Wednesday, October 10, 2007

வெளிர்நீலநிற முழுக்கை சட்டை - சிறுகதை

சலவைக்கு கொடுத்து வாங்கிய துணிகளை அடுக்கி வைக்கும்பொழுதுதான் அந்த வெளிர்நீலநிற முழுக்கை சட்டை என் கண்களில் பட்டது. அந்த சட்டையைப் பார்த்தாலே எனக்கு அலர்ஜி. எப்பொழுது அந்த சட்டை அணிந்தாலும் , அன்றைய பொழுது எனக்கு துரதிர்ஷ்டமாகவே அமையும்.ஒன்று அலுவலகத்தில் திட்டு வாங்குவேன் இல்லை ஏதாவது பிரச்சினையில் வசமாக சிக்கிக் கொள்வேன், பலமுறை அந்த சட்டையை அணியும் பொழுதெல்லாம் இப்படி நிகழ்ந்து விடுவதால் , அந்த சட்டையைப் பார்த்தாலே எனக்கு ஒரு நடுக்கம் வந்துவிடும்.யாரிடமாவது கொடுத்துவிடலாம் என்று நினைத்தாலும், ரம்யாவின் நினைவாக அது ஒன்றுதான் இருப்பதால் எனக்குக் கொடுக்கவும் மனமில்லை.

பெங்களூரில் இரண்டு வருடங்களுக்கு முன் என் பிறந்த நாளுக்கு அவள் பரிசளித்தது. அந்த சட்டையின் பையில் அவள் "karthi" என்று ஒரு எம்பிராய்டரி ஒன்றை தன் கைப்பட செய்து கொடுத்து இருந்தாள். யார் கண் பட்டதோ, அந்த சட்டை பரிசளித்த அடுத்த வாரம், அதை அணிந்து கொண்டு , நான் அவளிடம் "நாம கல்யாணம் பண்ணிக்கலாமா" என்று புரொபோஸ் பண்ண, "உன்னால் ஒரு நல்ல நண்பனை இழந்துவிட்டேன், நீயும் என்னை
தோழியாக இழந்துவிட்டாய்" என்று ஆங்கிலத்தில் கோபமாக சொல்லிப் போனவள் அதன் பின் என்னை தொடர்பு கொள்ளவே இல்லை. நான் அனுப்பிய ஒரு மின்னஞ்சலுக்கு
"I dont want to talk to mad people" என்று அவள் பதில் அனுப்பிய பின் நானும் அவளை தொடர்பு கொள்வதை நிறுத்திவிட்டேன்.

ஆயிற்று 6 மாதங்கள் நானும் மெட்றாஸ் வந்து, ரம்யாவும் மெட்றாஸில் தான் இருப்பதாகவும், சத்யம் தியேட்டரில் பார்த்ததாகவும் என் சீனியர் மோகன் ஒரு முறை ஜிடாக் சாட்டில் சொன்னார்.

"நேற்றென் அரங்கிலே நிழல்களின் நாடகம், இன்றென் எதிரிலே நிஜங்களின் தரிசனம், வருங்காலம் வசந்தகாலம் , நாளும் மங்களம்" என்று நிழல்கள் பாட்டு என் கைத்தொலைபேசியில் பாட நிகழ்காலத்துக்கு வந்தேன்.

"ஹலோ, சொல்லுப்பா"

"கார்த்தி, நாளைக்கு ரவி மாமாவோட பையன் இண்டர்வியூக்கு வர்றான், உன் அட்றஸ்தான் கொடுத்து இருக்கேன், வீட்டிலே தங்க வச்சுக்கோ"

"சரிப்பா" என கைத்தொலைபேசியை துண்டித்தேன்.

இந்த ரவி மாமா என் சொந்த மாமாவெல்லாம் இல்லை, என் அப்பாவின் பால்ய தோழர், சின்ன வயதில் இருந்தே அவரை அப்படிக் கூப்பிட்டு பழகிபோய்விட்டது. எங்க வீட்டுக்கு ரவி மாமா வந்தாலே ஏதாவது கடன் வாங்கத்தான் வருவார். அவராலேயே என் அம்மா அப்பாவிற்கு இடையில் அடிக்கடி சண்டை வரும். இந்த சண்டைகளுக்கு காரணகர்த்தாவாக அவர் அமைந்துவிடுவதால் அவரை எனக்குப் அவ்வளவாக பிடிக்கவே பிடிக்காது. ரவி மாமாவின் பையன் எப்படியோ இஞ்சினியரிங் முடித்து ஒரு நேர்முகத்தேர்வுக்காக, நாளை இங்கு வருகிறானாம்.

