Monday, May 02, 2011

ஃபீனிக்ஸ் தேசத்திலே - தொடர்கதை - பாகம் 5


அவளின் மார்போடு அணைத்த என் கைகளை, கோஸியா மென்மையாக தள்ளி விட்டு,

“கார்த்தி, என் உடலுக்கு ஒரு ஆடவனின் ஸ்பரிசம் தேவைதான், ஆனால் மனதில் டிராட்ஸ்கியை நினைத்துக் கொண்டு , உன்னுடன் என்னால் கூட இயலாது, என்னை மன்னித்துவிடு” என்றாள்.

“தேகத்திற்கு மனம் என்ன நினைக்கின்றது என்பதில் பிரச்சினை இல்லை”

அவள் யாரை மனதில் நினைத்துக்கொண்டாலும், இன்பம் எனக்குத்தான் என்பதால் , வார்த்தைகளை வேறு மாதிரி போட்டு எனக்கு இணங்க முயற்சித்தேன்.

“இல்லை கார்த்தி, ஒரு இந்திய குறிப்பாக தமிழ் ஆடவனை நான் காதலித்ததே, ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடு, உங்களது கலாச்சாரத்தில் ஊறி இருப்பதனால்தான், டிராட்ஸ்கி திரும்ப வருவான், அவன் வரும் வரை என் உடல் இச்சையை கட்டுப்படுத்திக் கொள்ள முடியும்”

ஒருவனுக்கு ஒருத்தி என்பது உபரியாக பைபிளுடன் இந்தியாவிற்கு வந்தது என நான் நம்புவதால், அவள் சொன்னதில் எனக்கு உடன்பாடு இல்லை. அத்துடன் டிராட்ஸ்கி என்னவோ உத்தமன் என அவள் நினைத்துக்கொண்டு இப்படி பேசுவது எரிச்சல்தான் வந்தது. இந்த சூழலில் நான் டிராட்ஸ்கியைப்பற்றி எது சொன்னாலும் அவளின் அழுகையில் முடியலாம். நாளை சாவகாசமாக சொல்லிவிட்டு, பிறகு திகட்ட திகட்ட கோஸியாவை ஒரு கைப்பார்க்கலாம் என அவளிடம் இருந்து விலகி, வோட்காவை இன்னொரு சுற்று ஏற்றிக்கொண்டு தூங்கிப்போனேன்.

மறுநாள் காலையில் மார்ச்சின் என்னருகில் வரும்பொழுதெல்லாம் அசூயையாக இருந்தது. கோஸியா என்னைப்பார்த்து கண் சிமிட்டிய பொழுதெல்லாம் , வேண்டும் என்றால் மார்ச்சினை எடுத்துக்கொள் சொல்லுவது போல் இருந்தது.

போலாந்து பாரம்பரிய காலை உணவு வகை என முட்டைப்பொறியல் செய்து கொடுத்துக்கொண்டே,

“உன்னுடைய வேலை விசயம் என்னவாயிற்று”

“என்னைத் தேர்ந்தெடுத்து விட்டார்கள், இன்னும் இரண்டு வாரங்களில் கொசோவா புறப்பட்டு போய்விடுவான்”

கொசோவா என்றதும் அவளின் முகம் மாறியது.

“உள்நாட்டுப்போருக்குப்பின்னர் அந்த நாடு இப்பொழுதுதானே தட்டுத் தடுமாறி வளர்கிறது, அங்கு சம்பளம் குறைவாகத்தானே கிடைக்கும், மென்பொருள் பொறியாளனான உனக்கு, மேற்கு ஐரோப்பாவிலே நல்ல சம்பளம் கிடைக்குமே”

“இல்லை, நான் சேரப்போகும் வேலையின் திட்டத்தை சரியாக முடித்துக் கொடுத்துவிட்டால், அடுத்து ஐந்து தலைமுறைகள் உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு நான் பொருளாதார மேம்பாடு அடைவேன்”

“ஏதேனும் வங்கியை கொள்ளையடிக்கப்போகிறாயா” என்றாள் சிரித்தப்படியே

என்ன பதில் சொல்லலாம் என்று சிலவினாடிகல் மவுனமாய் இருந்தபொழுது “கோவித்துக்கொள்ளாதே, நான் விளையாட்டாகத்தான் சொன்னேன்” என்றாள்

”வங்கியைக் கொள்ளையடிக்கும் வேலை இல்லை, ஆனால் நான் பார்க்கப்போகும் வேலையில் அதைவிட சவால்கள் அதிகம்”

கோஸியாவின் முகம் இறுக்கமாக, “நானும் விளையாட்டாகத்தான் சொன்னேன்” என்ற பொய்யை சொல்லிவிட்டு , பேஸ்புக் இணையதளத்தைத் திறந்து, டிராட்ஸ்கியின் முகப்புப் பக்கத்தை கோஸியவிடம் காட்ட முடிவு செய்தேன். மார்ச்சினும் இருப்பதால், அவளைத் தேற்றுவதற்கு வசதியாக இருக்கும் என்று , கோஸியாவையும் மார்ச்சினையும் அருகில் அழைத்தேன்.

