La gaucherie - சிறுகதை
"இங்கே வாங்க !! இந்த நாற்காலியிடம் வாங்க" எனது மனைவி அம்மு, எங்களது குழந்தை அஞ்சலிப் பாப்பாவிற்கு தமிழுடன் நடையும் பழக்கிக் கொண்டிருந்தாள். குழலும் இனிதில்லை குழலூதும் இளையராஜவின் இசையும் இனிதில்லை என எண்ணியபடியே அம்முவும் அஞ்சலிப்பாப்பாவும் விளையாடிக்கொண்டிருப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நானும் கீர்த்தனாவும் ஒருவரை ஒருவர் அழைத்துக்கொள்ளும் அம்மும்மா,கார்த்திபா வின் மருவிய வடிவங்களான ம்மும்மா,த்திபா தான் அஞ்சலிப் பாப்பாவின் முதல் இரண்டு சொற்கள்.
எங்களது அலையன்ஸ் பிரான்சைஸின் je t'aime காலங்களில் ஒருநாள் , "கார்த்தி, கடவுள் உன்கிட்ட வந்து வரம் வேணுமான்னு கேட்டா, என்ன வரம் கேட்ப?"
"உன்னை ஒரு ரெண்டு வயசு குழந்தையா மாத்தி, என்கிட்ட கொடுக்கச் சொல்லி வரம் கேட்பேன்" இந்தப் பதிலுக்குப் பின்னர் தான் அவளை நான் அம்மு எனக் கூப்பிட அனுமதித்தாள்.
இயற்கை, நாம் மனதினுள் விரும்பு விசயங்களை ஒரு தடவையேனும் நிறைவேற்றி விடும். இதோ . அம்முவை அச்சு அசலாக உள்வாங்கிக் கொண்டு அஞ்சலிப்பாப்பா வந்திருக்கிறாள்.
'த்திபா த்திபா' எனக்குழந்தை என்னை நோக்கி கையைக் காட்ட நான் வாங்கி மடியில் வைத்துக் கொண்டு, கீர்த்தனாவை கிட்டாரில் என் இனிய பொன் நிலாவே வாசிக்கச் சொன்னேன். அம்மு, தமிழைப்போல கிட்டரையும் என்னுடன் பழக ஆரம்பித்த பின்னரே கற்றுக்கொள்ள ஆரம்பித்தாள்.ஆனால் இன்று இரண்டிலுமே என்னைவிட அதிகமான பாண்டித்யம் அவளுக்கு உண்டு. மொழியையும் இசையையும் பெண்கள் வேகமாக கற்றுக்கொள்வார்களாம். இடதுகையில் வாசித்தபடி , ஒரு கண்ணில் அஞ்சலிப்பாப்பவையும் மறு கண்ணில் என்னையும் வைத்திருப்பது போல மாறி மாறி பார்த்துக்கொண்டே பாடிக்கொண்டிருந்தாள்.
அம்முவிடன் எனக்குப்பிடித்த விசயங்களில் ஒன்று, அவளின் சில இடது கைப்பழக்கங்கள். கிட்டார் வாசிப்பது, சீட்டு விளையாடும்பொழுது கட்டை கலைத்துப்ப்போடுவது, கோபம் வந்து கைத்தொலைபேசியை இடதுகையில் வீசி எறிவது என தன்னிச்சையாக சில சமயங்களில் இடதுகையைத் தான் பிரயோகிப்பாள். அவளின் முதல் அறிமுகமே எங்களது பழைய அலுவலக வரவேற்பறையில் வரவேற்பாளினியிடம் அவள் இரண்டுகைகளிலும் எழுதிக் காண்பித்தபோதுதான்.
“கீர்த்தனா !! நீங்க ஆம்பிடெக்ஸ்ட்ரஸா?”
“அப்படின்னா!!”
“அதாவது இரண்டு கைகளிலும் எழுதத் தெரிந்தவங்க !!”
“ஓ அப்படியா !!! தெரியலியே...சும்மா ஒரு ஃபன்னுக்கு டிரை பண்ணேன்”
பின்னொருநாள் அவள் எனக்குப்பின்னால் நிற்கிறாள் என்பதை அறிந்து கொண்டு, அலுவலகப் பதிவேட்டில் இடது கையால் கையொப்பம் இட்டுக்கொண்டிருந்தேன்.
