Monday, October 29, 2007

வாழ்க்கையில்(ன்) சில விசயங்கள் - சிறுகதை

"மனிதனாய் மரத்துப்போய் வீழ்வதைக்காட்டிலும் மழைத்துளியாய் மண்ணில் வீழ்ந்திருக்கலாமோ" எங்கோ படித்த கவிதையின் மீள்நினைவா அல்லது என்னையும் அறியாமல் கவிதை வருகிறதா என்று புரியாமல் , புரிய விருப்பமும் இல்லாமல் மனதிற்கினிய இசைபோல் நிதானமாக பெய்து கொண்டிருந்த மழையை கல்லூரி நூலக
விறாந்தாவில் நின்று ரசித்துக் கொண்டிருக்கும்பொழுது, "கார்த்தி," என்ற குரல் கேட்டு திரும்பினேன்.

"என்னடா உள்ளே வராமல் ,, இங்க நின்னு மழையை வேடிக்கைப் பார்த்துட்டு இருக்க, இன்னக்கி எதாவது கான்செப்ட் சொல்லப் போறியா ? "

"அதெல்லாம் ஒன்னுமில்லை,, புக்ஸ் எடுத்திட்டியா , வா போகலாம். "

"இல்லை மழை நிக்கட்டும் , அடுத்த வாரம் எக்ஸாம் வேற.. மழையில நனஞ்சு ஃபீவர் எதாவது வந்துட்டா என்ன பண்றது?"

நான் ரம்யாவுக்கு மட்டும் எதிர்ப்பேதும் சொல்வதில்லை. அவள் சொன்னால் நான் கேட்டுக்கொள்வேன். பிடிக்கவைல்லை என்றாலும் கூட .. ரம்யா என்னிடம் முதன் முதலில் பேசியது , கன்யாகுமரியில் , இரண்டு வருடங்களுக்கு முன், துறை சார்ந்த சுற்றுலா என்று வழக்கமான கதை விட்டு திருவனந்தபுரம் சென்று திரும்புவழியில் கன்யாகுமரி கோயிலுக்குள் எல்லோரும் போக நான் மட்டும் உள்ளே வரவில்லை என்று சொன்ன போது என்னை ஆச்சரியமா பார்த்த அவள் , சுற்றுலா முடிந்த அடுத்த வாரம் முதல் தடவையா என்னிடம் பேசினாள்.

"கார்த்தி, எல்லோரும் கோயிலுக்கு உள்ளேப் போனப்ப நீ மட்டும் ஏன் வரலேன்னு சொன்ன?, அஜீஸ் கூட உள்ளே வந்தான், if you dont mind may i know the reason?"

"சாமி, பூதம் இதுல எல்லாம் நம்பிக்கை இல்லை.."

நான் பூதத்துடன் சாமியை சேர்த்து சொன்னவுடன் அவள் முகம் சுண்டிபோனது.

முதல்முறையாகப் பேசும் பெண்ணிடம் நான் அப்படி பேசி இருக்கக்கூடாது தான் என்ன செய்வது.. சிறுவயதில் இருந்து கடவுள், பக்தி , பிராயசித்தம் என்ற பெயரில் என் அம்மா அப்பா ஆடிய ஆட்டங்கள் என்னையும் அறியாமல் இந்த விசயங்களை விட்டு விலக வைத்தது. விவரம் தெரிந்த பின், இந்த மாதிரி விசயங்களை கண்டால்
வெறுப்புதான் மிஞ்சுகிறது. இன்னமும் என் வீட்டில் என் அப்பாவின் மாத சம்பளத்தில் நான்கில் ஒரு பங்கு கடவுளுக்குக் கொடுக்கப்படுகிறது. கடவுள் அப்படி திருப்பி என்னத்தான் கொடுக்கிறார் என்று தெரியவில்லை.

மறுநாள் நானே வலியச் சென்று ரம்யாவிடம் "ஹாய்" சொன்னேன். அவள் ஏதும் கோபமின்றி சிரித்து திரும்ப "ஹாய்" சொன்னாள்.

