Friday, June 11, 2010

ஆப்பிரிக்கா என்பது ஒரு கண்டம், நாடல்ல - சிறுகதை

வெகுசில விசயங்கள் மட்டுமே தெரிந்து இருந்தாலும் தனக்குத் தெரியாது எனச் சொல்லும்பொழுது நிறைவாக இருக்கும். "இந்தி நஹி மாலும்" எனச் சொல்லும்பொழுதெல்லாம் எனக்கு ஒரு சின்ன குதுகலம். குதுகலத்தின் நீட்சியாக தமிழ் அடையாளங்களைக் கர்வமாக காட்டிக்கொள்ள என்றுமே தவறியதில்லை. வாசுதேவனுக்கும் எனக்கும் அடிக்கடி இதிலேதான் சண்டை வரும். மொழி விசயத்தில், கற்றுக்கொண்டு அதை பேச மறுப்பதில் நான் பிரெஞ்சுக்காரர்கள் மாதிரி.

"நாளைக்கே எனக்கு சிவப்புக்கலர்ல பாஸ்போர்ட் கிடைச்சிட்டா கடைசிவரை கூட இருக்கப்போவது தமிழ் அடையாளம் தான்" என உக்கிரமாகச் சொல்லத்தோன்றினாலும் எனது தேசப்பற்று கேள்விக்குறியாக்கப்படுமே என அவனைச் சீண்டுவதில்லை.

முதல் காதலில் சாதியை விட்டுக்கொடுத்தேன், இரண்டாம் காதலில் மதத்தைத் தூக்கி எறிந்தேன், ஆனால் தமிழ் அடையாளத்தை ஒளித்து வைக்க கற்பனையிலும் நினைத்ததில்லை. தமிழைத் தொலைப்பது என் சிந்தைகளைத் தொலைப்பதற்கு சமம் என நாட்குறிப்பில் எழுதிவிட்டு அன்று மாலை கல்லூரியில் நடக்கவிருந்த எத்தியோப்பிய மாணவர்களின் கலை நிகழ்ச்சிக்கு செல்ல தயாரானேன்.

எத்தியோப்பியாவின் பாரம்பரிய நடனங்களைத் தொடர்ந்து நடந்த இரவு விருந்தில் சக மாணவர்களிடம் ஆட்டம் போட்டுக்கொண்டிருந்த வாசுதேவன், நானும் எட்வர்டும் பேசிக்கொண்டிருந்த இடத்திற்கு வந்து

"எட்வர்டு டீச் மி சம்திங்ஸ் இன் ஆப்ரிக்கன்ஸ்"

வாசுதேவனை முறைத்துவிட்டு என்னைப்பார்த்த எட்வர்டிடம்

"ஹி மீன்ஸ் அம்ஹாரிக் லாங்குவேஜ்"

எட்வர்டு பதில் சொல்லத் தொடங்குவதற்கு முன்னமே வாசுதேவன் எழுந்து சென்று கருப்பு பெண்களைத் தவிர்த்து, பொன்னிற கூநதலழகிகளுடன் திரும்ப ஆட ஆரம்பித்துவிட்டான். எத்தியோப்பிய நிலப்பரப்பில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட புனா விதைகள் எப்படி காப்பி பானமாக உலகை அடிமைப்படுத்தியது என்பதை அதை பருகியபடியே பேச ஆரம்பித்ததில் நேரம் போனதே தெரியவில்லை. எட்வர்டை வகுப்பு மாணவனாகத் தெரிந்து இருந்தாலும், நட்பாக அளாவளாவுவது இதுதான் முதல் தடவை. விக்கிப்பீடியா குறிப்புகளை நினைவில் கொண்டு வந்து, எத்தியோப்பிய விசயங்களைப் பேசபேச அவனுக்கு என்னுடன் பேசும் ஆர்வம் மேலும் அதிகமாவது தெரிந்தது. எத்தியோப்பியா எரித்ரியா நாடுகளின் எல்லைப்பகுதி நகரத்தில் இருந்து வருபவன் ஆனதால் தமிழ் சம்பந்தபட்ட நிறைய விசயங்களைத் தெரிந்து வைத்திருந்து எனக்கு பெரிய வியப்பைத் தரவில்லை.

