Tuesday, May 11, 2010

கடவுள் வருகிறார் - சிறுகதை

கடவுள் வரப்போகிறார் என்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. நாளிதழ்கள், சஞ்சிகைகள், பண்பலை ஒலிப்பரப்புகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என எதை எடுத்தாலும் பக்கத்திற்குப் பக்கம் கடந்த ஒரு வாரமாகவே கடவுளைப் பற்றிய செய்திகள்தாம். சென்ற மாதம் தர்மசாலாவில் வாழ்ந்து வரும் பத்து வயது திபெத்தியச் சிறுவன் கண்ட கனவை ஒரு வட இந்தியப் பத்திரிக்கை வெளியிட்டபொழுது யாரும் அதைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

மற்றும் ஒரு மறுபிறப்பு, அவதாரம் போன்ற கட்டுக் கதைகளில் ஒன்று என என்னைப்போலவே உலகமும் நினைத்தது. பூமியைச் சுற்றி இரு வளையங்கள் ஒன்றுக்குன்று செங்குத்தாக உருவாகும், அதன் பாதையில் கடவுள் வருவார் என்பதுதான் அந்தக் கனவின் சாராம்சம். இருவளையங்கள் தோன்றுவது வரைத் தெளிவாகச் சொன்ன சிறுவனால் அந்தப் பாதையில் தலாய்லாமாவைப் போல ஒருவர் வந்தார் என்ற பொழுது சீனாவிற்கான பதில் தும்மலாக இருக்குமோ என சந்தேகக் கண் கொண்டு பார்க்கப்பட்டது. இந்தக் கனவுச் செய்திப் பரவிய சிலதினங்களில் தென்னமெரிக்காவின் மையத்தில் இருக்கும் பராகுவே நாட்டில் கைதுச் செய்யப்பட்ட ஒரு போராளியின் கனவிலும் இதேக் காட்சி இருவளையங்கள், இங்குத் தலாய்லாமாவிற்குப் பதிலாக செகுவேரா.

தன்னைத் தானே தகவமைத்துக் கொள்ளும் ஒற்றை செல் உயிரி அமீபா பல செல்கள் உயிர்களாக மாற்றம் அடைந்து உலக உயிர்கள் உருவானவை என்றக் கருதுகோளை அடிப்படையாக வைத்து ஆராய்ச்சி செய்யும் உலகத்தின் மிகப்பெரும் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சியாளன் ஆன எனக்கு கடவுள் வருவார், கடைசி தீர்ப்பு தருவார் போன்ற விசயங்கள் எல்லாம் கவுண்டமணியின் நகைச்சுவையை விட அதிக சிரிப்பைத்தான் தந்தன. கனவாம் கடவுளாம் !! ஒரு செல்லுக்குள் உலகத்தையே அடங்க வைக்க முடியுமா, என கடவுளையும் கடந்த்துயோசித்துக் கொண்டிருக்கையில், வேலையற்றவன் கண்ட கனவு இப்படி அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கின்றதே என்ற எரிச்சல் தான் மிகுதியாய் இருந்தது.

பிள்ளையார் பால் குடித்த கதையாய், நடிகர், நடிகைகள், குடும்பத்தலைவர்கள்,தலைவிகள், கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர்கள், ஊழல் வழக்கில் விடுதலையான அரசியல்வாதிகள், நிஜ சாமியார்கள்,போலிகள், நாத்திகர்கள் , பிச்சைக்காரர்கள், சமூக சேவகர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள் என சமூகத்தின் பல்வேறு அடுக்கு மக்களுக்கும் ஒரே மாதிரியான கனவு வருவதாக, நாடுகள், மொழிகள் கலாச்சாரங்கள் கடந்து முதலில் செய்தியாகவும், பின் வதந்தியாகவும் கடைசியில் பீதியாகப் பரவ ஆரம்பித்ததும் அந்தக் கனவு வராதவர்கள் பாவிகள் என்றாயினர். ஒரு மாதத்தில் பாவிகளின் எண்ணிக்கை சில ஆயிரத்திற்குள் வந்தது. கடவுளே மனிதனின் மிகச் சிறப்பான கண்டுபிடிப்பு என்ற அடிப்படை புரிதலுடன் இருக்கும் எனக்கு கனவிலாவது கடவுள் எப்படி இருப்பார் எனத் தெரிந்து கொள்ள ஒரு ஆவல். என் மனைவி அம்முவிற்கோ தான் நம்பும் கடவுள் தான் நம்பியபடியே இருப்பாரா என அறிய ஆர்வம்.


