தெம்பல மினிஹெக் மட்ட உதவ் கலா - சிறுகதை
கோடைமழை நமக்கு கொண்டாட்டத்தைத் தருவது போல சுவீடன் தேசத்து மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பதில்லை. பெரும்பாலும் இறுக்கமான முகபாவத்துடன் இருக்கும் இந்த மக்களுக்கு முகத்தில் மலர்ச்சிவருவது இந்தக் கோடைக்காலத்தில் மட்டுமே! தொட்டால் சுருங்கிச் செடிப்போல மழைமேகங்களைக் கண்டாலே இவர்களுக்கு முகம் சுருங்கிவிடும். எனக்கு மழைப்பிடிக்கும், எந்தகாலத்திலும் எந்த தேசத்திலும். வீட்டை விட்டு வெளியே வரும்பொழுதே தூறல் போட ஆரம்பித்து இருந்தது. குடை இருந்தும் எடுக்கவில்லை, லேசான தூறலில் நனைவதும், கொட்டும் மழையில் எங்கேனும் ஒதுங்கி மழையை வேடிக்கைப்பார்ப்பதும் ஒரு சுகம். மழையைப் பார்க்கும்பொழுது மனதிற்குள் ஒவ்வொரு பாரமும் கரைவதாக ஒரு உணர்வு.
கோடையில் மழை, வசந்தத்தில் பனி இதற்கெல்லாம் காரணம் புவி வெப்பமடைதல் தான் காரணம் என அலுத்துக் கொண்டே, நான் ஒதுங்கி இருந்த மருந்தகக் கட்டிடத்தில் இருந்து இரு நடுத்தர வயது சுவிடீஷ் மக்கள் பேசியபடியே குடையுடன் வெளியேறினர். டென்மார்க் சென்றிருந்தபொழுது 1000 டேனிஷ் க்ரோனர்கள் கொடுத்து வாங்கி இருந்த பனிக்காலத்து மேலங்கி தேவையான கதகதப்பைக் கொடுத்த சுகத்துடன் மழையை ரசித்துக் கொண்டிருக்க, தூரத்தில் அந்த சிங்களப் பெண்மணி வருவது தெரிந்தது. இவர் பெயர் ஏதோ விக்கிரமசிங்கே, நினைவுக்கு வந்துவிட்டது ஷிராந்தி விக்கிரமசிங்கே.
ஏனைய ஐரோப்பாவில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களைக் காணலாம் என்றால், இந்த ரோன்னிபி நகரம் ஒரு விதிவிலக்கு, இங்கு நான் சந்தித்த அனைவருமே சிங்களவர்கள். சுவிடீஷ் மொழி வகுப்புகளிலும் பொது இடங்களிலும் இவர்களை நான் அடிக்கடிச் சந்தித்தாலும் சின்னப்புன்னகையை மட்டும் கொடுத்துவிட்டு நகர்ந்துவிடுவேன். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மட்டுமே உரையாடலுக்கு உட்படுவதுண்டு. இவர்களில் சிலருக்கு நன்றாகத் தமிழ் தெரிந்தாலும் நான் பேச விருப்பப்படுவதில்லை. நஞ்சை தங்கத்தட்டில் வைத்துக் குடித்தால் என்ன தகரத்தில் வைத்துக் குடித்தால் என்ன!!
அம்முவிற்கும் எனக்கும் அடிக்கடி சண்டை வருவது இதனால் தான். ' நீ ஒரு Fanatic, cynic, முன்முடிவுகளுடன் மனுஷாளோட பேசாதேடா' என அடிக்கடித் திட்டுவாள். அம்மு சொல்லுவதும் சரிதான். எனக்கு விருப்பமான அரசியல் ஆளுமைகளை புரிந்து கொள்ள விரும்பாத இனங்களின் அடையாளங்களைத் தாங்கி வரும் மக்களிடம் இருந்து ஒரு பாதுகாப்பான தொலைவிலேயே இருக்க விரும்புவேன். ஆனாலும் இதை வெறுப்பு என்று சொல்ல முடியாது. அவர்களின் மேல் அறவே விருப்பம் கிடையாது. நீ நல்லா இருக்கிறாயா மகிழ்ச்சி !! நானும் நல்லா இருக்கிறேன், என்ற அளவில் ஒதுங்கிப்போய்விடுவதே நலம் என்பது எண்ணம்.