"கார்த்தி, உனக்கு ஏன் கடவுள் நம்பிக்கை இல்லை"

"சிம்பிள் லாஜிக் ரம்யா, கடவுள் இருக்கிறது அப்படி நம்பறதுனால வர்ற பிரச்சினைகளை விட, கடவுள் இல்லைன்னு சொல்றதுனால வர்ற பிரச்சினைகள் கம்மி, எது குறைச்ச பிராப்லம்ஸ் தருதோ அதை எடுத்துக்கிட்டேன்"


"அப்படி இல்லை கார்த்தி, பக்தி மனுசனைப் பக்குவப்படுத்தும்.. நம்மள மாதிரி படிக்கிற பசங்களுக்கு கான்சண்ட்ரேசன் பவரை இன்கிரீஸ் பண்ணும்" ரம்யா அடுக்கிக் கொண்டே போனாள். இது எல்லாம் நான் ஏற்கனவே என் அம்மா அப்பா சொல்லக் கேட்டிருந்ததால் ஆரவமின்றி அவள் சொல்வதை தலையாட்டிக்
கொண்டே கேட்டிருந்தேன். அதன் பிறகு நல்ல நண்பர்களாயினோம். சந்தர்ப்பம் கிடைக்கும்பொழுதெல்லாம் ரம்யா, கடவுள் நம்பிக்கை, பக்தி பேச்சுக்களை ஆரம்பிப்பாள். ஆன்மிகம் மனிதனுக்கு எவ்வளவு தேவை என்று அவள் விளக்கமாக நிறைய உதாரணங்கள் கொடுத்து பேசுவதைக் கேட்க சுவாரசியமத்தான் இருக்கும். என்னதான் இருந்தாலும் கோயில் குருக்கள் பொண்ணாயிற்றே!!

"கார்த்தி நீ எங்கப்பா பேசுறதைக் கேட்டிருக்கனும், அவர் பேச்சைக்கேட்டா இந்த நிமிஷமே ஆத்திகத்திற்கு மாறிடுவே"

அவளின் அப்பாவுடன் ஒரு முறை பேசியிருக்கின்றேன். நான் உருவகப்படுத்தி வைத்திருந்த வழக்கமான குருக்கள் போல் இல்லை. சகஜமாகவே பேசினார்.

"உன்னைப் பத்தி ரம்யா நிறைய சொல்லி இருக்காள், நாத்திகமும் ஒரு அருமையான பாதை தான், அதில் பிடிப்போடு இரு,அதுவும் நல்ல மார்க்கம்னுதான் நம் முன்னோர் சொல்லி இருக்காங்க " என்று வாழ்த்தினார்.

அவர் அப்படி சொல்லியது எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. மழையின் சலசலப்பு சத்தம் நின்றவுடன் நினைவுச்சுழலில் இருந்து நிகழ்காலத்திற்கு வந்தேன்.

"கார்த்தி, என் கூட கோயிலுக்கு வர்றீயா?" என்று ரம்யா கேட்க புருவத்தை உயர்த்தி வியப்பு மேலிட அவளைப் பார்த்தேன்.இதுவரை இப்படிக் கேட்டதில்லை.

"சரி போகலாம், " என்று நூலகப்படிகளில் இறங்கி கல்லூரி சாலையில் நடக்க ஆரம்பித்தோம். ஆடவர் விடுதி கடக்கும்பொழுதெல்லாம் எங்கள் இருவரைக் கண்டால் முன்பு சத்தம் போடும் மாணவர்கள் இப்பொழுதெல்லாம்
எங்களைக் கண்டு கொள்வதே இல்லை. ஒரு வேளை எங்களைப் பற்றி கிண்டலடிப்பதற்கு இனி எதுவும் இல்லை என்று நினைத்து இருக்கலாம். இன்னும் கல்லூரி முடிய 3 மாதம்தான் என்பதால் போனால் போய்ட்டு போகுது
என்று விட்டும் இருக்கலாம். திருப்பரங்குன்றம் நுழைவாயில் வரும் வரை அவள் எதுவும் பேசவில்லை.
நானும் அமைதியாக அவளுடன் நடந்தேன். செருப்பிற்கு காசு கொடுத்துவிட்டு உள்ளே நுழைந்தோம்.மழை இருந்தும் கொஞ்சம் கூட்டம் அதிகமாகவே இருந்தது. முருகனை கண்ணைமூடிக்கொண்டு வேண்டிக்கொண்டாள்.

எல்லோரும் கைக்கூப்பி வேண்டிக்கொண்டிருக்கும்பொழுது நானும் அப்படி செய்யவில்லை என்றால் நல்லா இருக்காது என்று கைக்கூப்பினேன்.

