Monday, March 15, 2010

துவைதம் - சிறுகதை

"ஹே மாஸ்டர், கேன் ஐ ஹாவ் சம் இண்டியன் மசாலா” என கையில் ஒரு புத்தகத்துடன் சீரஸ் அஜ்தாஹி தாழிடப்படாத கதவைத் திறந்து உள்ளே வந்து கேட்டார்.

அறையில் யாரும் இல்லாததால் பிரபல இத்தாலிய இயக்குனர் டிண்டோ பிராஸின் மிட்நைட் மசாலா வகையிலானா திரைப்படத்தை ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கையில் சீரஸ் இப்படி வந்து நின்றது எரிச்சலைக் கொடுத்தாலும், வெளிநாட்டவர்களிடம் எனது இயல்பைக் காட்டிக்கொள்ளக்கூடாது என்பதால், வெற்றுச்சிரிப்பை வரவழைத்துக் கொண்டு அவர் கேட்டதை எடுத்துக் கொடுத்து விட்டு எப்பொழுது வெளியே போவார் என பேச்சுக்கொடுக்காமல் சில வினாடிகள் மௌனமாய் இருந்தேன். சீரஸ் நான்கு வீடுகள் தள்ளி இருக்கும் ஈரானைச் சேர்ந்த நபர். அயேதுல்லா கொமேனி காலத்தில் புலம்பெயர்ந்த ஈரான் பணக்கார வர்க்கத்தைச் சேர்ந்தவர். சீரஸுக்கு ஐந்து வயதாக இருக்கும்பொழுது சுவீடனுக்கு பெற்றோருடன் வந்தாராம்.

ஆரம்ப முப்பதுகளில் இருக்கும் சீரஸ் வேலை எதுவும் செய்வதில்லை. அரசாங்கம் கொடுக்கும் எட்டாயிரம் க்ரோனர்களுடன் முதல் 15 நாட்களைக் கொண்டாட்டங்களுடனும் அடுத்த 15 நாட்களைக் கிட்டத்தட்ட அங்கு இங்கு கடன் வாங்கி சாப்பிட்டு ஓட்டிக்கொண்டு இருப்பவர்.

“இந்த சுவிடீஷ் மக்களுக்கு என்னைக் கண்டால் பிடிக்கவில்லை, இவர்களுக்கு என்னைக் கண்டால் பயம், மேற்குலகுக்கு பாரசீகர்கள் என்றாலே வெறுப்பு, இவர்கள் பன்றிகளை வேட்டையாடி நாடோடிகளாகத் திரிந்த காலத்தில், நாங்கள் வான அறிவியல் படித்தவர்கள்” என ஆங்கிலத்தில் வழக்கம்போல சம்பந்தம் இல்லாமல் பேச்சை ஆரம்பித்தார்.

“ம்ம்ம்ம்” என்றேன், எனக்கு நினைவெல்லாம் டிண்டோபிராஸ் படத்தின் நாயகி குளிக்கப்போனாளே என்பதிலேயே இருந்தது. கையில் இருந்த புத்தகத்தின் பெயரைக் கவனித்தேன். குவாண்டம் பிஸிக்ஸ் என்ற அந்தப் புத்தகத்தை மேசையின் மேல் வைத்துவிட்டு எனது மடிக்கணினியை அவரின் பக்கம் திருப்பிக்கொண்டு

“வாட் ஈஸ் த பாஸ்வேர்ட்” எனக் கேட்டார்.

கடவுச்சொல்லை அடிக்காமல், ஏனையவர்களுக்கான கடவுச்சொல் இல்லா கணக்கில் மடிக்கணினி உள்புக வைத்தேன்.

மத்தியகிழக்கு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு கணினியைக் கொடுப்பது என்றாலே பயம். இவர்கள் யாருக்காவது மிரட்டல் கடிதம் அனுப்பிவிட்டால் எனது ஐபி வந்து மாட்டுமே !!! கூச்சமே இன்றி சீரஸ் எந்த இணையத் தளத்தைப் பார்வையிடுகிறார் எனக் கவனித்துக் கொண்டே இருந்தேன். வீக்கிப்பீடியாவில் உள்நுழைந்த அவர், குவாண்டம் இயற்பியலைப் பற்றிய விடயங்களை மேய்ந்து கொண்டிருந்தார்.

