Sunday, March 28, 2010

டேனியல் வெட்டோரி - சகலகலா வல்லவன்

மென்பொருள் பொறியியலாளார் போன்றத் தோற்றம், படிப்புக்களையைத் தரும் கண்ணாடி, மென்மையான அதே சமயத்தில் தீர்க்கமான பேச்சு இவற்றை வைத்து ஏதோ ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் தலைவர் என கிரிக்கெட்டைப் பற்றி அறியாதவர்கள் டேனியல் வெட்டோரியைப் பற்றி தவறாக எடைப்போட்டுவிடக் கூடும். தன் அணி துணை வராவிடினும் தனி ஒரு ஆளாக வெற்றி அல்லது வெற்றிக்கான இடைவெளியையாவது குறைப்பதற்கு போராடுபவர் தான் டேனியல் வெட்டோரி. இத்தாலிய வம்சாவளியைச் சேர்ந்த டேனியல் வெட்டோரி ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா. தேர்வாளர்களில் ஒருவர் குறைகிறாரா !! கூப்பிடு வெட்டோரியை. என்னது பயிற்சியாளர் பதவி விலகிவிட்டாரா !! கூப்பிடு டேனியல் வெட்டோரியை பயிற்சியாளராகவும் இருக்கட்டும். முன்வரிசை ஆட்டக்காரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்துவிட்டனரா!! வெட்டோரி இருக்கிறாரப்பா !! கவலையை விடு ஒரு கவுரவமான நிலைக்கு அணியை மீட்டெடுத்துவிடுவார்.
நாம் ஆதரவு தெரிவிக்கும் அணிக்கெதிராக நன்றாக விளையாடினாலும் சில ஆட்டக்காரர்களை உள்ளூர ரசிப்போம். அந்த வகையில் ஏராளமான கிரிக்கெட் ரசிகர்களால் ரசிக்கப்படுவர் டேனியல் வெட்டோரி. ஆங்கிலத்தில் Underdogs என்றொரு பதம் உண்டு. எல்லோருக்கும் அறிந்த ஆனால் பெரும்பாலும் தோல்வியைத் தழுவக்கூடிய, சில சமயங்களில் அடுத்தவருக்கு அதிர்ச்சித் தோல்வியைக் கொடுத்து வெற்றிக்கனியைத் தட்டிச்செல்ல வாய்ப்பு இருப்பவர்கள் எனபது அந்த ஆங்கிலச் சொல்லின் அர்த்தம். அது நியுசிலாந்து அணிக்கு நூற்றுக்கு நூறுப் பொருந்தும். ஏழைகளின் ஆஸ்திரேலிய அணியான நியுசிலாந்து அணியை கிடைக்கும் சமயத்தில் அனைத்து அணிகளும் ஒரு புரட்டு புரட்டி எடுத்தாலும் சென்ற வருடம் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை இறுதி ஆட்டம் வரை நியுசிலாந்து வந்து பரமவைரியான ஆஸ்திரேலியாவிடம் மற்றும் ஒரு முறைத் தோற்றுப்போனது.

உலகின் சிறந்த ஆட்டக்காரர்களை கொண்டு ஆடப்படும் அணிக்குத் தலைவராக இருந்து வெற்றிபெறுவதை விட , சராசரிக்கும் சற்று அதிகமான ஆட்டத்திறனுடைய ஆட்டக்காரர்களை வைத்துக் கொண்டு , அணியைச் சிறப்பாக ஆடச் செய்ய தானே முன்மாதிரியாக களத்தில் இருப்பது சிறப்பான விசயம்.இதைத் தான் கடந்த சில வருடங்களாக நியுசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவராகச் வெட்டோரி சாதித்து வருகின்றார். டெண்டுல்கர் போலவோ ரிக்கிபாண்டிங் போலவோ எதிராளியை கலங்கடிக்கும் மட்டையளர்கள் யாரும் கிடையாது. ஒரு ஆட்டத்தில் அசூரத்தனமாக பந்து வீசிவிட்டு ஒன்பது ஆட்டங்களுக்கு ஓய்வு எடுக்கும் வேகப்பந்து வீச்சாளர்கள். எல்லா பந்துகளையும் சிக்ஸருக்கு விளாசவேண்டும் என நினைக்கும் நடுவரிசை ஆட்டக்காரர்கள் இப்படி வெட்டோரிக்கு கிடைத்து இருப்பதை விட இல்லாது இருப்பதுதான் அதிகம். கடந்த வருடம் நியுசிலாந்து கிரிக்கெட் நன்னெறிக்கான விருதைப் பெற்றது. கிரிக்கெட்டை விதிமுறைகளுக்கு உட்பட்டு மட்டும் விளையாடாமல் அதன் பெருமைக்கு பங்கம் வராமல் வகையிலும் விளையாடும் நாடுகளுக்கு அளிக்கப்படும் விருது அது.

