ஸுஸு - Zozo - அரபி/சுவிடீஷ் மொழிப் படம் - திரைப்பார்வை
போரின் கொடுமைகளையும் அதன் தாக்கத்தையும் விளக்கும் படங்களின் வன்முறைக்காகவே குழந்தைகளின் உடன் அமர்ந்து பார்க்க இயலாது. ஆனால் அந்த வழக்கத்திற்கு மாறாக போரின் தாக்கத்தையும் புலம் பெயர்ந்த இடத்தில் ஏற்படும் சில மனத்தாங்கல்களையும் ஒரு சிறுவனின் பார்வையில் அழகாக சொல்லப்பட்டிருக்கும் படம் தான் ஸுஸு. தொன்னூறு சதவீதம் அரபியிலும் பத்து சதவீதம் சுவிடீஷ் மொழியில் எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் கதை உள்நாட்டுப்போரில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருந்த லெபனான் நாட்டில், எண்பதுகளின் இறுதியில் இருந்து துவங்குகிறது.
எலும்புக் கூடாக காட்சியளித்துக் கொண்டிருக்கும் பெய்ரூட் நகரத்தில் எஞ்சியிருக்கும் அடுக்கு மாடி நகர்ப்புற குடியிருப்புகளினில் ஒன்றில், சிலவாரங்களில் சுவீடனுக்கான விசா கிடைத்து நிம்மதியான வாழ்க்கையைத் தொடங்கிவிடலாம் என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் லெபனானிய மத்திய வர்க்க குடும்பத்தின் இளையமகனாக கதையின் நாயகன் சிறுவன் ஸுஸு அறிமுகமாகின்றான்.
போர்ச்சூழலிலும் இயல்பாக இருக்கும் அல்லது இருக்க முயற்சிக்கும் பெற்றோர், பதின்ம வயதில் இருக்கும் அக்கா, ‘விமானத்தில் இடம் இல்லையாம், அதனால அடுத்த முறை சுவீடன் கூட்டிட்டுப்போய் நிச்சயமாய் திருமணம் செய்து கொள்கிறேன்‘ என எதிர்வீட்டில் இருக்கும் பெண்ணுடன் ஈர்ப்பாய் இருக்கும் மூத்த சகோதரன் ஆகியோருடன் , சுவிடீஷ் கனவுகளுடன் நாட்களை நகர்த்தி வரும் ஸுஸுவின் வாழ்வில் இடி வீட்டின் மேல் குண்டாக வந்து விழுகிறது.
சுவீடன் கிளம்பும் அன்று தனது குடும்பத்தினரை போரின் குண்டு வீச்சுகளுக்கு பலி கொடுத்து மூத்த சகோதரனுடன் தப்பி ஓடி, அவனையும் ஒரு கட்டத்தில் இழந்து நிராதரவாய் இருக்கும் ஸுஸுவிற்கு கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் வரும் கீர்த்தனாவைப்போல ஒரு சினேகிதி, நல்மனம் படைத்த ராணுவ அதிகாரி ஆகியோரின் உதவி கிடைத்து சுவீடனுக்குப் பயணமாகின்றான்.
குடும்பமே வரும் என எதிர்பார்த்திருந்த தாத்தா பாட்டிக்கு, கடைசிக் கிளையாவது எஞ்சியதே என ஒற்றை ஆறுதலுடன் அவனை சுவிடீஷ் பள்ளியில் சேர்க்கின்றனர். பள்ளியில் ஏனையோருடன் அன்பாக இருக்க நினைக்கும் ஸுஸுவிற்கு வன்முறையே பதிலாக கிடைக்கின்றது.
“யார் அடித்தாலும் திருப்பி அடி, என் பேரன் அடி வாங்கி திரும்பக்கூடாது ” என அடிக்கு அடி பழிக்குப் பழி போதிக்கும் பிரியமான தாத்தாவின் பேச்சையும் மீறி கடைசி வரை வன்முறையை எடுக்காமல் வரும் தொந்தரவுகளைச் சகித்துக் கொள்ளும் ஸுஸுவிற்கு சக சுவிடீஷ் மாணவனின் நட்பு கிடைப்பதுடன் படம் நிறைவேறுகிறது.