“மாஸ்டர், உனக்குத் தெரியுமா, எலக்ட்ரான்களால் ஒரே சமயத்தில் இரண்டு இடத்தில் இருக்க முடியும்”

”டேய், இதெல்லாம் பத்தாவதுலேயே படிச்சிட்டோம்டா ” என தமிழில் முணுமுணுத்துக் கொண்டேன். இந்த மாதிரி சமயங்களில் தான் ராஜு வேண்டும். ராஜு எனது அறை நண்பர், என்னை விட கொஞ்சம் அதிக வாசிப்பனுபவம் கொண்டவர். எப்பொழுதெல்லாம் சீரஸ் அறிவுத்தளத்தில் பேச ஆரம்பிக்கிறாரோ அப்பொழுதெல்லாம் வடிவேலு பாணியில் “பேச்சுக் கொடு பேச்சுக்கொடு” சீரஸை பேசவைத்து, சீரஸிடம் இருந்து சிலப்பல அனுபவ அறிவுப்பூர்வமான விசயங்களைத் தெரிந்து கொள்வோம். இன்று அவர் ஆர்மீனிய நாட்டைச் சேர்ந்த கல்லூரித் தோழிகளுடன் ஆட்டம் போடச் சென்றுவிட்டார்.

எலக்ட்ரான்கள் பற்றி சீரஸ் சொல்லிய விசயத்திற்கு நான் எதுவும் பதில் சொல்லாததால் அதையே திரும்பவும் கேட்டார்.

“படிச்சிருக்கேன், யங் டபுள் ஸ்பிலிட் எக்ஸ்பெரிமெண்ட்”

“ஆமாம் மாஸ்டர், ஒளி துகள் வடிவிலும் அலை வடிவிலும் பரவும் என்பதை விளக்கிக் காட்டும் சோதனை அது, பின்னாளில் எலக்ட்ரான்களை வைத்தும் அந்தச் சோதனை செய்யப்பட்டது”

”அந்தச் சோதனையின் மூலம் எலக்ட்ரான்கள் இரண்டு இடங்களில் ஒரே சமயத்தில் இருக்க வாய்ப்புண்டு என நிருபிக்கப்பட்டது, அதுவே குவாண்டம் இயற்பியலுக்கு அடிப்படையாக அமைந்தது. இப்போ இருக்கிற ஃபிளாஷ் மெமரி டிரைவ் எல்லாம் குவாண்டம் டன்னலிங் வைத்துதான் இயங்குகின்றன” அறிவியல் அறிவில் நானும் குறைந்தவனல்ல என பதிலளித்தேன்.

“சதுரங்கத்தில் மட்டும் அல்ல, நீ பொது அறிவிலும் கெட்டிக்காரன் தான்” சில சமயங்களில் கொடுக்கிற காசுக்கு மேலேயே சீரஸ் கூவுவார். அவரைத் தொடர்ந்து சதுரங்கத்தில் வென்ற பின்னர்தான் கிராண்ட்மாஸ்டர் என்பதைச் சுருக்கி மாஸ்டர் எனக் கூப்பிடுகிறார்.

”கார்த்தி, நீ அவன் வரப்ப எல்லாம் டீ போட்டுக்கொடுக்கிறதுனால தான் உன்னை மாஸ்டர்னு கூப்பிடுறான்” என ராஜு அடிக்கடி கிண்டல் அடிப்பார்.

