மொழி அடிப்படையில் உருவாகும் தேசியமே காலங்கடந்து கம்பீரமாக நிற்கும் என்பதற்கு ஐரோப்பிய வரலாற்றுப்பக்கங்கள் உதாரணம். நிறத்தாலும், குணத்தாலும் , நம்பிக்கைகளினாலும் ஒன்றுபோல இருந்தாலும் , ஐரோப்பியர்கள் தங்களை நிலைநிறுத்திக் காட்டிக்கொள்வது மொழியின் அடிப்படையிலேயே இருக்கின்றது. அதற்கு ஒரு மிகச்சிறந்த உதாரணம் பிரெஞ்சு தேசமான பிரான்சு.
14 ஆம் நூற்றாண்டில் உள்ளடி வேலைப்பார்க்கும் துரோகிகளினாலும், போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று சோம்பித்திரிந்த அரசர்களாலும் துண்டாடப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கில தேசமாக மாறிக்கொண்டிருந்த பிரான்சை மீண்டும் முழு தேசியமாக எழுச்சி பெற வித்திட்டவர் ஜோன் ஆஃப் ஆர்க்.
”அந்த சிலுவையை உயரேக் காட்டுங்கள், என் நாட்டிற்காக நான் இந்தத் தீ ஜூவாலைகளில் கரையும் பொழுது, எனது இறைவனை நினைவுகூற விரும்புகின்றேன்” என பிரெஞ்சில் கூறியபடியே மரிக்கும் தருவாயிலும் மொழி, தேசியம், தெய்வீகம் மூன்றையும் இணைத்து பிரான்சை மீட்டெடுத்த குவியப்புள்ளிதான் ஜோன் ஆஃப் ஆர்க் (Jeanne d'Arc).
14 , 15 ஆம் நூற்றாண்டுகளில் பிரெஞ்சு அரசுரிமைக்கானப் போட்டியில் நடந்த போர்கள் நூறு ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்து நடந்தது. வலுவா (House of Valois) குடும்பத்தினரும், இங்கிலாந்த்தைச் சேர்ந்த பிளாண்டஜெனட் (House of Plantagenet) குடும்பத்தினரும் பிரஞ்சு அரசுரிமையை தங்களுக்கே சொந்தம் எனக் கொண்டாடி சண்டையில் ஈடுபட ஆரம்பித்தனர்.

இன்றைய பாரிஸ் நகரம் உட்பட மூன்றில் ஒரு பகுதியான வடக்குப்பகுதியை ஆங்கிலேயர்கள் ஆதரவுப்பெற்ற பருகெண்டிய பிரபுக்கள் ஆண்டு வந்தனர். எஞ்சிய மீதத்தை வலுவா குடும்பத்தை சேர்ந்த புத்திசுவாதீனமில்லாத ஆறாம் சார்லஸ் ஆண்டு வந்தார். பருகண்டி பிரபுக்களின் சூழ்ச்சிகள், தனது ஏழு வயது மகளை இங்கிலாந்து இளவரசரனுக்குக் திருமணம் செய்து கொடுத்து சமாதானம் பேச முயன்றும், தொடர்ந்த இங்கிலாந்தின் படையெடுப்புகள் என பிரெஞ்சு தேசம் கொஞ்சம் கொஞ்சமாக சுயத்தை இழந்து கொண்டிருந்தது. ஏறத்தாழ இதேக் காலக்கட்டத்தில் இன்றைய பிரான்சின் வடக்கிழக்கு கிராமமான தொம்ரெமெவில் ஒரு விவாசயக் குடும்பத்தில் ஜாக்குவஸ் த’ஆர்க் என்பவருக்கும் இஸபெல்லா ரொமே என்பவருக்கும் மகளாக ஜோன் பிறந்தார்.
பருகெண்டிய பிரபுக்களின் நிலப்பகுதியில் இருந்தாலும் ஜோனின் குடும்பம் இருந்த கிராமம் பிரெஞ்சு அரசருக்கு விசுவாசமாக இருந்தபடியால் அடிக்கடி சூறையாடப்பட்டது. பிஞ்சு வயதில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த துரோகிகளின் அட்டூழியம், கொடுங்கோல்தன்மை ஆகியவற்றினால் சுதந்திரம் இல்லாமல் சொர்க்கமே இருந்தும் பயனில்லை எனும் விதை ஜோனின் மனதில் ஆழப்பதிந்தது.
