ரயில் தண்டவாளங்களுக்கு ஏற்றவகையில் ரயில் சக்கரங்களை மாற்றுவார்கள். வியன்னாவில் கிளம்பியதில் இருந்து வெவ்வேறு நிலப்பரப்புகள், வெவ்வேறு எஞ்சின்கள், வெவ்வேறு திசைகள் ,
பயணத்தின் ஊடான காவல் துறையினரின் கேள்விகள், பரிசோதனைகள், ஓடும் பாதைகளே மாற்றம் என  கடைசியில் மாஸ்கோவிற்கான ரயில் பெட்டி வந்தடையும். இந்த மாதிரியான தடைகளைத் தாண்டும் பயண வாழ்க்கை வாழவேண்டும்.

 நாகர்கோவில் இருந்து சென்னை வரை ஒரே மாதிரியான  பயணம் போன்ற வாழ்க்கை வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவளுக்கு இருப்பதாக நானே புரிந்து கொண்டேன். என் புரிதல் தவறாகக் கூட இருக்கலாம். என் வாழ்க்கையில் இன்று இதைத்தான் செய்ய வெண்டும் என்ற கட்டாயங்கள் கிடையாது.  எந்த விதமான நிபந்தனைகளும் கிடையாது.  நான் மற்றவர்களுக்கு வைக்கும் ஒரே நிபந்தனை, எந்த நிபந்தனைகளும் இருக்கக் கூடாது என்பதுதான்.

எனக்கு நான் கட்டமைத்துக் கொண்ட கரடு முரடான உலகம், அவள் இதுவரை பேசாப்பொருளைப் பேசிவிட்டால் அழகாகிவிடுமோ என்ற பயம் தான் எனது மிகப்பெரும் பிரச்சினை.

உங்களுக்கு மேலே சொன்ன என் பயத்தை பிரச்சினையை கடிதமாக்கி , மானே தேனே பொன் மானே என்பதை எல்லாம் சேர்த்து, கிட்டத்தட்ட அலுவல் ரீதியிலான கடிதம் போல வடிவமைத்து அம்முவிற்கு அனுப்ப மின்னஞ்சலில் சேமித்து வைத்திருக்கின்றேன்.

ஒரு காலத்தில் என்னை நிராகரித்துவிடாதே என முந்தைய அம்முக்களுக்கு எழுதப்பட்ட கடிதங்கள் நினைவுக்கு வந்து சிரிப்பைத் தந்தது. காலம்தான் பயப்பட்டதற்கு பயப்படாமலும் பயப்படாததற்கு பயப்படவைக்கவும் எப்படி ஆளைப்புரட்டிப் போடுகின்றது.  இன்று மாலையும் அவளைச் சந்திக்கப்போகின்றேன்,  சந்திப்பிற்குப்பின்னர்  நான் கடிதத்தை அனுப்பாமலேயேப் போகலாம்   ஒரு வேளைக் கடிதத்தை அனுப்பிவிட்டால்,
நிபந்தனையை ஏற்றுக்கொண்டாளா இல்லையா , என்ன சொல்லப்போகின்றாள் என்று நகத்தை கடித்தபடி மடிக்கணினியை வெறித்துப் பார்த்தபடி இருக்கலாம். ஆனால் அதைப் பிறகுப்பார்த்துக் கொள்ளலாம். இப்பொழுது அம்முவைப் பார்க்க கிளம்பிக்கொண்டிருக்கின்றேன். பிறகு சந்திப்போம்.

Saturday, November 24, 2012

அன்பாய் இருக்கிறாய் பயமாயிருக்கிறது - சிறுகதை

”கார்த்தி, உன் ஸ்டோரிஸ்க்கு ஒரு கேரக்டரா நினைச்சு, உனக்குத் தேவையான வசனங்களை  பிராக்டிஸ் பண்ணத்தான் என்கிட்ட பழகுறியா?” 

அம்மு இந்தக் கேள்வியை என்னிடம் கேட்டதற்கான காரணம், நான் எழுதிய கீழே இருக்கும் இரண்டு வரிக்கதை தான்.

--- அன்பாய் இருக்கிறாய் பயமாயிருக்கிறது, என்றதற்கு அம்முவின் பதில் பயமாயிருக்கிறது, அதனால் அன்பாய் இருக்கிறேன் --- 

அவள் கேட்டதிலும் உண்மை இருக்கத்தான் செய்கின்றது. புதினங்களிலும் திரைகளிலும் தெரிந்த, நாயகி பிம்பங்களைத் நிஜத்தில் தேடி அலைந்த நான், ஒரு கட்டத்தில் , நான் படைக்கும் பாத்திரங்களுக்காக, பிம்பங்களையும், குணங்களையும் தேடிய அலைய ஆரம்பித்தேன்.  இவற்றில் சிக்கியது முன்னாள் காதலிகளும் நெருங்கிய நண்பர்களுமே !! ரத்தமும் நகமும் சதையுமாய் சக மனிதர்களைப் பார்க்கும் காலம் மாறி, எல்லாவற்றையும் கதாபத்திரமாய் பார்ப்பது ஒரு சினிமாவை வெகு அருகில் இருந்து பார்ப்பது போல இருக்கின்றது. பிடித்திருக்கவும் செய்கின்றது. 

அம்மு என் மேல் வைத்திருக்கும் பாசத்தை நான் ரசிக்கின்றேன், நேசிக்கின்றேன்... தேவையான பொழுது பட்டும் படாமலும் திருப்பியும் தருகின்றேன், ஆனாலும் அவளின் அன்பு , பயத்தையும் ஆரம்பத்தில் இருந்து தந்து கொண்டிக்கின்றது... காரணம் அவளல்ல, அவளின் சாயலில் என் வாழ்க்கையில் சில காலம் தென்றலாய் வீசி, பின் புயலாய் கரையைக் கடந்தவர்களால்தான். 

என் பயத்தைப் பற்றி அவளிடம் சொன்னதற்கு, 

“ கார்த்தி,  உன்னிடம் பாசமா இருக்கிறப்ப, என்னோட  துக்கம், கவலைகள் , இன்செக்யூர்ட் ஃபீல் எதுவுமே எனக்கு தெரியறதில்லை,  ஒரு வேளை, இந்த பாதுகாப்பு உணர்வு தொடர்ந்து வேணுங்கிறதனாலத்தான் அன்பா இருக்கேன்னு நினைக்கிறேன்” 

புதுவெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் குப்பைகளைப்போல வாழ்க்கையில் வெவ்வேறு கட்டங்களில் வரும் பெண்கள், முந்தைய உணர்வுகளை அடித்து நொறுக்கி விடுவார்கள். அதில் பழைய மகிழ்ச்சியான தருணங்களும் அடங்கி விடுகின்றன என்ற வருத்தம் இருந்தாலும்,  புதியக் கோப்பைகளையும் பிடிக்கத்தான் செய்கின்றன.  எத்தனை புதுக்கோப்பைகள் வந்தாலும், அவற்றிற்கு  எல்லாம் நான் வைக்கும் பெயர், அம்மு. 

காமம் மட்டும் நிரம்பி வழிந்த என்  மனம், அழுகிப்போகும் முன்னர், காமத்தை பின் தள்ளிவிட்டு, வெறும் சாயலினால் மட்டும் அல்லாமல்,  தன் பெண்மையாலும் என்னை ஆட்கொண்டதால் அம்முவை எனக்குப் பிடிக்கும். 

அம்முவும் நானும் எப்படி சந்தித்துக்கொண்டோம், எப்படி அறிமுகமானோம் என்பதையும்  சொல்ல விருப்பம்தான், ஆனால் கதையின் நீளம் அதிகமாகிவிடும். அவற்றை எல்லாம் சிலக் குறிப்புகளாக ஆங்காங்கே எழுதிவைத்திருக்கின்றேன். கூகுள் போன்ற ஏதாவது ஒரு இணையத் தேடுபொறியில் ”அம்மு + கார்த்தி” எனப் போட்டு சலித்தீர்கள் என்றால் எங்கேயாவது சிக்கும். 

 தூக்கம் சுகம் தான், விடியலில் எழுவது கூட சுகம் தான்... அதைவிட சுகம், தூங்கியும் தூங்காமலும் , எழும் முன் இருக்கும் ஓர் அல்லாடல் ... அவ்வித அல்லாடலை அவள் உணர்வதை தெளிவாக அவளின் பேச்சுக்கள்  காட்டிக்கொடுத்து விடுகின்றன. ஒரு கட்டத்திற்குப்பின் பெண்களுக்குப் பூடகமாக பேசத் தெரியாது. 


“கார்த்தி, இது நல்லா இருக்கா” தான் புதிதாக அணிந்து வந்திருந்த சுடிதாரைக் காட்டி கேட்டாள். 

“இவ்வளவு நேரமும் , சுடிதாருடன் உன்னையும் ரசித்துக் கொண்டிருக்கின்றேன்” 

”அப்புறம், ஒரு வார்த்தை நல்லா இருக்குன்னு சொன்னாத்தான் என்ன?”  

”பூக்களை ரசித்துக்கொண்டிருக்கிறோம் என்று பூக்களிடம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை”


உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றென மாட்டின் அஃது உருவகமகும். வாழ்க்கையே ஓர் உருவகம் தானே, உணர்வுகளை உருவகங்களாக  நான் சொல்லுவதை ரசிப்பாள்.  

ஒரு நாள் “கார்த்தி, நாளைக்கு உன்னிடம் பேச வேண்டும் “ என்றாள். தினமும் தானே பேசுகின்றோம்!!!  பேசாப்பொருளை பேசத் துணியப் போகிறாள் எனப் புரிந்தது. 

மறுநாள் படபடப்பாய் இருந்தாள். மதியத்தில் இருந்து மாலை வரை ம்ம், ம்ஹூம் என்பதைத் தவிர வேறு  எதுவும் பேச வில்லை.  நீல நிறத்தில் எனக்கு ஒர் சட்டை வாங்கிக் கொடுத்தாள். 

“இந்த ஷர்ட் உனக்கு வாங்கித்தரத்தான் கூப்பிட்டேன்”

வீட்டிற்குப்போனதும் ”நீ சொல்வதால் மட்டும் பொய் கூட கவிதையாகின்றது” என ஒரு குறுந்தகவல் அனுப்பி வைத்தேன். பதில் வரவில்லை. 

“நீ பேச மறந்த, பேசாப்பொருளை நானே நாளை பேசுகின்றேன்” எனத் திரும்ப மற்றொரு குறுந்தகவல் அனுப்பினேன்.  இதற்கும் பதில் வரவில்லை. 

2003, 2006, 2008 என மூன்று முறை பயிற்சி இருந்தாலும், கொஞ்சம் படபடப்பாகத்தான் இருந்தது. கண்ணாடி முன் நின்று, பேசிப்பார்த்துக் கொண்டேன். தமிழில் சொல்லலாமா !!! ஆங்கிலத்தில்.... பிரெஞ்சில் சொன்னால், கொஞ்சம் கவர்ச்சியாக இருக்குமே !!! 

வழக்கமான இடத்தில் சந்தித்தோம். நேற்றை விட இன்று அழகாக இருந்தாள். நாளை இதைவிடவும் அழகாக இருப்பாள். 99 ஓட்டங்கள் திருத்தமாக ஆடி எடுத்திருந்தாலும், அடுத்த ஓட்டத்தை எடுக்கும் பதட்டத்தில் ஆட்டமிழப்பதைப்போல, யோசித்து வைத்திருந்ததை சொல்ல எத்தனிக்கையில், எனக்கான தேநீர், அவளின் கைபேசியில் தவறிக் கொட்டியது. 