ராஜுவும் நானும், லா டினர் கேம் பிரஞ்சுப்படத்தைப்போல அரங்கேற்றி இருந்த விருந்தில் சீரஸ் தான் சிறப்பு விருந்தினர். நாங்கள் அவரை குடிக்க வைத்து சிலப்பல கேலிகள் செய்கிறோம் என்பதை புரிந்து கொண்டாலும் மாத உதவித் தொகை வர இன்னும் பத்து நாட்கள் இருக்கின்றது என்பதால் கண்டு கொள்ள மாட்டார். எங்களுக்கு தோன்றும்பொழுதெல்லாம் அல்லது அவரிடம் காசு இல்லை என்றாலும் எங்களின் பேஜா ஃபிரை சீரஸ்தான். .அந்த விருந்தில் அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாம் மனிதனை கடவுளை விட்டு வெகுதூரம் செல்ல வைக்கும் சாத்தானின் வேலைகள் எனக் கூறிய சீரஸ் இன்று குவாண்டம் இயற்பியலைப் பற்றி சொல்லுவது வியப்பாக இருந்தது..

“மாஸ்டர், எலக்ட்ரான்கள் ஒரே சமயத்தில் இரண்டு இடங்களில் இருக்க வாய்ப்பு இருக்கும் பொழுது, மனிதனால் ஏன் இருக்க முடியாது? இது தான் எனது கேள்வி” ,

நான் பதில் சொல்லாமல் அவருக்கும் எனக்கும் தேநீர் தயார் செய்து கொண்டிருந்தேன். தானாகவே பாரசீகமொழியிலும் சுவிடீஷிலும் பேசிக்கொண்டிருந்தார். நான் கொடுத்த தேநீரைக் குடித்துவிட்டு சீரஸ் கிளம்பிய பின்னர், கதாநாயகியின் குளியலையும் , கதாநாயகன் அவளை துவட்டிவிட்டு காதல் செய்வதையும் பார்த்துவிட்டு தூங்கிப்போனேன்.

டிண்டோ பிராஸின் கதாநாயகியுடன் சல்லாபிப்பவனாக , சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 20 பந்துகளில் சதமடித்து வெற்றி வாய்ப்பை வாங்கித்தரும் ஆட்டக்காரனாக , 10 ஆம் வகுப்பு இயற்பியல் தேர்வு எழுதுபவனாக, காடுகளில் பதுங்கி கொரில்லா போர் செய்பவனாக, பிக்சர் இன் பிக்சர் தொலைக்காட்சிக் காட்சியில் காட்சிகள் தனித்தனி சன்னல்களில் வருவதைப்போல ஒரே சமயத்தில் பல இடங்களில் நான் இருப்பதாக கனவு வந்தது. அனைத்திலும் நான் வெற்றியாளனாகவே இருந்ததால் அந்தக் கனவு எனது தூக்கத்தைக் கலைக்கவில்லை. மனிதன் நிகழ்வில் சோதனைகளாக செய்து பார்ப்பவைகளை கனவுகளில் மட்டுமே வாழ்ந்து பார்க்க முடியும்.

அன்றாடப்பாடங்கள், அவ்வப்பொழுது வைன் என வழமையாக கழிந்து கொண்டிருந்த பல மாலைப்பொழுதுகளுள் ஒன்றில், சீரஸ் முகத்தில் கலவர ரேகைகளுடன் வந்து ஐநூறு க்ரோனர்கள் கேட்டார். என்னிடம் இருந்த போதிலும் வேண்டும் என்றே இல்லை என்றுச் சொல்லிவிட்டேன். ராஜுவிடம்
கேட்டு வாங்கிவிட்டுச் சென்ற சீரஸ் எங்குப்போகிறார் என சன்னலின் வழியாகக் கவனித்தேன். தூரத்தில் ஒரு தாடிக்கார சுவிடீஷ் ஆளிடம் அந்தப் பணத்தைக் கொடுத்துவிட்டு ஏதோ வாங்கி திரும்பிக்கொண்டிருந்தார். எங்கள் வீட்டைக் கடக்கும்பொழுது அவரின் கையில் என்ன இருக்கின்றது என்பதை உன்னிப்பாக கவனித்தேன். ஒரு பொட்டலம், ஊசிப்போட்டுக்கொள்ளும் சிரிஞ்சுகள் மற்றும் சில சிறிய மருந்து பாட்டில்கள்.

