Saturday, June 12, 2010

இராவணன் - சிறுகதை

கலிகாலத்தில் ராமர்களிடம் அடிவாங்குவது கண்டிப்பாக ராவணன்கள் இல்லை என்பது மட்டும் அந்த கொசோவோ அகதி என் மூக்கில் மூன்றாவது முறை குத்தியபொழுது நன்றாகவே விளங்கியது. உடன் என்னுடன் மது அருந்திக் கொண்டிருந்த அப்பாவி கணேசன் என்னை அடித்தவனை தாக்கப் பாய, நான் தடுத்து அப்பாவி கணேசனுடன் வெளியேறினேன்.

கொசோவோ ஆள் ஏன் என்பதை அடித்தான் என்பது எனக்கு விளங்கியதால் எந்த எதிர்ப்பும் காட்டாமல் வெளியேறுவதுதான் சரி எனப்பட்டது. எனது புதிய அறை நண்பன் வாட்ட சாட்டமான கணேசனால் நான் அடிவாங்கிவிட்டு பேசாமல் வருவது பிடிக்கவில்லை.

'நீங்க தடுக்கலேன்னா, அவனை தோலை உரிச்சி உப்புக்கண்டம் போட்டிருப்பேன்'

அப்பாவிக்குள் இத்தனை ஆக்ரோஷமா !!முந்தைய அறை நண்பன் ரவிபிரசாத் மேனன் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் என்னை மட்டும் அடிவாங்க வைத்துவிட்டு தப்பித்தது நினைவுக்கு வந்தது. இப்போ நான் அடிவாங்குனது கூட ரவிபிரசாத்தினால் தான். தமிழ் பேசத் தெரிந்தவன் என்ற ஒரே காரணத்திற்காக அறையில் சேர்த்த பாவம் என்னை மட்டுமல்லாமல் எவனோ ஒருத்தனையும் போய் தாக்கியதுதான் பரிதாபமாக இருந்தது.

எச்சில் கையினால் காகத்தைக் கூட ஓட்டாத ரவிபிரசாத் ரயில்நிலையத்தை ஒட்டினாற்போல இருந்த உணவகத்தில் போய் சாப்பிடலாம் என்றபொழுது எந்தப் பொறியும் தட்டவில்லை. உணவகத்தின் பெயர் டிராய், பெயரைப்பார்த்த பொழுதாவது நான் வரமாட்டேன் என ஒதுங்கி இருக்கலாம். டிராய் உணவகத்தை நடத்திக் கொண்டிருந்தது என்னை அடித்த கொசோவோ நபர்தான். அவனும் அவன் மனைவியும் நடத்திக் கொண்டிருந்தார்கள். கோமாதா எங்கள் குலமாதா என புராணக்கதைகளை அறையில் அள்ளிவிட்டுக்கொண்டிருக்கும் ரவிபிரசாத் மாட்டிறைச்சியுடன் வழங்கப்பட்ட அரிசிச் சோற்றுடன் அந்தப் பெண்ணையும் சேர்த்து விழுங்கிக் கொண்டிருந்தான்.

சுவீடனில் அகதிகளின் மறுவாழ்வு என்றால் எதாவது உணவகம் வைத்துக் கொடுத்துவிடுவது அல்லது கூட்டிக் கழுவத் தேவையான அளவிற்கு இந்த மொழியைக் கற்றுக்கொடுத்து அடுத்த தலைமுறைக்கு அடிமை சேவகம் செய்ய ஆட்களைத் தயார் செய்வது. முதலில் யூகோஸ்லாவியா உள்நாட்டுப்போர், பின்னர் செர்பியாவுடன் போர் என அதிகம் அடிபட்டவர்கள் கொசோவோ நாட்டவர்கள். நாற்பதைக் கடந்தத் தோற்றத்துடன் கணவன், தோற்றத்தில் இளமையான கவர்ச்சியான மனைவி இருவருமே நன்றாக ஆங்கிலம் பேசினார்கள், நாங்கள் வருவது இதுதான் முதன்முறை என்பதால் நன்றாக கவனித்தார்கள்.