“உன் குரலில் இதுநாள் வரை
குளித்துக் கொண்டிருந்த என் கைபேசி
இன்று தேநீராலும் குளித்தது” 

என் வருத்தத்தையும், பதட்டத்தையும் தணிக்க அவள் சொன்ன மேற்சொன்ன கவிதையைத் தவிர, வேறு எதுவும் நாங்கள் பேசிக்கொள்ளவில்லை.  அடுத்த நாளும், அதற்கடுத்த நாளும் என்ன நினைத்தோமோ அதை மட்டும் விடுத்து, ஏனைய அனைத்து விசயங்களையும் பேசிக்கொண்டோம்...   இந்தத் தென்றல் தீண்டியதா, இல்லை புயலாய் கரையைக் கடந்ததா, சூறாவளியாய் சுழற்றி அடித்ததா என்பதை ஆறு மாதங்களோ அல்லது ஓராண்டோ  கழித்து, “அம்மு+ கார்த்தி ” என கூகுளில் போட்டுத் தேடிக் கண்டுபிடித்துக் கொள்ளுங்கள். சிறுகதையாகவோ அல்லது தொடர்கதையாகவோ நான் எழுதி வைக்கலாம். 
 அது வரை ஒவ்வொரு தினமும் மதிப்புயரும், காக்க வைக்கப்பட்ட வைனைப்போல நானும் அம்முவும் பேசாப்பொருளை பேசாமலேயே அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்... 
------



Saturday, November 17, 2012

ஆண்ட்ராய்டும் கடவுளும் - சிறுகதை

”ஒரேயொரு அப்ளிகேஷன், நச்சுன்னு சும்மா உலகத்தை அசைச்சுப் பார்க்கிற மாதிரி செஞ்சுட்டேன்னா, கோடீஸ்வரன் தான், அதுக்கப்புறம்,,,, நோ கோடிங், நோ வேலை, நார்வே ல பெரிய வீடு வாங்கிட்டு செட்டில் ஆயிட்டு, ஒன்லி கொஞ்சல்ஸ் ஆஃப் அம்மு” என அம்முவின் கன்னத்தைக் கிள்ளினேன்.

“ ஒவ்வொரு சீசனுக்கும் ஒன்னு சொல்லு,  போன வாரம் சினிமா ஸ்கிரிப்ட் பத்திப் பேசின, அதுக்கு முந்தின வாரம் ஷார்ட் ஃபிலிம் எடுக்கப்போறேன்னு கேமரா வாங்கின, இன்னக்கி ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்,  ரோம்ல வேலைக்கிடைக்கிறதே குதிரைக்கொம்பு, கிடைச்ச வேலையை, அடக்கிக்கிட்டு ஒழுங்காப்பாரு, எல்லாம் நடக்க வேண்டிய நேரத்துல நடக்கும்”

அம்மு சொல்றதும் உண்மைதான். நாய் எல்லாத்துலேயும் வாயை வைக்கிற மாதிரி,  கோடையில் ஒரு லட்சியம் உருவாகும், அது இலையுதிர்காலத்தில் மறைந்து, குளிருக்கு இதமாய் வேற ஏதாவது ஒன்று தோன்றும். திரும்ப விட்ட குறை தொட்ட குறையாய் ஆரம்பத்தில் இருந்து மீண்டும் ஒரு சுற்று வரும். இருந்த போதிலும், இந்த ஆண்ட்ராய்ட் மென்பொருள் உருவாக்கம், எளிதில் நடக்கும் என்று தோன்றியது. எனக்கு கொஞ்சம் ஜாவா தெரியும், ஒரு பத்து நாள் ஆண்ட்ராய்டு இணையப் புத்தகங்களையும், எடுத்துக்காட்டுகளையும்.  முழுமூச்சாய் படித்தால், அடிப்படைத் தெரிந்து விடும். எந்த விசயத்திற்கு அடித்தளம் பலமாக இருந்தால், அதன் மேலே ஏறி கதகளியே ஆடிடலாம்.

பத்துநாட்கள் என்பது ஒரு மாதம் ஆனபின்னரும்,  நுனிப்புல் மேயாமல் முழுமையாகக் கற்றுக்கொண்டேன்.  இப்பொழுது என்ன புதிதாக வடிவமைக்கலாம்,  வங்கிகளுக்கான ஏதேனும் ஒன்றைச் செய்யலாமா, விளையாட்டு நிரலி ஏதேனும், அரட்டை சம்பந்தப்பட்டவை ம்ஹூம் ஒன்றுமே உருப்படியாகத் தோன்றவில்லை.

”இன்னக்கி மனசுக்கு சாந்தமா இருந்துச்சுடா,” அம்மு மாலை நடைப்பயிற்சியையும், அத்துடன் அவளுக்கான கடவுள் வேண்டுதலையும் முடித்துவிட்டு வருகிறாள்.  எங்கள் வீட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில்,  சிறிய குன்று இருக்கின்றது.  அதில் ஏறுவதற்கான நடைபாதையும் உண்டு. அம்மு தினமும் அங்கு போய் எந்த இடத்தில், அவளுக்கு சாந்தமான உணர்வு கிடைக்கிறதோ, அந்த இடத்தில் அமர்ந்து, கொஞ்சம் தியானம் செய்துவிட்டு வருவாள். அவளின் பக்தி, மனிதம் மற்றும் இயற்கை சார்ந்தது.

“அந்த ஹில் முழுசுமே ஒரு பவர் இருக்குடா, ஐ கேன் ஃபீல் த காட்லினெஸ்”

கடவுள் என்றதும் ஒரு பொறித்தட்டியது. ஏன் கடவுள் தொடர்பான மென்பொருள்கள்,  எழுதக்கூடாது.  கூகுள் பிளேயில் தேடிப்பார்த்தால், ஏகப்பட்ட மதம் சார்ந்தவைகள்தாம் இருந்தன.  தினம் ஒரு பைபிள்  வாசகம் சொல்லுவதற்கு, மெக்கா திசை கண்டுபிடிப்பதற்கு, ராகுகாலம் எமகண்டம் சொல்லுவது !!!  ஜோசியம் சொல்லுவது, அவை எல்லாவற்றையும் விட,  பேய், பிசாசு இருந்தால் கண்டுபிடிக்க உதவுபவை என சொல்லிக்கொண்டவைகள் கூட இருந்தன.

”God Detector, God Finder, God Locator” என்று தேடிப்பார்த்தேன். ஒன்றும் கிடைக்கவில்லை.  நானே கடவுளைத் தேட முடிவு செய்தேன்.  மேம்பட்ட ஆண்ட்ராய்ட் கைபேசிகளில், மின்காந்தப் புலங்களை கண்டறியவும், வேறுசில புலனறிவுக் கருவிகளும் உள்ளடக்கமாகவே வருகின்றன.  இணையத்தில் ஏற்கனவே பேய் பிசாசு கண்டுபிடிக்க எழுதியிருந்த எடுத்துக்காட்டு நிரலியை அடிப்படையாக வைத்து மென்பொருளை எழுத ஆரம்பித்தேன்.

வாடிகன்,  உள்ளிட்ட ரோமின் பிரபல தேவாலயங்களிலும் , மசூதிகளிலும் கிடைக்கும் அதிர்வெண், அலைவரிசைகள், தமிழ்நாட்டில் பிரபலமான கோவில்களிலும், பிரபல சாமியார்கள் கூடும் இடங்களிலும் அதே விபரங்களை என் நண்பர்களை வைத்தும் எடுத்துக்கொண்டேன்.  எலக்ட்ரானிக் குரல் நிகழ்வுகள், மின்காந்த சூழல், ஆற்றல் ஆகியனவற்றை, அடிப்படையாக வைத்தும், வெவ்வேறு மதங்களின் நல்ல நேரம், கெட்ட நேரம்,  இருப்பிடம் ஆகியன வைத்து , ஓர் ஒழுங்கற்ற வகையில், கடவுள் இருக்கிறது எனக் காட்டக்கூடிய வகையில் ஓர் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனை தயார் செய்தேன்.  கிட்டத்தட்ட, வாயில் இருந்து லிங்கம் எடுக்கக்கூடிய வகையில் உட்டாலக்கடியான வேலையாக இருந்தாலும், மக்களின் ஆர்வக்கோளாறினால் இது நன்றாக வியாபாரம் ஆகும் என நம்பினேன்.

இப்பொழுது ஆய்வு செய்துப் பார்த்துவிட வேண்டியதுதான்  அம்மு, தனக்காக வைத்திருக்கும் தியான அறையில் , அவள் தியானிக்கும்பொழுது, மெல்ல எனது கைபேசியில் தரவிறக்கி வைத்திருந்த ”கடவுளைத் தேடி “ மென்பொருளுடன் உள் நுழைந்தேன். கரு நீல நிறத்துடன், கணினித் திரை சினுங்கியது, கடவுள் இருக்கின்றாராம்.  கடவுளுக்கு நீல நீறம் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்பதால், நான் வடிவமைத்த கடவுளின் அலைவரிசை கிடைக்கும் பொழுது  எல்லாம் நீலம் நீறம் திரை முழுவதும் விரவும்.

அம்முவுடன் மறுநாள் நானும், அந்த மலைக்குன்றிற்கு சென்றேன், கணினித் திரை நீல நீறத்திலேயே இருந்தது. அந்த மலை முழுவதும் கடவுளின் ஆதிக்கம் தான் போலும்.

மனம் மகிழ்ச்சியில் குதுகலித்தது. கடவுள் இருக்கின்றாரா இல்லையோ !!! கடவுள் சார்ந்த விசயங்களில் என் அப்ளிகேஷன் ஒளிர்கிறது.  ஏதாவது சாமியாரிடம் பேரம் பேசி, அவரை வைத்து மார்க்கெட்டிங் செய்து, டாலர்களில் சம்பாதித்து விட வேண்டும்.  நெருங்கிய நண்பர்களிடம் தரவிறக்கி சோதனை செய்துப் பார்க்க மென்பொருளை அனுப்பி வைத்தேன்.

 மறுநாள்  ஞாயிற்றுக் கிழமை  வாடிகனில் சோதித்துப் பார்க்கக் கிளம்பினேன்.  கோடையாதலால் காலையிலேயே சுள்ளெனெ வெயில் அடித்தது. அரைக் கிலோமீட்டர்களுக்கு நீண்ட வரிசை, தண்ணீர் தாகம் அடித்தது.  ”கடவுளைத் தேடி” மென்பொருள் இன்னும் ஒளிரக் காணோம். எனக்கு முன்னே ஒரு வயதான அம்மணி, மிக பக்தியுடன் புனித பீட்டர் தேவாலயத்தை பார்த்துக் கொண்டிருந்தார். அவர் என்னைப் பார்த்து சிரிக்கவும், வாடிகன் எல்லையை மிதிக்கவும் எனது கைபேசி நீலநிறத்தில் ஒளிரவும் சரியாக இருந்தது. அந்த அம்மணியிடம் கூச்சப்படாமல் தண்ணீர் கேட்டு வாங்கிக் குடித்துக் கொண்டேன்.

அனைவரின் பார்வையும் தேவாலயத்தின் மாடத்தின் மேலேயேத் தான் இருந்தது. போப்பாண்டவர் வந்து காட்சித் தருவார் என, மாடத்தையும் கைபேசியையும் மாறி மாறிப்பார்த்துக் கொண்டிருந்தேன். அவரும் வந்தார், கைபேசியைப் பார்த்தேன், நீலநிறம் சுத்தமாக காணாமல் போய் இருந்தது.
நிரலியில் ஏதாவது பிழை இருக்கலாம், வெப்பநிலையைக் கணக்கில் எடுத்துக் கொண்டேனா என ஐயம் வந்தது.