மறுநாள் விடிந்தும் விடியாததுமாய் , வீட்டின் அழைப்பு மணி அடித்தது.
கசங்கிய சட்டையுடன், கண்களில் பயணக்களைப்புடன் ரவி மாமாவின் பையன்..

"வா, உள்ள வா,"

செருப்பை வெளியே கழட்டிப்போட்டவனை, "பரவாயில்லை உள்ளே வந்து கழட்டிப்போடு" என்றேன். கண்களில் ஒரு வித மிரட்சியுடன் உள்ளே வந்தான்.
அவன் மிரண்ட விதம் , என்னை எனக்கு ஞாபகப்படுத்தியது.நானும் முதன்முறை பெங்களூருக்கு வேலைக்காகப் போனபோது இப்படித்தான் பயந்து பயந்து என் பெரியம்மா பையன் வீட்டில் தங்கினேன்.

"உன் காலேஜ்லே கேம்பஸ் இருக்குல்ல, " இந்த கேள்வி அவனை சங்கடப்படுத்தி இருக்கக்கூடும்.

"இருந்துச்சுண்ணே, மூன்று கடைசி ரவுண்டு வரை போய், கம்யூனிகேஷன் சரி இல்லைன்னு சொல்லிட்டாங்க, என்னோட பேட் லக்"

"டோண்ட் வொரி, இந்த டைம் உனக்கு நல்ல டைம் தான், குளிச்சிட்டு ரெடியாகு, மெஸ்லேந்து சாப்பாடு வரும்"

அவன் குளித்து வந்த பிறகு , அவன் பையில்ருந்து சட்டையை மடிப்புக்கலையாமல் எடுத்து வெளியே வைத்தான்.

அந்த சட்டை நேர்முகத்தேர்வுக்கு போட்டு செல்வதற்கு உகந்ததாக எனக்குத் தோன்றவில்லை.

அவனைக்கூப்பிட்டு நான் அடுக்கி வைத்திருந்த சட்டைகளில் ஏதேனும் ஒன்றை எடுத்துக் கொள்ளுமாறு சொன்ன போது , மிகுந்த தயக்கத்துடன் ரம்யா கொடுத்த வெளிர்நீலநிற சட்டையை எடுத்து அணிந்து கொண்டான்.

அய்யோ இந்த சட்டை துரதிர்ஷ்டமானதே, என்று சொல்ல தோன்றினாலும், வேண்டாம், பையன் நல்ல விசயத்திற்குப் போகிறான். அதை சொல்லி அவனை மீண்டும் ஒரு முறை சங்கடப்படுத்த வேண்டாம் என்று விட்டு விட்டேன்.

----
அன்று மாலை,கைத்தொலைபேசியில், ரவி மாமாவின் பையன்

"கார்த்தி அண்ணே, எனக்கு இந்த வேலை கிடைச்சுடுச்சு, "

"ஹே கங்கிராட்ஸ், நான் தான் சொன்னேன்ல, இந்த வேலை உனக்கு கிடைச்சுடும்னு"

அலுவலகத்தில் வேலை இருந்தும், அவனுக்காக சீக்கிரம் வீட்டிற்கு வந்துவிட்டேன். ரவி மாமாவின் பையன் ஏக குஷியில் இருந்தான்.

