Wednesday, May 04, 2011

இயற்கை என்னும் ... - சிறுகதை

என் வீட்டு ரோஜா வருவதாலோ என்னவோ , அந்தப் பூங்காவின் எல்லா மலர்களும் புன்னகைத்துக்கொண்டிருந்தன. என் மனைவி அம்மு வழக்கம்போல சிடுசிடுவென முன்னால் வேகமாக நடக்க, நானும் எனது குட்டி தேவதை அஞ்சலிப்பாப்பாவும் ஒவ்வொரு பூவிடமும் பேசிக்கொண்டே வந்து கொண்டிருந்தோம். ஐரோப்பிய வசந்தகாலம் அங்கிருந்தவர்களின் முகத்தில் பூக்களைப்போல பூரிப்பைத் தந்து கொண்டிருந்தது. தொடர்ந்து இரண்டு வாரங்களாக நல்ல வெயில் காட்டுவதால் ஐரோப்பிய வெள்ளையர்கள் கொஞ்சம் மாநிறமாக மாறிக்கொண்டு இருந்தனர். அடுத்த ஒரு வாரத்திற்கும் மிதமான வெப்பம் இருக்கும் என்பதுதான் தட்பவெப்ப நிலை முன்னோட்டமாக ஊடகங்களில் கூறிக்கொண்டு இருந்தனர். எனக்கு இந்த வெயில் என்னவோ பிடிக்காது.


“கார்த்திபா, கார்த்திபா பூவெல்லாம் எப்படிப்பா பேசும்”

“வாசனை வழியா பேசுண்டா குட்டி”

“எனக்கு ஏன் அது பேசுறது எல்லாம் கேட்கமாட்டேங்குது” என் கன்னத்தை தடவியபடியே அஞ்சலிப்பாப்பா கேட்க, பதில் சொல்வதற்குள்

“குழந்தையையும் இயற்கை அது இதுன்னு பேசி கெடுத்துடாதீங்க, நாலு இங்கிலிஷ் வார்த்தை பேசி, இங்கிலிஷை இம்ப்ரூவ் பண்றதை விட்டுட்டு , சாமியார் மாதிரி பேசிட்டு இருக்கீங்க”

பெண்கள் எப்படி வருடங்களில் மாறிவிடுகிறார்கள். இதே பூங்காவில் தான் மலர்களையும் செடி மரங்களையும் பற்றி அம்முவுடன் பேசிப்பேசி அவளின் மனதை வென்று மனைவியாக்கிக்கொண்டேன். அஞ்சலிப்பாப்பா பிறந்த இந்த மூன்றரை வருடங்களில் பொருளாதாரத்தை நிலை நிறுத்திக் கொள்ளும் போராட்ட வாழ்க்கையில் பழைய விசயங்களை மறந்து விட்டாளோ எனத் தோன்றும்.

“பூக்கள் பேசுவது கூட புரியுண்டா செல்லம்” அம்முவின் பேச்சைக் கவனத்தில் கொள்ளாமல் எனது இளவரசியுடன் பேச்சைத் தொடர்ந்தேன்.

“எப்படி எப்படி கார்த்திபா” கார்த்திபா எனக்கூப்பிடும் பழக்கம் அப்படியே அம்முவிடம் இருந்து அஞ்சலிப்பாப்பாவிடம் தொற்றிக்கொண்ட ஒன்று.
அம்முவை குழந்தைப் பருவத்தில் இருந்து பார்க்க முடியவில்லையே என்ற குறையை அஞ்சலிப்பாப்பா தீர்த்து வைத்துக் கொண்டிருந்தாள். குழந்தை பிறந்ததில் இருந்து என் பாசம் அன்பு எல்லாம் அம்முவிடம் இருந்து அஞ்சலியிடம் குவிந்து விட்டதால், அம்முவிற்கு பொறாமையோ எனக்கூட எனக்குத் தோன்றும்.

“மென்மையா பூக்களையும் செடிகளையும் மரங்களையும் தொட்டு மனசுக்குள் ஏதாவது சொன்னா நமக்கு பதில் சொல்லும்” குட்டிப்பாப்பாவின் தலையை வருடிக்கொண்டே சொன்னேன்.

”அப்பாவும் பொண்ணும் இப்படியே பேசிப்பேசி லூசா ஆகிடுங்க, என்னால இதுக்கு மேல நடக்க முடியாது” என எங்களைத் திட்டிக்கொண்டே பெரிய மரத்தின் அடியில் புல்தரையில் அமர்ந்து கொண்டாள்.

“கார்த்திபா கார்த்திபா, அந்த மரத்துக்கிட்ட பேசிட்டு வரவா” என என் பதில் எதிர்பாராமல் அஞ்சலிப்பாப்பா மரத்திற்கருகில் ஓடிபோனது.

“அம்மா, மரத்துக்கிட்ட என்ன கேக்க”

“மதியானம் வெதர் எப்படி இருக்கும்னு கேளு”

அஞ்சலிப்பாப்பாவிற்கு வெதர் என்றால் புரிந்துருக்காது. இருந்தாலும் குழந்தை கண்ணை மூடிக்கொண்டு, சிலவினாடிகள் எதோ முணுமுணுத்து விட்டு, திரும்ப ஓடி வந்து என் கழுத்தைக் கட்டிக்கொண்டது.

“மரம் என்ன சொல்லுச்சு தங்கம்”

“இன்னக்கி நல்லா இருக்கும்னும் சொல்லுச்சு கார்த்திபா”

கொஞ்சம் இளைப்பாறிவிட்டு வீட்டிற்கு கிளம்பலாம் எனும்பொழுது மேகங்கள் சூழ்ந்து இருட்ட ஆரம்பித்தது. ஐரோப்பியர்களுக்கு மழை என்றால் எட்டிக்காய். மழை தூறல் போடுவதற்கு முன்னர் காருக்குள் வந்து அடைந்தோம்.

அதிவிரைவு சாலையில் வேகமாக காரை செலுத்திக் கொண்டிருக்க மழை வலுவடைந்தது. பின்னிருக்கையில் அஞ்சலிப்பாப்பா தூங்கிக்கொண்டிருந்தாள். என் தோளில் சாய்ந்த அம்மு

“அந்த மரம் பாப்பா கிட்ட சரியாத்தான் பதில் சொல்லி இருக்கு, மரங்கள் செடி கொடிக்கு மழை பெய்தால் தானே நல்ல வெதர்”


3 பின்னூட்டங்கள்/Comments:

said...

romba menmayaana kathai anna! arumaya ezhithirukkeenga!

said...

//“அந்த மரம் பாப்பா கிட்ட சரியாத்தான் பதில் சொல்லி இருக்கு, மரங்கள் செடி கொடிக்கு மழை பெய்தால் தானே நல்ல வெதர்”
/ it says a lot ,nalla iruku selva

said...

:-)

நல்லாருக்குது.