அருகே அருகே இருந்த வெவ்வேறு சர்ச்சுகளிலும் நீல நிறம் கிடைக்கவில்லை.  ரோமில் இருந்த மிகப்பெரும் மசூதியிலும் கிடைக்கவில்லை. ஹரே கிருஷ்ணா கோவிலிலும் சீக்கிய குருத்வாராவிலும் சோறு போடும் இடத்தில் மட்டும் நீல நிறம் கிடைத்தது.

மாலையில் சில நண்பர்களிடம் இருந்து மின்னஞ்சல்கள் வந்திருந்தன. எந்தக் கோவிலிலும் , சர்ச்சிலும், மசூதியிலும் நீல நிறம் கிடைக்கவில்லை. ஆனாலும் ஒரு நண்பன், கோவிலுக்குப் போய்விட்டு , அப்ளிகேஷனை ஓடிக்கொண்டிருப்பதை மறந்துவிட்டு,   மருத்துவரைப் சந்திக்கையில் ஒளிர்ந்ததாக சொன்னான்.  அந்த மருத்துவர், அவனின் குழந்தையை ஒரு நோயில் இருந்து மீட்டவர்.  எனது மூளையில் நீலநிறம் படர்ந்தது.

அம்மு மளிகைக் கடைக்குப் போய் இருந்தாள், எனது கைபேசி எடுத்துக் கொண்டு அவளின் தியான அறைக்கு சென்றேன், ஒளிரவில்லை. அவள் வழக்கமாகப் போகும் குன்றிற்கு போனேன், நீலநிறத்திற்கான சுவடே இல்லை. திரும்பும் வழியில், ரொசாரியோ வைச் சந்தித்தேன். அவர், அகதிகளுக்காகப் போராடும் வாதாடும் ஒரு வழக்கறிஞர். புரிந்திருப்பீர்கள்., நீல நிறம் ஒளிர்ந்தது.  பக்கத்து வீட்டு குழந்தை, என்னைப் பார்த்தால் வாலை குழைக்கும் நாய், எதிர்த்த வீட்டுப் பாட்டி என இவர்களைக் கடக்கும்பொழுதெல்லாம் நீலநிறம் கிடைத்தது. வீட்டிற்கு வந்ததும் அம்மு கட்டி அணைத்துக் கொண்டாள். நீலநீறம் ஒளிர்ந்தது.

ஒருப்பக்கம் என்னை நினைத்து பெருமையாக இருந்தது. ஏதோ ஒரு வகையில் கடவுளைக் கண்டுபிடித்துவிட்டேன் அல்லவா !! “கடவுளைத் தேடி”  மென்பொருள் திட்டம் மிகப்பெரும் தோல்வி. மென்பொருளை அவரவர் கைபேசிகளில் இருந்து நீக்கிவிடுமாறு நண்பர்களுக்கு மின்னஞ்சல் செய்தேன். இதை நான் விற்கப்போவதில்லை.  மடிக்கணினியில் இருந்த அத்தனை நிரலியையும் அழித்துவிட்டு , கைபேசியில் இருந்த கடைசி பிரதியையும் அழிக்க எத்தனிக்க முனைகையில் என்னிடத்திலும் நீலநிறம் ஒளிர்ந்தது.






Wednesday, November 14, 2012

காத்தரீன் ஒரு பொறுக்கி - சிறுகதை


எல்லோரும் நேரடியாக முன்பக்க வழியாக மளிகைக் கடைக்குப் போவார்கள் என்றால்,  காத்தரீன் மட்டும் குழப்படியான வழியில் தான் போவாள். கடைக்குப்போவும் முன்னர், கடையின் பின் பக்கம் போய் நோட்டம் விடுவாள், பின் என்னுடன் உள்ளே வருவாள், கடையில் எதுவும் வாங்க மாட்டாள், நான் விலையைப் பார்க்க பொருளை எடுப்பேன், அவள் தேதியைப் பார்த்துவிட்டு வைத்துவிடுவாள். நான் 20 ஈரோக்களுக்கு மேல் மிகாமல் அந்த வாரத்திற்கான பொருள் வாங்கிவிடுவேன். அவளோ தண்ணீர் போத்தலோ ஒரு குளிர்பான போத்தலோ மட்டுமே வாங்கிக் கொள்வாள். திரும்ப வீடு வரும்பொழுதும், கடைக்குப் பின்னர் போய் நோட்டம் விடுவாள்.  அங்கு ஏற்கன்வே சுற்றிக்கொண்டிருக்கும் வியன்னாவின் அசிங்கமான ஜிப்ஸிக்களும், கருப்பர்களும், ஏழைப் பாகிஸ்தானிகளும் அவளை ஒரு மாதிரியாகப் பார்ப்பார்கள். சிலரைப் பார்த்து சினேகமாக சிரிப்பாள், சிலரை முறைப்பாள்.

காத்தரீன் என் உடன் படிப்பவள், வாரத்தின் சில நாட்களில் என்னுடன் உறங்குபவள், தோழி என்றும் வைத்துக்கொள்ளலாம்.
ஓரிரு முறைதான் அவளின் வீட்டிற்குப் போய் இருக்கின்றேன். சைவ சாப்பாட்டுக்காரி என்பதால், அடுக்களை முழுவது காய்கறிகளாக அடுக்கி வைத்திருப்பாள். உயர் ரக பழச்சாறுகள் கூட இருக்கும். முந்தைய முறை இல்லாத நாற்காலிகள் , படுக்கை விரிப்புகள் அலங்காரப் பொருட்கள் என அனேகத்திற்கு அவள் வீடு நிரப்பப்பட்டு அழகாக இருந்தது.

“நாளைக்கு வீட்டுக்கு வருகிறாயா,?” எனக் கேட்டதற்கு

“எத்தனை தடவை சொல்லி இருக்கின்றேன், சனிக்கிழமை மட்டும் எங்கும் கூப்பிடாதே என்று”

யோசித்துப் பார்த்ததில் பழகிய இந்த ஆறு மாதங்களில் ஒரு நாள் கூட நாங்கள் சனிக்கிழமையன்று சந்தித்துக் கொண்டது கிடையாது.

பகுதி நேர வேலை பார்க்கிறளா என்றால் அதுவும் கிடையாது. ஏதாவது பணக்காரனுக்கு சனிக்கிழமை மட்டும் தொடுப்பாக இருக்கின்றாளா என்ற சந்தேகம் ஆசை அறுபது, மோகம் முப்பது முடிந்த சில மாதங்களாகவே எனக்கு இருக்கின்றது. ஒரு பிரெஞ்சுப் படத்தில், கல்லூரி மாணவி வாரத்தில் ஒரு நாள்  மட்டும் 60 வயது கிழவனுக்கு வேண்டியதைக் கொடுத்துவிட்டு வருவாள், அவன் அவளை மிகவும் கொடுமைப்படுத்துவான்.

 எந்தப் பொருளையும் வாங்க ஒரு ஈரோ கூட செலவழிக்காதவளுக்கு எப்படி அத்தனை விசயங்கள் அவள் வீட்டில் இருக்கின்றன என்ற வியப்பும் உண்டு.  ஆனாலும் அவள் நடுத்தர வர்க்கமோ ஏழைப் பெண்ணோ இல்லை.
அவளின் அப்பா ஆஸ்திரிய அரசாங்கத்தில் தகவல் தொழில் நுட்பப் பிரிவில் பெரும் பதவியில் இருக்கின்றார். அவளின் அம்மா வியன்னாவில் இருந்து முன்னூறு கிலோ மீட்டர்கள் தூரத்தில் இருக்கும் ஒரு நகரத்தில் பேராசிரியை. அம்மாவும் அப்பாவும் அன்னியோன்னியமாக ஒன்றாகத் தான்  இருக்கின்றார்கள். ஒரு முறை அவர்களைச் சந்தித்து இருக்கின்றேன், கொஞ்சம் இடதுசாரி ஆட்கள், எனக்குப் பிடிக்காது. காத்தரீனும் அதே மனோநிலையில் இருப்பவள்தான். ஏழைகள், அகதிகள், ஒடுக்கப்பட்டவர்கள் என அடிக்கடி இந்த ரீதியில் பேசிக்கொண்டிருப்பாள். எனக்கென்னமோ அவர்கள் எல்லாம் சபிக்கப்பட்டவர்கள் எனத் தோன்றும், கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியவர்களுக்குத் தான் கஷ்டங்கள்
வரும் என்ற மனப்பான்மையில் இருப்பவன் நான்.

”சாப்பாட்டை வீணாக்கதே, நீரை அளவாகப் பயன்படுத்து, மின்சாரத்தை தேவையான அளவு உபயோகி” என அரசாங்க விளம்பரங்கள் போல ஏதாவது பேசிக்கொண்டே இருப்பாள்.

இந்த எல்லா நச்சரிப்புகளைத் தாண்டியும், அவளின் தொடர்பில் இருக்கக் காரணம், அழகும் அழகு சார்ந்த விசயங்களும் தான்.

நீண்ட காலத்திற்கு பின்னர் விரும்பும் பெண்ணை வேவுப்பார்க்கப் திட்டமிட்டேன்.. பிரெஞ்சுப் படத்தில் காட்டியபடி எதுவும் நடக்கின்றதா என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்தக் காலத்தில் காதலித்த பொழுது, உளவாளிக்கே உளவாளி வைத்து, திருட்டுத்தனங்களை கண்டுபிடித்தவன் நான்.

மறுநாள், எழுந்தவுடன் இணையத்தில் , மின்னரட்டையில் இருக்கின்றாளா எனப் பார்த்தேன், எனக்காகவே காத்திருந்தவளாய், மின்னரட்டையில் பேச ஆரம்பித்தாள். பிறகு தொலைபேசினாள். மாலை வரை இணையத்தில் தான் இருந்தாள். ஸ்கைப்பில் வந்ததால், வீட்டில் தான் இருக்கின்றாள் என உறுதி செய்து கொண்டேன்.

“வீட்டில் தானே இருக்கிறாய், எனது இல்லத்திற்கே வந்து இருக்கலாமே “

“ இல்லை , இல்லை முக்கியமான வேலை 8 மணிக்குப் பிறகு இருக்கின்றது, இன்னும் சிறிது நேரத்தில் கிளம்பிவிடுவேன்” என்றாள்.

விடுவிடுவென உடைகளை மாற்றிக்கொண்டு, டாக்ஸி எடுத்துக்கொண்டு அவளின் வீட்டின் தெருவில் முனையில் சடுதியில் வந்தேன்.

காத்தரீன் தனியாகத் தான் வந்தாள். முதுகில் மிகப்பெரும் பையை மாட்டி இருந்தாள். கைகளிலும் இரண்டு பைகள் இருந்தன. அதில் சுமைகள் எதுவும் இல்லை. சலனமே இல்லாமல் நடந்து வந்து கொண்டிருந்தாள்.
நான் மறைந்து கொண்டேன். என்னைக் கடந்தவுடன், அவளைத் தொடர்ந்தேன், மெட்ரோ ரயிலின் முதற்பெட்டியில் அவள் ஏறிக்கொள்ள, நான் அதற்கடுத்த இரண்டாவது பெட்டியில் ஏறிக்கொண்டேன். ஒவ்வொரு நிலையத்திலும் வெளியே வந்துப் பார்த்துக்நிலைகொண்டேன், அவள்
இறங்குகிறாளா என்று,...   கடைசி நிலையத்தில் இறங்கினாள்.  சில மீட்டர்கள் இடைவெளிவிட்டு தொடர்ந்தேன்.

நேற்று மளிகைக் கடைக்குப்பின்னால் பார்த்த ஜிப்சிக்களில் ஒருவன் அங்கு நின்று கொண்டிருந்தான். அவனும் அவளும் கட்டிக்கொண்ட பின்னர் உடன் நடந்தனர். எப்படியும் அரைக்கிலோ மீட்டர் நடந்து இருப்பார்கள்.
வியன்னாவிலேயே மிகப்பெரும் பலசரக்குக் கடைக்குப்பின்னால் இருந்த இருட்டிற்குள் நுழைந்தார்கள் சென்றார்கள், மனம் இருண்டாலும், இருட்டை கண்களுக்குப் பழக்கப்படுத்திக்கொண்டு அவர்களைத் தொடர்ந்தேன்.