“கார்த்தி நீங்க லெஃப்ட் ஹேண்டா!!'
“ஆமாங்க !!!” என்றேன் நமுட்டு சிரிப்பைக் கொடுத்துக் கொண்டிருந்த வரவேற்பாளினியை முறைத்த படியே.
கீர்த்தனாவை என் பக்கம் ஈர்ப்பதற்காக கடைசி ஒரு வாரம் பயிற்சி எடுத்து இடது கையால் கையொப்பம் போடக்கற்றுக்கொண்டிருந்தேன். கையொப்பம் இட்டுவிட்டு, இடதுகையில் பேனாவை விரல்களுக்கிடையே சுற்றிக்கொண்டே , கீர்த்தனாவை அனாயசமாகப் பார்த்துவிட்டு என் இடத்துக்குச் சென்ற இரண்டு நிமிடங்களில் கீர்த்தனாவிடம் இருந்து அலுவலக முகவரியில் ஒரு மின்னஞ்சல்.
“நீங்க உண்மையிலேயே இடதுகைப் பழக்கம் உள்ளவரா” என்ற அர்த்தத்தை தாங்கி ஆங்கிலத்தில் அந்த மின்னஞ்சல் இருந்தது. வரவேற்பாளினி போட்டுக்கொடுத்து விட்டாளா !!
என்ன பதில் அடிக்கலாம் என யோசித்துக் கொண்டிருக்கையிலேயே அதே வாசகம் எங்களது அலுவல் சம்பந்தமான அரட்டை சன்னலிலும் வந்து எட்டிக்குதித்தது. ஒரு பொய்யைத் தொடர்வதைவிட அதை பாதி உண்மையாக்கி சொல்லிவிடலாம் என,
“சின்ன வயசில லெஃப்ட் ஹேண்டட், இப்போ இல்லைங்க”
“ஏன்?” கொஞ்சம் ஆங்கிலம் நிறைய தமிங்கிலிஷ் கலந்து எங்களது அரட்டைத் தொடர்ந்தது.
“சின்ன வயசில கிரிக்கெட்ல லெஃப்ட் ஹேண்ட் பேட்டிங் செய்வேன்” இது ஓரளவுக்கு உண்மை. லெக்சைட்ல எங்க குடியிருப்பு வீடுகள் இருந்ததால் ஆஃப் சைட் ரன் வைத்து ஆடும்பொழுது ,இடது கை ஆட்டம் ஆடினால் எளிதாக ரன் எடுக்க முடியும்.ஆனால் உண்மையை அவளிடம் சொல்லவில்லை.
“பவுலிங்கும் லெஃப்டா?”
“இல்லை அது ரைட் !!”
“அப்படியா !!! அப்போ கங்குலி மாதிரி, பேட்டிங் பவுலிங் ரெண்டுமே லெஃப்ட் இருக்கிறவங்களைத்தான் எனக்குப்பிடிக்கும்... வாசிம் அக்ரம், இண்டியா டீம்ல சுனில் ஜோஷி”
”டெண்டுல்கர் கூட நேச்சுரலி லெஃப்ட் ஹேண்டட் தான் !! உங்களை மாதிரி இரண்டு கையாலும் எழுதுவார்”
“தெரியும் கார்த்தி !!! நீங்க சொன்ன மாதிரி ஆம்பிடெக்ஸ்ட்ரஸ்”
அந்த உரையாடலில் கீர்த்தனா என்னிடம் சினேகம் பாராட்ட விரும்புகிறாள் என்பது புரிந்தது. அந்த சினேகம் மதுரை அப்புவில் அலுவலகத்தில் யாருக்கும் தெரியாமல் மதிய உணவுக்குச் செல்லும் வரை வளர்ந்தது.
அவளுக்குப்பிடித்த டென்னிஸ் வீராங்கனை மார்ட்டினா நவரத்திலோவா , டென்னிஸ் வீரர் கோரன் இவானிசெவிக் இப்படி இடதுகைப் பழக்கம் உள்ளவர்களைப் பற்றியேச் சொல்லிக்கொண்டிருந்தாள். மார்ட்டினா நவரத்திலோவாவை ஓய்வு பெற்ற பிறகும் திரும்ப வந்து லியாண்டர் பயஸுடன் கலப்பு இரட்டையார் ஆடி ஜெயிச்சதுனால் எனக்கும் பிடிக்கும் கோரன் இவானிசெவிக் ஒரு டேவிஸ்கோப்பை ஆட்டத்தில் நம்ம ஊரு லியாண்டர் பயாஸிடம் தோற்றதில் இருந்து அவரின் டென்னிஸ் வாழ்க்கையின் அஸ்தமனம் தொடங்கியது.