'நமக்கு எப்போடா அந்த ட்ரீம் வரும்' , தான் தாய்மை அடைவது தள்ளிப்போவதைக் கூட இவ்வளவு வருத்தத்துடன் அம்மு கேட்டதில்லை.

வேறொரு இரவில் 'கார்த்தி, நம்மைச் சேர்த்து வச்சது கூட கடவுளின் வசனம்தான்டா'

'ஞாபகம் இருக்குடா குட்டிமா !! அன்னைக்கு மட்டுமில்ல இப்பவும் நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கின்றேன்...உனக்கு மட்டும் '

'கார்த்தி நம்ம வாழ்க்கையே கடவுளோட கனவுதான்னு என் பாட்டி சொல்லுவாங்க'

அதற்கு மேல் நான் ஏதும் பேசாமல் தூங்கிவிட்டேன்.

சாமானிய மக்களுக்குத் தோன்றிய கனவு, உலகத் தலைவர்கள் சிலருக்கும் ஏற்படத் தொடங்கியதும் உடனடியாக ஆராய்ச்சிகள் தொடங்கப்பட்டன. வளையங்கள் தோன்றுவது வரை எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருக்கும் கனவு, கடைசியில் கடவுளுக்குப் பதிலாக அவரவர்கள் விரும்பும் மனிதர்கள் அந்த வளையங்களில் இருப்பது போல பதிவான பின்னர் கடவுள் பற்றிய செய்திகளுக்கு சுவாரசியம் சேர்ந்தது. நிலவில் நிலைநிறுத்தப்பட்டிருந்த வான்வெளி ஓடம் எடுத்து அனுப்பியப் புகைப்படங்களில் பூமியைச் சுற்றி இரு வளையங்கள் உருவாக ஆரம்பித்திருப்பது புலப்பட்டதும் சுவாரசியத்துடன் அதிர்ச்சியும் கைக்கோர்த்துக்கொண்டது.


கடைசி ஒரு வாரத்தில் உலகில் எந்த மூலையிலும் ஒரு குற்றம் கூட நடைபெறவில்லை.போர் நிறுத்த ஒப்பந்தங்கள் மீறல்கள் இல்லாமல் செயலுக்கு வந்தன. பாலஸ்தீனமும் ஈழமும் அங்கீகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.காவிரியில் கரைத் தொட்டு நீரோடியது. சென்னையில் இருந்து அகமதாபத் செல்லும் ரயில் கராச்சி வரை நீட்டிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் வெள்ளையர்கள் இந்தியர்களையும், இந்தியர்கள் கருப்பர்களையும் கேலி செய்வது நின்றது. எங்குமே குண்டு வெடிக்கவில்லை. விமானநிலையங்களில் தாடி வைத்திருக்கும் , பர்தா போட்டிருக்கும் பயணிகள் நீண்ட காலத்திற்குப்பின்னர் சகபயணிகளைப்போல நடத்தப்பட்டனர். உலக மக்களால் ஒரு வாரத்தில் நல்லவர்களாக முடியும் என்பது ஆச்சரியமாகத்தான் இருந்தது. பயத்தால் நிரப்பப் பட்டிருந்தாலும் , உலகம் அன்பால் நிரம்பி வழிவதைப் போல தோற்றமளிக்க ஆரம்பித்தது.

'கடவுளுக்கு இவ்வளவு மகிமைன்னா, நியு இயர் மாதிரி வந்துட்டுப்போகலாம்' சொன்னபோது என சக ஆராய்ச்சியாளன் முன்னாள் முழு நாத்திகன் ஆன நீல்ஸ் ஆன்டர்சன் அவ்வளவாக ரசிக்கவில்லை. குடி கும்மாளம், பெண்கள் என கொண்டாட்டமாக வார இறுதிகளில் வாழும் ஆன்டர்சன், இரண்டு வாரங்களுக்கு முன்னர் கனவு வந்தபின்னர் , தாடி வளர்க்க ஆரம்பித்துவிட்டான். கைக்கடக்கமான பைபிள் ஒன்று அவனது மேசையை அலங்கரிக்க ஆரம்பித்தது. ஒழுக்கத்திற்கும் கடவுளுக்கும் நேரிடையானத் தொடர்பு உண்டா என்ன !!

'கடவுள் வரவேண்டாம், நீயே ஜீஸஸ் மாதிரிதான் இருக்கே' என்றதையும் அவன் விரும்பவில்லை.