படத்தின் நாயகனைப்போலவே 10 வயதில் லெபனானில் இருந்து சுவீடனுக்குப் புலம்பெயர்ந்த இயக்குனர் ஜோசப் பரேஸ், ஸுஸு வின் பார்வையில் தன் வாழ்க்கை அனுபவங்களை இயக்கி இருக்கிறார். 2005 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப் படம் பல பன்னாட்டுத் திரைப்பட விழாக்களில் இடம் பெற்று பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றிருக்கின்றது.
இழந்ததை இழந்துவிட்டோம், பேரனிடம் குடும்பத்தைப் பற்றிக் கேட்டு அவனை வருத்தப்படுத்துவதை விடுத்து நம் துக்கத்தை ஜீரணித்து அவனை மகிழ்ச்சியாக வைத்திருக்க முயற்சி செய்வொம் என வரும் தாத்தா பாட்டி உரையாடல்கள், நமது ஈழத்துத் தோழமைகளின் துயரங்கள் கண்ணில் நிழலாடிச் சென்றது. சிறுவன் ஸுஸுவின் இடத்தில் தமிழ் பேசும் சுபர்ணனையோ அல்லது தமயந்தியையோ வைத்துப் பார்த்த பொழுது மனதைக் கவ்விக்கொண்ட holocaust survivor’s guilt, கண்ணில் ஓரத்தில் நீர்த்துளிகள் எட்டிப்பார்த்தவுடன் (வழக்கம்போலவே )விலகியது.
முதல் 60 நிமிடங்களுக்கு, கதை லெபனானில் நிகழும் வரை தொய்வில்லாமல் நகரும் திரைப்படம் , சுவீடனுக்கு நகர்ந்த பின்னர் தொந்தரவு செய்யும் மூத்த மாண்வர்கள், நட்புப் பாராட்டுபவர்கள் காட்டிக்கொடுக்க, எரிச்சல் அடையும் கதாநாயகச் சிறுவன் என வழக்கமான பாணியில் பயணம செய்கின்றது. பிற்பாதியில் இதைச் சரி செய்யும் ஒரே காட்சி, மூத்த மாணவர்கள் தொந்தரவு செய்ய கோபத்தின் உச்சிக்கு செல்லும் ஸுஸுவின் முன் மாயையாக விரியும் சுவிடீஷ் பள்ளிக் குண்டு வெடிப்புக் காட்சி தான். “ஏனம்மா, என்னை விட்டுட்டுப்போனாய்” என அந்தக் காட்சியில் தன்னைக் காப்பாற்ற வரும் அம்மாவிடம் கேட்பதுடன் தனது தந்தை, சகோதரன், சகோதரியையும் பார்க்க தனது மனதை மீண்டும் அன்பால் நிரப்பி தொந்தரவு செய்தவர்களை விட்டுச் செல்கின்றான்.
ஸுஸுவின் குடும்பத்தினர், தாத்தா, பாட்டி, சிறுவயது தோழி ரீட்டா, சிலக்காட்சிகளிலேயே வரும் கதாபாத்திரங்கள் என அனைவருமே கதாபாத்திரங்களுக்கு கச்சிதமாகப் பொருந்தும் அளவில் தேர்ந்தெடுத்தமைக்காக இயக்குனரை நிச்சயமாகப் பாராட்டலாம். இவரின் படங்களுக்குத் தங்களின் உறவினர்களையே நடிக்க வைப்பாராம்.
படம் முடிந்தபின்னரும் நீண்ட நேரத்திற்கு ஸுஸுவாக நடித்த இமாத் கிரெய்டியின் பாசம், மிரட்சி, சோகம், ஏக்கம் என அனைத்தையும் காட்டும் கண்கள் நம் கண்களில் நிற்கும். ரீட்டா கேன் ரீட்டா (Rita kan rita ) ரீட்டாவினால் படமும் வரைய முடியும் என ஸுஸு சுவிடீஷில் சிலேடையாகக் கூறுவது, ஆப்பிளில் உப்புத் தடவிச் சாப்பிடுவது, பெண் தோழமையைப் பற்றி பேசிக்கொள்வது என ஆங்காங்கே மனதிற்கு இலகுவான காட்சியமைப்புகளும் உண்டு.