அடுத்தவார இறுதியில் மீண்டும் அங்கு சாப்பிடச் சென்றபொழுது கணவன் இல்லை. மனைவி மட்டுமே இருந்தாள். போன வாரத்தை விட முகப்பொலிவு அதிகமாக இருப்பதைப்போல தெரிந்தது. வழமையான உணவையே சாப்பிட்டுக்கொண்டிருக்கும்பொழுதுதான் கவனித்தேன். அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள். நோக்கிக் கொண்டே இருந்தனர். சாப்பாடு நூறு குரோனர் என்றபொழுதும் 50 குரோனர்களை மட்டுமே வாங்கிக் கொண்டு மார்ஷல் டிட்டோவின் பிறந்த நாள், அதனால் சிறப்புச் சலுகை என்று சொல்லி, ரவிபிரசாத்திற்கு சிறப்பு சிரிப்பையும் கொடுத்தது, அவள் சொன்னது பொய் எனத் தெளிவாகக் காட்டியது.

அடுத்தடுத்து அங்கு சாப்பிடச் சென்றபொழுது கொசோவோகாரனிடம் பழைய சினேகம் இல்லை, நாங்கள் வரும்பொழுதே அவனது மனைவியைத் திட்ட ஆரம்பிப்பான். அவள் ஏதாவது பரிமாற அல்லது முகப்பிற்கு வந்தாலோ அவன் ஏசுவதன் அர்த்தம் செர்பிய அல்பேனிய மொழி தெரியாமலேயே அவனது முகபாவத்தில் தெரியும். தோட்டக்காரனுக்குத்தான் சரியாகத் தெரியும் திருட்டு மாங்காய் அடிக்க நினைப்பவன் எவன் என.

உணவும் கல்வியும் மலர்ச்சியோட தரப்படனும். வேண்டா வெறுப்பாகக் கொடுத்தால் இரண்டுமே செறிக்காது. நான் ரவிபிரசாத்துடன் அங்கு சாப்பிடப்போவதை நிறுத்திக் கொண்டேன். திடிரென ஒருநாள் ரவிபிரசாத் அறையைக் காலி செய்து கொள்வதாகவும் இரண்டாயிரம் குரோனர் கடனும் வேண்டும் எனக் கேட்டான். ஏன் எதற்கு என நானும் கேட்கவில்லை, அவனாகவும் சொல்லவில்லை. சிலவாரங்கள் கழித்து எதேச்சையாக டிராய் உணவகத்தின் வழியாகச் செல்லும்பொழுதுதான் , அந்தக் கடையில் இருந்து கணவன் என்னைப்பார்த்து நடுவிரலைக் காட்டி ஏதோ திட்டிக்கொண்டிருப்பதை கவனித்தேன். கடையில் அவன் மனைவியைக் காணவில்லை. வேறு ஒரு பிலிப்பைன்ஸ் பெண் எடுபிடி வேலைகள் செய்து கொண்டிருந்தாள்.

அதன்பின்னர் அந்தக் கொசோவோ ஆளைப்பார்த்தது சற்று முன்னர் நான் அடிவாங்கிய பொழுதுதான். ரவிபிரசாத்தைப் பற்றி சொல்ல ம்றந்துவிட்டேனே, என்னிடம் வாங்கிய இரண்டாயிரம் குரோனர்களையும் கொடுக்கவில்லை, ஆர்குட் பேஸ்புக் அனைத்தையும் அழித்துவிட்டான்.

அடிவாங்கிய காயம் எல்லாம் ஆறிய பின்னர் ஒரு அமைதியான மாலைப்பொழுதில் , அப்பாவி கணேசன் என்னிடம் கேட்டது

'டிராய் ரெஸ்டாரன்ட் போலாமா !!'

15 பின்னூட்டங்கள்/Comments:

Unknown said...