நீங்க என்பது நீ என மாறத்தொடங்கிய நாட்களுக்குபின் ஒருநாள்.
“கார்த்தி, நான் சின்னவயசில லெஃப்ட் ஹேண்ட் யூஸ் பண்ணக்கூடாதுன்னு எங்க அம்மா சூடு எல்லாம் வச்சிருக்காங்க” இடதுகையின் முழங்கைகைக்கு கீழே சின்ன தழும்பு சிறியதாக இருந்தது. அப்பொழுது தொடும் அளவிற்கு நெருக்கம் இல்லாததால் “அச்சச்சோ” என மட்டும் சொல்லி வைத்தேன்.
“பீச்சாங்கை எதுக்குடி எதுக்கெடுத்தாலும் முன்னாடி வருதுன்னு சொல்லிட்டு நிறைய அடிச்சிருக்காங்க அம்மா”
”ஏசிஎஸ் படிச்சு முடிக்கிற வரைக்கும் மறந்து கூட இடதுகையை நீட்டிட மாட்டேன் !! இங்கே வேலைக்குச் சேர்ந்த பின்னதான் திரும்ப லெஃப்ட் ல எல்லாம் பிராக்டிஸ் பண்ணிட்டு இருக்கேன் ”
"ஆமாம் இங்கே கம்பெனி செக்ரட்டரிக்கு என்ன வேலை இருக்கு, இயர் எண்ட் மீட்டிங் , ஃபைனான்சியல் குவார்ட்டர் அப்டேஷன்,,, நீ கலக்கு கீர்த்தனா “
அவள் உணர்வுப்பூர்வமாகச் சொல்லிக் கொண்டிருக்க, நான் கிண்டலடித்துக் கொண்டிருந்தேன்.என்னுடன் சேர்த்து எனது கிண்டல்களும் அவளுக்குப் பிடித்துப் போக, நான் போகும் இடங்களுக்கு எல்லாம் அவளும் வரவேண்டும் என என்னுடனே மாலை நேர பிரெஞ்சு வகுப்பு சேர்ந்தாள். நான் எழுதும் தமிழ்க் கவிதைகளை வாசிப்பதற்காகவே என்னிடம் தமிழும் கற்றுக்கொள்ள ஆரம்பித்தாள். அவளுக்காக நான் கிட்டார் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்.
எனக்குப் பிடித்த கங்குலி இரட்டைச் சதமும், அவளுக்குப்பிடித்த இர்ஃபான் பதான் சதமும் அடித்திருந்த நாளில், அவளுக்குக்காக ஒரு இடதுகை கிட்டாரை வாங்கிப் பரிசாகக் கொடுத்து காதலைச் சொன்னேன். கிட்டாரை உடனே வாங்கிக் கொண்டவள் காதலை அலையன்ஸ் பிரான்சைஸ் மாடிப்படியில் வைத்து கிட்டாரில் என் இனிய பொன் நிலாவே வாசித்து என்னை ஏற்றுக்கொண்டாள்.
“என்னடா !! மலரும் நினைவுகளா!! “ கிட்டார் வாசிப்பதை நிறுத்தாமல் ராகமாய் கேட்டதும் நிகழ்காலத்திற்கு வந்தேன்.
"அஞ்சலி பாப்பவோட அப்படியே பாஸ்ட்டுக்குப் போனா நல்லா இருக்கும் தானே!!"