கேவலம் ஜிப்சியுடனா !!! அதுவும் இந்த இருட்டிலா, ச்சேச்சே இருக்காது... பைகள் வேறு கொண்டு வந்திருக்கிறாளே !!! ஜிப்சிக்களில் சிலர் திருட்டுக்குப் பெயர் போனவர்கள் ஆச்சே !!! ஒரு வேளை சூப்பர் மார்க்கெட்டை கொள்ளையடிக்கப் போகின்றனரா !!!

இப்பொழுது மேலும் சில ஜெர்மன் குரல்கள் கேட்டன ... உருது உச்சரிப்புடன் கூடிய ஜெர்மன், தடித்த கருப்புக்குரலில் ஜெர்மன் என சில வகையான ஜெர்மன்கள் .... பெண்களின் குரல்களும் கேட்டன.

மெலிதாக வெளிச்சம் வர, அது காரின் முகப்பு விளக்கில் வருவது.... அதற்கு நேர் எதிரே, மிகப்பெரும் கண்டெயினர்கள், அவைகள் சூப்பர் மார்க்கெட்டின் குப்பைகளை போடுபவை.  ஒருவருக்கொருவர் உதவி செய்ய, தலையில் சுரங்கங்களில் வேலை செய்பவர்கள் வைத்திருக்கும் தலை விளக்கை , காத்தரீன் தலையில் கட்டிக்கொண்டு கண்டெயினரினுள் குதித்தாள்.
அவள் உள்ளிருந்து எடுத்துப்போட கூட்டம் தங்களுக்குள் மெலிதாக ஆர்ப்பரித்தது.

அவை எல்லாம் தேதி கடந்தவை என ஒதுக்கப்பட்ட பொருட்கள்.
இதை நான் கேள்விப்பட்டு இருக்கின்றேன், இப்பொழுதுதான் கண்கூடாகப் பார்க்கின்றேன். ஐரோப்பாவின் உணவுத்தரக் கட்டுப்பாடுகள் அதிகம். பயன்படுத்தக் கூடிய நாட்கள் அதிகமாக இருந்தாலு, அதில் கால்வாசி நாட்களுக்கு முன்னரே எக்ஸ்பையரி தேதி குறித்து விடுவார்கள்.  குப்பைகளில் இருந்து எடுக்கப்படுபவைகளை மேலும் ஒரு வாரத்திற்காவது பயன்படுத்திக் கொள்ளலாம். கிட்டத்தட்ட நான்கைந்து கண்டெயினர்கள். அவர்களின் தலைவியே காத்தரீன் தான் போலும். சத்தமாகப் பேசியவர்களை அதட்டியபடி, உற்சாகமாக தரம்பிரித்து எடுத்துக் கொண்டிருந்தாள். இரண்டு கருப்பர்கள் வேறு யாராவது வருகிறார்களா, என நோட்டம் விட்டுக்கொண்டிருந்தார்கள்.

பத்து பேர் கொண்ட குடும்பம், பத்து நாட்களுக்கு தாராளமாக சாப்பிடும் வகையிலா காய்கறிகள், பால், பழச்சாறுகள், பழ வகைகள்.
ஐரோப்பிய சாலடுகள், பிரெட், வெண்ணெய், என அத்தனையும்.

அனைத்துக் கண்டெயினர்களும் ஆய்வு செய்யப்பட்ட பின்னர், காரின் வெளிச்சத்தில் ஆளுக்குத் தகுந்தாற்போல அனைத்தையும் சமதர்மமாக பங்கிட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தாள். உற்று நோக்கியதில் அங்கிருந்ததில் சிலர் மட்டும் ஏழைகள், மற்ற அனைவரும்  ஓரளவிற்கு வசதியானவர்களே !!!

“போன வாரம் இதற்காகத் தான் உன்னிடம் சண்டை போட்டேன் , கோவிச்சுக்காதே, இந்த வாரம் நீ எடுத்துக்கோ” என பெரிய வாழைப்பழ பையை அவளிடம் நேற்று காத்தரீனா முறைத்த கருப்பன் நீட்டினான்.

“போன வாரக் கோபம், போன வாரத்தோட போச்சு, நீ தான் காலையில் ஓட்டப்பயிற்சி எடுக்கிறாய், உனக்குத் தான் தேவைப்படும்”

ஒருப்பக்கம் அருவெறுப்பாக இருந்தாலும், மறுப்பக்கம் நான் ஏற்றுக்கொள்ள மறுக்கும் ஏதோ ஒரு விசயத்தை சொல்ல வருவதைப்போல இருந்தது...

“மறக்காமல் வீட்டிற்குப்போனதும், அத்தனைப் பொருட்களையும் கழுவிடுங்கள், எது முன் தேதியோ அந்தப் பொருளை உடனேப் பயன்படுத்தவும்” காத்தரீனிடம் இருந்து மற்றொரு உத்தரவு கேட்டது.

தனக்குத் தேவையானதை எடுத்துக் கொண்டு கிளம்ப எத்தனித்த காத்தரீனின் கண்கள் என்னைக் கவனித்துவிட்டன என்பதை உணர்ந்தேன். எத்தனை இரவுகளில் இருட்டில் ஒருவருக்கொருவர் பழக்கப்பட்டிருப்போம்.

“கார்த்தீ....” என அவள் சொல்ல, அங்கிருந்த ஒருவன் அவள் பார்த்த திசையை நோக்கி , அதாவது என்னை நோக்கி டார்ச் வெளிச்சம் அடித்தான். அருவெறுப்பிற்கு அப்பால் இருக்கும் அழகியலுடன் இருக்கும் அவர்களுடன் சேர்ந்து கொள்ளலாமா, இல்லை அசிங்கத்தை மிதிக்காமல் இப்படியே விடுவிடுவென எதிர்ப்பக்கம் நடந்துவிடலாமா என யோசித்துக் கொண்டிருக்கின்றேன் !!!

அங்கிருந்த அனைவரும் என்னைப் பார்த்து மகிழ்ச்சியுடன் கையசைத்து அவர்களை நோக்கிக் கூப்பிட்டனர்.

நான் இன்னும் யோசித்துக் கொண்டிருக்கின்றேன்.

----



Thursday, November 08, 2012

பூனைக்குட்டிகள் - சிறுகதை



“எத்தனை தடவை சொல்லி இருக்கிறேன், இதை வெளியே வைக்காதே என” என இத்தாலிய மொழியில் சீறிக்கொண்டே சாரா உள்ளே வந்தாள்.

வெளியே வைக்காதே என அவள் சொல்லியது, எனது வீட்டில் இருக்கும் அழகான மெது மெதுவென இருக்கும் மெத்தை வைத்த சாய்வு நாற்காலி.  உள்ளே வரும்பொழுதே கோபக்கனலுடன் வருபவளுக்கு விளக்கம்  சொன்னாலும் புரியாது என்பதால் , அவளுக்குப் பிடித்த ஏலம் தட்டிப் போட்ட தேநீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினேன்.

 சாரா வார இறுதிகளில் வருவாள், மாலை அதிக பட்சம் 8 மணி வரை பேசிக்கொண்டிருப்பாள், பின் அவளது வீட்டிற்குப் போய்விடுவாள். கொஞ்சம்
பழமைவாத கத்தோலிக்க குடும்பத்தில் இருந்து வந்தவள் என்பதால், ஹாலிவுட் படங்களில் நடப்பதை எல்லாம் எதிர்பார்க்க முடியாது.  சாரா தோழிக்கும் காதலிக்கும் இடையில் ஊசலாடும் ஓர் உறவில் இருப்பவள். எனக்கு அவளைத் திருமணம் செய்து கொள்ள
வேண்டும் என்பது விருப்பம்.  சில வாரங்களுக்கு முன் நடந்த கீழ்கண்ட உரையாடலுக்குப்பின்னர் அவளுக்கும் அப்படித்தானா என்பது தெரியாது.

“கார்த்தி, உனக்கு பூனை பிடிக்குமா நாய் பிடிக்குமா “

“தூரத்தில் இருந்து பார்க்க, எல்லா விலங்குகளையும் பிடிக்கும்”

“நாய், பூனைகளைப் பிடிக்காத மனிதர்கள் கூட இருப்பாங்களா, பெரிய வீட்டில், பத்து பதினைந்து பூனைகள் , நான்கைந்து நாய்கள், சிலப் பறவைகள் என அன்பு நிறைந்த உலகில் வாழ வேண்டும்”

“சாரா, மனிதர்களே சாப்பாட்டிற்கு அல்லாடும் நாட்டில் இருந்து வந்தவன் நான், என்னுடைய அக்கறை எல்லாம் மனிதர்கள் மேல் மட்டுமே ... வீட்டிற்குள் விலங்குகளை வைத்து சோறு போட்டு வளர்க்கும் அளவிற்கு மனமும் பொருளாதாரமும் இடம் கொடுக்காது”

நாய்களையோ விலங்குகளையோ கண்டால், அடித்து விரட்டும் கொடுமைக்காரன் கிடையாது நான். ஆனாலும் என் கட்டுப்பாட்டு பகுதியில் மனிதர்களுக்கு மட்டுமே இடம் என்ற உறுதியில் இருப்பவன்.

எனது விடுதி வளாகத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு பூனைக்கு, சமைத்து மிஞ்சிய மீன் வருவல்களைப் நான் போடுவதை

”இவை எல்லாம் கொடுத்தால், பூனையின் வயிறு கெட்டுவிடும்., பூனைக்கு என்று சிறப்பு உணவுகள் கடைகளில் கிடைக்கும்” என ஒரு நாள் கடிந்து கொண்டாள்.

அடுத்த வாரமும் சாரா வரும்பொழுது,  மெத்தை வைத்த சாய்வு நாற்காலி வெளியில்தான் இருந்தது. அவள் “கார்த்தீஈஈஈஈ ” எனக் கத்தியதில் மகிழ்ச்சி தெறித்தது.

பூனையும் அதனுடன் சில பூனைக்குட்டிகளும் அந்த நாற்காலியில் சுகமாக உறங்கிக்கொண்டிருந்தன.  தனது ஐபோனை எடுத்து சுற்றி வளைத்து புகைப்படங்களாக எடுத்துக் கொண்டாள்.

சில மாதங்களுக்கு முன்னர், தேநீர் சிந்தியதால் , காய வைக்க வெளியே வைத்த நாற்காலியில், குளிருக்கு இதமாக, மெத்தையின் கதகதப்பில் தாய்ப்பூனை தூங்கிக் கொண்டிருந்தது பார்க்கையில் அவ்வளவு அழகாக இருந்தது. அதனால் ஒவ்வொரு இரவும் பத்து மணிக்குப் பிறகு நாற்காலியை
வெளியே வைத்துவிடுவேன்.

 என்னுடைய நேரம், சாரா வரும்பொழுது பூனை இருக்காது, நாற்காலி மட்டும் இருக்கும், அவள் கோபம் அடைவாள். அதோடு மட்டுமல்லாமல், இந்த பூனையையும் சில வாரங்களாக ஆளைக் காணவில்லை, இருந்த போதிலும் ஒவ்வொரு
இரவும் நாற்காலியை மறக்காமல் வைத்துவிடுவேன். பூனையார் காணாமல் போன காரணம் இன்று விளங்கிவிட்டது.  உங்களுக்கு சொன்னதைப்போல , சாராவிற்கும் நாற்காலி வைக்கும் காரணத்தை சொல்லிவிட்டேன். சாராவை இத்தனை மகிழ்ச்சியாக நான் பார்த்ததே இல்லை.