டிராட்ஸ்கி திருமண கோலத்தில் இருக்கும் படத்தைப் பார்த்தவுடன், ஆங்கிலம், போலிஷ் மொழியில் கெட்ட வார்த்தைகளைக் கொட்டி விட்டு அழ ஆரம்பித்தாள்.

”மார்ச்சின், நீ அன்று சொன்னது சரிதான், டிராட்ஸ்கி நல்லவனாக இருக்க வாய்ப்பு இல்லை என்பது இன்று புரிகிறது”

கோஸியா வெடித்து அழ ஆரம்பிக்க, மார்ச்சின் அவனைத் தேற்றிக்கொண்டு இருந்தான்.

மாலை வரை கோஸியா யாருடனும் பேசாமல் வெறித்துப்பார்த்தபடி, ஏதோ ஏதோ எண்ண ஓட்டங்களுடன் அமர்ந்திருந்தவள், தன்னுடைய மடிக்கணினியை எடுத்துக்கொண்டு வந்து என்னருகில் வந்தமர்ந்தாள்.

“கார்த்தி, இங்கே பார், அவனை எத்தனை நம்பகமானவன் என நினைத்து இருந்தால், இத்தனை நெருக்கமாக புகைப்படங்களுக்கு காட்சியளித்து இருந்திருப்பேன், நம்பிக்கைத்துரோகி”

பலப்புகைப்படங்களைக்காட்டினாள், அவற்றில் சிலவை சாதரணமாக காதலர்கள் இருப்பது போல இருந்தாலும் சில படங்களை எங்கேயோ பார்த்தது போல இருந்தது. பொழுது போகாத நேரங்களில் இணையத்தில் கவர்ச்சிப்படங்களைத் தேடிக்கொண்டிருக்கையில் கிடைக்கும் சிலப்படங்கள் மனதில் அப்படியே நின்றுவிடும். அதில் ஒன்று கோஸியா உள்ளாடைகளுடன் டிராட்ஸ்கியின் தோள் பட்டையில் ஏறி யோகாசனம் வகையில் அமர்ந்திருக்கும் புகைப்படம். அவளுடைய மடிக்கணினியிலேயே, என் நினைவில் இருந்த அந்த இணையதளத்தைத் தேடி, டிராட்ஸ்கியின் முகம் மட்டும் மறைக்கப்பட்ட அந்தப் புகைப்படத்தைக் காட்டினேன்.

என் இனத்தவனால் , நம்பிக்கை, கண்ணியம் எல்லாம் பாழ்படுத்தப்பட்ட சூழலில் இருக்கும் ஒரு பெண்ணை தேற்றுவது கடினமாக இருந்தது. மார்ச்சினுக்கும் கோஸியாவிற்கும் அழுகையும் ஆத்திரமும் கலந்து நடந்து கொண்டிருந்த விவாதத்தில் இருந்து மெல்ல விலகிக்கொண்டேன். என்னுடைய ஸ்கைப்பில் என்னுடைய கொசோவா திட்டப்பணிக்கான மேலாளரிடம் இருந்து அழைப்பு வந்தது. நான் தமிழில் பேச ஆரம்பிக்க, தூரத்தில் மார்ச்சின் என்னுடைய பேச்சை அவனது கைபேசியில் பதிவு செய்து கொண்டிருந்ததை என்னுடைய போராளி மூளைச் சுட்டிக்காட்டியது.

தொடரும்6 பின்னூட்டங்கள்/Comments:

said...

கதை சூடு பிடிக்குதே..போர்வைக்குள்ள அவ்ளோதானா..

said...

யோகாசனம் பண்ணா நல்லது தானே?

said...

கிலுகிளுப்புடன் இயங்கும் போராளியின் மூளை !!!

said...

கிளுகிளுப்பு + பரபரப்பு...

said...

அடுத்தப் பகுதி எப்போ அண்ணே?

said...

thodarum.....eppo?