"அண்ணே, இன்னக்கி எனக்கு கிடைச்ச ஃபீட்பேக், என்னோட கம்யூனிகேஷனை ஆபிஸ் என்விரான்மெண்ட் ல இம்ப்ரூவ் பண்ணிடலாம், நான் டெக்னிக்கலி ரொம்ப ஸ்ட்ராங்க்னு சொன்னாங்க... "

எனக்கும் சந்தோசமா இருந்தது. அவன் அன்றே ஊருக்குப்போவதற்கு பிடிவாதமாய் இருந்தான்.போவதற்கு முன்

"கார்த்தி அண்ணே, அந்த ப்ளூ கலர் சட்டையை நானே எடுத்துக்குவா, உண்மையிலேயே எனக்கு ராசியான சட்டை அண்ணே"

"ம்ம் சரி எடுத்துக்கோ" முழுமையான சந்தோஷத்துடன் சொன்னேன்

அவன் ஊர் போய் சேர்ந்தவுடன், ரவி மாமாவின் குடும்பமே என்னை தொலைபேசியில் கூப்பிட்டு நன்றி சொன்னது.. என்னவோ நானே வேலை வாங்கிக் கொடுத்தது போல.

அந்த வார இறுதியில், வடபழனியில் ஒரு கடையில்,

வார இதழில் ஒரு சாமியார் தொடராக எழுதிய கட்டுரைகளின்
தொகுப்பு புத்தகமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை பார்த்துக் கொண்டிருந்த போது,

எதோ பரிச்சயமான குரல்,

"டு யூ ஹாவ் மொழி சிடி" ஒரு இளம்பெண் கடை மேலாளரிடம் கேட்டுக் கொண்டிருந்தாள்

அட, அது ரம்யாவே தான்,

போய் பேசலாமா, ஒரு வித தயக்கத்துடன் அருகில் போய் நின்று

"ஹலோ ரம்யா"

என்னை சற்றும் எதிர்பாராவிதமாய்,

"கார்த்தி, திங் ஆஃப் தெ டெவில் ... உன்னைப் பத்தி தான் நினைச்சுட்டு இருந்தேன்.... "

எனக்கு படு ஆச்சரியமாய் இருந்தது.

"ஜஸ்ட் எ செகண்ட், " அவள் மொழிப்பட சிடியையும் மீதி பணத்தையும் வாங்கி தனது கைப்பையில் போட்டுக் கொண்டு ,

"லெட்ஸ் கோ, உன்கிட்ட கொஞ்சம் பேசனும் , நீ எதாவது வாங்கனுமா, ஐ வில் வெயிட்"

"இல்லை , நாம போகலாம்"

அருகில் இருந்த ஒரு உணவகத்துக்குபோய் உட்கார்ந்தோம்.

"இந்த வீக் ஃபர்ஸ்ட் டைமா, நான் ஒரு கேண்டிடேட்டை இண்டர்வியு எடுத்தேன், பையன் டெக்னிகலி ஸ்ட்ராங், இங்கிலீஷ் கொஞ்சம் தடுமாறினான், பட் ஐ ஹேட் செலக்டட் ஹிம், நான் உனக்கு கொடுத்த சர்ட்டை வேற யாருக்காவது கொடுத்திட்டியா, அந்த பையன் அந்த ஷ்ர்ட் போட்டிருந்தான்... நான் உனக்காக கண் முழிச்சு போட்டுக் கொடுத்த கார்த்தி எம்பிராய்டரி டிசைன்.. ரொம்ப நாள் கழிச்சு உன் ஞாபகம் வந்துச்சு... உன் பழைய
மெயிலுக்கு மெயில் அனுப்பினேன் இட் வாஸ் பவுன்ஸ்ட் பேக் , ஓர்குட் ல கூட உன் பேர் போட்டு தேடுனேன்"

"இல்லை, நான் ஆர்குட்ல இல்லை... பழைய ஐடி எக்ஸ்பையர் ஆகிடுச்சு, நீ இண்டர்வியு எடுத்த பையன் என் அப்பாவோட பிரண்டோட பையன், அவன் நல்லா வருவான்..."

"யெஸ், ஐ யம் ஸ்யூர் அவன் டேலண்டட்... இன் ஃபேக்ட் நான் இண்டர்வியூ எடுக்க போறதுக்கு முன்ன, நீ அடிக்கடி சொல்லுவியே, டெக்னிகல் ஸ்கில்ஸ் இருந்தா போதும், இங்கிலிஷ் பெரிய அளவுக்கு எதிர்பார்க்க வேண்டியதில்லைன்னு, அதை ஞாபகம் வச்சுக்கிட்டேன்"

"ஸோ நைஸ் ஆஃப் யூ ரம்யா, "
ரம்யா படு சகஜமாகப் பேசினாலும், நான் கொஞ்சம் வார்த்தைகளை அளந்துதான் பேசினேன்.