சொல்ல மறந்துவிட்டேன், சாரா இன்றிரவு என்னுடைய அறையில் தான் தங்கப் போகின்றாளாம்.

Wednesday, November 07, 2012

கரோலினா - சிறுகதை


விரலைக் கண்டபின்னரும் மீட்டப்பட அனுமதிக்காமல், வீணை என் தலையை வருடிக்கொடுத்துக்கொண்டிருக்கிறது. நான் காய்ந்த மாடு இல்லை என்பதாலும், கரையை நெருங்கும் நேரத்தில் பொறுமைக் காத்தால், தாழி வெண்ணெய் முழுமையாகக் கிடைக்கும் என்பதாலும் கரோலினாவின் பேச்சை உண்மையிலேயே ரசித்துக் கொண்டிருந்தேன்.

என்னைப் பொருத்தவரை இரண்டு வகையான பெண்கள். அழகிகள், பேரழகிகள் .., என்னை மதித்து பேசுபவர்கள் பேரழகிகள். ஒருநாள் ஏதோ ஒரு டேட்டிங் இணையதளத்தில் காற்று வாங்கிக் கொண்டிருந்தபொழுது கவிதையாக வந்த பேரழகிதான் கரோலினா. பத்து நாட்கள் மின்னரட்டையில் பேசினோம், ஒரிரவு அவளைச் சந்திக்க முடிவு செய்தேன். அதோ அந்த இரவைத் தான் இப்பொழுது கடத்திக்கொண்டிருக்கின்றேன் !!!

வார இறுதியில் மாதிரி விமானம் ஒன்றில் விமானம் ஓட்டப்பழக திட்டமிட்டிருந்ததை ஒத்திவைத்துவிட்டு 14 மணிநேரம்
ரயில் பயணத்திற்குப்பின்னர் இவளைச் சந்திக்க வந்திருப்பதன் மூலம் எனது தேவையை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

இசை, இந்தியா, பாலிவுட் , வண்ணங்கள் என்று பேசிக்கொண்டிருந்தவளை காமத்தை நோக்கி மாற்ற,

”உன்னுடைய மறக்க முடியாத முத்தம் எது?”

அமைதியாக இருந்தாள்.

“முத்தங்கள் கொடுத்து இருக்கிறாயா?”

பொய்யாக முறைத்தாள்.

”பதினான்கு வயதில், முதன் முதலாக என் சம வயது இத்தாலிய நண்பனுக்கு கொடுத்து இருக்கின்றேன்”

“இடம் , பொருள், ஏவல்”

“என் குடும்பத்தினருடன்  குரோசியா கடற்கரை நகரம் ஒன்றிற்கு சுற்றுலாப்போய் இருந்தோம், இரண்டு வாரங்கள், கடலோரத்தில் தனி வீடு, சில மீட்டர் தூரத்தில் இருந்த  வீட்டில் ஓர் இத்தாலியக் குடும்பம், அவர்களின் மூத்த மகன் ஸ்டெபனோ , நீ இருக்கும் ரோம் நகரத்தைச் சேர்ந்தவன் தான்...”

“ம்ம்ம்”

“எனக்கு இத்தாலியனும் தெரியாது, அவனுக்கு ஜெர்மனும் தெரியாது. எங்களுக்குப் பொதுவாகத் தெரிந்தது பத்து பதினைந்து
ஆங்கில வார்த்தைகள் தான், கள்ளங்கபடமற்ற முதல் காதலுக்கு மொழித் தேவையில்லை என்பதை அன்றுதான்
உணர்ந்து கொண்டேன்”

“ம்ம்ம்”

“அவன் அப்பா இத்தாலியைச் சேர்ந்தவர், அம்மா ஸ்விடீஷ்,,,,, இத்தாலிய பதின்ம மிடுக்கும், அவன் அம்மாவின் பூனைக் கண்களும் , விளையாட்டில் விட்டுக்கொடுத்தலும் அவன் மேல் காதல் வயப்பட வைத்துவிட்டது. கடைசி நாளன்று அவனை முத்தமிட்டதுதான் என் வாழ்நாளில் மறக்க முடியாதது, அதன் பின்னர் நூற்றுக்கணக்கான முத்தங்கள் என்னுடைய
ஆண் தோழர்களிடம் இருந்து பெற்று இருந்தாலும், அந்த முதல் முத்தத்திற்கு ஏதும் ஈடு இணையாகாது”

தமிழ்நாட்டில் இருந்த பொழுது, என்னுடைய முதல் முத்தம் அம்முவின் உதட்டைக் கடித்து வைத்ததில் வன்முறையாக முடிந்துப்போனது.


“அவனை அந்த விடுமுறைக்குப் பின்னர் தொடர்பு கொண்டாயா”

“இரண்டு வருடங்கள் கடிதங்கள் பரிமாறிக்கொண்டோம், பின்னர் எனது பெற்றோர் விவாகரத்துப் பெற்றவுடன் எல்லாமே மாறிப்போய்விட்டது, அம்மாவும் நானும் வியன்னா வந்துவிட்டொம், தொடர்பு போய்விட்டது”

“ஆர்குட், பேஸ்புக் என எத்தனையோ இருக்கின்றதே, அவனின் முழுப்பெயர் நினைவு இருக்கிறதா,”

“அவனுடையப் பெயர் வித்தியாசமனது , இத்தாலிய ஸ்விடீஷ் கலப்புப் பெயர், ஸ்டெபனோ ஆண்டர்சன், அவன் அப்பா ஒரு விமானி, அவனுக்கும் விமானியாக வேண்டும் என்பதுதான் ஆசை,”


உலகத்தில் ஒரு நபரை மற்றொரு நபருடன் தொடர்புப்படுத்த, அதிக பட்சம் ஏழு பேர்கள்தான் தேவை என்று எங்கோப் படித்தது நினைவுக்கு வந்தது.  நான் விமான ஓட்டப்பழகப்போகும் பயிற்சியாளரின் பெயரும் ஸ்டெபனோ ஆண்டர்சன் தான். அவனுக்கும் ஏறத்தாழ கரோலினாவின் வயதுதான். ஒரு வேளை அவனாக இருக்குமோ !!!

“ஸ்டெபனோவை இணையத்தில் கண்டுபிடிக்க விருப்பமில்லை, ஏதோ ஒரு நாள் அவனை நேரில் , உலகத்தில்
எந்த மூலையிலாவது ஏதேச்சையாக சந்திப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. பேசிப்பழகிய பத்து நாட்களில் உன்னைச் சந்திக்க விருப்பம் காட்டியது கூட, நீ ரோமில் வசிப்பதுதான், யார் கண்டது உன் நட்புக்கூட அவனை சந்திக்க வழிவகை செய்யலாம்”

மறுநாள் காலை ஸ்டெபனோ ஆண்டர்சனைப் பற்றி கரோலினாவிடம் சொல்லலாம் என்று நினைத்தபடி , அவளுடன் கொஞ்சம் மது அருந்தினேன். கடந்த பத்து வருடங்களில் கற்றறிந்த வன்முறையற்ற முத்தங்கள் கொடுத்தேன்.

இதற்கு மேல், பழையத் தமிழ் சினிமாக்களில் காட்டுவதுபோல பூவுடன் பூ உரசிக்கொள்வதை, பறவைகள் கொஞ்சிக்கொள்வதை, பாம்புகள் பின்னிப்பிணைந்து கொள்வதை எல்லாம் கற்பனை செய்து கொள்ளுங்கள். வீரேந்திர சேவக் போல அதிரடியாக டிரிபிள் செஞ்சிரி எல்லாம் அடிக்கவில்லை என்றாலும், திராவிடைப்போல நிதானமாக இரட்டை சதம் அடித்து இருந்தேன்.

விடியலுக்கு முன்னர், நெஞ்சில் தலைவத்து படுத்திருந்தவளை தோளைச் சுற்றி அணைத்து இருந்தேன்.

“கார்த்தி, என்னுடைய பழைய ஆண் தோழர்கள் கொடுக்காத பாதுகாப்பு உணர்வை, உன் அணைப்பில் உணர்கின்றேன்”

அவளின் நெற்றியில் முத்தமிட்டேன்..

“நான் கொடுத்த கடைசி முத்தங்கள் ஸ்டெபனோவின் நினைவின்றி உனக்குக் கொடுக்கப்பட்டவை”

மௌனமாக இருந்தேன்.

“நன்றி” என்றாள்,  அவளின் நன்றி உடல் மனம் எண்ணம் மூன்றும் பூரணமடைந்திருந்ததை  அவளின் கண்களின் வழியேக் காட்டியது. படுக்கையில் என்னிடம் நன்றி சொன்ன முதல் பெண் கரோலினாதான்.

மறுநாள் கரோலினாவிடம், எனதுப் பயிற்சியாளர் ஸ்டெபனோவைப் பற்றி எதுவும் சொல்லவில்லை.  விமானம் ஓட்டும் பயிற்சியில் இருந்து விலகிக்கொள்கிறேன்  ஸ்டெபனோவுக்கு மின்னஞ்சல் செய்துவிட்டேன்.




Friday, October 26, 2012

எக்ஸ் ஒய் இசட் - சிறுகதை


கொரடாச்சேரி இதுதான் என் சொந்த ஊர் என்று யாரிடமாவது சொன்னால் எங்கள் குடும்பத்தினருக்கு பிடிக்காது. “பில்டிங் காண்டிராக்டர்” அப்படி என்று ஒரு படத்தில் வடிவேலு சொல்வதைப்போல, விஸ்வநாதபுரம், பழவனக்குடி என அருகில் இருக்கும் பெயரில் “சேரி” இல்லாத கிராமங்களை சுட்டி, மேட்டுக்குடிகளாக காட்டிக்கொள்ள எத்தனிக்கும்
சூழலில் வளர்ந்தவன் நான்.

ஆண்டுக்கொருமுறை ஊருக்குப்போகும் பொழுதெல்லாம், என் பெரியப்பா வீட்டில் இருந்து நான்கு வீடுகள் தள்ளி இருக்கும் எக் ஒய் இசட் வீட்டைத் தாண்டும்பொழுது, என் சொந்தக் காரர்கள் எல்லாம் எக்ஸ் ஒய் இசட் இப்பொவெல்லாம் முழுப்பைத்தியமாவே ஆயிட்டான் என்று சொல்லுவார்கள்.

எக்ஸ் ஒய் இசட்டின் பெயர் அதுவல்ல, அது ஒரு குறிப்பிட்ட ஆதிக்க சாதியின் பெருமைப் பெயரைச் சுட்டும் பெயர். அவன் அதைச் சார்ந்தவன் என்பதால், அந்தப் பெயரைவைத்துத்தான் அவனை அழைப்பார்கள்.
கருத்துதான் முக்கியம் என்பதால், அவர் எந்த சாதியைச் சேர்ந்தவன் என்ன என்பதெல்லாம் அவசியமில்லை என்பதால் எக்ஸ் ஒய் இசட் என்ற குறியீடு.

 இதே எக்ஸ் ஒய் இசட் சாதியைச் சேர்ந்தவர்கள் , டெல்டா மாவட்டங்களின் வேறு சிலப்பகுதிகளில் ஏபிசி எனவும் கே எல் எம் எனவும் பட்டம் வைத்துக்கொள்வார்கள். நான் கூட எக்ஸ் ஒய் இசட் என்றாலும் , என் அம்மா வழி ஏபிசி எனப்பட்டம் வைத்துக்கொண்டதால் கொஞ்சம் உயர்குடி ஆகிவிட்டோம் என்ற சிறிய பெருமையும் உண்டு.