வெறுங்கண்களுக்கே அந்த வளையங்கள் புலப்பட ஆரம்பித்த நாளுக்கு முந்தைய இரவு, எனக்கும் அம்முவிற்கும் அந்தக் கனவு வந்தது. அவளுக்கு சிறு குழந்தையும் எனக்கு அம்முவும் அந்த வளையங்களில் தோன்றினர். இயற்கையின் சூட்சுமங்களின் மேல் எப்பொழுதும் நம்பிக்கை இருந்தாலும், பதினைந்து வருடங்களுக்குப் பின்னர் முதன் முறையாக கடவுள் என ஒருவர் இருக்க வாய்ப்பு இருக்க என்ற எண்ணம் மெலிதாக எட்டிப்பார்த்தது.

அந்த இரு வளையங்களும் நாளுக்கு நாள் பெரிதாக பெரிதாக மக்களின் மனதில் திகிலும் பயமும் அதிகமாகத் தொடங்கியது. பூமிக்குமேல் இருக்கும் வளிமண்டல அடுக்குகளில் கடைசி அடுக்கான எக்ஸாஸ்பியரில் இருந்து தெர்மாஸ்பியர் வரை பரவ உலகின் எந்த முலையில் இருந்துப் பார்த்தாலும் இரு வட்டங்களில் ஏதேனும் ஒரு வளையம் தெரிய ஆரம்பித்தன. பகலில் சிவப்பு, கருப்பு வண்ணங்களில் தெரிபவை இரவில் பளபளக்கும் மஞ்சளாக மாறி இயற்பியல் ஒளிச்சிதறல் விதிகளைப்பொய் என்றாக்கியது.

வளையங்களை ஆராய அனுப்பப்பட்ட இயந்திரங்கள் உலகத்திற்கு அழிவுச் செய்யும் எந்தக் கதிர்வீச்சோ நச்சுப் பொருட்களோ அதில் இல்லை என உறுதிச் செய்தன.வளையங்களின் உள்வடிவம், அடர்த்தி, அழுத்தம், வெப்பம், அங்கிருந்து விண்வெளிக்கு சிதறடிக்கப்படும் சமிஞைகள் நம் விஞ்ஞானிகளுக்குப் புரியும் படி இல்லை, நமக்கு அப்பாற்பட்ட சக்தி ஏதோ ஒன்று அதனைக் கட்டுப்படுத்துகின்றன எனவும் இன்றில் இருந்து மூன்றாவது நாள் அந்த வட்டப்பாதைகளில் ஏதோ ஒரு மாற்றம் வர வாய்ப்பு உள்ளதாகவும் நாசாவும் இஸ்ரோவும் ஒப்புக்கொண்டன

அறிவியலின் எல்லையில் கடவுளின் அரசாங்கம் , ஆன்மீகமும் அறிவியலும் இணையும் புள்ளியில் கடவுள் என நாளிதழ்கள் தலைப்புச் செய்தியிட்டன. இல்லாதக் கடவுளை சொந்தமாக்கிக் கொள்ள நூற்றாண்டுகளாகச் சண்டைப் போட்டவர்கள், வரப்போகும் கடவுளைத் தங்களுடையதாக ஆக்கிக் கொள்ள வட்டங்கள் சம்பந்தபட்ட அனைத்து மத வரிகளுக்கும் புதுப்புது விளக்கங்கள் கொடுக்க ஆரம்பித்தனர். ஒவ்வொரு விளக்கமும் தனித்தனியேக் கேட்கும்பொழுது ஏற்றுக்கொள்ளும்படித்தான் இருந்த்தன. கடவுள் கூடாது என்பதில்லை, கயமையின் முகத்திரையாக கடவுள் இருந்துவிடக்கூடாது என்று சொன்னவர்களின் கவலை ஒரு வேளைக் கடவுள் வரவில்லை என்றால் உலகம் கலவர பூமியாகிவிடுமே என்பதுதான். வல்லரசு நாடுகளும் ஒரு வேளை கடவுள் வராமல் போனால் ஏற்படும் கலவரத்தைக் கட்டுப்படுத்த தத்தமது ராணுவங்களைத் தயார்படுத்தி வைத்திருந்தன.