"கார்த்தி, உன் மொபைல் நெம்பர் கொடு, நான் உன்னை இன்னக்கி நைட் கால் பண்றேன்"

என்னால் கனவா நினைவா என்று நம்ப முடியவில்லை, எல்லாம் தடாலடியா நடந்து முடிந்தது.

அன்றிரவு நானும் ரம்யாவும் நீண்ட நேரம் பேசினோம்... பேச்சின் முடிவில்,

"கார்த்தி, இந்த இரண்டு வருசத்துல நான் புரிஞ்சுகிட்டது known devils are better than unknown angels, உன் புரோபசலை கன்சிடர் பண்ணலாம்னு இருக்கேன், உனக்கு ஸ்டில் என்னை கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இருந்தால் , நாளைக்கு நான் கொடுத்த ப்ளூகலர் சட்டை போட்டுட்டு வா, நான் புரிந்து கொள்கிறேன், நாளைக்கு அதே ரெஸ்டாரண்ட்ல ஈவ்னிங் 7 க்கு மீட் பண்ணுவோம்"

கடவுளே, என்ன இது, அதே நிற சட்டை போட்டுப்போகாமல் இருந்து, என் சம்மதத்தை சொன்னாலும் அவள் ஏற்றுக் கொள்வாள. இருப்பினும் அதே சட்டையை இன்றே ஊருக்குபோய் ரவிமாமா பையனிடம் இருந்து வாங்கி வரவேண்டும் என்று ஒரு வாடகைக்காரை அமர்த்திக் கொண்டு நேராக என் வீட்டிற்குகூடப் போகாமல் ரவி மாமா
வீட்டிற்கு போய் அந்த வெளிர்நீலநிற சட்டையை வாங்கிய போது அகில உலகயையும் நான் வென்றது போல ஒரு உணர்வு.

நல்ல வேளை சட்டையை சலவை செய்து வைத்திருந்தார்கள். அவர்களின் வீட்டில் என்னை ஒரு மாதிரிதான் பார்த்தார்கள். ஒரு சட்டைக்காகவா இவ்வளவு சிரத்தைஎடுத்து இவன் வருவான் என்று.

என் வீட்டில் குளித்து, நீல நிற சட்டையை பெருமிதத்துடன் அணிந்து கொண்டு, மதிய சாப்பாட்டை முன்னதாகவே முடித்துவிட்டு மீண்டும் அதே காரில் மெட்றாசை நோக்கி கிளம்பினேன்.

சீக்கிரம் போக வேண்டும் என்று கார் ஓட்டுனரை வேகமாக ஓட்டச்சொன்னேன். இரவு முழுவது தூங்காத அசதியில் இருந்த ஓட்டுனர், ஒரு நிமிடம் கண்ணசந்தார். எதிரே ஒரு லாரி, இடதுபுறமாக காரை ஒடிக்க முயற்சிக்க.. பலனில்லை... என் வெளிர்நீலநிற சட்டையில் சிவப்பு ரத்தம் படர ஆரம்பித்தது.

-----------முடிவு-------

22 பின்னூட்டங்கள்/Comments:

said...

வாசித்து முடிக்க வேண்டுமென தூண்டியது எழுத்து.
கடைசிவரையும் அது அவனுக்கு அதிஸ்டமில்லையென முடித்துள்ளீர்கள்.
இவற்றில் நம்பிக்கையுண்டா??

said...

வாசித்து முடிக்க வேண்டுமென தூண்டியது எழுத்து.
கடைசிவரையும் அது அவனுக்கு அதிஸ்டமில்லையென முடித்துள்ளீர்கள்.
இவற்றில் நம்பிக்கையுண்டா??

அபிஅப்பா said...

ச்சே! நான் ஏமாந்துட்டென், பாதி கதை வரி அந்த ஆங்கிளம் தெரியாத பையன் கண்ணாலம் கட்டிக்க போறான் என இருந்தேன், முடுவிலே சரி இது வழக்கமான் கதை இல்லை என உனர்ந்தேன், அந்த நாயகியின் டயலாக் பார்த்து, பின்னே முடிவிலே... இது என்ன கொடுமை வினையூக்கி சாரே!!! நான் போடும் முதல் பின்னூடம் இது! காரணம் நான் படிக்காமல் பின்னூட்டம் போடுவேன் என ஒரு இமேஜ் அதை ஒரு காமடியனாக காப்பாத்த வேணாமா அதான்:-))

இந்த அழுவான் கதைக்கு:-((

said...