சுற்றமேத் திட்டினாலும், என் அப்பா மட்டும் எக்ஸ் ஒய் இசட்டைப் பார்க்கும்பொழுதெல்லாம் காசு கொடுப்பார்.

”எதுக்குமே அசராதவனை ஒரு சின்ன விசயத்தில அசைச்சிட்டானுங்க,, நிஜமான போராளி ”  என்று பைத்தியக்காரனைப் பாராட்டும்பொழுது எல்லாம் என் அப்பாவின் மனநிலையின்  மேலேயே சந்தேகம் வரும்.

எக் ஒய் இசட் டிற்கு இப்பொழுது ஒரு 80 வயது இருக்கும்.  அந்தக் காலத்தில் எக்ஸ் ஒய் இசட் , பெரியாரின் கருத்துக்களில் தீவிர ஈடுபாட்டில் இருந்தவராம்.
 ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில்,  தாழ்த்தப்பட்டவர்கள் என்றழைக்கப்படும் நபர்கள் அதிகம் இருக்கும்  பொதுவுடமைக் கட்சிக்கூட்டங்களிலும் பங்கேற்றதால், எக்ஸ் ஒய் இசட், ஏபிசி, கே எல் எம் என அனைத்துக்கூட்டத்தினரும் அவரின் மேல் கடுங்கோபத்தில் இருந்தனாரம்.

 எக்ஸ் ஒய் இசட்டோட பழைய நண்பர்கள் ரங்கநாதன் , சுவாமிநாதன்
தட்சிணாமூர்த்தி போன்றவர்களுக்கு கூடப்பிடிக்கவில்லையாம். அவரோட சொந்த அண்ணன் சொத்தில் எந்தப் பங்கும் கொடுக்காத பொழுதும்
கவலைப்படாமல் களப்பணி செய்தார் என்று என் அப்பா எக்ஸ் ஒய் இசட்டின் பெருமைப்பாடுவார்.

ஒருதடவை வெட்டாற்றுப்பாலத்தில் வைத்து அடித்துக் கொலை செய்யக்கூடப் பார்த்தார்களாம், அப்பொழுது கூட அசரவில்லை.
அடி வாங்கியபின்னர் அவரின் வேகம் அதிகமாகத்தான் இருந்ததாம்.

அப்பா, எக்ஸ் ஒய் இசட்டை பற்றி சொல்லும்பொழுதெல்லாம், என் அலுவலகத்தில் இருக்கும் பசுபதி தான் நினைவுக்கு வருவான்.
எங்கு யாரு ஒடுக்கப்பட்டாலும், அவனுக்கு தூக்கம் வராது. இந்த சமுதாயத்தை மாற்ற ஏதாவது செய்யவேண்டும் சொல்லிக்கொண்டும்
அவனால் முடிந்ததை செய்து கொண்டும் இருப்பான். அவனுடைய கணினியில் அம்பேத்கார், பெரியார், விபிசிங் படங்கள் வைத்திருப்பது
எனது மேலாளர்கள் சிலருக்குப் பிடிக்காது. நேர்மையானவன், என் வீட்டிற்கு கூட வந்து இருக்கின்றான், என் அப்பாவிற்கு அவனது சிந்தனைகள் பிடிக்கும், அவனையும் பிடிக்கும். வேலையில் எள் என்றால் எண்ணெய் ஆக இருப்பான்.
ஆனாலும், அலுவலக நேரத்தின் பாதியில் இணையம் மேயும் எனக்கு கிடைக்கும் சம்பள உயர்வில்  அவனுக்கு கால்வாசி கூட கிடைக்காது. எங்கு அடித்தால் எங்கு வலிக்கும் என்பது எங்களுக்குத் தெரியும் என எனது மேலாளர்கள் பேசிக்கொண்டதைக் கேட்டு இருக்கின்றேன்.

திரும்ப எக்ஸ் ஒய் இசட்டிற்கு வருவோம், ஏதோ ஒரு நாள் ரங்கநாதன், சுவாமிநாதன், தட்சினாமூர்த்தி குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாய் வாழும் தெரு வழியாக  நமது கதையின் நாயகன் வர, தெருமுனையிலேயே , அந்தத் தெருவில் இருந்த பெண்ணை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக கைது செய்து கிட்டத்தட்ட ஒரு வருடம் நொங்கு நொங்கு என நொங்கிவிட்டனராம். அந்தப் பிரச்சினைக்குப் பிறகு அடங்கியவர்தானாம், பைத்தியம் மாதிரி உலாவுவாராம், யாராவது சோறு போட்டால் சாப்பிட்டு, கிட்டத்தட்ட அரை நூற்றாண்டை கழித்துவிட்டார்.

”சரியான நேரத்தில காயடிச்சிட்டானுங்க,  வேரில வெந்நீரை எப்போ ஊத்தனும்னு அவனுங்களுக்குத் தெரியும்”

”எவனுங்கப்பா ? “ என இது வரை அப்பாவிடம் கேட்டதில்லை.

காலையில் எழுந்தோமா, வழுவழுப்பான தாளில் வரும் ஆங்கில தமிழ் நாளிதழ்களைப் படித்தோமா, பேஸ்புக்கில் இளையராஜா பாட்டைப் போட்டுட்டு, பங்கு வணிகம் பார்த்துட்டு, மிஞ்சிய நேரத்தில் கொஞ்சம் மென் நிரலி அடித்து வீட்டு, மஞ்சள் வண்ணம் பூசிய வீட்டில் என் அம்முவை கட்டியணைத்துக் கொண்டு தூங்குவதுதான் என் வழமையான வாழ்க்கை.

விடுப்பு முடிந்து அலுவலகம் வந்து பின்னர் தெரிந்தது, பசுபதியின் மேல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு  அவனை வேலையை விட்டு நீக்கிவிட்டார்கள் என்று. என்ன பிரச்சினை என்று விசாரித்ததில் , அவனது திட்டக்குழுவில் இருந்த  ஒரு பெண்ணை படுக்கைக்கு பகிரங்கமாக அழைத்தானாம்.

அவனின் வேலை நீக்க செய்தி , நமிபீயாவில் புயலடித்து நான்கு பேர் பலி என்பது எப்படி இருக்குமோ அந்த வகையில்தான் எனக்கு சாதாரணமாக இருந்தது. பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.
அடுத்த வருடம் அமெரிக்கா போனேன். ஒரு வருடம் இருந்தேன். புறநகர்ப்பகுதியில் பங்களா கட்டினேன். ஒரு நாள் அப்பாவுடன் காரில் செல்லும்பொழுது,  ஒரு தெருமுனை மீட்டிங்கில் ஏதோ ஒரு வாழ்வாதார பிரச்சினைக்காகப் பசுபதி பேசிக்கொண்டிருந்தான்.

“தீர்க்கமாக தெளிவாப் பேசுறான், அப்ப மாதிரி, இப்ப எல்லோரையும் எக்ஸ் ஒய் இசட்டுக்குப் பண்ண மாதிரி ஈசியா நசுக்கிட  முடியாது”

என் அப்பா சொன்னதை நான் காதில் வாங்கிக்கொள்ளவில்லை.




Tuesday, October 23, 2012

கடவுள் - பின்நவீனத்துவக் கதை?!!கவிதை

கடவுளுக்காகக் காத்திருந்தேன்
கடவுள் வரவில்லை ...
இறந்துவிட்டார் என்ற செய்தி வந்தது !!!

கண்டிருந்தால் வரவேண்டிய
அதே மகிழ்ச்சி இப்பொழுதும்...
மகிழ்ச்சியுடன்  தலைவலியும்

வேறுதலையை மாற்ற பெட்டியைத் திறந்தால்
பலவற்றில் ஒரு தலையைக் காணவில்லை !!
கதவுத் தட்டப்பட்டது !!!
கிடைத்ததை மாற்றிக்கொண்டு  கதவைத் திறந்தேன்.

கதவுக்கு வெளியேயும் நான்
கையில் காணாமல் போன தலையுடன்
“ நான் கடவுளைக் கொன்றுவிட்டேன்” என்றேன் !! 

உபரி ஓட்டங்கள் - 23-10-2012 (சினிமா , கிரிக்கெட்)

கைதி, ஆட்டோராணி, இதுதாண்டா போலிஸ் தொடங்கி நேற்றைய அருந்ததி, இன்றைய நான் ஈ வரை நான் தெலுங்கு மொழிமாற்றுப்படங்களின் மிகப்பெரும் ரசிகன். அந்தப்புரம் என்ற படம், முதல் பாதி மொழிமாற்றுப்படமாகவும், பிற்பாதி நேரடிப்படமாகவும் இருக்கும். இப்பொழுது வரும் மொழிமாற்றுப்படங்களில் எல்லாம், நகைச்சுவைப்பகுதியை மட்டும் சொருகி நேரடிப்படங்கள் மாதிரியான தோற்றத்தைக் கொடுத்துவிடுகிறார்கள். சரி தமிழில் வந்த மொழிமாற்றுப் படம் என்னவென தேடியதில் நாகேஷ்வரராவ், அஞ்சலி தேவி வில்லியாக நடித்த கீலுகுர்ரம் என்ற படம் தான் முதல் டப்பிங் படம் என்று ராண்டார் கை எழுதிய ஒரு கட்டுரையில் குறிப்பிட்டப்பட்டிருந்தது.  இதில் சுவாரசியமான விசயம் என்னவெனில் , இந்தப்படம் தமிழில் உரிமை வாங்கப்பட்டு, பாலய்யா நாயகனாக நடித்து, எம்.ஜி.ஆர், வி.என் ஜானகி சிறுவேடங்களில் நடிக்க மோகினி என்ற பெயரில் தமிழில் நேரடியாக வெளிவந்து பெரும் தோல்வியடைந்ததாம். இதைப்பார்த்த கீலுகுர்ரம் படத்தின் தயாரிப்பாளர் தெலுங்குப்படத்தை மாயக்குதிரை என டப் செய்து வெளிவிட்டு கொஞ்சம் காசு பார்த்தாராம்.

தகவலுக்கான தரவு - http://www.thehindu.com/arts/cinema/article3790929.ece 

-----

ஒரு கிரிக்கெட் கேள்வி, ஆட்டத்தின் கடைசிப்பந்து, ஐந்து ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி, மட்டையாளர் பந்தை வேகமாக விளாசுகிறார், பந்து தரையில் உருண்டோடி , மெல்ல எல்லைக்கோட்டை நோக்கை நகர்ந்து எல்லைக்கோட்டைத் தொடுகிறது.  அதற்குள் மட்டையாளர்கள் ஐந்து ஓட்டங்கள் ஓடிவிடுகின்றனர். ஆட்டத்தின் முடிவு என்ன? ஏன்?

----

இந்திய அரசாங்காத்தின் தணிக்கைக் குழு, பெரும்பாலான படங்களை பிரச்சினையின்றி தணிக்கை செய்து வெளியிட அனுமதித்தாலும், சிலப்படங்களை கொத்தி குதறி விடுவார்கள். பலக்காட்சிகள் வெட்டப்பட்டுவிடும். அவ்வாறு வெட்டப்படும்பொழுது, ஏன் அந்தக் காட்சி வெட்டப்பட்டது என விதிமுறைகளுடன், ஆவணப்படுத்தப்படும்.  இந்த அதிகாரப்பூர்வத் தளத்தில் திரைப்படங்களின் சென்சார் செய்யப்பட்ட காட்சிகள் என்ன , ஏன் எனவும் அறியலாம். 

http://cbfcindia.gov.in/ வலது மேற்பக்கத்தில் Search Film என்ற பெட்டியில் தேடுங்கள்

-----

தசாவதாரம் படத்தில், கமலின் பல்ராம் நாயுடு கதாபாத்திரம், ஒரு ரிங் டோன் வைத்திருக்கும் எந்தோ சின்னதி ஜீவிதம் நாகேஷ்வரராவ் நடித்த ஸ்ரீமாந்துடு என்ற தெலுங்குப்படத்தில் வரும் பாடல். இந்தப்பாடலுக்கும் கமலுக்கும் இருக்கும் மற்றும் ஒரு சம்பந்தம் கமல் , சிறு வயதில் இந்தப்பாடலுக்கு நடனமைத்திருக்கிறார். கமலஹாசன் எதையுமே காரியம் இல்லாமல் செய்ய மாட்டார்.