கோயிலில் இருந்து திரும்பும் போது

"கார்த்தி, வெற்றிவேல்ல சாப்பிட்டு போவோண்டா!!, ஒரு குட்டி டீரீட் உனக்கு"எனக்குத்திரும்பவும் ஆச்சரியம். வழக்கமான ரம்யாவைப் போல் இல்லாமல் அவள் நடவடிக்கைகளில் வித்தியாசம் தெரிகிறது.

சாப்பிடும்பொழுது,

"கார்த்தி, ஒரு குட் நியுஸ், ஃபைனல் செமஸ்டர் முடிந்தவுடன், எனக்கு மேரேஜ், என் அத்தைப் பையன் தான். அவர் பேரு மோகனகிருஷ்ணன், ஸ்டேட்ஸ் ல இருக்காரு.."

எனக்கு தலைப் புரை ஏறியது. தண்ணீரைக் குடித்தவுடன்

"கங்கிராட்ஸ் ரம்யா" இதை என்னால் முழுமனதோடு சொல்ல முடியவில்லை. இத்தனைக்கும் ரம்யாமேல் எனக்கு காதல் அப்படி எல்லாம் இதுவரை தோன்றியதில்லை. எங்களோட துறைத்தலைவர் இதைப் பற்றி கேட்டபொழுது
கூட சிறு உணர்வு கூட வரவில்லை. ஏன் இப்படி இப்பொழுது? ஒரு வேளை அவளின் திருமணம் எங்கள் இருவரின் நட்புக்கு முற்றுப் புள்ளி வைத்துவிடும் என்ற நினைப்போ!!
இல்லை என்றால் என்னையுமறியாமல் அவளை நேசிக்க ஆரம்பித்திருக்கின்றேனா?

"கார்த்தி, நீ இன்னைக்கு சாமி கும்பிட்டதை பார்த்தேனே!!" என்று குழந்தையின் குதுகலத்துடன் என்னைப் பார்த்துக் கண் சிமிட்டினாள்.

"அது கடவுளுக்காக இல்லை, கல்லை சிற்பமாக்கிய கடவுளை நினைத்து"

"ம்ம்ம்.... எனக்கு ஒரு ஆசை என்னக்காவது ஒரு நாள், உன்னை கடவுள் நம்பிக்கை உள்ள ஆளாப்பார்க்கனும்"

"may be in next ஜென்மம்"

நாட்கள் கடகடவென ஓடியது. எங்கள் கல்லூரி இறுதித் தேர்வு முடிந்தவுடனேயே ரம்யாவின் கல்யாணம் முடிந்தது.ரம்யாவின் கணவன் மோகன கிருஷ்ணன் நல்ல வாட்டசாட்டமாக இருந்தான். பேச்சிலும் நல்ல கனிவு இருந்தது. ரம்யா கொடுத்து வைத்தவள்தான். திருமணம் முடிந்த அடுத்த சில மாதங்களிலேயே அவள் அமெரிக்கா
போய்விட்டாள். அதன்பிறகு அவளின் தொடர்பு துண்டித்துப் போனது. எனது usa.net மின்னஞ்சல் சேவையை நிறுத்திவிட்டதால் அவளை மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ள இயலவில்லை. அவளும் usa.net மின்னஞ்சல் சேவைதான் வைத்திருந்தாள்.

படித்து முடித்தவுடன் வேலை இல்லாமல் இருந்தால் எவ்வளவு அவமானம் என்பதை உற்றம் சுற்றம் கேள்விகளால் துளைத்தெடுக்கும்பொழுதுதான் உணர்ந்தேன். பகீரத பிரயாத்தனம் செய்தும் வேலை என்பது தள்ளிப் போய் கொண்டே இருந்தது. மெட்றாஸ் போய் தங்கி வேலை தேடலாம் என்றாலும் அப்பா அதற்கு சம்மதிக்கவில்லை. அம்மா ஒரு நாள் என்னிடம் வந்து

"பழனிக்கு ஒருமுறை மாலை போட்டுட்டு போய் வாடா!! எல்லாம் நல்லபடியா நடக்கும்,," என்று பாவமாய் கேட்க அம்மாவிற்காக போகலாம் என்று முடிவெடுத்தேன்.

பழனி முருகன் சன்னிதானத்தில் அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது. "கடவுள் கிட்ட அப்படியே சரணாகதி அடைந்துவிடும் அளவுக்கு வேண்டுப்பா.. அவர் எல்லாம் தருவார்" ..