தேசிய எண்ணங்கள் ஆழப்பதிய, தெய்வீகமும் ஜோனைச் சூழ்ந்து கொண்டது, ஜோன் 12 வயதாக இருக்கும்பொழுது, கிறித்தவ புனிதர்களான மைக்கெல், கேத்தரின், மார்க்கரேட் ஆகியோரை தரிசித்ததாகவும் , அவர்கள் ஜோனிடம் ஆங்கிலேயர்களை பிரெஞ்சு மண்ணைவிட்டே விரட்ட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதாகவும் நம்பப்படுகிறது.
ஆறாம் சார்லஸின் கட்டுப்பாட்டில் இருந்த பிரான்சிலும், வடகிழக்கில் இருந்து ஒரு வீரமங்கை வந்து இளவரசரருக்கு (ஏழாம் சார்லஸ்) முடிசூட்டுவாள் என ஒரு நம்பிக்கை பரவிவந்தது.
ஜோனிற்கு 16 வயதாக இருக்கும்பொழுது, பிரெஞ்சு ராணுவத்தளபதி ராபர்ட்டை சந்திக்க முற்படுகிறார். ராபர்ட் சிறு பெண் என ஏளனப்படுத்தினாலும், தொடர் முயற்சிகளினால் ஏற்கனவே உலவி வந்த நம்பிக்கைகளினாலும் , ஏழாம் சார்லஸை சந்திக்க ராபர்ட் அனுமதிக்கின்றார்.
ஜோன் அழகிய இளமங்கையாக இருந்ததால் , பிரச்சினைக்குரிய பருகெண்டிய பிரதேசத்தைக் கடக்கவேண்டி , அவருக்கு ஆணைப்போல திருத்தமான முடிவெட்டு மற்றும் போர் வீரர்களின் உடை தரிக்கப்பட்டது.
ஜோனை சோதிக்க, பணியாள் ஒருவர் ஏழாம் சார்லஸைப்போல வேடமிட்டு வரவேற்றாலும், ஜோன் நேரிடையாக கூட்டத்தில் இருந்த ஏழாம் சார்லஸை மண்டியிட்டு அரசரே என வணங்கியபோது, காத்துக்கொண்டிருந்த நம்பிக்கைத் தேவதை வந்துவிட்டாள் என ஆர்ப்பரித்தனர்.
ஆங்கில - பிரெஞ்சு யுத்தத்தை இறைவனின் பெயரால் ஜோன் எடுத்துச் செல்ல முற்பட்டதைக் கண்டு ஏழாம் சார்லஸ் அஞ்சினார். ஒரு வேளை வென்றால் ஜோன் சூனியக்காரியாகவும், தனது அரசாங்கம் சாத்தானின் கைவண்ணமாகக் கண்டு கொள்ளப்படுமோ என்ற பயம் அவருக்கு. அன்றைக்கு உண்மையில் ஆங்கிலேயர்களைப் பொருத்தமட்டில் ஜோன் ஒரு சூனியக்காரியாகவே பிரபலப்படுத்தப்பட்டாள். இவ்வளவு ஏன், ஷேக்ஸ்பியரின் ஆறாம் ஹென்றி முதல் பாகத்தில் ஜோன் எதிர்மறைக் கதாப்பத்திரமாகவே சித்தரிக்கப்பட்டு இருப்பார்.
ஏழாம் சார்லஸின் ஐயத்தை , எதைத் தின்னால் பித்தம் தெளிந்து சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியும் என்று இருந்த பிரெஞ்சு மதக்குருமார்கள் ஜோன் இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டவள் என நேரிடையாகக் கூறாமல் அதே சமயத்தில் நேர்மை, எளிமை, விசுவாசம் ஆகியனவற்றைக்கொண்ட ஒரு நல்ல கிறித்தவப்பெண் எனப் பிரகடப்படுத்தினர்.