கொண்டாட்டங்களை முடித்துவிட்டு வீடு திரும்புகையில், ரயிலில் பாகிஸ்தானி மாணவர்களை வெறுப்பேற்ற குடிபோதையில் பாரத் மாதா கி ஜே எனக் கத்திக்கொண்டிருந்த வாசுதேவனை நான் அதட்டி உட்கார வைத்ததைப் பார்த்த ஒரு சக சுவிடீஷ் பயணி ரயில் சினேகிதமாக மாற, அடுத்த ஒரு மணி நேரத்திற்கு இந்தியாவை ஐரோப்பிய நிலப்பரப்பிற்கு ஒப்புமைப் படுத்தி, இந்தியக் குடியரசின் தனித்தன்மைகளை எனது வாசிப்பு அனுபவத்தையும் கையில் வைத்திருந்த மடிக்கணிணி உதவியுடன் சுவிடீஷில் விளக்க ஆரம்பித்தேன். இதனிடையில் எட்வர்டிடம் பேஸ்புக் முகப்புப் பக்கத்தில் புதிய தரவு ஒன்று வந்திருந்தது. அதன் தமிழாக்கம்

"ஆப்பிரிக்கா என்பது ஒரு கண்டம், ஆப்ரிக்கன்ஸ் என்பது ஜெர்மானியக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழி "

7 பின்னூட்டங்கள்/Comments:

ரோகிணிசிவா said...

hilarious -u r at ur best always

ILA (a) இளா said...

Not anything else..

hilarious -u r at ur best always

பனித்துளி சங்கர் said...

மிகவும் அருமையான கதை சிந்திக்கத்தூண்டுகிறது . நேர்த்தியாக எழுதி இருக்கிறீர்கள் . பகிர்வுக்கு நன்றி

Nimal said...

We sometimes forget to see the big things (or sometimes the little things...) :-)

Nice one...

அன்புடன் அருணா said...

As usual with vinaiyookki's touch another big hit!

சென்ஷி said...

மத்தவங்களுக்கு புரியறதுக்காக எழுதினீங்களா.. படிக்கறவங்க புரிஞ்சுக்குவாங்கன்னு எழுதினீங்களா..

வழக்கம் போல நடை நேர்த்தி, ஆனாலும் உள்ளே கட்டமைத்திருக்கும் மொழி குறித்த தன்மையையும் நாடு என்ற பிரிவையும் பற்றிய குறிப்புகள் எனக்கு நன்கு புரிகிறது.

உங்களுடைய பல எழுத்துக்கள் தீவிர உரையாடலை உங்களுடன் ஏற்படுத்தித் தருகிறது. மிக்க நன்றி வினையூக்கி.

உங்களின் பயண -சிறுகதை இடுகைகளை தொகுத்து குறுநாவல் வடிவில் மாற்றலாமே.. இது எனது சிறு விண்ணப்பம் மாத்திரமே..

சத்தியஞான ஆச்சாரியன் said...

/*மொழி விசயத்தில், கற்றுக்கொண்டு அதை பேச மறுப்பதில் நான் பிரெஞ்சுக்காரர்கள் மாதிரி. */
கற்றோம் என்பதற்காக அவர்களின் மொழியில் நாம் பேசவேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை, எம் தேவைகள் பூர்த்தியாக வேண்டுமெனில் பேசலாம் இல்லாவிடில் பேசமறுத்தல் அல்லது தெரியாது என்பதில் தவறில்லை.. இந்த விடயத்திலும் நான் உங்கள் கட்சி... ஏன் மற்றவர்கள் எமதுமொழியை கற்கக்கூடாது...?