---

ரிடையர்ட் ஹர்ட் முறையில் நிறைய ஆட்டக்காரர்கள் ஆட்டமிழந்து இருக்கின்றார்கள். அத்தப்பட்டு, ஜெயவர்த்தனே இருவரும் ரிடையர்ட் அவுட் முறையில் கூட ஆட்டமிழந்து இருக்கிறார்கள். ரிடையர்ட் நாட் அவுட் என்ற முறையில் ஆட்டத்தை விட்டு வெளியேறியவர் கார்டன் கிரீனிட்ஜ். தனது மகளின் சிகிச்சைக்காக ஆட்டத்தின் பாதியில் இருந்து வெளியேறியவரின் ஸ்கோர் ரிடையர்ட் நாட் அவுட் என்ற முறையில் குறிக்கப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, அவரின் மகள் அந்த சிகிச்சையில் பிழைக்கவில்லை.


----

கீழ்க்கண்ட படத்தின் முக்கியத்துவம் என்ன?





Saturday, October 20, 2012

நான் சொன்ன பேய்க்கதைகள் - ஒரு நிமிடக்கதை

”அம்மு அந்தக் கண்ணாடியைப் பார்க்காதே, நம்மளைத் தவிர வேற யாரோ இந்த ரூம்ல வேற யாரோ இருக்காங்க”

ஒவ்வொரு காதலுக்கும் ஒரு துருப்புச்சீட்டு, இப்பொழுது எல்லாம் அம்முவை என் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க உதவுவது, பேய்களைப் பற்றிய புனைவுகளே !!

”அம்மு, நேத்து நைட், ஒரு பேய் உன்னைத் துரத்திட்டு வர்ற மாதிரி கனவு கண்டேன், கையில பெரிய கோடாரி, கருப்புக் கோட்டு போட்டுக்கிட்டு”

“நீ வந்து என்னைக் காப்பாத்தினியா”

“உன்னைத் துரத்துனதைப்பார்த்தேன், பேய் உன் பக்கத்தில வர்றப்ப கனவு கலைஞ்சிடுச்சு”

பேய்க்கதைகளில் என்னை நாயகனாக்கிக்கொள்ள விரும்புவதில்லை. பெரும்பாலான பேய்ப்படங்களில் வரும் நாயகர்கள், பாரதிராஜா படத்தில் வரும் நடிகர் ராஜாவைப் போன்றவர்கள்தாம்.

அம்முவிற்கு படிப்பில் இருக்கும் ஆளுமை க்கு நேர் எதிர்பதம் அவளின்  பயந்த சுபாவம். நூடுல்ஸ் மாதிரி குழப்பமா இருக்கிற அல்காரிதத்தைக் கூட நுனி முதல் அடிவரை , அரைநொடியில் புரிந்து கொண்டு, அட்டகாசமா நிரலி எழுதுபவளுக்கு இந்த பேய் மாதிரியான அமானுஷ்ய விசயங்கள்னா ஒரு திகில். அதனால, அம்முவை சுற்றி ஏதோ ஒரு அமானுஷ்ய வளையம் இருப்பதைப்போலத் தோற்றத்தை உருவாக்கி , நான் மட்டும் அவளைக் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையை விதைத்துக் கொண்டிருக்கிறேன்.

”நீ சொல்லுறது எல்லாம் ஏற்கனவே நிஜமாவே நடந்துட்டு இருக்கோன்னு பயமா  இருக்கு கார்த்தி”,

கல்லூரியில் இருந்து வீடு திரும்பும்பொழுது, சிறிய காட்டுப்பாதையைக் கடந்தாகவேண்டும். ஒரு நாள் அம்முவுடன் கைக்கோர்த்து வந்து கொண்டிருந்த பொழுது, அங்கே யாருமே இல்லாத பொழுதும்,அவளின் கையை விட்டுவிட்டு, இல்லாத ஒன்றை துரத்திப்போய் இரண்டு நிமிடங்கள் கழித்து அம்முவிடம் வந்து

“என்னோட கனவில் வந்த பேய் , அங்க நின்னு உன்னைப்பார்த்துச்சுடா குட்டி, போய் விரட்டிட்டேன்”

அம்முவிற்கு பேய் பயம் காட்டுவதற்காகவே,  ஆங்கில, கொரிய , தமிழ், இந்தி என திகில் படங்களைப் பார்க்க ஆரம்பித்து, பி.டி.சாமியில் இருந்து இணையத்தில் எழுதும் கத்துக்குட்டி பேய் எழுத்தாளர்கள் வரை படித்ததில் எனதுப் புனைவுகள் கொஞ்சம் பரிணாம வளர்ச்சியடைந்த்து, வேற்றுக்கிரகவாசிகளுக்கு மாறியது.

“நாலடி தாண்டா அம்மு இருக்கு, மூக்கு மட்டும் கூர்மையா, மனுஷரூபத்தில, கைக்குப்பதிலா பெரிய ரெக்கை”

என நான் சொல்லிக்கொண்டிருக்கும்பொழுதே, நான் வர்ணித்த அதே உருவம், தூரத்தில் சிறிய விண்கலம் மாதிரி வாகனத்துடன் நின்று கொண்டிருக்க, அம்மு  என் கையை உதறிவிட்டு, அதை நோக்கி ஓட, நான் திகிலிலும் பயத்திலும்  மூர்ச்சையானேன். ஆழ்மனதில், நான் அம்முவிடம் சொன்ன கதைகளில் இல்லாத  தொடர்ச்சி, இப்பொழுது புரிய ஆரம்பித்தது.
---

பிற்சேர்க்கை - இதைத் திகில் கதையாகவும் படிக்கலாம். ஓர் உருவகக்கதையாகவும் படிக்கலாம்.  காதலிக்கு சொல்லுகின்ற பேய்க்கதைகள் ---| ஒவ்வொரு காதலனும் தன் காதலியைக் கட்டுக்குள் வைத்திருக்க எடுக்க பிரயத்தனங்கள்,  எதை நமக்கு சாதகமாக்கிக்கொள்ள நினைக்கின்றோமோ அதுவே பாதகமாவது, கடைசியில் ஏலியன் போல எவனாவது வந்துத் தூக்கிகொண்டு போய்விட, எல்லாம் புரிந்து கொள்ளும்பொழுது டூ லேட்


Saturday, September 22, 2012

அகதி - சிறுகதை

காத்திருத்தல் எனக்குப் பழகிய விசயம்தான் என்றாலும், தகிக்கும் வெயிலில் பேருந்தை எதிர்பார்த்தல் கொஞ்சம் கடினமானதுதான். ரோம் நகரில் கோடையில் வெப்பநிலை 40 யை சர்வசாதாரணமாகத் தொடும் என்பதையும் வெள்ளையாய் இருப்பவர்கள் ஊரில் எல்லாம் வெயில் அடிக்காது என்பதையும் தெரிந்து கொண்டேன்.  என் விடுதிக்குப் போகவேண்டிய பேருந்து ஒவ்வொரு 35 நிமிடங்களுக்கு ஒரு முறைதான், அந்தப் பேருந்தும் ஊர் சுற்றி உலகம் சுற்றி ஒரு 30 நிமிடங்கள் பயணப்படும். ஒரு கையில் கிட்டத்தட்ட 10 கிலோ சுமையுள்ள பை, மறுகையில் ஆண்டிராய்டு சிறுகணினி என மேலடுக்கு கீழடுக்குத் தெரிய சிறு உடைகளில் உலாவிக்கொண்டிருந்த  இத்தாலியப்  பெண்களை ரசித்துக்கொண்டிருந்தேன்.

ரோமின் ஓர் எல்லையான,  அனாநீனா பேருந்து நிலையத்தில் மறு ஓரத்தில் கடைகளை விரித்திருந்த வங்காளதேசத்தவர்களை காவல்துறையினர் வழமைப்போல கடவுச்சீட்டு சான்றிதழ்களை பரிசோதித்துக் கொண்டிருந்தனர்.  அவர்கள் என்னைக் கடந்துதான் சென்றார்கள், இருந்த போதிலும் ஏறத்தாழ வங்கத்தவனை போலக்காட்சியளிக்கும் என்னை எதுவும் கேட்கவில்லை, ஒரு வேளை எனது பொறியியாளர் தோற்றக் கண்ணாடியும், கைக்கணினியும் தேவைப்பட்ட நன்மதிப்பைக் கொடுத்திருக்கலாம். அறிவுசார்ந்த வேலைக்கு வந்திருந்தாலும், கைக்காசைக் கொட்டி படிக்க வந்திருந்தாலும், வெள்ளையர்களைப் பொருத்த மட்டில், மாநிற, கருப்பானவர்கள் எல்லோருமே அகதிகள்தான்.  ஆனாலும் சில சமயங்களில் தோரணையும் , திமிரான பார்வையும் , தேவையற்ற,  இக்கட்டுகளில் இருந்து காப்பாற்றும்.

கையில் இருக்கும் 10 கிலோ சுமையில், என் அம்மா எனக்காக தயார் செய்து இத்தாலி வந்த நண்பனிடம் கொடுத்தனுப்பிய , பருப்பு சாம்பார், கோழிக்கறி , ஆட்டுக்கறி சமைக்கத் தேவையான வாசனைப்பொருட்கள்,  காயவைத்த கறிவேப்பிலை, நம்ம ஊர் மல்லிப்பொடி என ஐரோப்பாவில் வசிக்கும் தமிழ் மாணவர்களுக்கு அரிதற்கரிய விசயங்கள் அனைத்தும் இருக்கின்றன.  இந்தப் பையை வாங்குவதற்காகவே 100 ஈரோ செலவழித்து, விடியற்காலையில் மிலான் வரை சென்று, வாங்கி வருகின்றேன்.  காலையில் இருந்து எதுவும் சாப்பிடவில்லை, கையில் இருந்தது பத்து ஈரோ மதிப்புள்ள தாளும், இரண்டு ஈரோ மதிப்புள்ள நாணயமும்தான். இரண்டு ஈரோவிற்கு பழச்சாறு வாங்கிக்கொண்டு ஒரு வழியாக பேருந்தில் ஏறி அமர்ந்தேன்.

திக்காலுக்கு திக்கால், சிலப்பிரயாணிகள் என பேருந்து வறட்சியாக இருந்தது.

ஏற்கனவே தரவிறக்கம் செய்து வைத்திருந்த “இன்னசென்ஸ் ஆஃப் முஸ்லீம்ஸ்” படத்தின் முன்னோட்டக்காட்சிகளைப் பார்க்க ஆரம்பித்த பொழுது,

“அஸ்லாம் அலைக்கும்” என யாரோ ஒருவர் தோளைத் தொட,  திரும்பிப்பார்த்தேன்.  என் நிறத்தில் ஒருத்தன் என்னைப்பார்த்து சிரித்தான்.

. பார்த்துக்கொண்டிருந்த ஒளிக்காட்சியை சடுதியில் மாற்றிவிட்டு,  அவனை என்னவேண்டும் என்ற தொனியில் பார்த்தேன்.