ஓர்லியான்ஸ் நகரத்தை மீட்போம் என்ற ஜோனின் கணிப்பை சோதிக்க, ஜோன் ஓர்லியான்ஸிற்கு அனுப்பப்பட்டார். முதலில் ஓர்லியான்ஸ் பிரபுவின் நம்பிக்கை பெறமுடியாமல், ஒதுக்கிவைக்கப்பட்டாலும் சிறுக சிறுக தனது கணிப்புகளினாலும் சாதுரியமான ஆலோசனைகளினாலும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
எச்சரிக்கை உணர்வுடனேயே சண்டை போட்டு வந்த பிரெஞ்சுப்படைகளுக்கு ஜோனின் அதிரடித் திட்டங்கள் அசர வைத்தன. பெண், அதுவும் பதின்மத்தில் இருக்கும் பெண் படைகளுக்கு தலைமை எடுத்துப் போனது மக்களுக்கும் படைவீரர்களுக்கும் அளப்பரிய உற்சாகத்தைக் கொடுத்தது. ஓர்லியன்ஸின் கோட்டைகள் ஒன்றன் பின் ஒன்றாக ஆங்கிலயரின் வசத்தில் இருந்து விடுவிக்கப்பட்டது. ஓர்லியான்ஸ் நகரை மீட்டு எடுத்தல் இங்கிலாந்து - பிரான்சு க்கு இடையிலான போர்களின் போக்கை மாற்றியது.
தூர் நகரை மீட்டெடுக்கும் முயற்சியில் அம்புப் பட்டு , கழுத்தில் காயம் அடைந்தாலும் போராடி வெற்றியை மீட்டு எடுத்த ஜோனைப் பார்த்து
சோம்பிக்கிடந்த பிரெஞ்சு மக்கள் வீர எழுச்சிப் பெற்றனர். தொடர்ந்து ஆங்கிலேயர் வசம் இருந்த பிரெஞ்சு நகரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மீட்கப்பட்டன. பதாய் போர்க்கள வெற்றிக்குப் பின்னர் ரெய்ம்ஸில் ஏழாம் சார்லஸ் பிரெஞ்சு அரசராக முடிசூடப்பட்டார்.
ஜோன் தனது தொடர் வெற்றிகளினால், பிரான்சின் இதயமான பாரிஸை மீட்டெடுக்க, ஏழாம் சார்லஸின் அனுமதியைக் கேட்டார். வடக்கில் இருந்த பாரிஸை மீட்பது சிரமம் தான் என்ற போதிலும், தயக்கத்துடனேயே ஏழாம் சார்லஸ் ஜோனிற்கு பெரும்படையை தலைமை எடுத்து செல்ல அனுமதித்தார். படையை அனுமதித்த போதிலும் ஏழாம் சார்லஸ் பருகெண்டி பிரபுக்களுடன் அமைதியையே விரும்பினார். மீண்டும் மீண்டும் காயம்பட்டாலும், கடைசி வரை பாரிஸை மீட்கும் களத்தில் இருந்த ஜோன், அரசரின் ஆணையால் முயற்சியைக் கைவிட்டு திரும்ப வேண்டியதாகியற்று.
கொம்பியன் என்ற இடத்தில் கடைசி ஆளாய் ஆங்கிலேய பருகெண்டிய படைகளை எதிர்த்து சண்டைப்போட்டுக் கொண்டிருக்கையில் நிராதரவாய் ஜோன் சிறைப் பிடிக்கப்பட்டார். சிறைப்பிடிக்கப்பட்டவர்களை அக்கால வழக்கப்படி பெரும் பணம் கொடுத்து ஏழாம் சார்லஸ் ஜோனை மீட்பார் என எல்லோரும் எதிர்பார்க்கும்பொழுது ஏழாம் சார்லஸ் யாரையும் பகைத்துக் கொள்ள விரும்பாமல் அப்படியே விட்டுவிட்டார். பருகெண்டியர்கள் ஜோனை ஆங்கில அரசாங்கத்திடம் விற்றனர்.
ராஜ துரோகம் (அதாவது ஏழாம் சார்லஸின் போட்டி அரசரான இங்கிலாந்து ஆதரவு பெற்ற ஆறாம் ஹென்றிக்கு எதிராக ), மதவிதி முறைகளை மீறி ஆண் உடைகள் தரித்தது ஆகிய குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.
“நீ கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவளா?” என்ற கேள்விக்கு, ஆம் என்றால் மதத்திற்கு எதிரானவள் என்றவகையில் தண்டனை அளிக்கப்படும், இல்லை என்றால் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகிவிடும் என்ற நிலையில் ஜோனின் பதில் பின்வருவனவாக இருந்தது.