ஒரு பக்கம் அகண்ட சிரியாவை அமைக்கும் கனவுடன் இருக்கும் சிரியா, மறுப்பக்கம் யூதக் குடியரசை மேற்காசியாவில் மேலும் வலுப்படுத்த எதையும் செய்ய துணியும் இஸ்ரேல், வேறொரு பக்கம் அழையா விருந்தாளிகள் பாலஸ்தீன போராட்டக்குழுக்கள் என உள்நாட்டுப்போரினால் சின்னா பின்னமான லெபானான் நாட்டில் நடக்கும் கதையில் , பள்ளியில் பிரெஞ்சு சொல்லிக் கொடுப்பது, (ஒட்டோமான் பேரரசு வீழ்ந்தபின் பிரெஞ்சு காலனியாக லெபனான் இருந்தது) ஸுஸுவையும் அவனது சகோதரனையும் துரத்தும் படையினர் முகமுடி அணிந்திருப்பது(ஹிஸ்புல்லாவைக் குறிக்கிறதோ), பின்னணியில் சுவர்களில் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகள், உதவி செய்யும் ராணுவம் (லெபனானின் ஒரு பகுதி இஸ்ரேல் கட்டுப்பாட்டில் நீண்ட காலம் இருந்தது) என சில நுண்ணரசியல்களும் உண்டு. ஏனைய மேற்காசிய அரபு நாடுகளைப் போல லெபனானில் பெண்கள் முழு அங்கி அணிந்துதான் வர வேண்டும் என்றக் கட்டுப்பாடு எல்லாம் கிடையாது என்பதை இங்கு சுவீடனில் வசிக்கும் ஒரு லெபனான் பெண் சொல்லி இருந்த போதிலும் இந்தப் படத்தைப் பார்த்த பின் உறுதியானது.
போரினால் ஏற்படும் உளவியல் பாதிப்புகளையும் புலம் பெயர்ந்த நாடுகளில் ஏற்படும் அடையாளச்சிக்கல்களையும் மேலோட்டமாக சொல்லி இருந்தாலும் சொல்ல வந்ததன் சாராம்சத்தை ஸுஸுவின் பார்வையில் ஜோசப் பெரஸ் தந்து இருப்பதைப்போல , யாராவது ஒருவர், வணிக ரீதியிலான எந்த அம்சத்திலும் சிக்கிக் கொள்ளாமல் நம் மக்களின் வலியையும் வரலாற்றில் திரைப்படமாகப் பதிவு செய்ய மாட்டார்களா எனத் தோன்ற வைத்ததும் இந்தப் படத்தின் வெற்றி.
-------
லெபனானைப் பற்றியும் அங்கு ஏற்பட்ட உள்நாட்டுச் சிக்கல்களைப் பற்றி அறிய கீழ்கண்ட சுட்டிகளை வாசிக்கலாம்
4 பின்னூட்டங்கள்/Comments:
wonderfully written praising the movie, u r tempting te readers to se the picture ,
thanks for sharing
வணக்கம் நண்பா
ஈழத்தின் துயர் சுமந்த வரலாற்றை நினைத்துக் கொண்டே பதிவைப் படித்தேன். நீங்கள் சொன்னது போல நம்மவர் அவலத்தை தேர்ந்தெடுத்த ஒரு உலகப்புகழ் இயக்குனர் ஆங்கிலத்தில் எடுத்தாலே போதும் ஆயிரம் ஆயிரம் போராட்டங்களுக்கும், விழிப்புணர்வுக் கூட்டங்களுக்கும், கவன ஈர்ப்புக்களுக்கும் சமமாக இருக்கும். இந்தப் படத்தினைத் தேடிப்பார்க்கும் ஆவலை உண்டு பண்ணி விட்டீர்கள்.
விமர்சனப் பார்வை பகிர்விற்க்கு நன்றி வினையூக்கி...
மிக நல்ல விமர்சனம்
நானுன் சில நல்ல திரைப்படங்களை தேடி பாற்பதுன்டு, போர் கால சூழலில் நாம் சிக்கிய அனுபவம் பெருப்பலும் இந்தியனுக்கு இருந்தலில்லை, ஆனால் ஈழ தமிழனுக்கு அந்த அனுபாம் உண்டு.
மிக நல்ல பகிற்வு, ஆனாலும் திறைப்படத்தை ஓர் வணிகப் பொருளாக பார்க்கும் வியாபார உலகில் இது போண்ற படங்களுக்கு ஆதரவு தறுவது சமூக பொருப்புள்ளவர்களின் கடமை.
தோழமையுடன்
ஆப்ரகாம் லிங்கன்
Post a Comment