ஷிராந்தி அருகில் வரும்பொழுதுதான் கவனித்தேன்,அவரின் முகத்தில் மழைநீருடன் கண்ணீரும். குளிரின் நடுக்கத்தில் சென்று கொண்டிருந்தவர் என்னைப்பார்த்ததும், வருத்தமான சூழலில் வரும் வறட்டுப்புன்னைகையுடன் என்னை நோக்கி வந்தார். நுவரேலியாவிற்கு சுற்றுலா வந்த சுவிடீஷ் ஆளைக் காதலித்து திருமணம் செய்து கொண்டு இங்கு வந்தவர், இந்த வெள்ளைக்கார மக்களுக்கு குறிப்பாக ஆண்களுக்கு கருப்பு மோகம் என்பதைவிட, தன் சொற்பேச்சுக் கேட்டு நடப்பார்கள் என்பதற்காகவே தெற்காசிய பெண்களை மணந்து கொள்கிறார்களோ என்ற சந்தேகம் நீண்ட நாட்களாகவே எனக்கு உண்டு. பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, சிங்களப் பெண்களுக்கோ ஐரோப்பிய வாழ்வு என ஒரு ஆதாயம்.
சென்ற வருடம் சுவிடீஷ் வகுப்பின் இறுதிநாளன்று ஷிராந்தியின் சுவிடீஷ் கணவருடன் பேசி இருக்கின்றேன். ஸ்வென்ஸனோ நீல்ஸ்ஸனோ, பெயர் நினைவில் இல்லை. வெள்ளைத் தோல், சிவப்புநிற பாஸ்போர்ட் ஆகியவற்றில் 20 வருடங்கள் வயது வித்தியாசம் தெரியவில்லை.
"அவன் என்னை அடித்துத் துரத்திவிட்டான்" ஆங்கிலத்தில் சொன்னவரை ஆசுவசப்படுத்தி அருகில் இருந்த மரப்பலகையில் உட்காரச்சொன்னேன்.
"இவனை ஒப்பிடுகையில் என் முதல் கணவன் தெய்வம், அவரை விட்டு வந்ததற்கு எனக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்" சுவிடீஷ் கலந்த ஆங்கிலத்தில் சொன்னபொழுதுதான் ஏற்கனவே அவருக்கு மணமான விசயம் தெரிந்தது. போன மாதம் எனது சுவிடீஷ் ஆசிரியையை பேஸ்புக்கில் இணைத்த பின்னர், ஏதேச்சையாக இவரின் பக்கத்தை எட்டிப்பார்த்த பொழுது "எங்கள் தேசத்தில் தமிழ் = தீவிரவாதம் ஒழிந்து ஒரு வருடம் ஆகின்றது, இனியெல்லாம் வசந்தமே " என்ற அர்த்தத்தில் சில வாசகங்கள் சுவிடீஷில் இருந்தன.
குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த ஷிராந்திக்கு குளிருக்கான எனது மேலாடையைக் கொடுத்துவிட்டு என்ன நடந்தது எனக் கேட்டேன். நான் நினைத்ததுபோல 20 வருடங்கள் வித்தியாசம் இல்லை, 28 வருடங்கள் மூத்தவரான சுவிடீஷ் கணவர் , தினமும் குடி, சூதாட்டம் வீட்டிற்கு வந்தவுடன் அடி உதை என ஒரே ரகளைதானாம். தனக்கு முடியவில்லை,நேற்று மாலை வங்கி ஏடிமில் பணம் எடுத்து வர சிங்களப்பெண்மணியை அனுப்பி இருக்கிறார். நேற்று மாலையே எடுத்து வந்த பணத்தை சூதில் தொலைத்து குடியில் மறக்க, இன்று "நீ என் ஏடிமை எடுத்து பணத்தைத் திருடிவிட்டாய், போலிஸிற்குப்போகப்போகின்றேன்" என ஏகக் கலட்டாவிற்குப்பின் இனிமேல் இங்கு இருக்கக்கூடாது என வெளியில் தள்ளிக் கதவைப்பூட்டி விட்டாராம்.
"இவனுங்க இஷ்டப்பட்டபடி படுக்கவும் அடிமை மாதிரி வேலை செய்யவும் ஒரு சுவிடீஷ் பொண்ணு கூட கிடைக்க மாட்டா" அழுகையும் ஆத்திரமும் சுவிடீஷில் தொடர்ந்தது.
"இப்போ எங்கேப் போகப்போறீங்க"
"கார்ல்சஷாம்னில் என் தோழி இருக்கிறாள், அவளின் வீட்டிற்கு எப்படிப் போகப் போகின்றேன் எனத் தெரியவில்லை" என்ற ஷிராந்தியிடம் நூறு குரோனர்களும் அவரின் தோழியை எனது அலைபேசியில் அழைத்து பேசவும் கொடுத்தேன்.
ஷிராந்தி, சிங்களத்தில் தோழியுடன் பேசியதில் எனக்கு நினைவில் நிற்கும்படி காதில் விழுந்தது "தெம்பல மினிஹெக் மட்ட உதவ் கலா" என்பது மட்டுமே. ஏனையவை புரியவில்லை என்றாலும் தமிழுக்கு சிங்களத்தில் தெம்பல எனக் கேள்விப்பட்டிருக்கேன். எனக்கு சிங்களம் புரிவதைவிட இனி ஷிராந்திக்கு தமிழ் என்றால் மனிதம் என்பதும் புரியும், புரிய வேண்டும் என நினைத்துக்கொண்டே அவரை வழியனுப்பிவிட்டு வெறும் சட்டையுடன், சாரல் காற்று,
மழைத்தூறல்களில் எனது வீட்டை நோக்கிச் செல்ல ஆரம்பித்தேன்
12 பின்னூட்டங்கள்/Comments:
அன்பெ சிவம்... வினையூக்கி கடவுள் அந்த பெண்ணுக்கு அருள்
பாலித்திருக்கின்றார்.
இதுதான் தமிழன் பண்பு...
/எனக்கு மழைப்பிடிக்கும், எந்தகாலத்திலும் எந்த தேசத்திலும்./
எனக்கும்!
/இனி ஷிராந்திக்கு தமிழ் என்றால் மனிதம் என்பதும் புரியும், புரிய வேண்டும் என நினைத்துக்கொண்டே/
புரியுமா?
// தமிழ் என்றால் மனிதம் //
nach -superb ,
ஷ்ராந்தியின் கண்ணீர் பொய்யாகவும் , உங்களின் உதவி உண்மையாகவும் இருந்தால் சந்தோசபடுவேன் ...
நல்லாருக்குங்க..
கலக்கல்
நல்லாருக்கு...
ஆனா அந்த பெண்ணோட பேர்தான் இடிக்குது... :-)
அழகான நடையில்..... வித்தியாசமான சிந்தனையில்....
நல்லாயிருக்கு :)
நீ ஒரு Fanatic, cynic, முன்முடிவுகளுடன் மனுஷாளோட பேசாதேடா
மழையைப் பார்க்கும்பொழுது மனதிற்குள் ஒவ்வொரு பாரமும் கரைவதாக ஒரு உணர்வு. // அருமையான வரிகள் வினையூக்கி. மறுபடியும் ஒரு அருமையான படைப்பு.
I'm the 100 :)
Post a Comment