“ராஜு, சீரஸ் இனிமேல் வந்தா காசு கொடுக்க வேண்டாம், இவன் போதை ஊசி போடுறவன்”

ராஜுவுக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. “மொடாக்குடியன்னு தான் நினைச்சேன், போதைப் பார்ட்டியா,,, இனிமேல ரூமில சேர்க்கவேண்டாம்”

மறுநாள் எங்கள் தெருவில் ஒரு ஆம்புலன்ஸ் வண்டியுடன் காவல் துறை வண்டியும் நின்று கொண்டிருந்தது. சீரஸை ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டிருந்தனர். “என்னுடைய ஆழ்மனச் சோதனையை தடுக்கின்றீர்கள், அவைப் போதை மருந்துகள் அல்ல, என் ஆத்மாவை உடலைவிட்டு பிரிக்கும் மருந்துப்பொருட்கள், கடவுளையும் மனிதனையும் ஒன்றாக்கப்போகின்ற விசயத்தைத் தடுத்துவிட்டீர்கள் பாவிகளா” என சுவிடீஷில் சிலப்பல கெட்ட வார்த்தைகளையும் சேர்த்து கத்திக் கொண்டிருந்தார்.

கார்ல்ஸ்க்ரோனா நகரத்தில் வந்திருந்த அவரின் பெற்றோர் கவலைத் தோய்ந்த முகத்துடன் ஆம்புலன்ஸ் நகரந்த பின்னர் அவர்கள் காரில் ஏறிக்கொள்ள, எனக்கும் ராஜுவுக்கும் பாவமாக இருந்தது. அவருக்கு 500 க்ரோனர் கொடுத்ததனால் குற்ற உணர்ச்சியும் சேர்ந்து இருந்தது.

ஒரு வாரத்திற்குப்பின்னர் கார்ல்ஸ்க்ரோனா மைய மருத்துவமனை, கல்லூரிக்குச் சென்றுவிட்டு ரயிலுக்க்காகக் காத்திருக்கையில் சீரஸின் தந்தையும் அங்கு நிற்பதைக் கவனித்தேன். அவருக்கு என்னைத் தெரியவில்லை என்றாலும் என்னுடைய உடைந்த சுவிடீஷில் சீரஸைப்பற்றி நலம் விசாரித்தேன். சீரஸ் இன்னும் மருத்துவமனையில்தான் இருப்பதாகவும், அதீத குடிப்பழக்கம் போதைப்பழக்கத்தினால் மனநிலை பிறழ்ந்துவிட்டதனால் ஆறு மாதத்திற்கு மருத்துவமனையில்தான் இருக்கவேண்டும் என மருத்துவர்கள் கூறிவிட்டனர் எனத் தெரிவித்தார்.

ரயிலில் வரும்பொழுது சீரஸுக்காக கொஞ்சம் அனுதாபப்பட்டு வேறுஒரு கைப்புள்ளையைத் தேடவேண்டுமே என யோசித்து முடிப்பதற்குள் ரோன்னிபி நகரம் வந்துவிட்டது. ராஜு கல்லூரியில் இருந்து இன்றைக்கு சீக்கிரம் வந்துவிட்டார்போலும், கதவைத் திறந்து உள்ளே நுழைந்ததும் மேசையில் குவாண்டம் பிசிக்ஸ் புத்தகம் இருப்பதைக் கவனித்தேன்.