தோல்வியாக இருந்தாலும் வெற்றியாக இருந்தாலும் நிறைகுடம் போல அணியை நடத்திச் செல்லும் வெட்டோரியின் பங்கு, நியுசிலாந்து அந்த விருதைப் பெற்றதில் அதிகம். இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் போட்டி ஒன்றில் சக ஆட்டக்காரர் ஒருவர் ஆட்ட நன்னெறிகளுக்கு எதிராக ஆட்டமிழக்கப்பட்டதை கண்டிக்கும் வகையில் தனது கோபத்தை வெளிப்படுத்தி, இங்கிலாந்து அணி வீரர்களுடன் கைகுலுக்க மறுத்ததை தவிர வேறு எந்தவிதமான சங்கடமான செய்திகளிலும் வெட்டோரி சிக்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


1997 ஆம் ஆண்டு தனது 18 வயதில் இங்கிலாந்து அணிக்கெதிராக முதன் முறையாக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான வெட்டோரி 13 வருடங்களுக்குப்பின் தனது 100 வது டெஸ்ட்டை சனிக்கிழமை (27 மார்ச் 2010) ஆஸ்திரேலியா அணியுடன் ஆடியிருக்கின்றார். இந்த நூறு கணக்கில் ஒரு பிரச்சினை இருக்கின்றது. வெட்டோரி, உலக அணிக்காகவும் ஒரு டெஸ்ட் போட்டி ஆடியுள்ளதால் , ஆஸ்திரேலியாவுடன் ஆடப்போகும் ஆட்டம் நியுசிலாந்து சார்பாக 99 வது ஆட்டமாகவும் ஒட்டுமொத்தத்தில் 100 வது ஆட்டமாக அமைந்திருக்கின்றது.
கிட்டத்தட்ட 4000 ஓட்டங்களையும் முன்னூற்றுக்கு மேற்பட்ட விக்கெட்டுகளையும் எடுத்துள்ள டேனியல் வெட்டோரி சமகால சகலகலா வல்லவர்களில்(Allrounder) குறிப்பிடத்தக்கவர். 2003- 2004 காலங்களில் ஆடிய மோசமான ஆட்டத்தைத் தவிர்த்துப் பார்த்தால் வெட்டோரி தனது அறிமுகத்தில் இருந்து இன்று வரை அந்த அணியின் முக்கியமான பந்து வீச்சாளராக இருந்து வருகிறார். புள்ளிவிபர சாதனைகளும் மைல்கற்களும் தன்னை ஊக்குவிக்கும் காரணிகள் என கூறும் வெட்டோரி தனது முந்தைய அணித்தலைவர் ஸ்டீபன் பிளமிங்
ஆடிய 111 டெஸ்ட் ஆட்டங்களை ஆடிக் கடக்க வேண்டும் என்பது லட்சியமாம். பந்துவீச்சில் இந்திய அணியின் ஹர்பஜன் சிங்கையும் மட்டை வீச்சில் ராகுல் திராவிட்டையும் தன் விருப்ப ஆட்டக்காரர்களாக நினைக்கும் டேனியல் வெட்டோரி டெஸ்ட் ஆட்டங்களில் 5 சதங்கள் அடித்துள்ளார்.

முதல் தர அறிமுக ஆட்டம் ஆடிய அதே மைதானத்தில்(ஹாமில்டன்) தனது 100 வது டெஸ்ட் போட்டியை ஆடிக்கொண்டிருக்கும் டேனியல் வெட்டோரி டெஸ்ட் அரங்கில் 100 போட்டிகளை ஆடிய 50 வது நபர் என்ற பெருமையும் அடைந்திருக்கிறார். ஸ்டீபன் பிளமிங்கிற்குப் பிறகு இந்த மைல்கல்லை எட்டியிருக்கும் இரண்டாவது நியுசிலாந்து ஆட்டக்காரர். ஆரம்பத்தில் கால்பந்து வீரராக வேண்டும் என விரும்பிய வெட்டோரி, அவருக்கு 15 வயதாக இருக்கும்பொழுது, பயிற்சிக்கு செல்லும் வாகனம் விபத்துக்குள்ளானதில் முதுகெலும்புகளில் பலத்த காயம் அடைந்தார். அதில் இருந்து கிரிக்கெட்டை தனது விருப்ப விளையாட்டாக தேர்வு செய்தாராம். தனது முதல் ஆயிரம் ஓட்டங்களை எடுக்க 47 டெஸ்ட் போட்டிகள் எடுத்துக்கொண்ட வெட்டோரி அடுத்த ஆயிரம் ஓட்டங்களை 22 ஆட்டங்களில் கடந்தார்.பாகிஸ்தான் அணிக்கெதிராக அடித்த தனது முதல் டெஸ்ட் சதத்திற்குப் பின் தன்னை நடுவரிசை மட்டையாளராக நிலை நிறுத்திக் கொண்ட வெட்டோரி, கடந்த வருடம் ஹாமில்டனில் இந்தியாவுக்கெதிரான ஆட்டத்தில் 60/6 என்ற நிலையில் இருந்து அணியை மீட்டு சதமும் அடித்து இந்திய பந்துவீச்சாளர்களை வெறுப்பேற்றினார். இத்தனைக்கும் தனது முதல் ஆட்டத்தில் 11 வது ஆட்டக்காரராக டக் அவுட் புகழ் ஜெஃப் அல்லாட்டிற்குப்பின் களமிறக்கப்பட்டவர். 2011 உலகக் கோப்பையுடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறத்திட்டமிட்டுள்ள வெட்டோரி அதன் பின் சில வருடங்களுக்கு டெஸ்ட் போட்டிகளில் ஆடுவேன் எனக்கூறியிருக்கிறார்.