அனேகமாக வங்காளத்தேசத்தவன் என்பது அவன் பேசிய உடைந்த இந்தி,  சுமாரான இத்தாலியத்தை வைத்து தெரிந்தது. எனக்கு இரண்டு மொழிகளும் அரைகுறை என்றாலும் அவனுக்குப் பசிக்கிறது என்பதும், காசு தரமுடியுமா எனக் கேட்கிறான் என்பது புரிந்தது.  உறுதிப்படுத்திக் கொள்வதற்காக

”இங்கிலீஷ் இங்கிலீஷ்” என்றேன்.

கொச்சையான ஆங்கிலத்திலும் அதையேத்தான் சொன்னான்.

“இருந்தால் கொடுங்கள், இல்லை என்றாலும் பரவாயில்லை, காலையில் இருந்து கடையில் நின்றதால், எதுவும் சாப்பிடவில்லை. காவல்துறை வருவதால் எனது முதலாளி என்னை வீட்டுக்குப்போய்விட்டு நாளைக்கு வரச்சொல்லிவிட்டார்”

அவனின் சூழல் புரிந்தது.  பிச்சையோ உதவியோ , யாராவது என்னிடம் காசு கேட்டால், என்னிடம் அந்த சமயத்தில் பணம் இருந்தால் யோசிக்காமல் கொடுத்துவிடுவேன்.  அது அவனை திருடனாவதில் இருந்து காப்பாற்றுகிறது என்பது என் எண்ணம். ஏதாவது, நாணயங்கள் இருக்கின்றதா என யோசித்ததில், எதுவும் தட்டுப்படவில்லை. இருக்கின்ற பத்து ஈரோவை வைத்துத்தான், அடுத்த படிப்பு உதவித் தொகை வரும் வரை ஒரு வாரம் ஓட்டவேண்டும்.

“காசு இல்லை , வேண்டுமானால் இந்த பழச்சாறை எடுத்துக்கொள்... அண்ணாந்துதான் குடித்தேன்”  என்றேன் ஆங்கிலத்தில்.

அவன் குடித்த வேகம், எத்தனைப் பசியில் இருந்திருப்பான் என்பதைக் காட்டியது.  நன்றி சொல்லிவிட்டு கடைசி இருக்கையில் போய் அமர்ந்து கொண்டான்.

கள்ளச்சிரிப்புடன், “இன்னசென்ஸ் ஆஃப் முஸ்லீம்ஸ்” முன்னோட்டக்காட்சிகளைப் பார்த்துவிட்டு விடுதி நிறுத்தத்தில்,  பேருந்தைவிட்டு இறங்கி நடந்து கொண்டிருந்தபோது,  வாசனைப்பொருட்கள் அடங்கிய பையை பேருந்திலேயே விட்டுவிட்டேன் என்பதை உணர,  அந்த வங்கதேசத்தவன் என்னைக் கூப்பிட்டுக்கொண்டே அடுத்த நிறுத்தத்தில் இருந்து என் பையுடன் ஓடி வந்து கொண்டிருந்தான்.

“சகோதரா, நீங்கள் இதை மறந்து வைத்து விட்டீர்கள்”

பத்து ஈரோத்தாளை எடுத்துக் கொடுத்து ஏதாவது சாப்பிடு என  சொல்லுவதை விட, அவனை எனது விடுதிக்குக் கூட்டிப்போய் சமைத்துப்போடுவது  சரியாக இருக்கும் எனத் தோன்றியது.  அந்தப் படத்தின் முன்னோட்டக்காட்சிகளை நிரந்தரமாக அழித்துவிட்டு, அவனுடன் எனதுவிடுதி அறையை நோக்கி நடந்தேன்.

Friday, September 07, 2012

கருப்பு வெள்ளை கனவு - சிறுகதை


நடிகனாக ஆசைப்பட்டு,  துணை இயக்குனராக வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கும் நான், பொழுது போகாத ஒரு பின்னிரவில், இணையத்தில் பழங்காலத்துப் படமான   கன்னிகா  என்ற  படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்பொழுது , சிறு வயதில் கதவு வைத்த சாலிடர் கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சி நினைவுக்கு வந்தது.

அதில் ஒளியும் ஒலியும் , கிரிக்கெட் பார்த்த காலங்களில் இருந்த ஒரே ஆசை, வண்ணங்களில் அனைத்தையும் பார்க்க வேண்டும் என்பதுதான். வண்ணங்களில் முக்கி எடுத்த பிற்கால எம்.ஜி.ஆர் படங்கள்,  கருப்பு வெள்ளையல்ல என்பதைத் தெரிந்து கொள்ளகூட பதினைந்து வருடங்கள் ஆனது.   40 வருடங்கள் முன்பு வரை, உலகம் கருப்பு வெள்ளையில்தான் இருந்திருக்குமோ என நினைத்தக் காலங்களை கடந்து, வண்ணக் காட்சிகள் வாழ்க்கையில் பழக்கப்பட்டபின்னர், எம்.ஜி.ஆர் களும் சிவாஜிகளும், ஏன் கமலும் ரஜினியும் கூட கருப்பு வெள்ளையில்தான்  மிக அழகாகஇருப்பதாகத் தோன்றியது.

92 உலகக்கோப்பைப் போட்டிகளின் பொழுது, இந்திய அணிக்கான உடை அடர் நீல நிறம் என்பதை என் கனவில்தான் தெரிந்து கொண்டேன். வீட்டுத் தொலைக்காட்சியில், அந்த உடை கருப்பாக இருந்தாலும் இந்தியா ஒரு ஓட்டத்தில் தோற்ற அன்று, கவலையில் தூங்கிய பொழுது, அதே அடர் நீல நிற உடையுடன் கடைசி ஆட்டக்காரர் வெங்கடபதி ராஜுவிற்குப் பதிலாக நான் களம் இறங்கி  , கடைசி ஓட்டத்தை நிறைவு செய்து, ஆட்டத்தை சமனிலை செய்தேன். மறுநாள் காலையில் என் வீட்டில் கனவை சொன்னபொழுது   , கனவில் சரியான நிறத்தைக் கண்டுபிடித்ததை அவர்கள் கவனிக்காமல், ராஜுவிற்க்கு பதிலாக நான் ஆடியதற்காக சொல்லி சொல்லி சிரித்தார்கள்.

அந்தக்கால முறைப்படி, சபையில் ஆடும் பரதநாட்டியத்துடன் திரைப்படம் ஆரம்பமானது. மாயாஜால வித்தைகள் தெரிந்த நாயகனும் கெட்ட ராஜாவின் மகளும் காதலிக்கின்றனர். என்.எஸ்.கிருஷ்ணன் , மதுரம் முறையே நாயக, நாயகியின் தோழன், தோழி. என படம் நாடகத்தனமாக நகர, அப்படியேத் தூங்கிவிட்டேன். ஆனால் கனவில் படம் பலப் பாடல்களுடன் தொடர்ந்தது, இறுதியில், உயிரை ஒளித்து வைத்திருக்கும் கெட்ட ராஜாவின் கூடான புறாவின்  கழுத்து   என்.எஸ்.கிருஷ்ணனால் திருகப்பட்டு ராஜா கொல்லப்படும் பொழுது, திடுக்கிட்டு கண் விழித்தேன். திடுக்கிடலுக்கு இரண்டு காரணங்கள், முதலாவது நகைச்சுவை நடிகரால் எப்படி எதிர்மறை நாயகன் கொல்லப்படுவான், இரண்டாவது, கனவில் வந்தப் படம் முழுவதும் நேரில் பார்த்ததைப் போல வண்ணத்தில் இருந்தது. கொஞ்சம் மனது திகிலாக இருந்தாலும், முழுப்படத்தையும் நிஜத்தில் பார்த்துவிடுவது என முடிவு செய்து பார்த்த பொழுது, ஏற்கனவே இருந்த திகில் இரண்டு மடங்கானது. காட்சிக்கு காட்சி அப்படியே கனவில் வந்தது படத்தில் இருந்தது. கடைசிக் காட்சியில் என்.எஸ்.கிருஷ்ணன் தான் புறாவைக் கொல்லுகிறார்.

கருப்பு வெள்ளை திரைப்படம், கனவில் கலரில் வந்தது என்று சொன்னால் மக்கள் சிரிப்பார்கள். மறுநாள் வேண்டாத வேலையாய், வீணை எஸ்.பாலசந்தரின் ”நடு இரவில்” படம் முழுவதும் பார்த்து விட்டுத் தூங்கிய பின்னரும் கனவு வந்தது.  நடு இரவில் படம் கனவில் வரவில்லை. ஆனால் இந்தக் கனவில், வீணை.எஸ்.பாலச்சந்தருடன் சிவாஜி கணேசனும் பத்மினியும் வண்ணத்தில் நடித்துக் கொண்டிருந்தனர். நடு நடுவே எம்.ஜி.ஆரும் பானுமதியும் வேறு வந்துப் போயினர்.  பயத்தின் உச்சக்கட்டம் வீரம், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, கனவு கலைந்து எழுந்தவுடன், சிவாஜி கணேசன் , பத்மினி , வீணை. எஸ். பாலசந்தர் என கூகுளில் தேடினால், மரகதம் என்றத் திரைப்படம் அகப்பட்டது. கன்னிகா படத்திற்கும் மரகதம் திரைப்படத்திற்கும் என்னவொரு ஒற்றுமை என தேடியதில் உணர்ந்தது பக்‌ஷிராஜா நிறுவனம்தான் இரண்டையும் தயாரித்து ஸ்ரீராமுலு இயக்கி இருக்கிறார்.

முடிவு - 1

இந்தப் படங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் என்று தூங்கிப்போனபொழுது,



”இந்த இதை உடுத்திக்கிட்டு, அந்த ரயில் பொட்டில போய் உட்கார்ந்து வேடிக்கைப்பாரு” என இயக்குனர் சொல்ல,

"சீன் 22, டேக் 1” எனக் காட்சியின் படமாக்கல் ஆரம்பிக்க, கிளாப்போர்டில் மலைக்கள்ளன் என எழுதியிருந்தது.

தூங்கிக்கொண்டிருந்த என்னால் கனவைக் கலைத்து எழுந்திருக்க முடியவில்லை,  நாளைகாலை எனக்காக அழும் மக்களிடம் சொல்லிவிடுங்கள், பக்‌ஷிராஜா ஸ்டுடியோ எடுத்தப் படங்களில் நான் உதிரி நடிகனாக, துணை இயக்குனராக 40 களையும் 50 களையும் 60 களையும் வண்ணத்தில் பார்த்துக்கொண்டிருக்கின்றேன் என !!!

முடிவு - 2


கன்னிகா படத்திற்கும் மரகதம் திரைப்படத்திற்கும் என்னவொரு ஒற்றுமை என தேடியதில் உணர்ந்தது பக்‌ஷிராஜா நிறுவனம்தான் இரண்டையும் தயாரித்து ஸ்ரீராமுலு இயக்கி இருக்கிறார். எம்.ஜி.ஆர் பானுமதி நடித்து, ஸ்ரீராமுலு சம்பந்தப்பட்ட படம் மலைக்கள்ளன்.  இந்தப் படங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி அடுத்த அடுத்த நாட்களின் வேலைப்பளுவால், மறந்து போனது, பார்த்த கன்னிகா படமும் மறந்துப்போனது. கடும் போராட்டங்களுக்குப் பின்னர், தொழில்நுட்பத்தை விரல் நுனியில் வைத்திருக்கும் தலை சிறந்த இயக்குனர் என்ற பெயர் பெற்றேன். ஏதோ ஒரு நாள், மீண்டும் கன்னிகா, மரகதம், மலைக்கள்ளன் படங்கள் நினைவுக்கு வர, அவற்றை எனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வண்ணத்தில் மறு உருவாக்கம் செய்ய முடிவெடுத்தேன், சொல்ல மறந்துவிட்டேன், எனது தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் பக்‌ஷிராஜா ஸ்டுடியோஸ்  !!!!