“கார்த்தி, சீரஸ் வந்து இருந்தான், 500 க்ரோனர் திரும்பக்கொடுத்துட்டுப்போனான்”

“வாட்? சீரியஸா சொல்லுறீங்களா”

“ஆமாம் கார்த்தி, இதோ இந்த புக் அவனோடதுதான் ஒரு ரெண்டு மணி நேரம் இருந்தான், டபுள் சிலிட் எக்ஸ்பெரிமெண்ட், டுவாலிட்டி , டுயுவல் பிரசன்ஸ் பத்தி எல்லாம் பேசிட்டு இருந்தான், இன்னக்கி ரொம்ப இண்டரஸ்டிங் ஆ இருந்துச்சு, யாரோ பிரண்டை பார்த்துட்டு இன்னும் கொஞ்ச நேரத்தில வர்றேன்னு சொன்னான்”

வீட்டிற்கு வெளியே இருக்கும் மைனஸ் 15 டிகிரி குளிர் வீட்டிற்குள்ளும் பரவுவது போல ஒரு உணர்வு,

“ஹே மாஸ்டர்” என்ற சீரஸின் முகமும், அவர் தன் கையில் கொண்டு வந்திருந்த ஊசியை ராஜுவின் கையில் செலுத்துவதும் அதிர்ச்சியில் உறைந்து கொண்டிருந்த என் கண்களில் மங்கலாகத் தெரிந்து கரைந்ந்து கொண்டிருந்தன.


29 பின்னூட்டங்கள்/Comments:

said...

ஒரு சிறுகதைக்கு தேவையான அத்தனை அம்சங்களுடன் கச்சிதமாக எழுதியுள்ளீர்கள்.

பாராட்டுகளும் மேலும் சிறக்க வாழ்த்துகளும்.

said...

power play!
adichchu aadariinga;
nilaichchu nikkariinga!

said...

கொஞ்சம் முடிவு ....குழப்பம் ஏற்படுத்துது....ஒருவேளை எனக்குத்தான் புரிலியோ???

said...

நன்றாக வந்துள்ளது செல்வா !!!

said...

அனைத்திலும் நான் வெற்றியாளனாகவே இருந்ததால் அந்தக் கனவு எனது தூக்கத்தைக் கலைக்கவில்லை. மனிதன் நிகழ்வில் சோதனைகளாக செய்து பார்ப்பவைகளை கனவுகளில் மட்டுமே வாழ்ந்து பார்க்க முடியும்...

என்ன சார்..இப்பவெல்லாம் ஒரே பிளிறலாக இருக்கு...

ஆனால் இது கதையல்ல... மனதை பிசையும் ஒரு உண்மை சம்பவம் ...

said...

"துவைதம்" துவைச்சு எடுதிட்டிங்க
தல..........

முடிவில் எங்க மூளைக்கு வேலை கொடுத்திடீங்க.

வாழ்த்துக்கள் செல்வா!!!!!

said...

நல்லாயிருக்கு தலைவரே. ஒரே பதிவுல இத்தனை மேட்டரா.. தனித்தனியா பிரிச்சு மேய வேண்டிய விசயத்த ரொம்ப சுருக்கமா எழுதிட்டீங்க.. முடிவும் சட்டுன்னு வந்திடுச்சு :)

said...

இந்த கதாபாத்திரம் ராஜு, அப்பாவி கணேசனின் பிம்பம் அறிவாளி கணேசனா ?

said...

அது அன்பரசனாக இருந்தால் இன்னும் சுவையாக இருந்து இருக்கும் போல தெரிகிறது

said...

ஏனெனில் அரசுக்கும் ச்ய்ருஸ் க்கும் அம்புட்டு சிநேகிதம்.

said...

ஹ ஹ ஹ. நீங்கள் திண்டோ பிரஸ் படமும் ச்ய்ருஸ் ஊசியும் முயற்சித்தால் கதை இன்னும் அருமையாக வரும்

அந்த மனிதரை பார்க்கும் ஆவலை ஈர்க்கிறது உங்கள் கதை !!!!!!!!!!

said...

அப்பாவி கணேசன் உங்கள் அடுத்த கதைகளில் ராஜூவாக வளம் வருவாரா ?

அப்பாவி கணேசன் என்ற அரை நண்பர் இப்போது உங்கள் அறை நண்பராக ஆகிவிட்டதால் அவரை தூக்கி விட்டீர்களா ?

said...

ராஜு வுக்கும் அர்மேனியன் ஜெநோசிடே பிய் துர்க்ஸ்க்கும் எதினும் சம்மந்தம் உள்ளதா ?

said...