அட என்னங்க இது சினிமாத்தனமா எழுதிக்கிட்டு. அடுத்தது ஆவி கதைதான் எழுதணும். ஆமா!

A suggestion said...

Ramya asked Karthi whether he gave her gift (shirt) to somebody? Hero didn't answer that question. How come Ramya asked to wear the same shirt to show his opinion as she knows that shirt is not with Karthi any more?

May be hero has to clear Ramya that 'Ram Mama's son' had borrowed that shirt for one day in their conversation.

said...

செல்வா, கடைசியில் கொஞ்சம் அவசரமா முடிச்சிட்டது மாதிரி இருக்கு..

எப்படியும் வினையூக்கி கதையில் ஒரு பேயாவது, பேய் ஆகப் போகிறவனாவது வரும் என்று நினைத்துக் கொண்டே படித்ததால், எனக்கு சஸ்பென்ஸும் இல்லை.. ;-)

ஆமாம், ஜெனியைக் கைவிட்டு ரம்யாவுக்குத் தாவிட்டீங்களா? ;)

said...

யோகன் பாரிஸ் சார்,
அவன் அந்த சட்டை அணியாமல் போனால் கூட ரம்யா அவனை ஏற்றுக் கொள்வாள் என்று தெரிந்தும் அவன் வீம்புக்காக அந்த சட்டை போய் வாங்க ஊருக்குப் போகிறான். நிறைய நேரங்களில் வீம்புக்கு செய்யும் செயல்கள் எதிர்மறையாகவெ முடியும். அவனுக்கு அதிர்ஷ்டமா துரதிர்ஷ்டமா என்பதைவிட , வீம்பின் பயன் தான் அந்த ஆக்ஸிடெண்ட்.

எனக்கு அதிர்ஷ்டத்தின் மேல் நாட்டம் கிடையாது.

said...

இலவசக்கொத்தனார்,
அடுத்து பேய் கதை தாங்க.... நீங்க சொன்னது சரிதான், இந்த கதையை நான் வாசகனா படிக்கும்பொழுது "சினிமாத்தனமாத்தான்" இருக்கு.

said...

//A suggestion said...
Ramya asked Karthi whether he gave her gift (shirt) to somebody? Hero didn't answer that question. How come Ramya asked to wear the same shirt to show his opinion as she knows that shirt is not with Karthi any more?

May be hero has to clear Ramya that 'Ram Mama's son' had borrowed that shirt for one day in their conversation.
//
சஜஸன் அவர்களே,
மிக்க நன்றி. கூர்மையாக வாசித்துள்ளீர்கள். இண்டர்வியு அட்டெண்ட் செய்த பையன் தனக்குத்தெரிந்தவன் என்று சொல்லியபோதே ரம்யா புரிந்து கொண்டுவிட்டாள். அந்த சட்டையை அவன் அந்த பையனுக்கு கொடுத்துவிட்டான் என்று.
தெரிந்தும், அவள் வேண்டுமென்றே நாளை போட்டுவா என்று அவனைக் கேட்கிறாள்.
உங்கள் suggestions க்கு நன்றி. இந்தக் கதையை சிலநாட்களுக்குப்பிறகு திருத்து எழுதலாம் என்று இருக்கிறேன். அப்போது உங்கள் suggestions யை நினைவில் வைத்துக் கொள்வேன். நன்றி

said...

பொன்ஸ்,
அர்த்த ராத்திரியில் தூக்க கலக்கத்தில் டைப்செய்ததால் , வேகமாக முடிக்கவேண்டும் என்று சடார்னு முடித்துவிட்டேன்.

ரம்யா வந்தாலும், "ஜெனிக்கான" ஸ்பெஷல் பிரியம் என்றும் மாறாதது.

அடுத்தக் கதை பேய் கதை தான்
:) :) :) :)

said...