கார்த்தி, //'டிராய் ரெஸ்டாரன்ட் போலாமா!!'?// இதயே தலைப்பாக வைத்திருக்கலாமே?

நிஹேவி said...

உங்களால் மட்டுமே எழுத முடியும் உண்மையை பொய்யாக்கவும்,பொய்யை உண்மையாக்கவும்.எனக்கு தெரியாம போச்சே அப்படி ஒரு உணவகம் ronnebyல் முந்தையே சொல்லிருக்கலாமே!!!
உணவும் கல்வியும் மலர்ச்சியோட தரப்படனும். வேண்டா வெறுப்பாகக் கொடுத்தால் இரண்டுமே செறிக்காது. அருமையான வரி, கூடவே கலவியிம் சேர்த்திருக்கலாம்.

Alag said...

ஹ ஹ ஹ .........
கலிகாலத்தில் ராமர்களிடம் அடிவாங்குவது விபிஷணன்கள் தான் என நான் நினைக்கிறன்.
உங்கள் கதையில் தவறு இராவணன் மட்டும் செய்யவில்லை. ராமன், விபிஷணன் எல்லோரும் குற்றவாளிகள் தான்.
விபிஷணன் தான் பெரிய குற்றவாளி. இருக்க இடம் கொடுத்து கடைசியில் காசும் கொடுத்து அனுப்பிய அவர்
ரொம்ப ஆஆஆஆஆஆஆஆஆஆஆ நல்லவர் ........................
அடிக்க முனைந்த அ......... கணேசன் உங்களால் குற்றவாளி ஆக்கப்பட்டார் !!!!!!!!!!!!!!!!!!!

Enfielder said...

எச்சரிக்கை :
இனிமேல் எங்கள் தலைவர் அப்பாவி கணேசன் பெயரை உங்கள் கதைகளில் பயன்படுத்தினால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என எச்சரிக்கை செய்கிறேன் ....

The Majuscule Tornado said...

நான் அதை வழிமொழிகிறேன்..!!! விளைவுகள் மிகக் கடுமையாக இருக்கும்..!!!

Alag said...

திரு பாலா அவர்களே என்ன செய்வீர்கள் அதையும் சொல்லுங்கள்
பார்த்து விடலாம்!!!!!!!! வினையூக்கி தாங்கள் அ.......கணேசனை உபயோகித்து
பல சுவாரசியமான கதைகள் தொடர்ந்து எழுதவும். வாழ்த்துக்கள் !!!!!!!!!!!!!!!

Swengnr said...

வணக்கம்,
அற்புதமான பதிவு!
அன்பு பதிவர்களே/நண்பர்களே,
என்னுடைய முதல் பதிவு இங்கே போட்டு இருக்கிறேன். தயவு செய்து பாருங்கள், பிடித்தால் ஓட்டு போடுங்கள்!
http://kaniporikanavugal.blogspot.com/

ரோகிணிசிவா said...

//ரவிபிரசாத்திற்கு சிறப்பும் சிரிப்பும் கொடுத்தது, அவள் சொன்னது பொய் எனத் தெரிந்தது.//
enna oru porammai
//உணவும் கல்வியும் மலர்ச்சியோட தரப்படனும். வேண்டா வெறுப்பாகக் கொடுத்தால் இரண்டுமே செறிக்காது. //
super ,

சென்ஷி said...

:)))

Unknown said...

இன்றைய டாப் இருபது வலைப்பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்

Nathanjagk said...

புதுமையான கதைக்களன். சுருக்கமான வரிகள்.
நல்லாயிருக்கு:)))

Anonymous said...

நல்லா இருக்கு... வித்தியாசமாவும் இருக்கு...

Karthick Chidambaram said...

நல்லா எழுதி இருக்கீங்க.

அன்புடன் அருணா said...

ஒரு பேய்க்கதைக்காக வெயிட்டிங்க்!

TBR. JOSPEH said...

நல்லதொரு சிறுகதை ஆசிரியராய் மாறிவிட்டீர்கள் செல்வா. வாழ்த்துக்கள்.