“நான் ஆசிர்வதிக்கப்பட்டவள் என்றால் கடவுள் என்னைக் ரட்சிப்பார், இல்லை என்றால் என்னை கைவிடுவார்”
சிறையில் இருந்து ஜோன் பலமுறை தப்பிக்க முயன்றாலும் எல்லா முயற்சிகளும் தோல்வியிலேயே முடிவடைந்தது.
ஒரு சார்பான விசாரணைக்குப்பின்னர் , ஜோனிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மே 30, 1431 ஆம் ஆண்டு ஜோன் உயிருடன் கொளுத்தப்பட்டார். நம்பியவர்கள் கைவிட்டாலும், இறைவனின் மேலான நம்பிக்கையை கைவிடாமல் சிறிய சிலுவையை உடையில் தரித்து சாம்பலாகிப்போனார். அவரின் சாம்பல் சைன் நதியில் வீசப்பட்டது.
ஜோனின் மறைவுக்குப்பின்னரும் தொடர்ந்து 22 ஆண்டுகள் நடைபெற்ற ஆங்கில பிரெஞ்சுப் போர்களின் முடிவில் பிரான்சு தனது பிரதேசங்கள் அனைத்தையும் மீட்டு எடுத்தது.
போப் மூன்றாம் காலிக்ஸ்டஸின் முயற்சியால் ஜோனின் மறைவுக்குப்பின்னர் ஜோனின் குற்றச்சாட்டுகள் மறுவிசாரனை செய்யப்பட்டன. ஓர்லியான்ஸ் மங்கை ஜோனின் வீர்தீரத்தினால் மட்டுமே இந்த சுதந்திரம் சாத்தியப்பட்டது என அனைவரும் உணர்ந்தனர். ஜோனிற்கு மாவீரர் என்ற கௌரவம் அளிக்கப்பட்டது.
மாவீரர்கள் மதம் என்னும் சமுத்திரத்திற்குள் உறிஞ்சிக்கொள்ளப்படுவது இயல்பே. போப் பெனடிக்ட் 15 ஆல் ஜோன் மே 16 1920 ஆம் ஆண்டு புனிதப்படுத்தப்பட்டார். வீரமங்கை ஜோன் ஆஃப் ஆர்க், புனிதர் ஜோன் ஆஃப் ஆர்க் ஆக மாற்றப்பட்டு உலகமெங்கும் இருக்கும் கத்தோலிக்க கிறித்தவர்களின் மனதில் என்றும் வாழ்ந்து வருகின்றார். இரண்டாம் உலகப்போரின் போது , பிரான்ஸ் ஜெர்மனியிடம் தொடர்ந்து அடி வாங்கிக்கொண்டிருந்த பொழுது, பிரெஞ்சு மக்கள் , பிரெஞ்சு மக்கள் ஜோன் ஆஃப் ஆர்க்கின் நினைவாக சிலுவையை கொடியின் மையத்தில் கொண்டது அவர்கள் மீள் எழுச்சிப்பெற உதவியது.

ஒவ்வொரு ஆண்டும் மே முதல் வாரத்தில் ஓர்லியான்ஸ் நகரில் ஜோன் ஆஃப் ஆர்க்கின் நினைவாக பெரும் விழா எடுக்கப்படுகிறது. ராணுவ அணிவகுப்புகள், கலாச்சார நிகழ்ச்சிகள் , ஜோனின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் படங்கள், நாடகங்கள் என மக்கள் தங்களின் பிரெஞ்சு தேசிய எழுச்சியை மீள் நினைவு செய்து கொள்கின்றனர்.
ஜோன், இன்று மதத்தின் அடையளமாக மாற்றப்பட்டாலும் , என்றும் அவர், சுயமரியாதையை மீட்டு எடுக்கும் விடுதலைப்போராட்ட வீரர்களுக்கு ஓர் எழுச்சிச் சின்னம்தான். விதைத்தவரே அறுவடை செய்ய வேண்டிய அவசியம் வேண்டியதில்லை. சுதந்திரம் நீண்ட காலக் கனி, கனியும் காலம் வரும்பொழுது மாவீரர்கள் மரணமடைந்தாலும் அவர்களின் முயற்சிகள் வீணாகாது என்பதற்கு ஜோனின் வரலாறு ஓர் உதாரணம்
----
இந்தப் பதிவு ஈழத்தில் தமிழின் மானத்தைக் காக்க போரில் வீர மரணம் அடைந்த ஈழத்து வீரமங்கைகளுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.
--------