' கடவுள் எப்படிடா கார்த்தி இருப்பாரு... மனுஷங்க மாதிரி வருவாரா !! லைட் மாதிரி உருவமே இல்லாம வருவாரா'

'ம்ம்ம், அருண்கோவில் இல்லாட்டி நிதிஷ் பரத்வாஜ் மாதிரி இருப்பாரு அம்மு'

'ஏன் என்.டி.ஆர் மாதிரியோ இல்லாட்டி கே.ஆர்.விஜயா மாதிரி இருக்கக் கூடாதா'

இறுக்கமான மனநிலை கொஞ்சம் இலகுவான பின்னர், நான் தீங்கிழைத்த ஒவ்வொருவராக தேடிக் கண்டுபிடித்து நட்புப் பாராட்டிக்கொண்டிருந்தேன். நான் எட்டாம் வகுப்பில் தேர்வுத்தாள்களைக் கிழித்து எறிந்து இரண்டாமிடத்திற்கு வரவழைத்த விவேக்கைக் கூப்பிட்டு பேசினேன். சாதி ரீதியாக திட்டியச் சிலரையும் , நடத்தையை குறை சொல்லி நான் அழ வைத்த காதலிகளையும் அழைத்து மனதார மன்னிப்புக் கேட்டேன். அம்முவும் அதுபோல சிலரிடம் கேட்டுக் கொண்டிருந்தாள். எனக்கும் சில மின்னஞ்சல்கள் வந்திருந்தன. கடவுளுக்கும் மனிதனுக்குமான நேர இடைவெளி குறைய குறைய அன்பு அதிகமாகி பயம் குறைந்து கொண்டே வந்தது. சக மனிதர்களின் உணர்வுகள் மொழியின் தேவை இல்லாமலேயே புரிய ஆரம்பித்தது போன்ற உணர்வு.

கடவுள் தோன்றப்போகும் நாளுக்கு முந்தைய நாள், நிலவில் இருந்து அனுப்பப்பட்ட புகைப்படங்களை சக விஞ்ஞானிகள் எனக்கும் அனுப்பி இருந்தனர். அதைக் கண்டதும் சாத்தானைக் கண்டதைப்போல உறைந்துப் போனேன். ஆமாம் நிலவில் இருந்து பன்மடங்குப் பெரிதாகத் தெரியும் பூமி, நேற்றையப் புகைப்படங்களில் ஆயிரத்தில் ஒரு மடங்காக சுருங்கி இருந்தது. தொடர்ந்து அடுத்து சில மணி நேரங்களுக்கு பெறப்பட்டு கொண்டிருந்த படங்களில் புவியின் வடிவமும் வளையங்களின் அமைப்பும் மேலும் சுருங்கி இருந்தன.

தலைமையலுவலகத்தில் இருந்து ஒரு அழைப்பு, ' வீ ஆர் ஷ்ரிங்கிங் எக்ஸ்பொனன்ஷியல்லி ' ஆமாம், பூமியும் பூமியைச் சுற்றி இருக்கும் வளையமும் ஒவ்வொரு நொடிக்கு கடும் வேகத்தில் சுருங்கிக் கொண்டே இருப்பதை விஞ்ஞானம் தெரியாதவனால் கூட உணர முடிந்தது. எல்லோரும் ஒரு மையப்புள்ளியை நோக்கிச் சுருங்கிக் கொண்டே வந்தோம். நானும் அம்முவும் ஒன்றாய் , பின்னர் எங்களால் நேசிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவராய் ஒன்றினைந்தோம் அதன் பின்னர் எங்களால் வெறுக்கப்பட்டவர்கள் இப்பொழுது விருப்பமாய், தாவரங்கள், விலங்குகள், பூச்சிகள், அசையும் கடல்கள், அசையா கட்டிடங்கள் என அனைத்தும் அடர்த்தியாய் ஒன்றானது.

பல பில்லியன் டன்கள் எடையுடன் இருந்த பூமிப்பந்து கண்ணுக்குத் தெரியாத சிறுபுள்ளியில் ஒட்டுமொத்தமாகச் சுருங்கப் போகும் சில மைக்ரோ வினாடிகளுக்கு முன்னர், நிலவில் இருந்து கடைசியா வந்திருந்த புகைப்படத்தில் , சிறுபுள்ளியாய் உட்கருவைப்போல பூமி, அந்த இரண்டு வளையங்களும் இணைந்து உருவாகி இருந்த அமீபாவின் வடிவம் என்னுள் இருந்த அனைவருக்கும் ஒரு சேர விளங்கியது

17 பின்னூட்டங்கள்/Comments:

said...

asathal selva,
saamy ,pei,pesasu ,
language ,topography ellamae asathreenga,
do well

said...

superb concept....engrosssing...nicely written..well done Selva!

said...