ரிச்சர்ட் ஹாட்லியின் 431 விக்கெட்டுகளை முந்துவது ஒரு நோக்கமாக இருக்கலாம். 5000 ஓட்டங்கள் 400க்கும் அதிகமான விக்கெட்டுகள் எடுத்து ஓய்வு பெற்றால் சமகாலத்திய கபில்தேவ் வகையிலான சகலகலாவல்லவர் என்ற பெயர் வெட்டோரிக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கின்றது.


வாழ்க்கையிலும் கிரிக்கெட்டிலும் சாதனைகளை போராட்டங்களில் வாயிலாக புரிபவர்கள் தாம் அதிகமாக நினைவுகூறப்படுவார்கள். தன் ஆட்டத்திறன் பாதிக்கப்படக்கூடும் என தலைவர் பதவியை உதறுபவர்கள் மத்தியில் தலைவர் பதவி, ஒன்றுக்கும் மேற்பட்ட பொறுப்புகளின் அழுத்தம் தன்னை இன்னும் அதிகமாக பிராகசிக்க செய்கிறது எனக்கூறும் வெட்டோரி ஒரு போராளி.

தனது நீண்ட நாள் தோழியான மேரி ஓ கேரல்லை மணந்து ஜேம்ஸ் என்ற மகனுடன் குடும்பத்தலைவர் என்ற பொறுப்பையும் சிறப்பாகச் செய்து வரும் டேனியல் வெட்டோரி, தனது 100 வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி , ஆஸ்திரேலிய ரன்குவிப்பை 231 க்குள் கட்டுப்படுத்தினாலு மட்டையாளர்களின் ஒத்துழைப்பு இல்லாததினால் மீண்டும் மண்ணைக்கவ்வியது.
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்

என்ற குறளுக்கு ஏற்ப தனக்கு அளிக்கப்பட்டதை குறை கூறாமல் சராசரியான அணியை வைத்துக்கொண்டு அவ்வப்பொழுது சாதனைகளைச் செய்ய வைக்கும் அணித்தலைவர் , சுழற்பந்து வீச்சாளார் , மட்டையாளர், தேர்வாளர், சமயங்களில் பயிற்சியாளார் என அனைத்திலும் கலக்கும் இந்த சகலகலகலா வல்லவன் வெட்டோரி 100 வது டெஸ்ட் போட்டியில் வெல்வதோடு மட்டுமல்லாமல் 2011 ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி வரை வரும் படி வாழ்த்துவோம்.

4தமிழ்மீடியாவிற்காக எழுதியது

7 பின்னூட்டங்கள்/Comments:

said...

எனக்கு மிகவும் பிடித்த வீரர்களில் ஒருவர். நியூஸி கிரிக்கெட் இணைய தளத்தைக் கூட அவர் தான் கவனித்துக்கொள்வாராம்.. :-)

said...

i think you like daniel vettori very much.i too like him past 2 Years.Before he bowled well & sometimes batted well.But nowadays he is the top order batsmen in NZ Team and also one of the best all rounder in cricket.

said...

Daniel Vettori is a go-getter. I like him for that way he takes himself in a forum generally and of course one among the excellent cricketers. People were able to see the captaincy element in him when he entered first class cricket. He is the youngest player to have played test cricket for NZ…….
“Your article is as matured as Vettori” Keep up the good work.

said...

"இருந்தாலும் ஆல் இன் ஆல் அழகுராஜா என்ற பெயரை தவிர்த்து இருக்கலாம்" :P

said...

He is Daniel Victory.....

said...

In EASports(Cricket Game) also i'll always choose Newzeland bcos of Scott Styris and daniel vettori bowling..

said...

ஸ்லெட்ஜிங்-தான் கிரிக்கெட் என்று நினைப்பவர்கள் மத்தியில் ஒரு சிறந்த ஜென்டில்மேன் கிரிக்கெட்டர். பிடித்த, பிரியத்திற்குரிய கிரிக்கெட்டர் டேனியேல் வெட்டோரி

//இத்தாலிய வம்சாவளியைச் சேர்ந்த டேனியல் வெட்டோரி//

புதிய தகவல். தகவலுக்கு நன்றி