மனமுருக எனக்கு நல்ல வேலை தரும்படிக்கேட்டேன். என்ன ஆச்சரியம் அடுத்த இரண்டாவது வாரத்தில் எனக்கு வேலை கிடைத்தது. ஏதோ ஒரு சக்தி இருப்பதை நான் நம்ப ஆரம்பித்துவிட்டதாக என் மனது சொல்லியது. அதன்
பின் அடிக்கடி கோவில் போக ஆரம்பித்து இந்த ஐந்தாறு வருடங்களில் பக்தியின் மறு உருவமாகவே மாறிவிட்டேன். நான் எப்போவெல்லாம் கோயிலுக்கு போறேனோ அப்போதெல்லாம் ரம்யாவின் ஞாபகம் வரும். நான் இப்படி இருப்பதை பார்த்தால் நிச்சயம் சந்தோசப்படுவாள். கடவுள் நம்பிக்கை பிரச்சினை அல்ல...
பிரச்சினைகளை சந்திக்க நாம் நாமே கொடுத்துக் கொள்ளும் ஆன்மபலம். எனக்கு பெண் தேடும் விளம்பரத்தில் கூட இறைபக்தியில் நம்பிக்கை உள்ளவர் வேண்டும் என்பதை அழுத்தமாக குறிப்பிட வேண்டும் என்று சொல்லி இருந்தேன்.

அன்று, அலுவலகத்தில் வேலை அதிகம் இல்லை... எல்லோரும் ஓர்குட்டில் மூழ்கி இருந்தனர். சும்மாதானே இருக்கிறோம் என்று ஓர்குட்டில் என் ஜிமெயில் மின்னஞ்சல் கொடுத்து உள்நுழைந்தேன். ரம்யா மோகனகிருஷ்ணன் என்று தேடிப்பார்த்தேன். ஏகப்பட்ட பேர்கள் இருந்தார்கள். அப்படியே ஒன்றின் பின் ஒன்றாகப் பார்த்த்துக்
கொண்டே வந்தேன். "முருகா, ரம்யா கிடைக்கவேண்டும் " என்று வேண்டிக்கொண்டே அட... அங்கு இருந்தாள்.

கடவுளுக்கு நன்றி சொன்னேன். அதே முகம் ..கொஞ்சம் முகத்தில் சதை போட்டிருந்தாள். ஊர் பெங்களூர்.. அட நான் இருக்கும் இதே ஊரில் தான் இருக்கிறாள். அவளின் புகைப்படங்கள் இருக்கும் பக்கத்திற்கு போனேன்..

"My Life line" என்று சொல்லி தன் குழந்தையுடன் புகைப்படத்தில் இருந்தாள். உடனடியாக அவளுக்கு ஒரு என் மின்னஞ்சல் முகவரியைக் குறுந்தகவலாக ஆர்குட் பக்கத்தில் பதிவு செய்துவிட்டு வேறு வேலை பார்க்கலானேன். சிறிது நேரம் கழித்து அவளிடம் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்து சேர்ந்தது. தனது கைத்தொலைபேசி எண்ணைக் குறிப்பிட்டு, முடிந்தால் அந்த வார இறுதியில் சந்திக்கலாம் என்று சொல்லி இருந்தாள். வார இறுதியில் சந்திப்பை உறுதி செய்துகொண்டு அவளின் இல்லத்திற்கு சென்றேன். போகும் முன் என் நெற்றியில் சந்தனக்கீற்றை வைத்துக்
கொண்டே கிளம்பி இருந்தேன்.

ரம்யா என்னை உற்சாகமாக வரவேற்றாலும் கண்கள் எப்பொழுது வேண்டுமானாலும் அழுதுவிடும் போல் இருந்தது. கண்களிலும் வீட்டிலும் வெறுமை இருந்தது. வீட்டைச்சுற்றி கண்களை சுழல விட, கடவுளே என்ன இது
மோகனகிருஷ்ணனின் புகைப்படத்திற்கு மாலை போடப்பட்டிருந்தது.