இதுவும் பேய் கதைதான் ஏனென்றால் அந்த பேய் தான் இந்த கதையை எழுதியிருக்கு. செத்து போயிருந்தா இப்படி எழுத முடியுமா? //என் வெளிர்நீலநிற சட்டையில் சிவப்பு ரத்தம் படர ஆரம்பித்தது. // :-))

said...

:)

said...

ஜெஸிலா,
கார்த்தி கதாபாத்திரம் சாகவில்லை. அந்த விபத்தில் காயமடைகிறான்.
இப்பொழுதெல்லாம் கதாபாத்திரங்களை சாகடிக்க மனம் வரமாட்டேங்கிறாது.

said...

என்னையா எப்ப பார்த்தாலும் கிளைமாக்ஸ் ஒரே அழுவாச்சியா வைக்கிறீங்க...... இதை படிச்சப்புறம் நான் இப்படி ஆகிவிட்டேன்...

http://www.youtube.com/watch?v=qS7nqwGt4-I

:-)))))))

said...

உங்கள் பிளாகில் (தமிழ் பிளாக் என்பதால்)Google adsense சரியாக வேலை செய்யவில்லை.... நீங்கள் ஆட்ஸ்பாரிந்தியன்ஸ் பயன்படுத்தலாமே....கூகுள adsensekku இணையான சேவை இது... மேலும் விபரங்களுக்கு எனது பிளாகை பார்க்கவும்....

said...

நல்லாயிருக்கு கதை.

ஒரு சட்டைக்காக வாடகைக் கார் வைத்து அதுவும் இரவோடு இரவாக.. கொஞ்சம் டூமச்சாக தெரிகிறது.

நீங்க அவர் வீம்புக்காக செய்றாருன்னு சொல்றீங்க. ஆனாலும் காதலுக்கு இவ்வளவு Dedication, ஏனோ ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

said...

வினையூக்கி,

என்ன இவ்வளவு சோகமா முடிச்சிட்டீங்க..

வருத்தமாகிவிட்டது..ம்ம்..

அவன் சட்டையில்லாமலேயே சமாளித்திருக்கலாம்..

இல்லை கார்த்தி சாகடிக்கனும் முடிவு செய்த பிறகு வேறு மாதிரி Soft ஆக சாகடித்திருக்கலாம்..

இப்படி அநியாகமாக கொண்றுவிட்டீர்களே..

பிடியுங்கள் என் சாபத்தை..!!!

---------------------

நல்ல சுவரசியமாக எழுதியிருக்கீங்க..

கதை கண் முன்னே வந்து செல்லுமாறு எழுதிய உங்கள் எழுத்துக்கு ஒரு பெரிய "ஓ"

said...

புபட்டியன்,
விட்டு சென்றவள், விரும்பி வரும்பொழுது, அவள் விரும்பியதை வீம்பாக கதையின் நாயகன் செய்ய விரும்புகிறான். முடிந்துபோன முதல் காதல் மீண்டும் முளைத்து வரும்பொழுது, இதுவெல்லாம் சகஜம் என்று நினைத்து எழுதினேன்.

said...

சிவபாலன் சார்,, கதையின் நாயகன் சாகவில்லை... விபத்தில் அடிபடுவதாக கதை முடிகிறது.
உங்கள் பாராட்டுக்களுக்கும் நன்றி

said...

அப்பாவி,
மிக்க நன்றி. ஆட்ஸ்ஃபார் இந்தியன்ஸ் முயற்சிக்கின்றென்.
உங்கள் யூடுயூப் வீடியோவிற்கு
பெரிய ஸ்மைலி.
அடுத்த முறை நோ அழுகாச்சி காவியம்

Anonymous said...

Live India Vs Australia 3rd One Day.


http://tv.haplog.com/sop.php?src=sop://broker.sopcast.com:3912/33407Enjoy!!!தமிழ்.ஹப்லாக்.காம் Telugu.haplog.com Hindi.haplog.com Malayalam.haplog.com kannada.haplog.com music.haplog.com radio.haplog.com tv.haplog.com
(Tamil.Haplog.com)

said...

அருமையான எழுத்து நடை.......முடிவு தான் துக்கபட வைத்து விட்டது.

பாராட்டுக்கள்!!