"இருக்கும் இருக்கும்... உன்னைப் பத்தி சொன்னதுக்கே நீ வாங்கி கொடுத்த கிட்டார் ரெண்டா உடைஞ்சிது, பாப்பாவும் இருந்திருந்தா விளங்கியிருக்கும்.. கார்த்திபா நாளைக்கு அம்மா அப்பா வர்றாங்க"
எங்களுக்குத் திருமணமான இந்த மூன்றரை வருடங்களில் அவர்கள் வருவது இதுதான் இரண்டாவது முறை. நாங்கள் அஞ்சலிப்பாப்பா பிறந்த பின் உடனடியாக சுவீடன் வந்துவிட்டதும் ஒரு காரணம். எப்பொழுதாவது கீர்த்தனாவின் அப்பா மின்னஞ்சல் செய்வார். அவர்களை அத்தை , மாமா என விளித்தது கூட கிடையாது. சார் , மேடம் தான் . உட்கார்ந்து ஆற அமர பேசுவதற்கும் நேரமில்லை. முதல் சந்திப்பில் அடி வாங்காமல் தப்பித்ததே பெரிய விசயம். கல்யாணத்திற்கு அவர்கள் வந்து வாழ்த்துகள் சொன்னதோடு சரி. அஞ்சலிப் பாப்பா பிறந்த போது கூட, கொண்டாட்டங்களை எங்கள் அம்மா அப்பா ஒட்டு மொத்த குத்தகைக்கு எடுத்துவிட்டனர்.
"கார்த்திபா நாளைக்கு நான் ஸ்டேஷன் ல பிக் அப் பண்ணிக்கிறேன். அம்மா அப்பாகிட்ட நல்லா பேசுடா சார் மோர் எல்லாம் வேண்டாம். அழகா அத்தை மாமா ந்னு கூப்பிடு"
"ம்ம்ம் பார்க்கலாம்"
இங்கு கோடைகாலம் என்றபொழுதிலும் இந்த குளிரும் அவர்களை நடுநடுங்க வைத்துக் கொண்டிருந்தது. அவர்கள் என்னிடம் அவ்வளாவாக பேசவில்லை என்றாலும் , அஞ்சலிப்பாப்பாவிடமும் அம்முவிடமும் கலகலப்பாக இருந்தனர்.
பின்னொரு மாலைப்பொழுதில், கீர்த்தனாவின் அம்மா, "என்னடி அம்மு, உன் பொண்ணும் நொட்டாங்கையை எதுக்கெடுத்தாலும் முன்னுக்கு நீட்டுறா... " சொல்லிக்கொண்டே "பீச்சாங்கையை நீட்டுவியா நீட்டுவியா " என குழந்தையின் மணிக்கட்டில் தனது விரலை வைத்து செல்லமாகவும் அதே சமயத்தில் அழுத்தமாகவும் அடித்துக் கொண்டிருந்தார்.
"அத்தை, சும்மா இருங்க,.. அவ எந்தக் கை நீட்டினா என்ன!! அம்முவுக்குப் பண்ணதை என் பொண்ணுக்கும் பண்ணிடாதிங்க" எனச் சொல்லி குழந்தையை அவரிடம் இருந்து தூக்கிக்கொண்டேன்.
அன்றிரவு படுக்கை அறையில்,
"கார்த்திபா, உனக்கு ரெண்டு தாங்க்ஸ், ஒன்னு அம்மாவை அத்தைன்னு கூப்பிட்டதுக்கு, இன்னொன்னு அவங்க கிட்ட கோபப்பட்டதுக்குக்கா"
"நான் கூட நோட்டிஸ் பண்ணல, அஞ்சலிப்பாப்பா லெஃப்ட் ஹேண்டட்னு , ஒரு லெஃப்ட் ஹேண்டட் கிரிக்கெட் பிளேயர் ஆக்கிடப்போறேன்"
"கிரிக்கெட் வேண்டாம், டென்னிஸ்ல மார்ட்டினா நவரத்திலோவா மாதிரி"
"அம்மும்மா அப்போ எனக்குப் பிடிச்ச கிரிக்கெட்டுக்கு.."
"ம்ம்ம் அடுத்த வருஷம் அர்ஜுன் தரேன், அர்ஜுன் பாப்பாவை கிரிக்கெட்டர் ஆக்கிக்கோ.. அஞ்சலிப்பாப்பா டென்னிஸ் ஸ்டார் தான்" என்றாள் தனது இடதுகையால் என் கன்னத்தை வருடிக்கொடுத்தபடியே , அந்த இடது கையில் இருந்த தழும்பின் வலி இன்றிலிருந்து இருக்காது.
18 பின்னூட்டங்கள்/Comments:
"La gaucherie - என்னண்ணே அர்த்தம்?