நீங்கள் எழுதிய கதை இது ஒருவிதமான பெர்சியன் ஜெநோசிடே பை ஸ்வீட்ஸ் என யோசிக்க தூண்டுகிறது

said...

நல்ல கதை !!!!!!!!!! பல்வேறு கோணங்களில் யோசிக்க தூண்டுகிறது. ஒரு இந்தியன், பெர்சியன் கதை ஸ்வீடன் இல் இருந்து ................

said...

u hve taken a short film ....

said...

u made a short film !!!!

said...

நச் கதை, சூப்பர் முடிவு
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

said...

! great.. romba naal aachu intha maathiri kathai padichu..

said...

அத்வைதம் கேள்விப்பட்ட சொல் கருத்து என்ன? எனத் தெரியாது. துவைதம் இப்போ தான் கேள்விப்படுகிறேன்.
கதையை படிக்கும் போது சாரு - நம்ம நித்தியானந்தன் புகழ் சாரு தான் , ஞாபகத்தில் வந்தார்.
அவர் தானே ஒரே ஆள் இரண்டு இடத்தில் இருப்பார். என மாஞ்சு மாஞ்சு எழுதியவர்.
இந்த விஞ்ஞானவிடயமெல்லாம் எனக்குப் புரியாது. ஆனால் மனப் பிராந்தி ஒன்று உண்டு
என்பார்கள்.
இதை படிக்கும் போது பல வருடங்களுக்கு முன் இலங்கையில் நடந்த விடயம். எங்களிள் இஸ்லாமிய நண்பர் ஒருவர்
சவூதியில் வேலை செய்தார். அவரால் அவர் குடும்பம் தலை நிமிர்ந்தது. ஒரு நாள் அவர் தந்தை அதிகாலை வாசலில் "வாப்பா" என மகன் குரல் கேட்கிறதென மனைவிடம் கூறிச் சென்று கதவைத் திறந்துள்ளார். எவரும் இல்லை. விடிந்து சுமார் 10 மணிப்போல் தெரிந்தவர்கள் மூலம் அவர் மகன், எங்கள் நண்பர் விபத்தில் இறந்ததாகச் செய்தி வந்தது. இதில் கவனிக்கத் தக்கது. அவர் சவூதியில் விபத்துக்குள்ளான
நேரமே, அவர் தந்தைக்கு இலங்கையில் குரல் கேட்டுள்ளது.
இன்றுவரை எதுவும் புரியவில்லை.
நீங்கள் மர்மக் கதை மன்னரே!

said...

// டுவாலிட்டி , டுயுவல் பிரசன்ஸ் // கதை நல்லா வந்திருக்கு.

கதையில நிறைய "பாக்" செய்திருக்கீங்க. தேவையான்னு தெரியல.

வாழ்த்துகள்!

said...

உங்க ஊர்ல நடக்குறத எல்லாம் தெரிஞ்சுக்க முடியுது. நல்லாருக்கு.

said...

//பேஜா ஃபிரை//

அப்படீன்னா?

said...

Nanba Arumaiyana nadai!!! !!!

Good One !!!

said...

மிக வருத்தமாக இருக்கிறது,நல்ல மனிதன் சைரஷ்.அவர் சீக்கிரம் குணமடைய கடவுளை வேண்டிக்கொள்கிறேன்.

said...

மிக வருத்தமாக இருக்கிறது,நல்ல மனிதன் சைரஷ்.அவர் சீக்கிரம் குணமடைய கடவுளை வேண்டிக்கொள்கிறேன்.

said...

சுவாரஸ்யமாய் இருந்தது

said...

நல்லாயிருக்கு. சுவாரஸ்யமாய் இருந்தது

said...

அண்ணா உங்கள் பதிவு ஒவ்வொன்றும் அருமை.நன்றாக உள்ளது.நானும் தற்போது ஒரு Blog ஒன்று எழுத ஆரம்பித்து இருக்கிறன் எனக்கு உங்களால் ஆன உதவியை செய்யவும்

http://mxstar.blogspot.com