நான் அதைப்பார்ப்பதைக் கவனித்துவிட்ட ரம்யா,

"நீ அப்ப சொல்லுவியேடா, அது எல்லாம் கரெக்ட் கடவுள்னு எதுவுமே கிடையாது.. அப்படி இருந்திருந்தால் கடைசிவரை கடவுள் தாசனாகவே இருந்த எங்க அப்பாவை சாகடிச்சுட்டு அந்த கோயில் நகைகள் திருடுபோய் இருக்காது... கடவுள்னு ஒருத்தர் இருந்திருந்தா நாள் கிழமை தவறமா எல்லாம் செஞ்ச என்னை இப்படி
தண்டிச்சுருக்க மாட்டாரு, எல்லாம் பொய்டா.. எதுவுமே கிடையாது.. எல்லாம் ஹம்பக், பூஜை புண்ஸ்காரம் எல்லாம் நம்மளை நாமே ஏமாத்திக்கிறது"

"மோகனுக்கு!!" எனக்குக் கேட்கையிலேயே நாதழுதழுத்தது...

"போன வருஷம் திருநள்ளாறு கோயிலுக்குப் போறப்ப ஆக்ஸிடெண்ட்.. " உடைந்து அழ ஆரம்பித்தாள். அழுதுத் தீர்த்தவுடன் தன் குழந்தையைக்கூப்பிட்டு

"இந்த பிள்ளைக்காகத் தான் வாழ்றேன்.. ம்ம் சரி நாளைக்கு உனக்கு நேரம் இருந்தால் பக்கத்தில ஒரு முதியோர் ஆசிரமம் இருக்கு . உன்னால வர்றமுடியுமா? இப்பொவெல்லாம் வீக் எண்ட்ல அவங்களோடதான் ஸ்பெண்ட்
பண்றேன்."

"ம்ம் ஸ்யூர்" மேலும் சிறிது நேரம் அவளிடம் பேசிவிட்டு என்வீட்டிற்கு வந்தவுடன் ஊருக்குத் தொலைபேசினேன்.

"இப்போதைக்கு பொண்ணு பார்க்கிறதை நிறுத்தி வைங்க... கொஞ்ச நாளாகட்டும்.. நானே சொல்றேன்"

ம்ம்ம்.. வாழ்க்கையில் சில விசயங்கள் புரிவதே இல்லை என்று நினைத்துக் கொண்டே, வழக்கமாக இரவு தூங்கும் முன் கும்பிடும் சாமியை வணங்காமலேயே தூங்கிப் போனேன்.

====== முடிந்தது =====

8 பின்னூட்டங்கள்/Comments:

said...

நல்லா இருக்கு..

said...

நன்றி பொன்ஸ்

said...

practicality unleashed....

said...

very nice one da...practicality unleashed..!!

said...

நல்லா இருக்கு...

said...

வினையூக்கி!
ரசித்தேன்; இந்த கணனி விடயங்களைத் தவிர்த்துப்பார்த்தால்; அழகான ஆய்வொன்று செய்துள்ளீர்கள்.
//நாத்திகமும் ஒரு அருமையான பாதை தான், அதில் பிடிப்போடு இரு,அதுவும் நல்ல மார்க்கம்னுதான் நம் முன்னோர் சொல்லி இருக்காங்க//
அதுவும் இந்த வரி மிக நன்று.

அத்துடன் தங்களை நன்கு அறிந்தவர்களுக்கு இந்தக் கதையின் தாக்கம் புரியும்.

பலர் இதைப் புரிவதில்லை; அத்துடன் எல்லாம் அவன் செயல் என்னும் போது; நன்மையை மாத்திரம் விரும்புகிறோம்.நான் முற்றாக அவனை நம்பவில்லை.
அடுத்து இந்த வரி என் கொள்கை போல் உள்ளது.
//"அது கடவுளுக்காக இல்லை, கல்லை சிற்பமாக்கிய கடவுளை நினைத்து" //

உண்மையில் நான் கோவிலுக்கு போவது நல்ல நாதஸ்வர இசை கேட்க; சிற்பங்கள் சிலைகள் பார்க்க ஏன்!! என் இளமையில் நல்ல பிகர் பார்க்க (உள்ளதைச் சொல்கிறேன்)
அதனால் உங்கள் இந்த வரியின் தார்ப்பரியம் புரிந்தது.
இன்றைய இளைஞர்களும் இவற்றுக்காக வாவது கோவில் போகலாம்.

இருபக்கத்தையும் அழகாகத் தொட்டுக்காட்டியுள்ளீர்கள்...

said...

அருமையான கதை ..கதை என்று சொல்லுவதை விட அது ஒரு கதை வடிவு கவிதை.. பின்னிடீங்க போங்க !

said...

gud one!! arumai thala!!