இதே கான்செப்டில் சுஜாதா ஒரு கதை எழுதியிருப்பார் ..

said...

மிகவும் நன்றாக உள்ளது.பல கருத்துக்களை நயமாக கூறியுள்ளீர்.
இதுதான் பின் நவீனத்துவமோ?(just a reverse process of Big bang theory)
எழுத்து உங்கள் வசப்பட்டுள்ளது.

said...

Very Good Story Selva...
Reminds me of Swami Vivekanda's lecture... a part is given below

"In the little amoeba is that infinite perfection latent. It is called amoeba from its amoeba covering, and from the amoeba to the perfect man the change is not in what is inside — that remains the same, unchangeable — but the change occurs in the covering."

Read the full lecture below...
http://en.wikisource.org/wiki/The_Complete_Works_of_Swami_Vivekananda/Volume_1/Lectures_And_Discourses/Vedanta_And_Privilege

said...

// Cable Sankar said...

இதே கான்செப்டில் சுஜாதா ஒரு கதை எழுதியிருப்பார் ..//

என்ன கதை கேபிள் சங்கர்? பெயர் சொல்ல இயலுமா?

said...

nice one..

said...

செல்வா,

கதை அற்புதம் என்ற ஒற்றை வார்த்தையில் நகர முடியவில்லை. மிக சுவாரசியமான கதைக்களத்தை விறுவிறுப்புடன் நேர்த்தியான வர்ணனைகளுடன் நகர்த்திச் சென்று அருமையான விஞ்ஞானச் சிறுகதையாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.. அதிலும் முடிவு நிச்சயம் யோசிக்க முடியவில்லை. சிற்சில இடங்களில் ஒற்றைத்தன்மை கொண்ட நடை சலிப்பு கொண்டதாகக் கருதப்படினும் சுவாரசிய எழுத்துக்களில் சலிப்பை மறக்கடிக்கச் செய்கிறது உங்கள் கதை.

எழுத எழுத எழுத்துப்பழகும் என்பதற்கு ஏற்ப உங்களுடைய தொடர் வாசகனாய் உங்கள் எழுத்தின் முன்னேற்றம் கண்டு மகிழ்கின்றேன்.. காதலை, அமானுஷ்யம் கலந்து திகிலாய் சொல்லிக் கொண்டிருந்த பதிவர் வினையூக்கி எழுத்தாளர் செல்வகுமாராக மாறுவதற்கான நல்ல அறிகுறி - சிறந்த சிறுகதைகள் தங்களிடமிருந்து வருவதுதான்.

மேலும் மேலும் வித்தியாசமான கதைக்களனுடன் உங்கள் சிந்தனைகளைத் தொடருங்கள்...

said...

ரசித்தேன்...

said...

அருமையான இருந்தது...

said...

நல்லா முடிச்சிருக்கிங்க!

said...

Excellent

said...

சுவாரசியமாக இருக்கு . இந்தியா ஒருவேளை பிரிஞ்சா எப்படி இருக்கும்னு ஒரு நாள் பேசினீங்க இல்லையா... அதை பத்தியும் எழுதுங்களேன் ... அப்புறம் உங்களை எல்லாரும் நாஸ்ரடம்ன்ஸ் னு சொல்ல ஆரம்பிச்சுடுவாங்க ...

said...

அற்புதமான எழுத்து நடை! சுவாரசியமாக இருந்தது செல்வா.

said...

நல்ல கற்பனை
நல்ல படைப்பு
ரசித்தேன்

said...

Email Comment From Arvind

Hi Selva,

This was different from your other stories :-)

I haven't read anything by Sujatha similar to this.
He has written a famous drama called 'கடவுள் வந்திருந்தார்', but its story is different. There some one actually visits earth and if i remember correctly, it is at personal interaction level. similarly, there is also pudhumai pithan's கடவுளும் கந்தசாமி பிள்ளையும், again at a personal level.

Science fiction layum kalaku Selva :-)
Arvindh

said...

இதே போன்ற சுஜாதாவுடைய கதை “தேவன் வருகை”.

அது அனேகமாக இணையத்தில் இருக்கலாம். கதையின் ஓட்டம் உங்கள் கதையின் ஓட்டம் போலவே இருக்கும். சுஜாதா கதையின் முடிவு டிபிகல்-சுஜாதா. அதைப் படித்ததனால், நான் அறியாமல் கம்பேர் செய்துகொண்டிருந்தேன்..:-(