"கார்த்திபா, உனக்கு ரெண்டு தாங்க்ஸ், ஒன்னு அம்மாவை அத்தைன்னு கூப்பிட்டதுக்கு, இன்னொன்னு அவங்க கிட்ட கோபப்பட்டதுக்கு"
Gifted Kerthana!,will u mistake me if i tell I love ur Karthik,just for the second thing he did!!!
//ஆம்பிடெக்ஸ்ட்ரஸா?//
copied from "unnai pol oruvan"
//அலுவலகப் பதிவேட்டில் இடது கையால் கையொப்பம் இட்டுக்கொண்டிருந்தேன்.//
7 varushathula nee sign panni naan parthahe illaye??
//வரவேற்பாளினியை முறைத்த படியே//
vazhintha padiye
//வரவேற்பாளினி போட்டுக்கொடுத்து விட்டாளா !!//
kettu sollaren
La gaucherie - இடதுகைப் பழக்கம்
Good one.
"La gaucherie”- என்ன தம்பி?
அடடா.. உங்களுடன் சேர்ந்தே பயணித்த உணர்வு.. அட்டகாசமான முடிவு..
"அத்தை மாமா இல்லை.. சார் மேடம் தான்" - இது சூப்பரோ சூப்பர்..
I'm also a Lefty.!!! Nice story!
//கிட்டரையும் என்னுடன் பழக ஆரம்பித்த பின்னரே கற்றுக்கொள்ள ஆரம்பித்தாள்.//
//அவளுக்காக நான் கிட்டார் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்.///
அழகிய கதை வினையூக்கி .. ! ரசித்து படித்தேன்
http://www.myownscribblings.blogspot.com/
sarwa said...
அருமையான கதை.அனுபவித்து எழுதியுள்ளீர்கள்!
//"உன்னை ஒரு ரெண்டு வயசு குழந்தையா மாத்தி, என்கிட்ட கொடுக்கச் சொல்லி வரம் கேட்பேன்"//
வாழ்த்துக்கள் செல்வா!
//"அத்தை, சும்மா இருங்க,.. அவ எந்தக் கை நீட்டினா என்ன!! அம்முவுக்குப் பண்ணதை என் பொண்ணுக்கும் பண்ணிடாதிங்க" எனச் சொல்லி குழந்தையை அவரிடம் இருந்து தூக்கிக்கொண்டேன்//
அஞ்சலி பாப்பா மேல் இருந்த பாசத்தால் மேடம் அத்தை ஆகிட்டாங்க.
கார்த்திப்பா ரொம்ப நல்ல அப்பா!
8:53 AM
Nice short story.
சாதாரண கதை, சொல்லிய விதம் அருமை.
ரசித்த கதை.
//ரசித்த கதை.//
Repeatu..
சீனியர், கதை ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு :-)))) ஒருவேளை எனக்கும் இடது கை பழக்கம் கொண்ட பெண்கள் மேல் கொண்ட ஈர்ப்புனாலயா ;-)
ரொம்ப இரசிச்சேன்... :-)
நன்கு கதை சொல்லியுள்ளீர்கள். காதல் மணத்தின் உறவுச்சிக்கல் இழையோடும் கதைசொல்லும் பாணி.
இன்றைய இளைய சமுதாயத்தின் தலைமுறை இடைவெளி; இந்த இடக்கைப் பழக்கத்தில் கார்த்திக், அத்தை எடுத்துக்கொள்ளும் கோணத்தில் மூலம் வெளிப்படுகிறது.
நமது நாட்டில் இடக்கைப் பழக்கத்துக்குக் கொடுக்கும் குறைவான மதிப்பீடு இங்கு இல்லை. இவர்கள்
அதைப் பொருட்டாகவே மதிப்பதில்லை.
நம்ம காந்தித் தாத்தாவும் இடக்கைப் பழக்கமுள்ளவராமே!
g
கதை அருமை.உங்கள் கதைகளில் ஒவ்வொரு முறை புது விஷயங்களை தொகுப்பதற்கு நன்றி(ஆம்பிடெக்ஸ்ட்ரஸா).La gaucherie என்ற french சொல்லிற்கு பதில் தமிழில் தலைப்பு வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் அல்லது vänster hand என்று swedishil வைத்திருக்கலாம்.
Post a Comment